'என் உயிர் நீதானே...' என்ற எனது சிறுகதை 'ஐ லவ் யூடா' என்ற பெயரில் முத்துக்கமலம் இணைய இதழில் வெளியாகியிருக்கிறது. என் உயிர் நீதானேயை விட ஐ லவ் யூடா ஈர்ப்பாக இருக்கும் என்று நினைத்தார்கள் போல.
எது எப்படியோ முத்துக்கமலத்தில் இது எனது மூன்றாவது கதை... படைப்பாளர்கள் வரிசையில் எனக்கும் ஒரு இடமும் அதில் என் கதைகளும்... நன்றி முத்துக்கமலம்.
முத்துக்கமலத்தில் வாசிக்க இங்கு சொடுக்குங்கள்.
வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க... நன்றி.
உயிரே
ஒரு கடிதம்
(ஐ லவ் யூடா)
'எப்படியிருக்கே?'
யாருடா இவன் ஒரு லெட்டர் எழுதும்
போது எப்படியிருக்கேன்னு ஆரம்பிச்சிருக்கானேன்னு நீ நினைக்கமாட்டேன்னு எனக்குத்
தெரியும். அந்த ஒரு வரிக்குள் ஒளிந்திருக்கும் என்னை நீ கண்டுபிடித்து விடுவாய்
என்பதை நான் அறிவேன்.
'சரி...
எப்படியிருக்கே...?' என்
நினைவுகள் பல நேரம் நம் நினைவுகளை மீட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. எத்தனை
காலம் ஆனாலும்... இனிக்கும் நாட்களல்லவா அந்த நாட்கள்...? எப்படி
மறப்பது... எப்படி அதை வீசி எறிவது..?
'நம்
முதல் சந்திப்பு உனக்கு ஞாபகம் இருக்கா...?'
அட பைத்தியக்காரா... இது என்னடா கேள்வியின்னுதானே சிரிக்கிறே... உனக்கு ஞாபகம்
இல்லாமலா இருக்கும்... மரத்தடியில் நண்பர்களுடன் நிற்கும் எங்களைக் கடந்து
செல்லும் பட்டாம்பூச்சிகளில் தேவதையாய் நீ தெரிய, நான் உன்னைப் பார்த்து கை நீட்டி 'இங்கே வா' என்கிறேன்.
நீ உன் தோழியை துணைக்கழைக்க,
'அவ எதுக்கு... பாத்ரூம்க்கும் அவளை கூட்டிக்கிட்டே போவியா..'? என நான்
சொன்னதும் என் நண்பர்கள் எல்லாம் கேலியாய் சிரிக்கிறார்கள். நீ உன் தோழி தவிர்த்து
அழகான முகத்தில் கோபத்தின் சிவப்பு சூடி அருகே வருகிறாய்...
'பர்ஸ்ட்
இயர்தானே...' என்றதும்
'ஆமாம்' என
தலையாட்டினாய்.
'ஆமா
நீ பூம்பூம் மாடு... நான் மாட்டுக்காரன்... கேள்வி கேட்ட தலையாட்டுறே... ஊமையா...?' என்றேன்
நக்கலாய்... மீண்டும் நண்பர்களின் சிரிப்பொலி.
'ஆமா...' என்றாய்...
பர்ஸ்ட் இயரா என்றதற்கு இந்த ‘ஆமா’வா இல்லை ஊமையா என்றதற்கு இந்த ‘ஆமா’வா என்று
ஆராயாமல் 'உன்
பேர் என்ன?' என்றேன்.
நீயும் கோபத்தோடு 'மிருதுளா' என்றாய்.
'டேய்
மாப்ள... பிரதர் இன் லா ,
சிஸ்டர் இன் லாவெல்லாம் தெரியும்... அது என்னடா மிருது லா' என்று
சிரித்தான் ரகு. உடனே நீ 'மிருதுளான்னு
சொன்னேன் என்றபடி அங்கிருந்து அகன்றாய். கொஞ்சத் தூரம் போய் திரும்பி பார்த்து
முறைத்தாய்... நானும் முறைத்தேன்...
முறைக்கும் கண்கள் விரைவில்
ரசிக்கும் என்பதை அப்போது நாம் உணரவில்லை.
நாட்கள்... வாரங்களாகி...
வாரங்கள்... மாதங்களாக பயணித்தபோதுதான் நான் ரவுடி என நீயும்.. நீ திமிர்
பிடித்தவள் என நானும் நினைத்திருந்தது மெல்ல மாறி முதல் பார்வையின்
தவறுதான் அது என்பதை உணர்ந்து சிறு புன்னகையுடன் கடக்க ஆரம்பித்து மெல்ல
மெல்லப் பேசி நட்பானோம்.
அன்று... அதுதான் நம்மை உணர வைத்த
நாள்... உனக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. என்னமோ எல்லாமே இவனுக்கு
மட்டுந்தான் ஞாபகம் இருக்க மாதிரி ஞாபகம் இருக்கான்னு கேட்கிறானேன்னு நீ
சிரிப்பேன்னு எனக்குத் தெரியும்... இருந்தும் கேட்கத் தோணுது இப்போதைய வாழ்க்கை... சரி வா... நம்மை உணர வைத்த
நாளை மீண்டும் உணர்வோம்.
கல்லூரி நண்பனின் தங்கை
திருமணம்... நீயும் அங்கு வருவாய் என்று எனக்குத் தெரியும்... என்னைவிட உனக்கு
அவனிடம்தான் ஒட்டுதல் அதிகம். அதற்கு காரணம் இருந்தது... அவனும் நீயும் இலக்கியம்
பேசுபவர்கள்... எனக்கு அதெல்லாம் புரியாது... தெரியாது. கல்லூரி சார்பாக பல
போட்டிகளுக்கு இருவரும் அனுப்பப்பட்டு நிறைய பரிசுகளை வென்று வந்து கொடுத்திருக்கிறீர்கள்.
உங்கள் நட்பு வட்டத்தில் நான் வெளியேதான் நிற்க வேண்டியிருக்கும் என்பதை
நன்கறிவேன். நான் இன்னும் உன்னுடன் நெருங்கிப் பழகாத தினங்களே அவை...
ஒரு புன்னகை., சில வரிப்
பேச்சுடனான நட்பு மட்டுமே நமக்குள்... அப்படியிருக்க உன் இலக்கியத் தோழனின்
தங்கை திருமணம் வரமாலா இருப்பாய்..?
அது ஒரு சிறு கிராமம்... பசுமை
நிறைந்த வயல்வெளிகள்... பேருந்து வசதி இல்லாத கிராமம்... மெயின் ரோட்டு வழியாக
பயணிக்கும் பேருந்தில் கிளைச்சாலையில் இறங்கி கப்பி ரோட்டில் ஒரு கிலோ மீட்டருக்கு
மேல் நடக்க வேண்டும். அதனால் நாங்கள் நண்பர்களின் வண்டிகளில் ரெண்டு மூணு பேர் என
அங்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்னே கல்லூரி நண்பர்கள் வந்திருக்க, நீ
வந்திருக்கிறாயா..? என்று
நான் தேடினேன் என்பதை உன்னிடம் அன்றே சொன்னேன். ஞாபகத்தில் இருக்கா..? சரி விடு...
இந்த வார்த்தை வேறு அப்பப்ப வந்துவிடுகிறது. தேடிய என் விழிகளுக்குள் நீ
சிக்கினாய்... ஆனால் உன் இலக்கிய நண்பனுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாய்...
ஏனோ விழிகளை விலக்கினாலும் மீண்டும் மீண்டும் உங்கள் பக்கமே நகர்ந்து
கொண்டிருந்தது.
சாப்பிடப் போகும் போது
ஏதேச்சையாய் பார்ப்பது போல்,'ஹாய்
எப்ப வந்தீங்க..?' என்றாய்...
இதுதான் நம் நட்பின் ஆரம்பப் பேச்சாய் நான் உணர்ந்தேன். 'அப்பவே
வந்துட்டோம்... நீதான் பிசி'
என்றபடி கடந்தேன். அதன் பின்னான நேரங்கள் நண்பர்களுடன் அரட்டையில் கழிந்தது.
கிளம்பும் போது 'எங்களை
பஸ் ஸ்டாப்ல டிராப் பண்ண முடியுமா?'
என்று என்னிடம் வந்து கேட்டாய். எனக்கு ஆச்சர்யம்..? அப்போது
பெண்கள் பேசுவதே பெரிய விஷயம்.. வண்டியில் பின்னால் அமர்ந்து வருவது என்பது
சாத்தியமேயில்லை. அப்படியிருந்தும் நீ கேட்டதும் என்னால் மறுக்க முடியவில்லை.
நண்பனின் வண்டியில்தான் நான் வந்திருந்தேன். அவனிடம் வண்டியை நான் வாங்கி ஸ்டார்ட்
பண்ண, நீ
என் பின்னே ஏறிக்கொண்டாய். மற்றவர்கள் மற்ற நண்பர்களின் வண்டியில்...
'என்ன
எதுவுமே பேசாம வாறீங்க..?'
நீதான் கேட்டே, 'ஒண்ணுமில்லை...' என்றேன்.
சிரித்தவாறே 'ஒண்ணு
சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே..?'
என்றாய். வண்டி பள்ளத்தில் இறங்கி ஏறும் போது ஏதேச்சையாய் உன் கை
என் தோளைப் பற்றியது. எனக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்... அதிலிருந்து மீண்டு 'என்ன...?' என்றேன். 'இந்த டிரஸ்
நல்லாவே இல்லை... இந்தப் பேண்டுக்கு லைட் ஊதாக் கலர் சர்ட்டுன்னா சூப்பரா
இருக்கும்' என்றாய்.
'ம்...
எங்க அக்கா நல்லாயிருக்குன்னு சொன்னுச்சு...'
என்றதும் 'அக்காவோட
ரசனை சூப்பர்' என்று
சிரித்தாய்.
நமக்குள் கொஞ்ச நேர அமைதி
"என்ன சார்...பேச யோசிக்கிறீங்க... ராக்கிங் பண்ணினப்போ என்னை ஊமையின்னு
சொன்னீங்க... இப்ப யார் ஊமை...'
என்று நீ கேட்க,
'அது என்னமோ தெரியலை... வந்த பொண்ணுகள்ல சட்டுன்னு உன்னைப் பிடித்தது...
கூப்பிட்டுக் கேட்டேன்... ராக்கிங்ன்னா அப்படித்தான் பேசணும்... அதான்...' என்றதும் நீ
சிரித்தாய்.
வேகமா வாங்கடா.. என்ன இப்பத்தான்
கல்யாண ஊர்வலம் மாதிரி மெதுவா வாறீங்க என்று முன்னே சென்ற நண்பன் கத்த, வண்டியின்
வேகத்தைக் கூட்டினேன். 'மெல்லவே
போங்க' என்று
என் வேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்தாய்.
'ஆமா...
உன் இலக்கிய நண்பன் கல்யாண வேலையை விட்டுட்டு உங்கிட்ட அப்படி என்ன கடலை
போட்டான்.... சிரிச்சு சிரிச்சு பேசினீங்க... இலக்கியமா?' என்றேன்
நக்கலாக.
'என்ன
நக்கலா... அவங்க வீட்டுத் திருமணத்துக்கு வந்திருக்கோம்... அவன் வந்து பேசினான்..
தட்ஸ் ஆல்.. ஆமா நீங்க பாத்தீங்களா...?'
என்றாய். 'ஆமா...
என்ன ஒரு சந்தோஷம் அவன் முகத்துல... கல்யாண மாப்பிள்ளை மாதிரி...' என் பொறுமலை
கொட்டினேன். 'ஏய்
அவன் என்னோட பிரண்ட்... நீங்க அப்ப என்னையத்தான் பாத்துக்கிட்டு
இருந்திருக்கீங்கன்னு சொல்லுங்க...'
என்னைச் சீண்டினாய்.
'ஆமா...
பெரிய அழகி... கண்ணுக்கு முன்னே கடலை... அதான்...' என்றதும் 'ஏன்
நான் இந்த டிரஸ்ல நல்லாயில்லையா...?'
என்றவள், 'நீங்க
எங்க பக்கம் வந்து உக்காந்து பேசிக்கிட்டு இருப்பீங்கன்னு பார்த்தேன்...
வரவேயில்லை... அவன்கிட்ட பேசினதால கோபமாக்கும்..' என்றாய். 'நான்
எதுக்கு தாயி உங்கமேல கோபப்படணும்... என்னோட பிரண்ட்ஸ்கூட அரட்டை அடிச்சிக்கிட்டு
இருந்தேன்... இப்பக்கூட உதவியின்னு கேட்டீங்க... வந்தோம்... உங்களை கூட்டிக்கிட்டு
பவனி போகலாம்ன்னு சந்தோஷத்துல வரலை...'
என்றேன்.
உடனே நீ 'ம்க்கும்...
நம்பிட்டோம்.... இதே பசங்க கேட்டிருந்தா வந்துருப்பீங்களாக்கும்... சாக்குப்
போக்கு சொல்லியிருக்கமாட்டீங்க... பொண்ணுங்கன்னதும் வந்தீங்க... என்ன சார்
சரிதானே...?' என்று
சிரிக்க, நான் மறுக்க ‘என்னைய ஏத்தாம வேற பொண்ணை உங்க வண்டியில
ஏத்தியிருக்கலாமே என் என்னை உங்க வண்டியில ஏத்தினீங்க..’ எனக் கேட்டுச்
சிரித்தாய். நான் பதிலேதும் சொல்லாமல் வண்டியை செலுத்த பேருந்து நிறுத்தம் வந்தது.
நீ இறங்கியதும் நான் வண்டியை
எடுக்க 'ஒரு
நிமிடம்' என்றாய்..
நின்றேன்... அருகே வந்து 'இந்த
சாரி எனக்கு நல்லா இல்லையா..?'
என்று என் முகம் பார்த்துக் கேட்டாய்... பொய் சொல்ல மனமில்லை எனக்கு... 'நீ ரொம்ப அழகா இருக்காய்..'
உண்மை பேசினேன். 'அப்ப
அப்படிச் சொன்னீங்க..?'
சிறு குழந்தைபோல் கோபமாய்க் கேட்டாய். 'சும்மா' என்று
சிரிக்க, 'டேய்...
அங்க என்னடா கடலை... வாடா... அவனுங்க காத்துக்கிட்டு இருப்பானுங்க என்ற நண்பனின்
அழைப்புக்கு, 'போங்கடா...
வாறேன்'
என்றதும் 'நடத்துங்க...
நடத்துங்க...' என்றபடி
அவர்கள் கிளம்ப, 'எங்க
நடத்துறது... நான்தான் வகுப்பு எடுக்க வேண்டியிருக்கு' என மெல்ல
முணங்கினாய். 'என்ன..?' என்றேன். 'பின்னே' என்று
சிரித்தாய்.
'சாரே...
அவன் என்னோட போட்டிகளுக்கு வர்றவன் என்ற முறையில்தான் பேசுவேன்... நீங்க பாட்டுக்க
காதல் கத்திரிக்காய்ன்னு எல்லாம் நினைச்சிறாதீங்க... எனக்கு என்னைய முதன் முதலில்
ராக்கிங் பண்ணின இந்த ரவுடியைத்தான் பிடிக்கும்... அந்த கத்திரிக்காயெல்லாம்
இங்கிட்டுக்கூட இருக்கலாம்'
என்று சாதாரணமாய் நீ சொல்ல,
நான் விக்கித்து நின்றேன்.
'ஏய் வாயாடி...
வாயாடுனது போதும்....வாடி பஸ் வருது'
என் உன் பிரண்ட்ஸ் குரல் கொடுக்க,
'உங்க கூட வண்டியில வந்த இந்தக் கொஞ்ச நேரம் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது, நாளைக்கு
இந்த பேண்டுக்கு லைட் ஊதா சர்ட்டுல வாங்க...'
என்றபடி ஓடினாய். அதன் பின் கப்பி ரோட்டில் என் வண்டி பறந்தைச் சொல்லவும்
வேண்டுமா..?
நம் காதலைச் சுமந்த கல்லூரி...
மைதானத்துப்
புங்கை மரத்துக்கு கீழ் இருக்கும் அமரும் திண்டு...
பெண்கள் அறைக்குப் பின்னே
இருக்கும் வேப்ப மரம்...
கல்லூரிச் சாலை...
மாலை நேரங்களை விழுங்கிய பாரதி
பூங்கா...
என இவையெல்லாம் நம் காதலைப் பருக, ஈருடல்
ஓருயிராய் ஆனோம். எல்லாருக்கும் வரும் எதிர்ப்புக்களைச் சந்தித்து உறுதியாய்... முடிவாய்... நின்று குடும்ப
சம்மதத்துடன் குமரன் சன்னிதியில் வாழ்வில் இணைந்தோம்.
அன்று... நம் முதல் இரவு...
எல்லாருமே முதல் இரவு என்றால்
அது காமத்திற்கான இரவு என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் அதுதான் நம்
வாழ்க்கைக்கான முதல் இரவு...
காதலித்த ஆறாண்டுகள் எவ்வளவோ பேசியிருந்தாலும்
அந்த இரவில் நம் வாழ்க்கையைப் பற்றி,
பிறக்கப் போகும் நம் குழந்தைகள் பற்றி,
செல்ல வேண்டிய தூரம் பற்றி,
அடைய வேண்டிய சிகரம் பற்றி... இன்னும் இன்னுமாய் நேரம் கடந்து கொண்டே செல்ல, நம் பேச்சும்
கூடிக்கொண்டே போனது உனக்கு நினைவில் இருக்கா?
காதலிக்கும் போது இருக்கும்
நேசம், புரிந்து
கொள்ளும் தன்மை என எல்லாம் தம்பதிகளானதும் சற்றே மாறித்தான் போகும் என்பதை காதல்
திருமணம் செய்த எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அந்தப் புள்ளி... பெரிய
கோலமாக மாறி... 'அப்பவே
சொன்னேன் வேற சாதிக்காரன் வேண்டான்னு... காதல் கத்திரிக்காய்ன்னு சொல்லி நீதானே
கட்டிக்கிட்டே... இன்னைக்கு தப்புப்பண்ணிட்டேன்னு புலம்புறே...' என்ற உன்
அம்மாவின் வாக்கு வேதவாக்காகி என் உயிரை எடுத்துச் சென்று விட்டாய்.
‘விவாகரத்துப் பேப்பர்
அனுப்புகிறோம்’ என்கிறார் உங்கப்பா...
விவாகரத்து...
அது யாருக்கு வேணும்...?
உயிர் போன பின்னால் இனி ரத்து
செய்ய என்ன இருக்கிறது..?
நான் மாறிவிட்டேன் என்கிறாய்
நீ..? எப்போதும்
சுமந்த காதலைத்தான் இப்போதும் சுமக்கிறேன்... முதல் நாள் எனக்குள் பறந்த
பட்டாம்பூச்சி இப்போதும் பறந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன ஒன்று... அன்று
இளமைத் துள்ளலுடன் வாழ்க்கை பற்றிய கவலையின்றிப்
பறந்தது... இன்று கொஞ்சம் முதிர்ச்சி அடைந்து நம்மளை நம்பிய வந்தவளை கண் கலங்க
விடக்கூடாது... என் தேவதையை ராணி மாதிரி வச்சிக்கணும்ன்னு... வாழ்வின் அர்த்தம்
கொடுத்தவளுக்காக... உனக்காக... ஓடிக் கொண்டிருக்கிறேன்...
என் தேவதைக்குள் பூக்க இருக்கும்
தேவதைகளுக்கான தேனைச் சேமிப்பதற்காக பணம் என்னும் மகரந்தத்தின் பின்னே
ஓடிக்கொண்டிருக்கிறேன். ஓட்டத்தின் வேகத்தில் வார்த்தை தென்றலாவதும்
சூறாவளியாவதும் தவறில்லையே... இதயத்துக்குள் உன் மீதான பிரியம் இம்மியளவும்
குறையவில்லை... தினம் தினம் இமயம் அளவு கூடிக்கொண்டேதான் போகிறது,
என்னைப் புரிந்தவளே... என்
கண்ணம்மா.. இதுதான் நான்... நான் நானாக இருக்கிறேன்... நீ நீயாக இருப்பாய் என்ற
நம்பிக்கையில் இன்னும்... கடந்து கொண்டிருக்கிறேன் நீயில்லா மணித்துளிகளை...
உன் உயிரைச் சுமக்கும் உடல்
மட்டும் இங்கே... உயிர்...?
‘என் ப்ரியமானவளுக்கு...’ என கணவன்
எழுதியிருந்த மின்னஞ்சலை வாசிக்க விருப்பமில்லாததால் திறந்து பார்க்காமல்
வைத்திருந்தாள். இரவு படுக்கப் போகுமுன் ‘சரி அப்படி என்னதான் கதை
விட்டிருக்கிறான்’ என வாசித்துத்தான் பார்ப்பமோ என்று திறந்த மிருதுளா, 'பிரிய
நினைத்தால் படிக்க வேண்டாம்... பிரியம் இருந்தால் ஒருமுறை வாசித்துச் செல்' என்று
ஆரம்பித்த கடிதத்தைப் படிக்க மெதுவாக வாசிக்க ஆரம்பித்தாள்.
‘நல்லாயிருக்கியா’வில் உருகி...
ஒவ்வொரு ‘நினைவிருக்கிறதா’விலும்
கண்ணீரைச் சேர்த்து...
‘என் கண்ணம்மா’வில் கன்னத்தில்
இறக்கி...
‘நீ இல்லா மணித்துளி’யில்
உடைந்து...
‘கேள்விக்குறியில் நிற்கும்
உயிரில்’ பொறுமி...
'ஐ
லவ் யூடா...' என்று
கதறி அழுதாள்.
-'பரிவை' சே.குமார்.
****
நண்பர் 'தளிர்' சுரேஷின் 'தேன்சிட்டு' மின்னிதழில் வெளியான 'மனிதர்கள்' சிறுகதை விரைவில் பகிரப்படும். அத வாசிக்கவும் நண்பர் இதழை வாசிக்கவும் விரும்பினால் இங்கு சொடுக்குங்கள்.
****
கடிதக் கதை அருமை. இனிமையான காதல் கதை.
பதிலளிநீக்குகுமார் அசத்திவிட்டீர்கள். அருமையான கதை ரொம்ப அழகாக எழுதியிருக்கின்றீர்கள். முடிவு ரொம்ப அழகு!
பதிலளிநீக்குவாழ்த்துகள்! பாராட்டுகள்!
துளசிதரன், கீதா
கீதா: எப்போதும் சுமந்த காதலைத்தான் இப்போதும் சுமக்கிறேன்...என்று ஆரம்பித்து வாழ்க்கை ஓட்டத்தைச் சொல்லி முடித்திருக்கும் அந்த வரிகள் மிகவும் பிடித்தது.
அருமை
பதிலளிநீக்கு