'சந்திரா... அது யாருன்னு தெரியுதா... அதுதான் அன்பு' என்பதாய் ஆண்ட்ரியாவுக்கு அறிமுகப்படுத்தப்படும் தனுஷ், கடலோரப் பகுதியான வட சென்னையின் கள்ளங்கபடமில்லாத பையனாய்... அதே அன்பு சிறுவனாய் இருக்கும் போதே சந்திராவுக்குத் தெரிந்தவன்தான் என்றாலும் கால மாற்றத்தில் அன்புவை மறந்திருக்கலாம் ஆனாலும் அன்புதான் அவளின் சபதத்தை பூர்த்தி செய்ய வந்தவன் என்பதில் அந்த அறிமுகத்துக்குப் பின் அவள் தீவிரமாக இருக்கிறாள் என்பதை அடுத்தடுத்த காட்சிகள் எடுத்துச் சொல்லிக் கொண்டே செல்கின்றன இறுதிவரை.
அன்புக்கு பத்மா (ஐஸ்வர்யா ராஜேஸ்) மீது காதல்... பத்மா அன்புவைப் பார்ப்பது... இல்லையில்லை பத்மாவை அன்பு பார்ப்பது ராஜீவ்காந்தி செத்த தினத்தில் கடைபுகுந்து கிடைத்ததை அள்ளிக் கொண்டு செல்லும் தருணத்தில் முகம் மறைத்தவளாய்... மனசை மறைக்காதவளாய்... அதன் பின் பைனாக்குலர் வழி... அவளின் பட்டன் இல்லா சட்டை வழி... பார்வையெல்லாம் மனசில் மட்டுமே... அன்பு மீது அவள் பிரவகிக்கும் முதல் வார்த்தையே பெண்கள் சொல்லத் தயங்கும் வார்த்தைதான் என்றாலும் அது அவள் வளர்ந்த சூழலில் சாதரணமே... அதை அவனும் மனசைப் பிடித்துப் பார்த்ததில் பட்ட சந்தோஷத்தின் வழி சிரித்தபடி கடந்து போகிறான் மொக்கைச் சிரிப்போடு... அதான் அவள் அப்படியொரு வார்த்தையைச் சொல்லியிருக்கிறாள்.
படம் முழுக்க எல்லாரும் கெட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள் என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாய்... குறியிடுகளைச் சுமக்கும் படங்களை புகழ்பவர்கள்தாமே நாம்... இங்கு வடசென்னை மக்களின் வாழ்க்கை காட்டப்படவில்லை... ஒரு சாராரின் வாழ்க்கையும் அவர்களின் பேச்சு மொழியுமே காட்டப்படுகிறது. அவர்களில் கூட முன்னால் நிற்பவர்களே பேசுகிறார்கள்... பின்னால் நிற்பவர் எவரும் கெட்ட வார்த்தைகளைப் பேசவில்லை.
இந்தக் கெட்டவார்த்தை என்பது புதிதாக கேட்கும் போது நாரசமாய்த் தெரியும்... அதுவே பேச்சு வழக்காகிப் போகும் போது அது நாரசமாய்த் தெரிவதில்லை... சிரிப்போடு கடந்து போகும் வார்த்தையாய் ஆகிப் போய்விடும்.... எங்க பக்கம் கிராமங்களில் பல வார்த்தைகள் சரளமாகப் பேசப்படும். கேலி முறைக்காரியின் பையன் என்றால் அம்மாவுடன் இணைத்தும் மச்சான் முறை என்றால் அக்காவுடன் இணைத்தும் கோபத்தில் முன்னால் இருப்பதை பின்னால் இருப்பதாகவும்... இப்படி நிறைய வார்த்தைகள் வந்து விழும்... இன்னும் அதைக்குடி... இதைக்குடி என்பதெல்லாம் சண்டைகளில் சரளமாய் வரும் வார்த்தைகள்தான். அப்படித்தான் இங்கு மீனவ மக்களில் முன் நிற்பவர்கள் பேசுகிறார்கள். ஏன் சந்திராவும் கேட்கிறாள் நான் என்ன தேவடியாவா என்று...
இதே போன்றொரு வார்த்தையைத்தான் சண்டைக்கோழி-2 வரலெட்சுமி சொல்கிறார் சற்றே மாறுதலுடன். நாம் தலையில் வைத்துக் கொண்டாடும் எழுத்தாளர்கள் வாழ்க்கைக் கதைகள் என்றாகும் போது அப்படித்தான் வசனங்கள் எழுதுகிறார்கள். மொக்கையும் மோசமான வசனத்துக்கும் சண்டைக்கோழி-2 ஒரு சான்று. எழுதிய வசனத்தை படம் முழுக்க பேசத்தான் செய்வார்கள்... சரளமாய் வரத்தான் செய்யும்... ஏதோ இந்தப் படங்கள்தான் சமூகத்தை சீரழித்துவிட்டதாய் பொங்குதல் என்ன நியாயம்..?
டார்ச்லைட் என்றொரு படம்... ரோட்டோரத்தில் நின்று விபச்சாரம் செய்யும் பெண்கள் பற்றிய கதை... கதை சொன்ன விதத்தில் நல்ல படம்தான்... படம் முழுக்க மோசமான காட்சிகளும் வசனமும்... இருந்தும் யாரும் கூவவில்லை... நாம் வெற்றிமாறன்கள் மட்டுமே நல்ல படங்களைத் தரவேண்டும் என்று விரும்புபவர்கள்... சாதியைச் சொல்லி படமெடுத்தால் தலையில் வைத்துக் கொண்டாடுவோம்... இப்படியான ஒரு வாழ்க்கையும் இருக்கிறது என்பதைச் சொல்லப் போனால் ஏன் இப்படித்தான் பேசுவார்களா என்ற கேள்வியை முன் நிறுத்தத் தவறுவதில்லை.
இங்கே அன்பு... இவன் சிறுவனாக இருக்கும் போது அந்தப் பகுதி மக்களுக்கு நாயகனாய்த் தெரிகிறான் ராஜன் (அமீர்), அரசியல்வாதி முத்துக்கு (ராதாரவி) திரைமறைவு வேலைகள் செய்பவன் என்றாலும் தன் பகுதி மக்களுக்கு தீங்கு நினைக்காதவன்... அவனின் மனைவியாகிறாள் சந்திரா. எட்டுவழிச்சாலை பிரச்சினை மையங்கொள்ள ஆரம்பித்தபின் தமிழ்ச் சினிமாவில் பிரச்சினை என்றால் சாலை விரிவாக்கம்தான்... அதுதான் இதிலும் என்பதால் முத்துவை எதிர்க்கிறான் ராஜன். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தனக்கு வாலாட்டும் வரை ரவுடியை பக்கத்தில் வைத்திருப்பார்கள். கொஞ்சம் முரண்டு பிடித்தால் அவனுக்கு கீழிருப்பவனை அந்த இடத்தில் அமர வைக்கிறேன் என்று பிஸ்கட்டைப் போடுவார்கள்... அதுவரை அண்ணே, தல என்று திரிந்தவன் ஒரு நாளை எதிர்பார்த்திருந்து காரியத்தை நிறைவேற்றிக் கொல்(ள்)வான். அப்படித்தான் நிகழ்கிறது இதிலும் அந்தச் சம்பவம். அதுவே படத்தின் மையப்புள்ளி.
குணா(சமுத்திரகனி), செந்தில் (கிஷோர்), பவன் (வேலு), தம்பி (டேனியல் பாலாஜி) என நால்வர் குழு அந்த மையப்புள்ளியில் இருக்கிறது. அந்தப்புள்ளியில் வெடித்தெழுகிறது சந்திராவுக்குள் இருக்கும் ராஜன் மீதான காதல்... அதன் பின்னான நாட்களில் குணாவுக்கும் செந்திலுக்கும் இடையில் பனிப்போர் ஆரம்பித்து மோதல் வெடிக்கிறது. எதிர் எதிர் துருவங்கள், அங்கும் இங்கும் சம்பவங்ளை நிறைவேற்றத் துடிக்கும் மனதுடன்.
இவர்களுக்கே தெரியாமல் நால்வர் குழுவை எப்படியும் கழுத்தறுப்பேன் என்பதாய் திரியும் சந்திரா, இரண்டாவது கணவனாய் அடைகிறார் குணாவை... எல்லாமே எதிர்பார்த்தலின் ஆரம்பம்தான். இதே போன்ற கழுத்தறுப்பேன் சூளுரைதான் சண்டைக்கோழி-2விலும் ஆனாலும் அதில் அவள் ஆட்டம் போட்டு இறுதியில் அடங்கிப் போகிறாள்... அடக்கப்படுகிறாள்... தாய்ப்பாசம் திருந்த வைக்கிறது. அதற்காக ச.கோ. நல்லபடம்ன்னும் வ.செ. கெட்ட படம்ன்னு எல்லாம் முடிவுக்கு வந்துடாதீங்க... திருவிழா என்பது சந்தோஷத்துக்கே... அதை வைத்தே நம் கழுத்தறுத்தலை ச.கோவில் காணலாம். நாம வடசென்னைக்குள் இருக்கும் போது எதுக்கு தென் மாவட்டம் பக்கம் போறோம் என யோசித்தாலும் போக வேண்டிய சூழல் இருக்கே என்ன செய்வது...
மதுரைப் பக்கத்துக் கதையா.... அரிவாளை எடுங்கடா... பங்காளி சண்டை... பலி வாங்கல்ன்னு போட்டுத் தாக்குங்கடா... தலையும் உருளணும் ரத்தமும் தெரிக்கணும்... அப்படித்தான் இதுவரை காட்டப்படுது... வட சென்னையில் மட்டும் ரவுடிகள் மட்டுமேவா இருக்காங்கன்னு பொங்குறோமுல்ல.... ஏன் தென்மாவட்டத்தைப் பற்றி பொங்கவில்லை... அங்கு நல்லவர்களே இல்லையா... சென்னை என்றால் மட்டுமே பிரச்சினை... மற்ற இடங்கள் என்றால் பிரச்சினையில்லை என்பதே நம் எண்ணமாய்.
இந்த அன்பு கேரம் போடுல வெற்றி பெறணும்ன்னுதான் குறிக்கோள்... ஆனா காதல்ல வெற்றி பெறுகிறான்... அதுவும் அடிக்கடி உதடு உதடும் கொஞ்சும் ஆங்கிலப் பட பாணியிலும் சேர்த்தே... ஐஸ்வர்யா ராஜேஷா இப்படின்னு பொங்க வைக்கவெல்லாம் வேண்டாம்... விரும்பித்தானே சுவைக்குது உதடை... விரும்பித்தானே ரசிக்கிறோம் அந்த உதடு கடியை...
வாழ்வில் நாம் இப்படித்தான் ஆகவேண்டும் என்று நினைத்து அதேபோல் ஆவதெல்லாம் அபூர்வம்... பெரும்பாலும் நினைவுகள் சிதறித்தான் போகும் சிக்குண்டு தவிக்கும் வாழ்க்கையில்... அப்படித்தான் ஆகிறான் அன்பு... கேரம்போர்டு கனவு ஒரு வருடம் தகர்ந்து போக... ஓளியும் ஒலியும் இருட்டில் உதட்டு ஆராய்ச்சி செய்யப் போய்... மின்சாரம் வந்ததால் ஊரெல்லாம் ஆராய்ச்சி குறித்துப் பேசப்பட, அதன் பின்னான நகர்த்தல் கத்தி எடுக்க வைக்கிறது... அந்த இரவில் சம்பவமும் நடந்தேறுகிறது... தம்பியின் அன்புக்குப் பாத்தியப்பட்ட அன்பு, காக்கப்படுகிறான் குணாவால்.... குணாவுக்கு ஜெயிலில் இருக்கும் செந்திலை சம்பவம் ஆக்கணும்... அதுக்கு... ஆமா அதே... ஜெயிலுக்குள் அன்பு... செய்தானா சம்பவத்தை என்பதைச் சொல்கிறார்கள்... நாம் சொல்ல வேண்டாமே அதை.
இப்படியாக சம்பவங்களோடு நகரும் வடசென்னை வாழ்க்கையில் அன்பு ரவுடியாகிறான்... பத்மாவை மணக்கிறான்... அவளின் தம்பி அப்பாவுக்கு அறை விடுகிறான்... நல்ல குடும்பம்... அதையும் சிரித்து ரசிக்கிறோம் நாமும் நல்லவர்கள்... ரவுடியா ஆயிட்டோமுல்ல... அப்புறம் குரல் எல்லாப் பக்கமும் கேக்கணுமா இல்லையா... மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கிறான்... ராஜனைப் போல பிறருக்கு ரவுடி... தன் பகுதி மக்களுக்கு நாயகனாய்... சந்திரா வில்லன்களுடன் இருந்து கொண்டே வில்லியாய் காய்களை நகர்த்துகிறாள்... தேவையில்லாமல் வரலெட்சுமியைப் போல ஆய்... ஊய்ன்னு கத்தலை... அரிவாளை எடுத்துக் கொண்டு வெட்ட ஓடிவரலை... அந்த வகையில் சந்திரா பாந்தமாய்...
வெற்றிமாறனின் திரைக்கதையில் எப்பவுமே ஒருவித ஈர்ப்பு இருக்கும்... அதைக் கொண்டு செல்லும் விதத்தில் அவர் சோடை போவதில்லை... அப்படித்தான் இதிலும் முன்னுக்குப் பின்னும் பின்னுக்கு முன்னுமாய் நகர்த்தி நகர்த்தி மிகச் சிறப்பாக கதை சொல்லியிருக்கிறார். படமும் விறுவிறுப்பாய் நகர்கிறது.
ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்... எல்லாரையும் கட்டி மேய்த்திருப்பது சிறப்பு...
தனுஷ் நடிப்பு அரக்கன் என்றால் கிஷோரையும் டேனியலையும் சொல்லவா வேண்டும்... ஆனாலும் டேனியலின் பாத்திரப் படைப்பு மிகச் சிறப்பானதாய் கெத்தாய் பயணிக்கும் தருணத்தில் ராஜன் கதையில் உடைபடுகிறது... பின் ஒட்டவே இல்லை...
ஆண்ட்ரியா தாவணி, சேலையில் பாந்தமாய் வருகிறார்... அமீருடன் குலாவும்போது ரவிக்கை துறந்து முதுகு காட்டுவதுடன் தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார். ஐஸ்வர்யாவும் கூட மற்ற படங்களில் இருந்து இதில் வேறுபட்டிருக்கிறார்... பட்டன் இல்லாத பனியனும் அடிக்கடி உதடு கடித்தலுமாய் இருந்தாலும் கதை ஓட்டத்தில் அதற்க்குத் தகுந்த மாதிரி மாறி விடுகிறார்.
அந்தந்த காலகட்டத்துக்குத் தகுந்த மாதிரி கதைக்களம் மாற்றப்பட்டிருக்கிறது. தனுஷின் தலைமுடி மாற்றம், மீசை தாடி என காலகட்ட மாற்றம் அருமையாய்....
பின்னணி இசையும் பாடல்களும் அருமை... ஒளிப்பதிவு கலக்கல்.
நமக்கு முடி முக்கியம்... எனக்கு அரிக்குது... பொடுகு சார்.... முடிக்கு கலர் அடிச்சி கெடுத்துட்டாங்க என்றெல்லாம் அப்பிராணியாய் பிக்பாஸில் நடித்த செண்ட்ராயன் கொஞ்ச நேரம் படிய வாரிய தலையுடன் அப்பிராணியாவே வர்றார்.
அன்பு ரவுடியாகக் கிளம்பும் போது அவன் பின்னே சந்திரா நிற்கிறாள்... ஒரு கட்டத்தில் அவள் கழுத்திலும் கத்தியை வைக்கிறான்... காதலும் ரவுடியிசமும் அரசியலும் துரோகமும் வன்மமும் கலந்து சொல்லப்பட்டிருப்பதால் விறுவிறுப்பு இருந்தாலும் காரம் கம்மியே...அடித்து ஆடவில்லை வடசென்னை முதல் பாகம் என்பதே உண்மை என்றாலும் ஆடாமலும் இல்லை... ஒருவேளை வடசென்னை டூவில் அடித்தும் ஆடலாம் அசரவும் அடிக்கலாம் தனுஷும் வெற்றிமாறனும் ஆண்ட்ரியாவும்... இருப்பினும் ஏகப்பட்ட கதாபாத்திரங்களும் அவர்களுக்கான கதை விவரித்தலும் இல்லாது இருந்தால் நல்லது... செய்வார்களா...? காத்திருப்போம்.
இப்ப லைக்கா இல்லாம ஒரு படமும் இல்லை போல... ஆரம்ப காலத்தில் இலங்கையில இருந்து வந்திருக்கானுங்க... ராஜபக்சேயின் உறவுக்காரனுங்க... என்றெல்லாம் பொங்கிக் கொண்டிருந்தோம்... இப்ப அவர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு பொங்கிப் போடுகிறார்கள்... கிரிக்கெட் போட்டி நடக்கக் கூடாதுன்னு இலங்கையை விரட்டினவனுங்கதானே நாம என்றால் நமட்டுச் சிரிப்புடன் கடந்து செல்வோம்... இது சினிமால்ல.... அமலா பால்களையும் ஐஸ்வர்யா ராஜேஷ்களையும் ரசிக்க வேண்டும் அல்லவா... அப்ப லைக்கா மாதிரி ஆளுங்க அள்ளிக் கொடுத்தாத்தானே முடியும்...
அமீரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாய்த்தான் முதலில் செய்திகள் வந்தன... பின்னர் மாற்றம்... ஒருவேளை வி.சே. நடித்திருந்தாலும் இன்னும் அந்தப் பாத்திரம் பேசப்பட்டிருக்கும்... நமக்குத்தான் ஒரு மாசத்துல மூணு படம் வந்திருக்கே எப்படிப் பாக்குறதுன்னு கஷ்டமாயிருந்திருக்கும். நல்லவேளை வி.சே. நடிக்கலை.... 96 இன்னும் மனச விட்டு அகலலை... வி.சே.க்கு ஒரு கடிதம் எழுதணும் போலிருக்கு.
வடசென்னை வெற்றிமாறனின் மைல்கல் படம்தான்... அதில் மாற்றுக் கருத்து இல்லை.
கெட்ட வார்த்தை பேசுறாங்க எனக்குப் பிடிக்காது என்பவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம்...
இதெல்லாம் ஒரு கெட்ட வார்த்தையா... இதைவிட அதிக வார்த்தைகளைக் கேட்டிருக்கிறேன் என்பவர்கள் தாராளமாக படத்தைப் பார்க்கலாம்...
கதை சொன்னவிதம் எனக்குப் பிடித்திருந்தது.
பாருங்கள்... உங்களுக்கும் பிடிக்கலாம்.
-'பரிவை' சே.குமார்.