சென்ற ஆண்டில் தொடர்ந்து பதினெட்டு வாரங்கள் 'என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் வலை நட்புக்களைப் பற்றி அவர்களே எழுதிய பகிர்வைப் பகிர்ந்து வந்தேன். கேட்டவர்கள் எல்லாருமே உடனே அனுப்பிக் கொடுத்தார்கள். வலைப்பூவில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலம் அது.
இந்த வருடம் பிரச்சினைகளுக்கான வருடமாக ஆகிவிட்டது. எதிலிருந்தும் மீளமுடியாமல் மாற்றி மாற்றி சுற்றிச் சுற்றி அடிக்கிறது. எழுதவே எண்ணாத நிலைக்குத் தள்ளிவிட்டது. தினம் தினம் நிம்மதியைத் தேடி கிடைக்காமலேயே நகரும் நாட்களைக் கடப்பது என்பதே வாடிக்கையாகிவிட்டது. எப்போதே எழுதிய கதைகள் மின்னிதழ்களில் வருகின்றன. அவற்றைப் பகிரும் இடமாக, சினிமா குறித்து எழுதும் இடமாக 'மனசு' மாறிப் போனது.
இந்நிலையில்தான் 'வெள்ளந்தி மனிதர்கள்' பகுதியை சகோதரர் பாலாஜியை பற்றி எழுதி தூசி தட்டினேன். இதோ இப்போது ஏறத்தாழ ஒண்ணேகால் வருடத்துக்குப் பிறகு 'என்னைப் பற்றி நான்' பகுதியை தூசி தட்டும் வாய்ப்பு ஆல்ப்ஸ் தென்றல் நிஷா அக்கா மூலம் கிடைத்திருக்கிறது.
அக்காவிடம் கேட்டபோது தர்றேம்ப்பா என்ற வார்த்தை வந்தது. தருவதற்குத்தான் நேரம் வாய்க்கவில்லை. அவரின் வேலையும்... உடல்நலமும் எப்போதும் அவரை பரபரப்பாக வைத்திருக்க, அவரைப் பற்றி எழுத ஏது நேரம்...?
முகநூல்ல போடலாம்ன்னு பார்க்கிறேன் என எனக்கு அனுப்பிய பகிர்வை ஏன் என்னைப் பற்றி நானாக மாற்றக்கூடாது என்பதாய் இதை மனசில் பகிர்வோம் அக்கா என வாங்கிக் கொண்டேன். விரிவாய் எழுதியிருக்கிறார் வலிகளையும் அதைக் கடந்து வந்து பெற்ற வெற்றியையும்...
கேட்ட போது கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த போது சிறப்பானதாய்... நீங்களும் வாசிங்க....
நன்றி நிஷாக்கா...
என்னை நான் சீர் தூக்கி, ஆராய்ந்து பார்க்கின்றேன்.
நேர்காணல், சுய அறிமுகக் கட்டுரைகளுக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தினைக் காணும் போதுதான் நான் எனக்கான எத்தனையோ சந்தர்ப்பங்களைத் தவற விட்டிருக்கின்றேன் என புரிந்திட முடிகின்றது.
சமுதாயத்தில் நல்லதை விதைக்க நினைக்கும் சிந்தனைக்கும் செயல் பாட்டுக்கும் இம்மாதிரி புகழ்ச்சிகளும் போலித்தனங்களும் அவசியம் என உணரத்தவறி விட்டேனா?
கண்ணதாசன் சொன்னது போல் எழுதப்படும் கருத்தை விட எழுதியவர் தலையைச் சுற்றும் வெளிச்சத்தை நம்பும் சமூகத்தின் சிந்தனையை உணராமல் போனேனா..?
எனக்கான வாய்ப்புக்களை நான் சரியாக பயன் படுத்த தவறி விட்டேனோ?
எல்லாமும் பேசலாம் இங்கே....
நான் என்னும் நிஷாவின் பாதங்கள் மூன்று வயது வரை பஞ்சு மெத்தைகள் மேல்தான் நடை பயின்றது. தரையில் விட்டால் பாதம் வலிக்குமோ என மாமாக்களும் அப்பாவின் நண்பர்களும் மாறிமாறி தூக்கி வைத்திருப்பார்களாம். ஆறு வயது வரை இனிக்கும் நினைவுகள் தான் எனக்குள்... தங்கக்கரண்டி வாழ்க்கைதான் வாய்த்திருந்தது.
எல்லாமிருந்தும் எதுவுமே இல்லாமல் போவதை உணர்ந்தவள் நான்.
நிஷாவின் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை முழுமைக்கும், தரை விரிப்புக்கள் விரிக்கப்பட்டோ பூக்கள் தூவப்பட்டோ இருந்து விடவில்லை. கரடு முரடான, செங்குத்தான மலைகளும் மேடு பள்ளங்களுமே நிரம்பியிருந்தன. அவற்றைத் தாண்டிட என்னை நான் உருக்கி இருக்கின்றேன், உருகியும் இருக்கின்றேன். எனக்கான வாய்ப்புக்கள் இங்கே கொட்டி கிடக்கவில்லை.
பட்டாம்பூச்சியாய் பறந்த என் வாழ்க்கை சிறகொடிக்கப்பட்டும் இருக்கின்றது. சிறகொடிந்து விட்டதே என ஓய்ந்திடாமல் எழும்பிப் பறக்க முயற்சித்தேன். இன்னும் முயற்சித்து கொண்டே இருக்கின்றேன்... ஓய்வொன்றை நாடாமல்.
என் சிறகுகளை ஒடிக்க முனைந்தோரும், முனைவோரும் என்னைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் கைகளில் என் இறகுகளில் ஒன்று எப்படியோ சிக்குப்பட்டும் விடுகின்றது. ஆனாலும் நான் என்னை நிருபிக்க மீண்டும் எழும்பிப் பறக்க போராடிக்கொண்டே இருக்கின்றேன்.
மரணத்தின் இறுதி நொடி வரை இயங்கிக்கொண்டே இருப்பேன். அதுவே என் இலக்கு ஆகும்.
என்னைக்குறித்து எழுத ஏன் இத்தனை தாமதம்? ஏறத்தாழ ஒன்னறை வருடத்தை நான் ஏன் எடுத்துக்கொண்டேன்?
சோதனைகளை சாதனைகளாக்குதலுக்கு இலட்சியங்களுடன் இலக்கை நோக்கிய பயண திட்டம் தேவையாக இருந்தது.
அர்ஜுனனை போல் இடப்பக்கமோ, வலப்பக்கமோ சாயாமல் எனக்கான கடமைகளை முடிக்கவும், என் இலக்கை அடையவும் நான் பயன்படுத்தும் ஒவ்வொரு மணித்துளியும் முக்கியமாக இருந்தது. இப்போதும் என் நேரம் எனக்கு பொன்னானதாகவே இருக்கின்றது.
என் கவனம் ஒரு நொடி பிசகினாலும் தலைக்குப்புறத் தள்ளி கேலி செய்து கை கொட்டிச் சிரிக்க சந்தர்ப்பத்துக்காக காத்துகொண்டிருக்கின்றார்கள் பலர். அப்படி தள்ளி விட்டதாக நினைத்து அவர்களில் சிலர் பெருமிதமடைந்தும் இருக்கின்றார்கள். நானோ... மேலே மேலே பறந்து கொண்டே இருக்கின்றேன். எவர் கைக்கும் அகப்படாத மின்மினிப் பூச்சி போல் வெளிச்சம் தந்து கொண்டே இருக்கின்றேன்.
இணையத்தில் இருந்தாலும் என் எழுத்து எங்கோ ஒருவரை சிந்திக்க வைக்கின்றது என்பதை என்னுடன் நேரில் உரையாடுவோரும், இன்பாக்சில் வந்து தங்கள் உணர்வை வெளிப்படுத்துவோரும் நிருபிக்கின்றார்கள்.
கடந்த பத்து வருடங்களாக இந்த இணையத்தை என்னை வளர்த்தெடுக்கும் ஆரோக்கிரமான் களமாகவே பயன்படுத்தி இருக்கின்றேன் என நம்புகின்றேன். ஏனையோர் சொல்வது போல் இணைய நட்புக்கள் நம்பிக்கைக்கு அப்பாட்பட்டவர்கள், தூரமாக நிறுத்தபப்ட வேண்டியவர்கள் என்பதை நான் மறுதலிக்கின்றேன்.
என்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டின் பின்னும் இந்த இணையம் தந்த நட்புக்களே இருந்தார்கள்... இருக்கிறார்கள்... இனிமேலும் இருப்பார்கள்.
என்னைப்போல் எல்லோருக்கும் இந்த நன்மை வாய்க்கும் என என்னால் எந்த உறுதியும் தர முடியாது. நிஷாவும்... நிஷாவின் அணுகுமுறையும் வேறு. என்னை அறிந்த ஒவ்வொருவருக்கும் எனது தனித்தன்மை புரியும். என்னை உணர்ந்தோர் எவரும் அத்தனை சீக்கிரம் என் நட்பை விட்டு செல்ல விரும்ப மாட்டார்கள். இது திமிர் அல்ல தன்னம்பிக்கை.
இந்த இணையம் மூலமாக என்னை வெளிக்காட்டக் கூடிய பல வாய்ப்புக்களை நானே தவற விட்டிருக்கின்றேன் என்பது என்னை அணுகிய ஒவ்வொருவருக்கும் தெரியும்.
ஆயிரக்கணக்கில் நட்புக்களை இணைத்து நாம் இடும் பதிவுகள் எவ்வித புரிதலும் இல்லாமல் கொடுக்கப்பட்ட லைக் எண்ணிக்கையை வைத்து அக்கருத்தை சமுதாயம் ஏற்று கொண்டிருப்பதான மாய உலகில் நான் என்னை அமிழ்த்த விரும்புவதே இல்லை. என் பதிவை வாசிக்கும் ஒருவராக இருந்தாலும் வாசிப்பவரை அப்படியும் இருக்குமோ... ? என சிந்திக்க வைக்குமானால் அதுவே என் எழுத்துக்கான வெற்றி. இந்த வெற்றியை நான் அடைந்திருக்கின்றேன்.
உங்கள் எழுத்துக்கு நான் விசிறி. என்னுள்ளத்தை அப்படியே உங்கள் பதிவுகளில் காண்கின்றேன் என மறைவாய் வந்து சொல்வோர் எவரும் பொதுவில் என்னை ஆதரிப்பதில்லை. கும்பலோடு கோவிந்தா போட்டே பழக்கப்பட்ட எம் சமூகத்து சிந்தனை எனக்காக அத்தனை சீக்கிரம் மாறி விடும் என எதிர்பார்க்க முடியுமா?
ஈழத்தை ஆதரிக்க வேண்டும்... இல்லாது போனால் விரோதியாக்கபபடுவேன். ஆம்... ஆக்கப்பட்டேன். விடுதலைபுலிகளின் சாதனையை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்போர் மத்தியில் அவர்களின் தவறுகளையும் எடுத்தியம்பியதனால் நான் துரோகி ஆக்கப்பட்டேன்.
சமுதாயத்துக்கான நற்கருத்தினை, தெளிவினை தருவோரின் பதிவுகளை நான் ஏற்பதனாலும், அப்படியானவர்கள் எதிர்த்தரப்பாராக இருப்பதனாலும், என் நட்பில் அவர்கள் இருப்பதனாலும் நான் ஒதுக்கப்பட்டே ஆகவேண்டும் என்போர் பலர். அவர்களிடமிருந்து நானே ஒதுங்கி கொண்டேன் .
ஈழம் தான் தேவை என்றாலும் அதற்குள் பிரதேச வாதம், பிரிவினை வாதம் நிறைந்திருக்கு. என் ஊர் தான் உசத்தி, உன் ஊர் சொத்தி என சொல்லவும் வேண்டும். அப்படி சொல்பவர்களுக்கு ஜால்ரா போட வேண்டும். தப்பைச் சொல்லவே கூடாது. சொன்னால் நான் அரை லூசு. அப்படித்தான் ஆக்கப்பட்டிருக்கிறேன்.
அவ்வப்போது டிரெண்ட் ஆகி மக்களையும் சிந்தனைகளையும் திசை திருப்பும் மீம்ஸ்கள் குறித்துப் பெரும்பாலோனோரின் கருத்தினையே நானும் பின்பற்ற வேண்டும். எனக்கென சொந்தக்கருத்து இருக்கவே கூடாது. ஆட்டு மந்தைகளாய்ச் செல்லும் எல்லோர் போலும் நானும் செல்ல வேண்டும். சுய சிந்தனை அறவே இருக்க கூடாது.
எதையும் மேலோட்டமாக அணுகி கனவு வாழ்க்கையை கற்பனையில் வாழ கற்றுக்கொடுக்கும் பணியை செய்வோருக்கு நான் ஆதரவு கொடுத்தால் நானும் வீரத்தமிழ் பெண்ணாகி இருப்பேன். என்னால் அது முடியாமல் போனது ஏன்..?
அவ்வப்போது நடக்கும் மேடை ஏற்றல்கள். விருதுகளுக்கு ஓரு ஓரமாக ஒதுங்க... அவர்கள் கேட்கும் ஸ்பான்சர்களை நானும் கொடுக்க வேண்டும். கொடுத்து விட்டால் இந்த உலகில் சாதனை நாயகியே நான் தான்.
முதலும் முக்கியமுமாக நானும் தினமும் விதவிதமாக மேக்கப் செய்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பகிர வேண்டும்.
இத்தனையும் செய்தால் நானும் பிரபலம்தான் எனில் அப்படி என்னை மாற்ற என்னால் முடியாது. இதில் எதையும் என்னால் இதுவரை பின்பற்ற முடியவில்லை. இனியும் முடியாது.
எனக்கான அஸ்திவாரம் என்பது நான் வாழும் காலத்தில் கட்டப்பட்ட கூடாரமானதாக பயன்படுத்தப்படுவதாக இருக்க கூடாது. நான் மாண்ட பின்னும் நிலைத்து நிற்கும் கான்கிரிட் அஸ்திவாரமாக இருக்க வேண்டும். என்னை நேசிப்போர் மனதில் வாழும்படி அது கட்டப்பட வேண்டும் என்பதே என் எண்ணம்... ஆசை.
அந்த அஸ்திவாரத்தை இட்டிருக்கின்றேன் என நம்புகின்றேன்.
இந்த நம்பிக்கை தான் நிஷா...
என்னை பற்றியும், நான் கடந்து வந்திருக்க கூடிய பாதைகள் குறித்தும் அறிய என்னை நானும் என்னை அறிந்த நட்புக்களும் சொல்லி இருக்கும் பதிவுகளை இங்கே இணைக்கின்றேன் படியுங்கள்.
தாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு என்னாலான பதிலை இங்கு தருவேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.
நன்றி அக்கா... காலம் தாழ்த்திக் கொடுத்தாலும் உங்க மனசை என் 'மனசு'க்கு கொடுத்தமைக்கு...
**************
அப்படியே கானல் அமீரக யூடியுப் சேனலில் என்னோட இரண்டாவது வீடியோவான 'சுனை நீர்' சிறுகதை குறித்த பகிர்வையும் பார்த்து எப்படி பேசியிருக்கேன்னு சொல்லுங்க... நன்றி.
-'பரிவை' சே.குமார்.
தன்னம்பிக்கை தெரிகிறது எழுத்துகளில். கடந்து வந்த பாதை கடினமானது என்றும் புரிகிறது.
பதிலளிநீக்குகாணொளி :
பதிலளிநீக்குஇந்த காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன் புத்தகம் என்னிடம் ஒன்று உள்ளது. அப்பாதுரை கொடுத்தார். உங்கள் கதை, ஹேமா கதை எல்லாம் அதில் இருக்கிறது. எப்போதோ படித்தது என்பதால் நீங்கள் சொல்லி இருக்கும் கதை பற்றி நினைவில்லை. ராகவன் அவர்கள் தளம் நான் சென்றிருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன்.
நிஷாவைக்க்குறித்த முழுவிபரமும் பதிவில் இருக்கும் லிங்கில் இருக்கின்றது என்பதை குறிப்பிட்டு விடுங்கள்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் சொல்லியிருக்கிற மாதிரி
பதிலளிநீக்குகடந்து வந்த பாதை கடினம் தான்!..
புரிகின்றது..
வாழ்க நலம்!..
அருமையாகச் சொல்லி இருக்கிறார் நிஷா. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅருமையான தன்னம்பிக்கையூட்டும் எழுத்துக்கள் நிஷா .ஒவ்வொரு வரியையும் மேற்கோள்காட்டி எழுத நினைக்கிறேன் ஆனால் ரைட் க்ளிக் டிசேபிள் ஆகியிருக்கே !!
பதிலளிநீக்குபரவாயில்லை ஒவ்வொரு வரியும் தன்னம்பிக்கையூட்டும் அற்புதமான வார்த்தைகள் .
பராசக்தி வசனம்போல வாசிக்க வாசிக்க உணர்ச்சி ப்ரவாகமா செல்கிறது உங்களைப்பற்றிய ஒவ்வொரு வரிகளும் .
கொஞ்சம் தாமதமானாலும் நல்லது தோணுது ஏன்னென்றால் நேற்றுபோல் இன்று இல்லை இன்றுபோல் நாளை இல்லை என்பதை உணர்த்த வைக்கும் பதிவு போன வருடம் இருந்த மன உணர்வுகள் இப்போதில்லை தானே நம் அனைவருக்குமே ..
குமார் இந்த பதிவுக்கு உங்கள் வலைப்பு பின்னூட்டக்கட்டுப்பாட்டை நீக்குங்கள். ஏஞ்சலில் கூட சொல்லி இருக்கின்றார் பாருங்கள்.
நீக்குஉங்கள் வார்த்தைகள் எனும் டானிக்குக்காவே வெயிட்டிங்க மேடம். முடிந்தால் பதிவில் இணைத்திருக்கும் லிங்குகளை படியுங்கள்.
நீக்குசமீப காலத்தில் நிறைய அனுபவங்களை கடந்து வந்திருக்கீங்கன்னு புரியுது .நமக்கான அஸ்திவாரத்தை நாம்தான் அமைக்கணும் .பிறருக்காக எதையும் ஏறெடுக்கவவோ முன்னெடுக்கவோ மாற்றிக்கொள்ளாம . நீங்கள் நீங்களாகவே இருங்க அதுதான் உங்களுக்கான அஸ்திவாரத்தை பலப்படுத்தும் .
பதிலளிநீக்குஅருமையான பதிவுக்கு நன்றி