சிவகாமியின் சபதம்...
வாசிக்க ஆரம்பித்தால் அதனுள் பயணிக்க வைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர் கல்கி, அவரின் சுத்தத் தமிழ் சில நேரம் யோசிக்க வைக்கும்... சில நேரம் வியக்க வைக்கும்... பல நேரம் அந்த எழுத்தை விரும்ப வைக்கும்... அந்த விருப்பமே நாவலைத் தொடர்ந்து படிக்கும் ஆவலைத் தூண்டும். அப்படியானதொரு ஆவலுடன் கிடைக்கும் நேரமெல்லாம் வாசித்து முடித்த நாவல் இது.
கல்கியில் பனிரெண்டு ஆண்டுகள் தொடராக வந்திருக்கிறது என்பதை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது.
முதலில் பார்த்திபன் கனவு வாசிக்கத்தான் ஆசையிருந்தது... நண்பர் ஒருவர் சிவகாமியின் சபதம் படித்துவிட்டு பின்னர் பார்த்திபன் கனவு வாசித்தாய் என்றால் கதை தொடர்ச்சியாய் பயணிப்பது போல் இருக்கும். அதில் ஒரு சுவராஸ்யம் இருக்கும் என்றார். அதுவும் உண்மைதான். முதலாம் நரசிம்மவர்மப் பல்லவன் இதில் இளவரசனாக... பார்த்திபன் கனவில் நடுத்தர வயது மனிதனாக... பேரரசனாக.
ஒரு பெண்ணின் சபதத்தை முன்னிறுத்து நகரும் கதை இது... சபதம் கதையின் பாதிக்கு மேல்தான் இடப்படுகிறது.... அதுவரை மென்மையான காதலும் முதலாம் மகேந்திரவர்மனின் அறிவுக் கூர்மையையும் கல் சிற்பத்தின் மீதான காதலையும் சொல்வதுடன் சிவகாமியின் நடனம், இளவரசருடனான காதல் என மற்றொரு பகுதியையும் சொல்லிச் செல்கிறார்.
படிப்பறிவில்லாத பரஞ்சோதி.... இப்படியாகத்தான் முதல் அத்தியாயத்தில் அறியப்படுகிறார் திருநாவுக்கரசரை சந்தித்து கல்வி பயில காஞ்சி நோக்கிச் செல்லும் பரஞ்சோதி... பின்னாளில் இவரே நரசிம்மவர்மனின் நம்பிக்கைக்குரிய சேனாதிபதியாகவும், போரை வெறுத்து சிவனடி வீழ்ந்து சிறுதொண்டராகவும் மாறுகிறார்.
காஞ்சி செல்லும் பரஞ்சோதி, யாரென்று அறியாமலே ஆயனச் சிற்பியையும் அவரின் மகளும் நடனக்கலையில் சிறந்தவளுமான சிவகாமியையும் யானையிடமிருந்து வேலெறிந்து காப்பாற்றுகிறார். அதற்காக சிறை பிடிக்கப்பட, அச்சிறையிலிருந்து காஞ்சிக்கு வரும்போது தன்னை வழியில் ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றி, சேர்ந்து பயணித்த புத்த பிஷூவான நாகநந்தி அடிகளால் காப்பாற்றப்படுகிறார். தன்னை எதற்காக சிறையில் அடைத்தார்கள் என்பதை பின்னாளில் அறிந்தும் கொள்கிறார்... அது நாகநந்தி சொன்னதற்கு நேர்மாறானது.
நாகநந்தி அடிகளுடன் ஆயனச் சிற்பி வீட்டிற்குச் செல்லும் பரஞ்சோதி, அஜந்தா குகையில் வரையப்பட்ட ஓவியங்கள் காலகாலமாக கலர் மங்காமல் அழியாமல் இருப்பதைப் பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொண்ட ஆயனருக்காக, ரகசியம் அறியக் கிளம்புகிறார். திருநாவுக்கரசர் ஸ்தல யாத்திரை சென்றிருக்கிறார் என்பதாலே இவ்வேலையைச் செய்ய சம்மதிக்கிறார். அவரிடம் அஜந்தா ரகசியம் குறித்து அறிந்து கொள்ள ஓலை கொடுத்து அனுப்பப்படுகிறது. அந்த ஓலை பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எதிரானது என்பதை அறியாமல் பயணிக்கிறார்கள்.
இந்தச் சமயத்தில் காஞ்சியின் பெருமையைக் கேள்விப்பட்ட சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசி படை திரட்டிக் கிளம்பி வருகிறான். மிகப்பெரிய படைபலம் கொண்டவனை தன் ஆட்சிக்காலத்தில் போர்க்களமே செல்லாத சிறிய படைப்பிரிவுகளைக் கொண்ட பல்லவ அரசு எப்படி சாமாளிக்கும் என்பதாலும் எப்படியும் காஞ்சி சாளுக்கியரின் கையில் சென்று விடும் என்பதாலும் அதைத் சிலகாலமேனும் தடுத்து காஞ்சியையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கான முயற்சியில் இறங்குகிறார் மன்னர் மகேந்திரவர்மன்.
சிவகாமியும் இளவரசனும் காதலிப்பது பிடிக்காத மன்னர் அவர்களைப் பிரிக்க சில சதிகளைச் செய்கிறார். அப்படிப்பட்ட சதியில் ஒன்றுதான் தான் போருக்குச் செல்லும் போது காஞ்சிக் கோட்டையைக் காப்பாற்றும் பொறுப்பை நரசிம்மனிடம் ஒப்படைத்தல். இதன் மூலம் காதலரின் சந்திப்பு துண்டிக்கப்படுகிறது.
பரஞ்சோதி விந்தியமலை நோக்கி பயணிக்க, அவருடன் வந்து சேரும் வஜ்ரபாஹூ என்னும் வழிப்போக்கன், அவருக்குத் தெரியாமல் ஓலையை மாற்றி வைத்து விட்டு பிரிந்து செல்ல, சாளுக்கியரால் சிறை பிடிக்கப்பட்ட பரஞ்சோதியை புலிகேசி முன்பு கொண்டு செல்ல, அங்கு தமிழ் பேசும் மனிதனாக வரும் வஜ்ரபாஹூ ஓலைச் செய்திகளை மாற்றிச் சொல்லி பரஞ்சோதியைக் காப்பாற்றுகிறார். பின்னாளில்தான் தெரிகிறது அந்த வஜ்ரபாஹூ யார் என்பது... அது தெரியும் போது வியப்புக்குள்ளாகிறார்.
சிவகாமி காதலனைப் பார்க்க முடியாமல் தவிக்கிறாள். தன்னைப் பார்க்க வராமல் இருக்கும் இளவரசன் மீது கடுங்கோபம் கொள்கிறாள்.
தனது தோழி கமலியைக் காண அவள் இல்லம் செல்கிறாள். அவளின் கணவன் கண்ணன்தான் நரசிம்மரின் ரத சாரதி. அவர்கள் மூலம் சில விபரங்களை அறிகிறாள். இளவரசனைச் சந்திக்கும் வாய்ப்பு இரண்டொரு தரம் கிடைத்தாலும் பேசமுடியாமல் தவிக்கிறாள்.
படை திரட்டி வந்த புலிகேசியை தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார் மகேந்திரர்... அவருக்கு உறுதுணையாய் இருக்கிறார் அவரின் படைத்தலைவரான பரஞ்சோதி. மன்னன் இல்லாத காஞ்சியைத் தாக்க பாண்டியரும், சாளுக்கியருக்கு உதவ நினைக்கும் சிற்றரசனான துர்வீநீதனும் படையுடன் வருகிறார்கள்.
தனக்குத் துணைக்குத் துணையாய் நின்ற பரஞ்சோதியை நரசிம்மனுக்கு உதவ, காஞ்சிக் கோட்டையைப் பலப்படுத்த அனுப்பி வைக்கிறார் மகேந்திரர். காஞ்சிக் கோட்டை மதில்களையும் கதவுகளையும் எதிரி அவ்வளவு சீக்கிரம் உடைத்து உள் நுழையாத வண்ணம் நரசிம்மர் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பார்த்து பரஞ்சோதிக்கு வியப்பாய் இருக்கிறது.
துர்விநீசன் மீது படையெடுத்துச் செல்லும்படி தனது அன்புக்கு பாத்திரமான ஒற்றன் சத்ருக்னன் மூலமாக ஓலை அனுப்புகிறார் மகேந்திரர். சிவகாமியின் பிரிவு கொடுத்த வலியை போக்கும் மருந்தாய் வந்த பரஞ்சோதியாருடன் போருக்கு கிளம்புகிறார் நரசிம்மர்.
இதற்கிடையே நாகநந்தியால் மனம் கலைக்கப்பட்ட சிவகாமி, நாட்டியப் பேரொளி ஆகும் ஆசையில் அவருடன் கிளம்பிச் செல்ல, எதிரே படைகள் வருவதைப் பார்த்து ஒரு கிராமத்தில் தங்குகிறார்கள். துர்விநீசன் படை புறமுதுக்கிட்டு அக்கிராமத்தின் வழி ஓட, அவனை விரட்டி வரும் நரசிம்மரும் பரஞ்சோதியும் சிவகாமியைப் பார்த்து விடுகிறார்கள். இருப்பினும் அந்தச் சூழலில் அவளுடன் ஆற அமர காதல் பேசமுடியாமல் கிளம்பிச் செல்கிறார்கள்.
பெரும் மழை பெய்கிறது... நாகநந்தியால் ஏரி உடைக்கப்பட, வெள்ளம் கிராமத்துக்குள் வருகிறது. அங்கு தத்தளிக்கும் சிவகாமியையும் ஆயனரையும் நரசிம்மர் வந்து காப்பாற்றுகிறார். துர்வநீசன் கைது செய்யப்பட்ட அதே வேளையில் நாகநந்திக்கும் வலை விரிக்கப்பட, அதில் மாட்டிக்கொள்ளும் நாகநந்தியும் சிறையிலிடப்படுகிறார்.
காஞ்சியை முற்றுகையிட்டு காரியம் ஆகவில்லை என்பதாலும் தங்களுக்கு உணவுப் பற்றாக்குறை வந்துவிட்டபடியாலும் பாண்டியனுடன் நட்பு பாராட்டுவது போல் பாராட்டி உணவைப் பெறும் புலிகேசி, மகேந்திரருக்கு சமாதானத் தூது விடுகிறான். அவரும் ஏற்றுக் கொள்கிறார்.
புலிகேசியின் காஞ்சி விஜயத்திற்கு முன் நரசிம்மரை பாண்டியர் மீது போர் தொடுக்க அனுப்பி வைத்து விடுகிறார் மதியூகியான மகேந்திரர். காஞ்சி வரும் புலிகேசி நரசிம்மர் எங்கு சென்றார் என்பதை அறிய ஆவல் கொள்கிறார். சபையில் நடமான அழைத்து வரப்படும் சிவகாமியை ரசிக்கிறார். நாகநந்தி சிறையில் இருப்பதையும் அறிகிறார். இறுதியில் விடைபெற்றுச் செல்லும் போது வஜ்ரபாஹூ யாரென்பதையும் மகேந்திரனால் அறியும் புலிகேசியின் மனதுக்குள் நெருப்பு கனன்று எரிய ஆரம்பிக்கிறது.
கமலி வீடு செல்லும் சிவகாமிக்கு மன்னர் தங்களை ஏதோ திட்டத்துடன் கோட்டைக்குள் வைத்திருப்பதாகத் தோன்ற, கமலி உதவியுடன் சுரங்கப்பாதை வழியாக ஆயனருடன் தப்பி வெளியில் வர சாளுக்கிய வீரர்களால் சிறை பிடிக்கப்படுகிறார்கள்.
சிற்பிகளை காலை வெட்ட வேண்டும் என்ற புலிகேசியின் ஆணைக்கிணங்க, ஆயனருக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் சமயத்தில் மன்னனால் விடுவிக்கப்பட்ட நாகநந்தியால் காப்பாற்றப்பட, சிவகாமி மட்டும் கைதியாக வாதாபி செல்கிறாள். மலையிலிருந்து தள்ளிவிடப்பட்ட ஆயனர் காலொடிந்து வீட்டில் கிடக்கிறார்.
படைகள் திரும்புவதைப் போல் பாசாங்கு செய்து கொஞ்சப் பேருடன் காஞ்சி மீது தாக்குதல் நடத்தப்பட, அந்தத் தாக்குதலில் மகேந்திரன் காயப்படுகிறார்.
பாண்டியனை வென்று திரும்பும் நரசிம்மர், சிவகாமியை சிறை மீட்கும் பொருட்டு வாதாபி சென்று வெறுங்கையுடன் திரும்புகிறார். அதற்குக் காரணம் என்னவென்றால் சிவகாமியின் சபதம்... ஆம் வாதாபியை தீக்கிரையாக்கி... புலிகேசியை கொன்றால்தான் நான் சிறையிலிருந்து வருவேன் என்று சபதம் செய்திருக்கிறாள் சிவகாமி... தன் நாட்டு மக்கள் கைதியாய் படும் துன்பத்தின் காரணமாகவும் புலிகேசியை அவமதித்த குற்றத்துக்காக தான் தெருவில் நடனமாட நேர்ந்த காரணத்தாலும் இவ்வாறு சபதம் செய்கிறாள்.
சிவகாமியை காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்றும் சாகும் முன்னர் மகனின் திருமணத்தைப் பார்க்க வேண்டும் என்றும் மகேந்திரர் சொல்ல, அதன்படி பாண்டியனின் மகளான வானமாதேவியை மணம் முடித்துக் கொள்கிறார் நரசிம்மர்... அவரின் காதல் இத்துடன் முற்றுப் பெறுகிறது.
காலம் மெல்ல நகர்கிறது... மகேந்திரரின் மரணத்துக்குப் பிறகு நரசிம்மர் மன்னராகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தை ஆகிறார். ஆயனச் சிற்பி வீட்டுக்கும் அடிக்கடி குழந்தைகளுடன் சென்று வருகிறார்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் படை திரட்டி, நண்பனும் சேனாதிபதியுமான பரஞ்சோதியுடன் வாதாபி நோக்கி பயணிக்கிறார்.
நாகநந்திக்கு சிவகாமி மீதான காதல் இன்னும் கூடுதலாகிறது.
புலிகேசிக்கும் நாகநந்திக்கும் இடையில் சிறிதாய் ஏற்பட்ட பிரச்சினை முற்றி, அஜந்தா கலாச்சார விழாவுக்கு செல்லும் இடத்தில் வெடிக்கிறது.
பல்லவர் வாதாபி நோக்கி வருவதைச் சொல்லாமல் மறைத்த நாகநந்தியை விரட்டிவிடுகிறார் புலிகேசி.
வாதாபி நோக்கி நரசிம்மன்...
அஜந்தாவில் புலிகேசி...
அடிபட்ட புலியாய் நாகநந்தி....
காதலன் வருவான் என் சபதம் நிறைவேறும் என சிவகாமி...
யானைகளுக்கு வித்தியாசமாய் பயிற்சி அளித்து நரசிம்மருடன் போர்க்களம் வரும் இலங்கை இளவரசன்...
உதவிக்கு வருகிறேன் என்று சொல்லி காஞ்சி வரை வந்து அக்கா வீட்டில் தங்கியிருக்கும் பாண்டியன்...
இப்படி நிறைய மனிதர்களுடன் நகரும் கதையில் நரசிம்மன் வெற்றிவாகை சூடினானா...?
சிவகாமியின் காதல் என்னாச்சு...?
புலிகேசியின் மரணம் எப்படி நிகழ்ந்தது...?
நாகநந்தி என்ன ஆனார்...?
வாதாபியில் ரிஷபச் சின்னம் மாற்றப்பட்ட சிங்கக்கொடி பறந்ததா...? என்பதை சுவராஸ்யமாய்ச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
சபதத்தைத் தொடர்ந்து கனவில் பயணிக்கிறேன்... சபதத்தில் மகேந்திரர் பல வேஷங்கள் போட்டு நாட்டைக் காத்தது போல் கனவில் மாமல்லனான நரசிம்மர், பல வேஷம் போட்டு சோழ தேசத்தைக் காக்கிறார்... சுவராஸ்யமாய் மாமல்லர், குந்தவி, விக்கிரமன், பொன்னன், வள்ளி, மாரப்பபூபதி என கதை பயணிக்கிறது முன்னூறு பக்கங்கள் கடந்து விட்டேன்.
அப்புறம்... சிவகாமி சபதத்தை வாசித்த வகையில்
கதையில் நம்மைக் கவர்வது மகேந்திரரா... நரசிம்மரா...?
நம் மனம் பயணிப்பது பரஞ்சோதியுடனா... நரசிம்மருடனா...?
சிவகாமியின் காதல்...
நரசிம்மனும் சிவகாமியும்...
இப்படி நிறையத் தலைப்பில் நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்று தோன்றுகிறது.... பார்க்கலாம்.
மிகப்பெரிய கதை... கதைச் சுருக்கமாய் கொடுப்பதென்பது மிகவும் கடினமே... பதிவின் நீளம் கருதி முக்கால்வாசி கதைக்குள்தான் பயணித்திருக்கிறேன்.
வாசிப்பில் அலுப்பு ஏற்படாத கதை...
முடிந்தால் வாசிக்காதவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்.
-'பரிவை' சே.குமார்.
சிவகாமியின் சபதம் பல வருடங்களுக்கு முன் வாசித்திருக்கேன்....இப்போது உங்கள் பதிவு பார்த்ததும் மீண்டும் வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது...பார்க்கணும்..
பதிலளிநீக்குபகிர்விற்கு நன்றி குமார்.
கீதா
70களிலேயே பொன்னியின் செல்வன் முழுவதையும் வாசித்திருக்கின்றேன்..
பதிலளிநீக்குதொகுப்பாக அத்தனை பாகங்களையும் புத்தகத் திருவிழாவில் வாங்கி வைத்திருக்கின்றேன்..
சிவகாமியின் சபதம் சில அத்தியாயங்களுடன் சரி..
இந்தக் கதை படித்ததில்லை. படிக்கவேண்டும் என்கிற ஆவலைத் தூண்டி இருக்கிறீர்கள். பார்ப்போம்.
பதிலளிநீக்குசிவகாமியின் சபதம் பதிவு அருமை குமார்.
பதிலளிநீக்குபொன்னியின் செல்வனும்,சிவகாமியின் சபதமும். பார்த்திபன் கனவும்
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் படித்த நூல்கள்
மீண்டும்படிப்பேன்
தங்களின் வாசிப்பு அனுபவம் தொடரட்டும் நண்பரே
நன்றி
தம +1
√
பதிலளிநீக்குபலமுறை பொன்னியின் செல்வனைப் படித்தள்ளபோதிலும் சிவகாமியின் சபதத்தினை சில முறையே படித்துள்ளேன். கலையழகை, பெண்மையை, வீரத்தை, நட்பை,இது போன்றனவற்றை அவர் வெளிப்படுத்தும் பாணிக்கு நிகர் அவரே.
பதிலளிநீக்கு