செவ்வாய், 21 நவம்பர், 2017

வாசிப்பனுபவம் : கவிழ்ந்த காணிக்கை

நான் முன்பு ஒரு பதிவில் சொல்லியிருந்தேன் 'வாசிப்பு ஒரு போதை' என்று...

உண்மைதான்... எப்படியான மனநிலை என்றாலும் பேருந்துப் பயணத்தில் வாசிப்பு என்பது தொடரத்தான் செய்கிறது. பாலகுமாரனின் 'முதல் யுத்தம்' முடிந்ததும் எனது தேடலில் கிடைத்தது 'கவிழ்ந்த காணிக்கை', இதுவும் பாலகுமாரன் எழுதியதுதான். இவர் அதிகம் சோழருக்குள் மட்டுமே திளைத்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆம் இதுவும் சோழர்கள் கதைதான்... 

சாண்டில்யனைப் போல், கல்கியைப் போல் பரவலான வரலாற்றுப் பார்வைக்குள் போகவில்லை என்றாலும் கற்பனையைக் காட்டிலும் வரலாற்றை அவர்களைவிட கொஞ்சம் அதிகமாகவே கொடுத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. எது எப்படியிருந்தாலும் அவர்களின் எழுத்தில் இருக்கும் ஈர்ப்பு வரலாற்றுக் கதைகளில் இவரிடம் இல்லை என்றும் தோன்றுகிறது. இந்த எண்ணம் எனக்கு மட்டும்தானா?

சரி கவிழ்ந்த காணிக்கையைப் பார்ப்போம்.

Image result for கவிழ்ந்த காணிக்கை

தஞ்சைப் பெரிய கோவில் பணிக்காக பாறைகள் வெட்டியெடுக்கும் பணி நடைபெறுகிறது. பூமியின் எலும்பான பாறைகளை இப்படியே வெட்டி எடுத்துக் கொண்டிருந்தால் ஒருநாள் இல்லையேல் ஒருநாள் பூமி பொலபொலவென உதிர்ந்து காணமல் போய்விடும் என்ற கவலையுடன் பாறைகள் வெட்டி எடுக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிறார் ஆதிச்ச பெருந்தச்சன். இப்ப நாம மலைகளை எல்லாம் கூறு போட்டு ஆழ...ஆழ....ஆழமாக வெட்டியெடுத்து பூமியையும் கூறு போட்டுத்தானே வைத்திருக்கிறோம்.

யார் இந்த ஆதிச்ச பெருந்தச்சன்..?  

இராஜராஜ சோழரால் நியமிக்கப்பட்ட ரகசிய பெருந்தச்சர். தஞ்சைக் கோவில் கட்டுமானப் பணிக்கு திருவக்கரையில் பாறைகள் எடுத்து சிற்பங்கள் செய்பவர். 

திருவக்கரைக்கு ஒரு மழைநாளில் வந்து மூன்று நாட்கள் தங்கிப் பணிகளைப் பார்வையிடும் இராஜராஜச் சோழன், இவரிடம் சிவலிங்கத்தையும் அதற்கு இணையான நந்தியையும் செய்யச் சொல்கிறார். அதற்கு என்ன சன்மானம் வேண்டும் என்பதை ஓலையில் எழுதித் தாருங்கள். சன்மானம் உங்கள் வீடு தேடிவரும். தங்கள் உதவிக்கு எத்தனை பேரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். திருவக்கரை கிராமத்துக்கு என்ன உதவிகள் தேவையோ அது உடனடியாகச் செய்யப்படும். கல் சுமக்க யானையோ குதிரையோ மிகப்பெரிய மாட்டு வண்டிகளோ உடனடியாக தரப்படும் என்றும் சொல்கிறார். 

மேலும் தூண்களுக்கான பாறைகளையும், கூரை மூட மேல்தளத்துக்கான பாறைகளையும் தயார் செய்து வையுங்கள். தஞ்சையில் இருந்து ஆஸ்தான பெருந்தச்சர்களை வந்து எடுத்துப் போகச் சொல்கிறேன். கொண்டு செல்லும் பாதைதான் மோசமாக இருக்கிறது. அதை நான் சரி செய்து கொள்கிறேன் என்று சொல்லிக் கிளம்புகிறார்.

இரவு உணவுக்குப் பின் மனைவி வெற்றிலை மடித்துக் கொடுக்க வாயில் அதக்கியபடி, மூன்று ஆள் உயரத்திற்கு ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும் இரண்டு ஆள் உயரத்திற்கு நந்தியும் இந்த திருவக்கரையில் தன்னைச் செய்யச் சொல்லியிருப்பதாக மனைவியிடம் ஆதிச்ச பெருந்தச்சன் பெருமையுடன் சொல்கிறார். 

உடனே அவர் மனைவி தங்களுக்கு மகன் பிறந்தால் சிவனுக்கு வாகனம் செய்வதாக வேண்டியிருந்தீர்களே... ஏதேனும் ஒரு கோவிலுக்கு அடித்துக் கொடுப்பேன் என்றும் சத்தியம் வேறு செய்திருந்தீர்களே ஞாபகம் இருக்கிறதா..? என்று கேட்டு அதை ஏன் தஞ்சைப் பெரிய கோவிலுக்குச் செய்து கொடுக்கக் கூடாது என்றும் கேட்கிறாள். 

அவருக்கும் இது மிகச் சிறப்பானதொரு பணி, ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலத்துக்குப் பேசப்படக்கூடிய ஒரு கோவிலில் தமது காணிக்கையாக நந்தி, அதுவும் இதுவரை எங்கும் இல்லாத உயரத்தில் ஒரு நந்தி, யாருக்குக் கிடைக்கும் இந்தக் கொடுப்பினை என்று நினைத்து அப்படியே செய்யலாம் என்கிறார்.

ஆதிச்ச பெருந்தச்சன்  மகன்  சோமதேவன், பிறக்கும் போதே இடக்கை மூடி வலக்கை விரித்துப் பிறந்தவன். வலக்கையில் சுத்தியும் இடக்கையில் உளியும் பிடித்துப் பிறந்திருக்கிறான் என பார்க்க வந்தவர்கள் எல்லாம் பாராட்டினாலும் வீட்டில் உள்ளவர்கள் ஏழு வயது வரை அவனுக்கு சிற்பக்கலை கற்றுக் கொடுக்க  விடவில்லை. ஆதிச்ச பெருந்தச்சன் அவனை அடித்துத் துன்புறுத்திவிடுவார் என்பதுதான் காரணம்.

நந்தியைச் செய்து விட்டு சிவலிங்கம் செய்யலாம் என்று யோசித்தபோது கோவில் வேலை வேகமாக நடக்கிறது. ஒரு வருடத்திற்குள் சுற்றுப்புற கருவறைச் சுவர்கள் எழுப்பப்பட்டு விடும் அதற்குள் சிவலிங்கம் செய்தால்தான் உள்ளே கொண்டு போய் வைக்க சரியாக இருக்கும். நாம் முந்திக் கொள்ளாவிட்டால் புதுக்கோட்டையில் இருந்து எடுத்து வரும் கல்லிலோ, பாண்டிய நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள மலைகளில் இருந்து எடுக்க இருக்கும் கல்லிலோ செய்து வைத்து விடுவார்கள். நம் திருவக்கரைக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பை விட்டு விடக்கூடாது என பலரும் சொல்ல, ஆதிச்ச பெருந்தச்சன் சிவலிங்கத்துக்கும் ஆவுடையாருக்கும் தனித்தனிக் கல்லாக தேட ஆரம்பிக்கிறார்.

சிவலிங்கத்தை முதலில் செய்வதா..? இதென்ன கூத்து..? நந்தி தளபதி... காவல் தெய்வம்... நந்தியை முதலில் செய்துவிட்டுத்தானே இறைவனை வரவழைக்க வேண்டும்... அதுதானே முறை... காவலன் இன்றி எஜமானனா..? எஜமானுக்குப் பின்னர் வேலைக்காரன் வரவேண்டுமா..? இது தவறான விஷயம் அல்லவா..? என அவரின் அம்மா புலம்பினாலும் யாரும் கேட்பதாய் இல்லை.

சிவலிங்கம் செய்யும் வேலை துவங்கிய போது சோமதேவனும் அவருடனே இருந்து சிற்ப நுணுக்கங்களை விரைவாய் கற்றுக் கொள்கிறான். சிவலிங்கம் தயாரான போது அதை ஒரு பெரிய வண்டியில் வைத்து காளைகள் இழுக்க , யானை ஒன்று தள்ள சகடப் பெருவழி மூலம் தஞ்சைக்கு எடுத்துச் செல்கிறார்கள். மன்னர் சொன்னது போல் பாதைய ஆட்கள் செப்பனிட்டு... பாறைகள் பதித்து சீர்படுத்தி வைத்திருக்கிறார்கள். வழி நெடுக ஓலைக்குடிசைகள் கட்டப்பட்டு சிற்பிகளும் வீரர்களும் தங்கி இளைப்பாறச் செல்ல வகை செய்து ஒரு போர் வீரனையும் உதவிக்கு வைத்து இருப்பதைக் காண்கிறார்கள்.

வழியெங்கும் மக்களின் அன்பினில் நனைந்து நாலு நாள் நடையில் சென்றடையக் கூடிய தஞ்சையை சுமையின் காரணமாக ஆறு நாளில் அடைகிறார்கள்.  கோவில் கட்டுமானத்தைப் பார்த்த ஆதித்த பெருந்தச்சன் இவ்வளவு பெரிய கோவிலா என்று ஆச்சர்யப்பட்டு மன்னரைப் புகழ்கிறார். மன்னருக்கு ஒரு மாதம் தஞ்சையில் தங்கிச் செல்வதாகச் செய்தி அனுப்பி விட்டு கோவில் திருப்பணி நடக்கும் இடத்தில் தங்குகிறார்.

அவர் அங்கிருக்கும் சமயத்தில் மற்ற தச்சர்கள் கல் தேவைகளைச் சொல்லியும் ஆலோசனைகளைப் பெற்றும் பணி செய்கிறார்கள். அங்கிருக்கும் நாளில்   சிவலிங்கத்தையும் ஆவுடையாரையும் பந்தனம் செய்து வைக்கிறார்.  மன்னரிடம் தான் நந்தியை காணிக்கையாகச் செய்து தரவிருப்பதைச் சொல்ல மன்னருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி, இதைத்தான் ஒவ்வொரு குடிகளிடமும் எதிர்ப்பார்க்கிறேன் என்று சொல்லி வாழ்த்துகிறார்.

ஊர் திரும்பும் ஆதிச்ச பெருந்தச்சன்  தன் மகனுக்கு தொழில் கற்றுக் கொடுக்க நினைக்கிறார்... அப்போது சிலர் நீ சொல்லிக் கொடுப்பதைவிட மற்றொருவரிடம் பழகினால்தான் அவனால் எல்லாம் கற்றுக் கொள்ள முடியும் என்று சொல்ல, அதுவும் சரியென தஞ்சைக் கோவில் பணியில் இருக்கும் பெருந்தச்சர்களிடம் கூட்டிச் செல்ல, ஆதிச்ச பெருந்தச்சனின் மகனுக்கு பாடம் கற்பிக்க கொடுப்பினை வேண்டுமே என ஆளாளுக்கு நான் நீ எனப் போட்டியிட இறுதியில் ஒருவர் மற்றவர்களை அடக்கி சோமதேவனை தன் சீடனாக்கிக் கொள்கிறார்.

தஞ்சையில் தொழில் கற்கும் சோமதேவன்  இரண்டு தீபத்திருநாள் முடிந்து மூன்றாவது தீபத் திருநாள் வர இருக்கும் சமயத்தில் தொழிலில் தேர்ச்சி அடைந்து விட்டாய்... இதுவரை பாரத கண்டத்தில் இல்லாத உயரத்தில் நந்தி செய்து முடித்து விட்டேன். இது நம் குலப்பெருமையை விளங்க வைக்கும் உன்னை வாழ வைக்கும் என்று சொல்லி மகனை ஊருக்கு அழைக்கிறார் ஆதிச்ச பெருந்தச்சன்.

ஊருக்கு வந்த சோமதேவன் செதுக்கி உயர்ந்து நிற்கும் நந்தியைப் பார்த்து 'ஆஹா அற்புதம் அப்பா' என்று சொல்லி அவரை வாழ்த்திப் புகழ்கிறான். ஆனாலும் அவனுக்கு வால் பக்கமாக கல்லில் சோடை இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது அதனால் யாரும் இல்லாத சமயத்தில் தட்டிப் பார்த்து சப்பத்தில் வித்தியாசம் தெரிகிறதா என சோதித்துப் பார்க்கிறான். அப்பா மேல் அபார நம்பிக்கை இருப்பதால் அவர் நல்ல கல்லாகத்தான் தேர்ந்தெடுத்திருப்பார் என தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்கிறான்.

ஆதிச்ச பெருந்தச்சன் செய்த 16 மாட்டு வண்டியில் ஒரு நல்ல நாளில் நந்தி ஏத்தப்பட்டு... சுற்றிலும் ஆடாமல் ஆப்பு வைக்கப்பட்டு... பக்கவாட்டுக் கட்டைகள் அழுத்திப் பிடித்து இறுக்கிக் கட்டி... நந்தி முழுவதும் வைக்கோல் பிரி சுற்றி... இரண்டு யானைகள் தள்ள... போர் வீரர்கள் உதவிக்கு வர... கிராமமே பின் செல்ல... சங்கரபாணி ஆற்றுப் பக்கம் வந்து நின்றது.

ஐப்பசி மாதம் என்றாலும் மழை இல்லாததால் ஆற்றில் முழங்கால் அளவு தண்ணீர் இருக்க... மெல்ல மெல்ல வண்டியை ஆற்றின் நடுப்பகுதிக்கு கொண்டு செல்ல... வண்டியின் முன்பக்க அச்சு முறிந்து தண்ணீருக்குள் இருக்கும் பாறைக்குள் வண்டி சிக்கிக் கொள்கிறது. யானைகள் நெட்டித் தள்ள... அதன் வேகமான தாக்குதல் தாங்காமல் முன் பக்கம் உடைய... பெரிய பெரிய கட்டைகளைக் கொண்டு அண்டங்கொடுத்து தண்ணீருக்குள் விழாமல் நிறுத்தி வைக்கிறார்கள்.

அந்த இடத்திலேயே பலர் சேர்ந்து ஒரு நாள் முழுக்க வேலை செய்து புதிய சக்கரத்தைச் செய்கிறார்கள். அதுவரை நந்தி தண்ணீருக்குள் இருக்கிறது.

இந்தச் சமயத்தில் சோமதேவன் குடம் குடமாக நீரெடுத்து நந்திமேல் ஊற்றிக் கொண்டிருக்கிறான். ஒருவழியாக சக்கரம் மாற்றப்பட்டு முன்னே ஆட்கள் மெல்ல இழுக்க... பின்னே யானைகள் தள்ள ஒருவழியாக கரைகடந்து தஞ்சை சகடப் பெருவழிக்குச் செல்கிறது நந்தியைச் சுமக்கும் மாட்டு வண்டி.

தண்ணீரில் நனைந்த நந்தி, சகடப் பெருவழியில் செல்லும் போது வெயிலில் காய, நந்தியைச் சுற்றிப் பார்க்கும் சோமதேவன் திகைக்கிறான். ஆம் எல்லா இடமும் வெயிலில் காய ஒரு இடத்தில் மட்டும் ஈரம் அப்படியே இருக்கிறது.

அப்பாவை அழைத்து வந்து காட்ட, அவருக்கும் அவனுக்கும் அது தொடர்பாக வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த வாக்குவாதம் எதனால்...?

அப்படி என்ன விஷயத்தை நந்தியின் நீர் காயத இடத்தில் சோமதேவன் கண்டுபிடித்தான்..?

நீரில் தவித்து நிலத்துக்கு வந்த நந்தி தஞ்சைப் பெரிய கோவிலை அலங்கரிக்கும் தற்போதைய நந்திதானா...?

அப்பனுக்கும் மகனுக்குமான வாக்குவாதத்தின் முடிவு என்ன ஆனது...?

ஆதிச்ச பெருந்தச்சன் எடுத்த முடிவுதான் என்ன..?

இந்தக் கேள்விக்கெல்லாம் விடையை இங்கு சொல்லிவிட்டால் கதை வாசிக்கும் போது சுவராஸ்யமாய் இருக்காது.

மொத்தமே 33 பக்கம்தான்... ரொம்பச் சிறிய குறுநாவல் என்பதைவிட சற்றே பெரிய சிறுகதை என்பதே சரி.

வாசித்துத் தெரிந்து கொள்ளுங்களேன் கேள்விக்கான விடைகளை...

கதையின் முடிவில் இன்றும் இருக்கும் ஒரு உண்மையை, மக்கள் போற்றும் ஒரு உண்மையைச் சொல்லியிருக்கிறார் பாலகுமாரன். 

அதென்ன உண்மை..?

அந்த உண்மையை இங்கு சொன்னால் கதையையே சொன்ன மாதிரி ஆகிவிடுமே...

ஆம்... கவிழ்ந்த காணிக்கை தொடர்பான உண்மைதான் அது...

வாசிப்புத் தொடரும்... அடுத்த வாசிப்பனுபவத்தில் ஜெயகாந்தனின் 'அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்'.

இப்போது வாசிப்பில் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' இரண்டாம் பாகத்தில் முக்கால்வாசி கடந்து இருக்கிறேன்.
-'பரிவை' சே.குமார்.

13 கருத்துகள்:

  1. ஆமாம்..
    நந்தியின் வால் பகுதியில் இன்னும் நீர் கசிந்து கொண்டிருக்கின்றது..
    கடுமையான கோடையிலும் கூட அதனைக் காணலாம்..

    அதுவாக இருக்குமோ!..

    ஆனால் -
    அந்த நந்தி மராட்டியர்களால் செய்விக்கப்பட்டது என்றும் பழைய நந்தி தென்புறமாக உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றார்கள்..

    இது பற்றி உள்முகமாகக் கேட்டபோது - புன்னகை தான் பதிலாக வந்தது..

    பெரியகோயிலில் எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள் உள்ளனவோ
    அத்தனை அத்தனை மர்மங்களும் ரகசியங்களும் உள்ளன..

    எல்லாவற்றையும் அறிந்தவர் ஒருவர் தான்!..

    அவர் யார்!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா...
      நிறைய ரகசியங்கள் இருக்கிறது ஐயா...
      கோவில் ரகசியம் அல்லது கோவில் குறித்த உண்மையை அறியாமலேயே போய்விடுவோம் போலிருக்கிறது ஐயா...
      அந்த ரகசியம் அறிந்தவர் எவரேனும் ஏதாவது ஒரு வழியில் எழுதி வைத்திருந்தால் நலமே.
      கிடைக்குமா..?
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. குமார்... இது அநியாயம். நாங்கள் எங்கே புத்தகத்தைத் தேடித் படிக்கப் போகிறோம்? என்ன விஷயம் என்று சொல்லி விடுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா...
      முழுக்கதையையும் பகிர்ந்தால் படிப்பவர்களுக்கு சுவாராஸ்யமில்லாமல் போகும் என்றுதான் பதியவில்லை.
      ரகசியம் வேண்டுமென்றால் தனி மெயிலில் அனுப்புறேன்...:)
      இல்லைன்னா வாட்ஸப் நம்பர் அனுப்புங்க (முகநூல் தனிப்பெட்டி வழி) கதையோட பிடிஎப் அனுப்புறேன்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. நூலினை படிக்கத் தூண்டும் விமர்சனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

      நீக்கு
  4. ஆஹா! ஸஸ்பென்ஸ் ஸஸ்பென்ஸ்!!! ஆவலாக இருக்கு! குமார் இணையத்தில் லிங்க் இருக்கா டவுன்லோட் பண்ண முடியுமா? லிங்க் உண்டுனா கொடுக்க முடியுமா குமார்...

    பதிலளிநீக்கு
  5. பிடிஎஃப் கிடைச்சுருச்சு குமார்...நன்றி!!!! கூகுளில் தேடி எடுத்துவிட்டோம்

    பதிலளிநீக்கு
  6. படிக்க தூண்டுது விமர்சனம். ஆனா, இப்ப பாலக்குமாரன் நடவடிக்கை படிக்கனுமான்னு யோசிக்க வைக்குது

    பதிலளிநீக்கு
  7. அழகா விவரிச்சு இருக்கீங்க கதையை திரும்பவும் படிக்கணும் என்ற ஆவலை தூண்டியது இவருடையது வரலாற்றை ஆராய்ந்து கொடுத்திருந்தாலும் ஒரு ஒரு தனிப்படட நபரின் பற்றிய தாக்கங்கள் அதிகம் வருகிறது குணம் நிறம் மனம் என்று சாண்டில்யன் அவர்களது எல்லாம் வரலாற்றை மட்டும் நோக்கியே நகருகிறது கற்பனை கலந்து சரியா சொல்கிறேனா

    பதிலளிநீக்கு
  8. அருமையான படிக்க தூண்டும் விமர்சனம்.
    படிக்க ஆவலாக இருக்கிறது.
    அரசர்கள் கட்டிய எல்லா கோவில்களிலும் ரகசியங்கள் நிறைய இருப்பதாய் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  9. அம்மாவின் புலம்பல் உண்மையாகி விட்டதோ?
    முதலில் நந்தி செய்து இருக்க வேண்டுமோ?

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி