சாண்டில்யனின் கதைகளில் இரண்டு நாயகிகள்... அவர்களைப் பற்றிய வர்ணனைகள் சற்று கூடுதலாகவே இருக்கும். இவற்றை சற்றே தள்ளி வைத்து விட்டுப் பார்த்தால் ஒரு வரலாற்று நிகழ்வை சான்றுகளுடன் எடுத்துச் சொல்லி அதில் உண்மையான கதாபாத்திரங்களுடன் அவரின் கற்பனைக் கதாபாத்திரங்களை உலவச் செய்து அருமையான நடையில் கதையை நகர்த்தி போர்க்களக்காட்சிகளை நம் கண் முன்னே நிறுத்தி வாசித்து முடிக்கும் போதும் நம் மனசுக்கு ஒரு நிறைவைக் கொடுக்கும் விதமாக எழுதியிருப்பார். அந்த நிறைவுதான் அவரின் நாவல்களை தொடர்ந்து வாசிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.
கன்னி மாடத்தின் கதை நடந்தது பனிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்... பாண்டியர்களுக்குள் தயாதி சண்டை ஏற்பட்டு பாண்டிய நாடு இரண்டாகப் பிரிந்து இது இரண்டு தலைமுறைகளைப் பாதித்து நீண்ட காலம் நீடித்தது. நெல்லையில் குலசேகர பாண்டியனும் மதுரையில் பராக்கிரம பாண்டியனும் ஆண்டு வந்தனர். அவர்களின் தயாதி சண்டை, ஒரு கட்டத்தில் போரில் வந்து நிற்க, குலசேகரன் பராக்கிரமன் மீது படை எடுத்தான். பராக்கிரமனோ தன்னையும் நாட்டையும் காத்துக் கொள்ள சிங்களத்து உதவியை நாடினான். இலங்காபுரி அரசன் அனுப்பிய இலங்காபுர தண்டநாயகன் தலைமையிலான படை வந்து சேருமுன்னர் பராக்கிரமனை கொன்று மதுரையைப் பிடித்தான் குலசேகரன், அவனிடமிருந்து தப்பியோடினான் பராக்கிரமனின் மைந்தன் வீரபாண்டியன். தண்டநாயகனோ குலசேகரனை வென்று மதுரையை தன்வசமாக்கி வீரபாண்டியனை அரியணையில் ஏற்றி வைத்ததுடன் அவனை வைத்தே பாண்டிய நாட்டை சிங்களத்தின் ஒரு பகுதியாக்கிக் கொள்ளத் திட்டமிட்டான். அதனால் மக்களைத் துன்புறுத்தி, பயிர் பச்சையை அழித்து, தமிழர்களை சிறைப் பிடித்து சிங்களத்துக்கு வேலைக்கு அனுப்பியதுடன் இலங்கை நாணயத்தை பாண்டிய நாட்டில் புழங்க வைத்தான்.
குலசேகரனோ சோழர்களின் உதவியை நாடினான்... ராஜராஜன், ராஜேந்திரன் காலங்களில் இலங்கை மட்டுமல்ல பல தேசங்களை தங்கள் வசம் வைத்திருந்த வீரம் நிறைந்த, கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த, தமிழகம் மூவேந்தர்களால் பிளவுபட்டுக் கிடக்கக் கூடாது என்று நினைத்த சோழ சாம்ராஜ்யத்தின் அப்போதைய அரசனாக் இரண்டாம் இராஜாதிராஜன், அவனுக்கு உதவவும் சிங்களத்தின் பிடியில் இருந்து தமிழர்களைக் காக்கவும் தமிழகத்தில் நுழைந்து ஆட்டம் போடும் சிங்களத்தின் கொட்டத்தை அடக்கவும் நினைத்தான். அதற்காக பல்லவராயன் சகோதர்களான தனது முதன் மந்திரி மற்றும் படைத்தலைவன் இருவரையும் நியமித்தான். அவர்கள் இலங்காபுர தண்டநாயகனை வென்று தமிழகத்தையும் தமிழர்களையும் எப்படிக் காத்தார்கள் என்ற வரலாறு இலங்கையின் இராஜபரம்பரை நூலான மஹாவம்சத்திலும் தமிழ்நாட்டு சாசனங்களிலும் காணப்படுவதாகவும். மேலும் நீலகண்ட சாஸ்திரியார் சோழர்களைப் பற்றிய தனது சரித்திரப் புத்தகத்தில் தெளிவாக எழுதி இருப்பதாகவும் தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார் சாண்டில்யன்.
இந்த சரித்திர பின்னணியை களமாக்கி அதில் பெரும்பாலான வரலாற்றுப் பாத்திரங்களுடன் அபராஜிதன், கார்குழலி, சிங்களத்துப் பைங்கிளி, அடிகளார் என சில கற்பனைப் பாத்திரங்களை உலவ விட்டு கதை சமைத்திருக்கிறார் சாண்டில்யன். அவர் சமைத்த கதை மிகவும் விறுவிறுப்பாய், வாசிக்கும் ஆவலைத் தூண்டும் விதமாய் இருந்தது என்பது உண்மையே...
கன்னி மாடம் என்பது அரண்மனைப் பெண்டிர்கள் தங்கியிருக்கும் ஒரு இடம். அங்கு ஆண்கள் செல்லக்கூடாது என்ற சட்டம் உண்டு. அதை மீறினால் அவர்களின் தலை துண்டிக்கப்படும் என்பதாய் சொல்லப்படுகிறது. பாண்டிய நாட்டு எல்லைக்கருகில் மழவராயன் என்னும் சிற்றரசன் பழைய கோட்டையை பழுது பார்த்து வைத்திருக்கிறான். அந்தக் கோட்டையை கன்னி மாடம் என்ற பெயரில் பாண்டியர்களுடன் போர் வந்தாலும் பயன்படுத்தும் விதமாக மிகவும் பாதுகாப்பானதாக, தீடீர் போர் ஏற்பட்டாலும் உள்ளிருப்பவர்களை விரைவில் அணுக முடியாத வண்ணம் யாரும் அறியாத சுரங்கப்பாதை வசதியுடன் அமைத்திருப்பதுடன் அங்கு தம் மகள் கார்குழலியை அவளை சிறுவயதில் இருந்து பார்த்துக் கொள்ளும் அடிகளாரின் பாதுகாப்புடன் தங்கவைத்திருக்கிறான்.
வீரபாண்டியன் சிங்களத்துப் பைங்கிளியின் மயக்கத்தில் கிடங்க, இலங்காபுர தண்ட நாயகனோ தமிழர்களை அடிமைப்படுத்தி, துன்புறுத்தி வருகிறான். இவர்களிடம் இருந்து நாட்டை மீட்க, ரகசியமாய் கூடுகிறார்கள் நிஷதராஜன், வங்கார முத்தரையர், கருணாகரத் தேவன் மற்றும் காரி... இவர்களின் இந்த ரகசிய பேச்சில் முக்கியமானவனாகவும் அவனால்தான் முடியும் என்றும் நம்பும் மனிதனாக வீரபாண்டியனின் உறவினனும் மதுரையின் சேனாதிபதியுமான அபராஜிதன் இருக்க, ரகசிய இடத்துக்கு வரும் அபராஜிதனோ வீரபாண்டியனை எதிர்க்க மறுக்கிறான். மக்கள் நலனுக்காக என்று சொல்லி, அவர்கள் உண்மையை விளக்க, சம்மதிக்கலாமா வேண்டாமா என்ற குழப்ப நிலையில் விவாதிக்கும் போது குதிரைகள் வரும் குளம்பொலி கேட்கிறது.
அவர்களைத் தேடி தண்டநாயகனின் வீரர்கள் அந்த ரகசிய இடம் வர, கருணாகரத் தேவன் தவிர மற்றவர்கள் தப்பியோடி... சண்டை இட்டு... காட்டுக்குள் இருந்து வெளியாக நிஷதராஜனும் முத்தரையரும் மாட்டிக் கொள்ள அபராஜிதனுக்கு ஏற்பட்ட வேல்காயத்துடன் அவனும் காரியும் மழவ நாட்டு எல்லையில் இருக்கும் படை வீரர் கூடாரம் வர, அது இலங்காபுரனின் தலைமையில் தங்கியிருக்கும் பாண்டியர் படை என்பதையும் அங்கு தண்டநாயகனுடன் சிங்களத்துப் பைங்கிளியான மாதவியும் இருக்கிறாள் என்பதையும் அறிகிறார்கள். மாதவியின் சூழ்ச்சியில் வீழாமல் அங்கிருந்து தப்பி, கன்னிமாடத்தின் முன்னே இருக்கும் காட்டில் வந்து ஓய்வெடுக்க, கார்குழலி மற்றும் அடிகளாரால் பார்க்கப்பட்டு... அபராஜிதனை அடிகளார் யாரென அறிந்து கொண்டாலும் அவன் சொல்லக்கூடாது என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க கார்குழலிக்கு யாரெனச் சொல்லாமல் மறைத்து விடுகிறார். கார்குழலியே அபராஜிதனுக்கு சிகிச்சை அளித்து யாருக்கும் தெரியாமல் கன்னி மாடத்தில் தங்க வைக்கிறாள், மறுநாள் மழவராயன் அங்கு வர, குலசேகரனும் கார்குழலியை தன் மகனுக்கு கேட்டு வருகிறான். அபராஜிதனும் காரியும் யாரும் அறியாமல் அங்கிருந்து தப்பி மதுரை வர, நிஷதராஜன் மற்றும் முத்தரையர் தலைகள் வெட்டப்பட்டு கோட்டை மீது கம்பியில் சொருகப்பட்டு கழுகுகள் கொத்தித் தின்று கொண்டிருப்பதைக் கண்டு திகைக்கின்றனர்.
பின்னர் நடக்கும் நிகழ்வுகளில் மாதவி அபராஜிதனை மயக்கப் பார்க்க, வீரபாண்டியன் கார்குழலியை திருமணம் செய்து கொள்ள விரும்பி அபராஜிதனை தூதுவனாக்க நினைக்க, அவனோ மனசுக்குள் கார்குழலியை மது, மாது என்றிருக்கும் இவனுக்கு மணமுடிப்பதா என்று தவிக்கிறான். ஆனாலும் பாண்டிய நாட்டை சிங்களவர் பிடியில் இருந்து காக்கவும், தமிழர்களைக் காக்கவும் இது அவசியமென அவனுடன் வாதாடும் கருணாகரத் தேவன், அதற்கான ஓலையுடன் சென்று காரியத்தை முடித்து வர, மழவராயன் அரண்மனைக்குச் செல்லும் வீரபாண்டியன், கார்குழலி அழகில் மயங்கி மது போதையில் அவளிடம் தகராறு செய்ய, அடிகளார் அந்த நேரத்தில் வந்து காக்க, கார்குழலி மணமோ குலசேகரன் மகனையோ வீரபாண்டியனையோ நினைக்காமல் அபராஜிதனை நினைக்கிறது. கார்குழலி காதலிக்கிறாள் என்று அடிகளார் சொல்லும் ஒரு பொய்யால் அவர் வீரபாண்டியனால் துன்புறுத்தப்பட்டு, பொறுக்க முடியாமல் அவள் காதலிப்பது அபராஜிதனை என்று சொல்லிவிட, மாதவி, கார்குழலி என இருவரையும் மயக்கிவிட்டானே என்ற கோபத்தீயில் அபராஜிதனை நாடு கடத்துகிறான் வீரபாண்டியன். அத்துடன் தன்னைச் சந்திக்க வந்த அண்ணன் பல்லவராயனிடம் சோழர்களுடன் போருக்கு அழைப்பும் விடுத்து விடுகிறான்.
நாடு கடத்தப்பட்ட அபராஜிதன், மழவநாடு செல்ல, அந்த சமயத்தில் குலசேகரன் மகன் விக்கிரம பாண்டியன் அடிகளாரின் ஆணைக்கிணங்க கள்ளுக்கடையான் எனப்படும் மார்க்கீயன் உதவியுடன் கார்குழலியை கன்னி மாடத்துக்கு கடத்திச் செல்கிறான். அவளைக் காக்க அங்கு வருகிறான் அபராஜிதன், அவளைக் கொண்டு செல்ல போர் கோலம் பூணுகிறான் வீரபாண்டியன். அபராஜிதன் தான் யார் என்று சொல்லாமலே கன்னி மாடத்தை தன் கைப்பிடிக்குள் கொண்டு வருவதுடன் கார்குழலியுடனான காதலும் இறுக்கமாக, விக்கிரம பாண்டியனுக்குள் நெருப்பு மூள்கிறது. அந்த நெருப்பு தனக்கு எதிரியானாலும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் வீரபாண்டியனுக்கு உதவ, அதை எப்படி அபராஜிதன் உடைத்து கன்னி மாடத்தையும் கார்குழலியையும் காத்து வீரபாண்டியனை புறமுதுகிட்டு ஓட வைக்கிறான் என்பதை விரிவாய் சொல்லி, அதன் பின்னர் அபராஜிதனுடன் அண்ணன் பல்லவராயன் வந்து இணைய, காரி, மார்க்கீயன் மற்றும் கருணாகரத் தேவனின் உதவியுடன் இலங்காபுரனையும் இலங்கையில் இருந்து வரும் மற்றொரு படைத்தலைவனான ஜகத்விஜயனையும் தனது தந்திரத்தால் தோற்கடித்து தலைகளை வெட்டி கோட்டையில் சொருகி தன் நண்பர்களான நிஷத ராஜனையும் முத்தரையரையும் கொன்றதற்கு பலி தீர்த்துக் கொள்கிறான். சிங்களத்துப் பைங்கிளியான மாதவியோ அபராஜிதனை மயக்க நினைத்து முடியாமல் போக கண்ணீருடன் மீண்டும் இலங்கைக்குச் செல்கிறாள்.
கன்னி மாட மீட்புக்குப் பிறகு இலங்கையின் தண்டநாயகன் மற்றும் படைத் தலைவனுடனான் போர், ஜகத்விஜயனை மயக்கி, தன் காரியத்தை சாதித்துக் கொள்ள நினைக்கும் மாதவி செய்யும் தந்திரங்கள், தொண்டியில் கருணாகரத் தேவன் ஜகத்விசயனை ஏமாற்றி சிறை செய்வது, பொன்னமராவதியில் எழும் புரட்சி என மற்றொரு கதைக்களத்துக்குள் பயணித்த அனுபவத்தைக் கொடுத்து என்றால் மிகையில்லை. மதுரை குலசேகரன் கைக்கு வந்ததும் அபராஜிதனை விட்டு மழவராயன் இறப்புக்குப் பிறகு அந்த சிற்றரசை ஆட்சி செய்து வரும் கார்குழலியிடமிருந்து மழவநாட்டைப் பெற்று சோழர்கள் வசம் கொடுக்கச் சொல்கிறார் பல்லவராயன், அவன் மறுக்க சிறை செய்யப்படுகிறான். கருணாகரத் தேவர் கார்குழலியிடம் தூது செல்ல, தன் காதலுக்காக நாட்டை விட்டுக் கொடுத்து காதலனைச் சிறை மீட்கிறாள் கார்குழலி. அவர்களின் திருமணம் பல்லவராயர்கள் தலைமையில் மதுரையில் சிறப்பாக நடக்க, கன்னி மாடத்தை சீதனமாக கார்குழலியிடம் கொடுத்துவிடுகிறார் பல்லவராயர்.
இந்த நாவலுக்குப் பின்னர் சேரன் செல்வி வாசித்தேன்... அதிலும் ஒரு வீரபாண்டியன்... கன்னி மாட வீரபாண்டியன் சிங்களவனுக்கு இடமளித்தான் என்றால் சேரன் செல்வி வீரபாண்டியனோ முகமதியர் தமிழகத்தில் காலூன்ற உதவி செய்கிறான். அவனை எதிர்த்து முகமதியரின் தமிழக காலூன்றலையும் தடுக்கின்றான் சேரன் ரவிவர்ம குலசேகரன். பெரும்பாலான கதைகளில் வீரபாண்டியன் என்றே வருவதும் அவனது செயல்கள் மாறி மாறி இருப்பதுமே குழப்பம்... சரி விடுங்க... வேறு வேறு வீர பாண்டியர்களாக இருப்பார்களோ என்னவோ.... எது எப்படியோ கன்னி மாடம் படிக்க படிக்க ஆவலைத் தூண்டும் கதை என்றால் சேரன் செல்வி கீழே வைக்க விடாமல் படிக்க வைத்தது. அது குறித்து மற்றுமொரு பகிர்வில்...
-'பரிவை' சே.குமார்.