வியாழன், 1 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது : பஞ்சாயத்து

ன்னைக்கு காசுப் பிரச்சினையை விட குடும்ப பிரச்சினையைத் தீர்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பாக எதிர் எதிர் வாதங்கள்தான் மிகப்பெரிய பிரச்சினையாக பத்திரிக்கைகளை அலங்கரித்து வருகிறது. ஆளாளுக்கு டுவிட்டுறாங்க... இது ஒரு பக்கம்ன்னா சினிமாக்காரனுங்க ஒரு சங்கம்ன்னு வச்சிக்கிட்டு அவனுக அடிச்சிட்டுக்கிட்டு இது ஒண்ணும் லவ் லெட்டர் இல்லைன்னு இன்னொரு பக்கம் டுவிட்டுறாங்க. சரி நாம பஞ்சாயத்துக்குள்ள போவோம்.

Image result for நிஜங்கள்

கிராமங்கள்ல இந்த பஞ்சாயத்து பிரசித்தம்... ஆனால் எங்க ஊருப் பக்கம் சினிமாவில் காட்டுவது போல ஒரு ஆல மரமும், ஒரு அடி வாங்கின சொம்பும், நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லுன்னு சொல்ல நாலு பேரும் இருக்கமாட்டார்கள். கிராமத்துக்கு ஒரு அம்பலம் இருப்பார். அவர் சொல்வதே இறுதித் தீர்ப்பு... ஆனால் அந்த அம்பலத்தையே எங்க ஊருல இருபது வருசத்துக்கு மேல எதுலயும் சேர்க்காம ஒதுக்கி வச்சிருந்தாங்க... அதனால யார் தப்புச் செய்தாலும் தீர்ப்பு மட்டும் சரியா இருக்கும். அம்மாவுக்கு குமாரசாமி சொன்ன மாதிரியெல்லாம் அபத்தமாக இருக்காது. நாட்டாமை தப்புப் பண்ணினாலும் தண்டனை தண்டனைதான். ஊரு கூடி பேசி ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பாங்க. குடும்பப் பிரச்சினைகளை தெருவுக்கு கொண்டு வரமாட்டாங்க. பொண்ணு புள்ள பிரச்சினையின்னா ஊருல ரெண்டு குடும்பத்தையும் கூப்பிட்டு வச்சிப் பேசுவாங்க. அதுல சரியா வரலைன்னா நாட்டு அம்பலங்களை வச்சி நாட்டுக் கூட்டம் போட்டு பெரும்பாலும் நல்ல முடிவா எடுப்பாங்க.

ஊர் பஞ்சாயத்துங்கிறதை எல்லா விஷயத்துக்கும் கூட்டுவாங்க... திருவிழாவா ஊர் கூடி முடிவெடுப்பாங்க... விவசாயப் பிரச்சினையா ஊர் கூடி முடிவெடுப்பாங்க.... அங்காளி பங்காளி சண்டையா ஊர் கூடி முடிவெடுப்பாங்க... இடத் தகராறா ஊர் கூடி முடிவெடுப்பாங்க... கணவன் மனைவி பிரச்சினை குடும்ப அளவில் வந்துவிட்டதா ஊர் கூடி முடிவெடுப்பாங்க... இப்படி கண்மாயில் இருந்து கல்யாணம் வரை பல பிரச்சினைகள் ஊர் கூடி நல்ல முடிவெடுப்பாங்க. இதுலயும் சினிமாவுல காட்டுற மாதிரி தீர்த்து வைக்கிறது... அத்து விடுறது போன்ற விசயங்களைச் செய்ய மாட்டார்கள். நாலு சுவத்துக்குள்ள நடக்குற பிரச்சினையை நாலு சாதி சனம் முன்னாடிக் கூட கொண்டு வர யோசிப்பாங்க. பிரச்சினை பெரிதாகும் போது... அடுத்து என்ன செய்வது பொண்ணோட வாழ்க்கையில்ல என்ற கையறு நிலையில்தான் ஊர்க்கூட்டத்துக்கு அழைப்பு விடுப்பாங்க. ஆனால் இன்னைக்கு மேக்கப் போட்டு... பிரகாசமான விளக்கொளியில் அமர்ந்து உலகமே பார்க்க, குடும்ப பிரச்சினையை சந்திக்கு இழுக்க யோசித்த மக்களை, சமுத்திரம் தாண்டி எல்லாரும் பார்க்கும்படி அடித்து அழ வைத்து தங்கள் டி.ஆர்.பியை ஏற்ற எல்லாத் தொலைக்காட்சிகளும் வரிந்து கட்டி குடும்ப பஞ்சாயத்தை நடத்துகின்றன.

ஒரு குடும்ப பிரச்சினையை பொதுவெளியில் வைத்து, அவர்களை மெல்ல மெல்லச் சூடேற்றி அடித்துக் கொள்ள வைத்து அதை அப்படியே ஒளிபரப்பி... என்ன கேவலமான செயல் இது.  நல்லாப் பாருங்க இது ஒன்றும் நேரடி ஒளிபரப்பு அல்ல... முன்கூட்டியே பதியப்பட்ட நிகழ்ச்சிதான். இதுபோன்ற அடிதடிகளை எடிட் செய்து ஒளிபரப்ப முடியும் இருந்தும் செய்ய மாட்டோம். ஏன்னா அதைப் பார்க்கத்தான் ஆவலாய் இருக்கிறோமே நாம்... அடுத்த வீட்டுச் சண்டையின்னா வாசல்ல நின்னு பாக்குற ஆளுங்கதானே நாம்... அதான் அவன் அதை பயன்படுத்திக்கிறான். அதுலயும் என்னமோ சண்டை நேரடி ஒளிபரப்பு போல அப்பத்தான் விளம்பர இடைவேளையை அவசரமா விட்டு என்னாச்சோன்னு குடும்பத் தலைவிகளை தவிக்க வைப்பாங்க... அடுத்த சேனல் மாற்றாமல் விளம்பரங்களையும் பார்க்கும் தெருக்குழாய் சண்டையை பார்க்காத எம் இனம்...  இந்த சிம்பு, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி என்னைக்கு ஆரம்பிச்சி வச்சானே எல்லாப் பயலும் புடிச்சிக்கிட்டான். ஒப்பாரியை ஒளிபரப்பி டி.ஆர்.பியை ஏத்திக்கிறான்.

லஷ்மி இராமகிருஷ்ணன் என்னவோ தன்னோட குடும்பத்துல... உறவினர் வீடுகளில் நிகழ்ந்த சண்டைகளுக்கு தீர்வு சொன்னது போல் சினிமாவில் தன்னோட நிகழ்ச்சியை காமெடி என்ற பெயரில் கலாய்த்து விட்டார்கள் என டுவிட்டரில் பொங்கினார். ஜி.வி. பிரகாசையும், ஆர்.ஜே. பாலாஜியையும் வாங்கு வாங்கு என்று வாங்கினார். ஜி.வி.பியை எனக்கு சுத்தமாக பிடிக்காது... அவன் என்னவோ நல்ல குடும்பப் படங்களைக் கொடுப்பது போல் ஆட்டம் போடுகிறான்... கேவலமான படங்கள்... இரட்டை அர்த்த வசனங்கள் என பென்சில் தவிர வேறு படங்களை பார்க்கவேயில்லை... ஆர்.ஜே. பாலாஜி, காமெடியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். என்பதை அறிவோம். இந்தம்மா டுவிட்டரில் சண்டை போட்டதற்குப் பதில் போனில் அவரிடம் கேட்டிருக்கலாம்... அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் மாதிரி, அசிங்கப்பட்டு மீடியாக்களில் இனி எந்த நிகழ்ச்சியும் நடத்தமாட்டேன் என்ற நல்ல முடிவை எடுத்திருக்கிறார். இவரால் கெட்ட குடிகள் போதும். இனிமேலும் குடிகெடுக்க நினைக்க வேண்டாம்.

அப்புறம் நம்ம குஷ்பு... இந்தம்மாவை பல விதத்துல கிண்டல் பண்றானுங்க... பாவம் சுந்தர் மாமான்னு எல்லாம் எழுதுறானுங்க... இது குடும்ப பஞ்சாயத்துப் பண்ணுது... காங்கிரஸ்க்கு இது போனப்போ இளங்கோவன் வழிஞ்சதை எல்லோரும் அறிவோம். இது உள்ளே போக அங்க குந்திக்கின்னு இருக்க நக்மாவுக்கு பிரச்சினை... அது ஏழரையை ஆரம்பிச்சி வச்சி வெளியேத்த ஆயத்தமாயிக்கிட்டு இருக்கு. இதுல இந்தம்மா பஞ்சாயத்து பண்றேன்னு அடிக்கப் போகுது. என்ன நடக்கு இங்கே... ஏழைகள் வாழ்க்கை அவ்வளவு கேவலமாப் போச்சு இல்லையா..? நடிகை ஸ்ரீபிரியாவும் ரஞ்சனியும் நல்லாக் கேட்டிருந்தாங்க. உடனே அதுக்கு நாங்க பதில் சொல்ல மாட்டோம் இதுக்கு நாங்க பதில் சொல்லமாட்டோம்ன்னு ஜால்ஜாப்பு பதில்கள் இவர்களிடம் இருந்து. இதே ஒரு சாதாரண ரசிகனோ ரசிகையோ கேட்டிருந்தா இன்னேரம் ஆளாளுக்கு வரிந்து கட்டி களத்தில் இறங்கியிருப்பாங்க.

ஆமா அடுத்த வீட்டு பிரச்சினைய தீர்த்து வைக்க இவங்க யாரு...? இதுவரைக்கும் சமூகத்துக்கு இவங்க என்ன நல்லது செஞ்சிருக்காங்க...? சொற்ப பணம் கொடுத்து தங்களது குடும்பச் சண்டையை சந்தி அல்ல.. இந்த உலகமே சிரிக்கக் காண்பித்து டி.ஆர்.பி ஏற்றி அதன் மூலம் கல்லாக் கட்டிக் கொள்ளும் இந்த களவாணிகளிடம் அபலைகளே ஏன் போய் விழுகிறீர்கள்..? உங்கள் பிரச்சினையை நீங்கள் பேசித் தீர்க்க முடியாதா..? உங்கள் உறவுகள் இல்லையா... அதில் இரு தரப்புக்கும் எடுத்துச் சொல்லி பிரச்சினையை தீர்க்கும் நல்ல மனிதர்கள் இல்லையா..? யோசியுங்கள்... இனியும் இவர்களிடம் மாட்டாதீர்கள்... இவர்கள் நம் வாழ்க்கையை வைத்து மாளிகை கட்டி வாழும் மனிதப் பதர்கள்... இந்த இழிபிறவிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை இல்லை... அதை நாலு சுவத்துக்குள்ளோ நாலு நல்ல மனிதர்கள் முன்னிலையிலோ தீர்க்கப் பாருங்கள்... தொலைக்காட்சி ஸ்டுடியோக்கள் அல்ல குடும்ப விஷயங்களைப் பேசும் இடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

-'பரிவை' சே.குமார்.

7 கருத்துகள்:

  1. கிராமத்து நிஜ பஞ்சாயத்தை - ஊர்க்கூட்டத்தை - நான் பார்த்ததே இல்லை.

    எல்லா மொழிகளிலும் ஒவ்வொரு நடிகையை வைத்து இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கி விட்டது. மகா எரிச்சல் தரும் நிகழ்ச்சி இது. ஏன், எந்த மொழியிலும், எந்த சேனலிலும் ஆண்களை வைத்து பஞ்சாயத்து செய்ய மாட்டேன் என்கிறார்கள்?!!

    பதிலளிநீக்கு
  2. பாதிக்கப்பட்டவர்கள் பஞ்சாயத்துக்கு ஏன் இவர்களிடம் போக வேண்டும் என்று தெரியவில்லை. சிலர் இதுவும் ஒரு சின்னத்திரை தொடர் (நடிப்பு) என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை இல்லை... அதை நாலு சுவத்துக்குள்ளோ நாலு நல்ல மனிதர்கள் முன்னிலையிலோ தீர்க்கப் பாருங்கள்... தொலைக்காட்சி ஸ்டுடியோக்கள் அல்ல குடும்ப விஷயங்களைப் பேசும் இடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    உண்மை
    தம +1

    பதிலளிநீக்கு
  4. இது போன்ற நிகழ்ச்சிகளை விரைவில் தடை செய்ய வேண்டும்...

    பதிலளிநீக்கு
  5. அண்ணே அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பகிர்வு. இம்மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்காமல் இருப்பது உத்தமம்....

    பதிலளிநீக்கு
  7. குமார் இந்த நிகழ்ச்சிகளை எலலம் பார்ப்பதே இல்லை...பார்க்காமல் இருப்பதே நலம் எனத் தோன்றும். இந்த டிஆர் பி ந்னு ஒன்னு வந்தாலும் வந்துச்சு....ஹும் நாலு சுவத்துக்குள்ளதான் ஒரு வீட்டுப் பிரச்சனை இருக்கணும்னு சொன்ன காலம் போய், இப்ப உலகமே பார்க்குது ஒரு வீட்டுப் பிரச்சனைய....ச்சே என்ன ஒரு மோசமான விசயம். இதற்கு எல்லாம் சென்சார் கிடையாதா...

    நல்ல பதிவு குமார்.

    கீதா

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி