புதன், 2 நவம்பர், 2016

சினிமா : கொடி

கொடி....

தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில்....

த்ரிஷா முதல் முறையாக வில்லியாய்...

Image result for கொடி விமர்சனம்

தன்னால் அடிமட்டத் தொண்டனாக மட்டுமே இருக்க முடிந்தது என்பதால் இரட்டையாப் பிறந்த  மகன்களில் ஒருவனை அரசியலில் உச்ச நிலைக்குக் கொண்டு செல்ல, பிறந்தது முதல்  அரசியல் பாலூற்றி வளர்க்கும் கருணாஸ், பாதரசக் கழிவு பிரச்சினையில் மகன் முன்னரே கட்சிக்காக தீக்குளித்துச் சாகிறார்.  மகன் அரசியலில் சாதித்தானா...? அவனுடன் பிறந்தவன் என்ன செய்தான்..? இவர்களுக்கு ஒரு காதல்... இல்லை இரண்டு இருக்கணுமே... அது என்னாச்சு...? என்பதை அரசியல் கலந்து அழகாக நகர்த்த அதிரடி அரசியல் இல்லாவிட்டாலும்.... சீமானின் பேச்சு போல் உணர்ச்சிகரமாக இல்லாவிட்டாலும்... வெற்றி மாறன் தயாரிப்பில் துரை செந்தில்குமார் பறக்கவிட்ட கொடி... ரெக்கை கட்டி பறக்கலைன்னாலும் நல்லாவே பறந்திருக்கு.

படத்தின் ஆணி வேர் த்ரிஷா கதாபாத்திரம்தான்... ஆனால் அந்த கதாபாத்திரத்தின் கனத்தை தாங்க முடியாமல் தாங்கி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். அரசியல் போதை எவ்வளவு மோசமானது எனபது அவரின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் காட்டப்பட்டுள்ளது... பதவி ஆசைக்காக காதலைக் காவு கொடுக்கிறார்... அதற்கான விலையை தமிழ் சினிமாவுக்கே உரிய பார்முலாவில் இறுதியில் வாங்கிக் கொள்கிறார். நல்லாத்தான் நடிச்சிருக்கிறார் என்றாலும் கம்பியை எடுத்து காளியை அடிக்கும் இடத்தில் எல்லாம் பதட்டம் வராமல் சிரிப்புத்தான் வருது... ஆக்ரோஷத்தைக் காட்டி நடிக்க முயன்றிருக்கிறார்... சோடை போகவில்லை என்பதுடன் அவரின் சினிமா வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படம்.

தனுஷ் ரெட்டையாய்... கொடியும் அன்புமாக பின்னி பெடலெடுத்து இருக்கிறார். வித்தியாசமான கெட்டெப் எல்லாம் போட்டு இரட்டையரை வித்தியாசப்படுத்த முயற்சிக்கவில்லை.... நம்ம விஜய் மாதிரி ரொம்ப சிம்பிளா தாடி வச்சி பொட்டு வச்சா கொடி, தாடியில்லாமல் சின்னப்பய மாதிரி வந்தா அன்பு... அம்புட்டுத்தான்... அன்பு பயந்தாங்கொள்ளி... அம்மாக்கிட்ட வீராப்பாய் பேசிட்டு போயி பொம்பளப்புள்ளக்கிட்ட அடி வாங்கிட்டு வர்ற சராசரியான இளைஞன்... கொடி நெஞ்சை நிமிர்த்தி... உடல்மொழி... வசனத்தில் மிரட்டல் விடும் நம்ம ஊர் அரசியல் தொண்டன் ... இரண்டு கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டி கலக்கியிருக்கிறார்.

Image result for கொடி விமர்சனம்தனுஷைப் பொறுத்தவரை பிளாப் படம் என்றாலும் சிறப்பாய் நடிக்கும் நடிகன்... அப்படிப்பட்டவர் எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்றாலும் கலக்கலான நடிப்பைக் கொடுப்பார் என்பது எல்லாரும் அறிந்ததே... இதிலும் சிறப்பாக செய்திருக்கிறார். அதுவும் த்ரிஷா உடனாக காதல் காட்சிகள் செம. விண்ணைத் தாண்டி வருவாயாவில் சிம்புவுக்கு ஜோடியாய் எப்படி ஒட்டிக் கொண்டாரோ அதேபோல் இதில் தனுஷூடன் த்ரிஷா.... கோபம்... சண்டை... அதன் பின் காதல் என கலக்கியிருக்கிறார்.

அன்பாக வரும் தனுஷ் டீயில் முட்டையை நனைத்து விற்கும் அனுபமா பரமேஸ்வரன் பின்னால் சுற்றுகிறார். 'ஏய் குழலி' பாட்டில் அனுபமா தனுஷை மட்டுமல்ல நம்மையும் சாய்த்துவிடுகிறார். அனுபமாவுக்கு அளவான நடிப்பு. அன்பு கொடியாக மாற வேண்டிய சூழலில் இவர்களின் காதலும் காணமல் போய்விடுகிறது.

எதிர் எதிர் கட்சியில் இருந்தாலும் திருச்சி சிவா - சசிகலா புஷ்பா போல அந்நியோன்யம் காட்டி யாருக்கும் தெரியாமல் காதலிப்பது சுவராஸ்யம்... இருவரும் திட்டிக் கொள்வதும்... கட்டிக் கொள்வதுமாய் நகரும் கதையில் அரசியலுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் என்பதை அறிந்த நமக்கு அரசியல் ஆசை... பதவி வெறி காதலையும் கொல்லும் என்பது வித்தியாசமாய்த் தெரிகிறது. காதலைக் கொல்லும் இடம் நமக்கு இப்படித்தான் நடக்கும் என்பதை முன்னரே தெரிந்து கொள்ள வைப்பதால் சுவராஸ்யம் அற்றுப் போகிறது.

காதல் களியாட்டம் தெரிந்து கட்சிக்குள் செல்வாக்கு இழந்து பலரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய சூழல் வந்ததும் சசிகலா புஷ்பா போலில்லாமல் அடுத்தடுத்த காட்சிகளில் கட்சிக்குள்ளேயே காய் நகர்த்தி ராஜ்யசபா எம்.பி. ஆகிவிடுகிறார் த்ரிஷா.

இரட்டையரில் ஒருவர் இறந்தால் மற்றொருவருக்கு இருவரின் குணநலன்களும் வரும் என்பதை டாக்டரை வைத்து படம் பார்ப்பவர்களுக்கு சொல்லி விடுகிறார்கள் என்றாலும் அன்பு தாடி மீசைக்கு மாறி நெஞ்சைத் தூக்கி நடப்பது சினிமாத்தனம்.

Image result for கொடி அனுபமா

சிங்கமுத்து சிரிக்க வைக்கிறார். சரண்யா எப்பவும் போல் நல்ல அம்மாவாக வருகிறார். கொடியின் நண்பனாக வரும் காளி சிறப்பாக நடித்திருக்கிறார்.

எப்படி காதலைக் கொல்லும் இடம் நமக்கு முன்னரே இப்படித்தான் ஆகும் எனத் தோன்றுகிறதோ அப்படித்தான் இறுதிக் காட்சியும்... அதிலும் சுவராஸ்யம் கம்மியே. சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஓகே என்றாலும் சித்ராவின் குரலில் வரும் 'ஆராரோ' பாடலும்  'ஏய் குழலி'யும் ரொம்ப ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் அருமை... எஸ். வெங்கடேஷ் ஓளிப்பதிவில் இரட்டையர் காட்சிகள் கலக்கல்.

அரசியல் போதை பொல்லாததுதான்... இல்லைன்னா இன்னைக்கு அம்புட்டுப் பயலும் அப்போலோ வாசல்ல உருள மாட்டானுல்ல... நம்ம பஞ்சாயத்து பிரசிடெண்ட் அடுத்த தேர்தலில் ஜெயிக்க சொத்துப் பத்தை வித்து களமிறங்க மாட்டானுல்ல... அதைத்தான் இதில் காட்டியிருக்காங்க... சின்ன வயசுல இருந்து அரசியல் போதையுள்ள பெண் அதற்காக எதையும் செய்வாள்ன்னு சொல்லியிருக்காங்க..

கொடி பரபரப்பான அரசியல் வசனங்களைச் சுமந்து பறக்கவில்லை... பரபரப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட பாதரசக் கழிவு குறித்துக் கூட பட்டும் படாமலுமே சொல்லப்படுகிறது. பாதரசக் கழிவால் பாதிக்கப்பட்ட குழந்தை இறக்கும் போது பரிதாபப்படத் தோன்றுகிறது. அதன் பின்னர் அரசியல் சதிராட்டத்துக்காக மட்டுமே பயன்படுத்தி அடக்கியே வாசித்திருக்கிறார்கள். இன்னும் தீவிரமாக அதைக் கையாண்டிருக்கலாம்தான் என்றாலும் இன்றைய அரசியல்வாதிகளிடம் சினிமாக் கலைஞர்களுக்கும் பயம் உண்டல்லவா... போட்ட காசை எடுக்கணுமே... அதுக்கு படம் வெளிவரணுமே... அதனால தொட்டுக்கோ தொடச்சிக்கோன்னு அதை எடுத்துக்கிட்டு காதல், காவு, மிரட்டல் என பயணிச்சிட்டாங்க...

இணையத்தில் பலர் சொல்வது போல் கொடி கொல மாஸூம் இல்லை... அட்டர் பிளாப்பும் இல்லை... வித்தியாசமான கதைக்களம்... விறுவிறுப்பான நகர்த்தலில் நல்லாவே  பறக்கிறது.  படம் பார்க்கலாம் ரகம்தான்.

-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:

  1. விமர்சனம் சிறப்பாக இருக்கிறது குமார்! பார்க்கலாம் என நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ அம்மா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. வித்தியாசம்தான். திரிஷாவை கொல்லாமலேயே விட்டிருக்கலாம்! காளியை திரிஷா அடிப்பதை பார்த்தும் கூட சரண்யா எதற்காக திரிஷா பின்னாலேயே நடக்கிறார் என்று தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      ஆமாம்... அது சறுக்கல்தான்... இதுதான் தமிழ் சினிமாப் பாணி...
      ஆம்... தெரிந்தும் செல்வார்... அது ஏனோ..?
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. பரவாயில்லை...

    நல்லதொரு விமர்சனம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      நலமா...? தங்கள் இந்தப்பக்கம் எல்லாம் வந்து ரொம்ப நாளாச்சு...
      தொழில் எப்படிப் போகுது...

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா....

      நீக்கு
  4. பறக்கட்டும், பறக்கட்டும் அவர்களின் வாழ்வு உயரத்திலேயே பறக்கட்டும்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

      நீக்கு
  5. நல்ல விமர்சனம். அதிலும் திருச்சி சிவாவையும் சசிகலா புஷ்பாவையும் உவமை காட்டியது அருமை.
    த ம 5

    பதிலளிநீக்கு
  6. சிறந்த மதிப்பீடு

    பதிலளிநீக்கு
  7. நல்ல விமரிசனம். நான் படமெல்லாம் பார்ப்பதில்லை.பார்த்த உணர்வு ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. நல்ல விமர்சனம். படம் பார்க்கும் அளவிற்கு பொறுமையில்லை....

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி