மெகா ஸ்டார் மம்முட்டி போலீசாய்... மெகா ஸ்டார்ன்னு சொல்றதுல தப்பேயில்லை... மகன் துல்கர் ஒரு பக்கம் வளர்ந்து வர, இவர் இன்னமும் கலக்கலாய் நடித்துக் கொண்டிருக்கிறார்.
(ராஜன் சகாரியாவாக மம்முட்டி) |
வரலெட்சுமி... அதாங்க நம்ம சரத்குமார் மக... தாரை தப்பட்டையில் பட்டையைக் கிளப்பியவர்... இதில் விபச்சார விடுதி தலைவியாய்...
மம்முட்டிக்கும் வரலெட்சுமிக்கும் மோதல்தானே ஒழிய காதல் இல்லை... அவர் தன்னோடு வாழ நினைக்க, மம்முட்டி இறுதியில் வண்டியில் சூசனை ஏற்றிக் கொள்கிறாரே ஒழிய வரலெட்சுமியை அல்ல என்பதையும் சொல்லி விடுகிறேன்... வரலெட்சுமி நாயகின்னு நினைச்சா அது தப்பு... தூள் சொர்ணாக்கா மாதிரி மோசமான ஆள்... ஒரு அரசியல் ரவுடியின் தொடுப்பு... இறுதிக் காட்சிக்கு முந்தைய காட்சியில் சில காரணங்களால் ரவுடியுடன் மோதி... மம்முட்டியோட இருக்க ஆசைப்படுது... ஆனா போலீஸ் போலீசாக இருந்து விடுவதால் அந்த ஆசை நிராசையாகிறது. எப்படியிருந்தாலும் கதை வரலட்சுமி - மம்முட்டியைச் சுற்றித்தான் நகர்கிறது.... நாயகனுக்கு நாயகி ஆகாத கதையின் நாயகியாய் வரலெட்சுமி.
சரி கதை என்ன அதைச் சொல்லு அப்படித்தானே நினைக்கிறீங்க... கதையைச் சொன்னா இதுக்கு பேரு விமர்சனமான்னு லைட்டை அங்க வச்சிருக்கலாம்... இந்த கேமரா பயன்படுத்தியிருக்கலாம்... இந்தப் பாடல் காட்சியில் இப்படி ஆடச் சொல்லியிருக்கலாம் என்று ஏகப்பட்ட அட்வைஸ்களை அள்ளித் தெளிக்கும் சில இணைய விமர்சக நட்புக்கள் சண்டைக்கு வர்றாங்க... அதனால இலைமறை காயாய் கதையைச் சொல்லிட்டு விட்டுருவோம்....
மம்முட்டி சர்க்கிள் இன்ஸ்பெக்டர்... இடுப்பை ஆட்டி ஆட்டி நடக்கும் அந்த நடை கூட நல்லாத்தான் இருக்கு. தப்புச் செய்தவன் போலீஸ்காரன் என்றாலும் அடித்து துவைத்துக் காயப்போடுவார். தன்னோட மேலதிகாரியோட ரொம்ப நெருக்கம்... அவர் வீட்டில் ஒருவனாய் இருக்கிறார்... அவருடைய மகனும் இவர் மீது அதிக பாசம் கொண்டவனாக இருக்கிறான்... இவர் என்ன சொன்னாலும் கேட்டு நடக்கும் குணம் கொண்டவன்... அவனுக்கு திருமணம் நிச்சயமாக... கேரளா - கர்நாடகா எல்லையில் இருக்கும் ஒரு ஊருக்கு பத்திரிக்கை கொடுக்க சென்ற இடத்தில் திருமணம் நிச்சயமான ஜோடி கொல்லப்படுகிறது...
கொலைக்கு மாவோயிஸ்டுகளை காரணம் காட்ட... அதை விசாரிக்க அங்கு செல்லும் மம்முட்டி... அரசியல் ரவுடியுடன் மோத... சூடு பிடிக்கும் படத்தில் மம்முட்டிக்கும் வரலெட்சுமிக்கும் முட்டிக் கொள்ள... அரசியல் ரவுடி மம்முட்டியை வளைத்துப் போட நினைத்து மாட்டிக் கொள்ள... விசாரணை அதிரடியாய் தொடர்கிறது. தன் மேலதிகாரியின் மகனும் அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட, அவனது காதலியும் எதனால் கொல்லப்பட்டார்கள்...? அவர்களோடு ஆறு போலீஸ்காரர்களையும் கொல்லக் காரணம் என்ன..? யார் இந்தக் கொலையைச் செய்தது...? இதில் அரசியல் ரவுடிக்கு பங்கு இருக்கா...? வரலெட்சுமி யார்...? அவளுக்கு இதில் என்ன தொடர்பு...? என கண்டு பிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
பொதுவாக மம்முட்டி படங்களை விரும்பிப் பார்ப்பேன்... இதுவும் அப்படி ஒரு விருப்பத்தில் பார்த்ததுதான்... பெரும்பாலும் மம்முட்டி படங்களின் கதை நம்ம சசிகுமார் படம் போல அவரைச் சுற்றியே பயணிக்கும். சில படங்கள் விதிவிலக்கு... இதிலும் அப்படித்தான் முழுக்க முழுக்க அவரின் பின்னே... இடுப்பை ஆட்டும் நடையும்... கேலியான பேச்சுமாய்... இதிலும் அவரின் பின்னேதான் கதை பயணிக்கிறது என்றாலும் அரதப்பழசான கதைக்களம் படத்தின் வேகத்துக்கு கட்டை போடுகிறது.
(கமலாவாக வரலட்சுமி) |
சின்னப் பெண்ணை விபச்சாரவிடுதியில் வைத்து அடித்து உதைத்து சாகடிப்பதில் தெரிகிறது இது போன்ற ஆட்களிடம் வழி தெரியாமல் மாட்டிக் கொள்ளும் அபலைப் பெண்களின் வலியும் வேதனையும் நிறைந்த வாழ்க்கை. அதே விபச்சார விடுதியில் சில பெண்கள் கற்போடு இல்லாவிட்டாலும் களங்கமில்லா நல்ல மனதோடு இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தியான சூசனைத்தான் நாயகன் தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்கிறார். வரலெட்சுமியை வக்கிரம் நிறைந்தவளாய்... திமிரெடுத்தவளாய்... காட்டிவிட்டு இறுதியில் தானும் சாதாரணப் பெண்தான்... பாசத்துக்கு கட்டுப்பட்டவள்தான்... என்று நினைப்பவளாய் முடித்திருக்கிறார்கள்.
விபச்சார விடுதி... பெண்களிடம் கிண்டல்... என படம் முழுவதும் ஆக்கிரமித்திருப்பதால் சேர தேசத்து மகளிர் அமைப்பு கண்டனம் தெரிவித்து வழக்கும் தொடுத்தது... ஆனாலும் படம் பெட்டியை நிரப்பி விட்டது என்றே சொல்கிறார்கள்.
மலையாளப் படங்களில் தமிழனை ஒரு கதாபாத்திரம் ஆக்கி, முடிந்தவரை கேவலப் படுத்துவார்கள்... இதை சரிவரச் செய்வதில் ஜெயராம் கில்லாடி... இந்தப் படத்திலும் ஒரு வயதான தமிழன் விபச்சார விடுதி போய் எங்கிட்ட பெட்டி நிறைய பணம் இருக்கு என்று சொல்வதாகவும் ஒரு சின்னப்பெண்... வில்லனிடம் அடிபட்டு வேதனையோடு படுத்திருப்பவளை அனுபவிக்கத் துடித்து அடிவாங்கிச் செல்வதாய் காட்டியிருப்பார்கள்... அந்தக் காட்சிக்கு மலையாளியே போதும் என்ற போதும் கதாபாத்திரத்தை தமிழன் ஆக்கியிருக்கிறார்கள்... ஏனென்றால் கேவலப்பட்டவன்தானே நாம்...
தமிழில் வில்லனாக ஜொலிக்கும் சம்பத் ராஜ் இதில் அரசியல் ரவுடியாய் மம்முட்டியோடு மல்லுக்கு நிற்பவராய் நடித்திருக்கிறார். சிறப்பாய் பண்ணியிருக்கிறார். வரலெட்சுமி அடித்து ஆடியிருக்கிறார்... விபச்சார விடுதி நடத்தும் பெண்ணாய்... குரூரம் நிறைந்தவளாய்... ரவுடியையே ஆட்டம் காண வைப்பவளாய்... கலக்கியிருக்கிறார்... ஆனால் குஷ்புக்கு அக்கா மாதிரி ஆகிவிட்டார்... இனி கதாநாயகியாக நடிப்பது என்பது உடம்பைக் குறைப்பதைப் பொறுத்துத்தான்... நேகா சக்சேனாவும் அதே விபச்சார விடுதியில் இருக்கிறார்... அடுத்தவர் மனம் புரிந்தவராக... அடுத்தவருக்காக போராடுபவராக... மம்முட்டிக்கு உதவி செய்பவராக அவரது கதாபாத்திரத்தை நிறைவாய் செய்திருக்கிறார்.
(சூசனாக நேகா சக்சேனா) |
படத்தை நிதின் ரஞ்சி பணிக்கர் எழுதி இயக்கியிருக்கிறார். ராகுல் ராஜ் இசையில் பின்னணி அருமை.
கசாபா அதிரடி போலீஸ் கதைதான் என்றாலும் ரொம்ப ஆராவாரமில்லை... ஓங்கி அடிச்சா ஒன்னறை டன் வெயிட்டுடா என்று சூர்யா கர்ஜித்த பரபரப்பைக் கொடுக்கவில்லை என்றாலும்... படம் ஆரம்பத்தில் மெதுவாகப் போய் வரலெட்சுமி - சம்பத் - மம்முட்டி என பயணிக்கும் போது பரபரப்பாகிறது.
மம்முட்டியை ரசிப்பவர்கள் ஒரு முறை பார்க்கலாம். வரலெட்சுமியை ரசிப்பவர்களும்(?) பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார்.
முனுமையாக அலசிய விதம் அருமை நண்பரே
பதிலளிநீக்குஅருமையான அலசல்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
தம +1
மம்மூட்டியை எனக்கும் பிடிக்கும். வரலட்சுமி அப்படி ஒன்றும் குண்டாகத் தெரியவில்லையே!
பதிலளிநீக்குவரலட்சுமி குண்டா? இல்லையே குமார் அதுவும் குஷ்பு அளவிற்கு இன்னும் ஆகவிலையே.
பதிலளிநீக்குநானும் படம் பார்த்துவிட்டேன். எனக்கும் மம்முட்டி பிடிக்கும். நீங்கள் சொல்லியிருப்பது போல் ஒரு முறை பார்க்கலாம் அவ்வளவுதான்.
கீதா: வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கலாம்...ஃபோட்டோவில் வரலட்சுமி குண்டாகத் தெரியவில்லையே ஒரு வேளை படத்தில் அப்படியோ...
சிறந்த திறனாய்வுப் பார்வை
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வு....
பதிலளிநீக்கு