திங்கள், 28 மார்ச், 2016

விசாரணை

திவுக்குள் நுழைவதற்கு முன்... கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் எம். சந்திரக்குமார் அவர்களின் 'லாக்கப்' என்னும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'விசாரணை'... சிறந்த படம், சிறந்த துணை நடிகர் (திரு. சமுத்திரக்கனி) மற்றும் சிறந்த படத்தொகுப்பாளர் (மறைந்த எடிட்டர். திரு.கிஷோர்) என மூன்று தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது. வாழ்த்துக்கள் வெற்றிமாறன்.


டம் வெளியாகி பல விருதுகளைப் பெற்று தேசிய விருதும் வாங்கியாச்சு... இது படத்திற்கான விமர்சனப் பகிர்வு அல்ல... படத்தோடு சிலவற்றையும் பேசவே இப்பகிர்வு.

தமிழ் சினிமாவில் போலீஸ் கதைகள் என்றாலே அவற்றில் போலீசின் வீரதீர செயல்கள் மட்டுமே காட்டப்படும். எந்தப் படத்தை எடுத்துக் கொண்டாலும் வில்லனுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு, அதனால் வேலை இழந்து... குடும்பம் இழந்து... மீண்டும் எழுந்து வந்து ஜெயிப்பதாகக் காட்டுவார்கள். இதில் கமலஹாசனின் குருதிப்புனல் உள்ளிட்ட சில படங்கள் விதிவிலக்கு. 

விசாரணை... இதுவரை காட்டாத போலீசின் மறுபக்கத்தில் இருந்து கொஞ்சத்தை கண் முன்னே காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் வெற்றிமாறன்.  இப்படி ஒரு கதையை கையில் எடுத்ததற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இன்று நாம் போலீஸ் என்றாலே சாகசங்கள் நிகழ்த்தும் மனிதர்களாகத்தான் பார்க்கிறோம்... அதற்கு காரணம் இந்த சினிமாதான்... அவர்களைச் சிங்கங்களாகவும் சிறுத்தைகளாகவும் காட்டும் சினிமா அவர்களின் சங்கடங்களையும் அவர்களால் சாமானியன் படும் அவஸ்தைகளையும் படம் பிடிப்பதில்லை. எல்லாச் சினிமாவிலும் நாலு நல்ல போலீசுக்கு மத்தியில் வில்லனுக்கு உதவும் ஒரு கெட்ட போலீஸ் இருப்பதாகவே காட்டுவார்கள்... எல்லா நல்ல போலீசுமே தங்களுக்கு தேவை என்றால் கெட்டவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதை காட்டுவதில்லை... அந்த உண்மையை ஒரு சிறிய கதையின் மூலமாக வெளிப்படுத்திய படம்தான்  'விசாரணை'.

சின்னச் சின்ன காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறி, ஆந்திரா குண்டூரில் தங்க இடமின்றி பூங்கா காவலரைச் சரிக்கட்டி அங்கு படுத்துறங்கி பகலில் வேறு வேறு இடங்களில் வேலை பார்க்கும் 'அட்டக்கத்தி' தினேஷ், 'ஆடுகளம்' முருகதாஸ் உள்ளிட்ட நால்வரை ,ஒரு முக்கிய கேசை முடிக்கும் பொருட்டு சந்தேக கேஸ் எனச் சொல்லி பிடித்து வரும் ஆந்திரா காவல்துறை செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி அடித்து துன்புறுத்துகிறது. ஆரம்பத்தில் ஒத்துக் கொள்ள மறுப்பவர்கள் தொடரும் நாட்களில் தொடரும் மரண அடிக்குப் பயந்து செய்யாத குற்றத்தை செய்தாகச் சொல்லி நீதிமன்றம் வரை போகிறார்கள்.

நீதிபதி முன்பு தினேஷ், போலீஸ் தங்களை துன்புறுத்தி செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொள்ள வைத்து கூட்டி வந்திருப்பதாகச் சொல்ல. நீதிபதியும் அவரது குரலுக்கு மதிப்புக் கொடுக்கிறார். அவர்கள் தமிழில் பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்காக, தலைமறைவுக் குற்றவாளி கிஷோரைப் பிடிக்க அங்கு வந்திருக்கும் காவல்துறை அதிகாரி சமுத்திரக்கனி அழைக்கப்படுகிறார். அவர்கள் சொல்வதை அவர் எடுத்துச் சொல்லி தினேஷை எனக்குத் தெரியும் என்றும் சொல்கிறார். இதனால் அவர்கள் விடுதலை ஆகிறார்கள். தினேஷின் முதலாளி இங்கிருந்தால் உங்களை விடமாட்டானுங்க... ஊருக்கே போயிடுங்கன்னு சொல்ல. ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகும் போது அவர்களிடம் சமுத்திரக்கனி 'எனக்காக ஒரு வேலை செய்வீர்களா?' எனக் கேட்க, தங்களைக் காப்பாற்றியவர் அவர் என்பதால் இவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். 

தங்களைக் காப்பாற்றி காவல்துறை அதிகாரிக்காக, நீதிமன்றத்தில் இருந்து கிஷோரைக் கடத்துகிறார்கள். தமிழகம் வரை அவர்களுடன் பயணித்து... தனது ஊர் வரும்போது நால்வரில் ஒருவர் இறங்கிச் செல்ல, மூவர் காவல் நிலையம் வரை வருகிறார்கள். அங்குதான் அவர்களுக்கு பிடிக்கிறது சனி... ஆயுத பூஜைக்காக காவல் நிலையத்தை சுத்தம் பண்ணிக் கொடுத்துட்டுப் போங்கடா என்று சொல்லவும் தட்டமுடியாமல் வேலையில் இறங்குகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, கிஷோரிடம் விசாரிக்கும் காவல்துறை, அவரை கட்டி வைத்து அடிக்கிறது. இவர்களுக்கு பொறி கலங்கிப் போகிறது. ஒரு கட்டத்தில் காவல்துறை குள்ளநரிகள் கிஷோருக்கு எதிராக செய்யும் செயல்களின் முடிவில் அவர் கொல்லப்படுகிறார். காதும் காதும் வைத்தது போல் அவரது வீட்டு மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு வந்து முக்கிய அதிகாரிகள் சிலர் அவரைக் கொல்லச் சொன்ன பெரும்புள்ளியிடம் எப்படி கோடிக்கணக்கில் பணம் பார்க்கலாம் என பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள் இது தெரியாமல் அந்த அறைக்கு அருகே டாய்லெட்டை சுத்தம் பண்ண வரும் இவர்களை மேலதிகாரி பார்த்து விடுகிறார். அதன் பிறகு எங்கே தாங்கள் பேசியதைக் கேட்டிருப்பார்களோ என்ற எண்ணத்தில் அவர்கள் எடுக்கும் முடிவு நம்மை உறைய வைக்கிறது.

காவல்துறையின் உண்மையான முகம் இதுதான்... ஒரு கேசை முடிக்க இவர்கள் எவனாவது ஒரு அப்பாவியை இழுத்துப் போடுவார்கள். திருவிழாக்களில் வீடுகளில் கொள்ளை அடிப்பவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்று சொல்வார்கள். அது சில நேரங்களில் உண்மைதானோ என்று தோன்றும். நண்பனின் மகள் கைக்குழந்தையாக இருக்கும் போது கோவில் திருவிழாவில் அதன் கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலி திருடு போயிருச்சு... திருவிழாக் கூட்டத்தில் நிறையப் பேரின் கழுத்தில் இருந்து அறுத்துக் கொண்டு போய்விட்டார்கள். கேஸ் கொடுத்திருந்தோம்... தினம் போவோம்... நாங்க என்ன சார் பண்றது... தேடிக்கிட்டு இருக்கோம்... கிடைச்சா கொடுத்துடப் போறோம் என்பார்கள். திடீரென ஒரு நாள் அழைத்து மூணு பவுன் சங்கிலியைக் கொடுத்தார்கள். 'என்ன சார் இது தொலைந்தது ஐந்து பவுன்... மூணு பவுன் தாறீங்க... இது எங்க நகை இல்லை' என்றதும் 'சார் கிடைக்கிறதை வாங்கிக்கங்க...  ஒண்ணுமே கிடைக்காம போறதுக்கு மூணு பவுனாச்சும் கிடைச்சதுன்னு சந்தோஷப்படுங்க... எங்களுக்கு ஒரு சிலருக்கு நகையைக் கொடுத்துட்டு கேசை முடிக்கணும்' என்றார் இன்ஸ்பெக்டர். அப்ப சிலருக்கு மட்டும் தொலைந்ததில் பாதி கொடுத்து கேசை முடித்து மிச்சத்தை விற்று பங்கிட்டுக் கொள்வார்களோ என்றுதானே எண்ணத் தோன்றுகிறது.


காவல் நிலையத்தில் மரியாதை என்ன விலை என்றுதான் கேக்க வேண்டியிருக்கும். அவர்களுக்கு வயசுக்கு மரியாதை என்பதெல்லாம் தெரியாது. அவர்கள் பதவி எதையும் செய்யும் பதவி என்பது போல் 'என்னய்யா...', 'வாய்யா', .இந்தா அப்படிப் போயி உக்காரு...', 'போயி ரெண்டு டீ வாங்கிட்டு வா', 'யோவ் ஒரு குயர் பேப்பர் வாங்கிட்டு வாய்யா', 'இந்தா ஐயாவுக்கு ரெண்டு பான்பராக்கும் ஒரு சிகரெட் பாக்கெட்டும் வாங்கிக்கிட்டு வா' என இப்படியான பேச்சுக்கள்தான் அதிகம். மரியாதை கொடுப்பதில் ஒரு சிலர்தான் விதிவிலக்கு. 

கல்லூரியில் படிக்கும் போது ஊர்த் திருவிழாவிற்காக காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்ற சம்பிரதாயத்துக்காக நானும் எனது சித்தப்பாவும் சென்றோம். தலைமை ஆசிரியரான சித்தப்பா, சாதாரண வேஷ்டி சட்டையில் நூறு சதவிகித கிராமத்து மனிதராக காட்சியளித்தார். எங்களுக்கு தெரிந்த போலீஸ் யாரும் இல்லை... இருந்தது ஒரே ஒருத்தர்... உள்ளே போனதும் 'என்னய்யா..?' என்றார் மிடுக்காய். 'ஐயா திருவிழாவுல கரகாட்டம் வைக்கிறோம்... அதான் ஐயாக்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்ன்னு வந்தோம்...' என்றார் சித்தப்பா. 'ஐயா இல்லை... எழுதிக் கொண்டாந்திருக்கியா?" என்றார் அவர், 'இல்ல... எழுதித்தாறேன்...' என்றவரை மேலும் கீழும் பார்த்து 'நீ எழுதுவியா...? சரி அங்க உக்காந்து எழுதிக்கொடு...'  என்றார் ஏளனமாய்... 'பேப்பர்....' என்று மெல்ல இழுத்தார் சித்தப்பா. 'ஆமா இங்க வாங்கி வைக்கிறாக... போ... போய் கடையில வாங்கிட்டு வா...' என்றார் கோபமாக... 'தம்பி வண்டி பெட்டிக்குள்ள பேப்பர் கிடக்கும் பாரு எடுத்துக்கிட்டு வா..' எனச் சொல்ல நான் எடுத்து வந்து கொடுத்தேன். 

எங்க சித்தப்பா பயங்கர கோபக்காரர், ஆனால் அங்கு எதுவும் பேசலை. நான் கூட 'என்னப்பா... இம்புட்டுப் பேச்சு பேசுறாரு..? நீங்க யாருன்னு சொல்ல வேண்டியதுதானே...?' என்றேன். 'சும்மா இருடா... நமக்கு காரியம் ஆகணும்... எழுதிக் கொடுத்துட்டு போய்க்கிட்டே இருப்போம்...' எனச் சொல்லி எழுதி அவரை பெயரை அழகாய் கையெழுத்து இட்டு, 'தம்பி நீயும் கையெழுத்துப் போடு' என்று என்னையும் கையெழுத்து இடச் சொல்லி அவரிடம் கொடுத்தார். வாங்கிப் பார்த்தவர் பேப்பரில் இருந்த எழுத்தையும், அவரின் கையெழுத்தையும் பார்த்து மெல்ல எழுந்தார். 'சார் நீங்க..?' என்றார். 'புளியால் கவர்மெண்ட் ஹைஸ் ஸ்கூல் ஹெச்.எம்' என்றதும் 'வந்ததும் சொல்லக்கூடாதா? நான் யாரோன்னு... உக்காருங்க சார்... சார் வந்ததும் நான் சொல்லிடுறேன்...' என்றார் பவ்யமாய். போலீசைப் பொறுத்தவரை இருக்கவனுக்கே மரியாதை... இல்லாதவனுக்கு எப்பவும் மரியாதை கிடைப்பதில்லை.  ரோட்டில் கையேந்து காசு வாங்குவார்கள் ஆனால் நம்மை மதிப்பதில் மட்டும் அவ்வளவு ஒரு கௌரவக் குறைச்சல் அவர்களுக்கு.

காவல்துறையோ ஆளும் அரசின் அடாவடிகளுக்கு எதிராக செயல்படும் சாமுவேல் போன்ற போலீஸாரைத் தட்டிக் கொடுக்க நினைப்பதில்லை, மாறாக அரசிற்கு உதவும் விதமாக அவர்கள் மீது துறைவாரி நடவடிக்கை எடுத்து அவர்களை காணாமல் போகச் செய்துவிடுவார்கள். இப்படிப்பட்ட காவல்துறையின் மறுபக்கத்தில் இன்னும் நிறைய இருக்க, வெற்றிமாறன் கையில் எடுத்திருப்பது விசாரணை என்ற பெயரில் நடக்கும் அவலத்தை... மிக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கும் கதையால் இது உலக சினிமா அளவிற்கு உயர்ந்து நிற்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் 'இந்தப் படத்தில் தனுஷ் நடித்திருந்தால் படம் ஓடியிருக்காது... பப்பரப்பாவாக ஆகியிருக்கும்' என்று சொல்லியிருந்தார் வெற்றிமாறன். அது உண்மைதான்... பெரிய நடிகர்களுக்காக கதையில் சமரசம  செய்ய வேண்டி வரும்... மாஸ் காட்சிகள் வைக்க வேண்டி வரும்... இதெல்லாம் இல்லாமல சமூக நிகழ்வில் 1% மட்டுமே எடுத்தாட் கொண்டிருந்தாலும் ஒரு அவலத்தை கண் முன் காட்டியதற்காகவே இன்று விருதுகளில் உயர்ந்து நிற்கிறது. வெற்றிமாறனின் வெற்றியால் பூரிப்படைந்தாலும் இந்த அவலத்தை அரசு எப்போது கட்டுக்குள் கொண்டு வரும் என்ற கேள்வி எழாமல் இல்லை.

இந்தப் படத்தை வெற்றிமாறனும் தனுஷூம் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பாடல்கள் இல்லாத படத்திற்கு பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ். பாரதி நாயகி என்றில்லாமல் இரண்டு மூன்று இடத்தில் மட்டும் வந்து செல்கிறார்.

இந்த பகிர்வு நல்ல போலீஸ்காரர்களுக்கானது அல்ல... 


விருதுகளால் கலைஞர்களுக்கு பெருமை என்பதைவிட விருதைப் பெற்றவர்களால் அந்த விருதுக்கு கௌரவம் கிடைக்க வேண்டும் அதுதான் சிறப்பான வெற்றி. அந்த வகையில் சிறந்த பின்னணி இசைக்காக (தாரை தப்பட்டை) அன்றும் இன்றும் என்றும் இசைராஜா திரு. இளையராஜா அவர்களுக்கும்... நல்ல மனிதன் மற்றும் தரமான படைப்பாளியான திரு.சமுத்திரக்கனி அவர்களுக்கும் கிடைக்கப் பெற்றதில் விருதுக்குப் பெருமை... வாழ்த்துக்கள்.


ம்ம மனம் கவர்ந்த ரித்திகா சிங் (இறுதிச் சுற்று)  சிறந்த நடிப்பு சிறப்புப் பரிசு பெற்றிருக்கிறார்... எல்லோரையும் அழவைத்தை மம்முட்டி நடிப்பில் வெளிவந்த பத்தேமாரி மலையாள மொழியில் சிறந்த படமாக தேர்வாகியிருக்கிறது. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.

9 கருத்துகள்:

  1. படித்தவர் என்றதும் அந்தப் போலீஸ்காரர் மரியாதை செய்ததே பெரிய விஷயம். அவர்களுக்கு படித்தவர்களாவது.. படிக்காகதவர்களாவது!
    தம +1

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு கலந்துரையாடலில் பங்கு பெற்றதைப் போன்றிருக்கின்றது..

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  3. திருடன் போலீஸ் படத்திலும் துறையில் நடக்கும் சில சில்லறை விஷயங்களைத் தோலுரித்துக் காட்டியிருந்தது, பரவலான கவனம் பெறவில்லை. தங்கள் ஆக்கம் வெற்றிமாறனுக்கும் சமுத்திரகனிக்கும் புத்துணர்ச்சியைத் தரும்.

    பதிலளிநீக்கு
  4. சினிமா விமர்சனம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. டைம்லி பதிவு
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. அருமை
    வாழ்த்துக்கள் நண்பரே
    விருது பெற்றோரைப் பாராட்டுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  7. நிஜமான நியாயமான அலசல்! பொலிஸ்காரர்கள் பலர் தங்களை உலக நாட்டாமைகளென நினைத்து நடக்கும் காலம் தான் இது, நல்லவர்களையும் கெட்டவர்களாக்கும் உலகம் இது,

    விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்,

    பதிலளிநீக்கு
  8. விசாரணை படம் பார்த்தோம். அருமையான படம்! விருதுகள் பெற வேண்டிய படமே. பெரும்பான்மையான கெட்ட போலீசின் ஒரு பக்கத்தின் உண்மைத் தரத்தை உரித்துக்காட்டிய படம். எப்போதுமே ஒரு நாவலை அல்லது உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்படும் படங்கள் அருமையாக வருகின்றன. நடிகர்களுக்காக எழுதப்படும் கதைகள் ஸோ ஸோதான். பெரும்பான்மையான ஆங்கிலப்படங்கள், பிற மொழிப் படங்கள் எல்லாம் வெற்றியடையவும் நம் மனதைத் தொடவும் காரணம் அவை நாவல் அடிப்படை அல்லது உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்தான் இருக்கும்...நடிகருக்காக எழுதப்படுபவை அல்ல என்பதால்..

    விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி