வெள்ளி, 18 மார்ச், 2016

மனசின் பக்கம் : மழையும் மடோனாவும்

ரண்டு நாட்களாக மழை வருவது போலவே இருந்தது. காற்றும் இல்லை... மழையும் இல்லை... எங்கே சுனாமி கினாமி வந்து தாக்கிருமோன்னு ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. இன்றைய வெயில் நினைப்பை காயப்போட்டு விடுமோ என்று நினைத்தால் மாலையில் குளிர்... வித்தியாசமான கிளைமேட்டாக இந்த வருடம் இருக்கிறது... இனி கொஞ்சம் கொஞ்சமாக சூரியனார் சுட்டெரிக்க ஆரம்பிப்பார் என்று நினைக்கிறேன். வியர்வையில் கழியும் நாட்கள் இந்த முறை கொன்னு எடுத்துவிடும் என்றுதான் தோன்றுகிறது..


ச்சா எண்ணைய் வரலாறு காணாத விலை இறக்கத்தின் காரணமாக வளைகுடா நாடுகளில் இறுக்கமான சூழல் நிலவுகிறது. (நம்ம ஊர்ல மட்டும்தான்யா பெட்ரோல் விலை ஏறிக்கிட்டே போகுது) பெரும்பாலான கம்பெனிகள் ஆட்களை ஊருக்கு அனுப்பி வருகிறார்கள். என் அறை நண்பர் ஒருவருக்கு அடுத்த மாதத்திற்கு அப்புறம் வேலை வரவில்லை என்றால் ஊருக்குப் போகணும் என்று சொல்லியிருக்கிறார்கள். எங்களின் இரண்டு அரசாங்க வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது பார்க்கும் பணியும் இறுதிக் கட்டத்தில்... அதனால் இன்னுமொரு சிறிய வேலை ஒன்று இப்போது பார்க்கும் வேலையுடன் சேர்ந்ததுதான்... அவர்களின் கிளை அலுவலகமான TRANSCO-வில் சென்று எங்கள் பணிக்கான டேட்டாக்களை ஸ்கேன் செய்து எடுத்து வரவேண்டும். என்னுடன் பணி புரியும் மலையாளியை அதற்கான மீட்டிங்கிற்கு கூட்டிச் சென்றான் எங்க எகிப்துக்காரன். அங்கு இருந்த உள்ளூர் அரபியுடன் மீட்டிங்கின் போது அவனிடம் எங்கு எனக்கான இடம்... எங்கு அமர்ந்து பணி எடுக்க வேண்டும் என்று கேட்டபோது அந்த அறையில் ஒரு ஓரத்தில் இருந்த பிளாட்டரைக் காட்டி (Printer) அதன் மீது லாப்டேப்பை வைத்துக் கொள் என்றானாம். நான் எங்கு அமர்வது என்று கேட்டதற்கு தரையில் அமர்ந்து கொள் என்று சொல்லியிருக்கிறான். 

இவன் என்ன சொன்னான்னு தெரியலை ஆனால் எகிப்துக்காரன் 'அவன் இன்சினியராக்கும்... எது வேணும் வேண்டாம்ன்னு தெரிஞ்சு ஸ்கேன் பண்ணனுங்கிறதுக்காக அவனைக் கூட்டியாந்தேன். அவன் ஆபீஸ் பாய் இல்லைன்னு சத்தம் போட்டிருக்கான். அவனோ எது வேண்டுமென்றாலும் உங்க ஆபீசில் இருந்து கொண்டு வாங்க... இங்க அதெல்லாம் தரமுடியாதுன்னு சொன்னானாம்... அது போக டீ, காபி, தண்ணி கூட தரமாட்டேன் என்று சொல்லி ஆபீஸ் பாயிடமும் கூப்பிட்டுச் சொல்லிட்டானாம். இவர்கள் வந்து எங்களிடம் புலம்ப, நம்ம வாய்தான் சும்மா இருக்காதே... நீ எதுக்குடா ஒத்துக்கிறே... என்ன ஒட்டகம் மேய்க்கவா வந்திருக்கேன்னு சத்தம் போட, மலையாளி எல்லாம் அரேஞ்ச் பண்ணினாத்தான் அங்கு போவேன்னு சொன்னதும் எங்க எகிப்தியன் பொறுமையாய் கேட்டுட்டு 'அங்க நீ எல்லாத்துக்கும் எஸ் சார் போட்டே... இங்க வந்ததும் குமார் உன்னைய சத்தம் போடவும் மறுக்கிறே' என்று சொன்னான். 'டேய் நான் எதுக்கு ஒத்துக்கிட்டேன்னுதான் கேட்டேன்.  அங்க போகாதேன்னு எல்லாம் சொல்லலை'ன்னு சொன்னாலும் 'இவங்க எல்லாருமே நீ சொல்றதைத்தான் கேப்பாங்கன்னு தெரியும்ன்னு சொல்லிட்டான். 

எனக்குத் தெரியும் மலையாளிகள் எல்லாத்துக்கும் ஒத்துப்பாநுங்கன்னு... இருந்தாலும் இன்னைக்கு இவன் இதுக்கு ஒத்துக்கிட்டா நாளைக்கு நம்மளையும் செய்யச் சொல்லுவானுங்க... அப்ப நாம முடியாதுன்னு சொன்னா உடனே அவன் செஞ்சானுல்லன்னு சொல்லுவானுங்க. மலையாளிக்கும் எகிப்துக்காரனுக்கும் காரசாரமான மோதல்.. மலையாளி கண்ணுல தண்ணி... என்னால போக முடியாதுன்னு சொல்லிட்டான். அப்புறம் எகிப்துக்காரன் என்னிடம் 'இப்ப நமக்கு வேலை இல்லை... இங்க அப்படி ஒண்ணும் அர்ஜெண்ட் வேலை கிடையாது... நீ இங்க இருந்தா எல்லாம் பாத்துப்பே... அவனை இங்கு விட்டாலும் ஒண்ணும் பாக்கமாட்டான். அவன் போகலைன்னு சொன்னா ஆபீஸ்ல வேற யாரையாச்சும் அனுப்புவாங்க. வேலை இல்லை ஊருக்குப் போன்னு இவனை போகச் சொல்லிருவானுங்க... அவனுக்கிட்ட சொல்லு... நான் எல்லாம் அரேஞ்ச் பண்ணுறேன்' என்றான். 'நான் எதுக்குடா அவனுக்கிட்ட பேசணும்... சும்மா கேட்டதுக்கே நாந்தான் அவனைக் கெடுக்கிறேன்னு சொன்னே' என மறுக்க, 'ப்ளீஸ்... சொல்லு' என்றதும் அவனிடம் பேசி லாப்டாப்பை எடுத்துக் கொண்டு போக வைத்தேன். 

இரவு 11.30 மணிக்கு சாட்டில் வந்து 'சாரி குமார்... அவன் அங்க ஒத்துக்கிட்டான்... இங்க வந்து உங்ககிட்ட பேசினதும் நான் அங்க சொன்னேன்னு சொல்றான்... ஒண்ணுமே சொல்லலை... அவன் சொன்னது எஸ் சார் மட்டும்தான்' என்றான் எகிப்துக்காரன். 'எனக்குத் தெரியும்டா... அவன் இப்படிச் சொன்னான்னு சொன்னதாலதான் எதுக்கு ஒத்துக்கிட்டேன் கேட்டேன்.' என்றதும் ' சரி விடு... அவனுக எதுவும் பேச மாட்டானுங்க... ஆனா பேசினது மாதிரி நடிப்பானுங்க எனக்குத் தெரியும்' என்றான்.  நம்மளை ரவுண்ட் கட்டித்தான் வச்சிருக்கானுங்க... நமக்கு நாக்குல சனி போல... இனிமே எவனுக்காகவும் பேசக்கூடாதுன்னு நேற்றே முடிவு பண்ணிட்டேன்.


விஜய் சேதுபதி - மடோனா செபாஸ்டின் நடிப்பில் வந்திருக்கும் 'காதலும் கடந்து போகும்' நேற்றிரவு பார்த்தேன். எதோ ஒரு கொரிய மொழிப் படத்தின் தழுவல் என்று சொல்லியிருந்தார்கள். ரொம்ப மெதுவாக நகரும் கதை... விஜய் சேதுபதி கோழைத்தனமான ரவுடி... அடிக்கவே தெரியாது... ஆனாலும் அவர் ரவுடி... மடோனா கம்ப்யூட்டர் துறையில் வேலை தேடும் பெண்... இருவரும் ஒரே கட்டிடத்தில் எதிர் எதிரே குடியிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஏற்படும் நட்பு... விஜய் சேதுபதியின் ரவுடியிசம் என பயணிக்கும் கதை... படத்தின் வெற்றியே ஷார்ப்பான வசனங்கள்தான்... 'ரவுடியின்னா எப்பவும் அடிச்சிக்கிட்டே இருப்பாங்க... அப்ப அப்ப அடி வாங்கணும்' என்று விஜய் சேதுபதி சொல்ல, 'நீங்க கொஞ்சம் அதிகமா அடி வாங்குவீங்களோ' என்று மடோனா கேட்பார். இதேபோல் இன்னும் நிறைய ரசிக்க வைக்கும் வசனங்கள். பிரேமம் படத்தில் மலர் டீச்சர் போல் கலக்கியவர்தான் இந்த மடோனா... இதிலும் பக்கத்து வீட்டுப் பெண் போல நம் மனசுக்குள் வந்து ஒட்டிக் கொள்கிறார்... தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நஸ்ரியான்னும் சொல்லலாம்... காதலும் கடந்து போகும் -  ரசிக்க வைக்கும் வசனத்துக்காகவே மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றும் நல்லபடம்.

-'பரிவை' சே.குமார்.


10 கருத்துகள்:

  1. எல்லா இடங்களிலும் இப்பொழுது நிலைமை சரி இல்லை நண்பரே.... இதையே காரணமாக வச்சு ல்லோரையும் நாட்டுக்கு அனுப்பினால் நாட்டில் எல்லோரும் சேர்ந்து மோடியை ஒரு வழி பண்ணலாம்

    பதிலளிநீக்கு
  2. பெற்றோல் விலை இங்கே கம்மியாகிக்கொண்டே இருக்காம் என இன்று தான் பிரபா சொன்னார், நான் நீங்க சொன்னதை நினைத்துக்கொண்டேன் குமார்.

    அந்தப்பக்கமும் பாடி இந்தப்பக்கமும் ஆடும் குணாதிசயம் கொண்டோர் அனேகர் குமார், அவர்களிடையே மாட்டிக்கொண்டு விழிக்கும் நாம் தான் கடைசியில் குற்றவாளிகளாய் இருப்போம், உங்கள் அனுபவம் மட்டும் அல்ல என் அனுபவமும் இதில் உண்டு, யாருக்காகவும் பேசப்போகக்கூடாது. மனம் ந்திறந்த அனுபவங்கள் நாளை இன்னொருவருக்கும் வாழ்க்கைப்பாடம் என்பது இதைத்தான், இன்னும் எழுதலாம் குமார்,எழுதுங்கள். வேலையில் பிரச்சனைகள் சகஜம் தானே, சோர்ந்து விடாமல் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. கோச்சிப்பீங்களே என இன்று தான் கிடைத்த நேரத்தில் இரண்டு தொடர்கதை,சிறுகதை அரசியல் என மூச்சு விடாமல் விடுபட்டதைஎல்லாம் படித்து கருத்திட்டு விட்டு நிமிர்ந்தால் அந்தப்பக்கம் என்னுடன் சாட்டி கிட்டே இந்த பக்கம் பதிவு எழுதி போஸ்டும் செய்த உங்களை என்ன சொல்லட்டும்பா!

    நானும் மனசின் பக்கம் : மழையும் மடோனாவும் எனும் தலைப்பை பார்த்து விட்டு இது குமார் பதிவு தானா என உத்து உத்து பார்த்து தான் கடைசியில் உங்களோடது என முடிவெடுத்தேன். அம்மாடி பதிவுகளுக்கு கருத்தெழுதியே முடியல்லையேப்பா!ஆனாலும் பாராட்டுகள்பா!

    பதிலளிநீக்கு
  4. சென்னையிலும் வெயில், அனல். வேறு சில ஊர்களில் இப்போதே 101, 102.

    அனுபவம் பாடம்!

    கா க போ இன்னும் பார்க்கவில்லை. நல்ல பிரிண்ட் கிடைக்கவில்லை... ஹிஹிஹி..

    வழக்கம் போல தம வாக்கு +1

    பதிலளிநீக்கு
  5. நாடு விட்டு நாடு சென்று எப்படிஎல்லாம் கஷ்டப் பட வேண்டியிருக்கிறது
    வேதனைதான் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  6. வேலை - இப்படியே போனால் கஷ்டம் தான்....

    பதிலளிநீக்கு
  7. அருமையான பகிர்வு

    பதிலளிநீக்கு
  8. வேலையின் சிரமம் தெரியாமல் இருக்க சினிமா பார்த்தல் கொஞ்சம் மனபளு குறைந்து இருக்கும் இல்லையா?

    பதிலளிநீக்கு
  9. அங்கு பாலைவனம் என்றால் இங்கும் இப்போது வெயில் எகிறிக் கொண்டிருக்கிறது..மரங்கள் எல்லாம் போனால் இங்கும் கூடிய சீக்கிரம் பாலைவனம் ஆகிவிடும் என்றே தோன்றுகின்றது.

    வேலைப்பளு அதுவும் இப்படி எல்லாம் என்றால் சிரமம்தான்..

    கா க போ பலரும் நல்லாருக்குனு சொல்லறாங்க. பார்க்கணும் இனிதான்..

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி