வெள்ளி, 19 டிசம்பர், 2014

நண்பேன்டா : திருநா(வுக்கரசு)


ண்பேன்டா பகிர்வில் இன்றைய நினைவு நீந்தலில் நண்பன் திருநாவுக்கரசு. என்னடா இவன் திருநான்னு முன்னால ஒரு பதிவு போட்டிருக்கானேன்னு நண்பேன்டாவை தொடர்ந்து வாசிக்கும் உள்ளங்களுக்கு யோசனை வரலாம். அந்தச் சகோதரன் கல்லூரியில் என்னுடன் படித்த நண்பன்... எங்கள் மூத்த சகோதரன். இவன் காரைக்குடியில் கணிப்பொறி படிக்கும் போது கிடைத்த நண்பன்.

கல்லூரி முடித்ததும் காரைக்குடியில் ஒரு பிரைவேட் கணிப்பொறி மையத்தில் சேர்ந்து படித்தேன். அப்போது எங்கள் வகுப்பில் திருநா, கணேச மூர்த்தி, பொன்ராஜ், செல்வராஜ், சிராஜூதீன், சங்கர், ராமசாமி, சிவக்குமார் மற்றும் நான் என தொடர்ந்தது ஒரே வகுப்பில் படித்து நட்புக் குழுவாக செட்டில் ஆகிவிட்டோம். இதில் திருநா திருப்பத்தூரில் இருந்து சிங்கம்புணரி செல்லும் பாதையில் திருக்களாப்பட்டி என்னும் ஊரில் இருந்து வந்தான். காரைக்குடியில் அவங்க சித்தி வீட்டில் தங்கியிருந்தான். அப்போது பார்ப்பதற்கு ஆள் மிகப்பெரிய உருவமாக உயரமாக இருப்பான். நாங்கள் எல்லாம் அவனுடன் நிற்கும் போது அபூர்வ சகோதரர்கள்தான்.

ஆள்தான் தடியாக உயரமாக இருப்பானே தவிர உள்ளத்தால் உயர்ந்த உள்ளம். அப்பா சிவகங்கையில் தாசில்தாராக இருந்தார். ஆரம்பத்தில் இவனுடன் யோசித்தே பழகினோம். ஏனென்றால் ஆள் பெரிய ஆளா இருக்கான் எதாவது சொல்வானோ என்ற பயம். கணேசமூர்த்திதான் எல்லாருக்கும் இஷ்ட தெய்வம்... ஜோக்காளி (இவர் பதிவர் பகவான்ஜி இல்லைங்கோ) அரட்டை அடிப்பதில் இவனிடம் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எப்போது கணேசமூர்த்தி இருக்கும் இடத்தில் சந்தோஷம் நிரம்பியே இருக்கும். அதனால் பெரும்பாலும் அரட்டை என்றால் நடுநாயகம் கணேசமூர்த்திதான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக திருநாவுடன் எங்கள் நட்பு இறுக்கமானது.

காலையிலேயே கணிப்பொறி மையம் சென்று விடுவோம். மதியத்துக்கு சாப்பாட்டையும் எடுத்துச் சென்று அங்கயே சாப்பிட்டு விட்டு லேப்பில் எதாவது பார்த்து விட்டு மாலைதான் திரும்புவோம். பெரும்பாலான மதியவேளைகள் எதாவது தியேட்டரில் கழியும். அப்போது தேவகோட்டை திருப்பத்தூரி புதுப்படம் வெளியாகாது. காரைக்குடியில் மட்டுமே புதுப்படம் வெளியாகும். அதனால் எந்தப்படம் வெளியானாலும் அதை பார்க்காமல் இருக்கமாட்டோம். பெரும்பாலும் எல்லாருக்கும் டிக்கெட் எடுப்பது திருநாவாகத்தான் இருக்கும். மாலை வேளைகளில் கணிப்பொறி மையத்தில் இருந்து பெரியார் சிலை வரை பேசிக்கொண்டே நடப்போம். அவ்வப்போது சூப், ஐஸ்கிரீம், டி, காபி, வடை, பஜ்ஜி என எதாவது சுவைத்தபடியே அரட்டை அடித்துக் கொண்டே நடப்போம். எங்கள் கணிப்பொறி மையத்தில் இருந்து கொப்புடையம்மன் கோவில் வீதியில் இருக்கும் முருகன் மெட்டலை ஒட்டி ஆனந்தமடம் செல்லும் பாதையில் இப்போதும் இருக்கும் டீக்கடைக்கு பஜ்ஜி சாப்பிட செல்வோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

காரைக்குடி கணிப்பொறி மைய படிப்பு முடிந்தாலும் எங்கள் நட்பு தொடர, தேவகோட்டையில் ஒரு கணிப்பொறி மையம் ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்து திருநா, கருப்பையா, நான் மற்றும் சிவா நால்வரும் இணைந்து செயல்பட முடிவு செய்தோம். திருநாவின் பணமும் எங்களின் உழைப்புமாக பேர் சொல்லும் கணிப்பொறி மையமாக உயர்ந்த போது திருப்பத்தூர் கல்லூரியில் வேலை செய்த கருப்பையா பள்ளிகளுக்கு கணிப்பொறி வகுப்பெடுக்கும் காண்ட்ராக்ட் கிடைத்து நால்வர் குழுவில் இருந்து விலகினான். பின்னர் எங்கள் மூவரின் உழைப்பும் சிறந்த நிறுவனமாக தொடர்ந்து நடைபெற வைக்க, இப்படி நல்லாப் போனாத்தான் பிரச்சினை வரணுமே.... அதுவும் வந்தது,

கல்லூரியில் படித்த மாணவர்கள் சிலர் எங்களுடன் நெருக்கமாக, ஒரு பெரிய வட்டம் உருவாகியது. அந்த வட்டம் இரவு பெரும்பாலும் பாஸ்ட்புட் கடைகளில் சாப்பிட்டு கணிப்பொறி மையத்தில் தங்கி வளர ஆரம்பிக்கும் போது எங்களில் செலவு செய்பவன் திருநா என்பதை அறிந்து வட்டத்தை சுருக்க ஆரம்பித்தார்கள். முதலில் சிவா மீது சில பொய்யான குற்றச் சாட்டுக்களைச் சொல்ல திருநாவின் அன்பு சிவாவிடம் இருந்து மெல்ல விலகியது. அப்பவே நான் சுதாரித்து இருக்கணும். இருந்தாலும் சிவா இடையில் வந்தவன் நான் அவனுடன் கிட்டத்தட்ட நாலைந்து ஆண்டுகளாக நண்பன் என்ற இறுமாப்பில் இருக்க திருநாவின் பேச்சு என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய, ஒரு கட்டத்தில் நான் அறைக்குள் வந்தால் அவனும் அவன் அறைக்குள் வந்தால் நானும் வெளியே செல்லும் நிலைக்கு கொண்டு வந்தது. பின்னர் சந்தோஷங்களற்ற நாட்களை நாங்கள் கொல்ல அது எங்களைத் திங்க ஆரம்பிக்க நட்பு மரணித்தது.

இந்நிலையில் மதிமுகவில் பொறுப்பில் இருந்த அண்ணனின் ஊதாரித்தனம், அப்பாவின் மரணம் என அவனின் வாழ்க்கை சந்தோஷங்களற்றுப் போக, அப்பாவின் மரணத்தில்தான் என் கைகளைப் பிடித்துக் கொண்டு நல்லாயிருந்தாருடா... இப்படி ஆயிருச்சேடா... இனி நான் என்ன பண்ணுவேன் எனக் கதறினான். என்னால் ஒன்றும் சொல்ல முடியாத நிலை... வருத்தங்களுடன் இரவு திரும்பினோம். பின்னர் அந்தக் கூட்டம் அவனை வளைத்தே வைத்திருந்தது. நாங்கள் அங்கிருந்து வெளியேற, கோயம்புத்தூரில் சிவாவும் தேவகோட்டையில் நான் என் நண்பன் முருகனுடன் இணைந்தும் கணிப்பொறி மையம் ஆரம்பித்தோம். எங்கள் மையத்தின் திறப்பு விழாவுக்கு வந்து வாழ்த்திச் சென்றான்.

எங்கள் மையம் நல்ல நிலையில் இருக்கும் போது அவனை சுற்றிய கூட்டம் காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்பது போல அவனை மொத்தமாக வெளியேற்றி வந்த காசை வாங்கிக்கிட்டு போ என விரட்டிவிட மீண்டும் திருப்பத்தூருக்குப் போய்விட்டான். அவன் ரொம்ப கஷ்டப்படுகிறான் என்ற செய்தி கேட்டு நானும் சிவாவும் ஒருமுறை ஊருக்கே போனோம். திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவான அவன் விவசாயம் பார்த்துக் கொண்டு இருந்தான். நீண்ட நேரம் பேசினான்... தப்புச் செய்துவிட்டதாக வருந்தினான். என் நண்பன் குற்ற உணர்ச்சியில் தவித்தது மனசுக்கு வலித்தது. அவனைச் சூழ்ந்த பாம்புகளை அவனை தனிமைப்படுத்திய போது நாமும் அவனை விட்டுத்தானே சென்றோம் என்ற குற்ற உணர்வு எழந்த போது எப்படிப்பட்ட நட்பை நாமும் தகர்த்திருக்கோமே என்று வருந்தினேன். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு தேவகோட்டைக்கு வந்த அப்பா 'திருநாவை உங்களை நம்பித்தான் இம்புட்டுத்தூரம் அனுப்பியிருக்கேன். அவன் எப்பவும் உங்களைத்தான் சொல்லுவான்... அவன் எப்படியோ அப்படித்தான் நீங்களும்... எனக்கு அவன் மட்டும் மகனில்லை... நீங்களும்தான் என்று சொன்னார். ஆனால் சந்தோஷமாக தேவகோட்டை வந்தவனை சங்கடப்படுத்தி அனுப்பியதில் எங்களுக்கும் பங்கு இருந்தது அல்லவா?

பின்னர் திருப்பத்தூர் கல்லூரியில் ஆசிரியர் பணி, அங்கே தனியாக கணிப்பொறி மையம் என அவன் செட்டிலாகிவிட, மனசு சந்தோஷப்பட்டது, போன முறை ஊருக்குப் போன போது அவனைப் பார்க்க நினைத்து போகாமல் விட்டுவிட்டேன்.  கருப்பையா எனக்கு சொந்தக்காரன் என்பதால் அவனைச் சந்தித்தபோது உனக்குத் தெரியுமா மாப்ளே நம்ம திருநா தம்பி கருணா லாரி அடிச்சு செத்துப் பொயிட்டான்ட்டா என்றதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. வக்கீலுக்குப் படிச்சிட்டு சிவகங்கையில் இருந்தவன்... தேவகோட்டைக்கு வந்து அண்ணே... அண்ணே எங்கள் பின்னே கூடப்பிறந்தவனாய் திரிந்தவன்... எப்படி இப்படி ஒரு முடிவில் மரணித்துப் போனான் என வருந்தியபோது திருமணமாகி ஒரு குழந்தை இருக்குடா மாப்ளே... பாவம் திருநா, அண்ணனும் சரியில்லை... தம்பியும் இப்ப இல்லை குடும்பச் சுமை எல்லாம் அவன் மேலதான்... எல்லா வலியையும் சுமந்துக்கிட்டு இருக்கான்டா என்ற போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இந்த முறை செல்லும் போது என் நண்பனைச் சென்று பார்க்க வேண்டும். அவனோட வாழ்க்கையின் வலிகள் எல்லாம் கடந்து சந்தோஷமாக இருக்க வேண்டும்.

நண்பேன்டா தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

15 கருத்துகள்:

  1. "நண்பனைச் சென்று பார்க்க வேண்டும். அவனோட வாழ்க்கையின் வலிகள் எல்லாம் கடந்து சந்தோஷமாக இருக்க வேண்டும்." என்ற உயரிய எண்ணம் பாராட்டுக்குரியது.
    தங்கள் பகிர்வைத் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. திருநா வாழ்வில் இனிமேலாவது மகிழ்ச்சி மலரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் அண்ணா...
      தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வணக்கம் அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வணக்கம் அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ் மண வாக்குக்கும் நன்றி.

      நீக்கு
  6. மனதைக் கனமாக்கிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. இந்த உலகில் பிரதிபலன் பார்க்காதது நட்பு மட்டுமே. எனது நண்பர்களை நினைவு படுத்திய பதிவு.

    பதிலளிநீக்கு
  8. நண்பரின் வாழ்வில் வளங்களும் நிம்மதியும் சேர வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி