கண்மணி...
கலகலப்பாய் சிரிக்கிறாள்...
அழகாய் படம் வரைகிறாள்...
அற்புதமாய் பாட்டுப் பாடுகிறாள்...
இனிமையாய் பியானோ வாசிக்கிறாள்...
சந்தோஷமாய் கவிதை சொல்கிறாள்...
எல்லாக் கேள்விக்கும் அழகாய் பதிலளிக்கிறாள்...
ஏன் தம்பி தன்னை அடித்தால் தானும் திருப்பி அடிப்பேன் என்று சொல்கிறாள்...
இவ்வளவு செய்கிறாள் என்று சொல்வதில் என்ன இருக்கிறது... இவளைப் போல பல பிள்ளைகள் இருக்கிறார்களே என்றுதானே நினைக்கிறீர்கள். ஆம் இவளைப் போன்ற திறமைசாலிப் பிள்ளைகள் லெட்சோப லெட்சம் பேர் இருக்கலாம். ஆனால்...
என்ன ஆனால்...?
கண்மணி... இறைவன் படைப்பில் ஒரு அற்புதமானவள். இவளின் முகம் பார்த்து பேட்டி பார்த்தால் எல்லாக் குழந்தைகளையும் போல்தான் இவள். சின்ன பிள்ளைகளுக்கே உரிய சந்தோஷம், வெகுளியான பேச்சு என நம் மனதைக் கவர்வாள். அதே சமயம் இவளது உருவம் பார்த்தால்...?
இவளது உருவத்தைப் பார்த்ததும் உள்ளம் அப்படியே வதங்கிப் போய்விடுகிறது... ஆம் இவள் குறையுள்ள பெண்... குறையென்றால் கொஞ்சம் இல்லை அதிகம் குறையுள்ள பெண். இரண்டு கைகளும் சுத்தமாக இல்லை... கால் இரண்டுமே சூம்பிப் போயி இருக்கிறது. அதில் ஒரு கால் வேலை செய்யாது... ஒரே ஒரு கால் மட்டுமே வேலை செய்கிறது... அதிலும் விரல்கள் ஒன்றுக்கொன்று முரணாய்... அப்படியிருந்தும் எல்லா வேலையும் அந்தக் கால்தான் செய்கிறது.
நேற்று முகநூலில் இந்த வீடியோவைப் பார்த்தேன். வீடியோ பார்த்து முடிக்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. மானசீகமாக அந்தக் குழந்தையை வணங்கினேன். ஒற்றைக் காலில் எல்லா அற்புதங்களும் நிகழ்த்துகிறாள் கண்மணி.
கைராளி டிவியின் மேலாண்மை இயக்குநரும் பிரபல பத்திரிகையாளருமான திரு. ஜான் பிரிட்டாஸ் அவர்கள் நடத்தும் ஜேபி ஜங்சன் என்ற நிகழ்ச்சியின் வீடியோவைப் பகிர்ந்து அதன் கீழே அந்த அம்மா சொல்லியிருந்த வரிகள் என்னை இழுக்க சரி பார்க்கலாமே என்றுதான் பார்க்க ஆரம்பித்தேன். முடிவில் வலியோடுதான் எழ முடிந்தது.
ஆரம்பத்தில் தனது ஒற்றைக் கால் கொண்டு பென்சிலால் அழகான ஓவியம் தீட்டினாள். பின்னர் திரு. ஜான் அவர்களின் கேள்விகளுக்கு எல்லாம் தனக்கு இப்படி ஒரு குறை இருக்கிறது என்ற நினைப்பை கொஞ்சம் கூட சுமக்காமல் சிரித்தபடியே அழகாக பதிலளித்தாள்.
கண்மணிக்கு எதிர்காலத்தில் என்ன ஆகவேண்டும் என்ற எண்ணம் என்ற போது மியூசிக் டீச்சர் ஆகணும் என்றாள். இது போல குறை இருப்பதை மற்றவர்கள் பரிகாசிக்க கேட்டதுண்டா என்றபோது சிரித்துக் கொண்டே அம்மாக்கிட்ட மற்றவர்கள் சொல்லும் போது மறைந்திருந்து கேட்டிருக்கிறேன் என்றாள். அம்மா சொல்வாளா என்ற போது ஒரு சிரிப்பு. கண்மணிக்கு டிரஸ்ல இஷ்டமில்ல அம்மாக்கிட்ட என்ன டிரஸ் கேட்டாலும் அம்மா வாங்கிக் கொடுப்பாளா என்றதற்கு கொடுப்பாள்... ரொம்ப விலை இருந்தால் அப்புறம் வாங்கலாம் என்பாள் என்றதும் ஜான் அவர்கள் அப்புறம் வாங்கித் தரமாட்டாள்தானே என்று கேட்க, அதற்கும் ஒரு சிரிப்பு. இப்பத்தான் கச்சேரி எல்லாம் பண்ணுறே... உனக்கு வேண்டியதை நீ வாங்கிக் கொள்ளலாமே என்றதும் சிரித்துக்கொண்டே ஆமா என்று சொல்லி அம்மாவைப் பார்க்கிறாள்.
பாட்டுப் பாடு என்று சொன்னதும் மிக அருமையாக... இனிமையாக பாடுகிறாள்... பாடும் போது அந்த ஒற்றைக்கால் தாளம் போடுகிறது. கால் விரல் கொண்டு பியானோ இசைக்கிறாள். தம்பி அடிப்பானா என்று கேட்டதற்கு அடிப்பான் என்று சொன்னதும் பாவமில்ல கல்யாணி கையில்லாது கொண்டு எப்படி அவனை திரிச்சடிக்கும் என அவர் கேட்டதும் நான் அடிப்பேன்... காலால் கிள்ளுவேன் என்று சொல்ல அதைச் செய்து காட்டச் சொன்னதும் தன் தம்பியைக் காலால் கிள்ளிக்காட்டினாள்.
கவிதை வாசித்தாள்... துபாயில் இருக்கும் அப்பாவுக்கா ஒரு பாட்டுப் பாடினாள். தன் மீது பாசம் வைத்திருக்கும் நாட்டுக்காரர்களுக்கு (ஊர்க்காரர்கள்) ஒரு பாட்டுப் பாடினாள். எல்லோரும் பாடினாய் எனக்கு ஒரு பாட்டு என்று ஜான் கேட்டதும் அவருக்காக ஒரு பாட்டுப் பாடினாள். எத்தனையோ திறமைகள் இருக்கு இதில்தான் போகணும் என்று இப்பவே நினைக்காதே... பின்னால் முடிவு செய் என்று சொன்னார்.
இடையிடையே அவரின் அம்மாவுடனும் பேசினார். குறைபாடுள்ள குழந்தையாக இருக்கு... அதை அழித்து விடலாம் என மருத்துவர்கள் சொன்னபோது தாங்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று சொன்ன அந்தத் தாய், இந்தக் குழந்தைக்காக எத்தனை கஷ்டங்களைச் சுமந்திருப்பாள்... சுமந்து கொண்டிருப்பாள்... சின்னப்பெண்... எல்லாவற்றிற்கும் துணை வேண்டும் என்ற நிலையில் இருக்கும் பெண் நாளை வளர்ந்து பெரியவளாகும் போது எத்தனை கஷ்டங்களைச் சுமக்க வேண்டியிருக்கும். இருந்தும் அந்தத் தாய்க்கும் அந்த குழந்தைக்கும் அதைப்பற்றி துளியும் கவலை இல்லாது மிகுந்த சந்தோஷத்தில்தான் பேசினார்கள். அதற்காகவே அவர்களைப் எப்படிப் பாராட்டினாலும் தகும்.
ஊரில் இருந்து சிறிது தூரம் செல்ல வேண்டிய பள்ளிக்கு அம்மா தூக்கிக் கொண்டு போய் பஸ்ஸில் ஏற்றிவிட பள்ளியில் இறக்கிவிடும் பஸ் டிரைவர் மாலை அவள் வருகைக்காக காத்திருந்து கூட்டி வருவதாய்ச் சொன்னதும் இன்னும் மனித நேயமிக்க மனிதர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற சந்தோஷம் மனசுக்குள் எட்டிப் பார்த்தது.
நீ சாமி கும்பிடும் போது என்ன வேண்டிக் கொள்வாய் என்று கேட்க நன்றாக பாடணும் என்று சொன்னவள் அம்மா, அப்பா நல்லாயிருக்கணுமின்னு வேண்டுவேன் என்றதும் கண்மணி தனக்காக வேண்டுவதில்லையா என்று கேட்டதும் விகல்பமில்லாமல் சிரித்தாள்.
நிகழ்ச்சியின் முடிவில் உனக்கு ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்குமுல்ல... இந்த நிகழ்ச்சி பார்க்கும் நல்ல மனங்கொண்ட எவரேனும் உனக்கு ஒரு கார் வாங்கித் தருவார்கள். கண்மணி இந்தக் கால் உன்னை சிகரத்திற்கு கொண்டு செல்லும் என்று சொல்லி அந்தக் காலுடன் கை (கால்) குலுக்கிய ஜான் அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.
மிகப்பெரிய கஷ்டம் அனுபவித்தாலும் மனசளவில் பாதிக்காமல் சிரித்துக் கொண்டே இருக்கும் கண்மணியின் நிகழ்ச்சி முடிந்தபோது என் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் வெளியானதை தடுக்கமுடியவில்லை. கண்மணியின் கால்கள் அவளை சிகரத்தில் மட்டுமல்ல சிம்மாசனத்திலும் ஏற்றி வைக்கட்டும்... கொடுப்பதைப் பறித்த இறைவன் இருப்பதை வைத்து அவளை இமயம் அளவு உயர்த்தட்டும்.
நீங்களும் பாருங்கள் கல்யாணியின் கலகலப்பான பேச்சை...
-'பரிவை' சே.குமார்.
பதிலளிநீக்குபடித்து முடித்ததும் மனம் கணத்து விட்டது நண்பரே ஆகவே காணொளியை இன்று வேண்டாமென விட்டு விட்டேன்.
கண்ணீர் வழிகிறது. தடுக்க முடியவில்லை.
பதிலளிநீக்குமனம் பாரமாகி விட்டது. காணொலியை பார்க்கும் தைரியமில்லை சகோ
பதிலளிநீக்கு//கொடுப்பதைப் பறித்த இறைவன் இருப்பதை வைத்து அவளை இமயம் அளவு உயர்த்தட்டும்//
பதிலளிநீக்குஆமாம் இறைவன் எல்லா ஆசீர்வாதத்தையும் இப்பிள்ளைக்கு அளவில்லாம தரனும் ..அந்த பெற்றோர் குறிப்பாக தாய்க்கு கோவில் கட்டி கும்பிடனும் ..
மனம் கனத்தது ..என்னவொரு !!திறமை இச்சிறுமியிடம் ...அந்த பிள்ளை பாடிய பாடல் கணீரென்று ஒலிக்குது !
கண்மணி தன்னம்பிக்கையும் தைரியுமும் உள்ள பெண்
பதிலளிநீக்குஎன் இதயம் கூட வணங்கிடுமம்மா உன்னை...
பதிலளிநீக்குதுளையில்லாத மூங்கில் தான் நீ எனினும்
உன்னிலிருந்து முன்னூறு ராகம்....
நீ அதிசய புல்லாங்குழலம்மா...
மனம் கனக்கிறது நண்பரே
பதிலளிநீக்குகண்மணியின் கால்கள் அவளை சிகரத்தில் மட்டுமல்ல சிம்மாசனத்திலும் ஏற்றி வைக்கட்டும்... கொடுப்பதைப் பறித்த இறைவன் இருப்பதை வைத்து அவளை இமயம் அளவு உயர்த்தட்டும்.
பதிலளிநீக்குமனதில் கனம்.
பதிலளிநீக்குஎத்தனை தன்னம்பிக்கையான குழந்தை...வாழ்த்துகள்...அவள் மீது பரிதாபம் காட்டுவதை விட ஊக்குவித்தால் மேலும் வளர்வாள்...வலியுடன் தான் கூறுகின்றேன்.
பதிலளிநீக்குகண்கலங்க வைத்தாலும் குறைகளை நிறைகளாய் மாற்றி தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டுவரும் அப்பெண்ணையும் பெற்றோரையும் வாழ்த்துகிறேன்! வாழ்த்துக்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குபடிப்பதற்கே சங்கடமாக இருக்கிறது...காணொளி பார்க்கவில்லை...
பதிலளிநீக்குகண்மணியின் கனவுகள் யாவும் மெய்ப்படட்டும்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇங்கு கருத்திட்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி.
பெரும்பாலான உறவுகள் காணொளி பார்க்கவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர்கள் எல்லாம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி இது. அந்த குழந்தைக்கும் அவளின் அம்மாவுக்கும்தான் எத்தகைய தன்னம்பிக்கை... அதில் அவள் வெற்றியும் பெற்றிருக்கிறாள் என்பதை அவளின் பேட்டியைப் பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும். இம்மியளவு கூட அந்தக் குழந்தையின் முகத்தில் இப்படிப் பிறந்ததற்கான வருத்தம் இல்லை... எத்தனை சந்தோஷம்... எத்தனை சந்தோஷம்... கண்டிப்பாக பாருங்கள்.
தன்னம்பிக்கைக்கு
பதிலளிநீக்குநல்லதோர் எடுத்துக்காட்டு
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
அடக் கடவுளே! மனம் கனக்கின்றது! ஆனால் என்ன திறமைகள் பாருங்கள்! கடவுளின் மீது கோபம் வந்தது! ஆனால் கடவுள் ஒன்றை மூடினால் மற்றொன்றைத் திறப்பான் என்பது போல் அவரது திறமைகள் வியக்க வைக்கின்றது! ஆம் அவளது மனதிலும் முகத்தில் என்ன தன்னம்பிக்கை ஒளி! வருத்தம் சிறிது ம் இல்ல. நாம் எல்லாம் இருட்நும் ஒரு சிறிய துன்பம் வந்தாலே என்னமாய் ஆடுகின்றோம்?! முடியய்லை முடியல என்று ....ம்ம்ம் உனக்கும் கீழே உள்ளவ்ர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி மட்டுமல்ல பாடமும் கற்க வேண்டும்!
பதிலளிநீக்கு