திங்கள், 6 அக்டோபர், 2014

சில சினிமாக்களும் சில வரிகளும்

க்ரீத் விடுமுறையான கடந்த நான்கு நாட்களும் ஊருக்குப் பேச... சமைக்க... சாப்பிட... படம் பார்க்க... தூங்க என்று கழிந்து விட்டது. உறவுகளின் வருகையும் விடுமுறை தந்த சோர்வுமாய் எதுவுமே எழுதவில்லை. தொடர்கதை கூட நீண்ட நாளாச்சு முதல் பகுதி போட்டு என்ற காரணத்தால் நேற்று அவசரமாய் எழுதிப் பகிர வேண்டியதாகிவிட்டது. சரி விடுமுறையில் சில சினிமாக்களைப் பார்த்தேன். அவற்றைப் பற்றி மனசின் பார்வையில் சில வரிகள் இங்கு சொல்லலாம்.

மெட்ராஸ் 


ட சென்னை வாழ் மக்களின் அரசியலைப் பற்றிப் பேசும் கதை. ஒரு சுவற்றுக்காக காலம் காலமாக இரண்டு தரப்பு வெட்டிக் கொள்வதைச் சொல்லி ஆரம்பிக்கும் கதையின் நகர்வு அந்தச் சுவரை ஒரு கதாபாத்திரமாக வைத்து அரசியல் களத்தில்... கார்த்தி நடிப்பில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வெற்றிப் படம். எல்லோரும் சென்னைப் பாஷை பேசும் போது இவரின் பேச்சு மற்றும் கொஞ்சம் மாறி வருவது உறுத்தலாக இருந்தாலும் காளி கதாபாத்திரத்தில் குறை வைக்கவில்லை. கலையாக வரும் கேத்தரின் தெரஸா கலையாகத்தான் இருக்கிறார். தூங்கி எழுந்து தண்ணீர் பிடிக்க வரும் காட்சியில் சூப்பர். இவர்களைச் சாப்பிட்டு விட்டார்கள் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கும் அன்பு (கலையரசன்) மற்றும் மேரி (ரித்விகா). இவர்களின் காதல் காட்சிகள் ரசனை மிகுந்தவை. நடித்திருக்கும் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை சரியாகச் செய்திருக்கிறார்கள். முகநூலில் எல்லாம் இது தலித் பற்றிய படம் என்று எழுதி வருகிறார்கள். சாதி, மதம் கடந்து பார்க்கும் ஒவ்வொருவனுக்கும் இது ஒரு அற்புதமான படம். ஒவ்வொரு படத்தையும் இது இன்ன சாதியினருக்கான படம் என்று முத்திரை குத்துவது எதற்காக? எந்தச் சாதிக்காரன் பார்த்தாலும் அவன் சாதியில் இது போன்ற நிகழ்வுகள் இருப்பது நினைவில் ஆட வேண்டும்... அவ்வளவே... அதுதான் சினிமா. மெட்ராஸ் மிகவும் அருமையான படம்... ஒரு ஏரியா மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதையை ஒரு வித பதட்டத்துடன் கண்டு களிக்கலாம். கலக்கலாய் மெட்ராஸ் பாஷை பேசி வயதான ஜானாக நடித்திருப்பவரின் அட்டகாசமான நடிப்பைப் பற்றி சொல்லாமல் செல்வது நன்றல்ல... கலக்கியிருக்கிறார்.

சிகரம் தொடு


விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருக்கும் படம்... தன்னோட பாதை இதுதான்... இப்படிப்பட்ட படங்கள்தான் தனக்குச் சரி வரும் என்று வளர்ந்து வரும் நாயகனான விக்ரம் பிரபு சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார். கதையை ஆரம்பத்தில் மெதுவாக நகர்த்தினாலும் போகப்போக அதன் வேகத்தை அதிகரித்திருக்கிறார் இயக்குநர். சத்தியராஜ் ஒரு காலை இழந்த போலீஸாக நடித்திருக்கிறார். மகனையும் போலீஸ் ஆக்க ஆசைப்படுகிறார். மகனுக்கோ போலீஸ் என்றாலே பிடிக்கவில்லை. இதற்கு இடையில் ஏடிஎம் கொள்ளையை கருவாக்கி படம் காட்டுகிறார்கள். நல்ல கதை... இருந்தும் மெட்ராஸ் கொடுத்த ஒரு பாதிப்பை ஏனோ கொடுக்கவில்லை. சொல்ல மறந்துட்டேனே நம்ம பிரபல சினிமா விமர்சனப்  பதிவர் ஜாக்கி சேகர் அண்ணா அவர்கள் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

ஜிகர்தண்டா


நாளைய இயக்குநருக்கான குறும்படப் போட்டியில் நாசரால் கேவலப்படுத்தப்படும் நாயகன் சித்தார்த் சினிமாவில் இயக்குநராகி சாதிக்க ஒரு ரவுடியின் கதையை அவனைப் பின்தொடர்ந்து எழுதி இயக்கப் போகிறேன் என மதுரை வருகிறார். அங்கு நண்பனுடன் சேர்ந்து வில்லனைப் பின்தொடர்ந்து அவனிடம் மாட்டி... இடையில் நாயகியை காதலிப்பது போல் நடித்து... வில்லனையே நாயகனாக வைத்து படமெடுக்கும் நிலைக்குப் போகிறார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை நாயகன் சித்தார்த்தைவிட வில்லனான சிம்ஹா சிம்மாசனத்தில் அமர்கிறார். அட்டகாசமான நடிப்பு... நம்ம லஷ்மி மேனனை ஊறுகாயாகக் கூட தொடவில்லை... பட்டும் படாமலும் தலைகாட்டுகிறார். கடைசியில் நம்ம விஜய் சேதுபதியை மிரட்டிப் பணிய வைக்கும் போது சித்தார்த் மீது கோபம் வந்ததுங்க... ரவுடி மதுரையிலதான் இருக்கணும்ன்னு எழுதப்படாத சட்டம் எதுவும் தமிழ் சினிமாவுல இருக்கு போல... ஜிகர்தண்டான்னு பேர் வைக்கவே மதுரைக்குப் போயிருக்கானுங்க.,.. ஜிகர்தண்டாவில் ருசி இல்லை.

சலீம் 


விஜய் ஆண்டனி நடிப்பில் வந்திருக்கும் இரண்டாவது படம். ஆரம்பத்தில் ஏழைகளுக்கு உதவ நினைக்கும் மருத்துவர், பார்த்த பெண்ணோடு பழக ஆரம்பிக்க அது ஒரு முன்கோப முனியம்மாவாக இருக்க, நொந்து போய் இருக்கும் நேரத்தில் மருத்துவமனையில் நன்னடத்தைக்கு சன்மானமாக வேலை போகிறது. அதன்பின் மந்திரியின் மகனை சிறைப்பிடித்து வைத்துக் கொண்டு அவர் வைக்கும் கோரிக்கை படத்தை ராக்கெட் வேகத்தில் கொண்டு செல்கிறது. சலீமாக வரும் விஜய் ஆண்டனி அலட்டலில்லாமல் அருமையாக நடித்திருக்கிறார். சலீம் என்ற பெயரைச் சொன்னதும் நீ எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று போலீஸ் அதிகாரி கேட்க, என்னோட பேருதான் பிரச்சினையின்னா என்னை விஜய்ன்னு கூப்பிடுங்க... இல்ல ஆண்டனியின்னு கூப்பிடுங்க என்று சொல்லுமிடத்தில் வசனத்தில் சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குநர். தொடரும் என்று போடுகிறார்கள்... தொடர்ந்து பார்க்கலாம்.

வானவராயன் வல்லவராயன்


பாசத்தில் உருகுவதும் அடித்துக் கொண்டு உருள்வதுமாக இருக்கும் அண்ணன் தம்பிகளில் அண்ணனுக்கு காதல் வர காதலியைக் கிளப்பிக் கொண்டு போக இருக்கும் போது தர்ம அடி விழுகிறது. உடனே தம்பி அந்தப் பெண்ணின் வீட்டுக்குப் போய் அவளின் அப்பாவை வீதியில் வைத்து வேட்டியை அவிழ்த்து விடுகிறார். பிரச்சினை பெரிதாகிறது... எப்படி இணைகிறார்கள் என்பதை வழவழா கொழகழான்னு 'வாவ'வாக காட்டியிருக்கிறார் இயக்குநர். அழகான நாயகி இருந்தும் அரதப் பழசான கதையும் கடுப்பேற்றும் காட்சிகளுமாய் படம் நகர்வதால் சலிப்பாக இருக்கிறது. தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் மா.கா.பா. ஆனந்த் பேசும் வசனங்களுக்கு சிரிக்க முடியவில்லை. கிருஷ்ணாவின் நடிப்பு ஆஹா... ஓஹோ என்றெல்லாம் இல்லை.  ஏனோ தானோ படம்தான்... 

-'பரிவை' சே.குமார்

7 கருத்துகள்:

  1. பட விமர்சனங்கள் அனைத்தும் அருமை ..சலீம் ஜிகர்தாண்டா பார்த்திட்டேன் ..நீங்க சொன்ன அந்த சிக்சர் வசனம் எனக்கும் பிடித்தது :) எனக்கு சலீம் ரொம்ப பிடித்திருந்தது .மெட்ராஸ் விரைவில் பார்க்கணும்

    பதிலளிநீக்கு
  2. ஏற்கனவே மெட்ராஸ் விமர்சனம் படித்து விட்டேன். ரொம்பவும் நன்றாக வந்திருப்பதாகப் ப்டித்தேன். நீங்களும் நன்றாக இருப்பதாக எழுதி விட்டதால் அவசியம் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. மெட்ராஸ்-ஜானி மாதிரி கேரக்டரை நான் தினமும் பார்க்கிறேன்
    அப்படித்தான் இதற்குத்தானே ஆசைபட்டாய் பால குமாரா படத்தில் வரும் குமாருகள் பாத்திரங்களும் நிஜத்தின் பிரதிபலிப்புக்கள்

    பதிலளிநீக்கு
  4. மெட்ராஸ் படம் நன்றாக இருந்தது சார் எனக்கும் பிடித்திருந்தது. இப்போதெல்லாம் படங்களை சாதிய அடையாளப்படுத்துவது பெருகிவிட்டது எனும் உங்கள் ஆதங்கம் நியாயமானது, எனக்கும் ஏற்பட்டது தான். ஜிகர்தண்டா நல்ல படம் சார், காமெடி சூப்பராக இருக்கும். ஜீவா படம் பரவாயில்லாமல் இருக்கும், அதையும் பாருங்கள், கிரிக்கெட்டில் இருக்கும் சாதிய கொடுமையை அழகாக தோலுறித்திருப்பார் இயக்குனர் சுசீந்திரன்.... நானும் தான் சார் விடுமுறையில் ஒரு பதிவும் இடவில்லை, ... இனி தொடரலாம்... பகிர்வு சூப்பர்..

    பதிலளிநீக்கு
  5. ஏகப்பட்ட படங்கள் பார்த்திருப்பீர்கள் போல!

    பதிலளிநீக்கு
  6. நறுக்கு தெரித்தது போல சுருக்கமான விமர்சனங்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. ந்ல்ல விமர்சனங்கள் அதுவும் ஷார்ட் அண்ட் ஸ்வீட் என்பது போல்! மெட்ராஸ் எல்லாருமே நன்றாக இருப்பதாகத்தான் எழுதியிருக்கின்றார்கள்! ம்ம்ம்ம்பார்ப்போம்!

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி