(வலைச்சர ஆசிரியனாய் இருந்ததால் சனிக்கிழமை பதிவிட முடியவில்லை.
இனி எப்பவும் போல் சனிக்கிழமை தொடரும் )
----
முந்தைய பகுதிகள் : பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4
நான்காம் பகுதியின் இறுதியில்...
"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... சும்மாதான் கேட்டேன்... வந்தா பேசச் சொல்லும்மா...." வார்த்தைகளை மென்று விழுங்கினார்.
"மாமா... சும்மா சொல்லுங்க... என்ன பண விஷயமா?" என்று நேரடியாகக் கேட்க கந்தசாமிக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. மருமக்களிடம் பணம் என்று இதுவரை கேட்டதில்லை என்பதால் அவருக்கு சங்கோஜமாக இருந்தது.
இனி...
மருமகள் அப்படிக் கேட்டதும் கந்தசாமிக்கு என்னவோ போலாகிவிட்டது. பதில் சொல்லாமல் அமைதி காத்தார்.
"என்ன மாமா பேச்சைக் காணோம்... எங்கிட்ட சொல்லக் கூடாதா என்ன?"
"ஏய்... அப்படியெல்லாம் இல்லத்தா... அது... அது... வேற ஒண்ணுமில்ல... மழ விட்டு வெட்டரிக்க ஆரம்பிச்சிருக்கு... பொதி கட்டுன பயிரு... இப்ப பூச்சி விழுந்தா வீணாப் போயிடும்... கையில காசு இல்ல... அதான்..." மெதுவாக இழுத்தார்.
"ம்... இதை அவர்கிட்டத்தான் கேக்கணுமா... எங்கிட்ட கேக்கக் கூடாதா?"
"இல்லத்தா... அப்படில்லாம் இல்ல..." பேச முடியாமல் வார்த்தைகளை விழுங்கினார்.
"அவருக்கிட்ட இருக்கான்னு தெரியலை மாமா... கேட்டு அனுப்பச் சொல்றேன்... இப்ப எங்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு... இன்னைக்கு அனுப்பி வைக்கிறேன்... அதை வச்சி உரம் வாங்கிப் போடுங்க..."
"நீ எதுக்குத்தா... அவனுக்கிட்ட வாங்கிக்கிறேனே..."
"நா உங்க மருமகதானே...? அப்புறம் எதுக்கு யோசிக்கிறீங்க..."
"இல்லத்தா... உனக்குன்னு செலவு இருக்கும்... இருக்க காச அனுப்பிட்டு..."
"ஒரு கஷ்டமும் இல்லை மாமா... அத்தைய மழை நேரத்துல வெளிய தெருவ போகும் போது பாத்துப் போகச் சொல்லுங்க... உடம்பைப் பார்த்துக்கங்க..."
"சரித்தா... அப்ப வச்சிடுறேன்... தம்பி வந்தா போன் பண்ணச் சொல்லு..."
"சரி மாமா" என்று அவள் போனை வைக்க, அவரும் போனை வைத்து விட்டு முகத்தில் பூத்திருந்த வியர்வையை துண்டால் துடைத்துக் கொண்டே கட்டிலில் போய் உட்கார்ந்தார்.
"என்னங்க பய இல்லயோ... மருமவதான் பேசுனாளா?"
"ம்..."
"கேட்டதுக்கு என்ன சொன்ன... இவளும் கைய விரிச்சிட்டாளா?"
"சேச்சே.... தம்பி வெளிய பொயிட்டானாம்... மருமகப் பொண்ணு தங்கமான பொண்ணு... அதுக்கிட்ட எப்படி கேக்குறதுன்னு பாத்தா இதுக்குத்தான் போன் பண்ணியிருப்பேன்னு சும்மா கற்பூரமாட்டம் கப்புன்னு பிடிச்சிக்கிச்சு.. தம்பிக்கிட்ட சொல்றேன்னு சொன்னுச்சு... இப்ப அதுகிட்ட இருக்க காச அனுப்புறேன்னு சொன்னுச்சு... "
"ம்... மவராசி அப்படியாச்சும் சொன்னாளே... பெரிய செட்டு மாதிரி எதுத்தெறிஞ்சு பேசாம..."
"ஏய்... எல்லாரயும் ஒரு மாதிரி பாக்காத... இந்தப்புள்ள என்ன ஒரு தன்மையாப் பேசுச்சு தெரியுமா? எங்க அண்ண வீட்டுச் சொந்தம் விட்டுப் போக்கூடாதுன்னு மூத்தவளக் கொண்டு வந்தே... இன்னைக்கி அது அத்துக்கிட்டு போப்பாக்குது... எனக்குப் பிடிச்சிருக்குன்னு சின்னவன் இவளத்தான் கட்டுவேன்னு நின்னான்... அன்னைக்கி எதுத்தோம்... கடைசியா ஒரே சாதிங்கிறதால ஒத்துக்கினோம். இன்னைக்கு அந்தப்புள்ள நம்மள பாசமா நெனைக்கிது... எனக்குத்தான் அதுக்கிட்ட காசு கேக்க என்னமோ மாதிரி இருந்துச்சு..."
"அன்னக்கி நா மட்டுமா எதுத்தேன்... எல்லாருந்தானே எதுத்தோம்... நல்ல குடும்பத்துல இருந்து வந்தவ... நல்லாப் பேசுறா..."
"அப்ப மூத்தவ நாறக்குடும்பமா என்ன?" படக்கென்று கேட்டுவிட்டு நமட்டுச் சிரிப்புச் சிரித்தவரைப் பார்த்து காளியம்மாள் முறைக்க "என்னதான் இருந்தாலும் உன்னோட பரம்பரையில்ல... கோபம் பொத்துக்கிட்டு வந்திருமே? விடு... எல்லாரும் ஒரு நா இல்லாட்டி ஒரு நா... புரிஞ்சிப்பாங்க..."
"எப்ப நம்ம மண்ட மண்ணுக்குள்ள போனதுக்கு அப்பறமா?"
"அப்புடி நடக்கணுமின்னு இருந்தா ஆரு தடுக்க முடியும்..." என்றவர் "சரி... சரி... வா மாடுகள குளுப்பாட்டிக்கிட்டு வருவோம்... அப்புறம் உக்காந்துட்டேன்னு கத்த ஆரம்பிச்சிருவே..." என்றபடி எழுந்தார்.
இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு...
கஞ்சியைக் குடித்து விட்டு "போஸ்டாபீஸ் வரைக்கும் போயி பணம் வந்திருக்கான்னு பாத்துட்டு வாரேன்... அன்னைக்கே அனுப்பிட்டேன்னு சொன்னுச்சு... மழத் தண்ணி கெடக்கதால தபால்காரர் வரலை போல..." என்றபடி தோளில் துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு செருப்பை மாட்டினார். அப்போது வாசலில் வண்டி வந்து நிற்க, எட்டிப் பார்த்து விட்டு "ஆத்தி... பெரிய மாப்புள்ளயில்ல வாராக... ஏலா... சேரெடுத்துப் போடு சுந்தரியும் மாப்ளயும் வாராக..." என்றபடி வாசலுக்குச் சென்று "வாங்கப்பா... வாத்தா... என்றார்.
"அப்பா... நல்லாயிருக்கீகளா?" வாயெல்லாம் பல்லாக கேட்டபடி வந்தாள் மூத்த மக சுந்தரி.
"எனக்கென்னத்தா கொற... புள்ளக பேசுச்சுகளா?"
"ம்... அம்மா எங்க... அங்கிட்டு வரவே மாட்டேங்கிறீங்க..?"
"வயவேலயே சரியா இருக்கு... எங்கிட்டு வெளிய தெருவ போறது.... உங்கம்மா எங்க போகப்போறா... உள்ளதான் இருக்கா... " என்றதும் வெளிய எட்டிப்பார்த்த காளியம்மா "வாத்தா... வாங்கப்பா..." என்று சொல்லி விட்டு மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
"ஏம்மா ரெண்டு நாளு அங்கிட்டு வந்து இருந்துட்டு வரவேண்டியதுதானே... இதுக்குள்ளே ஏங்கெடக்கே...?"
"ஆடு... மாடெல்லாம் ஆரு பாப்பா...அதவிட நா அங்கிட்டு வந்துட்டா உங்கப்பனை ஆரு மேக்கிறது...?"
"ஆத்தாளும் மகளுக்கும் நாந்தேன் கிள்ளுக்கீரையா?" என்று கேட்டுவிட்டுச் சிரித்தார்.
"இந்த வயசுல அதெல்லாம் எதுக்கு... வித்துப்புட்டு அக்கடான்னு இருக்க வேண்டியதுதானே... சும்மா ஆடு மாடுன்னு இழுத்துக்கிட்டு...?"
"அதுகளோடவே பழகியாச்சு ஆத்தா... அதையும் வித்துப்புட்டா... உங்கள எல்லாம் வெளிய அனுப்பிட்டு இருக்க எங்களுக்கு அதுகதான் தொண... அதுகளையும் வித்துப்புட்டு குர்ரான்னு இருக்கச் சொல்லுறியாக்கும்..." என்றவர் மாப்பிள்ளை அமரும் வரை நின்று கொண்டே இருந்தார்.
"ஏய் காபி போட்டுக் கொடு... இருங்கப்பா.,.. ஒரு எட்டு டவுன்னுக்குப் போயி கறி எடுத்துக்கிட்டு வந்துடுறேன்..."
"அய்யோ... அதெல்லாம் வேணாம் மாமா... உங்க மகளுக்கு உங்க நெனப்பு வந்து ரெண்டு மூணு நாளா நச்சரிப்பு... அதான் கூட்டிக்கிட்டு வந்தேன்.. எனக்கொரு வேல இருக்கு... பொயிட்டு மத்தியானத்துக்கு மேல வாரேன்..." என்றபடி எழுந்தார் மாப்பிள்ளையும் பஞ்சாயத்துப் போர்டு பிரசிடெண்டுமான அழகப்பன்.
"எப்பவாச்சுந்தான் வாரீக... அப்பவும் கால்ல சுடுதண்ணிய ஊத்திக்கிட்டு வாரீக..."
"என்ன மாமா பண்றது... பிரசிடெண்ட் இல்லையா... இப்ப மழ பேஞ்ச பக்கமெல்லாம் போயி பாத்து பாதிப்பு இருந்தா நிவாரணம் கிடைக்க உதவணுமில்ல... அதான் பொண்டுகசட்டி பாண்டி வாரேன்னு சொன்னான். சாத்தமுத்திப் பக்கம் பொயிட்டு வரலாம்ன்னு பாத்தோம்.
"ஆமா... ஆமா... ஜெயிக்க வச்சவிகளுக்கு எதாவது செய்யணுமில்ல... எங்க பெரசண்டுந்தான் இன்னிக்கு வந்து பாத்துட்டு போனாரு... சரிப்பா... பொயிட்டு மத்தியானஞ் சாப்புட இங்க வந்துருங்க... வீட்லதான் கோழிக நிக்கில்ல.... வெடக்கோழியா அடிச்சி ரச வக்கச் சொல்லுறேன்..."
"ம்... சரி... வந்துடுறேன்.." என்றபடி கிளம்ப, "என்னத்தா புள்ளக போன் பேசுச்சுகளா?" என்று மகளிடம் கேட்டார்.
"ம்... பேசுனாக... பய இந்த வாரம் வருவான்..."
"அவன் வந்தாத்தான் இங்க வந்துருவானே... பொம்பளப்புள்ளயயும் ஆஸ்டல்ல போட்டு வச்சிருக்கீக... நீங்கள்லாம் வயசுக்கு வந்தப்புறம் வெளியவே விட்டதுல்ல..." காளியம்மாள் பேத்திக்காக வருத்தப்பட்டாள்.
"அம்மா... பழங்காலத்துல இருக்க முடியுமா? இப்ப எவ்வளவோ மாறிடுச்சி... படிக்கணுமின்னா பிரிஞ்சி இருக்கத்தான் வேணும்... ஆமா... அப்பா எங்கயோ கெளம்புனது மாதிரி இருந்துச்சு..."
"ஆமா... தபால்காரர் வரல... தம்பி பணம் அனுப்புறேன்னு சொன்னான்... அதான் பாத்துட்டு வரலாம்ன்னு கெளம்புனே... நீ வந்துட்டே... இனி என்னத்த போனே..." என்றபோது "வாக்கா... ரொம்ப நாளா ஆளக்க்கணோம்... ஆமா அத்தான் வந்ததும் வராததுமா ஓடிட்டாரு..." என்று கேட்டுக் கொண்டே சுந்தரிக்கு அருகில் வந்து அமர்ந்தான்.
(வேரும் விழுதுகளும் தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
ஸ்தலத்தில் இருந்து நேரில் காட்சியைப் போன்று படம் பிடித்ததது மாதிரி எழுத்து நடை .. அருமை. பாராட்டுக்கள்.!
பதிலளிநீக்குகதை நகர்வு நன்று
பதிலளிநீக்குபடிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்
வணக்கம் அண்ணே
பதிலளிநீக்குதங்கள் தூண்டுதலால் கலியுகம் வலைதளம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது ... மற்ற பகுதிகளையும் படித்துவிட்டு வருகிறேன்
அழகான எழுத்து நடையால் வசீகரிக்கின்றீர்கள்! தொடர்கின்றோம்!
பதிலளிநீக்குசுவாரஸ்யம் கூடுகிறது குமார்.தொடர்ந்து எழுதுங்கள் தொடர்ந்து படிக்கிறேன்
பதிலளிநீக்குகதைமாதிரி தெரியவில்லை. நேரே பார்ப்பது போல் உணர்கிறேன்.
பதிலளிநீக்குஉணர்வுபூர்வமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.