செவ்வாய், 22 ஜூலை, 2014

காதலும் கருவும்

'நாம் பேசாத நாட்கள் நீண்டு கொண்டே போகின்றன... பேசுவதற்கான சூழலை எப்போதும் நாம் நம்முடனே வைத்திருந்தோம்... இப்போது தொலைந்த நாட்களில் சூழலையும் தொலைத்துவிட்டோம். பேசாத இந்த நாட்களை கண்ணீர் களவாடிக் கொண்டது, தினமும் எழும்போது இன்றாவது பேச மாட்டாளா என்ற கனவோடு எழுகிறேன்... மீண்டும் படுக்கும் போது இன்றும் பேசவில்லையே என கண்ணீரோடு படுக்கிறேன்...' எழுதி முடித்து வாசித்துப் பார்த்தான் வாசன்.

"என்ன சார்... அடுத்த கதையை ஆரம்பிச்சிட்டீங்களா?" என்றபடி அவனருகில் வந்து அமர்ந்தாள் அவனின் அன்பு மனைவி வாசுகி.

"ம்... முதல் பாராவை இப்பத்தான் எழுதினேன்... இதுதான் அடுத்த தொடரோட ஆரம்பம்..." 

"எங்கே லேப்டாப்பைத் திருப்புங்க பார்ப்போம்... ஆரம்பம் அசத்தலா இருக்கா... இல்லையான்னு..."

"ஆமா... கதையே படிக்கமாட்டே... என்னோட கதையின்னா கொஞ்சம் வாசிப்பே.... அப்புறம் இதுக்கு மேல நம்மாள முடியாதுப்பா எம்புட்டுத்தான் படிக்கிறதுன்னு புத்தகத்தை தூக்கிப் போட்டுட்டு சீரியல் பாக்க உக்காந்துருவே... அதை மட்டும் ரெண்டு வருசத்துக்கு மேல தொடர்ந்து பாக்க முடியும்..."

"சரிப்பா... நோ டென்சன்பா... அதைத் தொடர்ந்தா பாக்குறோம்... ஒரு நாளைக்கு அரைமணி நேரம்தானே... இது ஒரு நாவல் முழுதும் தொடர்ந்து வாசித்தானே புரியும்... ஆனா சீரியல் அப்படியா இன்னைக்கு விட்டுட்டு ஒரு மாசம் கழிச்சிப் பார்த்தாலும் கதை புரியும்ப்பா... என்ன இன்னைக்கு புருஷனாவோ பொண்டாட்டியாவோ நடிக்கிறவங்க வேணா மாறியிருப்பாங்க... அதுக்காக என்னடா இவ புருஷனை மாத்திட்டான்னோ... இவன் பொண்டாட்டிய மாத்திட்டான்னோ நெனக்காம பார்க்கணும் அம்புட்டுத்தான்..."

"ம்... உங்கிட்ட பேசி ஜெயிக்கமுடியுமா?"

"எல்லாத்தையும் பேசி சமாளிச்சிடுறேன்... ஆனா ஒரு விஷயத்துல மட்டும் தோத்துடுறேனே..." என்றபடி அவனைக் குறும்பாகப் பார்த்தாள்.

"நீ தோத்தியா? எதுல...?"

"ம்... அது எதுக்கு இப்போ... புரியலையா... இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்களா?  பெரிய கதையாசிரியராம்... தள்ளுங்க... நான் படிச்சிப் பார்க்கிறேன்..."

"வா... வந்து மடியில உக்காந்து படி..."

"ம்... மாடியில பெத்த ரெண்டும் வெளாடுதுங்க...  மாடியில உக்காரணுமாக்கும்... ஞாபகம் இருக்கட்டும்..."

"அதுகளோட சேர்ந்து விளையாட..." என்றபடி அவளை இழுத்து அணைத்தான்.

"என்ன எழுத்தாளருக்கு மூடு எங்கிட்டோ போகுது... ஆளை விடுங்க சாமி உங்க கதை படிக்கப் போயி என்னோட கதை கந்தலாயிடும் போல..." என அவனிடம் இருந்து விலகினாள்.

"ஓகே... ஒண்ணும் பண்ணலை... இந்தா படி..." என்று சேரில் இருந்து எழுந்து கொண்டான்.

அவள் அமர்ந்து அந்த நாலு வரியைப் படிப்பதற்குள் பின்புறம் நின்றபடி அவள் கழுத்தில் கைகளால் எழுதினான்.

"படிக்கிறதுக்குள்ளே வேற பாடம் படிக்கிற மாதிரி ஆயிடும் போல... சும்மா இருங்க..." என்றபடி வாய்விட்டு வாசித்தவள் அவனை ஏறிட்டுப் பார்த்து கண் கலங்க "ஏம்ப்பா... உங்ககூட நான் எப்பவாச்சும் சண்டை போட்டிருக்கேனா..?" கேட்கும் போதே கண்ணீர் வந்தது.

"ஏய் அசடு... இது கதைடா... நீ எப்போ எங்கிட்ட சண்டை போட்டிருக்கே... நம்ம ரெண்டு பேருக்கும் நாமதானே உலகம்... இது கற்பனைதான்டா..." என்று அவளை அணைத்துக் கொண்டு கண்ணீரைத் துடைத்தான்.

"என்ன குட்டிம்மா... ஏன் இப்படி..."

"கதை எழுதுறதுன்னா அதுக்கு எதாவது ஒரு துளி காரணம் கிடைக்கனும்ன்னு சொல்வாங்க... நம்ம மனசுல ஓடுறதுதான் கதையா வரும்ன்னு எனக்குத் தெரியும்... அப்போ கொஞ்ச நாளா நான் உங்ககிட்ட இருந்து விலகிப் போறேனா...? சொல்லுப்பா..."

"ஏய் அதெல்லாம் இல்லை... இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமான யோசனையா இது வந்துச்சு... சரி இதை வச்சி அவங்களோட வாழ்க்கை, எதனால சண்டை, எப்படிச் சேர்ந்தாங்க... அந்த பழைய அன்பும் பாசமும் நீடிச்சிச்சா அப்படின்னு இருபத்தஞ்சு இருபத்தாறு பகுதியா எழுதலாம்ன்னு ஆரம்பிச்சேன். அம்புட்டுத்தான்... இங்க பாரு நீ எம்மேல ஒவ்வொரு நாளும் பாசம் அதிகமாத்தான் காட்டுறே... உனக்கு நான் எனக்கு நீயின்னு இருக்கோம்... இது கற்பனைடா... இந்தக் கதை ஆரம்பம்தான்... இப்படி ஆரம்பிக்கும் கதை.... ஒரு கணவன் மனைவியோட மிகச் சிறந்த அன்பை விவரித்து ஒரு சின்ன பிரச்சினையால அவங்களுக்குள்ள விரிசல் வந்து அப்புறம் எப்படி இணையிறாங்கன்னுதான்  கதை விரியுது... என்ன இப்ப ஓகேதானேம்மா...?"

"ம்... இது கற்பனையா இருந்தாலும் எனக்கொன்னமோ நமக்குள்ள இப்படி ஒரு பிரிவு வந்துருமோன்னு பயமா இருக்கு.... என்னோட பயமெல்லாம் ஒரு சில நேரத்துல அப்படியே நடக்கும்ன்னு சொல்லுவீங்கதானே... இது வேணாம்ப்பா... வேற கதை எழுதுங்க..."

"என்னடா இது... இதுவரை எத்தனை கதை எழுதியிருக்கோம்... அப்புறம் என்ன... ஒரு சின்னக் கருவை வச்சி விவரிக்கப் போறோம்... அம்புட்டுத்தான்... இந்தக் கரு எனக்கு நல்லாயிருப்பதாச் தோணிச்சு... அதான் ஆரம்பிச்சேன்... இது உன்னை இம்புட்டுத்தூரம் பாதிச்சிருச்சா...  நீ ரொம்ப  இன்னோசென்டா இருக்கேடா... இது ஜஸ்ட் ஒரு ஸ்டோரிடா..."

"நான் நமக்குள்ள பிரிவு வந்துருமோன்னு பயப்படுறேன்... நீங்க கதை... கரு முக்கியங்கிறே... அதையே கட்டிக்கிட்டு அழுங்க..." என்று கோபமாக எழுந்து செல்ல அவளை என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் எழுதிய வரிகளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு எங்கே இங்கே விழுந்த சின்ன விதை பெரிதாகி நாளைக் காலை எழும்போது அவள் பேசுவாளா மாட்டாளா என ஏங்க வைத்துவிடுமோ என்று நினைத்தபடி திரையில் இருந்த எழுத்துக்களை அழிக்க ஆரம்பித்தான்.
-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:


  1. ஒவ்வொரு க(வி)தையும், கருவாகி...உருவாகுவது நடைமுறை வாழ்வில் இருந்துதான் தொடங்குகிறது... நண்பரே அவனது மனைவி கோபப்பட்டாலும் அதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது..
    மனதை தொட்டது வாழ்த்துக்கள் நண்பா...

    பதிலளிநீக்கு
  2. தொடருங்கள் கருவைத்தொடரகா!

    பதிலளிநீக்கு
  3. எழுத்தில் கூட பிரிவில் விருப்பம் இல்லை...!

    பதிலளிநீக்கு
  4. சிறந்த படைப்பு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. இப்படி பெண்டாட்டிப் பேச்சைக் கேட்டுகிட்டு இருந்தா ,கதை கந்தல்தான் !
    த ம 4

    பதிலளிநீக்கு
  6. இன்னைக்கு விட்டுட்டு ஒரு மாசம் கழிச்சிப் பார்த்தாலும் கதை புரியும்ப்பா... என்ன இன்னைக்கு புருஷனாவோ பொண்டாட்டியாவோ நடிக்கிறவங்க வேணா மாறியிருப்பாங்க... அதுக்காக என்னடா இவ புருஷனை மாத்திட்டான்னோ... இவன் பொண்டாட்டிய மாத்திட்டான்னோ நெனக்காம பார்க்கணும் அம்புட்டுத்தான்..."//

    வாசுகி சொல்வது உண்மை.
    வாசுகியின் எணணத்திற்கு மதிப்பு.
    வாழ்த்துக்கள்.
    கதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. நியாயம் தான்!..
    எதிர்மறையான எண்ணங்களில் இருந்தும் விபரீதம் தோன்றும்..

    பதிலளிநீக்கு
  8. அருமை ஐயா ! தொடருங்கள் ! மிகவும் நன்றாக இருக்கிறது !

    பதிலளிநீக்கு
  9. சில சமயம் எழுத்துக்கள் மெய்யாவதும் உண்டு! மனைவியின் கோபம் நியாயம்தான்!

    பதிலளிநீக்கு
  10. படிக்கிற நமக்கே,அப்புடி ஒரு பீல் வர்றத தடுக்க முடியல!அருமையான கற்பனை,நன்று!!!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    அண்ணா.
    நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி