நோன்பு துவங்கியதில் இருந்து காலையில் அலுவலக நேரம் மாறியிருப்பதால் ஐந்து மணிக்கு அலறி அடித்து எழுந்து குளிக்க ஓடும் நிலமை இல்லாமல் இந்த பதினைந்து நாள் கழிந்து விட்டது. இன்னும் பதினைந்து நாளைக்கு இந்தச் சுகம். மீண்டும் காலை ஐந்து மணிக்கு கிளம்ப வேண்டும். சரி விஷயத்துக்கு வருவோம். இந்த நாட்களில் சில படங்களைப் பார்த்தேன்... இருங்க ஓடிடாதீங்க நாஞ்சில் மனோ அண்ணன் மாதிரி பழைய படமா தேடிப்பிடித்துப் பார்க்கலை... சில மலையாளப் படங்கள்... சில தமிழ்ப்படங்கள்... முதலில் தமிழ்ப்படங்களை கவர்ந்த வரிசையில் பார்க்கலாம்.
முண்டாசுப்பட்டி : போட்டோ எடுத்தால் செத்துப் போவோம் என்ற மூடநம்பிக்கை கொண்ட கிராமத்துக்குள் செத்தவரை போட்டோ எடுக்கப் போகும் நாயகன் அங்கு காதலில் விழுந்து தான் செய்யும் ஒரு காரியத்தால் அங்கு அடிமையாக வேலை பார்த்து காதலையும் தொடர்கிறார். படம் முழுவதும் நகைச்சுவை... நகைச்சுவை... நகைச்சுவை... எனவெ லாஜிக் எல்லாம் பாக்காமல் கதையோடு பயணிக்க முடிகிறது. முனீஸ்காந்த்... சான்ஸே இல்லை.... மனுசன் சிரிக்க வைத்தே கொல்கிறார்... கதையையோ... சதையையோ எதிர்பார்க்காமல் சிரித்து வரவேண்டும் என்றால் முண்டாசுப்பாட்டிக்கு தயங்காமல் ஒரு விசிட் அடிக்கலாம்.
உன் சமையல் அறையில் : என்னைப் பொறுத்தவரை பிரகாஷ்ராஜ் படங்கள் என்றால் பார்த்து விடுவது வழக்கம். ஒரு சிறிய கதையை எடுத்துக் கொண்டு அதை தொய்வில்லாமல் கொண்டு போவதில் அவர் கில்லாடி. சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாயகன், தவறாக சாப்பாடு ஆர்டர் கொடுக்க போன் செய்த பெண்ணிடம் போனில் பேசி பழகி நேரில் சந்திக்கும் நாள் வரும்போது தன்னைப் பற்றி என்ன நினைப்பாரோ என இருவரும் தங்களுக்கு மாற்றாக ஒருவரை அனுப்ப, அதன் பின்னான நிகழ்வுகளை அழகாகச் சொல்லியிருக்கிறார். சிநேகா நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் முகத்தில் எப்பவும் இருக்கும் சிரிப்பில் கொஞ்சம் கம்மிதான். ஊர்வசி நன்றாக நடித்திருக்கிறார்... இளங்காதலர்கள் இருவரும் சொன்னதைச் செய்திருக்கிறார்கள். தம்பி ராமையா சிரிப்பு வெடி வெடிக்கிறார்.
சைவம் : எங்கள் ஊர்ப்பக்கம் எடுத்திருக்கிறார்கள். ஒரு சேவலையும் குழந்தையையும் வைத்து நகர்கிறது கதை. இடையில் அத்தை பெண்ணை விரட்டி விரட்டி லவ் பண்ணும் பையன், வீட்டுப் பெரியவரான தாத்தா, வேலைக்காரன், அவனது மனைவி மற்றும் திருவிழாவுக்கு வரும் ஒட்டு மொத்தக் குடும்பம் என கதை ஒரு வீட்டுக்குள் நகர்கிறது. ஒரு ஏரியா பேச்சு வழக்கை எடுக்கும் போது சின்னச் சின்ன வார்த்தைகளையும் கவனிக்க வேண்டும் என்பது இயக்குநருக்கு தெரியவில்லையோ என்னவோ... நிறைய வார்த்தைகள் சிவகங்கை மாவட்ட வழக்கில் இல்லாதது... வெடக்கோழி என்பது முட்டையிடும் பருவத்தில் உள்ள கோழி, வெடக்கோழி ரசம் உடம்பு வலியைப் போக்கும்... இந்தப்படத்தில் சேவலை விடக்கோழி என்று சொல்லும் போது சிரிப்புத்தான் வந்தது. இயக்குநர் விஜய் கொடுத்த படத்தில் இது சொந்தக் சரக்கு என்பதால் கதையின் போக்கு பிடித்திருந்தது.
மேலும் அமரா, அன்றும் இன்றும், கல்பனா ஹவுஸ் என சில படங்களையும் பார்த்தேன். சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எங்கள் அறை நண்பர் அமரா பாக்கும் போது இதென்ன படம் என்றார். அமரா என்றதும் அப்படி ஒரு படம் வந்திருக்கா.. நீ எப்படிய்யா இப்படி எல்லாம் படம் பாக்குறே என்று கேட்டார். இப்படிப்பட்ட படங்களில்தான் எப்படி இந்தப் படத்தை எடுத்தார்கள் என்று ஆராய்ந்து பார்க்க முடியும் என்று சிரிக்கவும்... உனக்கு ரொம்ப பொறுமைதான் என்று சொல்லி பேர் தெரியாத படமெல்லாம் பார்க்க இங்க நீ இருக்கேன்னு அந்த டைரக்டருக்கு தெரியும் போல என்று சொல்லி இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டார்.
தமிழ்ப்படங்கள் தவிர சில மலையாளப் படங்கள் பார்த்தேன். இந்த மலையாள இயக்குநர்களுக்கு எப்படித்தான் இப்படியான கதைகள் கிடைக்கின்றனவோ... எல்லாமே அருமையான படங்கள்... அதில் சில கவர்ந்த வரிசையில்...
த்ரிஷ்யம் : மோகன்லால் நடிப்பில் கலக்கலான ஒரு கிரைம் படம். மகளை செல்போனில் போட்டோ எடுத்து மிரட்டியவனை மகளும் மனைவியும் கொன்று புதைக்க அவர்களைக் காப்பாற்ற மோகன்லால் எடுக்கும் நடவடிக்கைகள்... அதற்கு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் கொடுக்கும் ஒத்துழைப்பு என படம் அமர்க்களமாய் நகரும். இங்கு கூட ஒரு ஒரு காட்சியாக ஓட்டி 100 நாட்கள் ஓட்டினார்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
1983 : கிரிக்கெட்டில் பெரியாளாக வரவேண்டும் என்ற தனது கனவுக்காக படிப்பு கெட்டு காதல் விட்டு அதை அடைய முடியாமல் குடும்ப வாழ்க்கைக்குள் செல்பவன் தன் மகனை கிரிக்கெட்டில் பெரிய ஆளாக்க போராடும் கதை. கிரிக்கெட்தான் களம் என்றாலும் ஒரு அருமையான படத்தைப் பார்த்த திருப்தி கிடைக்கும்.
லா பாயிண்ட் : குஞ்சக்கோபோவன், நமீதா ப்ரமோத் நடித்த படம். காதலித்தவன் ஏமாற்றியதால் தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்பட்ட பெண்ணின் தந்தை கோர்ட்டில் வழக்கு தொடர்வதும் அந்த வழக்கை முடித்துக் கொள்ள பையனின் தந்தை பணம் கொடுப்பதற்காக வக்கீலான நாயகனிடம் வருகிறார். அதன் பின் நகரும் கதை ஒரு நீண்ட தூரப் பயணமாக நாயகனும் நாயகியும் செல்வதில் இருந்து நம்மையும் அழைத்துச் செல்கிறது.
லைப் : நம்ம ஊரு கலாபக்காதலன் படத்தை கொஞ்சம் உல்டாவாக்கி இருக்கிறார்களோ எனத் தோன்றும் கதை. தனது அலுவலகத்தில் வேலை செய்பவருக்கு உடம்பு முடியாத ஒரு சூழலில் அவர்களின் இளவயதுப் பெண்ணை தன் வீட்டில் கொண்டு வைத்து வைத்துக் கொள்கிறார்கள் முதலாளியும் அவரது மனைவியும்.. இந்த நட்பு தொடர, எதேச்சையான தொடல்கள் எல்லாம் பருவ வயதுப் பெண்ணுக்குள் மாற்றத்தைக் கொண்டு வர, தன்னை மகளாகப் பாவிக்கும் நாயகியின் கணவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். நாயகியின் கணவனும் அவள் பின்னே சுற்ற கடைசியில் என்ன ஆகிறது என்பதை அழகான திரைக்கதையில் நகர்த்தியிருக்கிறார்கள். நாயகி சாவித்திரியாக புதுமுகம் ஸ்டெப்பிகிரேஸ் என்பவர் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.
திரா : ஷோபனாவின் நடிப்பில் வந்து வெற்றி பெற்ற படம், பருவப் பெண்களைக் கடத்தும் கும்பல் டாக்டரான ஷோபனாவின் ஆதரவில் இருக்கும் பெண்களைக் கடத்த அவர்களைத் தேடி அலையும் போது தங்கையை அதே கும்பலிடம் தொலைத்தவனும் இணைய இருவருமாக எப்படி அவர்களை மீட்கிறார்கள் என்பதுதான் கதை.
டைமண்ட் நெக்லஸ் : இந்த பகத்பாசிலுக்கு எப்படித்தான் எல்லாக் கதாபாத்திரமும் பொருந்துகிறதோ தெரியவில்லை... துபாயில் டாக்டராக பணிபுரியும் பகத், தனது தாந்தோன்றித்தனமான பகட்டான வாழ்க்கைக்காக கிரெடிட் கார்டில் லோன் வாங்கி அதனால் படும் கஷ்டங்கள், இடையில் தமிழ் பெண்ணுடன் காதல், ஊரில் பணக்காரப் பெண்ணுடன் திருமணம், கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்ணுடனான உறவு, அந்தப் பெண்ணிடம் திருடும் வைர நெக்லஸ் அதன் பின்னான நிகழ்வுகள் என மனிதர் கலந்து கட்டி ஆடியிருக்கிறார். படமும் போரடிக்காமல் போகிறது.
படங்கள் ஒரு பக்கம் இருக்க பார்க்க வேண்டும் என்று நினைத்த சில உறவுகளில் இருவருடன் பேசவாவது செய்தேன் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு சாதனைதான் போங்க... ஒருவர் குடந்தை சரவணன் அண்ணா, இரண்டு மூன்று முறை பேசியாச்சு... மிகவும் பாசமான பேச்சு. மற்றொருவர் திண்டுக்கல் தனபாலன் சார்... நேற்று பேசினேன்... ஊருக்கு வந்தும் சந்திக்கவில்லையே என்ற ஆதங்கத்தோடு ஆரம்பித்தார். பதிவுலகம், மதுரை பதிவர் சந்திப்பு என பதிவுலகம் பற்றியே பேசினார். உண்மையில் நீண்ட நாள் பழகியது போல் ஒரு அருமையான... அன்பான பேச்சு.... என்னுடன் பேசிய இருவருக்கும் மனசு நிறைந்த நன்றி.... இந்த உறவு இனித் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.
குமார், இவ்வளவு படங்கள் பார்த்தீங்களா? சூப்பர் விமர்சனங்கள்.
பதிலளிநீக்குதிரைப்படத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விடும்படியான கை வண்ணம்!.. வாழ்க நலம்..
பதிலளிநீக்குத்ரிஷ்யம் இன்னும் பார்க்கவில்லை. பெயர் தெரியாத படங்கள் பார்பதற்கு உங்களுக்கு ரொம்ப தான் பொறுமை குமார்
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
லைப் படக்கதை நம்ம ஊர் 'நூல்வேலி' கதை போல இல்லை? அந்த நூல்வேலியே அப்போதைய ஏதோ மலையாளப் படத்தின் காபிதான் என்றும் நினைவு!
பதிலளிநீக்குவித்தியாசமான சிந்தனைகள் கொண்ட படங்கள் என்றால் மலையாளாம் தானோ...?
பதிலளிநீக்குஅடுத்தமுறை கண்டிப்பாக சந்திப்போம்... நன்றி...
சினிமா படம் விமர்சனம் அருமை.
பதிலளிநீக்குபதிவுலக நண்பர்களுடன் அன்பான உரையாடல் எல்லாம் மனசுக்கு இதம் அளித்து இருக்கும்.
படங்களைப் பார்த்து,ரசித்து(சிரித்து)எங்களுக்கும் எது,எது பார்க்கக் கூடிய படம் என்று விமர்சனம் செய்தமைக்கு நன்றி!(மு.ப.&உ.ச.அ.பாத்தாச்சு.)
பதிலளிநீக்குநிறைய படங்கள்! நிறைவான படங்களை பார்த்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
பதிலளிநீக்குவெளி நாட்டு வேலையால் எப்படிப்பட்ட படங்களையும் பார்க்க முடிகிறது ,இல்லையென்றால் முடியாதுதானே குமார் ஜி ?
பதிலளிநீக்குத ம 4
ரசனையாக பொழுது கழிந்திருக்கிறது அண்ணா! நானும் கூட இது போன்ற விளக்கம் அளித்து டப்பா படங்கள் பார்ப்பதுண்டு:))) தம ஐந்து!
பதிலளிநீக்குஎப்படி இவ்வளவு படங்களைத் தங்களால் பார்க்க இயலுகிறது
பதிலளிநீக்குநன்றி நண்பரே
tha ma +1
பதிலளிநீக்கு