ஞாயிறு, 29 ஜூன், 2014

கிராமத்து நினைவுகள் : திருவிழா நிகழ்வுகள்

சொந்த பந்தங்களுடன் சேர்ந்து விழாக்கள் கொண்டாடுவது என்றாலே அனைவருக்கும் சந்தோஷமான நிகழ்வாகத்தான் இருக்கும். எப்பவுமே ஊரில் திருவிழா என்றால் எல்லாரும் ஒரிடத்தில் கூடுவது என்பதால் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும். எங்கள் ஊரில் 2011ம் ஆண்டு செவ்வாய்க்குப் பிறகு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்ததால் இரண்டு வருடங்களாக திருவிழாக் கொண்டாடவில்லை. 
(எங்கள் ஊர் அம்மன் ஆலயம் - கும்பாபிஷேகத்தின் முன்பு எடுத்தது)

கோயில் கட்டிய பிறகு நடந்த முதல் செவ்வாய் திருவிழா என்பதாலும் இதுவரை கோயில் கணக்கு வழக்குகளைப் பார்த்த சித்தப்பாவிடம் இருந்து கணக்கு இன்னொருவர் கைக்கு வந்த முதல் வருட திருவிழா என்பதாலும் சிறப்பாக நடத்த வேண்டும் என்று புதிய கணக்காளர் நிறைய திட்டங்களைத் தீட்டினார்.

வைகாசி மாதம் ஒன்றாம் தேதி அன்று கோயில் கரகம் எடுப்பதற்கும் மற்ற வேலைகளுக்கும் சீட்டுப் போட்டோம். அப்போது கோயில் உண்டியலில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டும் என்று புதிய கணக்காளர் சொல்ல, உண்டியல் சாவி அப்பாவிடம் இருந்தது அப்பாவோ மதுரையில் இருந்தார். அப்படியும் அவரிடம் கேட்டு சாவியைக் கொண்டு வந்து கொடுத்தேன். ஆனால் அவர்களால் திறக்க முடியவில்லை. அப்போது சித்தப்பா, உண்டியல் இருக்கட்டும்ப்பா... அண்ணன் நாளைக்கு வந்திரும்... எப்பவும் அண்ணனும் இளையர்வீட்டு அம்மானும் உண்டியலைத் திறந்து எண்ணி அழகா கணக்க கொண்டாந்து கொடுத்துடுவாங்க... அதை விட்டுட்டு மற்ற வேலையைப் பாருங்கப்பா என்றதும் புதிய கணக்காளர் எல்லாருக்கும் முன்னாடித்தான் திறக்கணும் என்று சொன்னார். உடனே நான் இப்ப திறக்கலையில்ல... நாளைக்கு அப்பா வந்ததும் சாவியை கொண்டாந்து தரச் சொல்றேன். நீங்களே வச்சிக்கிட்டு எல்லாருக்கும் முன்னாடி திறங்க என்று சொல்லிவிட்டேன். அதன்படி மறுநாள் வந்த அப்பா சாவியைக் கொண்டு போய் கொடுத்துவிட கணக்காளரின் கண்ணுக்கு நான் வில்லனானேன்.

(சாமிக்கரகம் எடுத்த மச்சான்)

சாமிக் கரகம் எனது மச்சான் (அப்பாவின் தங்கை மகன்) சக்திக்கு விழுந்தது. காப்புக்கட்டி தினம் கரகம் எடுத்தல், முளக்கொட்டு, சுண்டல் பாணக்கம் விநியோகம் என சந்தோஷமாய் மூன்று நாட்கள் கழிய, வெள்ளிக்கிழமை மாலை விளக்குப் பூஜை வைத்திருந்தோம். எப்பவும் விளக்குப் பூஜைக்கு போடப்படும் கொட்டகை காற்றடித்தாலும் விளக்குகள் அணையாத வண்ணம் அமைக்கப்படும். இந்த முறை புதிய கணக்காளரும் அவரின் உதவியாளர்களும் கொட்டகைக்காரனை மாற்றுகிறோம் என்று எவனோ ஒருவனைக் கொண்டுவர கொட்டகை சிரித்தது... காற்றில் விளக்குகள் அணைய சுற்றி பழைய பேனர்களையும் துணிகளையும் கட்டி விளக்குப் பூஜையை முடித்தோம்.  புதிதாக வந்த ஐயர் மிகவும் சிறப்பாக பூஜையை நடத்திக் கொடுத்தார்.

திங்கள் இரவு கரகம், முளக்கொட்டு எதுவும் இல்லாததால் சாமி கும்பிட்டதும் மறுநாள் பால்குடம் எடுப்பவர்களுக்கு காப்புக் கட்டி முடிந்ததுன் வாழைமரங்கள், தோரணங்கள் எல்லாம் கட்டுவது வழக்கம். அப்போது சுரேஷ் மாமா காபி என்று ஒன்று போட்டுக் கொடுப்பார். அதையும் குடித்து விட்டு இரவு இரண்டு மணி வரை முத்துப்பாண்டியின் நகைச்சுவை நக்கல்களை ரசித்தபடி, குழாய் ரேடியோவில் குறைந்த சப்தத்தில் வைத்த பாடல்களைக் கேட்டுக் கொண்டே தோரணங்களை கட்டி முடித்தோம். 

(துண்டு போர்த்தச் சென்று குறத்தியிடம் மாட்டிய சுரேஷ் மாமா)

செவ்வாயன்று காலையில் பால்குடம் சிறப்பாக நடந்து முடிந்தது. இம்முறை முதன் முதலில் விஸ்வண்ணன் மகன் வேல் போட்டு வந்தான். இனி அடுத்த முறை வேல் போடுவோர் எண்ணிக்கை கூடினாலும் கூடலாம். பின்னர் ஆடு வெட்டுதல், சமையல் வேலைகள் என நானும் தம்பியும் பிஸியாகிவிட்டோம். சமையலுக்கு இப்போதெல்லாம் விறகு அடுப்பு பயன்படுத்துவதில்லை என்பதால் கேஸ் அடுப்பு வாடகைக்கு எடுத்தோம். அது தொடர்பாக தனிப்பதிவே போடலாம். அப்புறம் பேசுவோம். 

திருவிழாவிற்கு சொந்த பந்தங்கள் வர ஊரே ஜே.. ஜே... என்றிருந்தது. இரவு வாணவேடிக்கை, கரகம் எடுத்தல் என ஆட்ட பாட்டமாக நகர்ந்தது. கரகாட்டக் குழுவினர் வந்திறங்கினர். வந்ததும் அவர்கள் அலங்காரம் செய்வதற்கென போட்டிருந்த கொட்டகை எங்களுக்கு வேண்டாம் மொட்டை மாடியில்தான் அலங்காரம் செய்வோம் என்று சொல்ல இளங்கோ மச்சான் என்னைக் கூப்பிட்டு மாடிதான் வேணுமாம் என்று சொல்ல ஓட்டுவீட்டு மாமாவிடம் அனுமதி பெற்று அவரது வீட்டு மாடிக்குப் போகச் சொன்னோம். அப்பவே அந்தப்புள்ள (அதாங்க குறத்தி... அப்படிச் சொல்லக்கூடாதாம்... நோட்டீஸில் கூட ராணி என்றுதான் போடச் சொன்னார்கள்) பார்வையே சரியில்லை.

(பால் குடத்துக்கு காப்புக் கட்டிக் கொள்ளும் இளங்கோ மச்சானும் மாப்பிள்ளையும்)

கரகாட்டம் ஆரம்பிக்க வேண்டும் மேளக்காரரில் ஒருவர் அடித்த தண்ணியில் எழுந்திருக்க முடியவில்லை... அவரை ஒரு வழியாக கிளப்பி, ஆட்டத்தை ஆரம்பித்தார்கள். அப்புறம் என்ன நம்ம பயலுக எல்லாரும் குறத்தியிடம் சிக்கி சின்னாபின்னம் மாயிட்டானுங்க... பெரிசுக சிலதும் மாட்டி தலையில துண்டைப் போட்டுக்கிட்டு வீட்டுக்கு ஓடிருச்சுகளாம்... மறுநாள் கதைகதையா சொன்னார்கள். இளங்கோ மச்சான் காபி போட்டு கொடுத்துக் கொண்டு திரிய  எப்பவும் சீக்கிரம் தூங்குற தங்கச்சிதான் எங்க நம்மாளு கரகாட்டக் குரூப்போட போயிடுவாரோன்னு கொட்டக் கொட்ட முழிச்சிருந்ததாம். மறுநாள் அண்ணே... இவுகதான் முன்னாடி திரிஞ்சாகன்னு சொல்லிச் சொல்லி சிரித்தது.

மறுநாள் காலை கருப்பர் கோயிலில் சாமி கும்பிட்டு வந்து கரகம் எடுத்துக் கொண்டு போய் கண்மாயில் இறக்கிவிட்டு கரகம் எடுத்த மச்சானை ஊர் வழக்கப்படி கொண்டு போய்விட்டு அவர்கள் கொடுத்த மேங்கோ ஜூஸை ஒரு டம்ளருக்கு  இரண்டு டம்ளர் பருகி, பின்னர் கோவில் வந்து ரேடியோ, பூ அலங்காரம், கொட்டகை, வேளார் என பட்டுவாடா முடித்து சாமியின் கரகத்தில் பயணித்த வெள்ளி வேல், அம்மனின் காப்புக்கட்டு மஞ்சள் என சில பொருட்களை ஏலம் விட்டு, வேலுக்காக இந்த முறை நாங்கள் 40000 வரை கேட்டுப் பார்த்தோம். ஓட்டு வீட்டு மாமா 52001க்கு எடுக்க போட்டி எதற்கு அடுத்த வருடம் எடுக்கலாம் என்று நினைத்து விட்டுவிட்டோம்.

(இரவு வீடு வீடாக சென்று கரகம் தூக்கி வரும் போது - வெள்ளை வேஷ்டி சட்டையில் அடியேன்)

பின்னர் காழாஞ்சி பிரித்து எல்லாருக்கும் கொடுத்து வீடு வந்து சேரும் போது (நம்ம வீடு கோயிலுக்கு மிக அருகில்) இரண்டு மணிக்கு மேலாகிவிட்டது. கொஞ்சம் பூசலும்... நீயா நானாவுமாக இருந்தாலும் சின்னச் சின்ன தகறாருகள் வந்து மறைந்தாலும் திருவிழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. திருவிழா முடிந்த எட்டாம் நாள் விடையாற்றி சிறப்பாக கும்பிட்டு முடிக்கப்பட்டது.  இதுவரை கோயில் பணத்தை வங்கியில் போட்டு வந்தார்கள். இந்த முறை வட்டிக்கு கொடுக்க வேண்டும் என புதிய கணக்காளரும் இன்னும் சிலரும் விருப்பப்பட ஒருசிலர் எதிர்ப்பாளராக மாற வேண்டிய நிலை. அப்படியிருந்தும் எதிர்ப்பாளர்கள் இல்லாமல் கூட்டம் போட அது அடிதடி வரைக்கும் போய் அம்மனின் எண்ணப்படி பணம் பங்கு பிரிக்க முடியாமல் போய்விட்டதாம். 

இந்தக் குளறுபடிகள் எல்லாம் இல்லாது அடுத்த வருடம் அம்மனின் திருவிழா இன்னும் சிறப்பாக நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. 

-கிராமத்து நினைவுகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

13 கருத்துகள்:

  1. நினைவுகள் என்றுமே சுகமானவை.

    பதிலளிநீக்கு
  2. நிஜமாகவே ஒரு திருவிழாவில் நானும் கலந்து கொண்ட உணர்வு குமார்.

    பதிலளிநீக்கு
  3. இன்னும் சிறப்பாக நடக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  4. அழகான பகிர்வு,குமார்!///கருப்பா(வெயில்?) இருந்தாலும்,களையா+தெனாவெட்டா நடந்து வரீங்க,ஹ!ஹ!!ஹா!!!

    பதிலளிநீக்கு
  5. திருவிழாவைக் கண்முன் நிறுத்திய அருமையான படங்கள்..பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  6. திருவிழாவில் நானும் கலந்து கொண்ட உணர்வு....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க ஜெயக்குமார் ஐயா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    தமிழ்மணத்தில் வாக்களித்தமைக்கு மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாங்க கணேஷ் அண்ணா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    வாங்க தனபாலன் சார்...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  9. வாங்க யோகராஜா அண்ணா...
    இங்க இருந்து போனதில் இருந்து வெயில் எல்லாம் நம்ம மேலதான்... அப்புறம் கருப்பா என்ன அட்டக் கருப்பா ஆக வேண்டியதுதான்...

    எங்க ஆபீஸ் பி.ஆர்.ஓ. ஏன்டா இப்படி வந்திருக்கே... அடுப்புல உக்காந்தியான்னு கேட்டார்...

    தெனாவெட்டு கூடவே பிறந்ததாச்சே... சிவகங்கை மண்ணுல்ல...

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  10. வாங்க இராஜராஜேஸ்வரி அம்மா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    வாங்க வெங்கட் அண்ணா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  11. விரலிலே என்ன வைர மோதிரமா ,டாலடிக்குதே குமார் ?
    த ம 6

    பதிலளிநீக்கு
  12. வாங்க பகவான்ஜி...

    ஹா.... ஹா... வைரமா... அப்படின்னா?

    இது சாதாரண வெள்ளைக் கல் வைத்த மோதிரம்... மனைவியின் பரிசு...

    இன்னும் வைரம் வாங்கும் அளவுக்கு வசதி வரலையே அண்ணா...

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி