திங்கள், 23 ஜூன், 2014

இளமை எழுதும் கவிதை நீ... - வாசிப்பாளனின் பார்வை


து விமர்சனப் பதிவு அல்ல... ஒரு நாவலை விமர்சிக்கும் அளவுக்கு நமக்கு தகுதியெல்லாம் இல்லை... நான் நாவல் எழுத்தாளனும் அல்ல... மனதில்பட்டதை எழுத்தில் கொண்டு வரும் சாதாரணமானவன். நாவல் பற்றி மனதில் பட்டதை ஒரு பார்வையாகப் பார்க்கலாமே தவிர இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

குடந்தை ஆர்.வீ. சரவணன் அவர்களின் முதல் நாவல் இது. இந்தக் கதையை அவர் தனது குடந்தையூர் வலைத்தளத்தில் தொடராக எழுதிய போதே படித்திருக்கிறேன் என்றாலும் புத்தகமாகப் படிப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தானே செய்கிறது. சரவணன் அண்ணன் மிகச் சிறந்த எழுத்தாளர் என்பது அவரது தளத்தை வாசிப்பவர்களுக்குத் தெரியும். தற்போது அவர் முகப்புத்தகத்தில் அதிகம் நிலைத்தகவல்கள் பகிர்ந்து வருவதால் வலையில் எழுதுவதைக் குறைத்திருக்கிறார். அடுத்த நாவல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் அடுத்த மாதம் தொடராக வலையில் பதிவிட இருப்பதாகவும் சொன்னார். எனவே மீண்டும் குடந்தையூர் வலைத்தளம் நாவலுடன் பரபரப்பாக ஆரம்பமாகும் என்பதுடன் அடுத்த நாவலைப் படிக்கு ஆர்வமுடன் முதல் நாவல் குறித்துப் பார்ப்போம்.

கதைக் களமானது கல்லூரியும் கல்லூரிக் காதலும்தான்... கதையோட்டம் ஒரு சினிமாவைப் பார்ப்பது போன்று இருப்பது நாவலின் சிறப்பு. சில இடங்களில் நாயகனின் செயல் சினிமாத்தனமாக இருப்பது தவிர்க்க முடியாதது என்பதை நாவலை முழுவதும் படித்து முடிக்கும் போது நாமும் ஏற்றுக் கொள்வோம். ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் ஒரு கவிதை என புதுமையாய் ஆரம்பித்திருக்கிறார்.

பெரும்பாலும் தற்போதைய தமிழ் சினிமாக்களில் ரவுடியான நாயகனை நாயகிகள் விழுந்து விழுந்து காதலிப்பதைப் பார்த்திருக்கிறோம். இதில் கொஞ்சம் மாறுதலாக ரவுடியான நாயகன் நாயகியைப் பார்த்து மயங்கி, பின்னர் திருந்தி அவள் இதயத்தில் எப்படி இடம் பிடிக்கிறான். அதற்காக நாயகி என்ன செய்கிறார் என்பதை அவரது நடையில் அழகாக எழுதியிருக்கிறார். நாயகி நாயகனை விரும்புவதை எங்கும் காட்டாமல் கடைசியில் சொல்லியிருப்பது கதைக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

கல்லூரி, அடிதடி, சேர்மன் தேர்தல், மாணவர்களுக்குள் வில்லன், பேராசிரியர்களை ஓட்டுவது, அரட்டை என அதகளமாக கதையை நகர்த்துகிறார். நாயகன் சிவா, அவனின் தம்பி கார்த்திக் இருவரும் அவர்களின் சொந்தக் கல்லூரியில் படிப்பதால் ரவுடியிசம் பண்ணுவதாக ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார். கல்லூரி நிறுவனரும் எம்.பியுமான அவர்களின் அப்பா, கல்லூரியை கட்டிக்காக்கும் மாமா, மாமா மகள் கீதா, நாயகி உமா என மற்றவர்கள் எல்லோருமே நல்லவர்களாக இருக்கிறார்கள். இந்த நல்லவர்கள் எப்படி ரவுடித்தனம் செய்யும் சிவா மற்றும் கார்த்திக்கை திருத்துகிறார்கள் என்பதை முழு நீள சினிமா பார்ப்பது போல் சொல்லியிருக்கிறார்.

நாயகி உமாவை போலீஸ் அதிகாரியின் மகளாக காட்டியிருப்பதால் எதற்கும் அஞ்சாத குணம் அவளுக்கு இயல்பிலேயே வந்துவிடுவதாக அவளின் செயல்கள் காண்பிப்பதை காட்சிப்படுத்தி விடுகிறார். உமாவின் தந்தைக்கும் சிவாவுக்கும் நடக்கும் மோதல்கள், சிவா திருந்தியவனாக அருளோடு வாழும் நாட்கள், ஆரம்பம் முதலே வில்லத்தனம் செய்யும் சுரேஷூடன் இறுதி அத்தியாயத்தில் சிறீப்பாயும் சண்டை என எழுத்தில் எல்லாச் சுவையையும் அழகாக மை நிரப்பி வார்த்திருக்கிறார்.

ரவுடித்தனத்துக்கு அஞ்சாத சிவா, வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதும் திருந்தி வாழ்வது, அடாவடியைக் கடைசி வரை கைவிடாத கார்த்திக் விழா மேடையில் லஷ்மணனாக நடிப்பவன் வராததால் மேடையேறுவது, ரோட்டில் போகும் சிவாவிடம் உமாவின் தந்தை தேவையில்லாமல் சீண்டுவது என நிறைய இடங்களில் சினிமாத்தனம் இருந்தாலும் இது ஒரு சினிமாவுக்கான கதைதான் என்பதால் உறுத்தலாகத் தெரியவில்லை.

இவர் பாக்கியராஜின் வெறித்தனமான ரசிகர் என்பது தெரியும். அவர் மீது கொண்ட பக்தியின் காரணமாக இரண்டு இடங்களில் அவரது படத்தில் இருந்து சொல்லியிருக்கிறார். மதிப்புரையில் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் சொன்னது போல் திரைக்கதையாக எழுதும் திறமை அதிகம் உண்டு என்பதை இந்த நாவல் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் திரு.பிரபாகர் சொன்னது போல் கதைக்கான கருவை தேர்ந்தெடுப்பதில் இனி இன்னும் கவனம் செலுத்துவார் என்று நம்பலாம்.

முதல் முயற்சியில் சரவணன் அண்ணன் வெற்றி பெற்றிருக்கிறார். பதிவராய் அறிமுகமாகி ஒரு நாவலாசிரியராய் நம் முன்னே உயர்ந்து நிற்கும் அவரைப் பாராட்டுவோம். அப்புறம் அவர் உரையில் இந்தக் கதையை எழுத ஊக்குவித்தவர்களில் என்னையும் சொல்லியிருக்கிறார். அதற்கு இங்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

புத்தகத்தை அவசியம் வாங்கி வாசியுங்கள். ஒரு திரைப்படம் பார்த்த சுகானுபாவ அனுபவம் கிடைக்கும். இன்னும் நிறைய எழுதி சிறந்த ஆசிரியராக வலம் வர அண்ணனை வாழ்த்துவோம்.

ஜனனி பதிப்பக வெளீயீடாக வந்திருக்கும் இளமை எழுதும் கவிதை நீ நாவல் சென்னை டிஸ்கவரி புக் பேலசில் கிடைக்கிறது. விலை ரூ: 100.

-இது வாசித்த அனுபவத்தில் எழுதியது... விமர்சனப் பார்வை அல்ல.
-'பரிவை' சே.குமார்.

15 கருத்துகள்:

  1. நண்பர் குடந்தையூர் சரவணன், சினிமாக் கனவுகளுடன் உலவுகின்றவர். இந்த நாவல் அவரது திரைப் பயணத்திற்கு முன்பதிவுச் சீட்டு. உங்கள் விமர்சனம் சுவையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள் அண்ணா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. விமர்சனம் நன்று... நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தால்... கிடைக்க வேண்டும்... இனிய நண்பர் ஆர்.வீ. சரவணன் திரைத்துறையில் பிரகாசிக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  4. #ஒரு நாவலை விமர்சிக்கும் அளவுக்கு நமக்கு தகுதியெல்லாம் இல்லை...#
    எழுத தெரிந்தவர்கள்தான் விமர்சிக்க வேண்டுமென்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன் !
    நண்பர் RVS திரைத் துறையில் பிரகாசிப்பார் என்பது உறுதி !
    த ம 6

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்,குமார்!நலமா?///பார்வை நன்று.விமர்சனமாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.எதற்கு நீங்கள் உங்களையே தாழ்த்திக் கொள்ள வேண்டும்?

    பதிலளிநீக்கு
  6. நன்றி குமார் தங்களின் வாசிப்பிற்கும் பகிர்தலுக்கும். அலுவலக வேலை அதிகமானதால் என்னால் வலைத்தளத்தில் அதிகம் எழுத முடியவில்லை இனி முயற்சிக்கிறேன். மேலும் தங்கள் கூறியிருக்கும் சினிமா தனமான காட்சி அமைப்புகளை இனி வரும் கதைகளில் தவிர்க்க முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. வாசிப்பவர் என்றாலும் கதையை விமர்சனம் செய்ய உரிமை உண்டு உங்களின் வழக்கு தமிழ் எழுத்து என்னை மிகவும் கவர்ந்த ஒன்று

    பதிலளிநீக்கு
  8. அருமையான விமர்சனம் ! ஏற்கனவே இந்த புத்தகத்தை பற்றி கரந்தை அண்ணா எழுதி இருக்கிறாரோ ?

    பதிலளிநீக்கு
  9. வாங்க செல்லப்பன் ஐயா...

    வாங்க ரூபன்...

    வாங்க முனைவரே...

    வாங்க ஜெயக்குமார் ஐயா...

    வாங்க தனபாலன் சார்...

    வாங்க பகவான்ஜி...

    தங்கள் அனைவரின் கருத்துக்கும் நன்றி.

    சரவணன் அண்ணா சினிமாவில் இணையும் காலம் விரைவில் வர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. வாங்க யோகராஜா அண்ணா...
    ரொம்ப சந்தோஷம்.. நான் நலமாக இருக்கிறேன்...
    தாங்கள் மற்றும் குடும்பத்தில் அனைவரின் நலம் காண ஆவல்.

    வாங்க சரவணன் அண்ணா...
    தங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வாங்க சகோதரி மைதிலி
    ஜெயக்குமார் ஐயா எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை... அவர் தளம் சென்று பார்க்கிறேன்...
    நல்ல கதை... படிக்கத் தூண்டும் நடை...
    எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
    தங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நல்ல விமர்சனம்.

    இன்னும் இவரது புத்தகம் படிக்கவில்லை. படிக்க முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி