படம் வந்து ரொம்ப நாளாச்சு இப்ப விமர்சனமான்னு தோணலாம். ஆனால் நல்ல படத்தைப் பற்றி எப்ப வேண்டுமானாலும் எழுதலாம் என்பது என் எண்ணம். முதலில் இது என்னடா பேருன்னுதான் நினைப்பு வந்தது அப்புறம்தான் இது குறும்படமாக வந்து நாம பார்த்ததுதானேன்னு தோணுச்சு...
குறும்படமாக வந்து எல்லாரும் விரும்பிப் பார்த்த பண்ணையாரும் பத்மினியும் திரைப்படமாக வெளிவந்தபோது குறும்படத்தில் இருந்த சுவை திரையில் வருமா என்றே நினைக்கத் தோன்றியது. குறும்படத்தில் பார்த்து ரசித்த கதையை சற்றும் பிசகாமல் சினிமாவுக்கான சில இடுதல்களும் தொடுதல்களும் கலந்து கலக்கல் காக்டெயிலாகக் கொடுத்துள்ளார் இயக்குநர் அருண்.
நகரத்தில் இருந்து ஒதுங்கிய ஒரு கிராமம்... அந்தக் கிராமத்துக்குள் புதிதாய் ஒரு பொருள் வரும் போது அந்த மக்களுக்கு அது எப்படியிருக்கும்... அதைப் பார்க்க வேண்டும் என்ற குறுகுறுப்பு இருக்குமே அதை கிராமத்து வாசியாக அனுபவித்தவன் நான்... பள்ளியில் படிக்கும் போது ஊருக்குள் முதன் முதலில் சித்தப்பா வீட்டிற்கு தொலைக்காட்சி வந்த போதும்... ஊருக்குள் முதன் முதலில் டிவிஎஸ் 50யும், எம்80யும் வந்த போது சின்னப்பசங்களாக அதைச் சுற்றிச் சுற்றி வந்ததையும் வீட்டிற்கு முதன் முதலில் வந்த பிபிஎல் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியை தொட்டுத் தொட்டு துடைத்துப் பார்த்தும் அனுபவித்த அந்த சந்தோஷத்தை மீண்டும் கிளறிப் பார்க்க வைத்தது இந்த பண்ணையாரும் பத்மினியும்.
தனது பிரீமியர் பத்மினி காரை தனது தம்பியிடம் விட்டுச் செல்கிறார் அந்த ஏரியாவில் கார் வைத்திருக்கும் அண்ணன். காரே ஓட்டத்தெரியாத பண்ணையார் வீட்டு வாசலில் நிற்கும் காரை ஊர் மக்கள் வந்து வந்து பார்த்துச் செல்கிறார்கள். அந்தக் காரை யாரை வைத்து ஓட்ட வைப்பது என்று நினைக்கும் போது ஊருக்குள் நானும் டிரைவர்தான் என்றபடி டிராக்டர் ஓட்டும் முருகேசனைக் கூட்டி வருகிறார்கள். அதை ஓட்ட ஆரம்பவனிடம் கற்றுக் கொள்ளத் துடிக்கும் பண்ணையாருக்கு எங்கே கற்றுக் கொடுத்தால் தனக்கு பத்மினியுடன் இருக்கும் பந்தம் போய்விடுமோ என அவருக்கு கற்றுக் கொடுக்க இழுத்தடிக்கிறான்.
இதற்கு இடையே தனது வீட்டில் வந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஒவ்வொரு பொருளாக வாங்கிச் செல்லும் அப்பா செல்லமான மகள், அவளை திட்டும் அம்மா... இந்த இடத்தில்தான் ஒரு நெருடல்... எப்பவுமே அப்பாவுக்குத் தெரியாமல் பெண்களுக்கு செய்வது அம்மாக்கள்தான். இங்கே சற்றே மாற்றியிருக்கிறார்கள். டெலிபோனில் ஆரம்பித்து காரில் வந்து நிற்கிறார். தனது மகள் கொண்டு செல்லும் காரை மீண்டும் திரும்பப் பெற்றாரா... முருகேசனின் காதல் என்னவானது என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி அடித்து ஆடியிருக்கிறார். ரம்மியில் அடடா என்ன ராகம் நீயும் பாடுறேன்னு கேட்டு கொஞ்சம் தடுமாற்றம் கண்டவர் இதில் மீண்டும் ஏற்றத்தைப் பெற்றிருக்கிறார். கிடைக்கும் இடத்திலெல்லாம் நடிப்பில் கிடா வெட்டியிருக்கிறார். பண்ணையாராக வரும் ஜெயப்பிரகாஷ் கிராமத்து நல்ல மனிதராக... காரை கண் மூடித்தனமாக விரும்பும் மனிதராக கலக்கியிருக்கிறார். அவரின் மனைவியாக வரும் துளசியும் தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். அழுதழுது காரியம் சாதிக்கும் மகளா வரும் நீலிமாவும் நடிப்பில் சோடை போகவில்லை.
நாயகி ஐஸ்வர்யாவுக்கு அதிகம் வேலை இல்லை. கிராமத்துப் பெண்ணாக வலம் வருகிறார். பீடையாக வந்து கலக்கியிருக்கிறார் பால சரவணன். படத்தின் ஆரம்பத்தில் கதை சொல்ல ஆரம்பித்து இறுதியில் பத்மினியில் அமர்ந்து செல்லும் அட்டக்கத்தி தினேஷ், காரில் ஏற ஏங்கும் சிறுவன் என ஒவ்வொரு கதாபாத்திரமும் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பு. படத்தைப் பொறுத்தவரை செல்லம்மாளாக வரும் பத்மினியே முக்கிய கதாபாத்திரம், பத்மினிக்கு வில்லனாக ஊருக்குள் வரும் மினிபஸ்ஸை சித்தரித்திருப்பது சிறப்பு.
படத்தில் வெகுவாகக் கவர்வது பின்னணி இசை, மிகச் சிறப்பாக இசை அமைத்திருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன். பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றன. படம் பார்த்து முடிக்கும் போது டாஸ்மார்க் சமாச்சாரங்களும் குத்துப்பாடலும் இல்லாத ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தி நமக்குள் வந்து சம்மணம் இட்டு அமர்ந்து கொள்கிறது. பண்ணையாரும் பத்மினியும் நம்முடனே வருவது போல் தோன்றுவது இயக்குநருக்கு கிடைத்த வெற்றி எனலாம்.
மொத்தத்தில் நாம் ரசித்துப் பார்க்க நினைக்கும் படங்களின் வரிசையில் பத்மினிக்கும் கண்டிப்பாக இடம் கொடுக்கலாம்.
-'பரிவை' சே.குமார்.
I watched the movie too. I liked it.
பதிலளிநீக்குவிமர்சனம் அருமை நண்பரே
பதிலளிநீக்குஅவசியம் படம் பார்க்கிறேன்
நன்றி
tha.ma.2
பதிலளிநீக்குஎனக்கும் பிடித்திருந்தது... நல்ல விமர்சனம்...
பதிலளிநீக்குகுறும்படம் பார்த்திருக்கேன், இந்தப் படம் இன்னும் பார்க்கவில்லை. எங்க வீட்டிலும் பத்மினி இருந்த கதை தான் நினைவு வருது.
பதிலளிநீக்குபடத்தின் சிறப்பு அதன் கதையில் உள்ளது.......
பதிலளிநீக்குஉங்கள் பதிவின் சிறப்பு அதை பாராட்டிய விதத்தில் உள்ளது
படம் அருமையாக இருப்பதாகத்தான் எல்லா விமர்சனங்களும் வந்துட்டு இருக்குது !
பதிலளிநீக்குஎனக்கு மிக மிகப் பிடத்த குறும்படம் அது! படம் பார்ப்பதற்குக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குபார்க்க முயல்கிறேன் குமார்.
பதிலளிநீக்கு