வெள்ளி, 11 அக்டோபர், 2013

மனசு பேசுகிறது : சச்சின் என்னும் சகாப்தம்


கிரிக்கெட்டில் கடவுளாகப் பார்க்கப்படுபவர் சச்சின். எத்தனை சாதனைகள்... அத்தனை சாதனைகளும் முறியடிக்கஆப்படும் என்று சொல்லமுடியாத அளவுக்கு சாதனைகளை அடுக்கி வைத்திருக்கிறார்.

எத்தனை போட்டிகளில் எதிர் அணியினரை ஆட்டம் காணச் செய்திருக்கிறார். அடித்து ஆடினாலும் ரன் அடிக்காமலே வெளியேறினாலும் எதையும் வெளிக்காட்டாத அந்த முகம்... இப்போதெல்லாம் ஒரு போட்டியில் விளையாடினாலே ஆஸ்திரேலிய வீரர்கள் போல் மைதானத்துக்குள் சண்டையிடும் இளம் வீரர்கள் மத்தியில் அனைத்து வீரர்களுக்கும் பிடித்த வீரராக இருக்கும் ஒரே வீரர் சச்சின்.

ஆரம்பத்தில் பதினேழு என்பது அவருக்கு அபாயகரமான நம்பர் அதைக் கடக்காமல் அவுட்டான போட்டிகள் அதிகம். பின்னாளில் தொன்னூறு முதல் தொன்னூற்றி ஒன்பதுக்குள் அதே போல் ஆட்டம் கண்டார். இருந்தாலும் அவர் விளையாடும் நேர்த்தி அனைவரையும் கவரும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

ஒருமுறை ஷார்ஜாவில் நடந்த போட்டியில் ஷேன் வார்னேயின் பந்துக்களை சிதறடித்த போது மைதானம் மட்டுமல்ல உலகமே சச்சினின் அதிரடியைக் கண்டு வியந்தது. இந்தப் போட்டியின் முடிவில் தனது பனியனைக் கழட்டி கையெழுத்து வாங்கிய ஷேன் வார்ன், சில நாட்களுக்குப் பிறகு தனது பேட்டியில் படுத்தால் கனவில் சச்சின் எனது பந்துக்களை சிக்சருக்குத் விரட்டுவதுபோல் வருகிறது என்று சொல்லியிருந்தார்.

சச்சின் சதமடித்தால் இந்தியா ஜெயிக்காது என்பவர்கள் அவர் எத்தனை போட்டிகளில் மோசமாக தவித்த அணியை தூக்கி நிறுத்தியிருக்கிறார் என்பதை மட்டும் சொல்வதேயில்லை. எத்தனை சதங்கள்... எத்தனை அரைச் சதங்கள்... எத்தனை போட்டிகளில் சிறந்த ஆட்டக்காரர்... என சாதித்திருக்கிறார். சச்சின் களத்தில் நிற்கிறார் என்றால் கிரிக்கெட் பார்க்காதவர்கூட சச்சினுக்காக பார்க்க ஆரம்பித்துவிடுவார்.

தன்னைப் பற்றி எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதற்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. எல்லா விமர்சனங்களுக்கும் தனது மட்டையால் பதில் சொல்லி விடுவார். 

நம்மைப் பொறுத்தவரை ஒரு மனிதன் உச்சியில் இருக்கும் போது அவனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவோம். அவனுக்கு ஒரு சறுக்கல் வரும்போது தூக்கிப் போடுவதோடு மட்டுமில்லாமல் இறங்கி ஓடு என்று ஆளாளுக்குப் பேச ஆரம்பித்துவிடுவோம்.

உலகமே மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர் என்று புகழ்ந்தாலும் நாம் சாதனைகளை வைத்துக் கொண்டு இன்னும் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறாய் என ஆளாளுக்குப் பேச ஆரம்பித்து விட்டோம். இதோ இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுடன் கிரிக்கெட்டின் சாதனை நாயகன் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறார்.

ஆம் சர்வதேச ஒருதினப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் ஆரம்பம் முதலே சர்வதேச டுவெண்டி20 போட்டிகளில் விளையாட விரும்பவில்ல.  ஐ,பி.எல் போட்டிகளில் விளையாடி வந்தவர் அதிலிருந்தும் சமீபத்தில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்டில் இருந்து எப்போது போவார் என்று எல்லோரும் காத்திருக்க, 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்.

சச்சினை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இந்தியாவிற்கே பெருமை சேர்த்த அந்த மனிதரை வேதனைப் படுத்தாமல் வாழ்த்துவோம். சாதனைகளின் நாயகனுக்கு மலர் தூவி மரியாதை செய்யாவிட்டாலும் அவமரியாதை செய்யாமல் இருப்போம்.

கிரிக்கெட் விளையாடாத வாழ்க்கையை  நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று சொல்லும் அந்த மனிதரின் ஓய்வு காலம் சந்தோஷத்தையும் மன அமைதியையும் கொடுக்கட்டும்...

கிரிக்கெட் இருக்கும் வரை சச்சின் என்ற சகாப்தத்தின் பெயர் இருக்கும்.


மற்றுமொரு தலைப்பில் மனசு பேசும்...
-'பரிவை' சே.குமார்.

4 கருத்துகள்:

  1. அவர் மைதானத்துக்குள் இருந்தாலே சக வீரருக்கு ஊக்கம் தான்... கிரிக்கெட்டிற்காக வாழ்ந்தவர்... வாழ்ந்து கொண்டிருப்பவர்...

    பதிலளிநீக்கு
  2. இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்களுள் சச்சினும் ஒருவர்.கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் என்ற சகாப்தத்தின் பெயர் நிலைத்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. சற்றே தாமதமாக எடுத்த முடிவு.என்றாலும் நல்ல முடிவு.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி