வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கிராமத்து நினைவுகள் : உப்பு வண்டி

கிராமத்தில் வாழ்ந்த அந்த நாட்களை அசைபோடுவது என்பது எத்தனை சுவையானது. கிராமத்து நினைவுகளை அவ்வப்போது அசைபோட்டுக் கொண்டே வந்தாலும் எதாவது ஒன்று இன்னும் எழுத வைத்துவிடுகிறது. அந்த வகையில் இன்று உப்பு வண்டி பற்றிய நினைவை கொஞ்சம் அசைபோட்டுப் பார்க்கலாம்.

படிக்கும் காலத்தில் உப்பு வண்டி, வைக்கோல் வண்டி என ஊருக்குள் வந்து செல்லும். உப்பு வாங்க சந்தைக்குப் போனால் சட்டை அணியாத தேகத்தோடு ஒரு கரிய மனிதர் விற்றுக் கொண்டிருப்பார். அரைப்படி, ஒருபடி அளவில் விப்பார். மூணு நான்கு படி வாங்கி வந்தால் போதும் ரெண்டு வாரத்துக்கு வரும். இப்போ கல் உப்புக்கூட பாக்கெட்டில் வந்துவிட்டது. இன்றைய குழந்தைகளுக்கு எல்லாமே பாக்கெட் அடைத்து விற்பதுதான் தெரியும். சந்தையில் கூட இப்போது உப்பு விற்பவர்களைக் காணோம்.

எங்க ஊருக்கு மாதம் ஒருமுறை ஒரு உப்பு வண்டி வரும். கேணித்தட்டு, கூட்டு வண்டி, மொட்டை வண்டி என்று சொல்லப்படும் வண்டிகளில் கேணித்தட்டு பந்தயங்களில் பயன்படுத்தப்படும். கூட்டு வண்டி எங்காவது குடும்பமாக வெளியில் செல்லும் போது பயன்படுத்துவார்கள். பள்ளியில் படிக்கும் போது கண்டதேவி தேரோட்டம் காணச் சென்றால் தூரத்து ஊர்களில் இருந்து கூட்டு வண்டிகளில் வந்திருப்பார்கள். எங்க ஊரில் கூட கூட்டு வண்டிகள் அதிகம் இருந்தன. எல்லாருடைய வீட்டிலும் காளை மாடுகள் இருக்கும். உழவுக்கும் குடும்பத்துடன் வெளியில் சென்று வரவும் பயன்படுத்துவார்கள். டிராக்டர் வைத்து உழ ஆரம்பித்ததும் மாடுகள் காணாமல் போய்விட்டன. இப்பவும் சிலர் பந்தயமாடுகளை இரண்டு, மூன்று லட்சங்களுக்கு வாங்கி வைத்திருக்கிறார்கள்.

மூடைகள் ஏற்ற, பொருட்களைக் கொண்டு செல்ல பயன்பட்ட வண்டிதான் மொட்டை வண்டி. இதில் இரண்டு பக்கமும் முளைக்குச்சிகளை ஊன்றுவதற்கான ஓட்டை இருக்கும் அதில் முளைக்குச்சிகளை அடித்து வைத்திருப்பார்கள். மணல் எல்லாம் ஏற்ற வேண்டும் என்றால் இருபக்கமும் அதற்கென தயார் செய்து வைத்திருக்கும் பலகைகளை வைத்துக் கட்டிவிடுவார்கள். முன்பக்கமும் பலகையால் அடைத்துவிடுவார்கள். இந்த உப்பு வண்டியின் மேலே குடிசை போல் அமைத்து தார்ப்பாய் இட்டிருப்பார்கள். மழையின் நனையாமல் இருக்கத்தான். உள்ளே உப்பு மூட்டைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். ஒரு மூட்டையை மட்டும் அவிழ்த்து வைத்திருப்பார்கள். 

உப்பு வண்டி இழுத்து வரும் மாடுகள் பெரிய மாடுகளாக இருக்கும். பெரும்பாலும் காங்கேயம் மாடுகளாகத்தான் இருக்கும். கொம்பை நன்றாக சீய்த்து எண்ணெய் தேய்த்து வழுவழுன்னு வைச்சிருப்பாங்க. மூக்கணாங்கயிறு சிவப்பு வண்ணத்தில் பெரியதாக இருக்கும். கழுத்தில் பெரிய மணி கட்டியிருப்பார்கள். மாடுகள் பாரத்தை இழுத்துக் கொண்டு மெதுவாக நடந்து வரும் போது அதன் தலையாட்டலுக்குத் தகுந்தவாறு கழுத்துமணி சப்தம் எழுப்பும். வண்டியின் கீழே சக்கரங்களுக்கு இடையே அவர்களுக்கான உடைகள், சாப்பாடு, மாடுகளுக்கு வைக்கோல் எல்லாம் வைத்திருப்பார்கள்.

உப்பு வண்டியில் இரண்டு பேர் வருவார்கள். பெரும்பாலும் சட்டை அணியாமல் தோளில் துண்டு மட்டும் போட்டிருப்பார்கள். சந்தையில் விற்பதைவிட குறைத்துக் கொடுப்பார்கள். காசுக்கு மட்டும்தான் என்று இல்லை. புளி, அரிசி, நெல் என எல்லாம் வாங்கிக் கொண்டு கொடுப்பார்கள். கடனாகவும் கொடுப்பார்கள். ஆத்தா, அக்கா, ஐயா என முறை வைத்துப் பேசுவார்கள். அடிக்கடி வருவதால் ஊருக்குள் எல்லாருக்கும் உறவாகிப் போனார்கள். நல்லது கெட்டது எல்லாத்துக்கும் வருவார்கள். நெருங்கிப் பழகினால் கஷ்ட நஷ்டங்களைச் சொல்லி ஆறுதல் பட்டுக்கொள்வார்கள். போகும் ஊரில் நல்ல மாப்பிள்ளைகளோ பெண்ணோ இருந்தால் நல்ல குடும்பம் எனக்கு நல்லாத் தெரியும் என்று சொல்லி கட்டச் சொல்வார்கள்.

காலை நேரங்களில் வந்தால் நீச்சத்தண்ணி குடுங்காத்தா... அதுல கொஞ்சம் எலுமிச்சை ஊறுகாய் போட்டு கரைச்சுக் கொடுதாயின்னு சொல்லி வாங்கிக் குடிப்பார்கள். மாலை நேரத்தில் வந்தால் விற்றுவிட்டு வேறு எங்கும் செல்ல முடியாது என்றால் மாரியம்மன் கோவிலுக்கு அருகில் வண்டியை அவிழ்த்து நுகத்தடியிலோ, வண்டி சக்கரத்திலோ மாட்டைக் கட்டி வைக்கோல் அள்ளிப் போட்டு விட்டு சாப்பாடு கையில் இருந்தால் சாப்பிட்டுவிட்டுப் படுப்பார்கள். இல்லையென்றால் யார் வீட்டிலாவது சாப்பிட்டுவிட்டு படுப்பார்கள்.

கொண்டு வந்த மூடைகள் எல்லாம் விற்றுவிட்டால் வண்டியில் சொந்த ஊரை நோக்கி கிளம்புவார்கள். ஊருக்குச் திரும்பும் போது வண்டியை பூட்டி விட்டு வண்டியில் ஏறி படுத்தால் மாடு அவர்களை அழகாக வீட்டுக்கு கொண்டு போய்ச் சேர்த்திடும் என்பார்கள்.  தென்றல் வீசும் மாலை நேரங்களில் 'உப்பு... உப்பு...' என்று கூவியபடி வந்து திரும்பும் உப்பு வண்டிகளெல்லாம் இப்போது வருவதில்லை. சில நாட்களில் சைக்கிளில் மூட்டையை வைத்துக் கொண்டு உப்பு விற்க வரும் அந்த சைக்கிள்காரரையும் இப்போது காணவில்லை.

இபோ உப்புவண்டி பற்றி சொன்னால் உப்பு வண்டியா அப்படின்னா என்னன்னு பிள்ளைகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு உப்பு மூட்டை தூக்குறதுன்னா கூட என்னன்னே தெரியலை.  அத்தளிப் பித்தளின்னு சொன்னா பிங்கி பிங்கி பாங்கின்னு பாடுறாங்க... ம்... உப்பு வண்டிகள் மட்டுமல்ல மாட்டு வண்டிகள் கூட இப்போது மறைந்து விட்டன என்பது வருத்தமான விஷயம்தான்.

மீண்டும் ஒரு கிராமத்து நினைவுகளோடு வருவோம்...
-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:

  1. அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே வந்ததே... நண்பரே...!@

    பதிலளிநீக்கு
  2. தென்றல் வீசும் மாலை நேரங்களில் 'உப்பு... உப்பு...' என்று கூவியபடி வந்து திரும்பும் உப்பு வண்டிகளெல்லாம் இப்போது வருவதில்லை.

    எங்கள் பகுதிக்கு உப்பு விற்க வருபவர் பல் ஆண்டுகளாக ஒரே தோற்றத்தில் இருப்பதை வியப்புடன் பேசிக்கொள்வோம்..!

    பதிலளிநீக்கு
  3. எல்லாமே எல்லா நாடுகளிலும்,ஊர்களிலும் வழக்கொழிந்து போய் விட்டன,தான்!எங்கள் ஊருக்கும்,என் சிறிய வயதில் (ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு)உப்பு வியாபாரிகள் வருவார்கள்.அவர்கள் கோணிப் பையில் போட்டு சுமந்து கொண்டு வருவார்கள்,படிக் கணக்குத் தான்.அதிகமாகவே வாங்கி எங்கள் அம்மா,மண் பானையில் போட்டு குசினியில்/அடுக்களையில் வைத்து விடுவார்கள்,ஹூம்!!!

    பதிலளிநீக்கு
  4. இனிய மலரும் நினைவுகள்...!

    பதிலளிநீக்கு
  5. உப்பு வண்டி, உப்பு மூட்டை, பெரிய கொம்பு காளை மாடுகள், கரிய மனிதர், பண்டமாற்று முறை வணிகம் - கண்ணில் பார்த்த காட்சிகள் யாவும் கனவாகிப் போனதய்யா! மனதில் காட்சிகளை நிழலாடச் செய்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. இப்போதும் திருவரங்கத்தில் சைக்கிளின் பின்னால் மூட்டையில் வைத்துக் கொண்டு வெள்ளிக்கிழமைகளில் உப்பு விற்க வருகிறார்கள்......

    மற்றபடி மாட்டுவண்டியில் விற்பது மறைந்து விட்டது.....

    பழைய நினைவுகள் என்னையும் எனது நெய்வேலி வாழ்க்கையின் நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது........

    பதிலளிநீக்கு
  7. உப்பு வண்டின்னு இப்பத்தான் நான் கேள்விப்படறேன். இருந்தாலும் இப்படி கிராமத்து சந்தோஷங்கள், ரசனைகள் படிக்கும் போது சுவாரஸ்யமாத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  8. உப்புக்காற்றுக் கலந்த கிராமத்து வாசனை உணர்வுகளையும் நிரப்பிப் போனது சகோ!..

    மிகமிகச் சிறிவளாக கிராமத்தில் இருந்தபோது எம்மூரிலும் அவ்வப்போது கண்டிருக்கின்றேன் இப்படி..
    நல்ல மலரும் நினைவுகள்!..
    வாழ்த்துக்கள் சகோ!

    த ம.4

    பதிலளிநீக்கு


  9. // ஊருக்குச் திரும்பும் போது வண்டியை பூட்டி விட்டு வண்டியில் ஏறி படுத்தால் மாடு அவர்களை அழகாக வீட்டுக்கு கொண்டு போய்ச் சேர்த்திடும் என்பார்கள். //

    மிக அருமையான பகிர்வு.

    உப்பு வண்டிகள் பார்த்ததில்லை. ஆனால் மாட்டு வண்டிகள் எங்கள் காலத்தில் 20,25 போல பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல வரும். குதிரை வண்டிகள் ஒன்றிரண்டு இருக்கும். இப்போது ஊர்ப்பக்கம் ஒன்றைக் கூட காண முடிவதில்லை. அந்த இடத்தை ஆட்டோக்கள் பிடித்துக் கொண்டன.

    பதிலளிநீக்கு
  10. கிராமத்து இனிய நினைவுகள்.

    உப்பு வண்டிஎங்கள் பக்கம் இருந்ததில்லை.
    பாட்டிஒருவர் ஓலைபெட்டியில் எடுத்துவந்து விற்பார் அம்மா வாங்கி மண்பானையில் போட்டு அடுப்பு பிட்டி மூலையில் வைப்பார்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி