வெள்ளி, 13 செப்டம்பர், 2013

மனசின் பக்கம்: குடில் முதல் சங்கம் வரை...

மிழ்க்குடில் அறக்கட்டளையினர் தனது பயணத்தில் முதல் முயற்சியாய் பெரம்பலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தில் நூலகம் ஒன்றை நண்பர்களின் உதவியுடன் கட்டி முடித்து இந்த மாதம் 9 ஆம் தேதி திறந்திருக்கிறார்கள். முகநூலை பொழுது போக்கிற்காக மட்டும் பயன்படுத்தும் என்னைப் போன்றோர் மத்தியில் தங்களது சிறப்பான முயற்சியால் தமிழ்குடில் என்ற பக்கத்தை நடத்தி வரும் நண்பர்கள் அறக்கட்டளை ஆரம்பித்து இன்று நூலகம் வரை சென்றிருக்கிறார்கள் என்றால் வாழ்த்தாமல் இருக்க முடியுமா சொல்லுங்கள்... எனது பங்களிப்பாக எதுவும் இல்லை என்றாலும் அவர்களுக்கு உதவியாய் நின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்... தொடரட்டும் தமிழ்க்குடிலின் தமிழ்ப்பணி.

டந்த வாரம் வலைச்சர ஆசிரியனாய் இருந்ததால் எனது வலைப்பக்கமும் நண்பர்களின் வலைப்பக்கமும் அதிகம் வரவில்லை. சென்ற முறையைவிட இந்த முறை எனது பணியை சற்று சிறப்பாக செய்து முடித்த மனநிறைவு இருக்கிறது. இந்த முறை நான் அறிமுகம் செய்த விதம் சீனா ஐயா அவர்களைக் கவர்ந்தது என்பது எனக்கு மிகச் சந்தோஷமான செய்தி. வலைச்சர வாரத்தில் கதையாசிரியர்களாகவும் கவிஞர்களாகவம் நான் அறிமுகம் செய்த இருவரில் ஒரு ஆண், ஒரு பெண் பதிவர் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன். அதேபோல் கவர்ந்த கவிதை என்ற தலைப்பில் நான் பதிந்த கவிதைகள் அனைத்துமே எங்கள் மாவட்டக் கவிஞர்களே... என்னமோ தெரியலை நமது மண்ணின் மைந்தர்களைப் பற்றி பகிரும் போது கூடுதல் சந்தோஷம் இருக்கத்தானே செய்கிறது.

ரும் திங்களன்று எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், அனைவரது சீரிய முயற்சியாலும் ஊரிலேயே இருந்து கட்டிடப் பணிகளைக் கவனித்த பெரியவர்களின் பொறுப்பான பார்வையினாலும் இன்று எங்கள் ஊர் அம்மன் கோவில் ஓட்டுக் கொட்டையில் இருந்து கோபுரத்திற்கு மாறி இருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லாரும் கோவில் அழகாக அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். எனக்கும் செல்ல ஆசைதான்... பணம் என்னும் பூதம் கண் முன்னே வந்து கட்டிப் போட்டு விடுகிறது. அம்மனின் அருள் பெற்று வளமுடன் வாழ ஊரில் கூடியுள்ள எம்மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

துவரை சுட்டெரித்த சூரியன் தற்போது காலையும் மாலையும் கொஞ்சம் ஆறுதலாக மாறியிருக்கிறான். கடும் வெயில் குறைந்து குளிர்காலம் ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. சில வாரங்களுக்கு முன்பு வரை காலையில் பேருந்துக்காக காத்திருக்கும் தருணங்களில் கடுமையான வெக்கையின் காரணமாக குளித்தது போல் ஆகிவிடும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நல்ல காற்று வீசுவதால் வியர்வை குறைந்திருக்கிறது. மேலும் பாலைவனப் பகுதிகளில் மணற்காற்று வீசுகிறது. மூன்று தினம் முன்பு துபாய்க்கு அண்ணனின் காரில் சென்றோம். சரியான  மணற்காற்று... ரோடெல்லாம் மணலைக் கொண்டு வந்து கொட்டிச் சென்றது. வழியெங்கும் மணற்காற்று மெதுவாக செல்லுங்கள் என்ற சிவப்பு விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அலைனில் மழை பெய்ததாக உறவினர் கூறினார். இனி நான்கைந்து மாதங்களுக்கு இந்த வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்கலாம்.

தங்க மீன்கள் படம் பார்த்தேன்... அருமையான கதையோட்டம். ஆனந்த யாழை மீட்டுகிறாய் சுகமான ராகம். படம் ரொம்ப மெதுவாகப் போவது சற்று சோர்வாக்குகிறது. ராமின் கதாபாத்திரம் சேரனுக்கு என்றால் இன்னும் கூடுதல் பலமாக இருந்திருக்குமோ என்று தோன்றியது... குட்டிப் பெண் சாதனா கலக்கல் நடிப்பு, ராமின் மனைவி, பத்மபிரியா, பூ ராம், ரோகிணி என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தங்க மீன்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.



அடுத்து பார்த்தது சிவகார்த்திகேயன் - சூரி நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்... கதையென்று பார்த்தால் ஒன்றுமே இல்லை...  நகைச்சுவையால் வெற்றிக்கொடியைப் பிடித்திருக்கிறது. ஹரிஹரசுதன் பாடிய ஊதாக்கலரு ரிப்பன் இப்போ எங்கு பார்த்தாலும் கேட்கும் பாடலாக இருக்கிறது. சத்தியராஜ் என்ற நல்ல நடிகரை மொக்கை காமெடியனாக்கி இருக்கிறார்கள். கதாநாயகி நல்ல தேர்வு. படம் கடைசி வரைக்கும் இதுல என்ன கதை இருக்கு என்று வருத்தப்பட வைக்காமல் சிரித்துக்கொண்டே பார்க்க வைக்கிறது. இமானின் இசையில் சிவகார்த்திகேயன் அந்தோணிராஜூடன் இணைந்து ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். நல்லாத்தான் இருக்கு அந்தப் பாட்டு.... இருந்தும் இமானின் இசை புதியதாக இல்லாமல் கேட்ட இசையாத்தான் இருக்கிறது. 



கோவில் திருவிழாவிற்கு பின்னணியாக ஒரு இசை போட்டிருக்கிறார். திருவிழாக்களுக்கு சென்று இசையை ரசித்தவர்கள் நிச்சயம் நொந்து போயிருப்பார்கள். கிராமத்து திருவிழாக்களுக்கான பின்னணி இசையில் எப்பவும் ராசாதான் நம்பர் ஒன்.. மற்றபடி படம் சூப்பர் காமெடி... சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் வெற்றி. தொடரட்டும் அவரது வெற்றிப் பயணம்.... ஆமா 2 இப்போ 5 ஆயிருச்சாமே சிவா... ம்... காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுன்னு சும்மா சொன்னாங்க முன்னோருங்க...

மீண்டும் ஒரு மனசின் பக்கத்தில் தொடர்வோம்...
-'பரிவை' சே.குமார்.

7 கருத்துகள்:

  1. சிவா காட்டுலே செம மழை...! வாழ்த்துவோம்...

    பதிலளிநீக்கு
  2. தங்க மீனகளின் பாதிப்பு மறைய இன்னும் நாளாகும்.

    பதிலளிநீக்கு
  3. மனசு பகிர்ந்து கொண்ட விஷயங்கள் அனைத்தும் அருமை.
    பாடல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா13/9/13, 8:15 PM

    வணக்கம்
    சே.குமார்(அண்ணா)

    பதிவில் பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளிர்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள் அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. மனசின் பக்கம்,நன்று!//சிவ கார்த்திகேயன்.....ம்...ம்ம்.....

    பதிலளிநீக்கு
  6. தமிழ்க்குடில் நூலகத்திறப்புவிழாவிற்கு தம்பியின் பாராட்டும் அதைப்பற்றிய பகிர்வும் மகிழ்ச்சியளிக்கிறது. //முகநூலை பொழுது போக்கிற்காக மட்டும் பயன்படுத்தும் என்னைப் போன்றோர் மத்தியில் // அட..!!! தம்பியின் கிராமத்துக்கதையும், கவிதையும் படிக்கும் பலருக்கு கிராமத்திற்கு சென்றுவந்த மகிழ்வைத்தருகிறாயே அது சும்மா பொழுதுபோக்கா என்ன..:)
    தம்பியின் பதிவு எப்பொழுதுமே தனி சிறப்புதான்..கதம்ப மலராய் மணக்கும். கூடவே மண்ணின் மணமும்..
    தொடர வாழ்த்துகள்..:)

    பதிலளிநீக்கு
  7. தமிழ்க்குடில் அறக்கட்டளைக்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி