திங்கள், 22 ஜூலை, 2013

ராசாவே என் ராசாவே


களத்துமேட்டுக் காவலுக்கு
நீ கருப்பராட்டம் போனாலும்
கனத்த மனசோட
காத்திருப்பேன் என் ராசாவே...

திருவிழாத் தேரோட்டம்
தெருவிலோ மக்கள் கூட்டம்
வடம் பிடிக்கும் உன்னை
ஆவலோடு தேடுவேன் என் ராசாவே...

கண்மாய்த் தண்ணி எடுக்க
தனியே நான் வரும்போது
கொடுக்காப்புளி மரத்தருகே
நீ கொடுத்த முத்தச்சுவை
கொடுக்காப்புளி காயாட்டம்
தொண்டைக்குள்ளே இனிக்கவே
ரசித்து ருசித்தேன் என் ராசாவே...

விறகு உடைத்து வேர்த்து
வெயிலில் வைரமாய் மின்னும்
உன் தேகத்தின் மீது
கடந்து போகும் என் கண்கள்
தேங்கி நிற்க புன்னகையோடு
தேகம் பருகுவேன் என் ராசாவே...

ராசாவே என் ராசாவே
சிலம்பம் சுற்றும் போதும்
இளவட்டக்கல் சுமக்கும் போதும்
கபடியில் கால்தூக்கி ஆடும் போதும்
மாடு பிடித்து மகிழும் போதும்
எனக்கானவன் நீ என்றும்
உனக்கானவள் நான் என்றும்
பெருமை பொங்க
காத்திருந்தேன் என் ராசாவே....

வாக்கப்பட்டு நாளாச்சு...
வருசமும் ஓடிருச்சு...
வாரிசும் வந்திருச்சு...
அருகிலிருப்பேன்னு
ஆசைப்பட்டு வந்தவ...
வாழ்க்கைப் பசிக்காக
பொருள் தேடி தூரதேசம்
போன உன்னை
தினம் தேடுகிறேன்
சீக்கிரம் வா என் ராசாவே...

படம் : இணையத்திலிருந்து...
-'பரிவை' சே.குமார்.

6 கருத்துகள்:

  1. கிராமத்து வாசத்துடன் ராசாவை தேடும் ராசாத்தி அருமை.

    பதிலளிநீக்கு
  2. வாழ்வியலின் நிதர்சனம் நண்பா ... நல்ல படைப்பு

    பதிலளிநீக்கு
  3. அருமை...

    மனது பாடிய பாடல் வரிகள் :

    ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு...
    உன்ன நெனச்சு உசிருருக்கு...
    ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு...
    உன்ன நெனச்சு உசிருருக்கு...
    ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி...
    ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி...
    பூத்தது வாடுது நீ வரத்தான்...

    ராசாவே உன்ன நான் எண்ணித்தான்...
    பல ராத்திரி மூடல கண்ணத்தான்...
    ஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்...
    நான் பூவோடு நாரப்போல சேரத்தான்...
    ராசாவே ராசாவே ராசாவே...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. திரை கடல் ஓடித் திரவியம் தேடி .................... அருமையாக இருந்தது,கவிதை.

    பதிலளிநீக்கு
  5. அருமை அருமை கிராமத்து மண்வாசனை கமழும் தங்களது பகிர்வுகள் அடுத்து வரும் வலைச்சர தொடர் முத்துக்களில் தொடரவுள்ளது .இன்று மரபுக் கவிதை முத்துக்களின் அணிவகுப்பு நேரம் கிடைத்தால் இதையும் கொஞ்சம் பாருங்கள் சகோதரரே .
    http://blogintamil.blogspot.ch/2013/07/blog-post_23.html

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி