திங்கள், 7 மே, 2012

'நான் பேச நினைப்பதெல்லாம்... ' - திரு. நெல்லை கண்ணன்

முந்தைய பதிவின் தாக்கம் : பாரதி நட்புக்காக குழுவினரை கவிதாயினி மேடையேற்றிய போது வாசித்த பெயர்கள் அனைத்தும் எனது மனதில் இல்லை... மேலும் சங்கரன் என்று அவர் சொன்னார்... ஆனால் அங்கு சங்கர் அவர்கள் வரவில்லை என்பதும் தெரியும்... எழுதும் போது அவர் அழைத்தவர்களில் பலர் வரவில்லை என்று எழுத நினைத்து மறந்துவிட்டேன். குறிப்பாக பாரதி நட்புக்காக அமைப்பின் பொதுச் செயலாளர் திருமிகு. கலீல் ரஹ்மான் அவர்கள் பெயர் எனக்கு ஞாபகத்தில் இல்லை என்பதே உண்மை... எனது பதிவுகளில் அவரை விட்டுவிட்டு போட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை... என்னை எப்பொழுதும் புறக்கணிக்கிறார் என்று எனது சகோதரர் திரு. சுபஹான் அவர்களிடம் அன்புச் சண்டை போட்டிருக்கிறார். உங்களை மேடையில் பார்த்திருக்கிறேன்... பழகியது இல்லை... மறதிதான் காரணமே ஒழிய மறக்கடிக்கப்படவில்லை... உங்க பேரை மனசில் பொறிச்சாச்சு... இனி மறக்காது...என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... சார்... நேரடியாக கேட்டதற்கு நன்றி.

இனி தமிழ்கடலில் மூழ்கி சில முத்துக்களை பார்க்கலாம்...

விசாலி கண்ணதாசனின் பேச்சுக்குப் பிறகு மேடையில் திரையிடப்பட்டது. சினிமாவில் இடைவேளை போல சில மணித்துளிகள் கிடைக்க டீ,காபி,ஸ்நாக்ஸ் விற்பனை படு ஜோராக நடந்தது. திரை விலக்கப்பட, மேடை நடுவில் நாற்காலி,மேசை இடப்பட்டு திரு. நெல்லை கண்ணன் அவர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...

தமிழ்கடல் என்ற அடைமொழிக்கு ஏற்ப ஆழிப் பேரலையாய் கண்ணதாசன், பாரதி, வள்ளுவன் என கலவையாய் தமிழ் மாலை தொடுத்து ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் மேடையை தன் வசப்படுத்தி பார்வையாளர்களை பஞ்சமில்லாமல் சிரிக்க வைத்தார்.

ஆரம்பத்தில் பின் வரிசையில் அமர்ந்து கேட்ட போது பேசுவது புரிந்தும் புரியாதது போல் இருந்தது. பின்னர் சற்றே முன்னோக்கி வந்து அமர்ந்தபோது அவரின் பேச்சை நன்கு கேட்க முடிந்ததோடு வாய்விட்டு சிரித்து ரசிக்க முடிந்தது.

அவர் பேச்சின் இடையே பிறருக்கு உதவுங்கள், இறைவனை நினையுங்கள், வாய்விட்டு சிரியுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள் என்ற வாசகங்களை அடிக்கடி சொன்னார்.

"கடவுள் ஒரு குழந்தை பிறக்கும் போதே எல்லா ஏற்பாடும் பண்ணிடுறான்... என்ன படிப்பான், எப்படி , யாரை கல்யாணம் பண்ண வேண்டும் என்று எழுதி வச்சிடுறான்... அதை யாராலும் மாற்ற முடியாது" என்றார்.

"ஒருத்தனுக்கு உடம்பு முடியலைன்ன உடனே பெரிய ஆஸ்பத்திரியில வச்சி ஒரு வாரம் எல்லா ஊசியும் போட்டு எல்லாம் பண்ணிட்டு கடைசியில கடவுள்கிட்ட சொல்லுங்கிறான்... எங்க ஊர்க்காரப்பய அப்பாவுக்கு முடியல...பெரிய ஆஸ்பத்திரியில வச்சி பாத்துட்டு டாக்டர் ரெண்டு லட்ச ரூபாய் பில்ல கொடுத்து உங்கப்பாவை கடவுள்தான் காப்பத்தணுமின்னான். எங்க ஊர்க்காரப் பயலாச்சா, டக்குன்னு அருவாள எடுத்து நீ கடவுள்கிட்ட சொல்லு, நீ முடியாதுன்னு சொல்லியிருந்தா நாங்க அப்பவே கடவுள்கிட்ட சொல்லியிருப்பமே...அவரு உடம்புல இவ்வளவு ஊசி போட்டு, எதையும் சாப்பிடவிடாம பண்ணிட்டியேன்னு அருவாளை ஓங்கவும் அவங்க அப்பாவையும் கொடுத்து ரெண்டு லட்ச ரூபாயும் கொடுத்துட்டாங்க"

"எங்கப்பா எனக்கு சொல்லிக் கொடுத்தது என்ன தெரியுமா... நிறைய நல்லது செய் ... யாருக்கும் தீங்கு நினைக்காதே... இந்த பங்களாவுக்குள்ள யார் வந்தாலும் சோறு போடு... நான் பேச போறப்போ நிறையப் பேரு வருவாங்க... பையன காலேஜ்ல சேர்த்திருக்கேன் பணம் வேணுமின்னு கேப்பாங்க... எவ்வளவுன்னு கேட்டா... இருபதாயிரமுன்னு சொல்லுவாங்க... உடனே கொடுத்துடுவேன். நம்ம கூட நிறைய நல்லவங்க வருவாங்க... இதெல்லாம் தேறாதுன்னு சொல்லுவாங்க... படிக்கத்தானே பணங்கேக்கிறான்... கொடுத்தா என்ன"

"பசியின்னு வாறவன் கடவுள்ளுன்னு நினைங்க...எல்லா இடத்தில் கடவுள் கண்ணாக இருக்கிறான் என்று நினைப்பவன் தவறு செய்யவே மாட்டான் என திருவள்ளுவர் சொல்கிறார் என்றவர், இரண்டாயிர ரூபாய் ஷூவை வெளியில போட்டுட்டு பிள்ளையாரை கும்பிடப் போனவன், 'ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை...' மாப்ளே ஷூ இருக்குமா என்று பிள்ளையாரை கும்பிடவே மாட்டான். பிள்ளையார் பார்ப்பாரு... அந்த நாயை செருப்பால அடிச்சி வெளியில வெறட்டுன்னு சொல்லிடுவாரு..."

" பெத்த அம்மாவை மதிக்க மாட்டான். வீட்ல காளிய கும்பிடுவான். காளி பார்ப்பா, பெத்த தாய மதிக்க தெரியலை... மூதேவியின்னு மிதிச்சிடுவா... பெத்தவங்களை மதிக்கணும்... இப்ப முதியோர் இல்லம் எவ்வளவு கட்டியிருக்கான்யா... பய அப்பாகிட்ட சொல்லுறான்... உங்க காலத்துல இன்னும் வசதியா முதியோர் இல்லம் வந்திரும்ப்பான்னு... எனக்கு இறைவன் கொடுத்த பெரிய வரமே என் தாய், தகப்பனை கடைசிக் காலத்துல பாத்துக்கிற வாய்ப்பை கொடுத்ததுதான்"

'உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...' பாடலை விளக்கும் போது "அப்பாவை, அம்மாவை நினைச்ச புள்ள... எல்லாருக்கும் உதவுன புள்ள... நெஞ்செல்லாம் நல்லதே நினைச்ச புள்ள அந்த புள்ளை அவனைப் பாக்கிற... பாத்ததும் இப்படி மாறிடுறா... உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல... இதுதாய்யா கவிஞன், அடுத்த வரி போடுறான் பாரு... நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல... அடி சண்டாளி... சண்டாளி நீ பேசாத பேச்சு பேச்சே அல்ல... இப்ப தமிழ்நாட்டுல ஒரு நடிகைக்கிட்ட கேக்கிறாங்க... நீங்க இப்ப யார் கூட இருக்கீங்க... அவரு கூட இருக்கிறேன்... அவரு இதுக்கு முன்னாடி யார் கூட இருந்தாரு அப்படின்னு கேட்டா... அதுக்கு அவரும் ஏழெட்டுப் பேர் கூட இருந்திருக்காரு அப்படிங்கிறா... இல்வாழ்க்கை இப்படி அமையக் கூடாது. அறமும் பொருளும் சொல்லியிருந்தாலும் காமத்துப்பால்தான் 25 அதிகாரம்... காதல்ன்னா என்னன்னு என்னமா சொல்லியிருப்பாரு தெரியுமா" என்றார்.

கவிஞர் தன் காதலி இன்னொருத்தனை திருமணம் செய்து கொண்டதும் காதலன் பாடுவது போல் எழுதிய 'எங்கிருந்தாலும் வாழ்க...' பாடலை விளக்கும் போது, தன் காதலனிடம் தன் கணவனை அழைத்து வந்து காண்பிக்கிறாள்... எனக்குத் தெரிந்து படத்தின் கதையை ஒரு பாடலில் சொல்லும் திறமை செட்டியாரைத் தவிர்த்து யாராலும் முடியாது என்றார்.


(திரு.தமிழ்கடல் நெல்லை கண்ணன்)

"சிவாஜி ஒரு முறை என்னிடம் செட்டியாருக்கிட்ட பாத்து இருக்கணும்... அதுவும் செட்டியும் நாயுடுவும் (எம்.எஸ்.வி) சேர்ந்துட்டாங்க பாட்டப் போட்டு நம்மள கவுக்கப் பாப்பாங்க... நாம ஒரு படி மேல நிக்கணும். அதே மாதிரி பள்ளத்தூர் ஆச்சி, நாகேஷ் எல்லாம் நாம கொஞ்சம் அசந்தாலும் சாப்பிட்டுப்பிடுவாங்க அப்படின்னு சொன்னாரு."

"நான் சைவப்பிள்ளைமார்... நாங்க சுத்த சைவம்...ஒரு தடவை டி.ஜி.பி ஒருவர் வீட்டுக்குப் பொயிட்டேன். அந்தம்மா சிக்கன் கறி செஞ்சு சாப்பாடு போட்டுட்டாங்க... நான் சாப்பிடமாட்டேன் என்று சொன்னால் வருந்துவார்கள் என்பதால் குழம்பை மட்டும் போட்டு சாப்பிட்டு விட்டு வந்துட்டேன். அப்புறம் அந்தம்மா, அவ்ருக்கு போன் பண்ணி ஐயா சரியாவே சாப்பிடலைன்னு சொல்ல, அவரு என்ன சமைச்சீங்கன்னு கேட்க, சிக்கன்னு சொன்னதும் ஐயோ அவரு சைவமில்லன்னு சத்தம் போட்டாராம். ஒரு சில பேரு இருக்கான், நான் அதை சாப்பிடமாட்டேன்... இதை சாப்பிடமாட்டேன்னு... அப்புறம் எதுக்கு இருக்கணும்... போய் சேர வேண்டியதுதானே"

"நான் கடவுளிடம் கேட்பது என்னவென்றால் நான் இறக்கும் போது ஒரு பத்தாயிரம் பேராவது அழுக வேண்டும். எங்க ஊர்ல ஒருத்தன் இறந்த போது என் பங்காளி ஒருத்தன் அதிகமா அழுதான். ஏன்டான்னு கேட்டா நான் ஒருத்தன்தான் கடன் கொடுக்காம இருந்தேன்... நேத்துத்தான் கொடுத்தேன்னு சொன்னான்...அப்படியிருக் கூடாது."

"ஒருத்தன் தனக்காக தன் மனைவி உயிரையே கொடுப்பாள்ன்னு ஒரு சாமியார்கிட்ட சொன்னான். அந்த சாமியாரு நான் ஒரு மாத்திரை தாறேன்... போட்டுக்கிட்டு படு... செத்த மாதிரி ஆயிடுவே... அப்ப யார்... யார் என்ன சொல்றாங்கன்னு பாக்கலாமுன்னு சொன்னாரு... இவனும் அதே மாதிரி செய்ய... மனைவி நானும் வாறேன்னு அழுகிறா... மகனும் , மகளும் நாங்களும் வாறோமுன்னு சொல்ல, அவன தூக்கிட்டாங்க... போகும் போது கல்தூணில் இடிச்சிடுது... எழுந்துவிட்டான். சாமியார்கிட்ட போயி பாத்தீங்களா இவங்க அன்பைன்னு சொல்லியிருக்கான்... அவரு வேற மாத்திரை ஒண்ணு கொடுத்து நீ படுத்து வேடிக்கை பாருன்னு சொல்ல, அதே மாதிரி தூக்கும் போது பாத்து தூக்குங்க கல்தூணில் இடிச்சிறாமன்னு மனைவி சொல்லியிருக்கா,... அப்ப சாமி சொல்லியிருக்காரு... நீங்க உங்க உயிரக் கொடுத்தா அவரை காப்பாத்திடலாமுன்னு மனைவியிடம் சொல்ல, அவுக நேரம் முடிஞ்சி போச்சு... என்ன செய்யிறதுன்னாலாம், மகனோ அப்பா எல்லாம் அனுபவிச்சிட்டுத்தானே போயிருக்காருன்னானாம்... மகளோ ஒரு படி மேல போயி நான் வேற வீட்டுக்குப் போறவ... நான் எப்படின்னாளாம்... அவன் எழுந்து சாமியார்கூட பொயிட்டானாம்"

" கண்ணதாசா என்னை வைத்து எழுது என கவிஞனின் வீட்டு வாசலில் வார்த்தைகள் வந்து தவம் கிடக்கும்... வார்த்தைகளுக்காக அவர் காத்திருந்தது இல்லை... இப்பவும் சில கவிஞர்கள் இன்னும் திரையுலகத்தில் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அடச்சிக்கிட்டு இருக்கான்"

விசாலி கண்ணதாசன் பற்றி குறிப்பிடும் போது கண்ணதாசனின் மறுபிறப்பு என்றவர், அதே நெற்றி... அதே மாறுகண், அதே பேச்சு என்றார்.

"நான் செட்டியார்களிடம் பேசும் போது சொன்னேன்... நீங்கள்லாம் பெரிய அளவுல இருந்தாலும் உலகளவுல எங்க செட்டிய மட்டும்தானேய்யா தெரியுது என்று சொல்வது உண்டு."

"ஒரு பாட்டுல 'ஏனென்று கேட்காமல் வருவான்... நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்' என்றார் கவிஞர், கவிஞருக்கு கடவுள் எங்க போவாருன்னு தெரிஞ்சிருக்கு பாருங்க... பணக்காரன் வீட்டுக்கு கடவுள் போகமாட்டாருன்னு சொல்றாரு. ஏன்னா அவன் கடவுளையும் சந்தேகப்படுவான்."

'புத்தி சிகாமணி பெத்த புள்ள...'பாட்டை பற்றி சொல்லும் போது அதில் முத்துலெட்சுமி , 'வருசம் ஒருபுள்ள பெத்தெடுத்து வயசு இருபத்தி ஆறாச்சுன்னு...' பாடுவாங்க. அப்ப கவிஞன் போட்டான் பாருங்க எம்.ஆர்.ராதா பாடுற மாதிரி ஒரு வரி, "ஆனாலும் நான் கொஞ்சி நாளாச்சின்னு...' சொல்லி சிலாகித்தார்.

"ஒரு முறை கவிஞர் இன்னும் சில தண்ணிப் பிரியர்கள் ஒரு அறையில் தங்க நான் மற்றும் சிலர் வேறு அறையில் தங்கினோம். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அவர் அறைப்பக்கம் போனா எல்லாரும் தூங்கிட்டாங்க... செட்டியாரு மட்டும் சந்தோஷமா உலாவிக்கிட்டு இருக்காரு. காலையில அவருக்கிட்ட அண்ணே நேத்து ராத்திரி சந்தோஷமா உலாவுனீங்கன்னு சொன்னதும் முழுசும் பாத்தியான்னு கேட்டவரு, பழனியில அவனும் அப்படித்தானே இருக்கான்ன்னு சொன்னாரு... ஏன்னா முருகன் செட்டியார்ன்னு சொல்லுவாங்க..."

"செட்டியாரு பத்திரிக்கை ஒண்ணு நடத்தினாரு... அருமையான பத்திரிக்கை... நானும் ஏழு லெட்சம் கட்டி ஏஜென்ஸி எடுத்தேன்... போட்டது போட்டதுதான்... அவருகிட்ட ஒரு முறை அண்ணே ஏழு லட்சம்ன்னு சொன்னதும் என்ன நோட்டீஸ் அனுப்ப போறியா... பத்தோடு பதினொன்னுன்னு சொன்னாரு..."

"செட்டியாருக்கு உதவிய வள்ளல் சின்னப்பாதான்... செட்டியார் கஷ்டப்பட்ட போதெல்லாம் அவருக்கு உதவிகளை வாரி வாரிச் செய்தார். அவரு மாதிரி உதவிகளை யாரும் செய்ய முடியாது."

"இப்ப சினிமாவுல சோத்துக்கே வழியிருக்காது ஆனா சுவிட்சர்லாந்துல பாட்டுப் பாடுவாங்க... தமனாவெல்லாம் கிராமத்துப் பிள்ளையாய்யா... வெள்ள வெள்ளேருன்னு இருக்கு... இந்த தனுசு கொடுத்து வச்சவன்யா... ஸ்ரேயா மாமன் கூடவும் டான்ஸ் ஆடுறா... இவன் கூடவும் ஆடுறா..."

கணவன் மனைவி ஊடல், கூடல், கண்ணதாசன் சிவாஜிக்கு எழுதிய பாடல், நாகேஷை புகழ்ந்தது, எம்.ஜி.யாருக்கு எழுதிய 'மாபெரும் சபைதனில் நீ வந்தால்...',நேரு இறந்த போது எழுதிய பாடல் என கவிஞனில் கலந்து இன்னும் நிறைய விஷயங்களை சிரிப்புடன் அருமையாக பேசினார். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:

  1. நெல்லை கண்ணனின் இரண்டு மணி நேர பேச்சையும் கண் முன்னாடி கொண்டு வந்து அவர் பேச்சை போலவே உங்கள் எழுத்தும் தொய்வில்லாமல் வாசிக்க முடிந்தது சகோ.அருமை.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்தல்
    அருமையான பதிவு சார்

    பதிலளிநீக்கு
  3. இப்ப சினிமாவுல சோத்துக்கே வழியிருக்காது ஆனா சுவிட்சர்லாந்துல பாட்டுப் பாடுவாங்க... தமனாவெல்லாம் கிராமத்துப் பிள்ளையாய்யா... வெள்ள வெள்ளேருன்னு இருக்கு... இந்த தனுசு கொடுத்து வச்சவன்யா... ஸ்ரேயா மாமன் கூடவும் டான்ஸ் ஆடுறா... இவன் கூடவும் ஆடுறா..."//

    ஹா ஹா ஹ ஹா முடியல சிரிச்சி....!!!

    பதிலளிநீக்கு
  4. திரு நெல்லை கண்ணன் அவர்கள் பேச்சினை மிக நன்றாக நினைவில் வைத்து எழுதியிருக்கீங்க குமார். நீங்கள் ரசித்த அவருடைய நகைச்சுவை பேச்சை,நானும் ரசித்துப்படித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அறியாத பல தகவல்கள் ! விரும்பிப் படித்தேன். நன்றி நண்பரே !

    பதிலளிநீக்கு
  6. பல நல்ல பாடல்களை பற்றிய உங்க குறிப்பு அருமை. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துக்ள்.

    பதிலளிநீக்கு
  8. வாங்க ஆசியாக்கா...
    உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.


    வாங்க செய்தாலி...
    உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    வாங்க மனோ அண்ணா...
    உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாங்க ரமா அக்கா...
    உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    வாங்க சகோ. தனபாலன்...
    உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    வாங்க சகோ.ராஜி...
    உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க ரத்தினவேல் ஐயா...
    உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    முகநூலில் பகிர்ந்தமைக்கு நன்றி.
    உங்கள் முகநூல் லிங்க் தரமுடியுமா?

    பதிலளிநீக்கு
  11. அன்பின் குமார் - நேர் முக் அஒலிபரப்பு போல அமைந்த பதிவு நன்று. நெல்ல கண்ணனின் பேச்சினை - பேச்சின் சாரத்தினை - அருமையாகத் தந்தமை நன்று. மிக மிக் இரசித்தேன். நல்வாழ்த்துகள் குமார் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  12. Nellai kannan is one of the greatest Tamizh orators I admire. You did a wonderful job of writing his speech on his own style, which makes me to visualize his oration in person.
    I appreciate very much your wonderful skill of writing ! Keep it up. Shan New York USA

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி