நண்பர் வெறும்பய அவர்கள் ஒரு மாதத்திற்கு முன்னர் மன்னாதி மன்னன் என்ற அரசர்கள் குறித்த தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அலுவலக வேலைப்பளுவின் காரணமாக வலைப்பூவில் அதிகம் எழுதமுடியாத சூழல்... அதனால் சில நாட்களாக வலைப்பூவில் இருந்து சில காலம் விலகியிருக்கலாம் என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.
இருந்தும் நண்பரின் அழைப்பை கிடப்பில் போடுவது நட்புக்கு அழகில்லை என்பதால் இன்று வேலையில் சில மணிகள் இடைவெளி கிடைத்ததால் விக்கிப்பீடியா (விக்கிப்பீடியாவை தவிர்க்கச் சொல்லியிருந்தார் நண்பர்... இருந்தும் வரலாற்று உண்மைகளை பார்க்க அதை நாடாமல் இருக்க முடியவில்லை) மற்றும் நான் படித்த புத்தகங்களின் உதவியுடன் எழுதியாச்சு.
உண்மையை சொன்னா பத்தாப்பு வரைக்கும் வரலாறு படிச்சது... எம்புட்டு நாளாச்சு... இதுல நாமளா எழுதுறதுங்கிறது என்னைப் பொறுத்தவரை சாத்தியமில்லை. ஊரில் இருந்தாலாவது படித்த அறிஞர்களிடம் கேட்டு எழுதியிருக்கலாம். பாலைவன பூமியில் எங்கே போவது.... அதனால் விக்கிப்பீடியா உதவியுடன் மன்னாதி மன்னன்களைப் பற்றி எழுதியாச்சு... காப்பியடிச்சாலும் கலந்து அடிச்சிருக்கோமுன்னு நண்பர் வெறும்பய அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மெய்க்காப்பாளராக இருந்து சிவகெங்கை சீமையின் மன்னரான மருது சகோதரர்கள். மருதிருவரின் வீரத்தையும் மக்கள் மீது கொண்ட பாசத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.
பாண்டியர்கள் , நாயக்கர்கள் ஆட்சி செய்த சிவகெங்கை சீமை, அவர்களைத் தொடர்ந்து நவாப் ஆட்சியின் கீழ் இருந்தது. 1604ஆம் ஆண்டு சேதுபதிகள் கட்டுப்பாட்டில் வந்தாலும் நாயக்கர்களுக்கும், நவாப்புக்க்களுக்கும் கப்பம் கட்டி அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்திருக்கிறார்கள்.
1674 முதல் 1710 வரை சிவகெங்கை சீமையை ஆட்சி புரிந்த கிழவன் சேதுபதிக்குப் பின்னர் அவரது மகன் விஜயரகுநாத சேதுபதி தனது மகள் அகிலாண்டேஸ்வரியை சசிவர்ணத்தேவருக்கு மணம் முடித்துக் கொடுத்தார்.அதன் பின்னர்தான் சிவகெங்கை சீமையில் மாற்றங்கள் வந்தன எனலாம்.ஆம் சேது நாட்டில் (தற்போதைய ராமநாதபுரம்) மூன்றில் ஒரு பங்கு பகுதியை சிவகெங்கை சீமையுடன் சேர்த்ததைத் தொடர்ந்து தனி ஆட்சியின் கீழ் வந்தது.
சசிவர்ணருக்கும் அகிலாண்டேஸ்வரிக்கும் பிள்ளை பிறக்கவில்லை. அதனால் சசிவர்ணரின் மற்றொரு மனைவியான பூதக்க நாச்சியாருக்கு பிறந்த முத்துவடுக நாதர் தந்தைக்குப் பின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். அவருக்கு மெய்க்காப்பளராக வந்தவர்கள்தான் பெரிய மருது, சின்ன மருது என்ற மருதிருவர். இவர்கள் பிறந்தது அருப்புக் கோட்டை பக்கம் என்றாலும் அவர்களது தாயார் பிறந்தது சிவகெங்கை பக்கம் எனவே அவர்களுக்கு பரிச்சயப்பட்ட பூமிதான் அது.
ஆங்கிலேயர்களுடன் ஆற்காடு நவாப்பும் இணைந்து சூழ்ச்சியால் முத்துவடுகரை வீழ்த்திய பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் முத்து வடுகரின் மனைவி வேலு நாச்சியார். முத்து வடுகு மற்றும் வேலு நாச்சியாரின் ஆட்சியில் பெரிய மருது தலைமை அமைச்சராகவும் சின்ன மருது படைத் தளபதியாகவும் பொறுப்பு வகித்தார்கள். முத்து வடுகர் இவர்கள் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாரோ அதே நம்பிக்கையை வேலு நாச்சியாரும் கொண்டிருந்தார். கால ஓட்டத்தில் பெரிய மருதுவும் வேலு நாச்சியாரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு எல்லா நிகழ்வுகளிலும் பெரிய மருது மன்னராகவே அங்கீகரிக்கப்பட்டார்.
மருதிருவர் செய்த கோவில் திருப்பணிகள் ஏராளம்... அதில் குறிப்பிடத்தக்கது அவர்களிம் இரண்டாம் தலைநகர் என்றழைக்கப்பட்ட காளையார் கோவிலில் கட்டிய காளீஸ்வரர் கோவில் திருப்பணிதான். சுவாமி சன்னதி வாசலில் இருக்கும் 157 அடி உயர கோபுரம் பெரிய மருதுவின் தீவிர முயற்சியால் கட்டப்பட்டது. பாண்டியர்கள் கால வழக்கப்படி பெரிய கோபுரம் கட்டியதால் மருதிருவர் அதன்பின் மருது பாண்டியர்கள் என்றழைக்கப்பட்டனர்.
சிவகங்கை சமஸ்தானத்தின் கீழ் இருக்கும் கண்டதேவி கோவிலின் கோபுர உச்சியில் இருந்து பார்த்தால் காளையார் கோவில் கோபுரமும்... காளையார் கோவில் கோபுர உச்சியில் இருந்து பார்த்தால் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெற்கு கோபுரமும் தெரியும் என்று சொல்வார்கள். இதற்குச் சான்றாக,
"மதுரக் கோபுரம் தெரியக் கட்டிய
மருது வாரதைப் பாருங்கடி"
என்ற நாட்டுப்பாடல் உண்டு.
செட்டிநாட்டுக் கவி கண்ணதாசன் எடுத்த 'சிவகங்கைச் சீமை' என்ற படத்ததில் இந்தப் பாடல் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அன்றைய கால கட்டத்தில் சிவகெங்கை சீமையைச் சுற்றி பெருங்காடாக இருந்த காரணத்தால் ஒரு கோபுரத்தில் இருந்து மற்றொரு கோபுரத்தை பார்த்திருக்கலாம் ஆனால் தற்போது அது சாத்தியமா என்பது தெரியவில்லை.
இப்போது இருக்கும் நவீன வசதிகளோ வாகன வசதியோ இல்லாத அக்காலத்தில் மானமதுரைக்கு அருகில் செங்கல் சூளை உருவாக்கி அங்கிருந்து காளையார் கோவிலுக்கு ( ஏறத்தாழ 13 மைல்கள்) பல்லாயிரக் கணக்கான மக்களை வரிசையாக நிற்க வைத்து கற்களைக் கொண்டு வந்து கோவில் கட்டியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
சின்ன மருது சிறுவயல் அரண்மனையில் இருந்த போதிலும் படைத்தளபதி என்பதால் காளையார்கோவிலில் இருந்த படைத்தளத்தில் பெரும்பாலான நேரங்களை செலவிட்டிருக்கிறார். இவர்களது படை ஆங்கிலேயரின் படைக்கு ஈடு கொடுக்கக் கூடியாதாக, சரிநிகரானதாக இருந்திருக்கிறது.
ஆங்கிலேயருக்கும் மருது பாண்டியருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளால் அவ்வப்போது சண்டைகள் ஏற்பட்டன. படையுத்திகளில் வல்லவரான சின்ன மருது தன நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி நாவல்தீவின் விடுதலைக்காகவும் பாடுபட்டார். வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையில் தீவிர பிடிப்புடன் இருந்த சின்ன மருது அதற்காக திப்பு சுல்தான், கேரள குறுநில மன்னர்கள், கன்னட அரசர்கள், மராட்டிய தலைவர்கள், பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பாளையக்காரர்கள், போராளிக் கழக அங்கத்தினர் என எல்லாரையும் ஒருங்கிணைத்து ஒரு எதிர்ப்புக் குழுவையே உருவாக்கியிருக்கிறார். இந்தக் குழுவின் கூட்டங்கள் திண்டுக்கல், திருப்பாச்சி உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளன. இந்தக் குழுவின் தலைவரான சின்ன மருதுவின் ஆணைப்படி அனைவரும் பணியாற்றியிருக்கிறார்கள்.
இவர்களது வெள்ளையர் எதிர்ப்பு குறித்த எழுச்சி நோட்டீஸ் 1801ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோவில் மதில் சுவடில் ஒட்டப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. இதை அறிந்த ஆங்கில அரசு தங்களுக்கு எதிராக உருவாகியிருக்கும் எதிர்ப்புக்குழுவை முளையிலேயே கிள்ளி எறிய நினைத்தது. அப்போது சென்னையை ஆண்ட ராபர்ட் கிளைவின் மகனான எட்வர்ட் கிளைவின் அரசு, 1801ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி இதற்கான அரசாணையை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சியில் ஆரம்பித்து எல்லா இடங்களையும் அழித்த ஆங்கிலப்படை மைசூரையும் வீழ்த்தி, முடிவில் சிவகெங்கை சீமைக்கு வந்தது.
ஏறத்தாழ எட்டுமாதங்கள் சிவகெங்கை சீமையை முற்றுகையிட்டு சின்னச்சின்ன வெற்றிகளைப் பெற்ற ஆங்கிலப் படைகளால் முழுமையான வெற்றியை தனதாக்கிக் கொள்ளமுடியவில்லை. இந்தியாவில் அவர்கள் நடத்திய போரில் சிவகெங்கை சீமையில் மரித்தது போல் அவர்களது வீரர்கள் எங்கும் மரித்ததில்லையாம். அவ்வளவு பேரை காவு வாங்கியிருக்கிறது சின்ன மருதுவின் தலைமையிலான வீரப்படை.
சிவகெங்கை சீமையை கைப்பற்றினால்தான் சென்னை கோட்டையில் வாசம் செய்வது உறுதியாகும் என்ற நிலைக்கு வந்த ஆங்கிலப்படை காளையார்கோவிலை கைப்பற்றியே தீரவேண்டும் என்ற முடிவில் தீவிரமானது. கர்னல் அக்னியூ தலைமையில் சிவகெங்கை சீமையை சுற்றி 40 மைல் சுற்றளவுக்கு விரிந்து இருந்த காட்டை சுற்றி வளைத்தது. அந்த முயற்சியும் பலிக்கவில்லை.
காளீஸ்வரர் கோவில் கோபுரத்தை பீரங்கி கொண்டு தகர்க்க இருப்பதாக மருதிருவருக்கு செய்திகள் வந்தன. இதுபோல் கோவில் தகர்ப்பு சம்பவங்களும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த முடிவுகளையும் அசைபோட்ட சின்ன மருதும் பெரிய மருதும் இரவோடு இரவாக கிட்டத்தட்ட 78000 பேரை உள்ளடக்கிய தங்களது படையையும் தளவாடங்களையும் காளையார்கோவிலை விட்டு வெளியேற்றினர்.
அந்த சமயத்தில் வெள்ளையனுக்கு உதவிய குள்ள நரியால் சுரங்கப் பாதையை அறிந்து அதன் வழியாக செப்டெம்பர் 30ஆம் தேதி இரவு, அக்னியூ காளையார் கோவில் எல்லைக்குள் நுழைந்தான்.
அக்டோபர் ஒன்றாம் தேதி உள்ளே வந்த ஆங்கிலப்படைக்கு மருது சகோதரர்கள் இல்லாத காளையார் கோவிலில் எந்த எதிர்ப்பும் இல்லை. பீரங்கி வைத்து வெடிக்கவோ துப்பாக்கி சூடு நடத்தவோ வேண்டிய அவசியமும் அக்னியூ தலைமையிலான ஆங்கிலப்படைக்கு ஏற்படவில்லை. அவர்கள் தங்களது கொடியை கோட்டை வாசலில் ஏற்றவில்லை... கோபுர உச்சியில் ஏற்றினார்கள்.
பெரும் வலிமையுடன் இருந்த மருது சகோதரர்கள் கோவிலுக்காக தங்களது போராட்டத்தை குறைத்து நகரைவிட்டு வெளியேறியது வெள்ளையர்களை இந்தியாவில் மேலும் 146 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்திவிட்டது என்றே சொல்லலாம். அதன்பின் போராளிகளின் போராட்டத்தில் தொய்வு ஏற்பட்டதால் போர் முடிவுக்கு வந்தது.
காளையார் கோவிலை கையகப்படுத்திய அக்னியு அக்டோபர் 11ஆம் தேதி சிவகெங்கை காடுகளை அழிக்க உத்தரவிட்டான். காடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. காடுகள் அழிக்கப்பட்ட சிவகெங்கை சீமை வறண்டு செங்காட்டுப்பூமியாய் காட்சியளித்தது... இன்றும் அதே வறண்ட நிலைதான் தொடர்கிறது என்பதே உண்மை.
நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் அதீத பாசம் வைத்திருந்த மருதிருவரும் அந்தப் பகுதியிலேயே மறைந்து வாழ்ந்தனர். அவர்களின் தலைமறைவு வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அவர்களின் மெய்க்காப்பாளன் கருத்தன் காட்டிக்கொடுக்க, ஆங்கிலேயருடன் ஏற்பட்ட மோதலில் காலில் பாய்ந்த குண்டுடன் கைது செய்யப்பட்ட சின்ன மருதும் அதற்கு அடுத்த நாளில் கைது செய்யப்பட்ட பெரிய மருதும் அக்டோபர் 24ஆம் தேதி திருப்பத்தூரில் தூக்கிலப்பட்டனர்.
சிவகெங்கை மாவட்டத்தில் மருதிருவர் பயன்படுத்திய கோட்டைகள் சிதிலமடைந்திருந்தாலும் இன்றும் வரலாற்றுச் சின்னங்களாய் காட்சியளித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
தேவகோட்டையில் இருந்து காரைக்குடி வரும் வழியில் இருக்கும் சங்கரப்பதி கோட்டையில் (விசுவின் சிதம்பர ரகசியம் படத்தில் இந்த் கோட்டை காட்டப்படும்) மருது சகோதரர்கள் காளையார் கோவிலில் இருந்து ரகசியமாய் வருவதற்காக சுரங்கப்பாதை வைத்திருந்தார்கள் என்று சொல்வார்கள். மேலும் வெள்ளையர்களிடமிருந்து வீரபாண்டிய கட்டப்பொம்மனை காப்பாற்ற இங்கு மறைத்து வைத்ததாகவும் கதைகள் உண்டு.
இந்திய விடுதலைப் போரில் பெரும்பங்கு வகித்த மருதிருவரின் வரலாறு சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.
நீங்க தொடருங்கன்னு யாரையும் மாட்டிவிட மனசில்லை... ஆதாலால் மக்களே என் மனசைத் தொடரும் 93 பேரில் இதுவரை எழுதிய சில நண்பர்கள் தவிர்த்து அனைவரும் இதைத் தொடரும்படி வெத்தலை பாக்கு வைத்து (சுண்ணாம்பு வைக்காமல்) கேட்டுக் கொள்கிறேன்.
மருதிருவரின் வீர வரலாற்றைப் படிக்க ஆர்வம் உள்ளவர்கள் கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பக வெளியீட்டில் திரு. மீ.மனோகரன் அவர்கள் எழுதிய 'மருது பாண்டிய மன்னர்கள் 1780-1801' என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.
வரலாற்று உண்மைகளை வழங்கிய விக்கிபீடியாவுக்கும் அருமையான படங்களைத் தந்த கூகிளுக்கும் நன்றி.
வரலாற்று உண்மைகளை வழங்கிய விக்கிபீடியாவுக்கும் அருமையான படங்களைத் தந்த கூகிளுக்கும் நன்றி.
-'பரிவை' சே.குமார்
மருது சகோதரர்கள் பற்றி பள்ளியில் படித்தது! இப்போது நன்றாக விளக்கமாக படிக்கிறேன்! அருமை!
பதிலளிநீக்குஅருமையா எழுதி இருக்கிங்க குமார்.
பதிலளிநீக்குவெறும்பய தொடர வைத்த குரூப்ல உங்க கூட நானும் இருந்தேன் :)
நல்ல பகிர்வு அண்ணா , நான் திருப்பத்தூரில் பிறந்தவன் என்ற பெருமை . நான் சிறு வயதில் படித்த அனைத்தும் இன்று மறு முறை படிக்க மிக ஆவலாக இருந்தது . ஒரு குறிப்பு அந்த காலத்தில் என் முதாதையர்கள் மருதுபாண்டியர்களுக்கு அவர்கள் ஆட்சி காலத்தில் தண்டல் பணம் வசூல் செய்து கொடுத்து வந்ததால் எங்கள் குடும்பம் இன்றும் திருப்பத்தூர் வட்டாரத்தில் தண்டல்காரர் என்றே அழைக்கப்படுகிறோம். இதில் பெருங்கொடுமை என்ன வென்றால் நாம் அடித்து விரட்டிய ஆங்கிலயர்களிடமே நான் இப்போது நான் மாத சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறேன் .
பதிலளிநீக்குஒன்று மற்றும் நன்றாக தெறிகிறது காலம் அனைத்தையம் மாற்றி விடுகிறது.
வரி என்று வாய் திறந்தால் அது கிழிக்கப்படும் என்று சூளுரைத்த மன்னர் முத்துவடுகனாத தேவரும் சரி,,,,வெள்ளையனின் ஆதிக்கத்திற்கு இந்தியவிலேயே முதல் குரல் கொடுத்து எதிர்த்த வீரமங்கை வேலு நாச்சியாரும் சரி....
பதிலளிநீக்குமாமன்னர்கள் மருது பாண்டியர்களும் சரி........சிவங்ககைச் சீமையின் உள்ளே பிரவேசம் செய்யும் ஒவ்வொரு மனிதரின் கண் முன்னாலும் காட்சிகளாய் விரிவதற்கு ஒராயிரும் விசயங்கள் உணர்வு பூர்வமாக இருக்கின்றன...
செம்மண் பூமியின் வீரமிகு மருது சகோதரர்களை பறி எழுதியதற்கு நன்றிகள் + வாழ்த்துக்கள் குமார்...!
வாங்க எஸ்.கே...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மருது சகோதரர்கள் பற்றி போதிய வரலாற்று பார்வை நம்மிடம் இல்லை என்பதே உண்மை. நன்றி
வாங்க சுசி...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
ஆம் உங்கள் பெயரும் பார்த்தேன். விரைவில் எழுதுங்கள்.
வாங்க Muthupearl...
பதிலளிநீக்குஉங்கள் முதல் வருகைக்கு நன்றி.
நான் தேவகோட்டைதான்.... நானும் சிறுவயதில் படித்ததே. நானும் உங்கள் மூதாதையரைப் போல் எங்கள் பகுதியிலும் தண்டல்காரர்கள் குடும்பத்தைப் பார்த்திருக்கிறேன். எங்கு வேலை பார்க்கிறீர்கள்...
ஆம் உண்மைதான் காலம் அனைத்தையும் மாற்றித்தான் விடுகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாங்க தேவா அண்ணா...
பதிலளிநீக்குஆம் அண்ணா... முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்ட சிவகெங்கை சீமையின் முத்து வடுகரும் வேலு நாச்சியாரும் வீர மறவர்கள் மருது சகோதரர்களும் குறித்து ஓராயிரம் விசயங்கள் உண்டு.
அந்த செங்காட்டுப் பூமியில் நாமும் பிறந்திருக்கிறோம் என்பதே பெருமைதானே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
மூன்று வருடங்களுக்கு முன் காரைக் குடிக்கு நான் வந்திருந்த போது,நண்பருடன் காளையார்க் கோவில்
பதிலளிநீக்குசெல்ல வாய்த்தது.கோவிலையும்,மருது சகோதரர் வரலாறும் நண்பர் சொல்லச் சொல்ல நெகிழ்ந்து நின்றது நினைவுக்கு வந்தது. நன்றி குமார். சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.
பள்ளியில் படிக்கும் போது இல்லாத ஆர்வம், இப்பொழுது அதிகம் வருகிறது. அருமையாக தொகுத்து தந்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குநல்ல வீரமன்னனை எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். நல்ல பதிவு.
பதிலளிநீக்குvery nice post!!
பதிலளிநீக்குரொம்ப நல்லாயிருந்தது குமார். மருதிருவர் பத்தி அந்த தொடர்பதிவுல எழுத நெனச்சிருந்தேன். ஆனா அது இத விட நல்லா வந்திருக்குமா சந்தேகம் தான்.
பதிலளிநீக்குவாங்க மோகன் சார்...
பதிலளிநீக்குஉண்மைதான் மருதிருவர் வீரர்கள்தான். காளையார் கோவில் ஒரு அற்புதமான படைப்பு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சித்ரா மேடம்...
பதிலளிநீக்குபடிக்கும் போது வரலாறு என்றாலே வேப்பங்கய்தான். இப்ப படிக்கையில் ஆர்வம் வரத்தான் செய்கிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அம்பிகா மேடம்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனகா மேடம்....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கயல்...
பதிலளிநீக்குநான் முந்திக் கொண்டேனா...
உங்கள் எழுத்தில் மருதிருவர் கண்டிப்பாக இதை விட சிறப்பாக இருந்திருக்கும்...
ஆமா எப்ப எழுதப் போறீங்க?
வரலாற்றில் உள்ள எனது ஊர் காளையார்கோவில் இன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது... ஏமாற்றம் தான்...
பதிலளிநீக்குநல்ல பதிவு... அருமையாக எழுதியுள்ளீர்கள்...
பதிலளிநீக்குஎன் அழைப்பை ஏற்று எழுதியமைக்கு நன்றி..
நன்றியும் பாராட்டுக்களும்...
பதிலளிநீக்குகேள்விப்பட்டது கூட இல்லை சார்.. எத்தனை இழந்திருக்கிறோம்!
பதிலளிநீக்குஉங்கள் பதிவுக்கு நன்றி.
வாங்க ரோஸ்விக்...
பதிலளிநீக்குநீங்க காளையார்கோவிலா? இப்போ எங்கே இருக்கிறீர்கள்? தேவகோட்டை, காளையார்கோவில் எல்லாம் வளர்ச்சியடையாமலேயே இருக்கின்றன. என்ன செய்வது?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வெறும்பய அண்ணா...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நான் பாஸ் பண்ணியாச்சா... அய்யா... பரிசு எங்கே?
வாங்க உழவன்....
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அப்பாத்துரை...
இன்னும் நிறைய வரலாற்றுச் சுவடுகள் இருக்கின்றன...
முடிந்தால் அடுத்தும் எழுதலாம் என்று இருக்கிறேன்.
பார்க்கலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நன்றாக விளக்கமாக அருமை!
பதிலளிநீக்குஅருமையான விவரிப்பு.. மற்றும் அதற்கு ஏற்ற படங்கள் அங்கங்கே..!!
பதிலளிநீக்குமுழுமையாக இருக்குங்க.. பகிர்வுக்கு நன்றி :-)
//ஆதாலால் மக்களே என் மனசைத் தொடரும் 93 பேரில் இதுவரை எழுதிய சில நண்பர்கள் தவிர்த்து அனைவரும் இதைத் தொடரும்படி வெத்தலை பாக்கு வைத்து (சுண்ணாம்பு வைக்காமல்) கேட்டுக் கொள்கிறேன்.//
நீங்க சுண்ணாம்பு வைக்காததால் நான் எழுத மாட்டேன்.. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். :-))
வாங்க ஆனந்தி...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சுண்ணாம்பு வேணுமா... நாளைக்கே பார்சல் போட்டு விட்டுடுவோம்... சீக்கிரம் எழுதணும் சரியா?
வாங்க தியா...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல பகிர்வு! நன்றாகவும் எழுதி இருக்கிங்க, வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஎன் தேசம் நேசிக்கும் நேசனே, வணக்கம். உங்கள் கடும் முயற்சியில் இந்த தொடரை எழுதி இருப்பது தெரிகிறது. நல்ல தமிழில் ஒரு சுத்த தமிழனை சுவாசிக்க முடிந்தமைக்கு உமக்கு நன்றி. மண் வாசனை மாறாத எழுத்துக்கள். சீவகங்கை சீமைக்கு என தனி வரலாறே உண்டு. அருமை. அருமை. தொடருங்கள்.
பதிலளிநீக்கு