மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

பூமாராங் (காற்றுவெளி மின்னிதழ்)

சித்திரை மாத காற்றுவெளி மின்னிதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. சிறுகதையை வெளியிட்ட ஆசிரியர் முல்லை அமுதனுக்கு நன்றி.

இதழுக்கான இணைப்பு : http://kaatruveli-ithazh.blogspot.co.uk/

*****



பூமாராங்
'இந்த அநியாயம் எங்கயாச்சும் நடக்குமா என்ன... இப்படிப் பண்ணிட்டாளே... இவளெல்லாம் பொம்பளப் புள்ளதானா...' காயத்ரிக்கு மனசு கிடந்து அடித்துக் கொண்டது. 

'சை என்ன ஜென்மங்களோ... இவளுகளுக்கு எல்லாம் எப்படி இப்படித் தோணுதோ... இதுகளை எல்லாம் செங்கக் காலவாயில வச்சி எரிக்கணும்...' மனசுக்குள் திட்டிக் கொண்டே சுபத்ரா கொடுத்த தண்ணீரை மடக் மடக்கென்று குடித்தாள். 

வாயில் ஊற்றிய நீர் வெளியில் வடிந்து மார்ப்புச் சேலையை நனைத்தது.

"ஏன்டி... தண்ணிய மெதுவாத்தான் குடிச்சா என்ன... அப்புடியென்ன அவசரம்... எந்த ரெயிலப் பிடிக்கப் போறே.... நல்லாத்தான் சின்னப்புள்ளயாட்டம் சேல எல்லாம் நனச்சிக்கிட்டு..." சிரித்துக் கொண்டே கேலி செய்தாள் சுபத்ரா.

"அடியாண்டி நெஞ்சு பத்திக்கிட்டு எரியுது... இவளுக எல்லாம் என்ன நெனச்சிக்கிட்டு இருக்காளுக... இந்நேரம் இதயே ஒரு பய பண்ணியிருந்தான்னா நம்ம ஊர்ல எல்லாப் பயலும் வாள்வாள்ன்னு கத்தியிருப்பானுங்க... பொட்டச்சி பண்ணினா... அதுவும் அவனுக வீட்டுல பண்ணினா சத்தங் காட்ட மாட்டானுங்க..."

"ஏய்... இப்ப எதுக்கு நீ இந்தக் குதி குதிக்கிறே...?"

"என்னடி தெரியாத மாதிரி பேசுறே... இது படிச்ச பொட்டச்சி செய்யிற வேலயா... சொல்லு..."

"இங்க பாரு... அந்தக் குடும்பத்துக்கும் நம்ம பங்காளிகளுக்கும் ஒத்து வராது... நீ ஏதாவது பேசப்போக அவனுக அத ஊதிப் பெரிசாக்கி நம்மக்கிட்ட பிரச்செனக்கி வருவானுங்க... அவனுகளப் பத்தித்தான் தெரியுமில்ல... பேனப் பெருமாளா ஆக்குறவனுங்க... இது அவனுக வீட்டுப் பெரச்செனங்கிறதால பேசமா இருக்கானுங்க.. இந்நேரம் இது நம்ம வீட்டுப்பக்கம் நடந்திருக்கட்டும்... இந்நேரம் ஊருக்கே தந்தி அடிச்சிருப்பானுங்க..."

"அதுக்காக... அவ பண்ணுது செரியின்னு சொல்லுறியா...?"

"இங்க பாரு... நான் செரியா தப்புன்னு பேச வரல... இத யாரு செரியின்னு சொல்லுவா... நமக்கு இது தேவயில்லன்னுதான் சொல்லுறேன்... நம்ம வீட்டுப் புள்ளயள நாம செரியா வளத்தாப் போதும் அம்புட்டுத்தேன்… நமக்கு வேண்டாத சனங்க எப்புடிப் போனா நமக்கென்ன... விட்டுட்டு வேலயப் பாரு... கத்திரிக்காய் முத்துனா கடத்தெருவுக்கு வந்துதான் ஆவும்... ஆமா..."

"என்னடி இப்படிப் பேசுறே...? யாரு வீட்டுப் புள்ளயா இருந்தாலும் பாதிக்கப்பட்டவங்களோட மனசு என்ன பாடுபடும்..."

"அடிப்போடி... பாதிக்கப்பட்டவுங்களுக்காக நாம பாவப்பட்டாலும் அவனுக யாருக்காகவும் பாவப்படுறவனுக இல்லதானே... மூத்தவள ஒரு இடத்துல கட்டுனானுங்க... என்னாச்சு... மாப்பிள்ளை இப்ப வீட்டோட... எங்க பயல எங்ககிட்ட திருப்பிக் கொடுங்கன்னு கேக்க வந்த அப்பன அவனோட மவன விட்டே வெரட்ட வச்சானுங்களா இல்லயா...”

“ம்…”

“இன்னைக்கு மாமானும் மாப்பிள்ளயுமா வண்டியில சுத்துறானுங்க... பெத்த அப்பன் டவுனுக்குள்ள ஒரு கட வச்சிக்கிட்டு கஷ்டப்பட்டு வாழ்க்கய ஓட்டிக்கிட்டு இருக்காரு... சரி அத வுடு... ரெண்டாவது புள்ளய கட்டுனானுங்களே... அதாச்சும் சேர்ந்து வாந்துச்சா... புருஷன் அடிக்கிறான்... புருஷன் திட்டுறான்னு தினம் ஒரு பொய்ய ஆத்தாக்கிட்ட அவுத்து விட்டுட்டு... அத எல்லாரயும் நம்ப வச்சி... ஆத்தா பின்னாடியே திருஞ்சிச்சு... முறுக்கிக்கிட்டு போன அவ புருஷன் இப்ப மாமியாவுக்கு டிரைவரு... பொண்டாட்டி முந்தானய பிடிச்சிக்கிட்டு அவனும் பெத்த நாத்தானப்பன ஏவங் கேக்குறானா இல்லயா... விட்டுட்டுப் போடின்னா..."

"ஏன்டி வெக்கங் கெட்டவனுங்க பெத்தவங்கள விட்டுட்டு இங்க வந்து கிடக்குறானுங்களே... இதே மாதிரி நாளக்கி இவங்க பொத்திப் பொத்தி வளக்குற மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா... அவன் இவங்களப் பாக்காம மாமியா வீட்டுக்குப் பொயிட்டா... பொயிட்டா என்ன... போகத்தான் போறான்... நான் பாக்கத்தான் போறேன்... அன்னக்கி கெடந்து கத்துவாளுங்கதானே... அப்பத் தெரியுமில்ல அவங்க பண்ணுனதோட பலனு..." கடுகடுப்பாகப் பேசினாள் காயத்ரி.

"என்னத்த அனுபவிக்கப் போறானுக... அவனுக நல்லாத்தான் இருப்பானுக... நல்லது நெனக்கிற நமக்குத்தான் எல்லாமே நேர்மாறா நடக்கும். செரி நீ எதுக்கு இம்புட்டுக் கோபமா இருக்கே... அவுக வெதச்சத அவுக அறுப்பாக... அந்தாளுக்கு அதெல்லாம் தெரியமயா மாப்பிள்ளகளுக்கு நில புலனெல்லாம் வாங்கி இங்கிட்டே செட்டில் பண்ணுறான்... என்ன செய்ய... இன்னக்கி ஒரு குடும்பதையில அறுத்துப் போட்டுப்புட்டானுக... செரி இதப் பேசுனா மனசு ஆறாது...  விட்டுட்டு வேலயப் பாருடி..."

"எனக்கு அந்த வீட்டு மூணாவது சிறுக்கி பண்ணுனதைக் கேள்விப்பட்டதுல இருந்து மனசு கொதிக்கிதுடி... நாக்க புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டாதான் என்னோட கோபமெல்லாம் அடங்கும். என்ன தகிரியம் அந்தக் குட்டிக்கு... என்ன நெஞ்சுரம் இருந்தா இப்படிப் பண்ணியிருப்பா..."

"அவதான் லெட்டர் எழுதி வச்சிருக்காளாமே... எனக்குப் பிடிக்கல... எங்கப்பாம்மாதான் என்னை கட்டாயப்படுத்துனாங்கன்னு..."

"படிச்சிருக்காதானே... பிடிக்கலன்னா முன்னாடியே சொல்றது... ஒருத்தனோட வாழ்க்கயில்ல போச்சு... நெடுங்குளத்துல மரியாதயான குடும்பத்துப் பிள்ள அது... ரோட்டுல பாத்தாக்கூட பல்லுத் தெரியாம சிருச்சிக்கிட்டு அத்த நல்லாயிருக்கிகளான்னு கேட்டுட்டுப் போகும்... அதோட வாழ்க்கயில வெளாண்டுட்டாங்களே பாவிய..."

"சொத்துப் பத்து இருக்க குடும்பம்ன்னு இவங்க போனாங்க... அவங்களுக்கும் இவுக மாப்பிள்ளகள வீட்டோட வச்சிக்கிறதும் தெரிஞ்சிருக்கு... இவ சங்கதியும் தெரிஞ்சிருக்கு… சரி தூரத்துச் சொந்தம் வேற... நமக்கிட்ட அப்படியெல்லாம் நடக்க மாட்டாக... புள்ளயும் பாக்க கலரா மொக லெட்சணமா இருக்கா... அவளும் ஒத்துக்கிட்டு பயலையும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாளேன்னு நெனச்சிருக்காங்க... பாவம் இப்ப வெளிய தலகாட்ட முடியாம நொந்து போயிகெடப்பாக... அதுக்காக நாம என்ன பண்ண முடியும்... “

"என்ன பண்ண முடியும்ன்னு என்னால் இருக்க முடியலடி... அவள… அந்தச் சிறுக்கி மவ சிறுக்கியோட முடியை அறுத்து எரியணும்... களவாணி நாயக் கண்டந்துண்டமா வெட்டணும்... என்ன ஒரு திமிரு... எம்புட்டுத் தகிரியம்… ஒருத்தனுக்கு கழுத்த நீட்டிட்டு எனக்குப் பிடிக்கல... நான் லவ்வு பண்ணுனவன் கூட போறேன்னுட்டு லெட்டர் எழுதி வச்சிட்டுப் போவா...”

“அவள வெட்டுணாச் சரியாயிருமா…” 

“இந்தச் சிறுக்கிய வெட்டுறதவிட இவளக் கூட்டிக்கிட்டு போனாம்பாரு அவனயும் சேர்த்து வெட்டணும்... பாவம் அந்தப் புள்ள மனசொடிந்து போயி மருந்தைக் குடிச்சி இப்ப ஆஸ்பத்ரியில உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்காம்.... அதோட தலயெழுத்து இந்தச் சிறுக்கிய கட்டி தொட்டுக்காம கட்டிக்காம மருந்தக் குடிச்சிட்டுக் கெடக்கு... இனி அதுக்கு கல்யாணமின்னாலே பாவக்காய் சாப்பிட்ட மாதிரி நெனக்காதா..."

"சனியன் இத்தோட போச்சுன்னு விட்டுட்டு வேற புள்ளயப் பாத்து கட்டிக்கிட்டு அது சந்தோஷமா வாழணும்... இதை நெனச்சிக்கிட்டு செத்து என்ன பண்றது... சரி அதை விட்டுட்டு நீ வேலயப் பாரு... எவளோ எக்கேடோ கெட்டுட்டுப் போறா... நாம் பொலம்பி என்னாகப் போவுது."

"என்னடி இப்படிப் பேசுறே... நீ எல்லாத்தயும் லேசா எடுத்துக்கிறே...? ஆனா என்னால முடியல..."

"வேற என்ன பண்ணச் சொல்றே... நம்ம புள்ளயா இப்படிப் பண்ணுச்சு... அது ஒரு கேடுகெட்ட குடும்பம்... அதப் பேசி என்ன பண்ண.... எங்கண்ணனுக்குத் தெரிஞ்சா உன்னய மட்டுமில்ல என்னயிம் தூக்கிப் போட்டு மிதிக்கும்... இது நமக்குத் தேவயா... வேலையைப் பாருன்னா..." 

“நம்ம பரம்பரெக்கே இந்தப் புத்தியில்ல…”

“நீ சொல்றது செரிதான்…”

"என்னவோ போ... இப்படியும் பண்ணிட்டு எப்படித்தான் சந்தோஷமா வாழுவாளுங்களோ தெரியல... என்னத்தைப் படிச்சி என்ன புண்ணியம்... படிக்க வச்சதுக்கு இதுதான் பலன்... ம்... நம்ம வீட்டு புள்ளயளயும் காலாகாலத்துல கட்டிக் கொடுக்கணும்... காலங் கெடக்குற கெடயில நமக்கெல்லாம் இந்தப் பேரு வேண்டாந்தா..." என்றபடி எழுந்தாள் காயத்ரி.

"ஆமா யாரக் கூட்டிக்கிட்டு ஓடுனாளாம்..." சுபத்ரா மெதுவாகக் கேட்டாள்.

"என்னடி என்னய பேசாதேன்னு சொல்லிட்டு இப்ப நீ மறுக்கா ஆட்டய ஆரம்பிக்கிறே...?"

"இல்ல யாருன்னு வெவரந் தெரியுமான்னு கேட்டேன்..."

"இவுகதான் மெட்ராஸ்ல வேல பாக்குறேன்னு லாத்துனாகள்ல... அங்க எவனோ ஒருத்தன லவ்வு பண்ணுனாகளாம் லவ்வு... வீட்ல சொன்னதுக்கு யாரு எவன்னு கூட கேக்காம நாங்க சொல்றவனத்தான் கட்டிக்கணுமின்னு மிரட்டி இந்தப் புள்ளக்கி கட்டி வச்சாகவளாம்”.

“அது செரி…”

 “ஒரு மாசமா ரெண்டுக்கும் ஒண்ணும் நடக்கலயாம்... ஒப்புக்குத்தான் புருஷன் பொண்டாட்டியாம்... வீட்டுக்குள்ள தனித்தனியாம்...  என்னமா யோசிக்கிறாளுங்க இப்ப உள்ளவளுவ...”

“அடி ஆத்தி…. இம்புட்டு நடந்திருக்கா… நமக்குத்தேன் ஒண்ணுந் தெரியிதில்ல…”

“சனியன் ஒத்துக்காம மருந்தைக் குடிச்சி செத்திருந்தாக்கூட பரவாயில்லை... அவன மேடயேத்தி இன்னக்கி அறுத்துப் போட்டுட்டு பொயிட்டா... அவளக் கூட்டிக்கிட்டு ஓடுன நாயி வெளங்குங்கிறே... எங்கயாச்சும் போகயில ரெண்டும் அடிபட்டுத்தான் சாகும்..." கைகளை நெறித்து 'சடச்சட'வென நெட்டி பறித்தாள்.

"சரி வாறேன்... பொழுசாய அங்கிட்டு வா..." என்றபடி எழுந்து முந்தானையை இழுத்து சொருக்கிக் கொண்டு அவிழாத கொண்டையை அவிழ்த்து கொண்டை போட்டுக் கொண்டு வீதியில் இறங்கினாள்.

'என்ன காயத்ரி ஒனக்கு வெசயந் தெரியுமா... ஒங்கண்ணன் மவன் இருக்கானுல்ல... அதான் ஒம்மவ செம்பவத்த கட்டணுமின்னு வச்சிருந்தியே... அந்தப்பய கூட வேல பாக்குற புள்ளய கட்டிக்கிட்டானாம்.... இப்பத்தான் ஒங்கண்ணனுக்குத் தெரியுமாம்... வீட்டுல கூகூன்னு கெடக்காம்... ஒங்கூரு ராமசாமி சொன்னான்... ஒனக்கு யாரும் சொல்லலயா...' என்றபடி மாணிக்கம் சைக்கிளை மிதிக்க, மகள் செண்பகம் கண்ணில் தோன்றி மறைய காயத்ரிக்கு நெஞ்சை அடைத்தது.

*************

நான் எழுதிய 'ஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்' என்ற பகிர்வு துபை நண்பர் நந்தகுமார் மூலமாக இந்நேரம்247 என்ற இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட இந்நேரத்தாருக்கும், அதற்கு காரணகர்த்தாவாக இருந்த நண்பருக்கும் நன்றி. அந்தப் பதிவின் கீழ் பேரைக் கொண்டு வருவதற்குத்தான் வெகுநேரம் முயற்சிக்க வேண்டியிருந்தது.

***

பிரதிபிலி மாயா சிறுகதைப் போட்டியில் 'பய'ராத்திரி அப்படிங்கிற பேர்ல நம்ம கதையும் இருக்கு. பேய், பிசாசு, திகில் எல்லாம் கலந்து எழுத வேண்டிய கட்டாயத்தால் கிறுக்கிப் பார்த்தேன்... வாசிங்க... ஆனா இதுல என்னய்யா திகிலு இருக்குன்னு கம்பு தூக்கிறாதீங்க.... நன்றி.


***
-'பரிவை' சே.குமார்.

சனி, 7 ஏப்ரல், 2018

ஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்

(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்)
லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்கள்ல சிலர் தானே பெரியவன் தனக்கு நிகர் யாருமில்லை என்பதாய்ப் பேசி பின்னர்தான் விழா நாயகனுக்கு வருவார்கள். இன்னும் சிலரோ எஸ்.ராவைப் பாருங்கள்.... ஜெயகாந்தைப் பாருங்கள்... கி.ராவைப் பாருங்கள் என முன்னத்தி ஏர்களை பெரிதாகப் பேசுவார்கள். பின்னத்தி ஏர் அதைவிட அருமையாக சால் போட்டு வருவதை சொல்வதில் அவர்களுக்கு தயக்கம் என்பதைவிட புகழக்கூடாது என்பதில் குறியாக இருப்பார்கள்... இன்னும் சிலரோ நீ எப்படி அவரைத் தாக்கிப் பேசப்போச்சு என ஒருமையில் குதிப்பார்கள். பெரும்பாலும் ஒலக எளக்கியம் பேசுவார்கள். அது நமக்கு சரிப்பட்டு வராது என்பதால் ஒதுங்கியே இருந்துவிடுவது என் வாடிக்கை.

நேற்று மாலை துபையில் ஒரு இலக்கிய நிகழ்வு... இங்கிருக்கும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான அய்யனார் அவர்களின் 'ஓரிதழ்ப்பூ' நூலறிமுக மற்றும் விமர்சனக் கூட்டம். மேடையை அலங்கரித்த மூன்று நாற்காலிகளிலும் ஏதோ முப்பெரும் தேவர்கள் அமருவார்கள் போலும் என்று நினைத்தால் ஓரிதழ்ப்பூவின் துர்க்காவும் அங்கயற்கன்னியும் அமுதாக்காவும் அமர்ந்து கொண்டார்கள். ஏதோ வித்தியாசமா யோசிக்கிறாய்ங்கய்யா (பாலாஜி கவனிக்க நாங்களும் மதுரக்காரய்ங்கதான்) எனத் தோன்றியதால் இது எளக்கியக் கூட்டமாக இல்லாமல் இலக்கிய கூட்டமாகத்தான் இருக்குமென நண்பர்களுடன் அமர, அரங்கு நிறைந்தது. அட பரவாயில்லையே புதுப்படம் போட்டாக்கூட தமிழ்ராக்கர்ஸ் இருக்க தைரியத்தில் அரங்கு நிறைவதில்லையே இங்கு நிறைஞ்சிருச்சிய்யா என்ற மகிழ்வும் ஏற்பட்டது.

விழாவின் ஆரம்பம் கடவுள் வாழ்த்துடன்... சப்தம் அதிகமாக இருந்தது. எல்லாரும் பாடுறானுங்கய்யா... இன்னும் மறக்கலை போல.

வரவேற்புரை வழங்கியவர் திருமதி. ரமா மலர் என்று சொன்னதாய் நினைவு. நல்லதொரு வரவேற்ப்பு உரை.

ஓரிதழ்ப்பூவை வச்சிச் செய்வார்கள் என்ற கனவைப் பொடிப்பொடியாக்கி(!?) ஆசிரியர் திரு.அய்யனாரை இதில் காரம் குறைவு இன்னும் காரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர்களே அதிகம் என்றாலும் என்னதான் கருவாட்டுக் குழம்புடன் கஞ்சி குடித்தாலும் சின்னவெங்காயமோ, பச்சை மிளகாயோ லேசாக் கடிச்சிக்கும் போது கிடைக்கும் சுவை அலாதிதானே... அப்படி எல்லாரும் சிக்ஸர் அடித்தாலும் அபுதாபியில் இருந்து புயலெனக் கிளம்பி பந்துவீசிய இருவர் கிளீன் போல்ட் ஆக்கத்தான் செய்தார்கள். ஸ்... அப்பா.... சொல்ல வந்ததைச் சொல்லியாச்சு.

நிறையப் பேர் பேசினாங்க.. நிறைவாய்ப் பேசினார்கள். சிலரை சுமையாக் கூட்டத்தின் மூலம் தெரியும்.... பலரை நேற்றுத்தான் அறிய முடிந்தது. நிறைய இலக்கிய ஆளுமைகள் துபையில் இருக்கிறார்கள் என்பது மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது. பேசியவர்கள் பெயரைச் சொல்லி எழுதினால் பக்கம் பக்கமாக பள்ளி, கல்லூரியில் தேர்வு எழுதியது போல் ஆகிவிடும் அப்புறம் பிலால் சொன்னது போல் எனக்கும் ஒரு அயற்ச்சி ஏற்பட்டு, உடம்பில் பிசுபிசுப்பு ஏற்பட்டு குளிக்கச் சொன்னாலும் சொல்லும் என்பதால் சிலவற்றை மட்டும் சொல்லாம் என்று நினைக்கிறேன்.

முதலில் இறங்கிய துவக்க ஆட்டக்காரர் 'எழுத்தாளனும் எழுத்தும்' என்று பேசினார். நீலம், பச்சை, பாம்பு என இராமநாராயணன் படத்தைப் பற்றி பேசினார். இராஜேஷ்குமார், ஜெயகாந்தன், எஸ்.ரா. எனப் பேசி நீண்ட நேரம் களத்தில் நின்றார் என்றாலும் சதமடிக்கும் வாய்ப்பைத் தவற விட்டார். அந்த வாய்ப்பை குறைவான நேரமே நின்றாலும் தினேஷ் கார்த்திக் போல அடித்து ஆடி எங்க மதுரைக்கார பாலாஜி தட்டிச் சென்றுவிட்டார் என்பதை பார்வையாளர்கள் அறிவார்கள்.

பெண்ணியம் குறித்து... பெண்கள் எல்லாமே இப்படித்தான் என்ற ஆசிரியரின் பார்வை குறித்து மிகத் தெளிவான பார்வையுடன் பேசினார் ஜஸீலா, தன் மகளுக்கு பொய், உண்மை குறித்த சொன்ன கருத்தைப் பகிர்ந்து கொண்டார். ஓரிதழ்ப்பூ குறித்து அவர் சமரசம் செய்து கொண்டு பேசவில்லை. மனதில்பட்டதை மழுப்பாமல் மறைக்காமல் பேசினார்.

சுரேஷ் அவர்கள் பேசும் போது சில இடங்களில் மேலே பறந்து கொண்டிருப்பது போல் இருந்தது என்று சொன்னாலும் வசீகரிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான அய்யனாரை வாழ்த்திச் சென்றார்.

கனவுப்பிரியன் அண்ணன் இன்னும் சிறப்பாக பேசுவார் என்றே நினைத்திருந்தேன். ஓரிதழ்ப்பூ புத்தகத்தை எனக்குத் தரமாட்டேன் என தன் தலையணைக்கு கீழே வைத்திருந்தவர், துர்காவைத் தேடுவதிலேயே நாட்களை வீணடித்திருக்கிறார் என்பது வருத்தமே என்றாலும் பாடல்களைச் சொல்லி அதனுடன் ஒப்பீடு செய்து பேசிய விதம் அருமை. இவரும் எழுத்தாளரை உயர்த்திப் பிடித்த கட்சிக்காரர்தான். ஆமா இவரு பேச எழும் போதும் பேசும் போதும் பயங்கர கைதட்டல்... மாஸ் ஆகிக்கிட்டு வர்றாரு... அண்ணே இனி நீ நம்ம தல பிரபு மாதிரி ஷேவ் எல்லாம் பண்ணி சும்மா நச்சின்னும் இலக்கிய கூட்டத்துக்குப் போன்னே... விசிலடிக்க நிறைய ஆளிருக்கு... காற்றடிக்கும் போதே தூத்திக்கணும்... அடுத்து கட்சி ஆரம்பிக்கிற வேலையைப் பார்ப்போம்.

இன்னொன்னு சொல்லணும்... கனவுப்பிரியன் அண்ணன் சரிதாதான் துர்காவான்னு யோசிச்சப்போ, ஆளாளுக்கு காந்திமதி, வடிவுக்கரசியின்னு அவங்க அவங்க காலத்துக்குப் பொயிட்டாங்க. அதுக்குத் தனியா ஒரு பட்டிமன்றம் நடந்துச்சு... நாங்கூட குஷ்புவா இருக்குமோன்னு நினைச்சிக்கிட்டேன்... :) இப்ப உள்ளவனுங்க கதையைப் படிச்சா யாரா இருக்கும்ன்னு நினைப்பாய்ங்க... கஷ்டம்தான். அதவிடுங்க... நமக்கெதுக்கு அந்தக் கவலை.

தமிழாசிரியர் ஷோபியா அவர்கள் சபைக்காக தன்னை சமரசம் பண்ணிக் கொண்டுதான் பேசினார். ஒரு தமிழாசிரியர், அதுவும் கணறும் கனலி கொடுத்தவர் அடிச்சி ஆட வேண்டாமா... பார்த்து வாசித்தல் என்பதே இதுவே கடைசியாக இருக்கட்டும். கனவுப்பிரியன் அண்ணனைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்த கூட்டத்தில் சூறாவளியை எதிர்பார்க்கிறோம்.

காளியின் காதலன் பிரபு, ஆளு கட்டிங் போட்டு... இருங்க வேற மாதிரி யோசிக்காதீங்க... முடி வெட்டி, மீசைக்கு எல்லாம் கலர் அடிச்சி வந்து நின்னுக்கிட்டு நான் இன்னொரு நாளைக்குப் பேசுறேண்ணேன்னு சங்கோஜப்பட்டுட்டு இது பட்டசாராயம் மாதிரி தூக்கலா இல்லைன்னு சொன்னாரு. அடுத்த நாவல் இவருக்கு டாஸ்மார்க் மாதிரி இல்லாம பட்டசாராயம் மாதிரி இருக்கணுமாம். கடைசியா சொன்னபடி பேசிட்டேனாண்ணேன்னு கேட்டுவிட்டு வேறு வந்து அமர்ந்தார். சொன்ன பணம் வந்துருச்சா தல.. :)

நண்பரைச் சந்திக்க துபை வந்திருந்த காரைக்குடிக்கார ஆங்கிலக் கவிதை எழுத்தாளர் தனக்கு கொடுக்கப்பட்ட மரியாதைக்குப் பின் மகிழ்வாய்ப் பேசினார். திரு. காவிரி மைந்தன், ராம்கி என நிறையப் பேர் பேசினார்கள். எல்லாருமே ஓரிதழ்ப்பூவை தூக்கிப் பிடித்த விமர்சகர்கள்.

இடையில் புத்தக வெளியீடு... இவங்க அவங்களுக்கும் அவங்க இவங்களுக்கும் கொடுத்துக் கொண்டார்கள். பிரபு கங்காதரனுக்கு கனவுப்பிரியன் கொடுத்தார். இதுனாலயே இந்தாளு பட்டச்சாராயம் பத்திப் பேசியிருப்பாரோன்னு தோணுச்சு.

இதெல்லாம் முடிஞ்சதும் வேகப்பந்து வீச்சாளர்களான நெருடாவையும் பால்கரசுவையும் இறங்கிவிட்டார் ஆசீப் மீரான் அவர்கள். அபுதாபியில இருந்தே பால் போட்டுப் பார்த்துக் கொண்டே போன ஆளுங்க... எல்லாருக்குமே இவர்கள் எதிர்க்கட்சி ஆட்கள் என்பது தெரியும் என்றாலும் ஆசீப் மீரான் அவர்களும் சொல்லிவிட்டார். நாங்கள்தான் சரவணபவனை முதலில் அடைந்தோம். எங்களைப் பார்த்த அய்யனார் மூணு பேரும் முன்னாலயே வந்தாச்சான்னு கேட்டார். 'வந்துட்டாய்ங்கய்யா... வந்துட்டாய்ங்க' அப்படின்னு அவரு மைண்ட் வாய்ஸ் சொன்னது கேட்டுச்சு.

நெருடா முதல்பால்லயே போல்ட் ஆக்கிட்டாருன்னு பார்த்தா, கொக்காமக்கா மனுசன் தேடித் தேடி படிச்சிருக்காருய்யா... சும்மா எடுத்து வீசி 'யோவ் நீ அவனை அந்த திட்டு திட்டியிருக்கே... இப்ப நீ அவனை விட மோசமா எழுதியிருக்கே'ன்னு விட்டு விளாசிட்டாரு. அதுவரை சிக்ஸர் மழையில் நனைந்த அய்யனார் தடுப்பாட்டம் ஆடுவதுக்கே சிரமப்பட ஆரம்பித்தார். நல்லவேளை திருமதி. அய்யனாரும் பசங்களும் வந்ததால நெருடா பாதியோட விட்டுட்டாரு... இல்லேன்னா நெலம என்னாயிருக்கும்... ஆண்டவா... யோசிக்கவே பயமாயிருக்கே....ஹி..ஹி....

கனவுப்பிரியன் அண்ணன் சொன்ன எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு ஆதர்ஷ நாயகன் இருப்பான் என்பதற்கு அப்படியே ஆதர்ஷ நாயகன் இருந்தாலும் யாரும் அவனைப் பார்த்ததும் ஓடிப்போய் கட்டிக் கொள்வதில்லை. கலவி கொள்ள விரும்புவதில்லை என்று பதில் சொன்ன நெருடா அதேபோல் பிரபுவின் பட்டசாராயத்துக்கும் பதிலாய் பேட்டரி கூடிப்போனா சங்குதான்டி மாப்ளே என்றும் சொன்னார்.

அடுத்த பால் போட்டவரு தன் பேரிலேயே பாலை வைத்திருக்கும் பால்கரசு, இவரும் இப்படி எழுதலாமா..? அப்படி எழுதலாமா..? எனப் பேசி ஓரிதழ்ப்பூ காமத்துப்பூய்யான்னு சொல்லிட்டு வந்துட்டாரு. இவரு போனும் மக்கர் பண்ணிருச்சிய்யா... ஏதோ சாமி அய்யனாரு பக்கம் இருந்திருக்கும் போல.

பாலாஜிய இறக்கிவிட்டாங்க... இந்தாளு இருக்கிற இடத்துல இருக்கவனுக்கு பீபீ, சுகரு, அட்டாக் எதுவும் வராதுய்யா... மனுசன் சிரிக்கச் சிரிக்க பேசுவதில் கில்லாடி. என்ன ஒரு குறை என்றால் இவருக்கு யாருமே புத்தகத்தைக் கொடுத்து படிக்கச் சொல்ல மாட்டேங்கிறாங்க... படிக்கலைன்னாலும் மனுசன் சதமடிச்சிட்டாருய்யா... என்ன பேச்சு... இதுல ஏதோ இருக்கும் போல... நமக்கு ஒருத்தனும் புத்தகம் தரமாட்டேங்கிறானுங்க... அவனுங்களே மாத்தி மாத்தி கொடுத்துக்கிறானுங்கன்னு வருத்தப்பட்டார். புத்தகம் கிடைச்சிருச்சு... நேற்றிரவே வாசித்து மோட்சம் அடைந்திருப்பார் என்று நம்பலாம்.

அப்புறம் பிலால், எனக்கு பிலால்கிட்ட பிடிச்சது அவரோட அருமையான எழுத்து.... நேற்று பேச்சும். என்ன மேடையில மனுசன் ஏறிட்டா இந்தப்பக்கம் மூணு மீட்டர் அந்தப்பக்கம் மூணு மீட்டர் இடமிருக்கணும். பின்னே... டான்ஸ் ஆடிக்கிட்டேயில்ல பேசுறாரு. இவருக்கு திருவண்ணாமலைக்குப் போயி துர்க்காவைப் பார்க்கணுமாம். அதுக்காகவே ஊருக்குப் போவாருன்னு நினைக்கிறேன். சந்தடி சாக்குல 'செயல்' சொன்ன 'யானை வரும் முன்னே'யை புதுமொழியின்னு சொல்லிட்டாருய்யா... பின்னாலிருந்து பாலாஜி குரல் கொடுக்க 'யோவ் பாலாஜி நீ பேசும்போது நா எதுனாச்சும் பேசுனேன்னா'ன்னு பாவம்மா கேக்கும் போது 'டேய் நீ காப்பி அடிச்சத நான் டீச்சர்க்கிட்ட சொன்னேனா'ன்னு பள்ளிக்கூடத்துல பசங்க கேட்டமாதிரி இருந்தது. இவரு என்ன எளவுய்யா இது, பாதி படிச்சதும் ஒரு அயற்சி, பிசுபிசுப்பு... குளிக்கணுமின்னு தோணுச்சுன்னு சொன்னார். அதுக்கும் மேல மேட்டர் நாவல்ன்னும் சொன்னார். எல்லாம் சொல்லிட்டு ரொம்ப அருமை அய்யனாருன்னு போல்ட் ஆக்குவார்ன்னு பாத்துக்கிட்டு இருந்தா சிக்ஸ் அடிச்சிட்டு வந்துட்டார்.

அவரை ஓவியர் என்று சொன்னார்கள் பெயர் தெரியவில்லை. மன்னிக்கவும். 'யோனி குறித்து பேச நாம் பயப்படுகிறோம் வெட்கப்படுகிறோம்' என்றெல்லாம் பேசி... நரஉடல் குறித்தும் சொன்னார.  உண்மையிலேயே நிறையச் செய்திகளுடன் மிகச் சிறப்பாக பேசினார்.  ஓவியரய்யா எங்க பக்கம் கூத்து (நாடகம்) ரொம்பப் பிரபலம். தென் தமிழகத்தில் மட்டுமே இது இன்னும் கோலோச்சி இருக்கிறது. அதில் வள்ளி திருமணம் என்றொரு நாடகம்... முடிந்தால் நாரதரும், வள்ளியின் சகோதரரும் (பபூன்) பேசுவதை யூடிப்பில் கேளுங்கள். யோனி பற்றிய பேச்சு மிகச் சாதாரணம். கிராமங்களில் ரெண்டு பெண்களை சண்டை போட வைத்துப் பாருங்கள். இதெல்லாம் சரளமாய் வந்து விழும். யாருக்கும் பேச, எழுத பயமில்லை... அளவுக்கு மீறும் போது விமர்சனங்கள் வரவே செய்யும். உப்புக் கூடினால் உணவு சுவைக்காது.

இன்னும் நிறையப் பேர் பேசினார்கள்... என்ன பேசினார்கள் என்பதெல்லாம் ஞாபகத்தில் இருக்கு... ஆனாலும் பதிவின் நீளம் போதும்ன்னு நினைக்கச் சொல்லுது. இத்தோட நிப்பாட்டுன்னா பிரபலங்கள் பேசினதை மட்டுமே எழுதுறாய்ங்கய்யான்னு குறிஞ்சிநாதன் அவர்கள் கோபித்துக் கொள்வார். அவரே கேட்டு வாங்கி... அடித்து ஆடினார் கடைசி மணித்துளிகளை.

அருமையாகப் பேசினார்... மைக் தேவையில்லை எனச் சொல்லிய வெண்கலக் குரல். ஒவ்வொரு வரியையும் அலசி ஆராய்ந்து வாசித்திருக்கிறார் என்பது பேச்சில் தெரிந்தது. ஆனாலும் ஒவ்வொருவரின் பார்வையிலும் விமர்சனம் வைக்க உரிமை இருக்கிறது. நீ தூக்கித்தான் பேசியிருக்க வேண்டும் எப்படி தாக்கிப் பேசுவே என்று நாம் சொல்ல முடியாது இல்லைங்களாண்ணா... உங்க பார்வை... மற்றவர் பேசிய கருத்தில் தங்களுக்கு இருக்கும் மாற்றுக் கருத்து  என்ன என்பதாகப் பார்த்தீர்கள் என்றால் உங்கள் பேச்சு இன்னும் அருமையாக இருக்கும்.


விழாவினைத் தொகுத்து வழங்கியவர் திரு.ஆசீப் மீரான், மிகச் சிறப்பான தொகுப்பாளர் என்பது அவரின் தொகுப்பில் தெரிந்தது. அருமை வாழ்த்துக்கள். ஆசிப் மீரான் அவர்கள் இடையிடையே பேசும் போது ஜி.நாகராஜன் மற்றும் கோபி கிருஷ்ணா ஆகியோரின் எழுத்தில் இருந்து எடுத்துச் சொல்ல நினைத்து சொல்லாதவை என ஒரு பகிர்வு ஆபிதீன் அவர்களால் பகிரப்பட்டிருக்கிறது என்றாலும் அதில் சில விஷயங்களை ஆசீப் மீரான் அவர்கள் பேசினார்.  

'இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால், இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்? என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்' என்றும் 'பக்திப் பரவசத்துக்கும் விஸ்கிப் பரவசத்துக்கும் அதிக வித்தியாசமில்லை' என்றும் பேச்சின் இடையில் சொல்லிச் சென்றார். இவரது விழாத் தொகுப்பு... அந்தக் குரல் வளம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது அவர்களை ஞாபகத்தில் கொண்டு வந்தது. அருமை.

ஏற்புரை வழங்க வந்த அய்யனார் அவர்கள் பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கும் நேற்று சிலர் முன் வைத்த கேள்விகளுக்கும் பதில் சொல்லாது துர்க்காவை என்னுள் இருந்து இறக்கி உங்களிடம் உலாவ விட்டு விட்டேன். அவள் எப்படிப்பட்டவள் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கணும். துர்க்கா இறங்கிச் சென்ற என் மனது வெற்றிடமாக இருக்கிறது. அங்கு வேறொரு முளை விடத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லி தப்பித்துக் கொண்டார். தானும் சாரு, ஜெமோ போல் எழுத வேண்டும் என்ற ஆசை என்றும் சொன்னார். மிக விரிவாக எதையும் பேசிவிடவில்லை என்பது வருத்தமே. இருப்பின் ஆள் நம்மளைப் போல கூச்ச சுபாபம் கொண்டவர் என்பதால் விட்டுவிடலாம்.

நன்றியுரை சொல்ல வந்த அமீரகத்தில் தமிழுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கும் (இதை நான் சொல்லல... சொன்னது இன்னொரு ஆள்) நந்தா அவர்கள் வேகவேகமாக நன்றியுரை சொன்னார். குலவை போடும் போது மட்டும் என்ன வேகம்... எங்கூருல வருசா வருசம் செவ்வாயின் போது குலவை போட ஒரு பொம்பளயில்லையான்னு எங்க சித்தப்பா கத்துவாரு... இந்த வருசம் நந்தாவை கூட்டிப் போயிற வேண்டியதுதான்... எட்டூருக்கு எங்கூரு குலவைச் சத்தத்தைக் கேட்க வைக்கலாமில்லையா. உண்மையிலேயே இந்த விழாவில் அய்யனாரின் உழைப்பை விட நந்தாவின் உழைப்பு அதிகம். வாழ்த்துவோம். தொடரட்டும் சகோதரரே தங்கள் பணி. அதுக்காக அலைனுக்கு கூட்டப் போறதெல்லாம் ரொம்ப அதிகம். குறைச்சிக்கங்க... முடிஞ்சா அடுத்த கூட்டத்துக்கு ஆள் கூட்ட அபுதாபி வாங்க.

விழா இனிதே நிறைவு  பெற இலக்கியம் பருகியவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. உணவு ருசியாய்... டீ தான் பக்கத்து பாகிஸ்தானி ஹோட்டலில் அருமையாக இருந்தது என்று சொல்ல வைத்தது.

அய்யனார் அவர்கள் பதிவு வழியும் நேற்றைய நிகழ்வின் கேள்விகளுக்கு தனிப்பட்ட முறையில் பதில் சொல்வார் என்று நம்புகிறேன்.

பேசியவர்களில் பெரும்பாலானோர் கொஞ்சமே கொஞ்சம் சமரசம் செய்து கொண்டாலும் ஒரு இலக்கிய நிகழ்வாய் இல்லாமல் மிகவும் மகிழ்வாக, இனிமையாக மூன்றரை மணி நேரத்தைக் கடக்க வைத்தது. ஓரிதழ்ப்பூ மூலம் இதை நிகழ்த்திக் காட்டிய எழுத்தாளர் அய்யனாருக்கு வாழ்த்துக்கள்.  அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரராக இருக்கும் இவர் இன்னும் சிறப்பான நாவல்களை எழுத வேண்டும்.  அவரைப் போல்... இவரைப் போல்... என்றெல்லாம் யோசிக்காமல் உங்கள் பாணியில் தொடருங்கள். அருமையான எழுத்து உங்கள் வசம் இருக்கிறது.

ஒரு படைப்பு தனக்கான இடத்தை அது தானாகவே எடுத்துக் கொள்ளும் என்பதை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு.

என்னை வாடா தம்பி... வாடா தம்பி என்று அழைத்துக் கொண்டே இருந்த என் தேவா அண்ணனுக்கும், பத்திரமாக கொண்டு வந்து அபுதாபியில் என் இருப்பிடம் சேர்த்துப் பின்னர் முஸபா சென்ற நெருடா மற்றும் பால்கரசுக்கும், உருட்டுக்கட்டைகளுடன் இருந்தானுகளே பத்திரமாப் பொயிட்டீங்களா என விடியுமுன்னரே முகநூல் மூலம் விசாரித்த பாலாஜிக்கும் நன்றி. 

போட்டோக்கள் இன்னும் எத்தனை மாதம் சென்று எடுத்துப் பார்த்தாலும் இலக்கியம் பேசும். கேமராக் கவிஞன் சுபஹான் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள். 

பேசிய, கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மீண்டும் இது போன்றதொரு நிகழ்வு எப்போது அமையும்...? என்ற கேள்வியை மனசுக்குள் எழுப்பி நிறைவைக் கொடுத்த நிகழ்வு. வாழ்த்துக்கள் அய்யனார்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 31 மார்ச், 2018

ஓரிதழ்ப்பூ - என் பார்வை



ரிதழ்ப்பூ

கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்படும் கதைகளே வாசகனால் பேசப்படும். அது காதலைச் சொல்லும் கதையாக இருந்தாலும் வட்டத்துக்குள்ளான காதலைச் சொல்லும் போது 'இது ஏற்கனவே வேறொருவர் எழுதியது போல்தான் இருக்கிறது' என்றும் 'அவரின் சாயல் இதில் தெரிகிறதுதானே' என்றும் விமர்சனம் வரவே செய்யும். 

அதே காதலை வேறொரு கோணத்தில் வட்டத்தை விட்டு நகர்த்தும் போது 'ஆஹா... என்ன எழுத்துய்யா...' என்ற வார்த்தைகள் வந்து விழும். அப்படியான எழுத்துக்கள் வட்டத்தை மீறி வரும்போது வாசகனை வசமிழக்கச் செய்ய வேண்டுமே ஒழிய, அவனுக்குள் இதைத் திணித்தால் மட்டுமே நம் எழுத்து பேசு பொருளாகும் என்ற எண்ணத்தை எழுத்தாளனுக்கு உருவாக்கக் கூடாது.

நண்பர் பிரபுவின் அன்பிற்கிணங்க, வாசித்துக் கொண்டிருந்த மரப்பசுவின் அம்மணியிடம் 'கோபாலியோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிரு நான் பூவை நுகர்ந்து விட்டு வருகிறேன்' என வாசிப்பின் மடை மாற்றி இன்று காலை ஓரிதழ்ப்பூவைக்  கையில் எடுத்தேன்.

ஊரில் காரம்பூ, சூராம்பூ, மஞ்சநெத்திப்பூ, அரளிப்பூ, டிசம்பர்பூ, மாம்பூ, மல்லிகைப்பூ, வாகம்பூ, புளியம்பூ, வேப்பம்பூ என இன்னும் இன்னுமாய் பல பூக்களோடு வாழ்ந்தவனின் மனசுக்கு ஒவ்வொரு பூவின் வாசமும் நாசிக்குள் சுற்றிக் கொண்டேயிருக்கும். 

பூக்களின் வாசனை தரும் சுகந்தம் எப்போது அலாதிதான். அப்படியானதொரு வாசனையை திருவண்ணாமலையைச் சுற்றிச் சுற்றிப் படரும் இந்த ஓரிதழ்ப்பூவும் நம் நாசிக்குள் திணிக்கிறது. அது காமவாசனை.

அமிர்ந்தமாயினும் அளவுக்கு மீறினால் நஞ்சே... அப்படியிருக்க ஓரிதழ்ப்பூவில் அய்யனார் விஸ்வநாத் அவர்கள் அளவுக்கு மீறியிருக்கிறாரா இல்லை அளவோடு அமுது படைத்திருக்கிறாரா..?

சமீபத்தில் ஒரு சிறுகதைப் போட்டிக்கான  கதையில் 'அவன் அவள் மார்பைத் தொட்டான்' என்ற வரிக்காக கதையினை வாசித்தவர்கள் சிலரின் கருத்தில் 'இது அடல்ஸ் ஒன்லி கதை' என்பதாய்ச் சொல்லியிருந்தார்கள். இந்த ஒரு வரிக்கு அடல்ஸ் ஒன்லியா என்ற யோசனை எழ, சிரித்துக் கொண்டு கடந்து வந்தேன்.

இன்று ஓரிதழ்ப்பூ வாசித்தபோது அந்த கருத்துக்கள் ஞாபகத்தில் வர, இந்தக் கதை பொதுவெளியில் வைக்கப்படும் போது எது மாதிரியான கருத்துக்கள் முன்வைக்கப்படும் என்ற யோசனை எனக்குள் எழுந்தது. வாசிப்பில் பல படிமானம் உண்டு. அதில் ஒரு பக்கம் இதை தூக்கிக் கொண்டாடினால் மறுபக்கம் திட்டித் தீர்க்கத்தானே செய்வார்கள்.

பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்'... அது அபத்தமோ ஆபாசமோ... அதைப் பற்றி இங்கு பேசவரவில்லை. அது எதை பேசுபொருளாக எடுத்துக் கொண்டதோ அதையேதான் இந்த ஓரிதழ்ப்பூவும் எடுத்துக் கொண்டுள்ளது... அதுதான் காமம்.

திரு.அய்யனார் விஸ்வநாத் கதை சொன்ன விதம் ரொம்ப அருமை... காட்சிகள் முன்னும் பின்னுமாக விரிக்கப்படுதல் வித்தியாசமாய்... விறுவிறுப்பாய்... வாசிக்க ஆரம்பித்து ஆசிரியர் சொன்னது போல் ஏழு அத்தியாயம் வரை... இல்லையில்லை ஒரு அத்தியாயம் கூடுதலாக எட்டு அத்தியாயம் வரை அடைமழையென அடித்துப் பெய்து எழாமல் படிக்க வைத்தது. 

என்ன எழுத்து... இப்படியான எழுத்து கைவரப் பெறுதல் வரமே... அப்படியே தன்னுள் ஈர்த்துக் கொண்டது. அதன் பின்னான அத்தியாயங்கள் கொஞ்சம் சுணக்கம் காட்டி, அடைமழையென ஆர்ப்பாட்டமாய் நகரவில்லை என்றாலும் மனம் ஈர்க்கும் சிறுமழையாய் இறுதிவரை நகர்த்திச் சென்றது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.

அகத்தியமாமுனி, போகர், இரமணர், அவர் வளர்க்கும் காகம், மான் என வித்தியாசமாகப் பயணிக்கும் கதைக்குள் சாமிநாதன், வாத்தி ரவி, சங்கமேஸ்வரன், ஜோசியர், லட்சுமி, அமுதாக்கா, ரமா, அங்கயற்கன்னி, மலர்செல்வி, துர்க்கா... என ஒரு பெருங்கூட்டமே வாழ்கிறது நம்மோடு.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு காதல்... அதை வெளிக்கொணர்ந்த விதமும்... கதையை அகத்தியமுனியில் ஆரம்பித்து ஒவ்வொருவராய் நகர்த்தி எல்லோரையும் ஒரு புள்ளியில் இணைத்த விதமும் மிக அழகு. 

அய்யனார் விஸ்வநாத் மிகச் சிறந்த கதைசொல்லி என்பது அவரின் எழுத்தில் தெரிகிறது. வாசிப்பவனை ஈர்க்கும் எழுத்து எல்லாருக்கும் அமையப் பெறுவதில்லை... அது இவருக்கு கைவரப் பெற்றிருக்கிறது. வாழ்த்துக்கள் அ.வி.

மிகச் சிறப்பானதொரு நாவல்... இதுதான் எல்லை என்றில்லாமல் தன் போக்கில் விரியும் எழுத்து எப்பொழுதும் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். கண்டிப்பாக சிறப்பானதொரு இடத்தைப் பிடிக்கும் நாவலாக இது இருக்கும்.  

மேலே சொன்னவை பொதுவான பார்வை... இனி... 

வர்ணனைகள் எல்லாம் வாசிக்கும் பெண்களை முகம் சுளிக்க வைக்கும் என்பது வாசித்தவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

கிராமத்துச் சண்டையில் வந்து விழாத வார்த்தைகள் இல்லை... பேச்சோடு பேச்சாக கலந்த, கேலியாகப் பேசும் போது கூட வந்து விழுந்த, வார்த்தைகளைக் கேட்டு வளர்ந்தோம் என்றாலும் அதெல்லாம் பேச்சு வழக்கு... அதைச் சட்டென சுலபமாய் சிரித்தபடி கடந்து சென்று விடுவோம். அதே எழுத்தாய் மலரும் போது... அதுவும் சாதாரண கிராமத்துப் பேச்சாக இல்லாமல் கலவிக்குள் உலவும் எழுத்தாய் ஆகும் போது அவ்வளவு எளிதாய் எடுத்துக் கொள்ளவோ கடக்கவோ முடிவதில்லை.

சாப்பாட்டின் சுவை கூட்டத்தான்  உப்பு.  நமக்கு அது ரொம்பப் பிடிக்கும் என அளவுக்கு மீறி அள்ளிப் போட்டுக் கொள்வதில்லை. அப்படித்தான் காமமும்... இந்தக் கதைக்கு காமச்சுவை அவசியமே.... அது இல்லை என்றால் ஓரிதழ்ப்பூவை விரிக்கவே வேண்டியதில்லை ஆனாலும் அளவுக்கு மீறி இருப்பது திகட்டலாய்....

இன்னும் நம் வீடுகளில் படுக்கை அறை என்பது இருபத்தி நான்கு மணி நேரமும் கலவி கொள்ளும் இடம் என்பதாய் மாறவில்லை. அப்படி மாறும் காலம் இப்போது வரப்போவதுமில்லை.  அதற்கென்று நேரம் காலம் இருக்கிறது. ரோட்டில் கூடித்திரிதல் என்பது ஆறறிவுக்கு ஏற்ப்புடையதல்ல.

பெண்கள் இப்படி இல்லையா என்று ஒரு கேள்வியை முன் வைக்கலாம்... இன்றைய வாழ்க்கைச் சூழலில் இப்படியும் இருக்கலாம்தான்...படக்கென சேலை அவிழ்க்கும் பெண்களாய் இருப்பார்களா..?  

கள்ளக்காதலுக்காக கணவனுக்கு விஷம் வைத்தவள் குறித்து இருநாள் முன்பு வாசிக்க நேர்ந்ததுடன் கணவனைத் தீர்க்க திட்டமிடும் ஆடியோவும் கேட்கக் கிடைத்தது. எம்மாதிரியான பாதையில் நாம் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்பது வருத்தமளித்தது என்றாலும் இக்கதையில் வரும் துர்க்கா, அங்கயற்கன்னி, அமுதாக்காவைப் போன்றவர்களை நாம் பெரும்பாலும் பார்த்து வளர்ந்ததில்லை. நாமெல்லாம் லட்சுமிகளையும் ரமாக்களையுமே அதிகம் பார்த்து வளர்ந்திருக்கிறோம்.

எல்லாப் பெண்களுமே (ரமா, லட்சுமி தவிர) சேலையை அவிழ்க்கிறார்கள். அப்படியென்ன காமம் பெரிதாய்ப் போய்விட்டது இந்தப் பெண்களுக்கு...? 

தங்கள் மனசுக்குள் நினைத்து வாழ்ந்து வரும் வாழ்க்கையை நேரில் காணும் போது காமம் மட்டுமே தலைக்கேறுமா என்ன... இங்கு அது மட்டுமே தலைக்கேறுவது எந்த வகை..?

காம போதையுடன் மது போதையும் கதை நெடுகப் பயணித்து வாசிப்பவனை போதையில் ஆழ்த்தியே ஆகவேண்டும் என்பதில் குறியாய் இருப்பது எந்த வகையான போதை..?

நாம் ஏன் இன்னும் எழுத்தில் பெண் வர்ணனைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்..? சிறு பெண் லட்சுமியை வர்ணிக்கும் இடத்தில் மட்டுமில்லாது அங்கயற்கன்னி, துர்க்கா என பெண்கள் எல்லாரையும் இப்படித்தான் வர்ணிக்க வேண்டுமா...? 

கட்டுனவன் கிழவனோ இளைஞனோ கணவன் இறந்த வீட்டில் எந்தப் பெண் கலவி கொள்வாள்.  அப்படியென்ன அவளுக்கு அவசரம்..? பொண்டாட்டிகூட இருக்கப் பிடிக்காதவனுக்கு புத்திமதி சொல்லுதல் என்பது காமம் வழியாகத்தானா..?

துர்க்கா கணவனையும் பெரியசாமியையும் அடிக்கும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறாள். அதே துர்க்கா மாமுனியுடன் தானே முன் வந்து சல்லாபிக்கிறாள்... கணவனிடம் பொண்டாட்டியை  கூட்டிக் கொடுக்கிறியா எனக் குதிப்பவள் 'வாத்தியை ஒரு வாட்டி கூட்டிப் போய் மந்திரிச்சி விடுறியா' என அதே கணவன் கேட்குமிடத்தில் 'ரொம்ப சின்னப்புள்ளயாட்டம் இருக்கு' என கடந்து செல்கிறாள். அப்படியென்றால் சபாஷ் போட வைத்த கோபம் எங்கே போனது..? இது என்ன முரண்..?

காமம் தேவையே... காமல் இல்லாத வாழ்வேது..? என்றெல்லாம் நாம் நிறையப் பேசலாம்... காமம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதையும் நாம் பேசித்தானே ஆகவேண்டும்..? 

பெண்கள் குறித்த வர்ணனைகளும்... ஓரிதழ்பூ எது என்ற கேள்விக்கு வாத்தி ரவி சொல்லும் பதிலும் வாசிப்பவரை முகம் சுளிக்க வைக்கும்.... குறிப்பாக பெண்களை.

நான் பெரிய எழுத்தாளனெல்லாம் கிடையாது. என் வாசிப்பின் பின்னான கருத்துக்களே இவை. இதில் மற்றவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். பல இலக்கிய சாம்பவான்களின் கருத்துக்களுக்கு முன்னே என் எழுத்து எதுவுமில்லை. இது வாசிப்பின் பகிர்வே. 

கனவுப்பிரியன் அண்ணன் சொன்னது போல் நாம் எதாக நினைத்து வாசிக்கிறமோ அதுவே ஓரிதழ்ப்பூ. 

காமம் தவிர்த்துப் பார்த்தோமேயானால் அய்யனார் விஸ்வநாத் அவர்கள் எழுத்து மிகச் சிறப்பு. தமிழ் எழுத்துலகில் மிகச் சிறந்த ஆளுமையாக வருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரின் பேச்சைப் போல் எழுத்தும் தைரியமாய் வந்து விழுந்திருக்கிறது. ஓரிதழ்ப்பூவின் ஆசிரியரைக் கொண்டாடலாம்.

தாங்கள் கதை சொன்ன விதமும்... காட்சிப்படுத்திய விதமும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள் அகத்திய மாமுனி... அடச்சே... கதையில் ரொம்ப ஒன்றிட்டமோ... வாழ்த்துக்கள் அய்யனார் விஸ்வநாத்.

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 19 மார்ச், 2018

தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)


முத்துக்கமலம் மின்னிதழில் எனது இரண்டாவது சிறுகதை வெளியாகியிருக்கிறது, முத்துக்கமலத்தில் வாசிக்க 'தோஷம்' 

கதையை வெளியிட்ட ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

Image result for இளையராஜா ஓவியம்

"ன்னம்மா சொல்றீங்க..? மூத்தவ இருக்கும் போது இளையவளுக்குச் செய்யிறது நல்லாவா இருக்கும்... ஜாதி சனம் என்ன சொல்லும்... அதை விடுங்க... ரேணுகா மனசு உடைஞ்சி போயிடமாட்டாளா..?"

"ஊரு ஆயிரம் பேசும்... அதுக்காக நாம ஊருக்காகவா வாழ முடியும்... இங்க பாரு மாணிக்கம்.... மூத்தவளுக்கு இதுவரைக்கு எத்தனையோ இடம் வந்து தட்டிக்கிட்டே போகுது... அவ ஜாதகத்துல தோஷம் இருக்குன்னு சாதகக்காரன் சொன்ன எல்லாக் கோயில்லயும் போயி பரிகாரம் பண்ணிட்டு வந்தாச்சு... ஒண்ணும் அமையலை... சின்னவளுக்கு முடிச்சிட்டு இவளுக்குப் பாக்கலாமே... அவளுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதுல்ல..." பாக்கு உரலில் வெற்றிலையை இடித்துக் கொண்டே பேசினாள் காளியம்மாள்.

"அதுக்கில்லைம்மா... என்ன இருந்தாலும் பெரியவளுக்கு ஏதும் பிரச்சினை இருக்குமோன்னு ஊர் பேசாதா?"

"நாந்தேன் சொல்றேனுல்ல... ஊருக்காக நாம வாழக்கூடாது... நமக்காகத்தான் வாழணும்... இங்க பாரு நம்ம செல்வராஜூ மூத்தவ இருக்கும் போது இளையவளுக்குப் பண்ணலையா என்ன... அதைவிடு நம்ம சின்ன மாமா என்ன பண்ணுனாரு... தேவிகா இருக்கும் போது சுஜாதாவுக்கு பண்ணி வைக்கலையா என்ன... சும்மா யோசிக்காம நம்ம புவனாவை கட்டிக்கிறோம்ன்னு நல்ல இடத்துல இருந்து கேக்கிறாக... பெரியவளுக்காக இதையும் விட்டுட்டா... இந்த இடமும் போகும்... இப்பவே சின்னவளுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதுல்ல..."

"எனக்கென்னவோ யோசனையா இருக்கும்மா... ரேணுகா இதை எப்படி எடுத்துப்பான்னு தெரியலை... எல்லாப் பொண்ணுகளுக்கும் உள்ளது போல இவளுக்கும் ஆசை இருக்கும்ல்லம்மா... இப்ப அவளை விட்டுட்டு சின்னவளுக்குச் செய்யப்போறேன்னு சொன்ன அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்... அதான் யோசிக்கிறேன்..."

"அவ புரிஞ்சிப்பாப்பா... எத்தனை இடம் வந்துச்சு எல்லாமே தட்டிக்கிட்டுத்தானே போகுது... ஒருவேளை  சின்னவளுக்கு கல்யாணம் நடந்தா இவளுக்கு ஆகுமோ என்னவோ... சொல்றவிதமா சொல்லு மாணிக்கம்..."

"ம்..."

அம்மாவுடன் பேசியதை மனசுக்குள் மீண்டும் மீண்டும் ஓட விட்டபடியே கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு மோட்டு வலையை வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்திருந்த மாணிக்கத்துக்கு மனசுக்குள் ஒரு வித வலி, எப்படி ரேணுகாவிடம் பேசுவது...? அவள் வருத்தப்பட்டா என்ன செய்வது...? மனசொடிஞ்சி பொயிட்டான்னா... எதாயிருந்தாலும் அவளுக்குத்தான் முதல்ல செய்வேன்... ஆனா திருமணத்தை... தங்கையின் கல்யாணத்துக்குப் பின்னால உனக்குன்னு சொன்னா... எப்படி எடுத்துப்பா... யோசனையின் வலியில் கண்ணீர் கன்னத்தில் இறங்கியது. யாரும் பார்க்கும் முன்னர் நெஞ்சில் கிடந்து துண்டால் துடைத்துக் கொண்டார்.

"அப்பா..." ரேணுகாவின் குரல்.

"எ... என்னம்மா..?"

"உடம்புக்கு முடியலையா... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..? தலைவலிக்குதா...? மருந்து தேய்ச்சுவிடவா?"

"ஏய் அதெல்லாம் இல்லைம்மா... மனசுக்குள்ள ஆயிரம் கேள்வி... பதிலைத் தேடித்தேடி எனக்கே சோர்வாப் போச்சு..."

"என்ன கேள்விப்பா... வயலுக்கு தண்ணி பாய்ச்சணும் உரம் போடணுமின்னா..." சிரித்தாள்.

"ம்... வெளஞ்ச பயிருல்ல... முதல்ல அறுக்க வேண்டியதை விட்டுட்டு அடுத்ததை முதல்ல அறுக்க வேண்டிய கட்டாயம் வந்திருச்சேன்னு யோசனையா இருக்கும்மா..."

"போங்கப்பா... எப்பவும் இப்படித்தான் வேதாந்தி மாதிரி பேசுவீங்க... வாங்க சாப்பிடலாம்..."

"ம்... இப்படி உக்காரும்மா... உங்கிட்ட கொஞ்சம் பேசணும்..."

"எங்கிட்டயா..? என்ன விஷேசம் அப்பா..."

"உக்காரும்மா... ஆமா உங்கம்மா எங்கே...?"

"அம்மாவா... டிவியில நாடகம் பாக்குறாங்க... புவனா எப்பவும் போல மொபைலை நோண்டிக்கிட்டு இருக்கா...?"

"ம்... இருக்கட்டும்... நாம கொஞ்சம் தனியாப் பேசணும்..."

"தனியாவா... எங்கிட்ட என்ன ரகசியம் அப்பா... நாம ரெண்டு பேரும் தனியாப் பேசினா உங்காத்தா அதான் எங்கப்பத்தா என்ன குசுகுசுன்னு பேசுறீங்கன்னு வந்திரும்..."

"ஏய்... அப்பத்தாதான் தூங்கிக்கிட்டு இருக்கே... நீ உக்காரும்மா..."

"அதானே... ஆத்தாவை பாத்துக்கிட்டுத்தான் இந்த ஆத்தாக்கிட்ட பேச நினைச்சீங்களாக்கும்..." சிரித்தபடி அவரருகில் அமர்ந்தாள்.

"ஏம்மா... அப்பா கேக்குறது தப்புன்னா எங்கிட்ட நேர சொல்லிடணும்... சரியா?"

"என்னப்பா பீடிகையெல்லாம் பலமா இருக்கு...?"

"இல்லம்மா... முடிவு நீ எடுக்க வேண்டிய ஒரு காரியம்... அதான்..."

"சரி..."

"ரெண்டு நாளைக்கு முன்னால உன்னைப் பெண் பார்க்க வந்தாங்கல்ல... அவங்க எப்படிப்பட்டவங்கன்னு நினைக்கிறே..."

"என்னப்பா அவங்க என்ன சொன்னாங்கன்னுதான் உங்களுக்குத் தெரியுமில்ல... அப்புறம் எப்படிப்பட்டவங்கன்னு எங்கிட்ட கேட்டா..." சிரிப்பை விடுத்து கொஞ்சம் சீரியஸாக் கேட்டாள்.

"இல்லம்மா... அவங்களுக்கு நம்ம புவனாவைப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்கதானே...?"

"ம்... ஆமா... அதுக்கு..."

"அந்தப் பையன் நம்ம புவனாவுக்கு சரியா வருவானாம்மா...?" நேரடியாகக் கேட்டு விட்டார்.

"அப்பா..."

"இல்லம்மா... நல்ல குடும்பம்... நமக்குத் தூரத்துச் சொந்தம் வேற... உன்னையத்தான் பாக்க வந்தாங்க... ஏனோ அவளைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க... உங்கிட்ட இதைப் பற்றிப் பேசக்கூடாதுதான்... ஆனா உங்கிட்ட கேட்டாத்தான் எனக்கு சரியான பதில் கிடைக்கும்... சொல்லும்மா..."

"ம்... நல்ல பையனாத்தான் இருக்கான்... " அவளின் முகத்தில் ஆரம்பத்தில் இருந்த குதூகலம் இல்லை. மாணிக்கத்திற்கு ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது.

"சரிம்மா...  வா சாப்பிடலாம்" என்று பேச்சை மாற்றினார்.

"அப்பா... அந்த மாப்பிள்ளையை புவனாவுக்கு செய்யலாம்ன்னு உங்களுக்கு ஆசையிருக்காப்பா..." அவரின் மார்பு முடியில் கோலம் போட்டபடிக் கேட்டாள்.

"அப்படியெல்லாம் இல்லைம்மா... உன்னோட ஜாதகமும் சரியில்லை... வர்ற வரனெல்லம் தட்டிக்கிட்டே போகுது... பரிகாரம் எல்லாம் பண்ணியாச்சு... அவளை பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க... உன்னோட எண்ணம் என்னவோ அதுதான் என்னோட முடிவு..."

ரேணுகா வறட்சியாய் சிரித்தாள் "எனக்குத்தான்  ஜாதகம் சரியில்லையே... எனக்குத்தான் சரியான வரன் அமையாம தள்ளிக்கிட்டே போகுது... அவளுக்காச்சும் முடியட்டுமேப்பா...."

"இல்லம்மா... நீ இருக்கும் போது அவளுக்கு..."

"என்னப்பா... தங்கச்சிக்கு கல்யாணம் முடிஞ்சாத்தான் உனக்குன்னு ஆம்பளப் பசங்களுக்கு முப்பது முப்பத்தி ரெண்டு வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணாம வச்சிருக்கிறது இல்லையா..? அது மாதிரி நான் நினைச்சிக்கிறேன்... என்ன எனக்கு இருபத்தெட்டுத்தானே ஆகுது... அவளுக்கு நடக்கட்டும்... அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா நமக்குச் சந்தோஷம்தானேப்பா... எனக்குன்னு இனிமேயா பிறக்கப்போறான்... எங்கயாச்சும் இருப்பானுல்ல... வர்றப்போ வரட்டும்... இப்ப அவளைக் கட்டித்தாரேன்னு அவங்ககிட்ட பேசுங்க..." மனசுக்குள் வேதனை இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு சாமர்த்தியமாய்ப் பேசினாள்.

"இல்லம்மா... உன்னைக் கஷ்டப்படுத்தி..."

அவரை இடைமறித்து "அப்பா... என்னோட மாப்பிள்ளையை அவ கட்டலையில்ல... வந்தவங்களுக்கு என்னைவிட அவளைப் பிடிச்சாச்சு... என்னைப் அவங்களுக்குப் பிடிச்சி... நாம ஜாதகம் பாத்து சரியில்லையின்னு வச்சிக்கங்க... அப்ப அவங்க அவளைக் கேப்பாங்களா... இப்பவே அவங்களுக்குப் பிடிச்சபடி அவளோட ஜாதகத்தைப் பாருங்க... அதான் சரிப்பா..."

"ம்... நீ இவ்வளவு உயர்வாச் சிந்திக்கிறே... ஆனா ஊரும் உறவும் என்ன சொல்லும்...?"

"அப்பா ஊருக்காகவும் உறவுக்காகவும் நாம இல்லை... எனக்கு எங்கப்பாவைத் தெரியும்... என்னோட தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமையுதுன்னா எனக்குச் சந்தோஷம்தான்...  அவங்க என்ன பேசினா என்ன...?"

"ம்.... எனக்கு மனசு கஷ்டமா இருக்கும்மா..."

"அப்பா... முதல்ல அவளுக்குப் பேசுங்க... யாரு கண்டா அவளுக்கு வரன் வந்த நேரம் என்னோட ஜாதக தோஷம் போயி எனக்கும் மாப்பிள்ளை வரலாமுல்ல..."

"அப்படி அமைஞ்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா... எல்லாம் அந்த மாரிதான் பாத்துக்கணும்..."

"சரிப்பா... வாங்க.... சாப்பிடலாம்... உங்களுக்குப் பிடிச்ச கருவாட்டுக் குழம்பு... உங்களுக்காக நாந்தான் வச்சேன்.... என்னோட கருவாட்டுக் குழம்பு உங்களுக்குப் பிடிக்கும்ல்ல... வாங்க... இன்னைக்கே மாப்பிள்ளை வீட்ல பேசி நம்ம புவனா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க... எனக்கு ரொம்பச் சந்தோஷம் அப்பா..." என்று எழுந்தவள் கலங்கிய கண்ணை அவர் பார்க்காது தாவணியில் துடைத்துக் கொண்டாள். 

அவள் இப்படிச் சந்தோஷமாப் பேசினாலும் அவள் மனசின் வலியும் வேதனையும் வார்த்தைகளில் தெரிந்ததை மாணிக்கமும் உணர்ந்திருந்ததால் அவருக்கும் கண்ணீர் வர எங்கே மகள் பார்த்து விடுவாளோ என்ற எண்ணத்தில் செருமிக் கொண்டே முகத்தைத் துடைப்பது போல் கண்ணீரைத் துடைத்தார். அப்போது அவர் மனசுக்குள் ஏனோ இதுவரை அத்துப் போயிருந்த தங்கை உறவு வந்து செல்ல, மாப்பிள்ளையும் ஞாபகத்தில் வந்தான். கடவுள் நினைத்தால் எல்லாம் நடக்கும் என்று நினைத்தபடி எழ, சுவற்றின் மூலையில் பல்லி ஒன்று 'உச்... உச்...' என்று கத்தியது.
-‘பரிவை’ சே.குமார்.

ஞாயிறு, 18 மார்ச், 2018

கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)

கல் மின்னிதழ் பங்குனி மாத மின்னிதழில் எனது ஆன்மீகக் கட்டுரை வெளியாகியிருக்கிறது. என்னிடம் நீங்க இதை எழுதுங்க என உரிமையுடன் கேட்டு வாங்கிப் போடும் (அட நம்ம ஸ்ரீராம் அண்ணாவின் வரிகள்) நண்பர் சத்யாவுக்கும் அவரோடு இணைந்து பணியாற்றும் அகல் நட்புக்களுக்கும் நன்றி.
****


Picture
தாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன்
தேவகோட்டைக்கு மிக அருகில் சிறுவாச்சி, வெங்களூர் சாலை பிரியும் இடத்தில் தாழையூர் கண்மாய்க்குள் இருக்கிறது இந்தக் கோவில். எங்கள் ஊருக்கு மிக அருகில், எங்கள் ஊர் வயல்களின் வழியாக... தாழையூர் கண்மாய்க்குள் போனால் கோவிலை அடைந்து சாமி கும்பிட்டுத் திரும்பலாம். எங்கள் ஊரில் இருந்து பார்த்தால் கோவில் தெரியும். இப்போது கருவைகள் வளர்ந்து நிற்பதால் கோவில் தெரிவதில்லை. பள்ளி படிக்கும் காலத்தில் இரவு நாடகம் (கூத்து) பார்க்கவும் வயல் வழி பாதையில்தான் பயணப்பட்டிருக்கிறோம். கல்லூரி காலத்தில் சைக்கிளில் ரோட்டு வழியாகச் செல்வோம். கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் என்று நீட்டி முழங்குவதெல்லாம் இல்லை எங்கள் பகுதி மக்கள்... எங்களுக்கு அவள் கூத்தாடிச்சியம்மன்தான். கூத்தாடிச்சி நீ இருந்தாக் கேளு என்று முடியும் சண்டைகள் ஏராளம். அவள் எல்லாரையும் காக்கும் தெய்வம் என்பதால் நீ இருந்தாக் கேளு என்ற வாசகத்தை தன் புன்னகைக்குள் அடக்கிக் கொள்வாள்.

தாழையூர் கண்மாய்... இப்படி எழுதுவது கூட ரொம்பக் கஷ்டமாத்தாங்க இருக்கு ஏன்னா பரியன்வயல் அப்படிங்கிற எங்க ஊரையே பரியமயல் என்றும் தேவகோட்டையை தேவட்டை என்றும் கண்டதேவியை கண்டேவி என்றும் சொல்லிப் பழக்கப்பட்ட பயலுக நாங்க.. அட்சர சுத்தமா எழுதுறதெல்லாம் நமக்கு ஒத்து வருவதில்லை எனவே நம்ம பேச்சு வழக்குக்கு மாறிக்கிறேங்க. தேவ கோட்டையை ஒட்டிய தாழக்கம்மாயின் நுனிப் பகுதியில் ஒரு மேடு அமைத்து அக்காலத்தில் கோவில் கட்டியிருக்கிறார்கள். அந்த மேட்டுப் பகுதிக்கு வாரியான கம்மாய்ப் பகுதியைத் தாண்டித்தான் போக வேண்டும் என்பதால் சிறியதாய் ஒரு பாலமும் சேர்த்துக் கட்டியிருக்கிறார்கள். தற்போது கோவிலுக்குப் பிரியும் ரோட்டில் கோவில் பெயரில் ஒரு வளைவு வைத்திருக்கிறார்கள். அதைத் தாண்டினால் இடதுபுறமாக சீர்படுத்தப்பட்ட கண்மாய்க் கரையில் உள்ள ஆலமரத்தின் அடியில் முனீஸ்வரர் இருக்கிறார். அவரை வணங்கிவிட்டு அம்மனைக் காணச் செல்வோரும் உண்டு... அம்மனைக் கண்டு விட்டு அவரை வணங்க வருவோரும் உண்டு.

கோவில் என்றால் அதற்கென்று ஊரணி ஒன்று இருக்க வேண்டும் இல்லையா... அதனால் தாழக்கண்மாய்க்குள் இருக்கும் கோவிலின் கிழக்குப் பகுதியில் சிறியதாய் இரு ஊரணி... அதற்கு கல் படிக்கட்டு... இரண்டு படித்துறைகள்... ஒன்று கோவிலுக்கு முன்னே... மற்றொன்றோ ஐயனார் சன்னதிக்கு எதிரே... கோவிலுக்கு முன்னே இருக்கும் படித்துறையில் இறங்கி கால் கழுவி தலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டு கோவிலுக்குச் செல்வதையே பக்தர்கள் வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள்.

அரச மரத்துப் பிள்ளையாரை வணங்கிப் பின்னரே அம்மனையும் அதன் பின் ஐயனாரையும் வணங்குவதை முறையாக்கி வைத்திருக்கிறார்கள். எல்லாக் கோவிலிலும் முதல் வணக்கம் முதல்வனுக்குத்தானே. இது ஒரு கிராமத்துக் கோவில் என்றாலும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஸ்தல வரலாறு இருப்பது போல் இந்தக் கோவிலுக்கும் வரலாறு உண்டு.

இக்கோவில் உசுலாவுடைய ஐயனார் கோவிலாகத்தான் இருந்திருக்கிறது. ஐயனார் தனது துணைவிகளுடன் கிழக்குப் பார்க்க அமர்ந்திருக்கிறார். பெரும்பாலும் கோவில்கள் எல்லாமே கிழக்கு முகமாகத்தான் இருக்கின்றன இல்லையா?  

Picture
(சப்த கன்னிமார் எழுவர்)
இந்தக் கோவிலில் மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அப்படியான ஒரு திருவிழா நாளில் கூத்தாட வந்த இளம்பெண்தான் பெரியநாயகி. அவளின் அண்ணனும் நடிகர்தான். இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக கூத்துக் கொட்டகையில் இருந்து கம்மாய்க்குள் போயிருக்கிறாள். போனவளைக் காணவில்லை எனத் தேடிய அண்ணன்காரன், அவள் திரும்பி வந்தபோது அவசரப்பட்டு சந்தேகத்தில் எங்கே போனாய்? யாருடன் போனாய்? என வார்த்தைகளை விட, பெண் பிள்ளை அல்லவா சொல் பொறுக்கவில்லை.

தன் மீது சந்தேக விதை விழுந்த பின்னர் உயிருடன் இருப்பதில் அர்த்தமில்லை என்ற நினைப்பில் கோபத்திலும் வேகத்திலும் கம்மாய்க்குள் நின்ற ஒரம்பா மரத்தில் தூக்கில் தொங்கினார், கூத்தாட வந்த இடத்தில் சந்தேகத் தீயால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணைத் தெய்வமாக்கிவிட்டார்கள் அப்பகுதி மக்கள்.

பெரிய கருவறைக்குள் இரண்டு சிறிய கருவறைகள் ஒன்றில் ஐயனார் கிழக்குப் பார்க்க இருக்க, மற்றொன்றில் அம்மன் தெற்கு நோக்கி இருக்கிறாள். அம்மனின் பார்வையே பிரதான வாசலாய் மாறிப் போய்விட்டது. ஐயனார் கோவிலென்றாலும் அம்மன் பெயர்தான் வழங்குகிறது. புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே அபிஷேகம்... மற்ற விஷேச தினங்களிலும் நடப்பதுண்டு. அபிஷேகம் ஐயனாருக்கே... ஐயனாருக்கு அபிஷேகம் முடிந்த பின்னர் அம்மனுக்கும் ஐயனாருக்கும் தீபாராதனை நடைபெறும். ஐயனார் கற்சிலை அம்மனோ மரத்தினால் செய்யப்பட்டவள். இடது புறம் தலை சாய்ந்து கூத்தாடும் நிலையில் இருக்கும் அம்மனின் கழுத்தில் சுருக்குக் கயிறும் இருப்பதாய் சிலை வடித்திருக்கிறார்கள். அலங்காரம் இல்லாது இருக்கும் அம்மனைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டினால் இதைப் பார்க்கலாம். மரத்தினாலான சிலை என்பதால் அம்மனுக்கு சந்தனக் காப்பு மட்டுமே. அபிஷேகம் எல்லாம் ஐயனாருக்கே.

இப்போது கோவில் மண்டபங்கள் எழுப்பப்பட்டு அரசமர பிள்ளையார் கூட மண்டபத்துக்குள் வந்துவிட்டார் என்று நினைக்கிறேன். தற்போது அம்மனுக்கும் ஐயனாருக்கும் தனித்தனியே இராஜகோபுரம் கட்டுகிறார்கள்.

நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது படிக்கும் இடம் இந்தக் கோவில்தான். அப்போது மண்டபங்கள் எல்லாம் இல்லை. டானாப்பட ஒரு கட்டிடம் இருக்கும். அதில் சப்த கன்னிகள் சிலைகள் இருக்கும். அங்குதான் அமர்ந்து படிப்பது வழக்கம். பகல் நேரத்தில் அமைதியாய், எந்தத் தொந்தரவும் இல்லாமல் படிக்கச் சிறந்த இடம். கல்லூரியில் படிக்கும் போது நானும் எனது நண்பர்கள் சேவியரும் அண்ணாத்துரையும் படித்தது இங்குதான்.   

Picture

புதன், சனி மாலை வேளைகளில் பரபரப்பாக இருக்கும் இக்கோவில் மற்ற நாட்களில் ஒரு கிராமத்துக் கோவிலுக்கே உரிய அமைதியைத் தாங்கி இருக்கும். காவல் தெய்வங்களான பெரிய கருப்பன், சின்னக் கருப்பன், காளி, சன்னாசி, இடும்பன் என நிறையத் தெய்வங்கள் உண்டு. காளி சுவரில் புடைப்புச் சிற்பமாக இருந்து பின்னாளில் கற்சிலையாக மாற்றப்பட்டிருக்க, இப்பவும் கற்சிலைக்குப் பின்னே புடைப்புச் சிற்பம் இருக்கிறது. தேவகோட்டையில் இருந்து நடந்தே போய் வரும் தூரம்தான்... புதன், சனிக் கிழமைகளில் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்தும் சைக்கிள், வண்டிகள், கார்களிலும் இக்கோவிலுக்கு வருவார்கள். 5.30 மணிக்கு நடக்கும் அபிஷேகமும் அதன் பின்னான தீப ஆராதனையும் காணவே கூட்டம் வரும். அந்த வழியாகச் செல்லும் பேருந்துகள் அந்த நாட்களில் நின்று செல்லும். தேவகோட்டையில் சொந்தத் தொழில் செய்பவர்கள் எல்லாம் தவறாது இந்த இரண்டு நாட்களும் கோவிலுக்கு வருவார்கள்.

இந்தக் கோவிலில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலுக்கு நேர் எதிரே மிகப்பெரிய பொட்டலில் நாடகமேடை கட்டியிருக்கிறார்கள். கோவிலில் எப்போது நாடகம் வைத்தாலும் முதலில் அம்மனின் வம்சாவழியினரான கம்ப நாட்டிலிருந்து ஒருவர் வந்து மேடை ஏறி அம்மனைப் பற்றி பாடி ஆடிய பிறகே நாடகம் தொடரும்.

இந்தக் கோவிலில் நேர்த்திக்கடனாக மாடுகள் விடப்படும். கிட்டத்தட்ட முன்னூறு நானூறு மாடுகள். அவற்றை முறையாகப் பராமரிப்பதில்லை. சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போல் மாடுகள் கூட்டமாய் விருப்பப்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கின்றன. எப்போதேனும் கோவில் பக்கம் வருவதுண்டு. இந்த மாடுகளால் எங்கள் பகுதி விவசாயம் அழிந்த கதையை என் மனசு தளத்தில் எழுதியிருக்கிறேன். ஒருமுறை கண்டதேவி ஆட்கள் மாடுகளை விரட்டி விரட்டிப் பிடித்தார்கள். அதன் பின் அவர்கள் விவசாயம் செய்த இரண்டு கம்மாய்ப் பாசன நிலங்களில் விளைச்சல் இல்லை என்பதை எங்கள் பகுதி கண்கூடாகப் பார்த்தது. இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கோவிலில் அம்மன் சன்னதிக்குப் பின்னே இருக்கும் ஈச்ச மரத்தில் நம் எண்ணம் ஈடேற முடிச்சிப் போட்டு வைத்தால் அது கண்டிப்பாக நிறைவேறும் என்பது ஐதீகம். சில விஷயங்களில் நானும் கண்டிருக்கிறேன். நம் எண்ணம் நிறைவேறிய பின்னர் ஏதேனும் ஒரு முடிச்சை அவிழ்த்து விட்டால் போதும். சிவராத்திரிக்கு கருப்பர் பூ இறங்குதல், காவடிகள் என மதியம் மூன்று மணி வரை கோவிலில் கூட்டம் அலைமோதும். நாட்டார்கள் மேற்பார்வையில் இருக்கும் கோவில் இது. இப்பகுதியில் இருக்கும் பலருக்கு இக்கோவில் குலதெய்வம். மனிதர்களை தெய்வமாக்கிப் பார்த்து வழிபடும் கோவில்களில் இதுவும் ஒன்று. இதேபோல் சமீபத்தில் உதயமாகி, மிகப் பிரபலமான இடையங்காளி கோவிலும் மனிதரை தெய்வமாக்கி வழிபடும் கோவில்தான். கூத்தாடிச்சியைப் பார்க்கும் போது நம்மை ஏதோ ஒரு இனம்புரியாத சக்தி ஈர்ப்பதை உணரலாம்.

Picture

ஒரு காலத்தில் படிக்கிறேன் என கிடையாகக் கிடந்த கோவில். இப்போது ஊருக்குப் போகும் போது தவறாமல் அம்மன் தரிசனம் செய்து விடுவது வழக்கம். முன்பு இடிந்த நிலையில் மண் மூடிய பழைய கோவிலும் அப்படியே இருந்தது. அதையெல்லாம் சுத்தப்படுத்தி கோவிலுக்கான இடத்தை அகலப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கோவிலுக்குச் செல்லும் வழியில்தான் தேவகோட்டையில் பிரசித்தி பெற்ற அருணகிரிப்பட்டினம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் இருக்கிறது.
 
தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் இருப்பவர்கள் ஒரு முறையேனும் இக்கோவிலுக்குச் சென்று அம்மனைத் தரிசித்து வாருங்கள்.

(அம்மன் படம் மனைவி வாட்ஸ்-அப்பில் அனுப்பியது மற்ற படங்கள் தேனக்காவின் சும்மா தளத்தில் சுட்டவை - நன்றி) 
*************  

முத்துக்கமலம் மின்னிதழில் எனது இரண்டாவது சிறுகதை 'தோஷம்' பிரசுரமாகியிருக்கிறது. முடிந்தவர்கள் முத்துக்கமலத்தில் வாசியுங்கள். கதைக்கான இணைப்பு கீழே.

-'பரிவை' சே.குமார்.

சனி, 17 மார்ச், 2018

சுமையா - இலக்கிய நிகழ்வு

Image may contain: 7 people, child and outdoor

சில நிகழ்வுகள் மனசுக்கு நிறைவைக் கொடுக்கும்... அப்படியான நிகழ்வுகள் இப்பாலையில் பூப்பது என்பது அரிது. அதுவும் லேசான குளிர் நிறைந்த மாலையில் செயற்கை ஏரிக் கரையோரம் பேரீச்சம் மரங்கள் இல்லாத... நம்ம ஊர் நாட்டுக்கருவை மரங்களைப் போன்ற மரங்கள் நிறைந்த ஓரிடத்தில் பறவைகளின் ஆனந்த ராகத்தைக் கேட்டபடி, நம்ம ஊரில் மடை திறந்து தண்ணீர் வெளியாகும் போது கேட்கும் ஓசையினை ஒத்த ஓசையை ஏரிக்குள் குழாய் வழிப் பாயும் நீர் கொடுக்க வாசித்த புத்தகம் குறித்து அதன் ஆசிரியருடன் ஒரு அளவளாவல் செய்தல் என்பது வரம்தானே.

கனவுப்பிரியன் அண்ணனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு 'சுமையா'. இது குறித்தான ஒரு விமர்சனக் கூட்டம் ஒன்றை நிகழ்த்த வேண்டுமென காளியின் காதலன் தல பிரபு கங்காதரன் அவர்கள் ஓராண்டுக்கும் மேலாக சொல்லிக் கொண்டே இருந்தார். இப்பாலையில் அப்படியான ஒரு நிகழ்வைச் சாத்தியமாக்குதல் என்பதும் ஒரு குழுவாய் மிகச் சிறந்த எழுத்தாளர்களையும் வாசிப்பாளர்களையும்  என்னைப் போன்ற பார்வையாளர்களையும் (பார்வையாளன் இல்லையென்றால் விழா சிறக்காதுல்ல) ஒருங்கிணைத்தல் என்பது எத்தனை சிரமம் என்பதை இந்த ஓராண்டு சொல்லிக் கொண்டேயிருக்க, ஒரு வழியாக நேற்றைய தினம் அந்த நிகழ்வைச் சிறப்பாக நிகழ்த்தி முடித்துள்ளோம். இதற்காக உழைத்த சகோதரர் பிரபு அவர்களுக்கும் கேமராக் கவிஞர் அண்ணன் சுபஹான் அவர்களுக்கும் நன்றி.

அல் குத்ரா என்னுமிடத்தில் சந்திப்பு என முடிவாக... இதற்கென தூபம் போட்ட பிரபு, பற்றவைக்க.... அந்தத் திரியின் அடியொற்றி சுபஹான் அவர்கள் பத்திரிக்கை எல்லாம் அடித்து அழைக்காமல் முகநூல் மூலமாகவே அழைப்பு விடுத்து ஒரு சிறு கூட்டத்தைக் கூட்டிவிட்டார்... பிரபு அவர்கள் சொன்னதைப் போல் என்னையும் சுபஹான் அவர்கள் அதற்கான அழைப்பு இணைப்பில் இணைக்கவில்லைதான்... கேட்டால் தமிழ்ல ஏன்யா பேர் வச்சிருக்கே... இணைய மாட்டேங்குது என்பார்...:).

அல்குத்ரா பூங்கா வாசலில் குதிரை உபகரணங்கள் விற்பனை நிலையம் முன்னே காத்திருந்து ஒவ்வொருவராய் வர, ஒன்றிணைந்து பூங்காவின் பின்னே சிறிது தூரத்தில் தெரிந்த ஆப்பிள் வடிவ இரும்புக் கூண்டை நோக்கிக் கார்கள் அணிவகுக்க, மேலே சொன்ன செயற்கை ஏரி கண்ணில் காட்சியாய்... நிழலான மரங்களின் கீழெல்லாம் மனிதத் தலைகள். மெல்ல மண் பாதையில் ஊர்ந்து சென்று சற்றே தள்ளியிருந்த ஒரு நிழலில் பாய்களை விரிந்து அமர்ந்து கொண்டோம்.

முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கி, பின்னர் சுய அறிமுகம் ஆரம்பமானது. பிரபுதான் தலைமை என்பதாலும் நம்மைப் பற்றி அவருக்குத் தெரியும் என்பதாலும் அவரே சொல்லிவிட, என்னத்தைச் சாதித்தோம் நம்மைப் பற்றிச் சொல்ல... நமக்கு அதிகம் பேசவும் வராது... அம்புட்டுத்தானா என்று கேட்குமளவுக்கு சொல்லி முடிச்சாச்சு... அதுக்கு மேல என்ன இருக்கும் நம்மிடம்...? வரிசையாய் அறிமுகங்கள்.. எல்லாருமே பெரிய ஆட்கள்... சிறந்த பின்புலம் உள்ளவர்கள். ஒவ்வொருவராய் அறிமுகம் செய்யும் போது ஆச்சர்யமாய் இருந்தது... அடங்கொக்காமக்கா எல்லாம் பெரிய தலக்கட்டா இருக்கே அப்படின்னு யோசனையா இருந்தப்போ நீங்க எப்படி உங்க ஊருல தலக்கட்டோ அப்படி அவங்க அவுங்க ஊருலன்னு சொல்ல மனசைத் தேத்திக்கிட்டாச்சு.

ஒருவர் யாக்கை இயக்குனரின் தம்பி... மற்றொருவரோ ஒரு பிரபல இயக்குநரின் நண்பர். வேஷ்டியில் வந்தவர் ஜெயா தொலைக்காட்சியில் பத்து வருடங்கள் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்... ஒருவர் ஜெயமோகனின் நண்பர்... இப்படியான அறிமுகங்கள் நிகழ நம்ம முத்து நிலவன் ஐயா அவர்களின் மகன் நெருடாவும் வந்திருந்தார். . அபுதாபியில் இருந்து விழா இடம் நோக்கிச் செல்லும் போது வழியில் சந்தித்தோம். அவர் என்னை அடையாளம் கண்டு கொள்ள எனக்குத்தான் முதலில் அடையாளம் தெரியவில்லை, கில்லர்ஜி அண்ணனுடன் அவரைச் சந்திக் சென்றதை நினைவு கூர்ந்தார். ஒரு வழியாக சுய அறிமுகம் முடிந்து 'சுமையா' குறித்தான சுவையான விவாதம் ஆரம்பமானது. 

இப்படியான ஒரு இலக்கிய நிகழ்வை முன்னெடுக்கக் காரணமே படைப்பாளிகளை வெளிக்கொணரவே... ஒரு படைப்பாளியின் படைப்பு குறித்த விமர்சனத்தை... குறிப்பாக நிறைகளைவிட குறைகளைச் சுட்டுக் காட்டி செம்மைப்படுத்தும் நிகழ்வே இது... இது தொடக்கம் தான்... இனி அடுத்தடுத்த நிகழ்வுகள் அடிக்கடி நிகழ வேண்டும். முதல் நிகழ்ச்சியில் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த கனவுப்பிரியனின் சிறுகதைத் தொகுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதாய் தல பிரபு அவர்கள் ஆரம்பித்து வைக்க, ஒவ்வொருவராய் நிறை குறைகளைப் பேச ஆரம்பித்தார்கள்.

'இந்தக் கதையில் திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண் மனம் மாறுவதற்காக ஏன் சியால் கோட் செல்ல வேண்டும்' என்ற கேள்வியை முன் வைத்தார் நெருடா. அதைப் பின்பற்றிப் பேசிய பிலால் அவர்கள் 'ஒரு பெண்... அதுவும் இஸ்லாமியப் பெண் படித்தவளாய் காட்டப்பட்டதில் மகிழ்ச்சி என்றும் எங்கள் வீட்டில் கூட பெண்கள் படிக்கவில்லை... எங்கள் வீட்டில் மட்டுமில்ல நிறையப் பெண்கள் படிக்க வைக்கப்படுவதில்லை... அதை உடைத்து எழுதியிருக்கும் கதைக்கு வாழ்த்துக்கள்' என்றார்.

ரபீக் அவர்கள் எங்களைப் பார்த்த போது கனவுப்பிரியன் அண்ணனிடம் 'நாகராஜைக் கூட்டி வரவில்லையா?' என்றார். அப்போது நம்மைப் போல் நாகராஜ் என்ற நண்பரும் அண்ணனுக்கு இருப்பார் போல என்று நினைத்தால் அவர் ஷாகீர்க்கா தட்டுக்கடை குறித்துப் பேசும் போதுதான் தெரிந்தது அவர் கேட்டது அந்தக் கதையில் வரும் நாகராஜை என்பது. இது ஒரு உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதிய கதையா என்ற அவரின் கேள்விக்கு 'இல்லை... முழுக்க முழுக்க புனைவுதான்... நான் அந்தக் கடைக்குச் சாப்பிடச் செல்வேன்... அப்ப அந்தக் கடையின் கண்ணாடிக்குள் தட்டுக்கடை போட்டோ இருக்கும்... ஏன் இவ்வளவு பெரிய கடையில் இந்தப் போட்டோ என்று யோசித்ததின் விளைவே இந்தக் கதை' என்று விளக்கம் அளித்தார் எழுத்தாளர் கனவுப்பிரியன்.

அடுத்தடுத்தது ஒவ்வொருவராய் பேச பெரும்பாலும் சுமையா என்ற முதல் சிறுகதைக்குள்ளேயே பேச்சு நகர்ந்து கொண்டிருந்தது. பதினெட்டுப் புத்தகங்கள் போட்டிருக்கும்... இந்த நிகழ்வில் ஆறு கதைக்கான கரு எனக்குக் கிடைத்திருக்கிறது என்று சொல்லி எப்பவுமே கதை கவிதைகள் எனச் சிந்திக்கும் (நமக்கெல்லாம் சிந்தக்கவே தோணுதில்லையே... நௌஷாத்கிட்ட டிரைனிங் எடுக்கணும் போல) எழுத்தாளர் நொஷாத் அவர்கள் கதைக்குள் கொடுக்கப்படும் செய்திகளால் கதை வாசிப்பில் அயற்சி ஏற்படுவதாகச் சொல்லி நம்பி கோவில் பாறைகள் கதை பேய், அமானுஷ்யம், சாமி இதில் எந்த வகை எனக்கு அதுதான் புரியவே இல்லை என்றார். 

இதே கருத்தைத் தான் நெருடா அவர்களின் நண்பரான இராமநாதபுரத்துக்கார அண்ணாச்சியும் சொன்னார். மேலும் அவர் கதை மாந்தருடன் மட்டுமே நகராமல் சுற்றியிருப்பவற்றையும் கதைக்குள் கொண்டு வரவேண்டும். அப்படியிருந்தால் கதையின் சுவை இன்னும் கூடும் என்றார். வாசிப்பாளனாய் அவரும் அவருடைய மற்றொரு நண்பரும் முன் வைத்தது இதைத்தான்... இது ஏற்றுக் கொள்ளக் கூடியது. அண்ணனின் கதைகள் செய்திகளைத் தாங்கிப் பயணிப்பதால் பெரும்பாலும் கதை மாந்தர்களின் பின்னே மட்டுமே நகரும்.  அபுதாபியில் இவர்கள் நடத்தும் எரிதழல் என்ற வாசிப்புக் குழுவைப் பற்றி அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

இதற்கான பதிலாய் எஸ்.ராவின் சந்திப்பில் உங்கள் கதைகளில் சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொன்னதைச் சொல்லி  இப்போதைய கதைகளில் இப்படியான மாற்றங்களைச் செய்து வருகிறேன் என்றும் இதன் காரணமாகவே பாதிவரை எழுதிய நாவலை நிறுத்தி மீண்டும் எழுதுவதாகவும் சொன்னார் அண்ணன் கனவுப்பிரியன். விரைவில் ஒரு நாவலை வாசிக்கும் அனுபவம் கிடைக்கும்.

மகேந்திரன் அவர்கள் எழுத்தில் திராவிடம், அரசியல் குறித்துப் பேசினார். மிகவும் தீர்க்கமானதொரு பேச்சு. இந்தக் கதைதான் என்றில்லை காதல் கதை என்றாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்றார்.  அவர் பேசும் போது வடை கொடுக்கப்பட, என் பேச்சை நிறுத்த வடை கொடுக்கப்பட்டதால் இதிலும் அரசியல் இருக்கு என்றார் நகைச்சுவையாய்.

எழுத்தாளர் ஐயனார் அவர்கள் சுமையாவை முழுவதுமாக வாசித்திருந்தார் என்பதை அவரின் கருத்துக்கள் பறை சாற்றின. ஒவ்வொரு கதைக்கும் வலிந்து திணிக்கும் முடிவுகள் தேவையில்லை. முடிவில்லாமல் விட வேண்டும்... வாசகன் இதன் பின்னே என்ன நிகழ்ந்தது என்பதை யோசிக்க வேண்டும் என்றார். 

நௌஷாத் முடிவுகள் இல்லாமல் மொட்டையாய் நிற்கும் கதைகள் முழுமை பெறுவதில்லை... முடிவுகள் வேண்டும் என்பதை விவாத ஆரம்பத்தில் முன் வைத்தார். ஐயனார் அவர்கள் முடிவுகள் தேவையில்லை... வாசகனின் பார்வையில் விட வேண்டும் என்றார். இதற்கான பதிலாய் கனவுப்பிரியன் அவர்கள் வாசகர்களில் பல படிகள் இருப்பது குறித்துச் சொல்லி, ஒருவருக்கு முடிவு வேண்டும்... இன்னொருவருக்கு முடிவு வேண்டாம்... என்று விளக்கம் கொடுத்தார்.

தமிழாசிரியை ஷோபியா அவர்கள் கதைக்குள் செய்திகள் அதிகமிருப்பதால் வாசித்து வரும் கதையின் வரிகள் மறந்து விடுகின்றன என்றார். தமிழாசிரியருக்கு வரிகள் மறக்கலாமா... இருப்பினும் சுமையாவில் அண்ணன் கொடுத்த செய்திகள் அதிகமே.  இப்போது முகநூலில் எழுதும் கதைகள் எல்லாம் முத்தாய்ப்பாய் மலர ஆரம்பித்திருக்கின்றன... இனி வரும் கதைகள் சுமையாவின் சுமைகளைக் குறைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வந்திருக்கும்.

வேல்முருகன் அண்ணன் மிகச் சிறந்த வாசிப்பாளர் என்பதால் அவரின் பேச்சு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. தற்கொலைப் பறவைகள் குறித்துப் பேசினார். அதன் முடிவில் அவள் இறந்து கிடந்தாள் என்பது தேவையில்லாதது என்றார். மகேந்திரன் அவர்களின் எழுத்து அரசியல் என்ற பதம் குறித்து அவருடன் விவாதித்தார். அப்போதுதான் மகேந்திரன் அவர்கள் காதல் பற்றி எழுதினாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்பதை விளக்கினார்.

ஜஸீலா அவர்கள் விவாத ஆரம்பத்திலேயே மற்றவர்கள் பேசட்டும்... குறைகளை நான் இறுதியில் பேசுகிறேன் என்றார். அதன்படி சுமையாவில் ஆயிஷாவின் வயது குறித்த கேள்வியை வைத்தார். அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டது. பச்சையப்பா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் இல்லை என்றார். இவ்வளவு தூரம் மெனக்கெட்டு செய்திகள் சேகரித்து எழுதும் போது அதில் சிறிய தவறு என்றாலும் மற்ற கதைகளின் மீதான நம்பகத்தன்மை குறையும் என்றவர் இந்த இடத்தில் இந்த வரியில் எழுத்துப் பிழை இருக்கு என்ற போது இவ்வளவு தீவிரமான வாசிப்பா என்ற ஆச்சர்யமே எழுந்தது.

ஜெயமோகனின் நண்பரும் எழுத்தாளருமான ஆசீப் மீரான் அவர்கள் மிக விரிவாய் தன் விமர்சனத்தை முன் வைத்தார். நேற்றைய கூட்டத்தின் மொத்தப் பேச்சுக்களுக்குமான முடிவுரையாக அது அமைந்தது. சுமையாவின் முடிவில் அவள் திருமணத்துக்கு ஒத்துக் கொள்வதாய் எழுதியிருப்பதை, இதை ஏன் சியால்கோட் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதை பலர் கேள்விகளாய் முன் வைத்திருந்ததால் அது குறித்துப் பேசினார். இது ஆயிஷாவின் எண்ணம்தானே ஒழிய சுமையா தான் திருமணத்துக்கு ஒத்துக் கொள்வதாய்ச் சொல்லவில்லை என்றார். கதையின் முடிவு வாசகன் கையில் இருக்க வேண்டும். கதைக்குள் வாசகனை இழுக்க வேண்டும் என்பதை இவரும் வலியுறுத்தினார். சுஜாதாவின் கதை, அவரிடம் ஒருவர் கதை எழுதிக் கொடுக்க அதை வாசித்தவர் கதையில் வரும் மரம் என்ன மரம் என்ற கேள்வி கேட்டது என மிக விரிவாகப் பேசினார். மேலும் முகநூலில் கதைகளை எழுதும் போது முடிவை வாசகனிடம் விடுங்கள். அவன் கேள்வி கேட்டால் நீங்கள் பதில் சொல்லுங்கள் என்றார். பெரும்பாலான கேள்விகளுக்கான விடைகளையும் கொடுத்தார். 

மொத்தத்தில் முகநூலில் எழுதுவதை சேகரித்து வையுங்கள்... செய்திகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்... கதாபத்திரத்திரத்தின் பின்னே மட்டும் நடக்காதீர்கள்... சுற்றிலும் கொஞ்சம் பாருங்கள் என்பதே ஒருமித்த கருத்தாக இருந்தது.

இறுதியில் நன்றி கூறிய எழுத்தாளர் கனவுப் பிரியன் அவர்கள் குறைகளைச் சுட்டிக் காட்டியமைக்கும் மிகச் சிறப்பான நிகழ்வாக அமைத்துக் கொடுத்தமைக்கும் நன்றி கூறினார். மேலும் நான் நடையாடி... செய்திகளின் பின்னே செல்பவன் எனவே செய்திகள் இருக்கும் சுமையாவைப் போல பெரும் 'சுமை'யாக இல்லாமல் சுமக்கும் சுமையாக சுவையாக இருக்கும் என்றார்.

வேல் முருகன் அண்ணனுடன் அவரின் நண்பர்கள், புகைப்படக் காதலர்களான ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன் மற்றும் சகோதரர் நெருடா அவர்களின் நண்பர்கள், பிலால் அவர்களின் நண்பர் என எதிர்பார்த்ததைவிட அதிகமாய் நட்புக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். மிகச் சிறப்பான கூட்டமாக அமைந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

சுபஹான் அண்ணா கொண்டு வந்த இஞ்சி டீ, ராமகிருஷ்ணன் அவர்கள் கொண்டு வந்த வடை, வேல் முருகன் அண்ணன் கொண்டு வந்த சுண்டல், ஜஸீலா அவர்கள் கொண்டு வந்த பிரியாணி (சுவை கூட பார்க்கவில்லை... பிரியாணி பாத்திரம் எங்கேய்யா என பாலாஜியும் நாங்களும் தேடியது தனிக்கதை...:)) நொஷாத் கொண்டு வந்த பிஸ்கட், ஜூஸ் என சாப்பாட்டுக்கும் பஞ்சமில்லை. 

ஒரு அரங்கத்துக்குள் அடைபட்டு பேசும் இலக்கியப் பேச்சுக்களைவிட ஒன்றாய் அமர்ந்து ஜாலியாய் அரட்டை அடித்தபடி பேசிய இந்த இலக்கியக் கூட்டம் உண்மையிலேயே மிகச் சிறப்பாய்... மன நிறைவாய் அமைந்தது. தல பிரபு நீ பேசினியான்னு கேக்கக்கூடாது... பார்வையாளன்தாய்யா கெத்து.

விழா ஒருங்கிணைப்பாளர் காளியின் காதலன் பிரபு, போகும் போதும் வரும் போதும் காருக்குள் சிறப்பான இலக்கிய விவாதம் நடத்தினார்.  கூட்டம் முடிந்த பின்னர் ஒரு மணி நேரத்துக்கு மிகச் சிறப்பான விவாதத்தை நிகழ்த்தினார். அதைக் குறித்து தனிப்பதிவே எழுதலாம். புனைவு அபுனைவு குறித்தான விளக்கத்தை அங்கிருந்தவர்கள் ஜென்மத்துக்கும் மறக்க மாட்டார்கள். தீனதயாள் உபத்யாயாவை விட செம... அதுவும் காருக்குள் நௌஷாத்துடனான இலக்கிய விவாதம் இனிமை. 

இப்படியெல்லாம் இடை விடாது தீவிர இலக்கியம் பேசியவர் கூட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன் சரி... அதன் பின் என்னைப் போல் பார்வையாளனாய் ஆகிவிட்டார்... பேசு அஞ்சலி பேசு என அவர் முகம் பார்த்த போதெல்லாம் சிரித்தே மழுப்பி விட்டார். அதேபோல் சுபஹான் அண்ணன் சுய அறிமுகத்துடன் எஸ்கேப், போட்டோ பிடிப்பதில் இறங்கிவிட்டார்.

குறிப்பாக ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தார் பாலாஜி அவர்கள். மதுரை மண்ணுய்யா என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவரின் ரசிக்க வைக்கும் பேச்சு. வேல் முருகன் அண்ணனின் மகனிடம் உன்னைப் பற்றிச் சொல் என்ற போது 'என்னைப் பற்றி என்னைவிட எங்கப்பாவுக்கு ரொம்ப நல்லாத் தெரியும். அவரே சொல்வார்' என்றானே பார்க்கலாம். அதுக்கு அப்புறம் கேப்பீங்க.

இடையிடையே அரசியல், மய்யம், கமல் ரசிகனாய் பாட்ஷா படம் பார்க்கப் போய் இருக்கையை கிழித்த கதை என சோர்வில்லாமல் பயணித்தது நிகழ்வு. 

மொத்தத்தில் மிகச் சிறப்பானதொரு நிகழ்வு.  இப்படியான நிகழ்வுகள் பாலையில் எப்போதேனும் நிகழக் கூடும். இதை நிகழ்த்திக்காட்டிய பிரபு மற்றும் சுபஹான் அவர்களுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.