மக்களின் வாழ்க்கையை அடித்துத் துவம்சம் செய்த மழை வெள்ளம் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்து மதம் கடந்த மனிதத்தை காண்பித்துச் சென்றிருக்கிறது. ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலும் அதற்காகவாவது மழைக்கு நன்றி சொல்ல வேண்டும்.
மழை வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து உதவிய யூனூஸின் பெயரையே தங்கள் மகளுக்கு வைத்து தங்கள் நன்றியைக் காட்டினர் மோகன் தம்பதிகள் என்றால், தன் மீது அன்பு வைத்து தன் பெயரையே குழந்தைக்கு சூட்டியவர்களின் அன்பில் நனைந்து அந்தக் குழந்தையின் படிப்புச் செலவு முழுவதையும் தானே செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் அந்த நண்பர். மேலும் இவர்களுக்கு மட்டுமில்லாது இன்னும் வாழ்வை இழந்து நிக்கும் எல்லாரும் பயனடையும்படியாக காரியங்களைச் செய்ய முனைந்து வருவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். நண்பர் யூனூஸ் அவர்களை நாமும் வாழ்த்துவோமே.
முகநூலில் கூட அதிகம் பகிரப்படாமல் சூப்பர் ஸ்டாருக்கு ஒரு பிறந்தநாள் கழிந்திருக்கிறது என்றால் அது இந்த முறைதான் என்று நினைக்கிறேன். அவர் வேண்டாம்... வேண்டாம் என்று சொன்னாலும் பாலாபிஷேகங்களும் ஊர்வலங்களும் தமிழகத்தையே அதிர வைக்கும். அவருக்கு அரியாசனம் கொடுத்தும் அதை துச்சமென மதித்தார் என அண்ணன் ஒருவர் எழுதியிருந்தார். எப்போது அரியாசனம் கொடுத்தார்கள் அவருக்கு என்றுதான் தெரியவில்லை. படத்தில் வசனம் பேசினாலும் விஜயகாந்த் போல் எழுச்சி கொண்டு கட்சி ஆரம்பிக்க உள்ளுக்குள் அவருக்கு பயமே அதிகமிருந்தது என்பதே உண்மை. சரி அரசியல் எதுக்கு நமக்கு. அவரே ஒதுங்கித்தான் இருக்கார்... அப்படியே இருக்கட்டும் அதுவே தமிழகத்துக்கு நல்லது... இல்லையென்றால் சினிமாவில் நுழையும் எல்லாருக்கும் முதல்வர் கனவும் சேர்ந்து வந்துவிடும். தமிழனின் தலைவிதி சினிமாக்காரர்கள்தான் ஆளணுமின்னு வழிவழியா தொடர ஆரம்பிச்சிடும். இந்த முறை மக்கள் அவர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று சொன்னதற்காக எதுவும் செய்யவில்லை என்று சொன்னால் அது நகைப்புக்குரியதாகும். மக்கள் கொண்டாட விரும்பவில்லை என்பதே உண்மை. மக்களின் இந்த நிலைப்பாடு ரஜினிக்கு அல்ல மற்ற நடிகர்களுக்கும் சற்று வருத்தமாகத்தான் இருக்கும். இதை ரஜினிக்கு மட்டுமல்ல எந்த நடிகருக்கும் செய்யாமல் நாம் நம் வேலையைப் பார்த்தோம் என்றால் அவர்களும் சாதாரண மனிதர்களாக நம்மோடு உலாவருவார்கள். எனிவே ஹாப்பி பர்த்டே ரஜினி சார்.
வீணாப்போன சிம்புவும் அனிருத்தும் 'பீப்' பாடல் போட்டிருக்கானுங்களாம். ரெண்டு பேருமே அக்கா, தங்கச்சியோட பிறக்கலை போல. கதாநாயகியை தொடாமலே நடித்த, காதலித்த பெண்ணையே கரம்பிடித்து வெளியுலகிற்கு டண்டணக்கா ராஜேந்தராக இருந்தாலும் பன்முகத் திறமையில் ஜொலித்த மனிதரின் மகன் மாற்றி மாற்றிக் காதலித்து காதல் என்ற அழகிய வார்த்தைக்கு மோசமான இலக்கணம் எழுதியவன். இன்னொருவன் ரஜினியின் சொந்தக்காரன் என்று சொல்லிக் கொண்டு ஆண்ட்ரியாவின் உதடை கமல் உறிஞ்சுமுன்னே பலகோணத்தில் உறிஞ்சியவன் ரெண்டு சேர்ந்து பாட்டு போட்டிருக்காம் பாட்டு... கேவலப்பட்டவனுங்க... அவனவன் மழை வெள்ளத்துல வாழ்வை இழந்து கிடக்கிற மக்களுக்கு என்ன செய்யலாம்ன்னு யோசிச்சிக்கிட்டு திரியிறானுங்க... மக்கள் பிரச்சினையை இனி நடிகர் சங்கம் பேசாதுன்னு சொன்ன விஷால் கூட மக்களுக்காக இறங்கி வேலை செய்யிறான். இவன் என்னடான்னா... இலக்கிய, இலக்கண ரசனையோடு பாட்டெழுதுறான். இதுல உனக்குப் பிடிக்காட்டி கேக்காதேன்னு வேற ஆவேசமாச் சொல்றாராம் இந்த கேடுகெட்ட சிம்பு. இந்தப் பாடலை யூடிப்பில் தடை செய்ய வேண்டும் என ரிப்போர்ட் நிறைய பேர் பண்ணியிருக்கிறார்கள். நானும் அதில் ஒருவன். 'பீப்' பாடலின் கழுத்து நெறிக்கப்படுதா என்று பார்ப்போம். ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிக்கையாளரான ஒரு பெண் அருமையாக கிழிகிழி என்று கிழித்திருக்கிறார்.
உறுமீன்... பாபி சிம்ஹா ரொம்ப நல்லா நடிச்சிருந்தார். முன் ஜென்மத்துக் கதையோடு இந்த ஜென்மத்துக் கதையை இணைத்து ஒரு புத்தகமும் அதில் இருக்கும் கடிகாரமும் என மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். 'மெட்ராஸ்'கலையரசன் அருமையாக நடித்திருக்கிறார். முன் பின் என இரண்டிலும் கலக்கல். அழகர்சாமி கூட நல்லாவே நடித்திருக்கிறார். விறுவிறுப்பான கதை... பரபரப்பாக கதை பயணிப்பதால் நாயகியை பாதியிலேயே பஸ்ஸில் ஏற்றி அனுப்பி விடுகிறார்கள். இறுதி காட்சியில் வரும் சண்டைதான் ஏற்புடையதாக இல்லை. நாயகனும் வில்லனும் அப்போது கூட மோதாமல் நாயகன் மாஞ்சாக் கயிற்றில் பட்டம் விட்டு மக்கள் கழுத்தை அறுத்துக் கொள்ளும் சென்னை வாழ் மாஞ்சாக்கயிறு பட்டவாசிகள் போல அண்டர்கிரவுண்ட் பாதைக்குள் வைத்து அத்தனை பேரையும் அறுத்து எடுக்கிறார். அது மட்டுமே நல்லாயில்லை... மற்றபடி உறுமீன் நன்றாகவே இருக்கிறது.
ஸ்டாலின் இன்னும் நமக்கு நாமே படத்தில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். காலில் முழங்கால் வரை ஷூ போட்டு கெரண்டைக் கால் தண்ணீரில் நடந்து போட்டோ எடுத்து விளம்பரம் செய்து கொள்கிறார். அதற்கு விஜயகாந்த் சேற்றிலும் சகதியிலும் செருப்பில்லாமல் தான் நடக்கிறார். மக்களிடம் அன்போடு பேசுகிறார். என்ன கோபம் வந்த கைதான் படக்குன்னு எந்திரிக்குது... அதையும் கழுத்துப்பக்கமாக கொண்டு போயி சமாளிக்க கத்துக்கிட்டு இருக்கார். சீமான் இப்போத்தான் வெள்ளம் வந்தது போல மீண்டும் கத்த ஆரம்பித்திருக்கிறார். பார்த்தீபன் சப்தமில்லாமல் உதவிகள் செய்து வருகிறார். வெள்ளத்தில் மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்த போது ஸ்டாலினும் அவர் மனைவியும் கேரளாவில் தங்கி ஓய்வெடுத்திருக்கிறார்கள். அதை கேரளப் பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டு கேலி செய்திருக்கின்றன. அலுவலக நண்பர் காலையில் சொல்லிச் சிரித்தார். மாலையில் பேப்பர் செய்தியும் பார்வைக்குக் கிடைத்தது. இவர்தான் மக்களுக்கான முதல்வராம். இவர் இது செய்தார்... அதைச் செய்தார்... நாங்கள்தான் மக்கள் நலம் விரும்பிகள் என்று முகநூலில் பலர் கத்திக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை.
உப்புக்கருவாடு.... கஞ்சிக்கு சுட்ட கருவாடு இருந்தால் இன்னும் இரண்டு தட்டு சாப்பிடத் தோணுமே அப்படியிருக்கு... சான்ஸே இல்லை... ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் படம் பார்ப்பவர்கள் சிரித்து ரசிக்கலாம். ராதாமோகனின் கதை வசனத்தில் படம் ரொம்ப நல்லாயிருக்கு. இது உப்புக் கருவாட்டிலும் நெய்மீன் கருவாடு சும்மா கம.. கமன்னு... சரவணன் மீனாட்சி நாயகி இதில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கம்மி... அவரை சினிமா நாயகியாக வருபவருக்கே அதிக வாய்ப்பு. டைமிங்க் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். ரசித்துப் பார்க்கலாம்.
கடலூரில் களப்பணியில் இருக்கும் நண்பன் தமிழ்க்காதலனின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்த செய்தி இது.
"கடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் பணிகளுக்கு இடையே நாம் செய்த மற்றொரு பணியும் இருக்கிறது. ஆங்காங்கே கைகட்டி, ஏரிக்கரை, குளக்கரை, கோயில் வாசல், ஆற்றுப் பாலம், என கிடைத்த இடத்தில் அமர்ந்து கதைப்பேசி கொண்டிருந்த உள்ளூர் இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி, அவர்களின் பிரச்சனைகளையும், தேவைகளையும், அதற்கான தேடல்களையும், ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும் சொல்லி, அவர்கள் சும்மா இருக்க, வெளியூர்களில் இருந்து வரும் மற்றவர்கள் களப்பணியில் ஈடுபடுவதைப் பார்க்க உங்களுக்கு உறுத்தலாக இல்லையா என்று வினாத்தொடுத்து, நாம் சென்ற அனைத்துப் பகுதிகளிலும் நமது இளைஞர்களை களப்பணியில் இறக்கி அவர்களுக்கும் சமூக அக்கறையை ஊட்டி இருக்கிறோம். இந்த பணி ஓரளவு எமக்கு நிறைவைத் தந்திருக்கிறது."
தமிழ்க்குடில் தன் கடமையைச் செய்கிறது. வாழ்த்துக்கள் நண்பா.
தொடர்ந்து பாக்யாவில் மக்கள் மனசு பகுதியில் எனது கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருப்பதில் சந்தோஷம். நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துக்களும் தொடர்ந்து வருகின்றன. வாழ்த்துக்கள் நண்பரே.

கேரளா எப்.எம். சேனலில் சென்னை மக்கள் சூப்பர் கிங்க்ஸ் என்று புகழ்ந்திருப்பதாக முகநூலில் ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. வெள்ளத்தில் தவித்த சென்னை மக்களுக்கு உதவ தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்தும் தமிழன் ஓடிவந்தான். இங்கே சென்னை மக்கள் மட்டும் சூப்பர் கிங்க்ஸ் அல்ல... தமிழக மக்களே சூப்பர் கிங்க்ஸ்தான்.... உதவியின்னா முதல்ல நிக்கிறவன் தமிழன்தான். அது என்னவோ தெரியலை கடலூர்ல மழை, இப்போ தென் தமிழகம் எங்கும் மழை அப்படியிருக்க சென்னை மட்டுமே எல்லா இடங்களிலும் முன்னணியில் இருக்கு. ஒருவேளை நம்ம ஆட்சியாளர்கள் நினைப்பது போல் தமிழகம் என்றால் சென்னை மட்டும்தான் என்று நினைத்து விட்டார்கள் போல. எப்படியோ தமிழர்கள் வாழ்த்துக்காகவும் வீடியோக்களுக்காகவும் உதவவில்லை. மனிதாபிமானத்தோடுதான் உதவி வருகிறார்கள். வாழ்த்துவோம் நம் மக்களை.
இந்த மனசின் பக்கம் நேற்று (வெள்ளி) வரவேண்டியது... உடல் நலமும் மன நலமும் கொஞ்சம் யோசித்ததால் இன்று இனி வழக்கம் போல் அடுத்த வெள்ளி மலரும்.
-'பரிவை' சே.குமார்.










