மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 15 நவம்பர், 2015

வேதாளம்... நாட் அவுட்

ஜீத்துக்கு நெகட்டிவ் காரெக்டர் பண்ணுவது என்றால் ரொம்பச் சந்ததோஷம் வந்து விடும் போல... ரொம்ப அசால்ட்டாக... அட்டகாசமாக... ஆக்ரோஷமாய்... அடித்து நொறுக்கியிருக்கிறார். டிரைவர் கணேஷாக இருக்கும் அஜீத் வேதாளமாக விஸ்வரூபம் எடுக்கும் போது திரைக்கதையில் சூடு பிடிக்கிறது. சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வரும் படங்களின் வெற்றியே வேகமெடுக்கும் திரைக்கதைதான்... இதிலும் அதே பார்முலாதான்.


தங்கை லஷ்மிமேனனை ஓவியக் கல்லூரியில் சேர்ப்பதற்காக கல்கத்தா வரும் அஜீத், மயில்சாமியின் வீட்டில் தங்கி அவரின் உதவியால் கோவை சரளாவும் அவரது மாப்பிள்ளை சூரியும் நடத்தும் வாடகை டாக்ஸி கம்பெனியில் டாக்ஸி டிரைவராக வேலை செய்கிறார். தானுன்டு, தன் தங்கை உண்டு... தங்கள் வாழ்வு உண்டு என்று இருக்கிறார். அப்போது கல்கத்தா காவல்துறை ஆணையர் டாக்ஸி டிரைவர்களை எல்லாம் கூப்பிட்டு போலீஸ் தேடும் ரவுடிகளின் போட்டோக்களைக் கொடுத்து இவர்களைப் பார்த்தால் துப்புக் கொடுங்கள் என்று சொல்ல, அவர்களில் ஒருவனைப் பார்க்கும் அஜீத் போலீசுக்கு தகவல் கொடுக்க, வில்லன் குரூப்பில் ஒரு கோஷ்டி  பிடிபட, வில்லன் குரூப் அஜீத்தைக் கண்டு பிடித்து மடக்குகிறது. இதுவரைக்கும் பயணிக்கும் கதை ரொம்பச் சாதரணமாக அண்ணன் தங்கை பாசத்தை மட்டுமே மையப்படுத்தி பயன்படும் கதையில் ஆஜீத்தும் லட்சுமி மேனனும் படத்தைத் தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள்.

அஜீத் யார்..? அவர் கல்கத்தாவுக்கு வரும் முன்னர் எங்கிருந்தார்...? என்னவாய் இருந்தாய்...? அவரின் தங்கை சொந்தத் தங்கையா... இல்லையா...? என்ற முடிச்சுக்கள் எல்லாம் இடைவேளையின் போது அவிழ்க்கப்பட்டாலும் அஜீத் வில்லனைச் சந்திக்க ஆரம்பிக்கும் அந்த இடத்தில் இருந்தே வேதாளம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்கிறது. சாதுவாய் இருக்கும் அஜீத் வில்லனின் ஆட்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்யும் இடத்தில் காட்டும் முகபாவங்கள்... மனுசன் அனுபவிச்சி நடிச்சிருக்கிறார்.

வேதாளமாய்... பழைய பாடல்களை டேப்பில் ஓடவிட்டும்... பாடிக்கொண்டும் சண்டை போடுவது ரசிக்க வைக்கிறது. முதுகில் கத்திக் குத்துப்பட்டு கிடக்கும் போது லெஷ்மிமேனன் பதற, 'என்னை ரொம்பப் பேரு முதுகில் குத்தியிருக்கிறான்...' என்று சொல்லும் அவரின் மனதில் உள்ளதைச் சொல்வது போல்த்தான் தெரிகிறது.  பணம் கொடுத்தால் எதுவேண்டுமானாலும் செய்யும் ரவுடியாய்... லஷ்மிமேனனின் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்து வீட்டைப் பூட்டிவிட, அவரும் கண் தெரியாத அப்பா, அம்மாவும் இவர் வீட்டில் வந்து தங்க... அவர்களை விரட்ட இவர் எடுக்கும் முயற்சிகளும் அதெல்லாம் நகைச்சுவையாய் முடியும் போதும் அஜீத் நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய அஜீத்தாக பார்க்க முடிந்தது.


வில்லனிடம் லஷ்மிமேனன் உள்பட நிறையப் பெண்கள் மாட்டியிருக்க, தனது வண்டியில் மோதி சைலண்சரை உடைத்ததற்காக பணம் வாங்க வந்து திரும்பும்போது 'இவனுக்கு காசைத் தூக்கிப் போட்டா நாய்க்கு எலும்புத்துண்டு கிடைத்த மாதிரி போய்க்கிட்டே இருப்பான் போல' என்று சொன்னதும் 'என்னோட தன் மானத்துக்கு ஒரு இழுக்குன்னா சும்மா போகமாட்டேன்...' என்று சொல்லி அடித்து நொறுக்கி சண்டையில் கண்டெயினர் கம்பியை இழுத்துவிட பிடிபட்ட பெண்களை எல்லாம் தன்னை அறியாமல் காப்பாற்றி விடுவார். அதற்காக எல்லாத் தாய்மார்களும் நீ நல்லா இருப்பேன்னு சொல்லும் போது இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு போகச் சொல்லு என எங்கே தான் வேதாளத்துள்ள இருந்து கணேஷா வெளிய வந்துருவேனோன்னு பயந்து சொல்வதும்.. லஷ்மிமேனனின் அப்பாவும் அம்மாவும் வீட்டை விட்டு வெளியேற, அவர்களிடம் ஒன்றும் சொல்லாமல் தவிப்பதும்.. அருமை. 

லஷ்மிமேனனின் குடும்பம் வில்லனால் குத்துப்பட்டு கிடக்கும் போது அங்கு வரும் அஜீத்திடம் 'என் மனைவி உயிரோட இருக்காளான்னு பாருப்பா' என்று கதறி, 'அவ பொயிட்டாளா.... எனக்கு ஒரு நிமிடமாச்சும் முன்னால போகணுமின்னு சொல்வா... பொயிட்டாளா' என்று கதறி, 'எம்மகளைப் பாருப்பா...  அவளை எப்படியாச்சும் காப்பாத்து...' என்று கையைப் பிடித்து அழுது 'நீ காசு கொடுத்தாத்தானே செய்வே... இந்தா என மோதிரத்தையும் ரத்தத்தோடு கொஞ்சம் காசும் கொடுக்க... அந்த இடத்தில் நொறுங்கி அழுது அவளைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்ரிக்கு ஓடுகிறார் அஜீத். அங்கு தன்னை முன்பு இவள்தான் காப்பாற்றியிருக்கிறாள் என்பதை அறிந்து லஷ்மியைக் காப்பாற்ற அண்ணனாய் மாறி விடுகிறார், பழைய நினைவுகளை மறந்து போனவருக்கு பாசமான அண்ணனாக மாறி எல்லாம் விடுத்து அவளுக்காக வாழ்கிறார் என்றாலும் பணத்துக்காக பண்ணியவர் பாசத்துக்காக வேதளாமாக மாறி வில்லன்களை வேட்டை ஆட ஆரம்பிக்கிறார்.

தம்பி ராமையாவுக்கு இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம்... கண் இல்லை என்றாலும் எல்லா வேலைகளும் தானே செய்வதும்... சாகும் தருவாயில் மகளுக்காகவும் மனைவிக்காகவும் அழுவதும் என மனிதன் கலக்கலாய் நடித்திருக்கிறார்.


லஷ்மிமேனன் தங்கையாக வாழ்ந்திருக்கிறார். எந்தப் படமாக இருந்தாலும் தனக்கான கதாபாத்திரத்தில் ராஜ்ஜியம் செலுத்தும் அவர் இதில் தங்கையாக படம் முழ்வதும் அஜீத்துடன் பயணிக்கிறார். தனது கதாபாத்திரத்தில் அடித்து நொறுக்கியிருக்கிறார். சில இடங்களில் நடிப்பில் அஜீத்தை மிஞ்சி நிற்கிறார்.

ஸ்ருதி... தமிழில் நடித்த படங்கள் எல்லாம் வெற்றி பெறவில்லை என்ற ஒரு கருத்தை வேதாளம் மாற்றியிருந்தாலும் ஸ்ருதிக்கு இதில் நடிப்பதற்கான காட்சிகள் அதிகம் இல்லை. வந்து போகிறார் அவ்வளவே. காமெடியன்கள் எல்லாம் அவரின் கவர்ச்சியில் சொக்கித் தவிக்கிறார்கள்.

கோவை சரளா, சூரியின் காமெடி சில இடங்களில் மட்டும் சிரிக்க வைத்தாலும் பல இடங்களில் சிரிப்பே வரவில்லை என்பதே உண்மை. சூரி சொல்லும் 'ஆசம்... ஆசம்...' நல்லாயிருந்தாலும் பல இடங்களில் அவர் கடுப்படிக்கிறார். இவருக்கு அஜீத்-அழகர்சாமி, அஜீத்-மயில்சாமி, அஜீத்-மொட்டை ராஜேந்திரன் இடையிலான நகைச்சுவைகள் ரசிக்க வைத்தன.

அனிருத்தின் இசையில் பாடல்கள் தனியாக கேட்கும் போது என்னடா இப்படி இரைச்சலான இசை என்று நினைக்கத் தோன்றினாலும் படத்தில் பார்க்கும் போது 'ஆலுமா... டோலுமா...', 'வீர விநாயகா...' இரண்டும் ஆட்டம் போட வைக்கும் ரகம். 'உயிர் நதி...' உணர்வுப்பூர்வமான பாடல். பின்னணி இசையில் சட்டி, முட்டி எல்லாம் போட்டு உருட்டியிருந்தாலும் இரைச்சல் அதிகமிருந்தாலும் அஜீத் வேதாளமாய் விஸ்வரூபமெடுக்கும் இடங்களில் எல்லாம் பின்னணியில் கலக்கியிருக்கிறார்.

வில்லன்களைக் கொல்வது... தெறிக்க விடுவோமா என்று கேட்பது... தங்கைக்கு தன்னோட கடந்த காலம் தெரியக் கூடாது என்று நினைப்பது... இப்படி மாறி மாறி கணேஷாகவும் வேதாளமாகவும் வாழும் அஜீத் படத்தின் மிகப்பெரிய பலம். படம் முழுவதும் ஒன் மேன் ஆர்மிதான்... 


தங்கையை பின்தொடர்ந்து காதலிப்பவரிடம் பெண்கள் குறித்துப் பேசும் இடத்தில்...  தங்கைக்கு அடிப்பட்டிருக்கு என்று சொல்ல, அலறி ஓடிவரும் அஜீத், ஸ்ருதியிடம் இப்படியெல்லாம் செய்யாதீங்க என தங்கை குறித்து பேசும் இடத்தில்... தான் கொலைகாரன் என்று ஸ்ருதி தெரிந்து கொண்ட இடத்தில் கண்ணாடியை அடித்து உடைத்து லஷ்மிமேனன் பற்றிச் சொல்லும் இடத்தில்.... தங்கையைத் தேடி போனில் பேசியபடி  ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சிக்கனலில் நிற்கு வண்டியில் எந்த வண்டி என கண்டுபிடிக்க லைட் வயரைக் கட் பண்ணச் சொல்லி தவிக்கும் இடத்திலும்... ஒரு அண்ணனாய் எல்லார் மனதிலும் இடம் பிடிக்கிறார் அஜீத்.

மூன்று வில்லன்கள் இருந்தாலும் அவர்கள் யாருமே தெரிந்த முகங்கள் இல்லை என்று பலர் சொல்லியிருக்கிறார்கள்... அஜீத்தே வில்லனாய் நடிக்கும் போது மற்ற வில்லன்கள் எப்படியிருந்தாலும்... வந்து செத்துப் போனாலும்... தல அடித்து ஆடும் போது வேறு எந்த வில்லனைப் பார்க்கத் தூண்டும்.

லஷ்மிமேனன் பாத்திரத்தில் ஸ்ருதி நடித்திருக்கலாம் என்றெல்லாம் முகநூலில் சிலர் சொல்லியிருந்தார்கள்... ஸ்ருதிக்கு கிடைக்கும் கேப்பில் எல்லாம் கவர்ச்சியாய் நடிக்க வேண்டும்... டவுசர் பனியனில் திரையில் குதிக்க வேண்டும். அப்படிப்பட்டவருக்கு இழுத்துப் போர்த்திக் கொண்டு வரும் தங்கை கதாபாத்திரம் எப்படி ஒத்து வரும். பாவம் நாயகனுடன் ஒரு காதல் டூயட் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் கவர்ச்சி காட்டியிருப்பார். சால்ட் அண்ட் பெப்பர் தலையோடு வீரத்தில் தமனாவுடன் ஆடிப்பாடியதை பலர் மறந்திருக்க மாட்டார்கள் என்பதால் தல ஜகா வாங்கிட்டார் போல, அவர் நடக்க விட்டு பின்னாலேயே சொந்தக்குரலில் பாடி ஆடுகிறார்.

மயில்சாமி, மன்சூர் அலிகான் என பலரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நாற்பது வயசுக்கு மேல் அஜீத்துக்கு சுக்ர திசைதான் போலும்... தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கிறார். இதுவே அவரின் ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷம்... தன்னுடைய திரையுலக வாழ்வில் அதிகமான தோல்விப் படங்கள் கொடுத்த நாயகனாக இருந்தாலும் இன்னமும் தான்தான் கிங் என்பதை மீண்டும் வேதாளத்தில் நிரூபித்திருக்கிறார்.


'எண்ணம் போல் வாழ்க்கை' என்று அடிக்கடி சொல்வாராம்... மற்றவர்கள் நல்லா இருக்கணும் என்று நினைக்கும் அந்த மனதுக்கே... உடம்பில் பல வலிகளைச் சுமந்தாலும்... பட்ட கஷ்டங்களுக்கான வெற்றியைப் பெற்றிருக்கிறார். அஜீத்தின்  திரையுலக வாழ்வில் வாலி, வரலாறு, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம் வரிசையில் வேதாளம் ஒரு மைல் கல்... அவரின் திரை வாழ்வில் இன்னும் சிறப்பான பயணத்தை தொடர அமைத்துக் கொண்ட பாதையில் வேதாளம் பக்க பலமாக இருக்கும்.

படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கு... வில்லன் இருக்கும் இடத்திற்கு ஸ்ருதி ஏதோ மாமியார் வீட்டிற்கு வருவது போல் வருவதெல்லாம் பெரும் அபத்தம்தான்... இப்படி நிறைய... இருந்தாலும் எல்லாமே அஜீத் என்னும் மாஸ் ஹீரோவுக்கு முன்னால் அமுங்கிப் போய் விடுவதென்னவோ உண்மை.

தமிழ் சினிமாவில் கதை எல்லாம் தேவையில்லை... மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களையும் நிறைத்து வைத்தாலே போதும்... அந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்படும். அந்த வகைதான் வேதாளம்... அஜீத்தின் ஆக்ரோஷமான மாஸ்தான் படத்தின் வெற்றிக்கான முக்கியகாரணி. நமக்கெல்லாம் நல்ல கதைகளோடு படம் வேண்டும் என்றால்  மலையாளக் கரையோரம் ஓதுங்கி அன்னையும் ரசூலும், பெங்களூர் டேய்ஸ், த்ரிஷ்யம், பிரேமம், என்னு நிண்ட மொய்தீன், பாஸ்கர் தி ராஸ்கல் என பார்த்து ரசித்துக் கொள்ள வேண்டியதுதான்.

வேதாளம்... அஜீத்தின் ரணகள ஆட்டம்...

ரசிகர்களுக்கு தீபாவளி வானவேடிக்கை...

மொத்தத்தில் படம்... ஆசம்... ஆசம்...
-'பரிவை' சே.குமார்.

சனி, 14 நவம்பர், 2015

கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)


டவுளைக் கண்டேன் அப்படின்னு ஒரு தொடர்பதிவு ஒண்ணு இப்போ சென்னை மழை மாதிரி எல்லாப் பக்கமும் அடிச்சி விளையாடுது. வலையுலகிற்கு வந்த புதிதில் வாரம் ஒரு தொடர்பதிவு வரும். அதன்பின் மெல்ல மெல்ல தொடர்பதிவுக் கலாச்சாரம் குறைந்து விட்டது. பெரும்பாலும் தொடர்பதிவில் ஒரு சிக்கல் என்னவென்றால் இதற்கு எழுதுங்கள் என்று சொல்லும் போது எழுதுவது சிரமம். அதைவிட மிகப்பெரிய சிரமம் என்னவென்றால் பத்துப் பேரை எழுதச் சொல்லுங்கள், ஐந்து பேரை எழுதச் சொல்லுங்கள் என்பதுதான். ஆரம்பத்தில் எழுதுபவர்கள் ஆட்களை பிடித்து விடுவார்கள். மெதுவாக எழுதுவோமே என்றிருந்தால் விவசாயி இப்போது களை எடுக்க ஆள் தேடுவது போல்தான்...   

கடைசியாக வந்த தொடர்பதிவு கில்லஜி அண்ணாவின் கனவில் வந்த காந்தியின்னு நினைக்கிறேன். ஆளு கோர்த்து விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறதில் கில்லாடி.... காந்தி கூட சுத்தி சுத்தி அடிச்சி ஆடி அரை சதம் போட்டதாக நினைவு.  இந்த முறை கடவுளைப் பார்த்து நம்ம ஆசையைச் சொல்லணுமாம். என்னங்க ஆசையிருக்கு... முதல்ல இந்த ஊரில் இருந்து கிளம்பி பொண்டாட்டி, பிள்ளைகளோட சந்தோஷமாக இருக்கணும்ங்கிற பெரிய ஆசைதான் ரொம்ப நாளா ஓடுது. ஆனா கடவுள் கண்டுக்கவே இல்லை. அப்படியிருக்கு... அது வேண்டும் இது வேண்டுமென பதிவிற்காக பந்தலிடலாம்.  எல்லாம் கிடைக்குமா..?

நான் ஒருநாளைக்கு நூறு தடவைக்கு மேல் (நல்லா கவனிங்க ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி இல்லை... உண்மையிலேயே நூறு தடவை) 'ஸ்ஸ்ஸ்... அப்பா... முருகா என்னை மட்டும் காப்பாத்துன்னு சொல்வேன்' இது பல வருடங்களாக தொடரும் சொல். எங்க வீட்டில், நட்பில் எல்லாம் 'சாமிக்கிட்ட எல்லாரும் நல்லாயிருக்கணுமின்னுதானே வேண்டுவாங்க நீ என்னடான்னா உன்னையை மட்டும் காப்பாத்தச் சொல்றே..?' அப்படின்னு கேப்பாங்க. நான் சிரித்துக் கொண்டே 'என்னையை கடவுள் காப்பாத்தினா... நான் பத்துப் பேருக்காச்சும் நல்லது(?) செய்வேன்.... அந்தப் பத்துப் பேரு நூறு பேருக்கு.... நூறு பேர் ஆயிரம் பேருக்கு.... இப்படி போகும்ல்ல.... அதை விட்டுட்டு எல்லாரையும் காப்பாத்துப்பான்னு சொன்னா... அவரு இவனைப் பார்ப்போமா... அவனைப் பார்ப்போமான்னு மாறி மாறி பாத்து அம்புட்டுப் பேரையுமே காப்பாத்தாம விட்டுவாருல்ல...' என்று சொல்வேன். 'அடேங்கப்பா... என்ன ஒரு வில்லத்தனம்...' என்று சிரிப்பார்கள். அப்படிப்பட்ட நான் கடவுளிடம் என்னோட ஆசைகளைச் சொல்றேன். அவரு நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு....

அதுக்கும் முன்னால கில்லர்'ஜி' அண்ணா நகச்சுத்திக்காக ஆஸ்பிடல் போய் ஆபரேசன் தியேட்டருக்குள்ளே போனதும் மேலோகத்துக்கு போயி இறைவனிடம் தனது ஆசைகளை அடுக்குகிறார்... அதெல்லாம் மிகப் பெரிய ஆசைகள்... அங்கிட்டு கீதா அக்கா, சகோதரி தேன் மதுரத்தமிழ் கிரேஸ், அன்பு ஐயா செல்வராஜூ, திண்டுக்கல் தனபாலன் அண்ணா, பழனி கந்தசாமி ஐயா என பலரும் கடவுளைப் பார்த்து தங்கள் ஆசைகளைச் சொல்லியிருக்கிறார்கள்... நானும் அடுக்குகிறேன்... அதற்கு முன்னர் நேற்றிரவு கடவுளுடன் நடந்த உரையாடலைச் சொல்லி விடுகிறேன்.  தூக்கம் வராமல் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்போது அறையெங்கும் ஒரு பிரகாசம்... 'லைட்டெல்லாம் அமர்த்தியாச்சே... என்ன வெளிச்சம்...?' என யோசிக்கும் போதே....

"என்னப்பா... அறையில் தனியாக இருக்கிறாய்..?" என்றொரு குரல். இரவு 1.30 மணிக்கு திடீரென கேள்விக்கணையை தனி ஒருவனாய் இருந்த என்னிடம் கேட்டால் நான் என்ன செய்வேன்... ஆம் பயந்து அலறிவிட்டேன்... அறை பூட்டியிருக்கு... நான் மட்டுமே இருக்கிறேன்... எப்படி இன்னொரு குரல் வியர்வை என்னை நனைக்க...  எனக்கு கைகால் எல்லாம் டைப் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

"ஏனப்பா பயப்படுகிறாய்..? நாந்தான் கடவுள்..." என்றார்.

"என்னது...!? கடவுளா...? " பயம் மறைந்து சிரிப்பு வந்தது. பின்னே சிரிப்பு வராம ராத்திரி 1.30 மணிக்கு எந்தக் கடவுளய்யா வரும்... கனவா இருந்தாக்கூட பரவாயில்லை... கில்லர்ஜி அண்ணா தொடுத்த கடவுளைக் கண்டேன் தொடர்பதிவுகளை வாசித்துக் கொண்டிருந்தேன்... அப்பத்தான் யோசித்தேன்... ஆங்... அட நம்ம ஆசையைக் கேட்க வந்திருக்காரு போல என்றெண்ணி "அமருங்கள்" என்றேன். சிரித்துக் கொண்டே என் கட்டிலில் எனக்கருகே அமர்ந்தார்.

"கில்லர்ஜி என்னைப் பார்த்து ஆசைகளைக் கேட்டதோடு இல்லாமல் சுத்தி விட்டுட்டாப்ல... இப்ப நாந்தான் தூக்கமில்லாமல் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுறேன்... இந்தப் பதிவர்கள் எல்லாமே தூங்கவே மாட்டானுங்களா... ராத்திரியெல்லாம் கடவுளைக் கண்டேன்னு எழுதிக்கிட்டே இருக்காப்ல... இனி கொஞ்ச நாளைக்கு எனக்கு தூக்கம் கூட கனவுதாம்ப்பல... சரி உங்க  ஆசைகளை சொல்லுங்க..."

"ம்... என்னோட ஆசைகள்..? எல்லாருக்கும் சொந்த ஆசைகளும் இருக்கும்... அது இப்படி இருக்கணும்... இது அப்படியிருக்கணும் எனக் கேட்கும் போது எனக்கும் எனக்கே எனக்கென சில ஆசைகள் இருக்கும் அதனால் எல்லாந்தான் கேப்பேன்... சரியா..?" என்றேன்.

"ஓகே... " என்றபடி நன்றாக அமர்ந்து கொண்டார்.

முதலில் எனக்கே எனக்கான ஆசைகள் சில என்றபடி ஆசைகளை அடுக்க ஆரம்பித்தேன்.

ஆசை...1 : 'எங்க வீடு இருக்கும் பகுதியில் இன்னும் சரியான ரோடு இல்லை... மழை நேரத்தில் குழந்தைகளைப் பள்ளிக்குக் கூட்டிப்போக என் மனைவி மிகவும் சிரமப்படுகிறார். வண்டியை அந்த தொறுத்தொறு சகதியில் ஓட்டிச் செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. முதலில் எங்க கவுன்சிலருக்கு மனசு வந்து அந்த ரோடைப் போட வேண்டும்.'

ஆசை...2 : 'நான் இனிமேலா பிறக்கப் போகிறோம் என எல்லோருடனும் பகையில்லாமல் வாழ நினைப்பவன்... என் மனைவியும் அப்படியே... ஆனால் உறவுகள் நடக்கும் விதங்கள் எல்லாம் மனக்காயங்களையே ஏற்படுத்துகின்றன. இந்த உறவே வேண்டாம் என ஓதுங்க வைத்து விடுகின்றன... இப்படிப்பட்ட சூழலிலும் சண்டையோ, சமாதானமோ அவரவர் அவரவர் பாதையில் பயணிக்க வேண்டும். அவன் நல்லாயிருக்கக் கூடாது... இவன் நல்லாயிருக்கக் கூடாதென நினைக்காமல் இருக்க வேண்டும்.'

கடவுள் : 'ஆஹா... ஆஹா... ஆசம்...' என்றார். 

"நீங்க வேதாளம் படம் பாத்தீங்களா...? சூரி சொல்ற மாதிரி ஆசம் சொல்றீங்க...?"

கடவுள் : 'ஆமா... பின்ன எவன்டா என்னைக் காண்பான்னு காத்திருக்கும் போது... வைகுண்ட ஏகாதசிக்கு நீங்களெல்லாம் ராத்திரி எல்லாம் படம் பார்த்து கண் முழிக்கிற மாதிரி நானும் படம் பார்த்துத்தான் கண் விழிக்கிக்றேன்..."

"ஆசம்... ஆசம்... சரி அடுத்த ஆசைகள் ஊருக்கானது..." என்றபடி தொடர்ந்தேன்.

ஆசை...3 : 'கருவை மரங்களால் சூழப்பட்டிருக்கும் எங்க ஊர் 42 ஏக்கர் நிலத்திலும், நான் படிக்கும் காலத்தில் இருந்தது போல பச்சை மெத்தை விரித்தது போல்... நெல் மணிகள் தலையாட்ட வேண்டும். சலசலவென நீர் ஓடி, அருகம்புற்கள் அலையோடு ஆடிப்பாடிய அந்த நாட்கள் மீண்டும் வர வேண்டும்.'

ஆசை...4 : 'நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஏன் சில ஆண்டுகள் வரை கம்பீரமாக, எங்களுக்கு முன்னோடிகளாக இருந்த எங்கள் ஊர் மனிதர்களில் சிலர் மறைந்து விட்டார்கள்... இருக்கும் சிலரும் வயோதிகத்துக்குள் வசப்பட்டு விட்டார்கள். எங்களை அறிவுரைகளாலும் அன்பாலும் வளர்த்த அந்த மனிதர்கள் இன்னும் சில காலமேனும் கஷ்டப்படாமல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.'

கடவுள் : "சூப்பர்ய்யா... நல்ல ஆசைகள்... ஆசம்... ஆசம்..."

"நன்றி... இனி எங்க மாவட்டத்துகான ஆசைகள் சிலவற்றைச் சொல்றேன்"

ஆசை...5 : 'இந்தியாவுக்கு நிதியமைச்சரை பலமுறை கொடுத்த எங்கள் மாவட்டத்தில் எந்த ஓரு தொழில்துறையும்... முன்னேற்றங்களும் இல்லை... மாவட்டத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல, மக்களின் 'பசி' நீக்க, நல்லதொரு எம்.பியும் எம்.எல்.ஏவும் கிடைக்க வேண்டும். இது நிறைவேறாத ஆசைதான் என்பது தெரியும். இருந்தாலும் நிறைவேறினால் நல்லா இருக்கும்...'

ஆசை...6 : 'சென்னை எங்கும் மழை நீரில் தத்தளித்தாலும் எங்கள் மாவட்டம் வறட்சியில்தான் வாடிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்கும் விதமாக, விவசாயிகளை வாழ வைக்கும் விதமாக மாதம் மும்மாரி பொழிய வேண்டாம்... விவசாயம் பொய்த்துப் போகாமல் வருடா வருடம் விளைச்சல் பெருகும் வண்ணம் மழை பெய்ய வேண்டும்' (இதை எழுதி முடித்துவிட்டு ஊருக்குப் பேசும்போது மழை கொட்டித் தீர்ப்பதாய் கேள்வி - அப்பா ஒரு ஆசை கொஞ்சம் நிறைவேறிடுச்சுன்னு நினைக்கிறேன்)

கடவுள் : "முதல் ஆசை... ரொம்பக் கஷ்டம்ய்யா... நானே தேர்தல்ல நின்னாக்கூட என்னையும் மாத்திருவானுங்க... ரொம்பக் கஷ்டம்... ரெண்டாவது ஆசை.... ரொம்ப நல்ல ஆசை... விவசாயம் பொய்த்துப் போகக்கூடாதுதான்... ஆசம்... ஆசம்..."

"அதான் நானே சொல்லிட்டேனே... அந்த ஆசை கொஞ்சமல்ல... ரொம்ப அதிகப்படியானதுதான்... சரி அடுத்த ஆசைக்கு வாங்க... இது என் தமிழகத்துக்கானது..." 

ஆசை...7 : 'மக்கள் முதல்வர் என்று சொல்லிக் கொண்டு மக்கள் சிந்தனையே இல்லாமல் இருக்கும் முதல்வரும்... கேலித்தனமான அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளும் எங்களை முட்டாளாக்கி கோடிகளில் புரள்கிறார்கள். எங்கள் மக்களுக்கு மக்கள் முதல்வராய் இல்லாமல் மக்களுக்கான முதல்வர் கிடைக்க வேண்டும். வளர்ந்த தமிழகத்தை காலொடித்துப் போட்டிருக்கும் கயவர்கள் கூண்டோடு அழிய... மன்னிக்கவும் நாடு கடத்தப்பட வேண்டும்.'

ஆசை...8 : 'சாராயத்தில் சிக்கி சாகும் என் தமிழன் டாஸ்மார்க் என்னும் வட்டத்துக்குள் இருந்து வெளியே வரணும்... ரோட்டில் விழுந்து கிடப்பவனும் கூத்தடிப்பவனும் குறைய வேண்டும்... கோடி வசூல் என்று மார்தட்டும் அரசுக்கு நாமம் போட வேண்டும்... அதற்கு குடி..குடி என்ற எண்ணம் எம் தமிழனின் சிந்தையில் இருந்து அகல வேண்டும்.'

கடவுள் : "இது ரெண்டுமே ரொம்பச் சிக்கலானது... மக்களின் முதல்வர் வருவதெல்லாம் இனி கேள்விக்குறிதான்... டாஸ்மார்க் வேண்டான்னு தமிழன் சொல்லணுமா... நல்ல கதை போ... முன்னெல்லாம் காலையில குளிச்சி எங்களைப் பார்க்க கோவிலுக்கு வருவாங்க... இப்போ ஆம்பளை, பொம்பளை, ஸ்கூல் பசங்கன்னு ரொம்பபேரு காலையிலயே கட்டிங் போடப் போறானுங்க... உங்க மக்கள் முதல்வர் 500 கோடி நிர்ணயம் பண்ணினா நீங்க 600 கோடிக்கு குடிக்கிறீங்களேப்பா... ஆசம்... ஆசம்..."

"ஆமா... ஆமாம்... நாங்களெல்லாம் அரசை வாழ வைக்கும் சாமிகள்... இந்த விஷயத்துல மட்டும் அரசியல்வாதிகள் எங்களை கடவுளாகப் பார்ப்பார்கள்... சரி என் நாட்டுக்கான ஆசைகளைப் பார்ப்போமா..?"

ஆசை...9 : 'எல்லாரும் ஓர் இனம்... எல்லோரும் ஓர் குலம்... எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்.. என்று வாழ்ந்து வருகிறோம். நாங்கள் மன்னர்களாக வேண்டாம்...  சாதியும் மதமும் எங்களைப் பிரிக்காமல் இருக்கட்டும்... எங்கள் சகோதரத்துவ உறவு ஒரு சில கயவர்களால் பிரிக்கப்படாமல் இருக்க வேண்டும்... எப்போதும் எல்லாரும் அன்போடும் உறவோடும் வாழ வேண்டும்... தீவிரவாதங்கள் திசைக்கொன்றாய் ஓடவேண்டும்...'

ஆசை...10 : ' எங்காவது ஒருவன் பெரிய பதவிக்கு வந்தால்... அவன் நாட்டை விட்டே போயி நாலைந்து தலைமுறைகள் ஆயிருந்தாலும் தமிழன் என்றும் இந்தியன் என்றும் மார்தட்டிக் கொள்ளும் நாங்கள் திருந்த வேண்டும். எங்கள் இந்தியா... எங்கள் இந்தியன்... உலக அரங்கில் உயரத்தில் வலம் வர வேண்டும்...'

கடவுள் : "ஆசம்... ஆசம்..."

"நீங்க ரொம்ப மோசம் போங்க..."

கடவுள் : "என்னய்யா... டப்புன்னு திட்டிப்புட்டே..."

"பின்ன என்னங்க... எத்தனை வருசமா உங்ககிட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன்... என்னை என் மனைவி மக்களோட வாழ வையுங்க... இந்த வாழ்க்கை போதும்ன்னு... காது கொடுத்தே கேட்கமாட்டேங்கிறீங்க... எப்படியாச்சும் என்னோட எழுத்துக்களை புத்தகமாக்கி எல்லோரையும் கஷ்டப்பட வைக்கணுமின்னு கேட்கிறேன்... அதுக்கும் இன்னும் செவி சாய்க்கலை... இந்தப் பத்தும் நீங்க செய்யிறதுக்குள்ள... நீங்க இங்க உக்காந்திருக்க மாதிரி நான் அங்கே வந்து உக்காந்திருப்பேன்" என்று மேலே கையைக் காட்ட கடவுள் சிரித்தார்.

"என்ன சிரிக்கிறீங்க...?"

"உன்னோட ஆசைகள் எல்லாம் நடக்கும்ய்யா... ஆனா அரசியல் சம்பந்தமான ஆசைகள் ரொம்பக் கஷ்டம்..." என்றவர் "சரிய்யா... கீழே டாக்ஸி கிடைக்குமா.... நான் அப்படியே முரூர் போயி கில்லர்ஜிக்கிட்ட உன்னோட ஆசைகள் எல்லாத்தையும் சொல்லிட்டு கிளம்புறேன்... ஏன்னா அவருதான் புத்தகம் போட்டு எழுதுறாப்ல.. அடுத்து எந்த ஊரோ... ? எந்த நாடோ...? " என்று எழுந்தார்.

"ரொம்ப டயர்டா இருக்காப்ல தெரியுது.... அந்தப் பெட்டுல படுத்து கொஞ்சம் கண் அயர்ந்துட்டுப் போங்க..."

"தூக்கமா... அதெல்லாம் வேண்டாம்ய்யா... கிளம்புறேன்... உன் ஆசைகள் எல்லாம் சீக்கிரம் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..."

"அடப்பாவி... அப்ப நீங்க யாரு...?"

"நான் கடவுள்..." என்றபடி மறைந்தார். வராத தூக்கம் என்னை ஆட்கொள்ள, ஆழ்ந்து உறங்கினேன்.

அட மறந்துட்டேனே... யான் பெற்ற இன்பம் பெறுக இப்பதிவுலகம்ன்னு பத்துப்பேரை சந்திக்கு... சாரி பந்திக்கு இழுக்கணுமாமே... இதோ அந்தப் பத்து...

1. சிறந்த எழுத்துக்களை கருத்துக்களாய் பகிர்ந்து வலையுலகிற்குள் காலெடி எடுத்து வைத்திருக்கும் எனதருமை 'ஆல்ப்ஸ் தென்றல்' நிஷா அக்கா. 

2. குறும்படங்களில் ஜெயித்து வெள்ளித்திரை இயக்குநராகக் காத்திருக்கும் எனதன்பு 'குடந்தையூர்' ஆர்.வி.சரவணன் அண்ணன் 

3. நாம் அவர் தளம் செல்லாவிட்டாலும் உரிமையுடன் வந்து கருத்துச் சொல்லும்  பாசமிகு 'கனவும் கமலாவும்' கமலா ஹரிகரன் அக்கா. 

4. கவிதையில் ஆழ்ந்த கருத்தை வைத்து நம்மை ஆராய வைக்கும் என் தம்பி 'கலியுகம்' தினேஷ் குமார்

5. சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும்  கவிதாயினி  எனதருமை 'தூரிகைச் சிறதல்' காயத்ரி அக்கா.

6. தனது பயணக் கட்டுரைகளால் நம்மையும் பயணிக்க வைக்கும் நேசமிகு 'சந்தித்ததும் சிந்தித்ததும்' வெங்கட் நாகராஜ் அண்ணா.

7. சமையல் குறிப்புக்களில் அசத்தும் அன்பின் 'சமைத்து அசத்தலாம்' ஆசியா அக்கா 

8. அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரரும்... சிறந்த சிந்தனைவாதியுமான எனது பாசத்துக்குரிய, எங்கள் மண்ணின் 'தேவியர் இல்லம்' ஜோதிஜி அண்ணா. 

9. சிறப்பான எழுத்துக்குச் சொந்தக்காரரான அன்பின் 'அருணா செல்வம்' அருணா அக்கா

10. படிக்கும் போதே வசியம் செய்யும் எழுத்துக்குச் சொந்தக்காரரான, எங்கள் மண்ணின் பாசமிகு 'வாரியர்' தேவா சுப்பையா அண்ணா.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஷப்பா.... நாம விரும்பு அம்புட்டுப் பேரையும் எழுதச் சொல்லணுமின்னு ஆசையிருந்தும் பத்து பேருங்கிற குறீயீட்டுக்குள் இருக்க வேண்டிய சூழலில் இவரா அவரா என தேடித்தேடியே ரெண்டு பதிவு எழுதுற நேரம் போச்சு. மேலே சொன்னவர்கள் தவிர எல்லாரும் எழுதலாம்.... சொன்னவர்களும் கட்டாயம் எழுத வேண்டும் இல்லையென்றால்... அப்படி மிரட்டல் எல்லாம் இல்லை. முடிந்தால்... முடியும் போது எழுதுங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 13 நவம்பர், 2015

மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை

சேனைத்தமிழ் உலாவில் எழுதும் அனைவரையும் தனது பின்னூட்டக் கருத்துக்களால் ஊக்கப்படுத்தி எழுத வைப்பதில் நிஷா அக்காவுக்கு நிகர் அவர்தான்.... சேனையில் மட்டுமின்றி முகநூல், பலரின் வலைப்பூக்கள் என எல்லா இடத்திலும் தனது நீண்ட, நிறைவான கருத்துக்களால் நிறைய விஷயங்களைப் பேசுவார். எல்லாமே வாழ்வியல் பேசும் கருத்துக்கள் என்பதை அவரின் கருத்துக்களை வாசித்தவர்கள் அறிவார்கள். அப்படிப்பட்ட ஒருத்தர் கருத்துக்களை மட்டுமே பகிர்ந்து செல்லாமல் தனது எண்ணங்களை பதிவுகளாக்கி தனக்கான பெட்டகமாகவும் மற்றவர்களும் அறியும் வகையில் செய்ய வேண்டும் என நினைத்தபோதெல்லாம் அவர் பார்க்கும் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அவரிடம் சொல்வதில்லை. ஒருநாள் அவராகவே எனக்கும் வலைப்பூ ஆரம்பிக்கும் ஆசை வந்துவிட்டது என்று சொன்னார். விடுவோமா... கீதமஞ்சரி அக்கா, நான், சம்ஸ், நண்பன் என ஒரு குழு சேர்ந்து அவரை தீபாவளி அன்று வலையுலகிற்குள் இழுத்து விட்டுவிட்டோம். ஆம் இப்போது அக்கா அவர்கள் தனது 'ஆல்ப்ஸ் தென்றல்' என்ற தளத்தில் எழுத ஆரம்பித்து மூன்று பதிவுகளும் போட்டாச்சு. நீங்களும் வாசித்துப் பாருங்கள்... அவரின் எழுத்தில் லயித்துப் போவீர்கள். தளத்திற்குச் செல்ல படத்தின் மீது கிளிக்குங்கள்.

ஆல்ப்ஸ் தென்றல்

***
வேதாளம் தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதனால் தூங்காவனம் நேற்றிரவு இணையத்தில் பார்த்தேன். கமல் என்ற கலைஞனுக்காக ஒரு முறை பார்க்கலாம். மற்றபடி ஆங்கிலப் படத்தின் கதையை அப்படியே எடுத்திருந்தாலும் அந்த நைட் கிளப்பும் கோட் அணிந்த மனிதர்களும் கதையோடு ஒட்டவில்லை.  த்ரிஷா... நண்பர் செங்கோவி விளிப்பது போல் கமலா காமேஷ்... ஆமா முகம் அப்படித்தான் இருக்கு... போலீசுக்கு எல்லாம் செட்டே ஆகாத முகம்... ஒரு வேகம் இருக்க வேண்டாமா... சண்டை போடுறேன்னு கமல்... விடுங்க... தலைவர் மதுஷாலினிக்கு கொடுக்கிற முத்தத்தைவிடவா... இந்தச் சண்டை பெரிசு... இதெல்லாம் இல்லைன்னா அது கமல் படமே இல்லை... 


கமலா காமேஷ்... மன்னிக்கவும் த்ரிஷாவுக்குப் பதிலாக பாபநாசம் படத்தில் போலீசாக அதிரடி காட்டி கலக்கிய ஆஷா சரத்தையே போலீசாக்கியிருக்கலாம் மிரட்டியிருப்பார். இதில் கமலின் மனைவியாக நாலு காட்சிகளில்  மட்டுமே ஒப்புக்கு வருகிறார். நடிப்புக்கு தீனியே இல்லை போனில் பேசுவதாய் மட்டுமே... திரைக்கதையில் ஒரு வேகமில்லை... கமல் என்ற மனிதர் ஓடுகிறார்... படத்தையும் தாங்கிக் கொண்டே ஓடுகிறார். வருடத்திற்கு மூன்று படமெல்லாம் எடுக்க நினைத்தால் கமலும் இப்படித்தான் எடுக்க முடியும்... கமலின் ரசிகனாய் மீண்டும் சண்டியர், தேவர் மகன், ஹேராம், குணா, குருதிப்புனல், விஸ்வரூபம் போன்ற படங்களை அவர் கொடுக்க வேண்டும் என்ற ஆசையே படத்தைப் பார்த்தபோது மேலோங்கியது.
***
ந்த வாரம் அலுவலகத்தில் அவ்வளவாக வேலை இல்லை.... அதற்கெல்லாம் சேர்த்து வரும் வாரம் பிழிந்து எடுத்துவிடுவார்கள் அது வேற விஷயம்... நான் சொல்ல வந்தது தீபாவளி அன்று எழுதிய சிறுகதை பற்றி... அலுவலகத்தில் வேலை முடிந்தும் 5.30 மணி வரை உக்கார வேண்டுமே என்பதால் ஒரு கவிதை எழுதலாம் என உட்கார்ந்தேன். அப்படியே தையற்காரரையும் பார்த்தவனுக்கு தீபாவளிக்கு ஒரு சிறுகதை எழுதலாமே என்று தோன்றியதும் ஆரம்பித்ததுதான் ஜீவநதி, முதலில் ஒரு பாரா எழுதும் போது கணவன் பணம் அனுப்பவில்லை, குழந்தைகளுக்கு துணி எடுக்கணும் என்பதாய் பயணப்பட்ட கதையில் அண்ணனும் எங்கிட்ட காசில்லைன்னு சொல்லிட்டுப் போவதாய் போகும்போது கடன் வாங்கலாம் என்பதாய் போய், ஏன் கடன் வாங்கணும் அண்ணனே கொடுப்பதாய் இருந்தால் என்று மாற்றுப் பாதையில் பயணித்த போது அந்தப் பணம் அண்ணனுக்கு ஏது...? என்ற கேள்வியில் தொக்கியபோது விரல்கள் தட்டச்சு செய்ததே கடைசி பாரா... 

கதை எல்லோருக்கும் பிடித்திருந்தது. நான் கதையின் கருவை யோசித்து வைத்து அதுக்கு தீனி போட்டு எழுதுபவன் அல்ல... இதுதான் கதை என்றெல்லாம் யோசித்துப் பயணிப்பவனும் இல்லை... முதல் பாரா எழுதி முடியும் போது இரண்டாம் பாரா அதுவாக பயணிக்கும்... இப்படியேதான் கடைசிப் பாரா வரை... கதையின் போக்கில் பயணிப்பேன். நான் தேர்ந்த எழுத்தாளன் இல்லை... மொழி அழகியல் எல்லாம் என் கதையில் இல்லை... ஆனாலும் கடைசிப் பாரா மொத்தக் கதையையும் தாங்கிப் பிடிப்பதாய் அமைவது கடவுள் கொடுத்த வரம் என்றுதான் நினைக்கிறேன். கல்லூரிக் காலத்தில் நிறைய எழுதி பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது. சில கதைகள் மட்டுமே நல்ல கதைகள் என்று எனக்குத் தோன்றும்... இப்போது நினைத்தால் எல்லாமே ஏதோ எழுதியவைதான்... ஆனால் இப்போது எழுதும் கதைகள் கொஞ்சம் வாழ்க்கையோடு பயணிப்பதாய்த் தெரிகிறது. இருந்தாலும் என் நண்பர்களில் சிலர் உனது கதைகள் பெரும்பாலும் சோகத்தைத்தான் சொல்கிறது என்பார்கள். அவர்களுக்காகவே சில காதல், சந்தோஷக் கதைகள் எழுதியிருக்கிறேன்.. ஆனால் அவை எல்லாம் வாழ்க்கை பேசவில்லை... இப்படிப்பட்ட கதைகள்தான் என் மண்ணின் மக்களோடு வாழ்வதைப் போல் எனக்குள் ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. எனது கதைகள் அப்படித்தானா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

***
நேற்றுக் காலை அலுவலகம் செல்லும் போது மேகம் இருட்டிக் கொண்டு வந்தது, காற்றும் வீசியது... சரி இன்னைக்கு மழை இருக்கு என்று நினைத்துக் கொண்டே நடந்தேன். வெயில் சுட்டெரித்த பூமியில் இதமான காற்று... அதுவும் மழை மேகம் இருப்பதால் சற்று குளிராய்... நடக்கவே சுகமாய் இருந்தது... அலுவலகத்தில் அமர்ந்து வெளியில் பார்க்கும் போதெல்லாம் எப்படியும் மழை வரும் என்றே தோன்றியது. துபாயில் இருந்து போன் பண்ணிய அண்ணனிடம் இங்கு மழை வருவது போல் இருக்கு.. அங்கு எப்படி என்றதும்... காலையில் லேசாகத் தூறி இருக்கு... ஆனா இப்ப வெயில் இருக்கு, மழை வர்றது மாதிரி தெரியலை... மாலை அலுவலகம் விட்டு வரும்போது எப்பவும் போல் இருந்தது... மழையும் இல்லை ஒன்றும் இல்லை... அறைக்கு வந்த பிறகு  சாயந்தரம் துபாயில மழை அடித்துப் பெய்திருக்கிறது தெரியுமா.. இங்குதான் இல்லை என்று நண்பர் ஒருவர் சொன்னார். அட... அங்க பெய்ந்த மழை இங்கும் பெய்திருக்ககூடாதா..? போன வருடமும் சுற்றி மழை பெய்தது அபுதாபியில் மட்டும் இல்லை... இந்த வருடமும் அப்படித்தான் போல...

தொடர்ந்து பெய்யும் மழையால் தமிழகமே தத்தளிக்கிறது என்று செய்திகள் வருகின்றன... வீடுகளைச் சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்று சொல்கிறார்கள். ஆம்... நகரை விரிவாக்குறேன் என்று சொல்லியே ஏரிகளையும் குளங்களையும் பட்டா போட்டு விற்றுவிட்டார்கள். விற்பவன் செல்வச் செழிப்போடு இருக்கிறான்... வாங்கியவன் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறான்.  இப்பப் புலம்பி என்னாகப் போகுது..? அம்மாவுக்கு சுத்தமாக் கேக்காது... வித்தவனில் அவர் ஆளும் இருக்கிறான் என்றாலும் ஏதோ குரல் கொடுப்போம் என்று ஐயா கத்துவார், தளபதியோ அதிலும் படகு விடலாமா அல்லது நீச்சலடிக்கலாமா என நமக்கு நாமே திட்டம் திட்டுவார். சிவகாசிக்காரரும் மாம்பழத்து ஐயாவும் சின்னக்கவுண்டரும் வளவனாரும் மூப்பனாரின் வாரிசும் தமிழிசை பாடி வரும் வானம்பாடியும் என்ன அழகு எத்தனை அழகு புகழ் இளங்கோவும் கூடையில் பூவும் அறிக்கைப் போர் நடத்துவார்கள். நாமதான் மலேரியாவும் டெங்கும் வராமல் தேங்கி தண்ணீர் கொசுக்களுக்கு வீட்டுக்குள் வரவிடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

***
ரு நிமிடமே என்றாலும் இந்தக் குறும்படம் சொல்லும் செய்தி... உண்மையிலேயே படம் முடியும் போது ரொம்பக் கஷ்டப்படுத்திருச்சு.... இந்தப் படத்தை எடுத்த குழுவினருக்கு வாழ்த்துக்கள்... நீங்களும் பாருங்களேன்.


***
கில்லர்ஜி அண்ணன் அவர்கள் சென்ற முறை கனவில் வந்த காந்தி சொல்லி நம்மளை எல்லாம் கேள்வி கேட்டாரு... இப்ப கனவுல வந்த கடவுளுக்கிட்ட பத்து நனவாக வேண்டிய கனவுகளைச் சொல்லச் சொல்றாரு... நம்மளையும் அதுல மாட்டி விட்டுட்டாரு... ஒரு பக்கம் ஆளாளுக்கு ஜோரா எழுத ஆரம்பிச்சிட்டாங்க... நாம என்னத்தை எழுதுறதுன்னு தெரியலை.... இருந்தாலும் அழைப்புக்கு என்று ஒரு மரியாதை இருக்கு அல்லவா..? அதனால் நாளை எப்படியும் எழுத வேண்டும்... பார்ப்போம்... வேதாளம் படத்துக்கு வேற போகணும்... கனவுப் பதிவு வேற எழுதணும்... நாளைக்கு ரொம்ப வேலை இருக்கு போங்க.
***
தாய் மனசு படத்தில் வரும் இந்த 'தூதுவளையலை அரைச்சி...' பாடலைக் கேளுங்கள்... உங்களுக்கும் பிடிக்கும்... சுகமான கிராமத்துக் கீதம் இது.


மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 12 நவம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி - 8. கொலையாளி யார்?

முன்கதை


தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார்.
ணிகாசலத்தின் உடலைப் பெற்றுக் கொண்டு வருணும் தர்ஷிகாவும் மதுரைக்குக் கிளம்பிய மறுநாள் மாலை...

மருத்துவ அறிக்கையை மீண்டும் ஒருமுறை வாசித்தார் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், அதில் அவரை ஆழ்ந்த உறக்கத்தில் வைத்து கொலை செய்திருப்பதாகவும் இதயத்தில் இரண்டு கத்திக்குத்து விழுந்திருப்பதாகவும் அதில் முதல் குத்து ஆழமாக பாய்ந்திருப்பதாகவும், அவர் எந்த எதிர்ப்பும் காட்டாமலே இறந்து போய் இருக்கக் கூடும். மேலும் அவர் உயிர் போயிருக்குமா என்ற சந்தேகத்தில்தான் கழுத்தில் அறுத்திருக்கக் கூடும் என்று மருத்துவர் தெரிவித்திருந்தார்.

"ஆழ்ந்த உறக்கம்ன்னா... தூக்க மருந்து கொடுத்திருக்கணும்... இல்லேன்னா தண்ணி ஓவரா அடிச்சிருக்கணும்... என்ன எழவுய்யா... எல்லாப் பக்கமும் முட்டுச் சுவரா இருக்கு..." புலம்பினார் சுகுமாரன்.

"சார் ஒருவேளை அவர் சாப்பிட்ட சாப்பாட்டுல தூக்க மருந்தைக் கலந்து கொடுத்திருந்தா..." என்றார் பொன்னம்பலம்.

"ஆழ்ந்த உறக்கம்ன்னுதானே மருத்துவ அறிக்கை சொல்லுது... அப்படி இருந்தா தூக்க மருந்து கொடுத்து அதுக்கப்புறம் குத்தியிருக்காங்கன்னு சொல்லியிருக்க மாட்டாங்களா?"

சுகுமாரன் சொன்னதைக் கேட்டு பொன்னம்பலம் சிரித்தார்.

"எதுக்குய்யா சிரிக்கிறே..?"

"பின்ன என்ன சார்... நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க... விஷம் கொடுத்துக் கொன்னாக்கூட அது விஷந்தான்னு கண்டுபிடிக்க  முடியாத அளவுக்கு இன்னைக்கு உலகம் முன்னேறிடுச்சு... இது ஆப்ட்ரால் தூக்கமருந்து... அதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... ஆனா ஆழ்ந்த தூக்கத்துக்காக அப்படி ஒரு மருந்தை உபயோகப்படுத்தியிருந்தால் இந்தக் கொலையை மெடிசின் பற்றி நல்லா விவரம் தெரிந்த ஒரு ஆள்தான் பண்ணியிருக்கனும்.. ஆனா ரொம்ப பொறுமையா... சுத்தமா வேலை பார்த்திருக்காங்க.... இந்த கொலையில புரபஷனல் கொலைகாரன் இறங்கலை... ஏன்னா அவன் வெட்டிச் சாய்ச்சிட்டு போய்க்கிட்டே இருப்பான்... இங்க நெஞ்சுல குத்தி... அப்புறம் கழுத்துல கொஞ்சம் அறுத்து வச்சி... பொறுமையா கைரேகை எங்கயும் படாம விவரமா வேலை செஞ்சிருக்காங்க..."

"ம்... எனக்கென்னவோ ஒரு ஆள் செஞ்சது மாதிரி தெரியலை... ரெண்டு மூணு பேர் வந்திருக்கணுமின்னு தோணுது... ப்ரான்சிக் ரிப்போர்ட் என்னய்யா சொல்லுது..."

"சுத்தம்ன்னு சொல்லுது... எந்த ஒரு தடயமும் கிடைக்கலை... பிளாங்கா இருக்கு சார்..."

"ஒரு தடயமும் கிடைக்காமல் ஒரு கொலை.... என்னோட சர்வீஸ்ல இப்பத்தான்யா பார்க்கிறேன்... ரெண்டு நாள் ஆச்சின்னு நாளைக்கு மேலிடத்துல இருந்து போன் பண்ணி லெப்ட் ரைட் வாங்குவானுங்க.... என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை... ஒரு வெளிச்சமும் இல்லாமல் சூனியமா இருக்குய்யா..."

"சார்... தப்புப் பண்ணுனவன் எப்படியும் மாட்டுவான் சார்... என்ன கொஞ்சம் ரிஸ்க் எடுக்கணும்.... நாம ஏன் மறுபடியும் வேலைக்காரப் பெண் லதாவை விசாரிக்கக் கூடாது. "

"மறுபடியுமா...?"

"வேற வழி... அவரோட சாப்பாட்டுல விஷம் கலந்திருந்ததுன்னு சொல்லி விசாரிப்போம்."

"ம்... நாளைக்கு நீயே போயி விசாரிச்சிட்டு வாய்யா... நாங்கொஞ்சம் வெளியில புவனா கூட போக வேண்டியிருக்கு..."

"சரி சார்..."

"எதுக்கும் ஏதாவது தடயம் கிடைக்குதான்னு தணிகாசலம் கொலை நடந்த வீட்ல மறுபடியும் நம்ம ஆளுங்க ரெண்டு பேரை விட்டு இஞ்ச் பை இஞ்சா அலசிப் பாத்துட்டு வரச்சொல்லுய்யா..."

"இனி அங்க என்ன சார் கிடைக்கப் போகுது... தேவையில்லாத வேலை சார்..."

"எதுய்யா தேவையில்லாத வேலை... நமக்கே தெரியாம எதாச்சும் மறைஞ்சு கிடக்கலாம்... அப்படி ஒண்ணு கிடைச்சா அதுதான் நம்மளோட துருப்புச் சீட்டு... ஏதாவது கிடைக்கும்ன்னு மனசு சொல்லுது..."

"ம்... உங்க ஆசைக்காக ஆள் அனுப்புறேன் சார்... எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை... இஞ்ச் பை இஞ்சா அங்க நாம காலையிலயே அலசியாச்சு.."

"ஏதாவது இருக்கும்ய்யா... ஆளை அனுப்பி தேடிப்பாக்கச் சொல்லு... அந்த லதாக்கிட்ட விசாரி... ரொம்ப போர்ஸ் பண்ணாம விசாரி... முன்னுக்குபின் முரணா பேசினான்னா இங்க கொண்டாந்துரு... விசாரிக்கிற விதமா விசாரிச்சிப்போம்... சரியா..." என்றபடி அவர் நாற்காலியில் இருந்து எழ, "ஒகே சார்..." என்றபடி பொன்னம்பலமும் எழுந்தார்.

"சரி... வீட்ல இருந்து மிஸ்டுகால் வந்துக்கிட்டே இருக்கு... கோயிலுக்குப் போகணுமின்னா... நம்ம தொழில்ல கோயிலாவது குளமாவது... சொன்னா கேக்க மாட்டா... எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸேசன் வேணுமின்னு தோணுது... கோயிலுக்குப் போற நேரம் இந்தக் கேஸ்ல ஏதாவது குளூ கிடைக்கலாம்ல்ல... இப்பவே ஏழரை மணி ஆச்சு.. இனியும் நான் போகலைன்னா எங்களுக்குள்ள ஏழரை ஆயிடும்...  "

"மனுசன் நாயா பேயா அலையிறோம்.... ஒண்ணும் கிடைக்கலை... கோவில் சிலைதான் வந்து கண்டுபிடிச்சிக் கொடுக்கப் போகுது... அட போங்க சார்..."

"நீ நாத்திகவாதியில்ல... உனக்கிட்ட சொன்னா... இங்க பாரு நம்பினவனுக்கு அது தெய்வம்... நம்பாதவனுக்கு அது கல்லு.... எத்தனையோ கல்லு வெளியில கிடக்கு எல்லாம் சிலையாகுறது இல்லை... எந்தக் கல்லையும் பார்த்து மனம் உருகுறதும் இல்லை... மருகுறதும் இல்லை.... சரிவிடு உங்கிட்ட பேசினா அது பெரிய தர்க்கமாகும்... இப்ப தர்க்கம் பண்ண மூடில்லை... மண்டைக்குள்ள தணிகாசலம் ஆக்கிரமிச்சிருக்காரு.... அவரை விட அதிகமா என் பொண்டாட்டி ஆக்கிரமிச்சிருக்கா... சரி வாறேன்..." என்றபடி சுகுமாரன் கிளம்ப, பொன்னம்பலம் சிரித்துக் கொண்டார்.

சுகுமாரன் போனதும் கான்ஸ்டபிளைக் கூப்பிட்டு டீ வாங்கி வரச்சொல்லிக் குடித்து விட்டு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு அமர்ந்த பொன்னம்பலம், 'தடயம் கிடைக்கிதாம்... தடயம்... இஞ்ச் பை இஞ்சாவுல தேடியிருக்கோம்... தடயம் கிடைச்சா இவரு என்ன பண்ணுவாருன்னு நமக்குத் தெரியாதா என்ன..? ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறானுங்கன்னு பிடிச்சி லட்சம் லட்சமா கைப்பற்றினப்போ என்ன பண்ணுனாரு... எனக்கிட்ட ஐம்பதாயிரத்தைக் கொடுத்துட்டு சுளையா ரெண்டரை லெட்சத்தை சுருட்டிக்கிட்டு கணக்கு காட்டுனவருதானே இவரு... வேலையில புலிதான்... ஆனா இந்த மாதிரி கெடச்சா... சுருட்டுறதுலயும் புலிதானே இவரு... கேட்டா இப்ப அடிச்சிட்டுப் போன மாதிரி லெக்சர் அடிப்பாரு... அவரு சொல்றதும் உண்மைதானே... அப்படியே கொடுத்தா மேலிடத்துல உள்ளவன் தின்பான்... நாங்க சுட்டது போக கொடுத்த இருபத்தி ரெண்டு லெட்சத்துல மேலிடம் கணக்கு காட்டுனது பதினைந்து லெட்சம்தானே... ஒரு கொலைக்கேசுல கெடச்ச மோதிரம் கணக்குலயே வராம அவரு பொண்டாட்டி கைக்கு போனது தெரியாதா... என்ன' என்று மனசுக்குள்ளே பேசியபடி புகையை இழுத்து விட்டார்.

"சார்... அந்த சாமிநாதன் கேசு விஷயமா ஒருத்தர் வந்திருக்கார்..." என்று கான்ஸ்டபிள் வந்து சொல்ல "இன்னைக்கெல்லாம் முடியாதுய்யா... நாளைக்கி வரச்சொல்லு... நான் வெளியில போறேன்..." என்றபடி எழுந்தார் பொன்னம்பலம்.

'என்ன லஞ்சம்ன்னு யாருக்கிட்டயும் வாங்க மாட்டாரு... ஆனா இப்படிக் கெடச்சா எடுத்துக்குவாரு... ஏன்னா நாம எடுக்கலைன்னா மத்தவன் எடுத்துப்பான்... பொருள் சொந்தக்காரனுக்கா போகப்போகுதுன்னு சொல்வாரு... இந்த விஷயத்துல அப்படியிப்படிருந்தாலும் ஆளு கேசை முடிக்கிறதுல கில்லாடி... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா மாறி மாறி முன்னேறிப் போவார். அதில் வெற்றியும் பெறுவார். ம்... மனுசன் நாளைக்கு என்ன முடிவுல வருவாரோ...' என்று முணங்கிக் கொண்டே பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு அதை எடுத்தார். 

அது... 

ஒரு வைர மோதிரம்.

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

புதன், 11 நவம்பர், 2015

மனசு பேசுகிறது : தீபாவளி தினம்

தீபாவளிக்கு இங்கு விடுமுறை இல்லை என்பதால் முதல் நாள் கிளம்பும் போதே எனக்கு மேல் இருக்கும் எகிப்துக்காரனிடம் 'நாளை தீபாவளி, லீவு போட்டாலும் போடுவேன்' என்று சொல்லி வைத்தேன். எனக்கும் அவனுக்கும் கடந்த இரண்டு வாரமாகவே மேக மூட்டமாகத்தான் இருக்கு... வேலை சம்பந்தமான கேள்விகள் மட்டுமே கேட்பேன், மற்ற விஷயங்கள் பேசுவதில்லை என்றாலும் மெதுவாக பிட்டைப் போட்டுப் பார்த்தேன். அவனும் அந்தச் சண்டைக்குப் பின் என்னுடன் சகஜமாக நிறைய வேலைகள் பார்த்தான். ஆனால் நாம யாரு... இறங்கிப் போகவே இல்லை... இப்ப முடியாதுன்னு சொன்னா இறங்கவே மாட்டான் என்று நினைத்தானோ என்னவோ 'ஓகே' என்று மட்டும் சொன்னான். 

நேற்றுக்காலை வாட்ஸப்பில் 'இன்னைக்கு எனக்கு லீவு வேணும்.. எதாவது அர்ஜெண்ட் வேலை இருந்தால் மதியம் இரண்டு மணிக்கு மேல கூப்பிடு' என்று அனுப்பினேன். உடனே 'தீபாவளியை சந்தோஷமாகக் கொண்டாடு... ' என்று அனுப்பியிருந்தான். அப்புறம் என்ன... அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து இட்லி, வடை, சட்னி செய்து முதல் நாள் இரவே வாங்கி வைத்த இனிப்புக்களை வைத்து சாமி கும்பிட்டு... புதுச் சட்டை அணிந்து... சாப்பிட்டு எல்லோரும் போய்விட நான் மட்டும் தனி ஒருவனாய் அறையில் இருந்தேன். 

ஊரில் எல்லாருக்கும் போன் செய்து தீபாவளி வாழ்த்து சொல்லிவிட்டு, மனைவியும் குழந்தைகளும் தீபாவளி கொண்டாட்டதில் அம்மா (மாமியார்) வீட்டில் பிஸியாகிவிட, ஸ்கைப்பில் பேச வழியின்றி... ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து வேலைக்கு கிளம்பிவிடும் எண்ணம் வந்துவிட்டது. அப்புறம் அடிச்சிக் கேட்டாலும் கொடுக்க மாட்டானுங்க ஏதோ அவனுங்களுக்கே மனசு வந்து விடுமுறை எடுத்துக்கடான்னு சொல்லியிருக்கானுங்க... வீணாவுல எதுக்கு ஆபீசுல போய் நிப்பானேன் என்று அந்த எண்ணத்தை கழுவி விட்டு இணையத்தில் மேய்ந்தேன்... அப்ப அப்ப தேர்தல் நியூஸ் போல வேதாளம் என்னாச்சு... என்று செய்திகளை தேடிப்படித்தேன். கமல் ரொம்பப் பிடிக்கும் என்றாலும் ஏனோ தல படம் ஜெயிக்கணுமின்னு தோணுச்சு... சரி விடுங்க... படம் எப்படியிருந்தாலும் நாம தியேட்டரில்தான் போய் பார்க்கப் போறோம்... அப்புறம் என்னத்துக்கு அதை பேசிக்கிட்டு.. 

ஆமா... என்ன சொன்னேன்... ம்... இணையத்தில் மேய்ந்தேன்னு சொன்னேனுல்ல... எப்பவும் படம் பார்க்கும் தளத்திற்குள் செல்ல, கத்துக்குட்டி படத்தோட நல்ல பிரிண்ட் வந்திருந்தது. சரியின்னு காலைக்காட்சியாக கத்துக்குட்டி பார்க்க ஆரம்பித்தேன், படமும் ரொம்ப நல்லாப் போய்க்கிட்டு இருந்துச்சு... இடைவேளை வந்தப்போ பக்கத்தில் இருக்கும் லுலு எக்ஸ்பிரஸ் மார்க்கெட் போயி மதியம் சமையலுக்கு சாமான் வாங்கி வந்தேன். மீண்டும் கத்துக்குட்டி... படம் முடிந்ததும் சமையல் வேலையை ஆரம்பித்தேன். 

பெப்பர் சிக்கன், சிக்கன் ரசம், கொஞ்சமாய் சிக்கன் கிரேவி, உருளைக்கிழங்கு மசாலா எல்லாம் செய்து தனி ஒருவனாய் சாப்பிட்டேன். எனக்கு பெரும்பாலும் விடுமுறை தினங்களில் காய்கறிகளில் விதவிதமாய் வைத்துச் சாப்பிடப் பிடிக்கும். இருந்தாலும் தீபாவளி என்பதால் அறையில் என்னடா இன்னைக்குப் போயி இதை செய்திருக்கேன்னு ராத்திரி சாப்பாட்டை ஆவலோடு எதிர் நோக்கி வருபவர்கள் கேப்பாங்களேன்னுதான் இந்த சிக்கன் வரிசை... இப்பல்லாம் சிக்கன் அதிகம்  சாப்பிடுவதில்லை.

(கத்துக்குட்டி)
யூரிக் ஆசிட் பிரச்சினை வந்ததும் முதல் சாப்பாட்டில் நிறையக் கட்டுப்பாடு... மீன் அதிகம் எடுத்துக் கொண்டு சிக்கனை ரொம்பக் குறைத்தாச்சு. அப்படியிருந்தும் இன்னும் உணவுக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என டாக்டர் சொன்னார். இனி என்னத்தைக் குறைக்கிறதுன்னு தெரியலை.... இப்பவே மட்டன், காளான், காலிபிளவர், பயறு வகைகள், முட்டைக்கோஸ், பீன்ஸ் என எல்லாம் விட்டாச்சு... இனி பேசாம பேலியோ டயட் எடுத்துற வேண்டியதுதான். 

சரி... சரி.... இருங்க... இருங்க.... சாப்பிட்டுட்டு என்னய்யா பண்ணினே... ஏதோ கதை சொல்வேன்னு பார்த்தா உன்னோட புராணத்தைப் பாடுறே... அப்படின்னு நினைக்காதீங்க... மதியம் சாப்பிட்டதும் ஒரு குட்டித் தூக்கம் போடலாம்ன்னு நப்பாசை மெல்ல எட்டிப் பார்த்துச்சு. அடி ஆத்தி இன்னைக்குத் தூங்குனா நாளைக்கு ஆபீசுல கொட்டாவி கொன்னு எடுத்துருமேன்னு அதுக்கு தடா போட்டுட்டேன்... பாருங்க கொட்டாவியின்னு எழுதினதும் கொட்டாவி வரிசையா வருது. அட நான் விட்டதும் எகிப்துக்காரனும் போட்டிக்கு விடுறான் போங்க. ஆமாங்க வேலை இன்னைக்கு ரொம்ப இல்லை... அதான் இங்கயே டைப் பண்ணியாச்சு... ஹி...ஹி... சத்தம் போடாதீங்க... அப்புறம் எகிப்துக்காரன் என்னடான்னு எட்டிப் பாக்கப் போறான்.

இன்னைக்கு காலையில இருந்து தூக்கம் ஒரு பக்கம் அமுக்கிக்கிட்டுத்தான் இருக்கு. பிடிச்ச மொஸ் தெற்கே இருந்து வடக்கே தானாப் போகுது. அப்ப அப்ப சுதாரிச்சு இழுத்துக்கிறேன்... எகிப்துக்காரனும் 'ஐ நீடு ஸ்லீப்பு'ன்னு சேரில் சாய்ந்து கொள்கிறான். பாகிஸ்தானியோ 'ஐ ஆம் ஓல்சோ வாண்ட் ஸ்சிலீப்'புன்னு (அவனோட இங்கிலீஸ் வேற மாதிரி) சிரிக்கிறான். தூக்கம் எல்லாருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும்ன்னு நமக்குத் தெரியாதா என்ன. இருந்தாலும் அலுவலகமா இல்லையா... வேலை முக்கியம் காம்ரேட்ஸ் அப்படின்னு சின்சியரா வேலை பார்க்க ஆரம்பித்தோம். மறுபடியும் படிக்க சின்சியரா வேலை பார்க்க ஆரம்பித்தோம்... ஆமா...

சரி நேற்றைய தினத்துக்குப் போவோமா... தூங்கக்கூடாதுன்னு மேட்னி ஷோவுக்கு தயாரானேன்... என்ன படம் பாக்கலாம்ன்னு யோசிச்சப்போ ருத்ரமாதேவியா அனுஷ்கா வந்து நின்னுச்சு... சரியின்னு ருத்ரதேவனான அனுஷ்காவைப் பார்க்க ஆரம்பித்தேன்... படமும் அலுப்புத் தட்டாமல் போக தொடர்ந்து பார்த்து முடித்தபோது மணி ஆறாகியிருந்தது. வெளியில் இருட்டியிருந்தது... விளக்குகளை எரிய விட்டுவிட்டு ஒரு வரக்காப்பியை போட்டுக் கொண்டு அமர்ந்து காலையில் விடுபட்ட மிச்சசொச்ச பேருக்கு போன் பண்ணினேன். 

(ருத்ரமாதேவி)
அப்புறம் முதல் நாள் எழுதி வைத்த கதையை மீண்டும் வாசித்து சரி பண்ணினேன். முகநூலுக்குள் முகம் புதைக்கலாம் என்று மெல்ல உள்ளே போனேன். அங்கும் ஒரு தீபாவளி ஸ்டேட்டஸ் போட்டுட்டு மறுபடியும் இரவுக் காட்சியாய் தனி ஒருவனை ஆரம்பித்தேன். அதற்குள் அறை நண்பர்கள் வர ஆரம்பிக்க, படத்தை நிறுத்திவிட்டு  தீபாவளி வெடி போடுவதில் நம்ம குடும்பம் பிஸி என்பதால் ஸ்கைபில் காணவில்லை எனவே முகநூலில் யாராவது அரட்டை அடிக்க மாட்டுவாங்களான்னு பார்த்தேன்... 

நம்ம ரெண்டு அக்காவும் இருந்தாங்க... அப்புறம் என்ன கொஞ்ச நேரம் அரட்டையைத் தொடருவோமென ஆரம்பிக்க, அந்த நேரத்தில் அங்கு தனியாளாய் வந்த ஆர்.வி.சரவணன் அண்ணனையும் அந்த கூட்டத்துல இழுத்து விட்டுட்டு எங்க வீட்டு மந்திரி  ஸ்கைப்பில் வரவும் முகநூலில் இருந்து எஸ்கேப் ஆயிட்டேன். அப்புறம் ஊருக்குப் பேச்சு... உறவுகளோடு அரட்டை... விஷாலோடு வாக்குவாதம்... என நேரம் கடந்து போக, எழுந்து போய் குளித்துவிட்டு, என்னடா பண்ணினே குளிக்கப் போயிருக்கேன்னு நீங்க நினைக்கலாம்... ஆனா ரெண்டு படம் பார்த்த களைப்புப் போகணுமில்லையா... அதனால ஒரு அரைமணி நேரம் குளித்தேன். பின்னர் பக்கத்து அறை முஸ்லீம் நண்பர்களுக்காக வைத்திருந்த வடை மாவை எடுத்து வடை சுட்டு, எங்களுக்கு தோசை சுட்டு... சாப்பிட்டு முடித்தபோது இரவு பத்தரை மணியாகி இருந்தது. 

அதன் பின்னர் சிறுகதையை மனசில் பதிஞ்சி, தனி ஒருவனை கொஞ்சம் நேரம் தொடர, தூக்கம் கண்களில் தூக்கி அடிக்க ஆரம்பித்தது. இன்னும் கொஞ்ச நேரம் படம் பாக்கலாம்ன்னு நினைச்சா... என்ன இப்ப சிஸ்டத்தை ஆப் பண்ணுறியா இல்லை தூக்கி அடிக்கவான்னு தூக்கம் தலைவர் விஜயகாந்த் பாணியில் மிரட்ட சிஸ்டத்துக்கு ஓய்வு கொடுத்துட்டு தூங்கிப் போனேன்... இப்படியாக எனது தீபாவளி விடுமுறை சிறப்பாகக் கடந்தது. 

காலையில எழுந்ததும் மொபைலை எடுத்தால் வாட்ஸப்பில் ஒரு மெஜேஸ்... யாருக்கிட்ட இருந்துங்கிறீங்க... நம்ம எகிப்தானுக்கிட்ட இருந்துதான்... ஒரு வேலையை காலையில் ஆரம்பிக்கச் சொல்லியிருந்தான். ஏன்னா ராஜா 8 மணி வேலைக்கு 10 மணிக்குத்தான் வருவார்... அதனால ராத்திரியே நமக்கு வேலை என்னன்னு முடிவு பண்ணி அனுப்பியாச்சு... அதுவும் எந்த நேரத்துல அனுப்பியிருக்கான் தெரியுமா... ராத்திரி 1.30 மணிக்கு... அவனோட அர்பணிப்புல ஆந்தை விழுக... அந்த நேரத்துல ஆந்தை கூட தூங்கிரும்ன்னு நினைக்கிறேன். 

சரி நேத்து நமக்கு தீபாவளி இல்லை இன்னைக்குத்தான் தீபாவளியின்னு கடுப்போடு அலுவலகம் வந்தேன். அது மிகப்பெரிய பணி... போன வாரம்தான் முடித்தோம். எல்லாம் மறுபடியுமா என்று நான் நினைப்போடு கணிப்பொறியை ஆன் பண்ணினால் அதற்கான பைல் எல்லாம் இல்லை. அவனுக்குப் போன் பண்ணினால் எடுக்கலை. 9.30 மணிக்கு வந்தான், கேட்டதும் எல்லாம் வேண்டாம் இது மட்டுமே என்று கொஞ்சமே கொஞ்சம் கொடுத்து பால் வார்த்தான். அப்பாடா என ஆரம்பித்து முடித்தேன். இல்லேன்னா ஒரு நாள் விடுமுறைக்கு மூன்று நாள் வேலையை இன்றே முடிக்கச் சொல்லியிருப்பான்.

(வேதாளம் - இங்கு நாளைதான் ரிலீஸ்... வார விடுமுறையில் படம்
பார்த்துவிட்டு விரைவில் படம் குறித்த பகிர்வு)
எப்படியோ தீபாவளி தினம் விடுமுறையில் கழிந்தது கொண்டாட்டங்கள் இல்லாத மனதின் வெறுமையை போக்க சினிமாக்களோடும் கொஞ்சம் சிந்தனையோடும்... அடிமனதில் ஊரில் கொண்டாடிய நினைவுகளையும் கிளறிவிட்டபடியும்...
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 10 நவம்பர், 2015

தீபாவளி சிறப்புச் சிறுகதை : ஜீவநதி



தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு... பிள்ளைகளுக்கு புதுத்துணி எடுக்கணும், மளிகைச் சாமான் வாங்கணும்... கையில் சுத்தமாக் காசில்லாமல் என்ன பண்றதுன்னு குழப்பத்தோடு அமர்ந்திருந்தாள் காவேரி.

பணம் போட்டு விடுறேன்னு சொன்ன அவளோட புருஷன் மலையப்பனும் இதுவரைக்கும் பணம் அனுப்பலை. நேத்துக்கூட போன்ல அவன் கூட சண்டை போட்டாள். என்ன பண்ணச் சொல்றே... பணந்தாறேன்னு சொன்ன மொதலாளி ஊருக்குப் போகும்போது வாங்கிக்கன்னு சொல்லிட்டாரு... ரெண்டு மூணு நாளைக்கு முன்னால வந்திருவேன்.... வந்ததும் எல்லாம் வாங்கலாம் என்று சொல்லிவிட்டான்.

அவனை நம்பியும் இருக்க முடியாது... தீபாவளி சமயம் கடையில் வியாபாரம் அதிகமாக இருக்கும்... இருடா நாளைக்குப் போகலாம்ன்னு முதலாளி சொன்னா தட்டமாட்டான். அவனைக் கட்டிக்கிட்டு வந்த இந்த பத்து வருசத்துல ஒரு தீபாவளி கூட அவளுக்கு சந்தோஷமான தீபாவளி கிடையாது. ஆரம்ப காலங்கள்ல தண்ணியைக் குடிச்சிட்டு ஊதாரியாத் திரிஞ்சான். இப்பத்தான் திருந்தி திருப்பூர் பக்கம் சுவீட் கடையில வேலை பாக்குறான். அதனால பெரும்பாலும் தீபாவளிக்கு முதநாள் ராத்திரித்தான் வருவான். இப்ப பிள்ளைகளுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சாச்சு. எல்லாரும் புதுத்துணி கட்டும்போது அப்பா வரட்டும்ன்னு காத்திருக்குங்களா என்ன... யார்க்கிட்டயாச்சும் வாங்கி துணிமணிகளையும் மளிகைச்சாமான்களையும் வாங்கிட்டா அவன் வந்ததும் கொடுத்துடலாம்ன்னு நினைச்சா. யாருக்கிட்ட கேக்குறது... எல்லாரும் மழையை நம்பி வயல்ல காசைப் போட்டுட்டு மழையுமில்லாம இருந்த விதையும் போச்சேன்னு வருத்தத்துல இருக்காங்க... இப்பப் போயி ஆயிரம் ரெண்டாயிரம் கேட்டா கிடைக்குமான்னு யோசிச்சா.

நல்லநாள் பெரியநாள்ன்னா அவளோட அண்ணன் மகாலிங்கந்தான் அவ செலவுக்குன்னு காசு கொண்டாந்து கொடுத்துட்டுப் போவான்.  அவனுக்கு கிளியை வளர்த்து பூனைக்கிட்ட கொடுத்துட்டோமேன்னு ஒரு வருத்தம். அவனோட பொண்டாட்டி கூட அவளுக்குச் சேலை எடுத்தா இவளுக்கு ஒண்ணுன்னு எடுத்துக் கொடுத்து விடுவா... கட்டுனவன் பாக்குறானோ இல்லையோ பொறந்தவன் இவளை பெத்த பிள்ளையாட்டம்தான் பாப்பான். இந்தத் தடவை அவனுக்கிட்டயும் காசில்லை ரொம்ப மொடையா இருக்குத்தான்னு சொன்னான். பணம் வந்துட்டா கொண்டாந்து தாறேன்னு சொல்லிட்டுப் போயிருக்கான். கையில காதுல கெடக்கதை வச்சிட்டு வாங்கலாம்ன்னா இருக்கதே அது மட்டுந்தான்... அதையும் வச்சிட்டா... நல்லது கெட்டதுக்குப் போற இட்த்துல நாலு பேரு நாலு விதமாப் பேசுவாளுங்க. பேசாம அழகர்சாமி மாமாக்கிட்ட கேக்கலாம்... அவருக்கிட்ட வாங்கினாத்தான் முன்னப் பின்ன கொடுக்கலாம். காசை வச்சிட்டு மறுவேலை பாருன்னு கறாராப் பேசமாட்டாரு.

"அம்மா... அம்மோவ்..." மூத்தவன் சுந்தரத்தின் அழைப்புக்கு நினைவுகளை புறந்தள்ளி "என்னடா" என்றாள்.

"ஹரீஸ் வீட்ல எல்லாருக்கும் புதுத்துணி வாங்கிட்டாங்களாம்... நமக்கு எப்பம்மா வாங்குறது..."

"அப்பா காசு கொடுத்து விடணுமில்லய்யா..."

"ஆமா... அப்பா எப்பக் கொடுத்துவிட்டு எப்ப வாங்குறது... போங்கம்மா..."

"அம்மா வாங்கித் தாறேன்ய்யா... நீ ஒண்ணு செய்யி நம்ம அழகர்சாமி ஐயாக்கிட்டப் போயி அம்மா கேட்டேன்னு ரெண்டாயிரம் ரூபா வாங்கிக்கிட்டு வா..."

"போங்கம்மா...." அவன் மறுத்தான்.

"போ ராசா... அம்மாதானே வாங்கியாரச் சொல்றேன்.."

"வேண்டாம்மா... அப்பா வந்துரட்டும்..."

"அப்பா... வந்தோடனே கொடுத்துடலாம்... அதைச் சொல்லியே வாங்கிட்டு வா..."

"நீங்களே போயிக் கேளுங்க... நான் போகலை.."

"சொன்னதை செய்யிதுகளா... எல்லாத்துக்கும் நாந்தான் ஓடணும்...." கத்தினாள்.

"எதுக்குத்தா மாப்பிள்ளையை திட்டுறே...?" என்றபடி வந்தான்  மகாலிங்கம். "மாமா" என்று அவன் கால்களைக் கட்டிக்கொண்டான் சுந்தரம். சின்னவனும் ஓடியாந்தான். அவனைத் தூக்கிக் கொண்டு அருகில் கிடந்த சேரில் அமர்ந்தான்.

"வாண்ணே... எதுக்குத் திட்டப்போறேன்... உம்மச்சினைப் பத்தித்தான் தெரியுமே... அவரு வந்து எப்ப தீபாவளிக்கு டிரஸ் எடுக்கிறது.... இந்த செல்வி மகன் வந்து எங்க வீட்ல எல்லாருக்கும் டிரஸ் எடுத்தாச்சின்னு சொல்லியிருப்பான் போல புடுங்க ஆரம்பிச்சிட்டான்... அதான் அழகர்சாமி மாமாக்கிட்டயாச்சும் வாங்கி எடுத்துடலாம்ன்னு நினைச்சேன். அவருக்கிட்ட கேட்டு வாங்கிட்டு வாடான்னா போகமாட்டேங்கிறான்... ஆமா நீ வந்ததே தெரியலை... சத்தமில்லாம வந்து நிக்கிறே...?."

கையில் இருந்த பைகளை கீழே வைத்து விட்டு சிரித்துக் கொண்டே "அவரு இருந்தா இல்லைன்னு சொல்லாமக் கொடுப்பாரு... அவருக்கும் இப்பக் கொஞ்சம் கைமொடைதான்... மகனோட பிரச்சினையில நிறைய இழந்துட்டாருன்னு கேள்விப்பட்டேன்... பிள்ளை கேக்கப் போயி இல்லைன்னு சொல்லிட்டாருன்னா வருத்தப்படுவானா இல்லையா...?" என்றான்.

"இல்லண்ணே... அவரு வந்ததும் கொடுத்துடுறோன்னு கேட்டா கொடுப்பாக அதான்... நாந்தேன் போகணுமின்னு இல்லை"

"ம்... என்னமோ போ உன்னைய செல்லமா வளர்த்து நல்ல குடும்பமுன்னு இங்க கட்டுனா... நல்லநாள் கெட்டநாள்ன்னு இல்லாம எல்லா நாளும் தரித்திரம் பிடிச்சி ஆட்டுது... தம்பி தங்கராசு கூப்பிட்டப்போ உம்புருஷன் சிங்கப்பூர் போயிருந்தா இன்னைக்கு உங்குடும்பமும் நல்ல நிலையில இருந்திருக்கும். அன்னைக்கு போகமாட்டேனுட்டான்... குடிதானே அவனைக் கெடுத்துச்சு... என்னவோ இப்பத்தான் புத்தி வந்து பிழைக்கிறான்... தம்பிக்கிட்ட சொல்லி கூட்டிக்கச் சொல்லலாம்ன்னா அவன் முன்னமாதிரி இல்லை. மாமனார் சொல்றதுதான் வேதவாக்கா இருக்கு... இப்பல்லாம் வந்தாலும் ஏதோ கடமைக்குத்தான் வந்து பாத்துட்டுப் போறான்... பாப்போம் எப்பத்தான் உனக்கு நல்ல நேரம் வருதுன்னு..."

"என்னத்த சொல்லி என்னண்ணே பண்ண... இப்படி கஷ்டப்படணுமின்னா கட்டிக்கொடுத்தீக... அன்னைக்கி நெலமையில இருபத்தஞ்சு பவுனு நகை போட்டுத்தான் கட்டிக்கொடுத்தீக... எல்லாத்தையும் வித்துத் தின்னுட்டாரு... இப்பத்தான் கொஞ்சம் திருந்தியிருக்காரு... மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறாம இருந்தாச் சரிதான்... எந்தலையெழுத்து இது... நீங்க என்ன பண்ணுவீங்க.. எனக்கு காசுமொடை தெரியாம வளர்த்தாரு அப்பா... அதான் இன்னைக்கி அஞ்சுக்கும் பத்துக்கும் உறவுக்கிட்ட தலையைச் சொறிஞ்சிக்கிட்டு நிக்கிறேன்..."

"எல்லாம் சரியாகும் விடு..."

"இருண்ணே... காபி போட்டுக்கிட்டு வாறேன்... இனி பேசி என்னாகப்போகுது...?"

"இந்தா உனக்கும் மாப்பிள்ளைகளுக்கும் டிரஸ் இருக்கு..." காலுக்கடியில் இருந்த பையை எடுத்துக் கொடுத்தான்.

"காசு இல்லைன்னு சொன்னே...?"

"அதுக்காக... எப்பவும் செய்யிறதை விட்டுற முடியுமா...? எப்பவும் காசு கொடுத்து எடுத்துக்கச் சொல்லுவேன்... நேத்து அண்ணி துணி எடுக்கப் போனா அவகிட்ட உங்களுக்கும் எடுத்தாரச் சொன்னேன்... சின்னப்பயலுக ஏங்கிப் போகமாட்டானுக... வெள்ளச்சாமிக்கிட்ட கொஞ்சம் காசு வாங்கினேன்.... அதுலதான் எல்லாருக்கும் டிரஸ், தீபாவளிக்கு வீட்டுச்சாமான் எல்லாம் வாங்கியிருக்கு...."

"எதுக்குண்ணே கடன் வாங்கி எங்களுக்கும் வாங்கணுமாக்கும்..."

"கடமையின்னு ஒண்ணு இருக்குல்லத்தா...."

"நல்லாத்தேன்... டிரஸூன்னதும் உம்மாப்பிள்ளைக முகத்தைப் பாரு..."

"சின்னப்பயலுகதானே...." என்றபடி அவள் கொடுத்த காபியைக் குடித்தான்.

"இந்தாத்தா... இதுல ஆயிரம் ரூபா இருக்கு, மளிகைச் சாமான் பாத்து வாங்கிக்க..." என்று பர்சில் இருந்து பணம் எடுத்துக் கொடுத்தான்.

"எதுக்குண்ணே இதெல்லாம்... வேண்டாம் போ... அவருதான் வந்துருவாருல்ல...  வந்தவுடனே வாங்கிக்கிறேன்... நீ வச்சிக்க..."

"அட சும்மா பிடி கழுத... அள்ளியா கொடுக்கிறேன்... இருக்கதுல கிள்ளித்தானே கொடுக்கிறேன்... அப்புறம் நல்லநாள் செலவுக்கு யாருக்கிட்டயும் தலையைச் சொறிஞ்சிக்கிட்டு நின்னா நல்லாவா இருக்கும்...  இந்தாப் பிடி..."

"கடன் மேல கடன் வாங்கி வைக்காதே... பின்னால உனக்குத்தான் சிரமம்..."

"தெரியுது... என்ன செய்ய... முன்னமாதிரி விவசாயம் இல்லை... செம்மறி ஆடுகளும் பாதிக்கு மேல சீக்குல போயிருச்சுக... இருக்க ஆடுகளை வித்துட்டு கடனை அடைச்சிட்டு எதாவது வேலைக்குப் போக வேண்டியதுதான்... இனிமே வேலைக்குப் போயி சம்பாதிக்கிறதுன்னா ரொம்பக் கஷ்டந்தான் என்ன செய்ய ரெண்டு பொட்டப்புள்ளைக வெளஞ்சி நிக்கிதுகளே.... சரி வர்றேந்த்தா..." என்றபடி கிளம்பினான்.

தன்னோட வாழ்க்கையை நினைச்சி அழுவதா... கஷ்டப்பட்டாலும் தங்கச்சிக்கு ஏதாவது செய்யணுமின்னு கொண்டுக்கிட்டு ஓடியார அண்ணனை நினைச்சி சந்தோஷப்படுவதான்னு தெரியாம அவன் பின்னாலேயே வாசலுக்கு வந்தவளுக்கு எப்பவும் ஓட்டிவரும் டிவிஎஸ் பிப்டி இல்லாமல் மகாலிங்கம் வேகமாக நடந்து போவதைப் பார்த்தபோது கையிலிருந்த பணமும் சுவரோரம் சாத்தி வைத்திருந்த துணிப்பையும் விவரத்தை வெளிச்சமிட, கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.

-'பரிவை' சே.குமார்..