மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 11 அக்டோபர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 3)

முந்தைய பகுதிகள் : பகுதி-1     பகுதி-2


இரண்டாவது பகுதியின் கடைசியில்...

நீண்ட நேரம் ரிங் போகவும் "என்னடி... அம்மா எடுக்க மாட்டேங்கிது..." என்று மனைவியிடம் கேட்க, "மெதுவா எந்திரிச்சி வந்துதானே எடுக்கணும்.. வேணுமின்னா உங்கம்மாளுக்கு ஒரு செல் வாங்கிக் கொடுங்க" என்று சிரித்தபடி அவனின் அருகில் அமர்ந்த சித்ராவை, 'உனக்கு நய்யாண்டி' என தலையில் கொட்டினான். எதிர்முனையில் போன் எடுக்கப்பட்டதும் 'எடுத்துருச்சு' என்பதுபோல் தலையாட்டினான்.

"அலோ... ஆருப்பா...? கொஞ்சஞ்சத்தமா பேசுங்க... மழ பெஞ்சிருக்கதால கொரக்கொரன்னு கேக்குது..." என்று கத்தினாள் காளியம்மாள்.

-------------------------------

இனி...

சத்தமாப் பேசுங்க என்று காளியம்மாள் கத்தியதைத் தொடர்ந்து மணியும் "அம்மா நாந்தாம்மா மணி பேசுறேன்..." என்று கத்தினான்.

"ஆரு... மணியாப்பா... நல்லாயிருக்கியாப்பா... மருமவ மகாக்குட்டியெல்லாம் நல்லாயிருக்காகளா?"

"ம்... எல்லோரும் நல்லாயிருக்கோம்.. நீயும் அப்பாவும் நல்லாயிருக்கீகளா?"

"எங்களுக்கென்ன நல்லாத்தே இருக்கம்..."

"அம்மா... அங்க மழை விட்டிருச்சா?"

"ஆமா அதுதான் விடுது.. மத்தியானம் மழ விட்டு வெட்டரிச்சிச்சி... இந்தா இப்ப மறுக்கா தூற ஆரம்பிச்சிருக்கு... இன்னம் ரெண்டு நாளக்கி மழ இருக்கும்ன்னு பேசிக்கிறாங்க..."

"ம்... இங்கயும் லேசா தூறிக்கிட்டுத்தான் இருக்கு... ஆமா அப்பா எங்க?"

"அதுவா... நம்ம சறுக்கையில தண்ணி வெளியாகாம இருக்க எளந்தாரிப்பயக மண்ணு மூட்டை போட்டு அடச்சி வச்சிருந்தானுங்க... ... இப்போ மழ ஊத்த்துன ஊத்துல கம்மா நெறஞ்சி மேக்குப்பக்கமா உடைக்கிற மாதிரி இருக்காம்... அதான் சறுகையில கொஞ்ச மூட்டைய எடுத்து தண்ணிய கொளக்கால்ல விட்டுடலாம்ன்னு எல்லாரும் போயிருக்காக..."

"மழையில... இந்த இருட்டுல இவரு எதுக்குப் போறாரு...?"

"ஊரே போவும் போது போகலயின்னா நல்லாயிருக்குமா? இவுக என்ன வெட்டக் கொத்தப் போறாவளா? எளந்தாரிப்பயக வெட்டிப் போடுவானுக... இவுக பேச்சாளுத் தொனைக்கித்தானே போறாக... முத்துச்சாமி அம்மானே போவும் போது இவுக போவாம இருக்க முடியுமா?"

"சரி.. சரி.. பயிரெல்லாம் எப்புடியிருக்கு? வேந்தங்கம்மாத் தண்ணி வயலுக்குள்ள ஏறிடுச்சா...?"

"பொதி கட்டுற சமயம்... வயலெல்லாம் தண்ணி மகுந்து நிக்கிது... இன்னக்கி ராத்திரி முச்சூடும் மழ பேஞ்சா வேந்தங்கம்மாத் தண்ணி வட்டச்செய்யிக்கு வந்திரும்ன்னு உங்கப்பா சொன்னாரு..."

"சரிம்மா... அப்புறம்... அப்பா வந்தா காலையில நா வேலைக்குப் போறதுக்கு முன்னால கூப்பிடச் சொல்லு,,, சரியா..."

"செரிப்பா... அப்பறம்...." மெதுவாக இழுத்தாள்.

"என்ன சொல்லும்மா...?"

"மழ விட்டது எல்லாரும் பொத்துக்குடிப்பான் வராம மருந்தடிப்பாக... அடியொரம் போடுவாக... நாமளும் மருந்தடிக்கணும்... கள எடுத்தது... அது இதுன்னு கையில இருந்த காசெல்லாம் முடிஞ்சி போச்சு... அன்னைக்கு பரமசிவண்ணன் மவங் கலியாணத்துக்கு மொய்யி வக்க காசில்லாமா நம்ம கண்ணதாசனுக்கிட்டதான் வாங்கிக்கிட்டுப் பொயிட்டு வந்தாக... கொஞ்சக் காசு அனுப்பி வையிப்பா... "

"காசா... ம்... இது மாசக் கடைசிம்மா... மகா வேற காலேசுல படிக்கிறா... அவளுக்கு டெய்லி எதாவது வாங்க வேண்டியிருக்கு... இப்ப இங்க உள்ள செலவுக்கே இழுத்துக்க பரிச்சுக்கன்னு இருக்கு... தம்பிக்கிட்ட கேட்டுப் பாரும்மா... அவனுக்கிட்ட இருக்கும்... அவனும் இல்லைன்னு சொன்னா போன் பண்ணு எங்கிட்டாச்சும் வாங்கி அனுப்புறேன்..."

"சரிப்பா... வயசுக்கு வந்த பொட்டப்புள்ள இருக்கு... அதோட படிப்புச் செலவும் ஒனக்கு இருக்கும்... நீ பாத்துக்கப்பா... நாங்க தம்பிக்கிட்ட வாங்கிக்கிறோம்..." என்று போனை வைத்த காளியம்மாள் 'கருதறுத்ததும் எனக்கு முதல்ல ரெண்டு மூடை அரிசி அனுப்புங்கன்னு அவனுக்கு அப்புறம் அனுப்பலாம்ன்னு போனு மேல போனா பண்ணுவான்... காசு கேட்டா மட்டும் எனக்கு மொடையா இருக்கு அவனுக்கிட்ட கேளுங்கன்னு சொல்லுறான்... என்ன பண்ணுறது அவனுக்கு வந்த மவராசி அப்படி ஆக்கி வச்சிட்டா...' என்று தனக்குத்தானே பேசியபடி வராத கரண்டை திட்டியபடி அரிக்கேன் விளக்கைத் தூண்டி விட்டு விட்டு புருஷனுக்காக காத்திருந்தாள்.

கொஞ்ச நேரத்தில் ஈரத்தோடு வந்த கந்தசாமியைப் பார்த்ததும் "குளிச்சீங்களா?" என்று கேட்டாள்.

"ஆமா... கம்மா நெறஞ்சு கிடைக்கா... தண்ணியப் பாத்ததும் எல்லாருக்கும் ஆசை... நல்லா ஆனந்தமாக் குளிச்சிட்டு வந்தோம்..." சந்தோஷமாய் சொன்னார்.

"மழ நேரத்துல குளிச்சு ஒடம்புக்கு ஒத்துக்கலைன்னா..."

"அடிப்போலா.... பொறந்ததுல இருந்து அதுக்குள்ள கெடக்குற ஒடம்பு இது... அதெல்லாம் ஒண்ணும்  பண்ணாது...."

"புதுத்தண்ணி... தடுமங்கிடும பிடிச்சிக்கிச்சின்னா ஏ உசிருல்ல போவும்..."

"ஒண்ணும் பண்ணாதுங்கிறேன்... கரண்ட்டு இனி வராதுன்னு நெனக்கிறேன்... கரண்டுக்கம்பி வர்ற பாதயில கருவ அடிக்கிதாம்... இனி அதை வெட்டி சுத்தம் பண்ணனும்.... காலயில மழ இல்லன்னா போவலாம்ன்னு சொல்லியிருக்காங்க..." என்றவர் வேட்டியை மாற்றிவிட்டு சிம்ளி விளக்கை எடுத்துக் கொண்டு சாமி அறைக்குள் போய் 'அப்பனே முருகா... எம்புள்ளகுட்டிகள நல்லா வச்சிக் காப்பாத்து' என சாஷ்டாங்கமாய் விழுந்து கும்பிட்டு திருநீறை எடுத்து நெற்றியில் பட்டை அடித்து நெஞ்சிலும் தடவிக் கொண்டு வந்து கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தார்.

"வாங்க சாப்பிட்டுட்டு உக்காருங்க... லண்டியன் வெளிச்சத்துல உக்காந்திருக்கதுக்கு காலாகாலத்துல படுக்கலாம்..." என்றவள் அவரின் தட்டை எடுத்து வைத்தபடி "பெரியவன் போன் பண்ணினான்..." என்றாள்.

"எப்போ...? என்ன சொன்னான்...? பேத்தியா எப்புடியிருக்காளாம்?"

"கொஞ்ச முன்னாடித்தான் பேசுனான்... எல்லாரும் நல்லா இருக்காகளாம்... என்னத்த சொல்றான்... ஒரம் போடணுமின்னு காசு அனுப்பச் சொன்னா சின்னவனைக் கேளுங்கிறான்..."

"சரி விடு... அவனுக்கும் செலவிருக்குமில்ல... காலையியல் சின்னவங்கிட்ட நா பேசுறேன்... இல்லாட்டி பெரிய மாப்ளக்கிட்ட சொன்னா ஒடனே கொண்டாந்து ஒரத்த எறக்கப் போறாரு..."

"ஆமா ரெண்டு மயங்க சம்பாரிக்கயில வீட்டுக்கு வந்த மாப்ளக்கிட்ட கேட்டாத்தான் நல்லாயிருக்கும்... நாளைக்கி நெல்லவிச்சதும் அவளுகளுக்கா கொடுக்க விடுவாய்ங்க..."

"சரி... சரி... தருவாய்ங்க... விடு... இப்ப சோத்தப் போடு..." என்று சொல்லவும் 'ஆமா சீமையில இல்லாத பிள்ளகள பெத்துப்பிட்டாக... மாசா மாசம் நோட்டு நோட்டா அனுப்பிட்டுத்தான் மறுவேல பாக்குறாய்ங்க... அட ஏஞ் சும்மா... ஒவ்வொரு தடவயும் கேட்டுக்கேட்டு வாங்கணும்..' என்று முணங்கியபடி அவருக்கு சாப்பாடு போட்டுவிட்டு தானும் போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.

(வேரும் விழுதுகளும் வளரும்...)
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 7 அக்டோபர், 2014

நண்பேன்டா : சாமி (அ) லட்சுமிகுமார்


நண்பேன்டா பதிவில் மறக்க நினைக்காத நட்புக்களைப் பற்றி கொஞ்சமாய் பதிந்து வைக்க ஆரம்பித்து இதுவரை பல நண்பர்களைப் பற்றி இங்கு பகிர்ந்து வைத்திருக்கிறேன். அந்த வகையில் இன்று எனது மதிப்பிற்குரிய நண்பர் லட்சுமிகுமார் அவர்களைப் பற்றி கொஞ்சம் மலரும் நினைவுகள்.

புதுக்கோட்டைக்காரரான இவரை எனக்கு இறைவன் அறிமுகப்படுத்தியது எம்.சி.ஏ.யில்தான். தலையில் முன்பக்கம் எல்லாம் முடியை மழித்து சின்னதாக ஒரு குடுமி, நெற்றியில் அழகாகப் போடப்பட்ட நாமம், வேஷ்டி, சட்டை என எங்களில் வித்தியாசமாய் அறிமுகமானவர்.  வகுப்பில் எனக்கு வரிசை எண் 499, இவருக்கு 500. முதலில் எனக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். சில நாட்களில் சிநேகமாய் சிரிக்க ஆரம்பித்தவர் பின்னர் எங்களுடன் சகஜமாகப் பழக ஆரம்பித்தார். நாங்கள் இவரை சாமி என்றுதான் அழைப்போம்.

ஆச்சாரமான ஐயர் குடும்பமாக இருந்தாலும் எங்களுடன் நட்பு பாராட்டியதில் அவருக்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது. அந்தளவுக்கு மிகச் சிறந்த நண்பர். வெளியில் தண்ணீர் கூட அருந்த மாட்டார். அவ்வளவு ஆச்சாரம்... இவர் எம்.ஏ.யில் டபுள் டிகிரி வாங்கி வைத்து விட்டு சமஸ்கிருதத்தில் டாக்டர் பட்டமும் வாங்கி வைத்துவிட்டு மனுசன் எங்களுடன் எம்.சி.ஏ. படிக்க வந்திருந்தார். 'ஏஞ்சாமி உங்களுக்கு இந்த வேலை... பேசாம பாக்குற வேலையைப் பாத்துக்கிட்டு இருக்காம...' என்று சொன்னால் 'இல்ல குமார் சார்... சும்மா படிக்கலாம்ன்னு தோணுச்சு... அதான் வந்துட்டேன்...' என்று ஜாலியாகப் பதில் சொல்வார். இன்றும் அவருக்கு எம்.சி.ஏ., படித்ததால் எந்தப் பலனும் இல்லை.

எல்லோரிடமும் நன்றாகப் பழகினாலும் என்னுடன் மட்டும் அதிக நெருக்கம். என்னைப் பார்க்க தேவகோட்டைக்கு சில முறை வந்தார். அப்போதெல்லாம் இளநீர் மட்டுமே ஆகாரமாய்... சில நாட்கள் ஏதோ காரணங்களால் நான் கல்லூரிக்கு வர வேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருப்பேன்... அதிகாலையில் புதுக்கோட்டையில் இருந்து போன் வரும் 'குமார் சார் இன்னைக்கு நீங்க வாறீங்களா?' என்று கேட்பார். 'வரவேண்டாம்ன்னு பார்க்கிறேன் சார்' என்று சொன்னதும் 'நீங்க வரலைன்னா நானும் போகலை' என்று சொல்லி போனை வைத்துவிடுவார். இப்படி நான் விடுமுறை என்றால் அவரும் அவர் விடுமுறை என்றால் நானும் வகுப்பிற்கு மட்டம் போடுவது தொடர்ந்தது.

மூன்றாம் ஆண்டில் புராஜெக்ட் முடிக்க அவரின் வீட்டில் தங்கி முடித்து எப்படிக் கொண்டு போய் கொடுத்தோம் என்பதை டொமினிக் பற்றிய பகிர்விலேயே சொல்லியிருந்தேன். ஆனால் டொமினிக் போனபோது நடந்ததைச் சொன்னேனே தவிர நாங்க இருவரும் போனபோது நடந்ததை இந்தப் பதிவில் சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன். அதை இங்கு பார்க்கலாம்.

நாங்கள் இருவரும் புராஜெக்ட் கொடுக்கப் போனபோது அங்கிருந்த எங்க மாலதி மேடம் எங்கள் இருவரையும் பார்த்ததும் 'வாங்க சார்... இப்பத்தான் நல்ல நேரமோ?' என்று கேட்டு விட்டு பக்கத்தில் இருந்த குற்றாலம் சாரிடம் 'சார் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இவுக ரெண்டு பேருல ஒருத்தர் வரலைன்னா இன்னொருத்தர் வரமாட்டாங்க... திக் பிரண்ட்ஸ்' என்று சொல்லிச் சிரித்தார். 'அப்படியா? அதான் இப்பவும் ஒண்ணா வந்திருக்கீங்களோ... இதுக்கு முன்னாடி வந்தவரும் உங்க கூட்டணிதானே... அவரை மட்டும் முன்னாடி அனுப்பி வச்சிட்டீங்க' என்று கேட்டுவிட்டு புராஜெக்ட் நோட்டை வாங்கிக் கொண்டு 'எங்க சிடி?' என்றார். இருவரும் சிடியைக் கொடுக்கவும் 'இதுல புரோக்கிராம் இருக்கா... இல்லை எம்டி சிடியா?' என்று கேட்டார். 'இருக்கு சார்' என்றோம் இருவரும் ஒரே நேரத்தில்... உடனே மாலதி மேடம் சிரித்து விட்டு 'சார் செக் பண்ணிப் பாத்துடுங்க..' என்று சொல்லிவிட்டு 'ஆட்டம் போட்டாலும் நல்லா படிப்பாங்க' என்று சர்டிபிகேட் கொடுத்தார். குற்றாலம் சாரோ 'என்ன சிடியப் போட்டுப் பாத்துடலாமா?' என்று மறுபடியும் கேட்டார். பின்னர் என்ன நினைத்தாரோ 'சரி போங்க' என்று சொல்லிவிட வெளியில் வந்த எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. காரணம் நாங்க கொடுத்தது அப்போதுதான் வாங்கி வந்த எம்டி சிடி.

கல்லூரி முடிந்த பின்னரும் எங்கள் நட்பு தொடர்ந்து.. அவர் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஓலைச்சுவடிகளைப் படித்து நூலாக்கும் முயற்சியில் இருந்தபோது எங்களைக் கூட்டிச் செல்கிறேன் என்று சொன்னார். ஆனால் ஏனோ எங்களுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. அப்போது திருவாரூரில் சமஸ்கிருத ஆசிரியராக பணி ஆற்றினார்.

அவரது குடும்பம் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அருகில் குடியிருப்பு வளாகத்தில் வீடு வாங்கி அங்கு போனபோது நானும் முருகனும் சென்று தங்கியிருந்து சாமி தரிசனம் செய்தோம். அதன் பின் அவர் தேவகோட்டைக்கு சில முறை வந்தார். அவரின் திருமணத்துக்கு டொமினிக், கருப்பையாவுடன் நானும் என் மனைவியும் சென்று வந்தோம். குழந்தைகளோடு இங்க வந்து தங்கியிருந்து போகணும் என்று சொன்னார். ஆனால் அதற்கான நேரம் இன்னும் அமையவில்லை.

தற்போது திருச்சியில் ஒரு கல்லூரியில் பணியாற்றுவதாகச் சொன்னார். எப்போதும் போனில் பேசுவதுண்டு. எம்.சி.ஏ. புரவிசனல் சர்டிபிகேட்டை வைத்துதான் இங்கு வேலைக்குச் சேர்ந்தேன். பட்டயச் சான்றிதழ் வாங்காமலே இருந்தது. இந்த முறை போனபோது பாரதிதாசன் பல்கலைக் கழகம் போயும் சில காரணங்களால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனது உடனே இவருக்கு தொடர்பு கொண்டேன். டிடி எடுத்து சர்டிபிகேட் ஜெராக்ஸ் எடுத்து அனுப்பி வையுங்க நம்ம நண்பர் ஒருத்தர் இருக்கார் வாங்கிடலாம் உங்களுக்கு செய்யாமலா? என்று சொன்னவர் சொன்ன மாதிரி நண்பரிடம் சொல்லி பதினைந்து நாளில் எனக்கு சர்டிபிகேட் கிடைக்கச் செய்தார். இதில் என்ன ஒரு விஷயம் என்றால் அந்த நண்பரோ அவரில்லாம் கொடுக்க முடியாது என்று சொல்ல 'நான்தான் அவர்... அவர்தான் நான் போதுமா? எனக்குன்னே வச்சுக்கங்க' என்று அவர் சொன்ன வார்த்தைதான் உடனே வீடு தேடி சர்டிபிகேட்டை வரவைத்தது. இரண்டு மூன்று முறை மனைவிக்குப் போன் பண்ணி 'அண்ணி சர்டிபிகேட் வந்துருச்சா? என்று கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார். 

தொடரும் எங்கள் நட்பும் என்று தொடர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்... இப்படியான நட்புக்களால்தான் உறவுகள் செய்யும் துரோகங்களை மறந்து வாழ முடிகிறது. எனக்கு கிடைத்த நட்புக்கள் எல்லாமே முத்துக்கள்தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை... இந்த உறவுகள் இப்படியே என்றும் தொடரட்டும்...

-நண்பேன்டா தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 6 அக்டோபர், 2014

சில சினிமாக்களும் சில வரிகளும்

பக்ரீத் விடுமுறையான கடந்த நான்கு நாட்களும் ஊருக்குப் பேச... சமைக்க... சாப்பிட... படம் பார்க்க... தூங்க என்று கழிந்து விட்டது. உறவுகளின் வருகையும் விடுமுறை தந்த சோர்வுமாய் எதுவுமே எழுதவில்லை. தொடர்கதை கூட நீண்ட நாளாச்சு முதல் பகுதி போட்டு என்ற காரணத்தால் நேற்று அவசரமாய் எழுதிப் பகிர வேண்டியதாகிவிட்டது. சரி விடுமுறையில் சில சினிமாக்களைப் பார்த்தேன். அவற்றைப் பற்றி மனசின் பார்வையில் சில வரிகள் இங்கு சொல்லலாம்.

மெட்ராஸ் 


வட சென்னை வாழ் மக்களின் அரசியலைப் பற்றிப் பேசும் கதை. ஒரு சுவற்றுக்காக காலம் காலமாக இரண்டு தரப்பு வெட்டிக் கொள்வதைச் சொல்லி ஆரம்பிக்கும் கதையின் நகர்வு அந்தச் சுவரை ஒரு கதாபாத்திரமாக வைத்து அரசியல் களத்தில்... கார்த்தி நடிப்பில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வெற்றிப் படம். எல்லோரும் சென்னைப் பாஷை பேசும் போது இவரின் பேச்சு மற்றும் கொஞ்சம் மாறி வருவது உறுத்தலாக இருந்தாலும் காளி கதாபாத்திரத்தில் குறை வைக்கவில்லை. கலையாக வரும் கேத்தரின் தெரஸா கலையாகத்தான் இருக்கிறார். தூங்கி எழுந்து தண்ணீர் பிடிக்க வரும் காட்சியில் சூப்பர். இவர்களைச் சாப்பிட்டு விட்டார்கள் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கும் அன்பு (கலையரசன்) மற்றும் மேரி (ரித்விகா). இவர்களின் காதல் காட்சிகள் ரசனை மிகுந்தவை. நடித்திருக்கும் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை சரியாகச் செய்திருக்கிறார்கள். முகநூலில் எல்லாம் இது தலித் பற்றிய படம் என்று எழுதி வருகிறார்கள். சாதி, மதம் கடந்து பார்க்கும் ஒவ்வொருவனுக்கும் இது ஒரு அற்புதமான படம். ஒவ்வொரு படத்தையும் இது இன்ன சாதியினருக்கான படம் என்று முத்திரை குத்துவது எதற்காக? எந்தச் சாதிக்காரன் பார்த்தாலும் அவன் சாதியில் இது போன்ற நிகழ்வுகள் இருப்பது நினைவில் ஆட வேண்டும்... அவ்வளவே... அதுதான் சினிமா. மெட்ராஸ் மிகவும் அருமையான படம்... ஒரு ஏரியா மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதையை ஒரு வித பதட்டத்துடன் கண்டு களிக்கலாம். கலக்கலாய் மெட்ராஸ் பாஷை பேசி வயதான ஜானாக நடித்திருப்பவரின் அட்டகாசமான நடிப்பைப் பற்றி சொல்லாமல் செல்வது நன்றல்ல... கலக்கியிருக்கிறார்.

சிகரம் தொடு


விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருக்கும் படம்... தன்னோட பாதை இதுதான்... இப்படிப்பட்ட படங்கள்தான் தனக்குச் சரி வரும் என்று வளர்ந்து வரும் நாயகனான விக்ரம் பிரபு சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார். கதையை ஆரம்பத்தில் மெதுவாக நகர்த்தினாலும் போகப்போக அதன் வேகத்தை அதிகரித்திருக்கிறார் இயக்குநர். சத்தியராஜ் ஒரு காலை இழந்த போலீஸாக நடித்திருக்கிறார். மகனையும் போலீஸ் ஆக்க ஆசைப்படுகிறார். மகனுக்கோ போலீஸ் என்றாலே பிடிக்கவில்லை. இதற்கு இடையில் ஏடிஎம் கொள்ளையை கருவாக்கி படம் காட்டுகிறார்கள். நல்ல கதை... இருந்தும் மெட்ராஸ் கொடுத்த ஒரு பாதிப்பை ஏனோ கொடுக்கவில்லை. சொல்ல மறந்துட்டேனே நம்ம பிரபல சினிமா விமர்சனப்  பதிவர் ஜாக்கி சேகர் அண்ணா அவர்கள் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

ஜிகர்தண்டா


நாளைய இயக்குநருக்கான குறும்படப் போட்டியில் நாசரால் கேவலப்படுத்தப்படும் நாயகன் சித்தார்த் சினிமாவில் இயக்குநராகி சாதிக்க ஒரு ரவுடியின் கதையை அவனைப் பின்தொடர்ந்து எழுதி இயக்கப் போகிறேன் என மதுரை வருகிறார். அங்கு நண்பனுடன் சேர்ந்து வில்லனைப் பின்தொடர்ந்து அவனிடம் மாட்டி... இடையில் நாயகியை காதலிப்பது போல் நடித்து... வில்லனையே நாயகனாக வைத்து படமெடுக்கும் நிலைக்குப் போகிறார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை நாயகன் சித்தார்த்தைவிட வில்லனான சிம்ஹா சிம்மாசனத்தில் அமர்கிறார். அட்டகாசமான நடிப்பு... நம்ம லஷ்மி மேனனை ஊறுகாயாகக் கூட தொடவில்லை... பட்டும் படாமலும் தலைகாட்டுகிறார். கடைசியில் நம்ம விஜய் சேதுபதியை மிரட்டிப் பணிய வைக்கும் போது சித்தார்த் மீது கோபம் வந்ததுங்க... ரவுடி மதுரையிலதான் இருக்கணும்ன்னு எழுதப்படாத சட்டம் எதுவும் தமிழ் சினிமாவுல இருக்கு போல... ஜிகர்தண்டான்னு பேர் வைக்கவே மதுரைக்குப் போயிருக்கானுங்க.,.. ஜிகர்தண்டாவில் ருசி இல்லை.

சலீம் 


விஜய் ஆண்டனி நடிப்பில் வந்திருக்கும் இரண்டாவது படம். ஆரம்பத்தில் ஏழைகளுக்கு உதவ நினைக்கும் மருத்துவர், பார்த்த பெண்ணோடு பழக ஆரம்பிக்க அது ஒரு முன்கோப முனியம்மாவாக இருக்க, நொந்து போய் இருக்கும் நேரத்தில் மருத்துவமனையில் நன்னடத்தைக்கு சன்மானமாக வேலை போகிறது. அதன்பின் மந்திரியின் மகனை சிறைப்பிடித்து வைத்துக் கொண்டு அவர் வைக்கும் கோரிக்கை படத்தை ராக்கெட் வேகத்தில் கொண்டு செல்கிறது. சலீமாக வரும் விஜய் ஆண்டனி அலட்டலில்லாமல் அருமையாக நடித்திருக்கிறார். சலீம் என்ற பெயரைச் சொன்னதும் நீ எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று போலீஸ் அதிகாரி கேட்க, என்னோட பேருதான் பிரச்சினையின்னா என்னை விஜய்ன்னு கூப்பிடுங்க... இல்ல ஆண்டனியின்னு கூப்பிடுங்க என்று சொல்லுமிடத்தில் வசனத்தில் சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குநர். தொடரும் என்று போடுகிறார்கள்... தொடர்ந்து பார்க்கலாம்.

வானவராயன் வல்லவராயன்


பாசத்தில் உருகுவதும் அடித்துக் கொண்டு உருள்வதுமாக இருக்கும் அண்ணன் தம்பிகளில் அண்ணனுக்கு காதல் வர காதலியைக் கிளப்பிக் கொண்டு போக இருக்கும் போது தர்ம அடி விழுகிறது. உடனே தம்பி அந்தப் பெண்ணின் வீட்டுக்குப் போய் அவளின் அப்பாவை வீதியில் வைத்து வேட்டியை அவிழ்த்து விடுகிறார். பிரச்சினை பெரிதாகிறது... எப்படி இணைகிறார்கள் என்பதை வழவழா கொழகழான்னு 'வாவ'வாக காட்டியிருக்கிறார் இயக்குநர். அழகான நாயகி இருந்தும் அரதப் பழசான கதையும் கடுப்பேற்றும் காட்சிகளுமாய் படம் நகர்வதால் சலிப்பாக இருக்கிறது. தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் மா.கா.பா. ஆனந்த் பேசும் வசனங்களுக்கு சிரிக்க முடியவில்லை. கிருஷ்ணாவின் நடிப்பு ஆஹா... ஓஹோ என்றெல்லாம் இல்லை.  ஏனோ தானோ படம்தான்... 

-'பரிவை' சே.குமார்

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 2)

முந்தைய பகுதி : பகுதி-1...

இரண்டு நாட்களாகப் விடாது பெய்த பேய் மழை கொஞ்சம் குறைந்திருந்தாலும் இன்னமும் கருமேகம் கூடுவதும் லேசாகத் தூறுவதுமாகத்தான் இருந்தது. வாயில் நிஜாம் லேடி புகையிலையை அதக்கியபடி கட்டிலில் அமர்ந்திருந்த கந்தசாமி, புகையிலை எச்சில் ஒழுகாதவாறு முகத்தை சற்றே தூக்கி வாயை அஷ்ட கோணலாக்கி "மழ கொஞ்ச விட்டாப்ல இருக்குல்ல' என்றார்.

வாசிக்காதவர்கள் தொடர்ந்து வாசிக்க இங்கே சொடுக்கவும்.

தொடர்வது பகுதி - 2

'இந்த மழச் சனியன் விடாது போல... இப்புடி பொத்துக்கிட்டு கொட்டிக்கிட்டே இருக்கு... லேசா விட்டப்போ வெட்டரிக்கும்ன்னு பாத்தா எம்புட்டுத் தண்ணிதான் வச்சிருந்துச்சோ... விட மாட்டேங்குதே.. இந்த மனுசன் போனவரு என்ன பண்ணுறாரோ தெரியலை... மழ வந்தா திரும்பி வரவண்டியதுதானே... வயலுக்குள்ள திரிஞ்சிட்டு அப்புறம் நீதான்டி போச்சொன்னேன்னு கத்துவாரு...' தனக்குள் முணங்கியபடி சோறு வைக்க விறகு அடுப்பை பற்றவைத்தவள், 'மழ நேரத்துல இந்த வெறகு வேற ஈரங்காத்துக்கிட்டு புடிச்சித் தொலயாதே... ஊதி ஊதிச் சாவவேண்டியதுதான்' என்று சத்தமாகச் சொன்னாள்.

'இந்தப்பயக வேற இன்னுங் காசனுப்பாம இருக்கானுக... இந்த மழ பேஞ்சதுக்கும் அதுக்கும் அம்புட்டுப் பேரும் ஒரம் போடவும் மருந்தடிக்கவும் ஆரம்பிச்சிவாய்ங்க...'  புலம்பியபடியே சேலை முந்தானையை  தலையில் போட்டுக் கொண்டு வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்தாள்.

மழையில் ஏதோ பேசியபடி கையில் மண்வெட்டியுடன் ராசப்பன் மகனும் கணபதியும் போய்க்கொண்டிருந்தார்.

"போறது ஆரு... ராசுப்பய மவனா...?" கத்தினாள்.

"ஆமா அப்பத்தா... என்ன வெசயம்?" எதிர்க்கேள்வியோடு நின்றான்.

"ஒங்க ஐயா... வயப்பக்கந் தண்ணி வெட்டிவிடப் போனாவ... அங்கிட்டுப் பாத்தியா?"

"ஐயாதானே... மேட்டுச் செய்யிப்பக்கமாப் பாத்தே... கண்ணச் சித்தப்பா ஏதோ சொன்னதும் வேப்பந்தலப்பக்கமாப் போனாவ... வந்துக்கிட்டு இருப்பாவ... நீங்க நனையாதீக... " என்று சொல்லியபடி நடந்தான்.

'இவரு இப்புடித்தான்... எந்திரிச்சி போ மாட்டாரு... போனா எதாவது கிறுக்குத்தனமாச் செய்யிறதே வேலயாப் போச்சு... இந்த மழயில வேப்பஞ் செய்யிக்கு எதுக்குப் போவணும்... சொன்னா கத்துறேன்னு திருப்பிக் கத்துவாரு... அங்கிட்டு முள்ளங்கிள்ளுமாக் கெடக்கும்... மழயில ஊறுன முள்ளுக் குத்தினா என்னாத்துக்காகுறது... இந்த மனுசன் வேற வேசாடு தாங்க மாட்டாரு...என்ன கத்தி என்ன பண்றது... காலம் பூராங் கத்துறதே பொழப்பாப் போச்சு...' முணங்கியபடியே புகைந்து கொண்டிருந்த அடுப்பை ஊதிவிட்டவள் கண் எரிய முந்தானையால் கண்ணைத் துடைத்து விட்டு அதிலே 'சிர்' என்று மூக்கையும் சிந்தி விட்டு முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டாள் அணையும் அடுப்பை ஊதிவிடுவதும் வாசலில் கந்தசாமி வர்றாரா என எட்டிப் பார்ப்பதுமாக இருந்தாள்.

வாசலில் யாருடனோ சத்தமாகப் பேசும் கந்தசாமியின் குரல் கேட்கவும் 'அப்பா வந்துட்டாரு' என்று சொல்லிக் கொண்டாள். படியில் ஏறி வாளியில் இருந்த தண்ணீரைச் சாய்த்து காலைக் கழுவி விட்டு மண்வெட்டியை அங்கேயே வைத்து விட்டு திண்ணையில் ஏறி நின்னு "அப்பா என்ன மழ... பொத்துக்கிட்டு ஊத்துதுலா... வேப்பஞ் செய்யிலாம் நெறஞ்சி நிக்கிதுலா... வட்டத்தலப்பக்க போமுடியாம வெள்ளக்காடாக் கெடக்குலா... இன்னிக்கும் மழ தொடந்தா வேந்தங்கம்மாத்தண்ணி வட்டத்தலக்கி வந்திரும்... " என்றபடி தலையில் கிடந்த சாக்கை எடுத்து கொடியில் போட்டார்.

"இந்த ஏலாவுக்கு கொறச்சலில்லை... மழ வந்தா வரவேண்டியதுதானே... எதுக்கு வேப்பஞ்செய்யிக்குப் போனிய... அங்கிட்டு முள்ளுங்கிள்ளுமாக் கெடக்கும்..." கோபமாகக் கேட்டாள்.

"அட... வேப்பந்தலைக்கு போக நெனக்கலத்தா... நம்ம கண்ண நின்னான்... அவனே எல்லா வயலுலயும் தண்ணிய வெட்டி விட்டுட்டு வந்துட்டேன்னு சொல்லி போ சித்தப்பான்னுதான் சொன்னான். சரி.. வந்தது வந்துட்டோம்ன்னு வேப்பஞ் செய்யிக்குப் போன மழ பிடிச்சிக்கிச்சு..." என்றபடி காளியம்மா கொடுத்த துண்டால் துவட்டி அதைக் கட்டிக் கொண்டு ஈர வேஷ்டியை அவிழ்த்து அலசப் போனார்.

"அப்டியே மழயில போட்டுட்டு வாங்க... அப்பொறமா அலசிக்கலாம்..." என்று சொன்னதும் 'செரி' என்று மழைத் தண்ணீரில் நனையுமாறு போட்டுவிட்டு வந்து 'ஸ்... அப்பா... என்னமா குளிருது" என்றபடி கட்டிலில் அமர்ந்தார்.

சூடா வரக்காப்பியை அவரிடம் கொடுத்தவள் "ஏங்க... இந்தப் பயக இன்னம் பணமே அனுப்பல... இனி எல்லாரும் ஒரம் போட, மருந்தடிக்க ஆரம்பிச்சிடுவாங்களே... நாம காசுக்கு என்ன பண்றது...?" என்றாள்.

"ஆமா... அனுப்பட்டும்... அவனுகளுக்கும் செலவு இருக்குமில்ல... மழ பெய்யுமின்னு அவனுகளுக்கு என்ன தெரியும்... செல்வி வூட்டுக்காரருக்கிட்ட வாங்கிக்கலாம்... நாளக்கே சொன்னா மாப்ள ஒரத்தையே எடுத்தாந்து குடுத்துட்டுப் போயிடுவாக... அப்பறம் என்ன... விடு அனுப்புவாய்ங்க..." என்றபடி காபியை உறிஞ்சப் போனவர் டம்ளரைப் பார்த்து "எங்க எம்போகாணி... இதுல கொடுத்திருக்கே...?" என்றார்.

"காலயில குடிச்சது... கழுவாமக் கெடக்கு... கழுவலாம்ன்னு பாத்தா இந்தா இப்புடி மழ பெய்யுது... ஒருதா சாப்பிட்டுட்டு மொத்தமா இந்தப்பக்கமா ஒக்காந்து கழுவிடலான்னு நெனச்சேன்... அடிக்கடி ஒக்காந்து எந்திரிக்கவா முடியுது... ஒரு நா குடிச்சா உங்க வெரதங் கெட்டுப் போயிடாது..." என்று சொல்லியபடி சோற்றைப் பாக்கப் போனாள். அதன் பிறகு ஏதாவது பேசினால் என்ன நடக்கும்ன்னு அவருக்கு நல்லாவே தெரியும் என்பதால் சத்தமில்லாமல் குடித்து முடித்தார்.

"என்னங்க... ஊருக்குப் போன் பண்ணுனீங்களா?" தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த கணவன் மணியிடம் கேட்டாள் சித்ரா.

"ஊருக்கா... சும்மாவே அப்பாவுக்கு போன் பண்ணினா கத்திப் பேசணும்... இப்ப தொடர்ந்து மழை வேற பெய்யுது... போன் லைன் எல்லாம் ஒழுங்கா இருக்கோ இல்ல அறுந்து கெடக்கோ தெரியல... அது போக ஆபீஸ்ல வேலை அதிகம்... எங்கிட்டுப் பண்றது...?"

"மழை நேரத்துல ரெண்டு பேரும் தண்ணிக்குள்ள திரிஞ்சி எதையும் இழுத்துக்கிட்டுறாம.... அப்புறம் நாமதான் அதுக்கும் அழுகணும்..."

"அதானே... என்னடா இம்புட்டுக் கரிசனமாக் கேக்குறாளேன்னு பாத்தேன்... உங்கவலை உனக்கு... அது சரி... ஆடு, மாடு வேணான்னா எங்க கேக்குறாக... வயசான காலத்துல எல்லாத்தையும் விட்டுட்டு இங்கிட்டு வந்து கெடங்கன்னு ஆத்தாக்கிட்ட எத்தன தடவ சொல்லியிருப்பேன். ரெண்டும் அந்த ஊரை விட்டு வரமாட்டேங்குதுக... சரி வயலயாச்சும் பாவுகத்துக்குப் போடச் சொல்லி யாருக்கிட்டயாச்சும் கொடுங்கன்னு சொன்னா என்னால முடிஞ்ச வரைக்கும் விவசாயம் பண்ணுறேன்னு சொல்லிட்டார்..."

"ஆமா... இருக்க இந்த வீட்டுக்குள்ள அவுகளையும் கொண்டாந்து வச்சிக்கிட்டாத்தான் வாழும்... அதான் உங்க தம்பி மாளிகை மாதிரி வீடு கட்டி வச்சிருக்காருல்ல... அங்க போயி இருக்கச் சொல்ல வேண்டியதுதானே... எல்லாத்துக்கும் நாந்தேன் வடிச்சிக் கொட்டணுமாக்கும்... என்னைய எங்காத்தாப்பன் என்ன நேரத்துல பெத்தாங்களோ... "

"இப்ப எதுக்கு தேவையில்லாமப் பேசுறே... அவங்கள இங்கயா கூட்டியாரணுமின்னு சொன்னேன்... என்ன இருந்தாலும் அவுக என்னைய பெத்தவங்க... இன்னைக்கு பாக்குற இந்த வேலையே அவரு விவசாயம் பண்ணி படிக்க வச்சதாலதான் கிடைச்சது... இத்தன பவுசா நீ வாழக் காரணம் அந்தாளு கஷ்டப்பட்டு படிக்க வச்சதாலதான்... இல்லேன்னா எங்க பெரியப்பன் மவனுகளாட்டம் நானும் விவசாயம் பாத்துக்கிட்டுத்தான் இருந்திருப்பேன்... நீ நாலு மாடுகள வச்சிக்கிட்டு எறள்ளிக்கிட்டு திரிஞ்சிருப்பே...?"

"அப்பா சாமி... நாயேன் எறள்ளப் போறேன்... நீங்க இந்த உத்தியோகம் பாக்கலைன்னா எங்கப்பா எதுக்கு உங்களுக்கு கட்டப் போறாரு... சரி... சரி.,..எனக்கு உங்க புராணம் கேட்டுக் கேட்டு புளிச்சிப் போச்சு... இங்க பாருங்க... மகா காலேசுப் படிக்கிறா... இருக்க சின்ன வீட்டுல அவுகளக் கொண்டாந்து வச்சிக்கிட்டு அதெல்லாம் சரி வராதுங்க... போறமா பாக்குறமா... மாசாமாசம் பணம் அனுப்புறோமா... அதுதான் சரி... இப்ப போன் பண்ணிப் பாருங்க... பயிரெல்லாம் தண்ணியில போயிருச்சோ... என்னவோ...  வெளயலைன்னா என்ன பண்ணுறது சொல்லுங்க..."

"அதானே பாத்தேன்... என்னடா சோனையன் குடுமி சோலியில்லாம ஆடாதேன்னு பாத்தேன். எங்க இந்த வருசம் அரிசி வராதோன்னு கவலையில போன் பண்ணச் சொல்லி நிக்கிறே... சரி பேசுறேன்..." என்றபடி மொபைலில் அம்மா என்று இருந்த நம்பரை அழுத்தினான்.

நீண்ட நேரம் ரிங் போகவும் "என்னடி... அம்மா எடுக்க மாட்டேங்கிது..." என்று மனைவியிடம் கேட்க, "மெதுவா எந்திரிச்சி வந்துதானே எடுக்கணும்.. வேணுமின்னா உங்கம்மாளுக்கு ஒரு செல் வாங்கிக் கொடுங்க" என்று சிரித்தபடி அவனின் அருகில் அமர்ந்த சித்ராவை, 'உனக்கு நய்யாண்டி' என தலையில் கொட்டினான். எதிர்முனையில் போன் எடுக்கப்பட்டதும் 'எடுத்துருச்சு' என்பதுபோல் தலையாட்டினான்.

"அலோ... ஆருப்பா...? கொஞ்சஞ்சத்தமா பேசுங்க... மழ பெஞ்சிருக்கதால கொரக்கொரன்னு கேக்குது..." என்று கத்தினாள் காளியம்மாள்.

(வேரும் விழுதுகளும் வளரும்...)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 3 அக்டோபர், 2014

கிராமத்து நினைவுகள் : டீசல் மோட்டாரும் பாரின் சோப்பும்

கிராமத்து நினைவுகள் என்றாலே அதில் அதிகம் லயிக்க வைக்கும் நினைவாக வருவது விவசாயக் காலம்தான்... ஊரைச் சுற்றிலும் உள்ள வயல்கள் எல்லாம் பச்சைப் பசேல் என்று காட்சியளிக்க, வாய்க்காலில் பாய்ந்தோடும் நீரும், அதிலே கொஞ்சி விளையாடும் அருகம்புல்லும் முள்ளிப் பூவுமாக அத்தனை அழகாகக் காட்சியளிக்கும் காலம் விவசாயக் காலம்தான்... மண்வெட்டி சுமந்த மனிதர்கள் வரப்புக்களில் திரிய வீசும் காற்றுக் கூட சுகமானதாய் இருக்கும்.

லேசான மழை ஆரம்பிக்கும் போதே கொழுஞ்சி மற்றும் கருவைச்செடி பிடுங்குவதில் இருந்தே வயல் வேலை ஆரம்பித்துவிடும். இப்போ விவசாயம் பற்றியோ கதிர் அறுப்பு பற்றியோ பார்க்கப் போவதில்லை. கண்மாய் நீரும் அதைப் பாய்ச்சுவது பற்றி நினைவலைகளைத்தான் மீட்கப் போகிறேன். ஏனென்றால் விவசாயம் குறித்து கிராமத்து நினைவுகளில் ஏற்கனவே பகிர்ந்தாச்சு.

கண்மாயில் தண்ணீர் நிரம்பும் போது கண்மாய்க்குள் இருக்கும் சின்ன முட்டு பெரிய முட்டு என்ற இரண்டு மேடான பகுதிகளை வைத்து விளைச்சல் எப்படி இருக்கும் என்பதைக் கணித்து விடுவார்கள்.  மழை பொய்த்து சின்ன முட்டு மட்டுமே முழ்கி இருந்தால் தண்ணி இழுபறியாகத்தான் வரும். கடையில் ஒரு தண்ணி ரெண்டு தண்ணிப் பாடு வரும்ப்பா... இடையில ஒரு மழை பேஞ்சா நல்லாயிருக்கும் என்று சொல்வார்கள். அதே சமயம் பெரிய முட்டு நிறைந்தால் விவசாயத்துக்கு தண்ணிப் பிரச்சினை வராதுப்பா என்பார்கள். அதிலும் குறிப்பாக எங்கள் கண்மாய்க்குள் கரையை ஒட்டி இருக்கும் முனியய்யா கோவிலைச் சுற்றி நீர் வந்து விட்டால் விவசாயத்துக்குப் போக தண்ணி கெடக்கும்ப்பா என்று சொல்வார்கள்.

ஆரம்பத்தில் மடை திறந்து தண்ணீர் பாய்ச்சுவார்கள். பின்னர் தண்ணீர் ஏறிப் பாயாது என்பதால் எறவா மரம் (இறவை மரம்) கட்டி இறைத்துத் தண்ணீர் பாய்ச்சுவார்கள். ஒன்றிலிருந்து 110 வரை பாடலாகப் பாடுவார்கள். அதை ஒரு மாத்து எண்பார்கள் ஒரு வரிக்கு இரண்டு மரம் ஊற்றுவார்கள். கடைசி நேரத்தில் தண்ணீர் இறைப்பது போல் வந்தால் ஆயில் மோட்டார் கொண்டு வந்து மணிக்கு இவ்வளவு என பணம் வாங்கிக் கொண்டு வயலுக்குத் தண்ணீர் விடுவார்கள்.

எப்பவும் கம்மாயில் மணிக்கணக்கில் நீந்திக் கிடக்கும் எங்களுக்கு கண்மாய்க் குளியல் அலுப்பதே இல்லை. காலையில் பள்ளி செல்லும் முன்னர் ஒரு குழுவாக கண்மாய்க்குச் சென்று ஆட்டம் போட்டு குளித்து வருவதில் எல்லோருக்கும் அலாதிப் பிரியம். அதிலும் மாட்டைக் கொண்டு போய் நீச்சிக் குளியாட்டி முனியய்யா கோவில் குங்குமம் எடுத்து அழகாக அதன் நெற்றி, திமில், வயிறு, தொடைப்பகுதி, கால், வால் என எல்லாப் பக்கமும் வைத்து நாமும் குளித்து வரும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

இப்பத்தான் நம்ம தலைப்புக்கே வாறோம்... அப்படி மோட்டாரில் தண்ணீர் அடிக்கும் போது குழாய் வழியாக சீறிப்பாயும் தண்ணீரில் குளிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. அப்படித்தன் ஒரு நாள் ஊரில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தார்கள். வாங்கடா மோட்டாரில் குளித்து விட்டு வரலாம் என்று கிளம்ப நானும் குதூகலமாக கிளம்பினேன். ஊரில் இருந்து அண்ணன் கொடுத்து விட்ட பாரின் சோப்பை அம்மாவிடம் சண்டை போட்டு வாங்கி பேப்பரைப் பிரித்து மோந்து பார்த்து சோப்பு டப்பாவில் வைத்து எடுத்துச் சென்றேன்.

'அடேய்... இது ஊருச் சோப்புடா அங்க எதுக்கு கொண்டு போறே... அடிபைப்புல குளிக்கும் போது போடலாம்... இப்ப பழைய சோப்பை எடுத்துக்கிட்டு போடான்னு' அப்போதே அம்மா கத்தினார். ஆனால் நாம யாரு அதெல்லாம் சட்டை செய்யவே இல்லை.தம்பி கூட உனக்கு எதுக்கு இந்த வேலை... பழைய சோப்பு போட மாட்டீகளோன்னு கொஞ்சமாக ஏத்திவிட்டான். இருந்தும் நாம பாரின் சோப்பு போட்டு குளிச்சா சும்மா மனமா இருக்குமுல்லன்னு தைரியமா புடிச்ச முயலுக்கு மூணுகால்தான்னு கெட்டியா நின்னு  'போம்மா... அங்கிட்டு...' என்று கத்திவிட்டு போயாச்சு. 

வேகமாக வருகிற தண்ணீரில் இறங்கி தலையை நனைத்ததும் குற்றால அருவித் தண்ணி தலையில விழுந்த மாதிரி தலையெல்லாம் சும்மா பஞ்சாய்ப் பறக்க, தண்ணிக்கு வெளியே வந்து சோப்பை எடுத்துப் போட்டுட்டு டப்பாவுல வச்சிட்டுப் போயிருக்கலாம். ஆனா தண்ணியில குளிக்கிற சந்தோஷத்துலயும் எல்லோரும் ஆட்டம் போடுறாங்களேங்கிற மிதப்புலயும் குளிச்சிக்கிட்டே சோப்பை எடுத்தா தண்ணி விழுகிற வேகத்துல கையில இருந்து நழுவி கீழ விழுந்திருச்சு. 

அய்யோ அம்மா கொல்லப் போறாங்களேன்னு கீழ உக்காந்து தேடுனா எங்க கிடைக்கிறது தண்ணீர் விழுந்த வேகத்தில் மடை வழியாக வெளியாகி வாய்க்காலில் ஒடி வயலுக்குப் போய் கொண்டிருக்கிறது. எல்லாப் பக்கமும் தேடி கண்டு பிடிக்க முடியவில்லை. இன்னைக்கு வீட்டுல நமக்கு செமப் பூஜை இருக்குன்னு வீட்டுக்குப் போக யோசிச்சு மெதுவாப் போனேன்.

என்னைப் பார்த்ததும் 'என்னடா பம்மிப் பம்மி வாறே?' என்று அம்மா கேட்டார். 'ஒண்ணுமில்லையே' என சோப்பு டப்பாவை ஜன்னலில் வைக்க, 'என்னப்பா ஆசை தீர தேய்ச்சுக் குளிச்சிட்டியா?' என்று கேட்க பதில் சொல்லாமல் உள்ளே நுழைந்தேன். 'குளிச்சானா... அதை தொலச்சிட்டான்' நம்ம தம்பி நல்ல வேலை பார்த்தான். 'என்னது போச்சா... அவன் வாங்கிக் கொடுத்து விட்டு ஒரு நா ஒரு பொழுது போட்டுக் குளிக்கல... அந்தப் புள்ள (அக்கா) கேட்டதுக்கு கூட நா கொடுக்கலை... எருமை... எருமை... போகும் போதே சொன்னேனே கேட்டியா...' என்று திட்ட ஆரம்பித்தார்.

சரி திட்டத்தானே செய்கிறார் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு... விழுந்துச்சு பாருங்க அடி... உங்க அடி எங்க அடி இல்லை... கையில என்ன கெடசசாலும் அது நம்மளை முத்தம் கொஞ்ச ஆரம்பித்தது. விளக்குமாறெல்லாம் வெளக்கமா பேசிச்சி... அப்புறம் அக்காதான் ஏதோ மனசு வந்து 'அம்மா விடும்மா... தொலச்சிட்டு வந்துட்டான் இனி என்ன பண்றது... அடிச்சி வரப்போகுதா... ' என்று அவரை சமாதானமாக்கி என்னை சாப்பிடச் சொல்லி பள்ளிக்கு அனுப்பினார்.

அதன் பிறகு ஊர்ச் சோப்பாவது ஒண்ணாவது சோப்பு போடாமலே ஆட்டம் போட்டுட்டு வந்துடுறது... எதுக்கு வம்புன்னு அம்மாக்கிட்ட ஊர்ச் சோப்பு இருந்தாக்கூட கேக்குறதில்லை. எங்க வீட்டைப் பொறுத்தவரை அப்பா அடிக்க மாட்டார். மேலும் எங்களுடன் அவர் பெரும்பாலும் இருப்பதில்லை. வேலையின் காரணமாக வெளியூரில்தான் இருப்பார். எங்களை வளர்த்து படிக்க வைக்க அலைந்து திரிந்தது எல்லாம் எங்க அம்மாதான். எங்க அம்மாவின் அதட்டலுக்கு எல்லோருக்குமே ஒரு ஆட்டம் கொடுக்கும். 

நானும் தம்பியும் கூட அம்மாவின் அடியில் இருந்து தப்பி விடுவோம். ஆனா அண்ணன்களும் அக்காக்களும் வாங்காத அடியா... பெரிய அண்ணன் வேலைக்குப் போன பிறகு பண்டிகை நாட்களில் ஊருக்கு வந்தால் யார் வீட்டுக்காவது பேசிக்கொண்டிருக்க போய் விடுவார். வீட்டுக்கு வர லேட்டானால் எங்கடா அவன்? இப்ப அங்க போயி பேசணுமான்னு கேட்டு 'டேய் கண்ணா' அப்படின்னு குரல் கொடுத்தா 'இந்தா வந்துட்டேம்மா' அப்படின்னு அடுத்த செகெண்ட் வீட்டுல இருப்பார். அம்புட்டுப் பயம் அம்மாவுக்கு.... இருந்தாலும் அம்மாவின் பாசத்துக்கு நிகர் ஏது..? 

இப்போ போன் அடித்ததும் 'யாருப்பா... குமாரா... அவனுக (சின்ன அண்ணன், தம்பி) பேசுறது நல்லாக் கேக்குது நீ பேசுறது ஒழுங்காக் கேக்காது... நல்லாயிருக்கியா... சாப்பிட்டியா' என்று அந்த வாஞ்சையான குரலைக் கேட்டதும் சோப்பைத் தொலைத்து.., மாட்டை விட்டு விட்டு தேடி,.. அக்கா தம்பியுடன் சண்டை போட்டு.., மாடு குளிப்பாட்ட முடியாதுன்னு சொல்லி... நெல் அவிக்க குதிருக்குள் எறங்கி நெல் அள்ள மறுத்து,.. நெல் அவிக்க முள் அள்ள மறுத்து,.. நெல் அரைக்கப் போக மறுத்து... இப்படி நிறைய விஷயங்களுக்கெல்லாம் வாங்கிய அடிகள்  மறந்து போகத்தானே செய்கிறது.

ம்... சொல்ல மறந்துட்டேனே... மார்கழி மாதக் குளிரில் அல்லது மழை சோவெனப் போயும் போது கண்மாய்க்குள் இறங்கிக் குளித்துப் பார்த்திருக்கிறீர்களா? மேலே ஜில்லென்றும் அடியில் இளம் சூட்டோடும் இருக்கும் தண்ணீரில் குளிப்பதே ஒரு அலாதி சுகம்தான்... இப்போதெல்லாம் கண்மாயில் நிறையும் தண்ணீரில் பாசி பிடித்துக் கொள்ள அதில் குளிப்பதே ஊரில் இருப்பர்களுக்கே அரிதாகி விட்டது, மேலும் விவசாயம் இல்லாததால் மோட்டார் வைக்கும் நிலையும் இல்லை... என்னைப் போல் சோப்பைத் தொலைக்க அப்படி ஒரு பயலுக கூட்டமும் இல்லை... எல்லாம் மாறிவிட்டது... நானும் இப்போ எல்லாத்தையும் இழந்து விட்டேன்... பசுமை இழந்த எங்கள் ஊர் வயல்களைப் போல.... 

கிராமத்து நினைவுகள் தொடரும்
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 2 அக்டோபர், 2014

வீடியோ : பாட்டும் நானே பாவமும் நானே

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர்-1-ல் அவரின் பாடல்களைப் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.  இவர் ஒரு பிறவிக் கலைஞன். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி நடிக்க கூடிய நடிகர். இன்றைய சினிமா நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி. இவரின் நடிப்பைப் பின்பற்றாத நடிகர்களே இல்லை எனலாம். அவரைப் பற்றிய சிறு குறிப்புக்களோடு அவரின் பாடல்கள் சிலவற்றைக் காணலாம்.

* செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் விழுப்புரத்தில் 01/10/1928 அன்று சின்னையாப்பிள்ளை - ராஜாமணி அம்மா அவர்களின் மகனாப் பிறந்தார்.


படம் : திருவிளையாடல்
பாடல் : பாட்டும் நானே பாவமும் நானே...


* சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற நாடகத்தில் இவரது நடிப்பைப் பார்த்து வியந்த பெரியார் அவர்கள் 'சிவாஜி' கணேசன் என்று அழைக்க அதுவே நிலையானது.

* சிவாஜியின் முதல் படம் கலைஞரின் கதை வசனத்தில் வெளியான 'பராசக்தி'. 


படம் : கர்ணன்
பாடல் : உள்ளத்தில் நல்ல உள்ளம்...


* சிவாஜி  தமிழில் 270 படங்களிலும். தெலுங்கில் 9, இந்தியில் 2, மலையாளத்தில் 1 என மற்ற மொழிகளிலும்  நடித்திருக்கிறார். 19 படங்களில் கௌரவத் தோற்றத்தில் வந்திருக்கிறார்.

*நல்ல குரல் வளமும் தெளிவான உச்சரிப்பும் இவரின் சிறப்பு அம்சங்களாகும்.


படம் : கௌரவம்
பாடல் : கண்ணா நீயும் நானுமா...


* வீரபாண்டிய கட்டபொம்மன், மனோகரா போன்ற படங்கள் வசனத்திற்குப் புகழ் பெற்றவை. 

* இவரின் நடிப்பு மிகையானது என்று கூட சொல்லுவார்கள். ஒருவேளை நாடகத்தில் இருந்து வந்ததால் அந்த நடை, மிகை எல்லாம் வந்திருக்கலாம்.


படம் : ராஜபார்ட் ரங்கதுரை...
பாடல் : அம்மம்மா தம்பி என்று நம்பி...


* தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சி ஆரம்பித்து அரசியலில் ஜெயிக்க முடியாமல் ஒதுங்கினார்.

* பிலிம்பேர், பத்ம ஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதா சாகேப் பால்கே, கெய்ரோ சிறந்த நடிகர் போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


படம் : பாபு
பாடல் : இதோ எந்தன் தெய்வம்...


* இந்தியக் கலாச்ச்சாரத் தூதுவாராக அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். இவரைக் கவுரப்படுத்தும் விதமாக நயாகரா நீர் வீழ்ச்சியின் ஒருநாள் மேயராக நியமிக்கப்பட்டார்.

* தமிழ் சினிமாவில் முதன் முதலாக பெரிய அளவில் கட் அவுட் வைக்கப்பட்டது இவருக்குத்தான். வணங்காமுடி படத்துக்காக முதல் கட் அவுட் வைக்கப்பட்டது.


படம் : படித்தால் மட்டும் போதுமா
பாடல் : பொன் ஒன்று கண்டேன்...



* தந்தைப் பெரியார் வேடத்தில் நடிக்க விரும்பினார் ஆனால் கடைசி வரை அந்த ஆசை நிறை வேறவில்லை.

* கமலஹாசனை தனது மகனாகத்தான் பார்த்தார். தனது கலையுலக வாரிசாக கமலைத்தான் குறிப்பிட்டார்.


படம் : வியட்நாம் வீடு
பாடல் : உன் கண்ணில் நீர் வழிந்தால்...


* கலைஞரை 'மூனா கானா' என்றும் எம்.ஜி.ஆரை 'அண்ணன்' என்றும் ஜெயலலிதாவை 'அம்மு' என்றும் அழைப்பாராம்.

* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் 'கூண்டுக்கிளி'.


படம் : தாய்க்கு ஒரு தாலாட்டு
பாடல் : ஆராரிரோ பாடியதாரோ...




* இவரது வாழ்க்கைத் துணைவியார் பெயர் கமலா, ராம்குமார், நடிகர் பிரபு, சாந்தி மற்றும் தேன்மொழி என நான்கு மக்களைப் பெற்றவர்.

* 2001 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று தனது 72 வது வயதில் மறைந்தார்


படம் : முதல் மரியாதை
பாடல் : பூங்காற்று திரும்புமா...


சிம்மக்குரலோனின் பாடல்களை ரசித்திருப்பீர்கள். மீண்டும் சிறப்பான பாடல் பகிர்வில் சந்திப்போம்.

குறிப்புக்கள் திரட்ட உதவிய தமிழ் விக்கிபீடியா, ஆனந்த விகடனுக்கு நன்றி.
பாடல்களைக் கொடுத்த யூடிப்புக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.