வெள்ளி, 22 செப்டம்பர், 2023

மதுரை கேலக்ஸி பதிப்பகம் நடத்தும் முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி - 2023

சென்ற வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட கேலக்ஸி பதிப்பகம், இந்த ஓராண்டுக்குள் பல நூல்களை - குறிப்பாக அரபி மொழியில் பாரதி கவிதைகள், ஆத்திசூடி, இலங்கையின் பிரபலமான எழுத்தாளர் காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீனின் மைவண்ணம் இராமகாவியம் - வெளியிட்டு பதிப்புத் துறையில் தனக்கென இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலும் பல வளர்ந்த, வளரும் எழுத்தாளர்களின் படைப்புக்களை எந்தவித எதிர்பார்ப்புமின்றி புத்தகமாக்குவதையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

எழுத்தையும் எழுத்தாளர்களையும் நேசிக்கும் கேலக்ஸி, மண் சார்ந்து எழுதும் எழுத்தாளர் ஒருவருக்கு ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாள் - பதிப்பகம் ஆரம்பித்த நாள் - ஆண்டு விழாவில் 'பாண்டியன் பொற்கிழி' - கேடயமும், சட்டகமிட்ட சான்றிதழும், பணமுடிப்பும் - என்னும் விருதை வழங்க இருப்பதாக அறிவித்து, அதைத் தனது முதலாமாண்டு விழாவிலேயே தொடங்கியும் வைத்திருக்கிறது.

யார் வேண்டுமானாலும் கேலக்ஸியில் தங்கள் புத்தகங்களைக் கொண்டு வரலாம், ஒரே ஒரு நிபந்தனைதான்... தாங்கள் அனுப்பும் உங்களது படைப்புகள் கேலக்ஸியின் குழுவால் வாசிக்கப்பட்டு, அந்தப் படைப்பு பிடிக்கும் பட்சத்தில் கேலக்ஸி உங்களின் படைப்பைக் கொண்டு வரும். அதற்கென எந்தக் கட்டணமும் பெறுவதில்லை. அப்படிப்பட்ட கேலக்ஸி எழுத்தாளர்களுடனான தனது நெருக்கத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகமாக்கும் வகையில் ஒரு உலகளாவிய சிறுகதைப் போட்டியினை அறிவித்திருக்கிறது. நமது சிறுகதை எழுத்தாளர்கள் எல்லாரும் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். களத்தில் இறங்குங்க. கலக்குங்க.

விபரங்கள் கீழே

மொத்தப் பரிசுத்தொகை : ரூ. 12000 

முதல் பரிசு : ரூ. 5000

இரண்டாம் பரிசு : ரூ. 3000

மூன்றாம் பரிசு : ரூ. 2000

சிறப்புப் பரிசு ( இருவருக்கு) : ரூ. 1000

இறுதித்தேதி : 20/10/2023

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : galaxybs2022@gmail.com


விதிமுறைகள் :

      கதைகள் 1200  முதல் 1500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.

• கதைக்களம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக மற்றவர்களின் மதங்களைப் புண்படுத்தும், இழிவுபடுத்தும் கதைகளாக இருக்கக் கூடாது. அப்படியான கதைகள் நிராகரிக்கப்படும்.

• கதைகளை மின்னஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும். கண்டிப்பாக யுனிகோட் (Unicode) எழுத்துருவில் World பைலாகத்தான் அனுப்பவேண்டும். தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

• கதை உங்களது சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். பிறரது கதைகளையோ, மொழிபெயர்ப்புக் கதைகளையோ, இதற்கு முன் பத்திரிக்கைகளிலோ இணைய இதழ்களிலோ வெளியான கதைகளையோ அனுப்பக் கூடாது. 

    ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்பலாம்.

• பரிசுத்தொகை பணமாகவோ,  புத்தகமாகவோ (வெற்றி பெற்றவர் விருப்பத்தின் பேரில்) வழங்கப்படும்.

•     இறுதி நாளுக்குப் பின் கால நீட்டிப்பு செய்ய இயலாது என்பதால் அதற்குப் பின்வரும் கதைகள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

    யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ளலாம், வயது வரம்பு இல்லை.

•    போட்டிக்கான கதை தங்களது சொந்தப் படைப்பே, வேறு இதழ்களுக்கோ, போட்டிகளுக்கோ அனுப்பப்படவில்லை, போட்டி முடியும் வரை வேறு எதற்கும் அனுப்பமாட்டேன் என்ற உறுதிமொழி கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். அப்படி அனுப்பியது தெரிய வந்தால் தங்கள் கதை போட்டியில் இருந்து நீக்கப்படும்.

• தங்களது முகவரி மற்றும் செல்போன் எண்ணை மறக்காமல் மின்னஞ்சலில் குறிப்பிட வேண்டும்.

•   இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் கதைகள் எங்கள் பதிப்பத்தில் புத்தகமாக வெளியிடப்படும்.

   இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் கதையை எழுதிய எழுத்தாளர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.

•    போட்டி முடிவுகள் நவம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.

•     நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


-பரிவை சே.குமார்

திங்கள், 18 செப்டம்பர், 2023

மனசு பேசுகிறது : 'தூங்காநகர் நினைவுகள்' நூல் திறனாய்வுக் கூட்டம்


நேற்று மாலை துபை கராமாவில் நிகழ்ந்த எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணனின் 'தூங்காநகர் நினைவுகள்' நூல் திறனாய்வுக் கூட்டத்துக்குச் செல்ல இறுதிவரை தீர்மானிக்கவில்லைதான். பால்கரசுக்கு காய்ச்சல் என்பது ஒரு பக்கம் என்றாலும் வாராவாரம் எங்காவது போய்விடுகிறோம், முடிக்க வேண்டிய வேலைகள் அப்படியே இருக்கின்றன், விடுமுறை நாளில் வீட்டுக்குப் பேசுவதும் முடியாமல் போகிறது, அதுபோக சென்ற வாரம் மருத்துவமனை சென்று வந்த நிலையில் இவ்வளவு தூரம் போய் வர வேண்டுமா..? என்ற நினைப்பு எனப் போகும் எண்ணத்தைக் குழப்பமான மனநிலை பிடித்து நிறுத்தி வைத்திருந்தது. பாலா போறீங்களா எனக் கேட்டபோதும் ராஜா வாங்கண்ணே போகலாம் என்று சொன்னபோதும் போவது குறித்து எதுவும் சொல்லவில்லை.

ஒவ்வொரு வார இறுதியிலும் கேலக்ஸி பதிப்பகத்தின் தற்போதைய, இனிமேல் செய்ய இருக்கின்ற பணிகள் குறித்துப் பேசுவதை நாங்கள் வாடிக்கையாக்கி வைத்திருக்கிறோம். சென்ற வாரத்தில் பாலாஜி அண்ணனும் பிலாலும் அபுதாபி வந்து பதிப்புக்குச் செல்ல வேண்டிய முக்கியமான புத்தகம் குறித்தும், கேலக்ஸி இனிச் செய்ய இருப்பவற்றைப் பற்றியும் பேசிச் சென்ற நிலையில் இந்தக் கூட்டத்துக்கு வந்தீங்கன்னா சில விசயங்களைப் பேசி முடிவெடிக்கலாம், முடிக்கலாம் கிளம்பி வாங்கப்பா என அண்ணன் சொன்னதைத் தொடர்ந்து, பால்கரசுவை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டுப் பேருந்தில் கிளம்பினோம். நாங்கள் பர்ஜ்மான் சென்டரை அடைந்தபோது பாலாஜி அண்ணனும் வந்து சேர்ந்தார். மாலுக்குள் இருக்கும் காபிக்கடையில் ஹாட் காபி சாப்பிட்டபடி அமர்ந்து அடுத்தடுத்துச் செய்ய வேண்டியவை பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது அரசியல் கூட்டத்துக்கு வருவதைப் போல் கரைவேட்டியில் வந்து சேர்ந்தார் பிலால். பேச்சு தொடர்ந்தது. அதன் பின் 'தூங்காநகர் நினைவுகள்' விழா நிகழிடத்துக்குச் சென்றோம்.
அங்கு நண்பர்கள் பலர் வந்திருந்தார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு சகோதரர் வேல் முருகனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எப்பவும் போல் எல்லாருடனும் பேசிக் கொண்டிருந்த போதும் காலையில் பிடித்த தலைவலியின் தீவிரம் கூடிக் கொண்டே போனதால் பாலாஜி அண்ணனின் காரில் இருந்த தலைவலி மாத்திரை ஒன்றை போட்டுக் கொள்ளலாமென நானும் ராஜாவும் காருக்குப் போனோம். கொஞ்ச நேரத்தில் விழா ஆரம்பிச்சிருச்சு வாங்கடா எனப் போன் வர, நாங்கள் அரங்கிற்கு வந்த போது மருமகள் பூர்ணிகா தமிழ்த்தாய் வாழ்த்தை முடித்திருக்க, விழா ஒருங்கிணைப்பாளர் ஆசிப் மீரான் அண்ணன் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நூலைப் பற்றி எழுவர் பேச இருந்தார்கள். முதலில் அழைக்கப்பட்டவர் அமீரகத்தின் திராவிடப் போர்வாள் பிலால் அலியார் அவர்கள். மேடையேறியதும் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணனை அழைத்து மதுரை கேலக்ஸியின் சார்பில் அவருக்கு ஒரு பொன்னாடை போர்த்தினார். அதன்பின் மதுரை குறித்து எழுதப்பட்டிருக்கும் தூங்காநகர் நினைவுகள் குறித்து மதுரைக்காரனான என்னைப் பேச அழைத்ததற்கு நன்றி என்று சொல்லி ஆரம்பித்தார். வீட்டை ஒட்டி ஓடும் முல்லைப் பெரியாறு கால்வாயில் பள்ளிக் காலத்தில் அப்பா, தான், அம்மா எல்லாரும் குளித்தது, இப்போது அவரின் மகள் குளிக்க வேண்டுமென அடம்பிடிப்பது எனச் சொல்ல ஆரம்பித்து, அன்று ஓடிவந்த தண்ணீருக்கும் இன்று கழிவுகளைச் சுமந்து வரும் தண்ணீருக்குமான காரணத்தையும் சொன்னார். அவர்களின் கல்லூரியும் அந்தக் கால்வாயை ஒட்டி இருப்பதையும் சொல்லி, மதுரையில் இருக்கும் பல விசயங்களைத் தாங்கள் அறிந்திருக்கவில்லை, அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் சிறுவயதில் கிடைக்கவில்லை என்பதைச் சொல்லி, முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுக் பற்றி நீண்ட நேரம் பேசி, அவருக்கு மேலூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் சிலை குறித்துச் சொல்லி, பக்கத்து ஊர்களில் எல்லாம் முல்லைப் பெரியாரில் இருந்து வரும் தண்ணீரால் இரண்டு போகம் விளையும் போது மேலூர் மட்டும் ஒரு போகம்தான் விளையும் என்றாலும் மதுரைக்காரர்களே மேலூர்க்காரனைப் பார்த்தால் பயப்படுவாய்ங்க எனச் சொல்லி, திருப்பரங்குன்றத்தில் இருக்கும் மணி, மீனாட்சி அம்மனுக்கு கிறிஸ்தவ மிஷனரி மின்சாரம் கொடுத்தது என நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதையும் சொல்லி தன் பேச்சை முடித்துக் கொண்டார்.

அடுத்ததாகப் பேச வந்த எழுத்தாளர் சிவசங்கரி வசந்த் அவர்கள், நான் முன்னால் அமர்ந்திருந்ததால் என்னய உடனே கூப்பிட்டுட்டீங்க அண்ணாச்சி என்றபடி ஆரம்பித்தார். திருநெல்வேலியில் பிறந்து கோயம்பத்தூரில் படித்தபோது தனது ஊருக்கும் கோவைக்குமான பயணத்தில் முக்கிய இடமாக இருந்தது மதுரை என்றும், இரவில் கூட பகல் போல் காட்சியளிப்பதுடன் அந்த மக்கள் சோர்வில்லாமல் இருப்பதையும் சொல்லி, எதாவது பொருள் வாங்காமல் தன்னை அவர்கள் விட்டதில்லை என்றும் சொன்னார். அதன்பின் வறுமை, பஞ்சம், ஈசல் குறித்துப் பேசி, தனது தாத்தா ரயில்வேயில் இஞ்சினியராய் இருந்தவர் என்றும் அவர் அந்த வேலைக்குப் போகக் கூடாதென வீட்டில் எதிர்ப்புத் தெரிவித்ததற்கான காரணம் என்ன என்பதையும் சொல்லி முடித்துக் கொண்டார். இவர் பேசும் போது படபடப்புடன் பேசுவது போல் இருந்தது. இதை சுரேஷ் அண்ணன் கூட வி.எல்.சி பிளேயர்ல 1.25எக்ஸ்ல பாட்டுக் கேட்டதுமாதிரி இருந்தது என்றார். இருப்பினும் அடுத்தடுத்துப் பேசிய சிலரின் குரல்கள் கூட அப்படித்தான் இருந்தன என்பதால் ஒருவேளை அங்கு பயன்படுத்தப்பட்ட ஆடியோ சிஸ்டத்தில் ஏதும் குறை இருந்திருக்கலாமோ என்றும் தோன்றியது.

அடுத்துப் பேச வந்த எழுத்தாளர் நசீமா ரசாக் அவர்கள், நான் இதுவரை மதுரைக்குச் சென்றதில்லை என்று ஆரம்பித்தார். முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பசுமை நடை குறித்துப் பேசி இது அவர்களின் பதினான்காவது வருடம் எனச் சொல்லி வாழ்த்துக்களைச் சொன்னார். பயணங்களின் காதலன் முத்து அண்ணா, அவரிடம் பேசும்போது நிறைய விசயங்களைச் சொல்வார் என்றதுடன் மலைகளில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் - இவர் கோட்டோவியம் என்றார், ஆனால் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் தனது ஏற்புரையில் அது கோட்டோவியம் அல்ல பாறை ஒவியங்கள் எனச் சொன்னார் - குறித்து விரிவாகப் பேசினார்.
அதன்பின் பேச வந்த எழுத்தாளர் ஜெஸிலா பானு அவர்கள், மதுரை மக்களின் உபசரிப்பு எப்படிப்பட்டது..? அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதையெல்லாம் சொல்லி, தனது மகள் அவரின் நண்பர் பாலாஜி பாஸ்கரன் வீட்டுக்குப் போனபோது அவரின் பெற்றோர் உபசரித்த விதத்தைச் சொல்லி ஆச்சர்யப்பட்டார். கான்சாகிபு பற்றி நிறையப் பேசினார். அவரை எப்படிக் கொன்றார்கள் என்பதையும் இறந்த பின்னும் அவரின் உடம்பைக் கூறு போட்டு ஒவ்வொன்றையும் ஒவ்வொரு இடத்திலும் புதைத்தார்கள் என்பதையும் சொன்னார். இந்தப் புத்தகம் ஒரு ஆவணம் என்பதால் இதைப் பள்ளி, கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும் என்று சொன்னார். இந்த விழாவை ஏற்பாடு செய்த எஸ்.எஸ்.மீரான் வந்திருந்தால் இதை அவரிடம் சொல்லியிருப்பேன் என்று சொன்னவர் விழாவுக்கு வந்திருந்த மற்றொருவரிடம் - பேர் தெரியவில்லை - முதல்வரிடம் கொண்டு செல்லுங்கள் எனக் கோரிக்கையாகவும் வைத்தார். கான்சாகிபு பற்றிப் பேசும் போது நட்புக்குத் துரோகம் இழைக்காதீர்கள், உண்மையாகப் பழகுங்கள் என்பதையும் வலியுறுத்தினார். பஞ்சத்தில் சோறு போட்ட விலைமாதான குஞ்சரத்தம்மாள் பற்றிப் பேசினார். எல்லா அத்தியாயத்திலும் கேள்விகள் வைத்த எழுத்தாளர் கான்சாகிபு அத்தியாயத்தில் மட்டும் ஏன் கேள்விகள் வைக்கவில்லை என்று கேட்டார்.
அடுத்துப் பேச வந்தவர் எழுத்தாளர், கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட சசிகுமார் அண்ணன் அவர்கள், அவருக்கும் மதுரையுடன் அவ்வளவு தொடர்பு இல்லை என்பதைச் சொல்லி என் மனைவி மதுரையில் பிறந்தவர் என்பதான தொடர்பு எனக்குண்டு என்று சொன்னார். இந்த முறை மதுரைக்குப் போனபோது பசுமைநடைக்குப் போனதையும் அப்போது தாமரைக்குளத்தில் அவரையும் அவரின் மகன் அரவிந்தையும் அமர வைத்து, செல்போனில் போட்டோ எடுத்துக் கொடுத்துவிட்டு இந்த ரம்மியத்தை ரசித்துவிட்டு இத்தனை மணிக்கு வாருங்கள் என்று சொல்லிச் சென்றதையும், அதிகாலை விடியலை அங்கு அமர்ந்து பார்த்த சந்தோசத்தையும் சொன்னார். மதுரையில் நடக்கும் விழாக்களில் மாற்று மதத்தினரும் கலந்து கொள்வதையும் அவர்கள் எங்கள் தெருவில், எங்கள் உறவுகள் நடத்தும் விழாவென மகிழ்வோடு நீர், மோர் என வழங்குவதையும் கண்கூடாகப் பார்த்தைச் சொன்னார். எல்லாத் தெருக்களிலும் விசேசங்கள் நிகழ்ந்ததைப் பார்க்கும் போது அத்தனை மகிழ்வாக இருந்தது என்றார். இந்த நேசம், இந்தப் பிணைப்பு வேறு எங்கும் பார்க்க முடிவதில்லை என்றும் சொன்னார். அவர் டெல்லி சென்ற போது கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து வருபவர்கள் சென்ற மினி லாரி போன்ற ஒன்றில் இருந்தவர் செய்த அட்டகாசங்களைப் பற்றிப் பேசினார். மூவாயிரம் வருடங்கள் முன்னே போய் எழுதிய முத்துக்கிருஷ்ணன் அவர்கள் இன்னும் மூவாயிரம் வருடம் பின்னே போய் மற்ற மாவட்டங்களையும் பற்றி எழுத வேண்டும் என்று கேட்டு என முடித்துக் கொண்டார்.


இறுதியாக எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத் அவர்கள் பேச வந்தார். துபைக்கு வருமுன் ஒரு வருடம் மதுரையில் வேலை பார்த்ததையும், மதுரை முழுவதும் சுற்றி வந்ததையும், தங்கள் அலுவலகத்தில் வேலை பார்த்தவர்களின் குடும்ப விழாக்கள், திருவிழாக்களில் கலந்து கொண்டதையும், அந்த மக்கள் சுபநிகழ்ச்சி என்றால் ஆடு வெட்டிச் சமைப்பார்கள் எனபதையும் சொல்லி,இன்றைக்கு நாட்டில் தடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது இதையெல்லாம் பார்க்கும் போது நாம் சார்ந்த மதத்தின் மீது நம்பிக்கை போய் விடுகிறது என்றார். முத்துக்கிருஷ்ணனுடனான தனது நட்பையும், அவரைப் பற்றி ஷைலஜாவிடம் சொன்னதையும் சொல்லி எல்லாருமே எல்லா விசயத்தையும் பேசிட்டாங்க இனி நான் புதிதாகச் சொல்ல எதுவுமில்லை என்று சொல்லி இன்னும் சில பொதுவான விசயங்காளைப் பேசி முடித்துக் கொண்டார்.
எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கு ஜெஸிலா பானு அவர்கள் ஒரு அழகான நினைவுப் பரிசை வழங்கினார். அப்போதுதான் அட்டைப் பெட்டிக்குள் இருந்து பிரித்துக் கொடுத்த பரிசு என்பதால் சுரேஷ்பாபு அவர்கள், அது என்ன பரிசு எனபதைக் காட்டுங்கள் என்று சொன்னபோது அதெல்லாம் எல்லாரும் தெரிந்த பரிசுதான் என முத்துக்கிருஷ்ணன் அவர்கள் சொன்ன பதில் எல்லாருக்குமே மனவருத்தத்தைக் கொடுத்திருக்கலாம், குறிப்பாக சுரேஷ் அண்ணனுக்கு. அதைத் தூக்கிக் காட்டியிருக்கலாம். அதேபோல் பேச இருந்த எழுவரில் ஒருவர் வராத நிலையில் சுரேஷ் அண்ணன் கூட பேசியிருக்கலாம். எப்போதும் குழும விழாக்களில் பேசுபவர்தானே அவர்.
திரு.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் தனது ஏற்புரையில் இந்த தூங்காநகர் நினைவுகள் என்பது மதுரைக்கு மட்டுமான புத்தகம் அல்ல, அதைச் சுற்றி இருக்கும் பல மாவட்டங்களுக்கான புத்தகம்தான் என்றும், பசுமை நடை குறித்தும் இந்தப் பதினாலு வருடத்தில் அதற்கென தாங்கள் பட்டிருக்கும் பாடுகளையும் கிட்டத்தட்ட பதினோரு வருடங்களாகத் தொடர்ந்து எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் கான்சாகிபு பள்ளி உள்ளிட்ட சில இடங்களைப் பார்ப்பதற்கு இதுவரை தங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதையும் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.
மேலும் கொரோனா காலத்தில் தாங்கள் வசூலித்த பணங்களை வைத்து உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் யார், இதை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாகச் செயல்பட்டு பூம்பூம் மாட்டுக்காரர்கள், தெருவில் தங்கள் மேல் சாட்டையால் அடித்துக் கொண்டு யாசகம் பெறுபவர்கள், திருவிழாக்களில் தள்ளுவண்டிகளில் கடை போடுபவர்கள் என மளிகைச் சாமான்களைக் கொண்டு சேர்த்ததையும், அவர்களைப் போய் பார்க்கும் போது அவர்களின் வாழ்வின் இன்னொரு பக்கத்தை அறிய முடிந்ததையும் நரிக்குறவர்களுக்கு ஒரு செண்ட் நிலம் சொந்தமாய் இருப்பதையும் அதை திரு. சகாயம் ஐ.ஏ,எஸ் அவர்கள் செய்ததையும் சொன்னதுடன் அந்த மக்கள் தனித்தனியே வீடு கட்டாமல் அவர்கள் எப்பவும் இருப்பது போல் கூட்டமாய்த்தான் இருக்கிறார்கள் என்பதையும் சொன்னார். அதேபோல் திருவிழாக்களில் கடை போடுபவர்களில் ஆண்கள் எல்லாம் ஏதாவதொரு கேஸில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதையும் அவர்களுக்காக ஒரு கம்யூனிச வழக்கறிஞர் போராடி வருவதையும் பகிர்ந்து கொண்டார். மேலும் கொரானாவால் தமிழகத்துக்கு முதல் பலியாய் மதுரையில் நிகழ்ந்த ஒரு இஸ்லாமியரின் மரணம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.


தூங்காநகர் நினைவுகளை இன்னும் விரித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்ததையும், எழுத்தாளனே மிகச் சிறந்த சோம்பேறி என்பதால் அது நிகழவில்லை என்பதையும் சொல்லி, இதை இன்னும் விரிவாக எழுத வேண்டும், அதுவும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் எனச் சொன்னார். அப்போது திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய தொல்லியல் நூலைப் பற்றியும் அதில் தனது பங்கும் கொஞ்சம் இருப்பது குறித்தும் அதற்காக எப்படி அவர் உழைத்தார் என்பதையும் அது ஆங்கில நூலாக எல்லா இடத்திலும் எப்படிச் சென்று சேர்ந்திருக்கிறது என்பதையும் சொன்னார். மேலும் தனது காலத்து மதுரையை, அதாவது 1948க்குப்பின்னான மதுரையைக் குறித்து தூங்காநகர் நினைவுகள் தொகுதி இரண்டை இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள், காலம் வாய்ப்பளித்தால் எழுதி முடிக்க வேண்டும் எனச் சொன்னார். அதற்கான குறிப்புகள் முப்பதுக்கு மேல் தன் கைவசம் இருப்பதாகச் சொன்னார்.
கோட்டோவியங்கள் அதாவது பாறை ஓவியங்கள் நம்நாட்டில் பாதுகாக்கப்படாமல் இருப்பதையும் மற்ற நாடுகள் அவற்றை எப்படிப் பாதுகாக்கின்றன, அவற்றை சுற்றுலாத்தளங்களாக எப்படி மாற்றி வைத்திருக்கின்றன என்பதையெல்லாம் சொல்லி நாம் பாதுகாக்கவில்லை என்பதை வருத்தத்துடன் சொன்னார். மேலூருக்கு அருகில் இருக்கும் கீழவளவு என்னும் ஊரில் மலைகளை எல்லாம் வெட்டி எடுத்து பெரு ம்பெரும் குழிகளாகப் போட்டு வைத்திருப்பதுதான் ஞாபகத்தில் வந்தது. அப்படியான ஒரு நிலை கீழ்க்குயில்குடியிலிருக்கும் மலைகளுக்கும் வந்துவிடக்கூடாது எனத் தோன்றியது. ஏனென்றால் கீழ்க்குயில்குடியில் இருக்கும் மலைகளைக் குறித்தும் அங்கிருக்கும் பாறை ஓவியங்கள் குறித்தும் சிலாகித்தார். அப்போது அந்த மலைகளைப் பார்த்துக் கொள்ள, மத்திய அரசு ஊழியர் ஒருவர் இருப்பதாகவும் ஒரு ஊழியருக்கு கிட்டத்தட்ட இருபது மலைகள் என நிர்ணயித்திருப்பது குறித்தும் அவர்களுக்கு 1200 ரூபாய் சம்பளம் என்பதைப் பற்றியும் சொன்னார். திருப்பரங்குன்றம் மலையில் வேலை பார்த்த பெருமாள் என்பவர் இப்போதும் இங்கு வராமல் என்னால் வீட்டில் இருக்கமுடியாதெனத் தினமும் மலைக்கு வருவதையும் சொன்னார்.
தான் இருபத்தி ஓரு வயது வரை தமிழ் படிக்கவில்லை என்றும் தனது பெற்றோர் தன்னை தமிழ் படிக்க வைக்க் நினைத்தபோதும் அது நடக்கவில்லை என்றும் மும்பையில் இருந்தாலும் இந்தியை இரண்டாவது மொழியாகத்தான் படித்ததாகவும் சொன்னவர், இருபத்தியோரு வயதில் மதுரையில்தான் வாழ்க்கை என்ற போது சில காரணங்களுக்காகத் தமிழைப் படிக்க் ஆரம்பித்தேன். அதன்பின் அதில் லயித்து நான் எழுத்தாளனாய் மாறினேன். எனது முப்பதெட்டாவது வயதில்தான் மதுரையைக் குறித்து, அதன் பாறை ஓவியங்கள் குறித்துத் தெரிந்து கொண்டேன் என்றார். பென்னிகுக் குடும்பத்துடன் தான் நட்பாய் இருப்பதையும், அவர்கள் வருடா வருடம் கம்பத்தில் வைக்கப்படும் பொங்கல் குறித்தும் அதற்கு பென்னிகுக்கின் வாரிசுகள் வருவது பற்றியும் சொன்னார். அதேபோல் ஒரு தேவலாயத்தில் இருக்கும் சமாதி குறித்தும் அது அத்தேவாலயத்தின் கீழே இருப்பதையும், படியிறங்கி உள்ளே போனால் பத்து பேர்தான் நிற்க முடியும் என்பதையும் அந்த இடத்துக்குச் செல்லவும் அனுமதி இல்லை என்றும் சொன்னார்.
தன் வாழ்நாளுக்குள் பாறை ஒவியங்கள் இருக்கும் இடங்களைப் பற்றிய தகவல் பலகையேனும் அந்தந்த இடங்களில் நிறுவ வேண்டும் என்ற ஆசையையும் அதை எப்படியும் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் சொன்னார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இந்த வருடம் புதிதாய் வந்த மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வை பசுமை நடையில் பாறை ஓவியங்கள் நிறைந்த ஒரு மலையடிவாரத்தில் வைத்ததைச் சொன்னார்.
தூங்காநகர் நினைவுகள் கட்டுரையை ஆனந்த விகடனில் எழுதிய போது பலர் தனக்கு அது குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகங்கள், படங்கள் எனக் கொடுத்து உதவியதையும், ஒருவர் இந்த இடத்தில் நீங்கள் இதை விட்டு விட்டீர்கள் எனப் போன் பண்ணியதையும் வெளிநாட்டில் இருந்து மதுரையைப் பற்றி ஆங்கிலேயர் வரைந்த இந்த ஓவியங்கள் உங்களுக்கு உதவுமென அனுப்பியதைப் பற்றிப் சொன்னார். அப்போது தான் பல பேராசியர்களிடம் போய் தனக்குத் தெரியாத விபரங்களை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டதையும் இன்று வரை தான் ஒரு மாணவனாய் கற்றுக் கொண்டிருப்பதையும் தனது பேச்சில் சொன்னார். கீழடி பற்றிச் சொல்லி அதைக் கண்டிப்பாக எல்லாரும் பார்க்க வேண்டும் என்றார். இந்தப் புத்தகம் எழுத கிட்டத்தட்ட 90 புத்தகங்களையும் ஆவணங்களையும் தான் வாசித்ததாகச் சொன்னார். வரலாறு அல்ல என்றாலும் வரலாற்றில் இருந்து எடுத்து என் பாணியில் நான் கொடுத்திருப்பதுதான் இப்புத்தகம் என்றார்.


பவா செல்லத்துரை கொடைக்கானலில் இருந்து தனது டிரைவருடன் சூட்டிங்கில் இருந்த போது எங்காவது போகவேண்டும் எனச் சொல்லி மதுரைக்கு வந்து எம்.ஏ.பெருமாள் அவர்களைத் தூரத்தில் இருந்த பார்த்துச் சென்றதையும் அவ்வளவு தூரம் வந்தும் அவரை அருகில் போய் பார்த்துப் பேசாமல் போனதற்கான காரணமாய் பவா சொன்னதையும் சொன்னார். சசி அண்ணன் மூவாயிரம் ஆண்டு இருக்கச் சொன்னதுக்குப் பதிலாய் நான் மதுரையை எழுதிட்டேன். நீங்க மூவாயிரம் வருடம் இருந்து உங்க மாவட்டங்களைப் பற்றி எழுதுங்கள் என்றும் சொன்னார்.
இப்படியாக இன்னும் நிறைய விசயங்களைப் பேசிய முத்துக்கிருஷ்ணன் அவர்களிடம் முத்துக்குமரன், அசோக் அண்ணன் போன்ற சிலர் நல்ல கேள்விகளைக் கேட்டார்கள், அதற்கான பதிலும் சிறப்பாக வந்தது. தமிழாசிரியை சோபியா அவர்கள் தனது மாணவர்கள் ஊருக்குப் போகும் போது கீழடிக்குப் போய் வந்து அது குறித்துப் பேசும், எழுதும் மாணவர்களுக்கு முழுமதிப்பெண் கொடுப்பதையும் சொன்னபோது கைதட்டலால் அரங்கு நிறைந்தது. இன்னுமொரு தமிழாசிரியை குழந்தைகளிடம் கேட்பது போல் இந்தப் புத்தகத்துக்காக நீங்க எத்தனை புத்தகங்களை ஆய்வு செய்தீர்கள் என்ற கணக்கு எனக்கு வேண்டும் என்றார். எதற்காக அவர் அப்படிக் கேட்டார் என்பது எனக்கு இதுவரை புரியவில்லை. மற்றவர்களுக்கு ஒருவேளை புரிந்திருக்கலாம்.
ஆசிப் அண்ணன் எப்பவும் போல் பேசியவர்கள் சொன்னதில் இருந்து சிலவற்றை எடுத்து தன் பாணியில் பேசினார். நிகழ்வுக்கு குறைவான ஆட்களே வந்திருந்தாலும் சிறப்பாக இருந்தது. புத்தகங்களுக்கு நிர்ணயித்திருந்த விலை சற்றே அதிகம்தான் என்றாலும் எழுத்தாளருக்காக நானும் ஒரு புத்தகத்தை வாங்கி, அவரிடம் கையொப்பமும் பெற்று வந்தேன்.
பேசியவர்களுக்கு எழுத்தாளரின் கீழடி குறித்த புதிய புத்தகம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. எப்பவும் போல் சுபான் அண்ணன் வெகு சிறப்பாக போட்டோக்கள், வீடியோ எடுத்தார். அவருக்கு இணையாக கலைஞன் நாஷ்-ம் முகநூல் லைவ் போட்டுக் கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். பூர்ணிகா கூட வீடியோ உதவியாளராய் இருந்தது.
விழா முடிந்த பின் எப்பவும் போல் நாங்கள் - ஜெஸிலா மேடம், பாலாஜி அண்ணன், பிலால், ராஜாராம் - பால்கரசு மட்டும் மிஸ்ஸிங் அந்த இடத்தில் நண்பர் பாலாஜி முருகேசன் என பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்ஸில் மிகச் சிறப்பான இரவு உணவை சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருந்தோம். தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் அவர்களின் தம்பிதான் கடையின் முதலாளி. நம்ம காரைக்குடிக்காரர் என நெருக்கமாய் பேசினார். முட்டைமாஸ் குறித்து அவருக்கு பாலாஜி அண்ணால் மிகப்பெரிய விளக்கம் கொடுக்கப்பட்டது. ரொம்ப நெருக்கமாகப் பேசினார்.
எல்லாம் முடிந்து கடைசியாக வெளியில் வரும்போது 'உங்க கரை வேட்டியைப் பார்த்துத்தான் நெருக்கமாய் பேசினேன்' என அவர் சொன்னதும் 'ஆமா அதான் அம்மா படம் எடுக்கப் போனீங்க..?' எனப் பிலால் பட்டெனச் சொல்ல 'அது தொழிலுங்க' என்றார் பரிதாபமாய்.

இரவு மீண்டும் பேருந்தில் பயணிக்க வேண்டுமென நினைத்த போது 'எனக்கு அபுதாபியில் நாளைக்காலை ஒரு வேலை இருக்கு... நான் இப்பவே வர்றேன், நாம பேசிக்கிட்டே போவோம்' என்று சொல்லி எங்களைக் கொண்டு வந்து ராஜாவின் அறையில் நள்ளிரவில் விட்டுச் சென்றார் பிலால். இப்படியான நட்புக்கள் இருக்கும் போது என்ன கவலை.
ஒரு நிறைவான விழாவுக்குச் சென்று வந்ததுடன் நீண்டகாலமாகச் சந்திக்காத அய்யனார் மற்றும் முகநூலில் அறிந்திருந்தாலும் முதல் சந்திப்பிலேயே நெருக்கம் காட்டிய பாலாஜி முருகேசன் மற்றும் எங்களது நட்புக்களைச் சந்தித்து உரையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி. அதேபோல் எழுத்தாளர் நசீமா ரஸாக்கும் நித்யா குமார்ங்கிற பேர் தெரியும் நீங்கதான் பரிவை சே.குமாரா எனக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
நேற்று காலையில் ஏறி உட்கார்ந்த தலைவலி, பாலாஜி அண்ணனின் மாத்திரையால் கொஞ்சம் மட்டுப்பட்டு இன்றும் தொடரத்தான் செய்கிறது என்றாலும் இந்த வாரமும் நிறைவான வாரமாய் கழிந்தது.
-பரிவை சே.குமார்.