பாலும் பாவையும்
அதென்ன பாலும் பாவையும்..?
கெட்டுப் போன பாலை என்ன செய்வோம்... அது போல்தான் கெட்டுப்போன பெண்ணையும் இந்தச் சமூகம் தூக்கித் தூர எறியும் என்பதைச் சொல்லும் நாவல் இது.
எழுத்தாளன் விந்தன் அவர்களின் கதைகளை இதுவரை வாசித்ததில்லை... இதுதான் முதல் முறை... சமூகத்தைச் சாடும் எழுத்து...
ராணி முத்துவில் வரும் குடும்ப நாவல்கள் போன்றதொரு கதைதான் இது என்பதை வாசிக்கும் போது உணர்ந்தேன். அதன் பின் இது குறித்தான தேடலில் ராணிமுத்துவில் வந்த நாவல்தான் என்பதை ஜெயமோகனின் பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
கதைக்குள் செல்லும் முன் தன்னுடைய வாசகி சரளாவின் கேள்விக்குப் பதிலை காதல் குறித்தும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் விளக்கமாய் சொல்லியிருக்கிறார்.
நீ கட்டுன சேலையோட வந்தாப் போதும் அப்படின்னு சினிமா வசனங்களை நாம் நிறையக் கேட்டிருப்போம்... அந்தக் காட்சிகளைப் பார்த்திருப்போம்... அதெல்லாம் நிஜ வாழ்க்கையில் அத்தி பூத்தாற் போல்தானே நடக்கும்.
அப்படிச் சொல்லாத தன் காதலனை நம்பி, பெற்றவர்களே வேண்டாமெனப் போகும் போது நகைகள் எதற்கு என பணக்காரியான அகல்யா வந்துவிட, நகைகளை வைத்து கொஞ்ச நாளேனும் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்தவன் எண்ணத்தில் மண் விழ, அவளுடன் சந்தோஷமாய் இரவைக் கழித்தவன் மறுநாள் போய்விடுகிறான். அவனின் நிலையை ஒரு கடிதத்தில் தெரிவித்துவிட்டு...
சென்னையில் புத்தகக் கடை ஒன்றில் வேலை பார்க்கும் கனகலிங்கம் கலைஞானபுரத்தில் நடக்கும் கலைவிழாவில் புத்தகம் விற்க வருகிறான், அகல்யா தங்கியிருக்கும் அறைக்குப் பக்கத்து அறையில் அவன் தங்க நேரிடுகிறது.
அவளின் அழுகுரல் கொடுக்கும் எரிச்சலால் அறைக்கே சென்று பேசப்போக நீதான் எனக்கு நல்ல துணை எனச் சொல்கிறாள்.
அவளின் கதையைத் தெரிந்து கொண்டவன் அங்கு தங்கியிருக்கும் மூன்று நாட்களும் அவளுடன் நட்பாய் இருக்கிறான். காதலனுடன் சேர்த்து வைக்கிறேன் என்றதற்கும் பெற்றோரிடம் கொண்டு போய் விடுகிறேன் என்றதற்கும் மறுக்கும் அகல்யா, அவனை விரும்புவதாய்ச் சொல்லி தன்னையே கொடுக்க நினைக்கிறாள்.
அவளையும் அவளின் காதலையும் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டுகிறான் கனகலிங்கம்... அதற்குக் காரணம் அவள் கெட்டுப் போனவள் என்பதே என்றாலும் அதைச் சொல்லாது வேறு காரணங்கள் சொல்லி மழுப்புகிறான்.
அப்படியிருந்தும் அவளைத் தனியே விட்டு வர எண்ணமின்றித் தன்னோடு சென்னைக்குக் கூட்டி வருகிறான்.
ரயில் நிலையம் வரும் அவனின் முதலாளியைப் பார்த்ததும் அகல்யா பயந்து மெல்லப் பதுங்கிறாள். அதன் பின் அவனின் வேலையும் பறிபோகிறது. வேலை போக தானே காரணம் என்று வருந்தினாலும் அவனின் காதலைப் பெற, மனைவியாக நினைப்பதில் அகல்யா முனைப்போடு இருக்கிறாள்.
கனகலிங்கம் பிடிகொடுக்காது விலகி நிற்கிறான்.
சாப்பாடு கொடுத்து உதவும் நண்பனின் தாயாரும் யாரோ ஒருத்தியைக் கூட்டியாந்து வைத்துக் குடும்பம் நடத்துகிறான் எனச் சொல்லி சாப்பாட்டை நிறுத்துவதுடன் நண்பனையும் அவனுடன் பழகக் கூடாதென்கிறாள்.
இவை எல்லாமே அகல்யாவைச் சந்தித்ததால்தான் நடக்கிறது என்றாலும் அவள் மேல் அவனுக்குள் ஒரு அன்பு... அது காதலாகவும் இருக்கலாம்... ஆனாலும் ஓடிப்போய்... கெட்டுப் போனவளைக் கட்டியவன் என ஊர் பேசுமே என்பதால் கூட அவன் மௌனம் சாதித்திருக்கலாம்.
கனகலிங்கம் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதை உணர்ந்து தோழியின் வீட்டுக்குச் செல்லும் அகல்யாவுக்கு அங்கும் கசப்பான அனுபவங்களே மிஞ்சுகின்றன.
வேலை தேடி அலையும் கனகலிங்கத்துக்கு நண்பன் மூலம் கிடைக்கும் வேலையில் மனநிறைவு இல்லாமல் அதையும் விட்டு விடுகிறான்.
அகல்யாவுடன் கனகலிங்கம் நட்பான பின் ஒரு மர்ம மனிதன் அடிக்கடி அவர்களை வேவு பார்க்க வருகிறான். ஒவ்வொரு முறையும் தப்பி ஓடிவிடும் அவன் இறுதியாக கனகலிங்கத்திடம் மாட்டினாலும் அவனிடம் இருந்து எதையும் அறிய முன்னரே தப்பி ஓடிவிடுகிறான்.
மீண்டும் கனகலிங்கத்தைத் தேடி வரும் அகல்யா வழியில் தன்னை ஏமாற்றிச் சென்றவனின் திருமண ஊர்வலத்தைப் பார்க்க நேரிட்ட போதும் எதுவும் செய்யாமல் தன் வழி நடக்கிறாள்.
கனகலிங்கம் அறையில் இல்லை... தன்னிடம் அவன் கொடுத்த சாவியை வைத்துத் திறந்து அறையைச் சுத்தம் செய்து அவனை நினைத்துக் கனவு காண்கிறாள்... தூக்கமில்லாத அந்த இரவு மெல்ல நகர, அவன் எப்படியும் வருவான் என நம்பிக்கையோடு விழித்திருக்கிறாள்.
அதிகாலையில் கனகலிங்கம் விபத்தில் இறந்த செய்தியோடு வருகிறான் நண்பன்.
தன் வினைப்பயன் இப்படியிருக்கிறதே என்று நொந்து நூலாகிப் போகிறாள் அகல்யா.
தன் குடும்பத்தில் நடந்ததை எடுத்துச் சொன்னால் சேர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு இல்லம் தேடிச் செல்பவளுக்கு அப்பாவும் சித்தப்பாவும் பேசுவதைக் கேட்டதும் மயக்கத்துடன் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
அந்த நேரத்தில் அவளுக்கு ஆதரவாக கல்லூரியில் அவளை ஒரு தலையாகக் காதலித்தவன் வந்து சேர்கிறான்.
இவனுடன் இனி இனிதான வாழ்வு என மகிழ்வோடு அவன் இல்லம் செல்கிறாள். அந்த வாழ்க்கை இனிதானதா என்றால்... அதெப்படி இனிதாகும் என்பதே பதிலாகும்.
பதிவின் ஆரம்பத்தில் சொன்ன வரிகளை வேலைக்காரன் சொல்லக் கேட்டு ஞானம் வந்தவனாய் அவளை வீட்டை விட்டு வெளியேற்ற, துளிர்த்த அந்த வாழ்வும் அவளைப் புறந்தள்ளி விடுகிறது.
ஒரு பெண் வழி தவறிப் போய்விட்டால் இந்தச் சமூகம் எப்படியெல்லாம் கேவலப்படுத்துகிறது என்பதை அகல்யா உணர்கிறாள்.
யாருமே ஏற்றுக் கொள்ளாத போதும் கடல் தன்னை ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் கடலை நோக்கிப் போகிறாள்.
கனகலிங்கத்தை வேவு பார்த்தவன் யார்..?
இரயில்வே நிலையத்தில் கனகலிங்கத்தின் முதலாளியைப் பார்த்து அகல்யா பயந்து பதுங்கியது ஏன்..?
கனகலிங்கத்துக்கு உண்மையிலேயே விபத்துத்தானா... இல்லை யாராலும் கொல்லப்பட்டானா..?
அகல்யாவின் அப்பாவும் சித்தப்பாவும் பேசியது என்ன..?
என்பவையே கதையின் சுவராஸ்யம்... அதைச் சொல்லிவிட்டால் வாசிப்பவர்களுக்கு வாசிப்பில் விருப்பமின்றிப் போய் விடும் என்பதால் விரிவாகச் சொல்லவில்லை.
கனகலிங்கத்தைப் பார்ப்பதற்காகவே அந்த ஹோட்டலில் தங்கியிருந்ததாக அகல்யா சொல்வது சினிமாத்தனம்.
சமூகத்தைச் சாடும் கருத்துக்கள்... கற்பிழந்த பெண்ணுக்கு இந்த உலகம் கற்பிக்கும் பாடங்கள் என கதை பயணித்தாலும் விறுவிறுப்பு இல்லாத நாவல் இது. இந்த நாவல்தான் விந்தனுக்கு பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்ததாம்.
குடும்ப நாவல்கள் விரும்பிப் படிப்பவர்கள் வாசிக்கலாம்.
வாசிக்கக் கொடுத்த அ.மு.நெருடாவுக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.