சனி, 31 மார்ச், 2018

ஓரிதழ்ப்பூ - என் பார்வை



ரிதழ்ப்பூ

கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்படும் கதைகளே வாசகனால் பேசப்படும். அது காதலைச் சொல்லும் கதையாக இருந்தாலும் வட்டத்துக்குள்ளான காதலைச் சொல்லும் போது 'இது ஏற்கனவே வேறொருவர் எழுதியது போல்தான் இருக்கிறது' என்றும் 'அவரின் சாயல் இதில் தெரிகிறதுதானே' என்றும் விமர்சனம் வரவே செய்யும். 

அதே காதலை வேறொரு கோணத்தில் வட்டத்தை விட்டு நகர்த்தும் போது 'ஆஹா... என்ன எழுத்துய்யா...' என்ற வார்த்தைகள் வந்து விழும். அப்படியான எழுத்துக்கள் வட்டத்தை மீறி வரும்போது வாசகனை வசமிழக்கச் செய்ய வேண்டுமே ஒழிய, அவனுக்குள் இதைத் திணித்தால் மட்டுமே நம் எழுத்து பேசு பொருளாகும் என்ற எண்ணத்தை எழுத்தாளனுக்கு உருவாக்கக் கூடாது.

நண்பர் பிரபுவின் அன்பிற்கிணங்க, வாசித்துக் கொண்டிருந்த மரப்பசுவின் அம்மணியிடம் 'கோபாலியோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிரு நான் பூவை நுகர்ந்து விட்டு வருகிறேன்' என வாசிப்பின் மடை மாற்றி இன்று காலை ஓரிதழ்ப்பூவைக்  கையில் எடுத்தேன்.

ஊரில் காரம்பூ, சூராம்பூ, மஞ்சநெத்திப்பூ, அரளிப்பூ, டிசம்பர்பூ, மாம்பூ, மல்லிகைப்பூ, வாகம்பூ, புளியம்பூ, வேப்பம்பூ என இன்னும் இன்னுமாய் பல பூக்களோடு வாழ்ந்தவனின் மனசுக்கு ஒவ்வொரு பூவின் வாசமும் நாசிக்குள் சுற்றிக் கொண்டேயிருக்கும். 

பூக்களின் வாசனை தரும் சுகந்தம் எப்போது அலாதிதான். அப்படியானதொரு வாசனையை திருவண்ணாமலையைச் சுற்றிச் சுற்றிப் படரும் இந்த ஓரிதழ்ப்பூவும் நம் நாசிக்குள் திணிக்கிறது. அது காமவாசனை.

அமிர்ந்தமாயினும் அளவுக்கு மீறினால் நஞ்சே... அப்படியிருக்க ஓரிதழ்ப்பூவில் அய்யனார் விஸ்வநாத் அவர்கள் அளவுக்கு மீறியிருக்கிறாரா இல்லை அளவோடு அமுது படைத்திருக்கிறாரா..?

சமீபத்தில் ஒரு சிறுகதைப் போட்டிக்கான  கதையில் 'அவன் அவள் மார்பைத் தொட்டான்' என்ற வரிக்காக கதையினை வாசித்தவர்கள் சிலரின் கருத்தில் 'இது அடல்ஸ் ஒன்லி கதை' என்பதாய்ச் சொல்லியிருந்தார்கள். இந்த ஒரு வரிக்கு அடல்ஸ் ஒன்லியா என்ற யோசனை எழ, சிரித்துக் கொண்டு கடந்து வந்தேன்.

இன்று ஓரிதழ்ப்பூ வாசித்தபோது அந்த கருத்துக்கள் ஞாபகத்தில் வர, இந்தக் கதை பொதுவெளியில் வைக்கப்படும் போது எது மாதிரியான கருத்துக்கள் முன்வைக்கப்படும் என்ற யோசனை எனக்குள் எழுந்தது. வாசிப்பில் பல படிமானம் உண்டு. அதில் ஒரு பக்கம் இதை தூக்கிக் கொண்டாடினால் மறுபக்கம் திட்டித் தீர்க்கத்தானே செய்வார்கள்.

பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்'... அது அபத்தமோ ஆபாசமோ... அதைப் பற்றி இங்கு பேசவரவில்லை. அது எதை பேசுபொருளாக எடுத்துக் கொண்டதோ அதையேதான் இந்த ஓரிதழ்ப்பூவும் எடுத்துக் கொண்டுள்ளது... அதுதான் காமம்.

திரு.அய்யனார் விஸ்வநாத் கதை சொன்ன விதம் ரொம்ப அருமை... காட்சிகள் முன்னும் பின்னுமாக விரிக்கப்படுதல் வித்தியாசமாய்... விறுவிறுப்பாய்... வாசிக்க ஆரம்பித்து ஆசிரியர் சொன்னது போல் ஏழு அத்தியாயம் வரை... இல்லையில்லை ஒரு அத்தியாயம் கூடுதலாக எட்டு அத்தியாயம் வரை அடைமழையென அடித்துப் பெய்து எழாமல் படிக்க வைத்தது. 

என்ன எழுத்து... இப்படியான எழுத்து கைவரப் பெறுதல் வரமே... அப்படியே தன்னுள் ஈர்த்துக் கொண்டது. அதன் பின்னான அத்தியாயங்கள் கொஞ்சம் சுணக்கம் காட்டி, அடைமழையென ஆர்ப்பாட்டமாய் நகரவில்லை என்றாலும் மனம் ஈர்க்கும் சிறுமழையாய் இறுதிவரை நகர்த்திச் சென்றது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.

அகத்தியமாமுனி, போகர், இரமணர், அவர் வளர்க்கும் காகம், மான் என வித்தியாசமாகப் பயணிக்கும் கதைக்குள் சாமிநாதன், வாத்தி ரவி, சங்கமேஸ்வரன், ஜோசியர், லட்சுமி, அமுதாக்கா, ரமா, அங்கயற்கன்னி, மலர்செல்வி, துர்க்கா... என ஒரு பெருங்கூட்டமே வாழ்கிறது நம்மோடு.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு காதல்... அதை வெளிக்கொணர்ந்த விதமும்... கதையை அகத்தியமுனியில் ஆரம்பித்து ஒவ்வொருவராய் நகர்த்தி எல்லோரையும் ஒரு புள்ளியில் இணைத்த விதமும் மிக அழகு. 

அய்யனார் விஸ்வநாத் மிகச் சிறந்த கதைசொல்லி என்பது அவரின் எழுத்தில் தெரிகிறது. வாசிப்பவனை ஈர்க்கும் எழுத்து எல்லாருக்கும் அமையப் பெறுவதில்லை... அது இவருக்கு கைவரப் பெற்றிருக்கிறது. வாழ்த்துக்கள் அ.வி.

மிகச் சிறப்பானதொரு நாவல்... இதுதான் எல்லை என்றில்லாமல் தன் போக்கில் விரியும் எழுத்து எப்பொழுதும் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். கண்டிப்பாக சிறப்பானதொரு இடத்தைப் பிடிக்கும் நாவலாக இது இருக்கும்.  

மேலே சொன்னவை பொதுவான பார்வை... இனி... 

வர்ணனைகள் எல்லாம் வாசிக்கும் பெண்களை முகம் சுளிக்க வைக்கும் என்பது வாசித்தவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

கிராமத்துச் சண்டையில் வந்து விழாத வார்த்தைகள் இல்லை... பேச்சோடு பேச்சாக கலந்த, கேலியாகப் பேசும் போது கூட வந்து விழுந்த, வார்த்தைகளைக் கேட்டு வளர்ந்தோம் என்றாலும் அதெல்லாம் பேச்சு வழக்கு... அதைச் சட்டென சுலபமாய் சிரித்தபடி கடந்து சென்று விடுவோம். அதே எழுத்தாய் மலரும் போது... அதுவும் சாதாரண கிராமத்துப் பேச்சாக இல்லாமல் கலவிக்குள் உலவும் எழுத்தாய் ஆகும் போது அவ்வளவு எளிதாய் எடுத்துக் கொள்ளவோ கடக்கவோ முடிவதில்லை.

சாப்பாட்டின் சுவை கூட்டத்தான்  உப்பு.  நமக்கு அது ரொம்பப் பிடிக்கும் என அளவுக்கு மீறி அள்ளிப் போட்டுக் கொள்வதில்லை. அப்படித்தான் காமமும்... இந்தக் கதைக்கு காமச்சுவை அவசியமே.... அது இல்லை என்றால் ஓரிதழ்ப்பூவை விரிக்கவே வேண்டியதில்லை ஆனாலும் அளவுக்கு மீறி இருப்பது திகட்டலாய்....

இன்னும் நம் வீடுகளில் படுக்கை அறை என்பது இருபத்தி நான்கு மணி நேரமும் கலவி கொள்ளும் இடம் என்பதாய் மாறவில்லை. அப்படி மாறும் காலம் இப்போது வரப்போவதுமில்லை.  அதற்கென்று நேரம் காலம் இருக்கிறது. ரோட்டில் கூடித்திரிதல் என்பது ஆறறிவுக்கு ஏற்ப்புடையதல்ல.

பெண்கள் இப்படி இல்லையா என்று ஒரு கேள்வியை முன் வைக்கலாம்... இன்றைய வாழ்க்கைச் சூழலில் இப்படியும் இருக்கலாம்தான்...படக்கென சேலை அவிழ்க்கும் பெண்களாய் இருப்பார்களா..?  

கள்ளக்காதலுக்காக கணவனுக்கு விஷம் வைத்தவள் குறித்து இருநாள் முன்பு வாசிக்க நேர்ந்ததுடன் கணவனைத் தீர்க்க திட்டமிடும் ஆடியோவும் கேட்கக் கிடைத்தது. எம்மாதிரியான பாதையில் நாம் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்பது வருத்தமளித்தது என்றாலும் இக்கதையில் வரும் துர்க்கா, அங்கயற்கன்னி, அமுதாக்காவைப் போன்றவர்களை நாம் பெரும்பாலும் பார்த்து வளர்ந்ததில்லை. நாமெல்லாம் லட்சுமிகளையும் ரமாக்களையுமே அதிகம் பார்த்து வளர்ந்திருக்கிறோம்.

எல்லாப் பெண்களுமே (ரமா, லட்சுமி தவிர) சேலையை அவிழ்க்கிறார்கள். அப்படியென்ன காமம் பெரிதாய்ப் போய்விட்டது இந்தப் பெண்களுக்கு...? 

தங்கள் மனசுக்குள் நினைத்து வாழ்ந்து வரும் வாழ்க்கையை நேரில் காணும் போது காமம் மட்டுமே தலைக்கேறுமா என்ன... இங்கு அது மட்டுமே தலைக்கேறுவது எந்த வகை..?

காம போதையுடன் மது போதையும் கதை நெடுகப் பயணித்து வாசிப்பவனை போதையில் ஆழ்த்தியே ஆகவேண்டும் என்பதில் குறியாய் இருப்பது எந்த வகையான போதை..?

நாம் ஏன் இன்னும் எழுத்தில் பெண் வர்ணனைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்..? சிறு பெண் லட்சுமியை வர்ணிக்கும் இடத்தில் மட்டுமில்லாது அங்கயற்கன்னி, துர்க்கா என பெண்கள் எல்லாரையும் இப்படித்தான் வர்ணிக்க வேண்டுமா...? 

கட்டுனவன் கிழவனோ இளைஞனோ கணவன் இறந்த வீட்டில் எந்தப் பெண் கலவி கொள்வாள்.  அப்படியென்ன அவளுக்கு அவசரம்..? பொண்டாட்டிகூட இருக்கப் பிடிக்காதவனுக்கு புத்திமதி சொல்லுதல் என்பது காமம் வழியாகத்தானா..?

துர்க்கா கணவனையும் பெரியசாமியையும் அடிக்கும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறாள். அதே துர்க்கா மாமுனியுடன் தானே முன் வந்து சல்லாபிக்கிறாள்... கணவனிடம் பொண்டாட்டியை  கூட்டிக் கொடுக்கிறியா எனக் குதிப்பவள் 'வாத்தியை ஒரு வாட்டி கூட்டிப் போய் மந்திரிச்சி விடுறியா' என அதே கணவன் கேட்குமிடத்தில் 'ரொம்ப சின்னப்புள்ளயாட்டம் இருக்கு' என கடந்து செல்கிறாள். அப்படியென்றால் சபாஷ் போட வைத்த கோபம் எங்கே போனது..? இது என்ன முரண்..?

காமம் தேவையே... காமல் இல்லாத வாழ்வேது..? என்றெல்லாம் நாம் நிறையப் பேசலாம்... காமம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதையும் நாம் பேசித்தானே ஆகவேண்டும்..? 

பெண்கள் குறித்த வர்ணனைகளும்... ஓரிதழ்பூ எது என்ற கேள்விக்கு வாத்தி ரவி சொல்லும் பதிலும் வாசிப்பவரை முகம் சுளிக்க வைக்கும்.... குறிப்பாக பெண்களை.

நான் பெரிய எழுத்தாளனெல்லாம் கிடையாது. என் வாசிப்பின் பின்னான கருத்துக்களே இவை. இதில் மற்றவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். பல இலக்கிய சாம்பவான்களின் கருத்துக்களுக்கு முன்னே என் எழுத்து எதுவுமில்லை. இது வாசிப்பின் பகிர்வே. 

கனவுப்பிரியன் அண்ணன் சொன்னது போல் நாம் எதாக நினைத்து வாசிக்கிறமோ அதுவே ஓரிதழ்ப்பூ. 

காமம் தவிர்த்துப் பார்த்தோமேயானால் அய்யனார் விஸ்வநாத் அவர்கள் எழுத்து மிகச் சிறப்பு. தமிழ் எழுத்துலகில் மிகச் சிறந்த ஆளுமையாக வருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரின் பேச்சைப் போல் எழுத்தும் தைரியமாய் வந்து விழுந்திருக்கிறது. ஓரிதழ்ப்பூவின் ஆசிரியரைக் கொண்டாடலாம்.

தாங்கள் கதை சொன்ன விதமும்... காட்சிப்படுத்திய விதமும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள் அகத்திய மாமுனி... அடச்சே... கதையில் ரொம்ப ஒன்றிட்டமோ... வாழ்த்துக்கள் அய்யனார் விஸ்வநாத்.

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 19 மார்ச், 2018

தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)


முத்துக்கமலம் மின்னிதழில் எனது இரண்டாவது சிறுகதை வெளியாகியிருக்கிறது, முத்துக்கமலத்தில் வாசிக்க 'தோஷம்' 

கதையை வெளியிட்ட ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

Image result for இளையராஜா ஓவியம்

"ன்னம்மா சொல்றீங்க..? மூத்தவ இருக்கும் போது இளையவளுக்குச் செய்யிறது நல்லாவா இருக்கும்... ஜாதி சனம் என்ன சொல்லும்... அதை விடுங்க... ரேணுகா மனசு உடைஞ்சி போயிடமாட்டாளா..?"

"ஊரு ஆயிரம் பேசும்... அதுக்காக நாம ஊருக்காகவா வாழ முடியும்... இங்க பாரு மாணிக்கம்.... மூத்தவளுக்கு இதுவரைக்கு எத்தனையோ இடம் வந்து தட்டிக்கிட்டே போகுது... அவ ஜாதகத்துல தோஷம் இருக்குன்னு சாதகக்காரன் சொன்ன எல்லாக் கோயில்லயும் போயி பரிகாரம் பண்ணிட்டு வந்தாச்சு... ஒண்ணும் அமையலை... சின்னவளுக்கு முடிச்சிட்டு இவளுக்குப் பாக்கலாமே... அவளுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதுல்ல..." பாக்கு உரலில் வெற்றிலையை இடித்துக் கொண்டே பேசினாள் காளியம்மாள்.

"அதுக்கில்லைம்மா... என்ன இருந்தாலும் பெரியவளுக்கு ஏதும் பிரச்சினை இருக்குமோன்னு ஊர் பேசாதா?"

"நாந்தேன் சொல்றேனுல்ல... ஊருக்காக நாம வாழக்கூடாது... நமக்காகத்தான் வாழணும்... இங்க பாரு நம்ம செல்வராஜூ மூத்தவ இருக்கும் போது இளையவளுக்குப் பண்ணலையா என்ன... அதைவிடு நம்ம சின்ன மாமா என்ன பண்ணுனாரு... தேவிகா இருக்கும் போது சுஜாதாவுக்கு பண்ணி வைக்கலையா என்ன... சும்மா யோசிக்காம நம்ம புவனாவை கட்டிக்கிறோம்ன்னு நல்ல இடத்துல இருந்து கேக்கிறாக... பெரியவளுக்காக இதையும் விட்டுட்டா... இந்த இடமும் போகும்... இப்பவே சின்னவளுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதுல்ல..."

"எனக்கென்னவோ யோசனையா இருக்கும்மா... ரேணுகா இதை எப்படி எடுத்துப்பான்னு தெரியலை... எல்லாப் பொண்ணுகளுக்கும் உள்ளது போல இவளுக்கும் ஆசை இருக்கும்ல்லம்மா... இப்ப அவளை விட்டுட்டு சின்னவளுக்குச் செய்யப்போறேன்னு சொன்ன அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்... அதான் யோசிக்கிறேன்..."

"அவ புரிஞ்சிப்பாப்பா... எத்தனை இடம் வந்துச்சு எல்லாமே தட்டிக்கிட்டுத்தானே போகுது... ஒருவேளை  சின்னவளுக்கு கல்யாணம் நடந்தா இவளுக்கு ஆகுமோ என்னவோ... சொல்றவிதமா சொல்லு மாணிக்கம்..."

"ம்..."

அம்மாவுடன் பேசியதை மனசுக்குள் மீண்டும் மீண்டும் ஓட விட்டபடியே கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு மோட்டு வலையை வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்திருந்த மாணிக்கத்துக்கு மனசுக்குள் ஒரு வித வலி, எப்படி ரேணுகாவிடம் பேசுவது...? அவள் வருத்தப்பட்டா என்ன செய்வது...? மனசொடிஞ்சி பொயிட்டான்னா... எதாயிருந்தாலும் அவளுக்குத்தான் முதல்ல செய்வேன்... ஆனா திருமணத்தை... தங்கையின் கல்யாணத்துக்குப் பின்னால உனக்குன்னு சொன்னா... எப்படி எடுத்துப்பா... யோசனையின் வலியில் கண்ணீர் கன்னத்தில் இறங்கியது. யாரும் பார்க்கும் முன்னர் நெஞ்சில் கிடந்து துண்டால் துடைத்துக் கொண்டார்.

"அப்பா..." ரேணுகாவின் குரல்.

"எ... என்னம்மா..?"

"உடம்புக்கு முடியலையா... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..? தலைவலிக்குதா...? மருந்து தேய்ச்சுவிடவா?"

"ஏய் அதெல்லாம் இல்லைம்மா... மனசுக்குள்ள ஆயிரம் கேள்வி... பதிலைத் தேடித்தேடி எனக்கே சோர்வாப் போச்சு..."

"என்ன கேள்விப்பா... வயலுக்கு தண்ணி பாய்ச்சணும் உரம் போடணுமின்னா..." சிரித்தாள்.

"ம்... வெளஞ்ச பயிருல்ல... முதல்ல அறுக்க வேண்டியதை விட்டுட்டு அடுத்ததை முதல்ல அறுக்க வேண்டிய கட்டாயம் வந்திருச்சேன்னு யோசனையா இருக்கும்மா..."

"போங்கப்பா... எப்பவும் இப்படித்தான் வேதாந்தி மாதிரி பேசுவீங்க... வாங்க சாப்பிடலாம்..."

"ம்... இப்படி உக்காரும்மா... உங்கிட்ட கொஞ்சம் பேசணும்..."

"எங்கிட்டயா..? என்ன விஷேசம் அப்பா..."

"உக்காரும்மா... ஆமா உங்கம்மா எங்கே...?"

"அம்மாவா... டிவியில நாடகம் பாக்குறாங்க... புவனா எப்பவும் போல மொபைலை நோண்டிக்கிட்டு இருக்கா...?"

"ம்... இருக்கட்டும்... நாம கொஞ்சம் தனியாப் பேசணும்..."

"தனியாவா... எங்கிட்ட என்ன ரகசியம் அப்பா... நாம ரெண்டு பேரும் தனியாப் பேசினா உங்காத்தா அதான் எங்கப்பத்தா என்ன குசுகுசுன்னு பேசுறீங்கன்னு வந்திரும்..."

"ஏய்... அப்பத்தாதான் தூங்கிக்கிட்டு இருக்கே... நீ உக்காரும்மா..."

"அதானே... ஆத்தாவை பாத்துக்கிட்டுத்தான் இந்த ஆத்தாக்கிட்ட பேச நினைச்சீங்களாக்கும்..." சிரித்தபடி அவரருகில் அமர்ந்தாள்.

"ஏம்மா... அப்பா கேக்குறது தப்புன்னா எங்கிட்ட நேர சொல்லிடணும்... சரியா?"

"என்னப்பா பீடிகையெல்லாம் பலமா இருக்கு...?"

"இல்லம்மா... முடிவு நீ எடுக்க வேண்டிய ஒரு காரியம்... அதான்..."

"சரி..."

"ரெண்டு நாளைக்கு முன்னால உன்னைப் பெண் பார்க்க வந்தாங்கல்ல... அவங்க எப்படிப்பட்டவங்கன்னு நினைக்கிறே..."

"என்னப்பா அவங்க என்ன சொன்னாங்கன்னுதான் உங்களுக்குத் தெரியுமில்ல... அப்புறம் எப்படிப்பட்டவங்கன்னு எங்கிட்ட கேட்டா..." சிரிப்பை விடுத்து கொஞ்சம் சீரியஸாக் கேட்டாள்.

"இல்லம்மா... அவங்களுக்கு நம்ம புவனாவைப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்கதானே...?"

"ம்... ஆமா... அதுக்கு..."

"அந்தப் பையன் நம்ம புவனாவுக்கு சரியா வருவானாம்மா...?" நேரடியாகக் கேட்டு விட்டார்.

"அப்பா..."

"இல்லம்மா... நல்ல குடும்பம்... நமக்குத் தூரத்துச் சொந்தம் வேற... உன்னையத்தான் பாக்க வந்தாங்க... ஏனோ அவளைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க... உங்கிட்ட இதைப் பற்றிப் பேசக்கூடாதுதான்... ஆனா உங்கிட்ட கேட்டாத்தான் எனக்கு சரியான பதில் கிடைக்கும்... சொல்லும்மா..."

"ம்... நல்ல பையனாத்தான் இருக்கான்... " அவளின் முகத்தில் ஆரம்பத்தில் இருந்த குதூகலம் இல்லை. மாணிக்கத்திற்கு ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது.

"சரிம்மா...  வா சாப்பிடலாம்" என்று பேச்சை மாற்றினார்.

"அப்பா... அந்த மாப்பிள்ளையை புவனாவுக்கு செய்யலாம்ன்னு உங்களுக்கு ஆசையிருக்காப்பா..." அவரின் மார்பு முடியில் கோலம் போட்டபடிக் கேட்டாள்.

"அப்படியெல்லாம் இல்லைம்மா... உன்னோட ஜாதகமும் சரியில்லை... வர்ற வரனெல்லம் தட்டிக்கிட்டே போகுது... பரிகாரம் எல்லாம் பண்ணியாச்சு... அவளை பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க... உன்னோட எண்ணம் என்னவோ அதுதான் என்னோட முடிவு..."

ரேணுகா வறட்சியாய் சிரித்தாள் "எனக்குத்தான்  ஜாதகம் சரியில்லையே... எனக்குத்தான் சரியான வரன் அமையாம தள்ளிக்கிட்டே போகுது... அவளுக்காச்சும் முடியட்டுமேப்பா...."

"இல்லம்மா... நீ இருக்கும் போது அவளுக்கு..."

"என்னப்பா... தங்கச்சிக்கு கல்யாணம் முடிஞ்சாத்தான் உனக்குன்னு ஆம்பளப் பசங்களுக்கு முப்பது முப்பத்தி ரெண்டு வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணாம வச்சிருக்கிறது இல்லையா..? அது மாதிரி நான் நினைச்சிக்கிறேன்... என்ன எனக்கு இருபத்தெட்டுத்தானே ஆகுது... அவளுக்கு நடக்கட்டும்... அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா நமக்குச் சந்தோஷம்தானேப்பா... எனக்குன்னு இனிமேயா பிறக்கப்போறான்... எங்கயாச்சும் இருப்பானுல்ல... வர்றப்போ வரட்டும்... இப்ப அவளைக் கட்டித்தாரேன்னு அவங்ககிட்ட பேசுங்க..." மனசுக்குள் வேதனை இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு சாமர்த்தியமாய்ப் பேசினாள்.

"இல்லம்மா... உன்னைக் கஷ்டப்படுத்தி..."

அவரை இடைமறித்து "அப்பா... என்னோட மாப்பிள்ளையை அவ கட்டலையில்ல... வந்தவங்களுக்கு என்னைவிட அவளைப் பிடிச்சாச்சு... என்னைப் அவங்களுக்குப் பிடிச்சி... நாம ஜாதகம் பாத்து சரியில்லையின்னு வச்சிக்கங்க... அப்ப அவங்க அவளைக் கேப்பாங்களா... இப்பவே அவங்களுக்குப் பிடிச்சபடி அவளோட ஜாதகத்தைப் பாருங்க... அதான் சரிப்பா..."

"ம்... நீ இவ்வளவு உயர்வாச் சிந்திக்கிறே... ஆனா ஊரும் உறவும் என்ன சொல்லும்...?"

"அப்பா ஊருக்காகவும் உறவுக்காகவும் நாம இல்லை... எனக்கு எங்கப்பாவைத் தெரியும்... என்னோட தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமையுதுன்னா எனக்குச் சந்தோஷம்தான்...  அவங்க என்ன பேசினா என்ன...?"

"ம்.... எனக்கு மனசு கஷ்டமா இருக்கும்மா..."

"அப்பா... முதல்ல அவளுக்குப் பேசுங்க... யாரு கண்டா அவளுக்கு வரன் வந்த நேரம் என்னோட ஜாதக தோஷம் போயி எனக்கும் மாப்பிள்ளை வரலாமுல்ல..."

"அப்படி அமைஞ்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா... எல்லாம் அந்த மாரிதான் பாத்துக்கணும்..."

"சரிப்பா... வாங்க.... சாப்பிடலாம்... உங்களுக்குப் பிடிச்ச கருவாட்டுக் குழம்பு... உங்களுக்காக நாந்தான் வச்சேன்.... என்னோட கருவாட்டுக் குழம்பு உங்களுக்குப் பிடிக்கும்ல்ல... வாங்க... இன்னைக்கே மாப்பிள்ளை வீட்ல பேசி நம்ம புவனா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க... எனக்கு ரொம்பச் சந்தோஷம் அப்பா..." என்று எழுந்தவள் கலங்கிய கண்ணை அவர் பார்க்காது தாவணியில் துடைத்துக் கொண்டாள். 

அவள் இப்படிச் சந்தோஷமாப் பேசினாலும் அவள் மனசின் வலியும் வேதனையும் வார்த்தைகளில் தெரிந்ததை மாணிக்கமும் உணர்ந்திருந்ததால் அவருக்கும் கண்ணீர் வர எங்கே மகள் பார்த்து விடுவாளோ என்ற எண்ணத்தில் செருமிக் கொண்டே முகத்தைத் துடைப்பது போல் கண்ணீரைத் துடைத்தார். அப்போது அவர் மனசுக்குள் ஏனோ இதுவரை அத்துப் போயிருந்த தங்கை உறவு வந்து செல்ல, மாப்பிள்ளையும் ஞாபகத்தில் வந்தான். கடவுள் நினைத்தால் எல்லாம் நடக்கும் என்று நினைத்தபடி எழ, சுவற்றின் மூலையில் பல்லி ஒன்று 'உச்... உச்...' என்று கத்தியது.
-‘பரிவை’ சே.குமார்.

ஞாயிறு, 18 மார்ச், 2018

கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)

கல் மின்னிதழ் பங்குனி மாத மின்னிதழில் எனது ஆன்மீகக் கட்டுரை வெளியாகியிருக்கிறது. என்னிடம் நீங்க இதை எழுதுங்க என உரிமையுடன் கேட்டு வாங்கிப் போடும் (அட நம்ம ஸ்ரீராம் அண்ணாவின் வரிகள்) நண்பர் சத்யாவுக்கும் அவரோடு இணைந்து பணியாற்றும் அகல் நட்புக்களுக்கும் நன்றி.
****


Picture
தாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன்
தேவகோட்டைக்கு மிக அருகில் சிறுவாச்சி, வெங்களூர் சாலை பிரியும் இடத்தில் தாழையூர் கண்மாய்க்குள் இருக்கிறது இந்தக் கோவில். எங்கள் ஊருக்கு மிக அருகில், எங்கள் ஊர் வயல்களின் வழியாக... தாழையூர் கண்மாய்க்குள் போனால் கோவிலை அடைந்து சாமி கும்பிட்டுத் திரும்பலாம். எங்கள் ஊரில் இருந்து பார்த்தால் கோவில் தெரியும். இப்போது கருவைகள் வளர்ந்து நிற்பதால் கோவில் தெரிவதில்லை. பள்ளி படிக்கும் காலத்தில் இரவு நாடகம் (கூத்து) பார்க்கவும் வயல் வழி பாதையில்தான் பயணப்பட்டிருக்கிறோம். கல்லூரி காலத்தில் சைக்கிளில் ரோட்டு வழியாகச் செல்வோம். கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் என்று நீட்டி முழங்குவதெல்லாம் இல்லை எங்கள் பகுதி மக்கள்... எங்களுக்கு அவள் கூத்தாடிச்சியம்மன்தான். கூத்தாடிச்சி நீ இருந்தாக் கேளு என்று முடியும் சண்டைகள் ஏராளம். அவள் எல்லாரையும் காக்கும் தெய்வம் என்பதால் நீ இருந்தாக் கேளு என்ற வாசகத்தை தன் புன்னகைக்குள் அடக்கிக் கொள்வாள்.

தாழையூர் கண்மாய்... இப்படி எழுதுவது கூட ரொம்பக் கஷ்டமாத்தாங்க இருக்கு ஏன்னா பரியன்வயல் அப்படிங்கிற எங்க ஊரையே பரியமயல் என்றும் தேவகோட்டையை தேவட்டை என்றும் கண்டதேவியை கண்டேவி என்றும் சொல்லிப் பழக்கப்பட்ட பயலுக நாங்க.. அட்சர சுத்தமா எழுதுறதெல்லாம் நமக்கு ஒத்து வருவதில்லை எனவே நம்ம பேச்சு வழக்குக்கு மாறிக்கிறேங்க. தேவ கோட்டையை ஒட்டிய தாழக்கம்மாயின் நுனிப் பகுதியில் ஒரு மேடு அமைத்து அக்காலத்தில் கோவில் கட்டியிருக்கிறார்கள். அந்த மேட்டுப் பகுதிக்கு வாரியான கம்மாய்ப் பகுதியைத் தாண்டித்தான் போக வேண்டும் என்பதால் சிறியதாய் ஒரு பாலமும் சேர்த்துக் கட்டியிருக்கிறார்கள். தற்போது கோவிலுக்குப் பிரியும் ரோட்டில் கோவில் பெயரில் ஒரு வளைவு வைத்திருக்கிறார்கள். அதைத் தாண்டினால் இடதுபுறமாக சீர்படுத்தப்பட்ட கண்மாய்க் கரையில் உள்ள ஆலமரத்தின் அடியில் முனீஸ்வரர் இருக்கிறார். அவரை வணங்கிவிட்டு அம்மனைக் காணச் செல்வோரும் உண்டு... அம்மனைக் கண்டு விட்டு அவரை வணங்க வருவோரும் உண்டு.

கோவில் என்றால் அதற்கென்று ஊரணி ஒன்று இருக்க வேண்டும் இல்லையா... அதனால் தாழக்கண்மாய்க்குள் இருக்கும் கோவிலின் கிழக்குப் பகுதியில் சிறியதாய் இரு ஊரணி... அதற்கு கல் படிக்கட்டு... இரண்டு படித்துறைகள்... ஒன்று கோவிலுக்கு முன்னே... மற்றொன்றோ ஐயனார் சன்னதிக்கு எதிரே... கோவிலுக்கு முன்னே இருக்கும் படித்துறையில் இறங்கி கால் கழுவி தலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டு கோவிலுக்குச் செல்வதையே பக்தர்கள் வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள்.

அரச மரத்துப் பிள்ளையாரை வணங்கிப் பின்னரே அம்மனையும் அதன் பின் ஐயனாரையும் வணங்குவதை முறையாக்கி வைத்திருக்கிறார்கள். எல்லாக் கோவிலிலும் முதல் வணக்கம் முதல்வனுக்குத்தானே. இது ஒரு கிராமத்துக் கோவில் என்றாலும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஸ்தல வரலாறு இருப்பது போல் இந்தக் கோவிலுக்கும் வரலாறு உண்டு.

இக்கோவில் உசுலாவுடைய ஐயனார் கோவிலாகத்தான் இருந்திருக்கிறது. ஐயனார் தனது துணைவிகளுடன் கிழக்குப் பார்க்க அமர்ந்திருக்கிறார். பெரும்பாலும் கோவில்கள் எல்லாமே கிழக்கு முகமாகத்தான் இருக்கின்றன இல்லையா?  

Picture
(சப்த கன்னிமார் எழுவர்)
இந்தக் கோவிலில் மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அப்படியான ஒரு திருவிழா நாளில் கூத்தாட வந்த இளம்பெண்தான் பெரியநாயகி. அவளின் அண்ணனும் நடிகர்தான். இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக கூத்துக் கொட்டகையில் இருந்து கம்மாய்க்குள் போயிருக்கிறாள். போனவளைக் காணவில்லை எனத் தேடிய அண்ணன்காரன், அவள் திரும்பி வந்தபோது அவசரப்பட்டு சந்தேகத்தில் எங்கே போனாய்? யாருடன் போனாய்? என வார்த்தைகளை விட, பெண் பிள்ளை அல்லவா சொல் பொறுக்கவில்லை.

தன் மீது சந்தேக விதை விழுந்த பின்னர் உயிருடன் இருப்பதில் அர்த்தமில்லை என்ற நினைப்பில் கோபத்திலும் வேகத்திலும் கம்மாய்க்குள் நின்ற ஒரம்பா மரத்தில் தூக்கில் தொங்கினார், கூத்தாட வந்த இடத்தில் சந்தேகத் தீயால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணைத் தெய்வமாக்கிவிட்டார்கள் அப்பகுதி மக்கள்.

பெரிய கருவறைக்குள் இரண்டு சிறிய கருவறைகள் ஒன்றில் ஐயனார் கிழக்குப் பார்க்க இருக்க, மற்றொன்றில் அம்மன் தெற்கு நோக்கி இருக்கிறாள். அம்மனின் பார்வையே பிரதான வாசலாய் மாறிப் போய்விட்டது. ஐயனார் கோவிலென்றாலும் அம்மன் பெயர்தான் வழங்குகிறது. புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே அபிஷேகம்... மற்ற விஷேச தினங்களிலும் நடப்பதுண்டு. அபிஷேகம் ஐயனாருக்கே... ஐயனாருக்கு அபிஷேகம் முடிந்த பின்னர் அம்மனுக்கும் ஐயனாருக்கும் தீபாராதனை நடைபெறும். ஐயனார் கற்சிலை அம்மனோ மரத்தினால் செய்யப்பட்டவள். இடது புறம் தலை சாய்ந்து கூத்தாடும் நிலையில் இருக்கும் அம்மனின் கழுத்தில் சுருக்குக் கயிறும் இருப்பதாய் சிலை வடித்திருக்கிறார்கள். அலங்காரம் இல்லாது இருக்கும் அம்மனைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டினால் இதைப் பார்க்கலாம். மரத்தினாலான சிலை என்பதால் அம்மனுக்கு சந்தனக் காப்பு மட்டுமே. அபிஷேகம் எல்லாம் ஐயனாருக்கே.

இப்போது கோவில் மண்டபங்கள் எழுப்பப்பட்டு அரசமர பிள்ளையார் கூட மண்டபத்துக்குள் வந்துவிட்டார் என்று நினைக்கிறேன். தற்போது அம்மனுக்கும் ஐயனாருக்கும் தனித்தனியே இராஜகோபுரம் கட்டுகிறார்கள்.

நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது படிக்கும் இடம் இந்தக் கோவில்தான். அப்போது மண்டபங்கள் எல்லாம் இல்லை. டானாப்பட ஒரு கட்டிடம் இருக்கும். அதில் சப்த கன்னிகள் சிலைகள் இருக்கும். அங்குதான் அமர்ந்து படிப்பது வழக்கம். பகல் நேரத்தில் அமைதியாய், எந்தத் தொந்தரவும் இல்லாமல் படிக்கச் சிறந்த இடம். கல்லூரியில் படிக்கும் போது நானும் எனது நண்பர்கள் சேவியரும் அண்ணாத்துரையும் படித்தது இங்குதான்.   

Picture

புதன், சனி மாலை வேளைகளில் பரபரப்பாக இருக்கும் இக்கோவில் மற்ற நாட்களில் ஒரு கிராமத்துக் கோவிலுக்கே உரிய அமைதியைத் தாங்கி இருக்கும். காவல் தெய்வங்களான பெரிய கருப்பன், சின்னக் கருப்பன், காளி, சன்னாசி, இடும்பன் என நிறையத் தெய்வங்கள் உண்டு. காளி சுவரில் புடைப்புச் சிற்பமாக இருந்து பின்னாளில் கற்சிலையாக மாற்றப்பட்டிருக்க, இப்பவும் கற்சிலைக்குப் பின்னே புடைப்புச் சிற்பம் இருக்கிறது. தேவகோட்டையில் இருந்து நடந்தே போய் வரும் தூரம்தான்... புதன், சனிக் கிழமைகளில் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்தும் சைக்கிள், வண்டிகள், கார்களிலும் இக்கோவிலுக்கு வருவார்கள். 5.30 மணிக்கு நடக்கும் அபிஷேகமும் அதன் பின்னான தீப ஆராதனையும் காணவே கூட்டம் வரும். அந்த வழியாகச் செல்லும் பேருந்துகள் அந்த நாட்களில் நின்று செல்லும். தேவகோட்டையில் சொந்தத் தொழில் செய்பவர்கள் எல்லாம் தவறாது இந்த இரண்டு நாட்களும் கோவிலுக்கு வருவார்கள்.

இந்தக் கோவிலில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலுக்கு நேர் எதிரே மிகப்பெரிய பொட்டலில் நாடகமேடை கட்டியிருக்கிறார்கள். கோவிலில் எப்போது நாடகம் வைத்தாலும் முதலில் அம்மனின் வம்சாவழியினரான கம்ப நாட்டிலிருந்து ஒருவர் வந்து மேடை ஏறி அம்மனைப் பற்றி பாடி ஆடிய பிறகே நாடகம் தொடரும்.

இந்தக் கோவிலில் நேர்த்திக்கடனாக மாடுகள் விடப்படும். கிட்டத்தட்ட முன்னூறு நானூறு மாடுகள். அவற்றை முறையாகப் பராமரிப்பதில்லை. சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போல் மாடுகள் கூட்டமாய் விருப்பப்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கின்றன. எப்போதேனும் கோவில் பக்கம் வருவதுண்டு. இந்த மாடுகளால் எங்கள் பகுதி விவசாயம் அழிந்த கதையை என் மனசு தளத்தில் எழுதியிருக்கிறேன். ஒருமுறை கண்டதேவி ஆட்கள் மாடுகளை விரட்டி விரட்டிப் பிடித்தார்கள். அதன் பின் அவர்கள் விவசாயம் செய்த இரண்டு கம்மாய்ப் பாசன நிலங்களில் விளைச்சல் இல்லை என்பதை எங்கள் பகுதி கண்கூடாகப் பார்த்தது. இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கோவிலில் அம்மன் சன்னதிக்குப் பின்னே இருக்கும் ஈச்ச மரத்தில் நம் எண்ணம் ஈடேற முடிச்சிப் போட்டு வைத்தால் அது கண்டிப்பாக நிறைவேறும் என்பது ஐதீகம். சில விஷயங்களில் நானும் கண்டிருக்கிறேன். நம் எண்ணம் நிறைவேறிய பின்னர் ஏதேனும் ஒரு முடிச்சை அவிழ்த்து விட்டால் போதும். சிவராத்திரிக்கு கருப்பர் பூ இறங்குதல், காவடிகள் என மதியம் மூன்று மணி வரை கோவிலில் கூட்டம் அலைமோதும். நாட்டார்கள் மேற்பார்வையில் இருக்கும் கோவில் இது. இப்பகுதியில் இருக்கும் பலருக்கு இக்கோவில் குலதெய்வம். மனிதர்களை தெய்வமாக்கிப் பார்த்து வழிபடும் கோவில்களில் இதுவும் ஒன்று. இதேபோல் சமீபத்தில் உதயமாகி, மிகப் பிரபலமான இடையங்காளி கோவிலும் மனிதரை தெய்வமாக்கி வழிபடும் கோவில்தான். கூத்தாடிச்சியைப் பார்க்கும் போது நம்மை ஏதோ ஒரு இனம்புரியாத சக்தி ஈர்ப்பதை உணரலாம்.

Picture

ஒரு காலத்தில் படிக்கிறேன் என கிடையாகக் கிடந்த கோவில். இப்போது ஊருக்குப் போகும் போது தவறாமல் அம்மன் தரிசனம் செய்து விடுவது வழக்கம். முன்பு இடிந்த நிலையில் மண் மூடிய பழைய கோவிலும் அப்படியே இருந்தது. அதையெல்லாம் சுத்தப்படுத்தி கோவிலுக்கான இடத்தை அகலப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கோவிலுக்குச் செல்லும் வழியில்தான் தேவகோட்டையில் பிரசித்தி பெற்ற அருணகிரிப்பட்டினம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் இருக்கிறது.
 
தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் இருப்பவர்கள் ஒரு முறையேனும் இக்கோவிலுக்குச் சென்று அம்மனைத் தரிசித்து வாருங்கள்.

(அம்மன் படம் மனைவி வாட்ஸ்-அப்பில் அனுப்பியது மற்ற படங்கள் தேனக்காவின் சும்மா தளத்தில் சுட்டவை - நன்றி) 
*************  

முத்துக்கமலம் மின்னிதழில் எனது இரண்டாவது சிறுகதை 'தோஷம்' பிரசுரமாகியிருக்கிறது. முடிந்தவர்கள் முத்துக்கமலத்தில் வாசியுங்கள். கதைக்கான இணைப்பு கீழே.

-'பரிவை' சே.குமார்.

சனி, 17 மார்ச், 2018

சுமையா - இலக்கிய நிகழ்வு

Image may contain: 7 people, child and outdoor

சில நிகழ்வுகள் மனசுக்கு நிறைவைக் கொடுக்கும்... அப்படியான நிகழ்வுகள் இப்பாலையில் பூப்பது என்பது அரிது. அதுவும் லேசான குளிர் நிறைந்த மாலையில் செயற்கை ஏரிக் கரையோரம் பேரீச்சம் மரங்கள் இல்லாத... நம்ம ஊர் நாட்டுக்கருவை மரங்களைப் போன்ற மரங்கள் நிறைந்த ஓரிடத்தில் பறவைகளின் ஆனந்த ராகத்தைக் கேட்டபடி, நம்ம ஊரில் மடை திறந்து தண்ணீர் வெளியாகும் போது கேட்கும் ஓசையினை ஒத்த ஓசையை ஏரிக்குள் குழாய் வழிப் பாயும் நீர் கொடுக்க வாசித்த புத்தகம் குறித்து அதன் ஆசிரியருடன் ஒரு அளவளாவல் செய்தல் என்பது வரம்தானே.

கனவுப்பிரியன் அண்ணனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு 'சுமையா'. இது குறித்தான ஒரு விமர்சனக் கூட்டம் ஒன்றை நிகழ்த்த வேண்டுமென காளியின் காதலன் தல பிரபு கங்காதரன் அவர்கள் ஓராண்டுக்கும் மேலாக சொல்லிக் கொண்டே இருந்தார். இப்பாலையில் அப்படியான ஒரு நிகழ்வைச் சாத்தியமாக்குதல் என்பதும் ஒரு குழுவாய் மிகச் சிறந்த எழுத்தாளர்களையும் வாசிப்பாளர்களையும்  என்னைப் போன்ற பார்வையாளர்களையும் (பார்வையாளன் இல்லையென்றால் விழா சிறக்காதுல்ல) ஒருங்கிணைத்தல் என்பது எத்தனை சிரமம் என்பதை இந்த ஓராண்டு சொல்லிக் கொண்டேயிருக்க, ஒரு வழியாக நேற்றைய தினம் அந்த நிகழ்வைச் சிறப்பாக நிகழ்த்தி முடித்துள்ளோம். இதற்காக உழைத்த சகோதரர் பிரபு அவர்களுக்கும் கேமராக் கவிஞர் அண்ணன் சுபஹான் அவர்களுக்கும் நன்றி.

அல் குத்ரா என்னுமிடத்தில் சந்திப்பு என முடிவாக... இதற்கென தூபம் போட்ட பிரபு, பற்றவைக்க.... அந்தத் திரியின் அடியொற்றி சுபஹான் அவர்கள் பத்திரிக்கை எல்லாம் அடித்து அழைக்காமல் முகநூல் மூலமாகவே அழைப்பு விடுத்து ஒரு சிறு கூட்டத்தைக் கூட்டிவிட்டார்... பிரபு அவர்கள் சொன்னதைப் போல் என்னையும் சுபஹான் அவர்கள் அதற்கான அழைப்பு இணைப்பில் இணைக்கவில்லைதான்... கேட்டால் தமிழ்ல ஏன்யா பேர் வச்சிருக்கே... இணைய மாட்டேங்குது என்பார்...:).

அல்குத்ரா பூங்கா வாசலில் குதிரை உபகரணங்கள் விற்பனை நிலையம் முன்னே காத்திருந்து ஒவ்வொருவராய் வர, ஒன்றிணைந்து பூங்காவின் பின்னே சிறிது தூரத்தில் தெரிந்த ஆப்பிள் வடிவ இரும்புக் கூண்டை நோக்கிக் கார்கள் அணிவகுக்க, மேலே சொன்ன செயற்கை ஏரி கண்ணில் காட்சியாய்... நிழலான மரங்களின் கீழெல்லாம் மனிதத் தலைகள். மெல்ல மண் பாதையில் ஊர்ந்து சென்று சற்றே தள்ளியிருந்த ஒரு நிழலில் பாய்களை விரிந்து அமர்ந்து கொண்டோம்.

முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கி, பின்னர் சுய அறிமுகம் ஆரம்பமானது. பிரபுதான் தலைமை என்பதாலும் நம்மைப் பற்றி அவருக்குத் தெரியும் என்பதாலும் அவரே சொல்லிவிட, என்னத்தைச் சாதித்தோம் நம்மைப் பற்றிச் சொல்ல... நமக்கு அதிகம் பேசவும் வராது... அம்புட்டுத்தானா என்று கேட்குமளவுக்கு சொல்லி முடிச்சாச்சு... அதுக்கு மேல என்ன இருக்கும் நம்மிடம்...? வரிசையாய் அறிமுகங்கள்.. எல்லாருமே பெரிய ஆட்கள்... சிறந்த பின்புலம் உள்ளவர்கள். ஒவ்வொருவராய் அறிமுகம் செய்யும் போது ஆச்சர்யமாய் இருந்தது... அடங்கொக்காமக்கா எல்லாம் பெரிய தலக்கட்டா இருக்கே அப்படின்னு யோசனையா இருந்தப்போ நீங்க எப்படி உங்க ஊருல தலக்கட்டோ அப்படி அவங்க அவுங்க ஊருலன்னு சொல்ல மனசைத் தேத்திக்கிட்டாச்சு.

ஒருவர் யாக்கை இயக்குனரின் தம்பி... மற்றொருவரோ ஒரு பிரபல இயக்குநரின் நண்பர். வேஷ்டியில் வந்தவர் ஜெயா தொலைக்காட்சியில் பத்து வருடங்கள் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்... ஒருவர் ஜெயமோகனின் நண்பர்... இப்படியான அறிமுகங்கள் நிகழ நம்ம முத்து நிலவன் ஐயா அவர்களின் மகன் நெருடாவும் வந்திருந்தார். . அபுதாபியில் இருந்து விழா இடம் நோக்கிச் செல்லும் போது வழியில் சந்தித்தோம். அவர் என்னை அடையாளம் கண்டு கொள்ள எனக்குத்தான் முதலில் அடையாளம் தெரியவில்லை, கில்லர்ஜி அண்ணனுடன் அவரைச் சந்திக் சென்றதை நினைவு கூர்ந்தார். ஒரு வழியாக சுய அறிமுகம் முடிந்து 'சுமையா' குறித்தான சுவையான விவாதம் ஆரம்பமானது. 

இப்படியான ஒரு இலக்கிய நிகழ்வை முன்னெடுக்கக் காரணமே படைப்பாளிகளை வெளிக்கொணரவே... ஒரு படைப்பாளியின் படைப்பு குறித்த விமர்சனத்தை... குறிப்பாக நிறைகளைவிட குறைகளைச் சுட்டுக் காட்டி செம்மைப்படுத்தும் நிகழ்வே இது... இது தொடக்கம் தான்... இனி அடுத்தடுத்த நிகழ்வுகள் அடிக்கடி நிகழ வேண்டும். முதல் நிகழ்ச்சியில் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த கனவுப்பிரியனின் சிறுகதைத் தொகுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதாய் தல பிரபு அவர்கள் ஆரம்பித்து வைக்க, ஒவ்வொருவராய் நிறை குறைகளைப் பேச ஆரம்பித்தார்கள்.

'இந்தக் கதையில் திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண் மனம் மாறுவதற்காக ஏன் சியால் கோட் செல்ல வேண்டும்' என்ற கேள்வியை முன் வைத்தார் நெருடா. அதைப் பின்பற்றிப் பேசிய பிலால் அவர்கள் 'ஒரு பெண்... அதுவும் இஸ்லாமியப் பெண் படித்தவளாய் காட்டப்பட்டதில் மகிழ்ச்சி என்றும் எங்கள் வீட்டில் கூட பெண்கள் படிக்கவில்லை... எங்கள் வீட்டில் மட்டுமில்ல நிறையப் பெண்கள் படிக்க வைக்கப்படுவதில்லை... அதை உடைத்து எழுதியிருக்கும் கதைக்கு வாழ்த்துக்கள்' என்றார்.

ரபீக் அவர்கள் எங்களைப் பார்த்த போது கனவுப்பிரியன் அண்ணனிடம் 'நாகராஜைக் கூட்டி வரவில்லையா?' என்றார். அப்போது நம்மைப் போல் நாகராஜ் என்ற நண்பரும் அண்ணனுக்கு இருப்பார் போல என்று நினைத்தால் அவர் ஷாகீர்க்கா தட்டுக்கடை குறித்துப் பேசும் போதுதான் தெரிந்தது அவர் கேட்டது அந்தக் கதையில் வரும் நாகராஜை என்பது. இது ஒரு உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதிய கதையா என்ற அவரின் கேள்விக்கு 'இல்லை... முழுக்க முழுக்க புனைவுதான்... நான் அந்தக் கடைக்குச் சாப்பிடச் செல்வேன்... அப்ப அந்தக் கடையின் கண்ணாடிக்குள் தட்டுக்கடை போட்டோ இருக்கும்... ஏன் இவ்வளவு பெரிய கடையில் இந்தப் போட்டோ என்று யோசித்ததின் விளைவே இந்தக் கதை' என்று விளக்கம் அளித்தார் எழுத்தாளர் கனவுப்பிரியன்.

அடுத்தடுத்தது ஒவ்வொருவராய் பேச பெரும்பாலும் சுமையா என்ற முதல் சிறுகதைக்குள்ளேயே பேச்சு நகர்ந்து கொண்டிருந்தது. பதினெட்டுப் புத்தகங்கள் போட்டிருக்கும்... இந்த நிகழ்வில் ஆறு கதைக்கான கரு எனக்குக் கிடைத்திருக்கிறது என்று சொல்லி எப்பவுமே கதை கவிதைகள் எனச் சிந்திக்கும் (நமக்கெல்லாம் சிந்தக்கவே தோணுதில்லையே... நௌஷாத்கிட்ட டிரைனிங் எடுக்கணும் போல) எழுத்தாளர் நொஷாத் அவர்கள் கதைக்குள் கொடுக்கப்படும் செய்திகளால் கதை வாசிப்பில் அயற்சி ஏற்படுவதாகச் சொல்லி நம்பி கோவில் பாறைகள் கதை பேய், அமானுஷ்யம், சாமி இதில் எந்த வகை எனக்கு அதுதான் புரியவே இல்லை என்றார். 

இதே கருத்தைத் தான் நெருடா அவர்களின் நண்பரான இராமநாதபுரத்துக்கார அண்ணாச்சியும் சொன்னார். மேலும் அவர் கதை மாந்தருடன் மட்டுமே நகராமல் சுற்றியிருப்பவற்றையும் கதைக்குள் கொண்டு வரவேண்டும். அப்படியிருந்தால் கதையின் சுவை இன்னும் கூடும் என்றார். வாசிப்பாளனாய் அவரும் அவருடைய மற்றொரு நண்பரும் முன் வைத்தது இதைத்தான்... இது ஏற்றுக் கொள்ளக் கூடியது. அண்ணனின் கதைகள் செய்திகளைத் தாங்கிப் பயணிப்பதால் பெரும்பாலும் கதை மாந்தர்களின் பின்னே மட்டுமே நகரும்.  அபுதாபியில் இவர்கள் நடத்தும் எரிதழல் என்ற வாசிப்புக் குழுவைப் பற்றி அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

இதற்கான பதிலாய் எஸ்.ராவின் சந்திப்பில் உங்கள் கதைகளில் சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொன்னதைச் சொல்லி  இப்போதைய கதைகளில் இப்படியான மாற்றங்களைச் செய்து வருகிறேன் என்றும் இதன் காரணமாகவே பாதிவரை எழுதிய நாவலை நிறுத்தி மீண்டும் எழுதுவதாகவும் சொன்னார் அண்ணன் கனவுப்பிரியன். விரைவில் ஒரு நாவலை வாசிக்கும் அனுபவம் கிடைக்கும்.

மகேந்திரன் அவர்கள் எழுத்தில் திராவிடம், அரசியல் குறித்துப் பேசினார். மிகவும் தீர்க்கமானதொரு பேச்சு. இந்தக் கதைதான் என்றில்லை காதல் கதை என்றாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்றார்.  அவர் பேசும் போது வடை கொடுக்கப்பட, என் பேச்சை நிறுத்த வடை கொடுக்கப்பட்டதால் இதிலும் அரசியல் இருக்கு என்றார் நகைச்சுவையாய்.

எழுத்தாளர் ஐயனார் அவர்கள் சுமையாவை முழுவதுமாக வாசித்திருந்தார் என்பதை அவரின் கருத்துக்கள் பறை சாற்றின. ஒவ்வொரு கதைக்கும் வலிந்து திணிக்கும் முடிவுகள் தேவையில்லை. முடிவில்லாமல் விட வேண்டும்... வாசகன் இதன் பின்னே என்ன நிகழ்ந்தது என்பதை யோசிக்க வேண்டும் என்றார். 

நௌஷாத் முடிவுகள் இல்லாமல் மொட்டையாய் நிற்கும் கதைகள் முழுமை பெறுவதில்லை... முடிவுகள் வேண்டும் என்பதை விவாத ஆரம்பத்தில் முன் வைத்தார். ஐயனார் அவர்கள் முடிவுகள் தேவையில்லை... வாசகனின் பார்வையில் விட வேண்டும் என்றார். இதற்கான பதிலாய் கனவுப்பிரியன் அவர்கள் வாசகர்களில் பல படிகள் இருப்பது குறித்துச் சொல்லி, ஒருவருக்கு முடிவு வேண்டும்... இன்னொருவருக்கு முடிவு வேண்டாம்... என்று விளக்கம் கொடுத்தார்.

தமிழாசிரியை ஷோபியா அவர்கள் கதைக்குள் செய்திகள் அதிகமிருப்பதால் வாசித்து வரும் கதையின் வரிகள் மறந்து விடுகின்றன என்றார். தமிழாசிரியருக்கு வரிகள் மறக்கலாமா... இருப்பினும் சுமையாவில் அண்ணன் கொடுத்த செய்திகள் அதிகமே.  இப்போது முகநூலில் எழுதும் கதைகள் எல்லாம் முத்தாய்ப்பாய் மலர ஆரம்பித்திருக்கின்றன... இனி வரும் கதைகள் சுமையாவின் சுமைகளைக் குறைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வந்திருக்கும்.

வேல்முருகன் அண்ணன் மிகச் சிறந்த வாசிப்பாளர் என்பதால் அவரின் பேச்சு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. தற்கொலைப் பறவைகள் குறித்துப் பேசினார். அதன் முடிவில் அவள் இறந்து கிடந்தாள் என்பது தேவையில்லாதது என்றார். மகேந்திரன் அவர்களின் எழுத்து அரசியல் என்ற பதம் குறித்து அவருடன் விவாதித்தார். அப்போதுதான் மகேந்திரன் அவர்கள் காதல் பற்றி எழுதினாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்பதை விளக்கினார்.

ஜஸீலா அவர்கள் விவாத ஆரம்பத்திலேயே மற்றவர்கள் பேசட்டும்... குறைகளை நான் இறுதியில் பேசுகிறேன் என்றார். அதன்படி சுமையாவில் ஆயிஷாவின் வயது குறித்த கேள்வியை வைத்தார். அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டது. பச்சையப்பா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் இல்லை என்றார். இவ்வளவு தூரம் மெனக்கெட்டு செய்திகள் சேகரித்து எழுதும் போது அதில் சிறிய தவறு என்றாலும் மற்ற கதைகளின் மீதான நம்பகத்தன்மை குறையும் என்றவர் இந்த இடத்தில் இந்த வரியில் எழுத்துப் பிழை இருக்கு என்ற போது இவ்வளவு தீவிரமான வாசிப்பா என்ற ஆச்சர்யமே எழுந்தது.

ஜெயமோகனின் நண்பரும் எழுத்தாளருமான ஆசீப் மீரான் அவர்கள் மிக விரிவாய் தன் விமர்சனத்தை முன் வைத்தார். நேற்றைய கூட்டத்தின் மொத்தப் பேச்சுக்களுக்குமான முடிவுரையாக அது அமைந்தது. சுமையாவின் முடிவில் அவள் திருமணத்துக்கு ஒத்துக் கொள்வதாய் எழுதியிருப்பதை, இதை ஏன் சியால்கோட் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதை பலர் கேள்விகளாய் முன் வைத்திருந்ததால் அது குறித்துப் பேசினார். இது ஆயிஷாவின் எண்ணம்தானே ஒழிய சுமையா தான் திருமணத்துக்கு ஒத்துக் கொள்வதாய்ச் சொல்லவில்லை என்றார். கதையின் முடிவு வாசகன் கையில் இருக்க வேண்டும். கதைக்குள் வாசகனை இழுக்க வேண்டும் என்பதை இவரும் வலியுறுத்தினார். சுஜாதாவின் கதை, அவரிடம் ஒருவர் கதை எழுதிக் கொடுக்க அதை வாசித்தவர் கதையில் வரும் மரம் என்ன மரம் என்ற கேள்வி கேட்டது என மிக விரிவாகப் பேசினார். மேலும் முகநூலில் கதைகளை எழுதும் போது முடிவை வாசகனிடம் விடுங்கள். அவன் கேள்வி கேட்டால் நீங்கள் பதில் சொல்லுங்கள் என்றார். பெரும்பாலான கேள்விகளுக்கான விடைகளையும் கொடுத்தார். 

மொத்தத்தில் முகநூலில் எழுதுவதை சேகரித்து வையுங்கள்... செய்திகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்... கதாபத்திரத்திரத்தின் பின்னே மட்டும் நடக்காதீர்கள்... சுற்றிலும் கொஞ்சம் பாருங்கள் என்பதே ஒருமித்த கருத்தாக இருந்தது.

இறுதியில் நன்றி கூறிய எழுத்தாளர் கனவுப் பிரியன் அவர்கள் குறைகளைச் சுட்டிக் காட்டியமைக்கும் மிகச் சிறப்பான நிகழ்வாக அமைத்துக் கொடுத்தமைக்கும் நன்றி கூறினார். மேலும் நான் நடையாடி... செய்திகளின் பின்னே செல்பவன் எனவே செய்திகள் இருக்கும் சுமையாவைப் போல பெரும் 'சுமை'யாக இல்லாமல் சுமக்கும் சுமையாக சுவையாக இருக்கும் என்றார்.

வேல் முருகன் அண்ணனுடன் அவரின் நண்பர்கள், புகைப்படக் காதலர்களான ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன் மற்றும் சகோதரர் நெருடா அவர்களின் நண்பர்கள், பிலால் அவர்களின் நண்பர் என எதிர்பார்த்ததைவிட அதிகமாய் நட்புக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். மிகச் சிறப்பான கூட்டமாக அமைந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

சுபஹான் அண்ணா கொண்டு வந்த இஞ்சி டீ, ராமகிருஷ்ணன் அவர்கள் கொண்டு வந்த வடை, வேல் முருகன் அண்ணன் கொண்டு வந்த சுண்டல், ஜஸீலா அவர்கள் கொண்டு வந்த பிரியாணி (சுவை கூட பார்க்கவில்லை... பிரியாணி பாத்திரம் எங்கேய்யா என பாலாஜியும் நாங்களும் தேடியது தனிக்கதை...:)) நொஷாத் கொண்டு வந்த பிஸ்கட், ஜூஸ் என சாப்பாட்டுக்கும் பஞ்சமில்லை. 

ஒரு அரங்கத்துக்குள் அடைபட்டு பேசும் இலக்கியப் பேச்சுக்களைவிட ஒன்றாய் அமர்ந்து ஜாலியாய் அரட்டை அடித்தபடி பேசிய இந்த இலக்கியக் கூட்டம் உண்மையிலேயே மிகச் சிறப்பாய்... மன நிறைவாய் அமைந்தது. தல பிரபு நீ பேசினியான்னு கேக்கக்கூடாது... பார்வையாளன்தாய்யா கெத்து.

விழா ஒருங்கிணைப்பாளர் காளியின் காதலன் பிரபு, போகும் போதும் வரும் போதும் காருக்குள் சிறப்பான இலக்கிய விவாதம் நடத்தினார்.  கூட்டம் முடிந்த பின்னர் ஒரு மணி நேரத்துக்கு மிகச் சிறப்பான விவாதத்தை நிகழ்த்தினார். அதைக் குறித்து தனிப்பதிவே எழுதலாம். புனைவு அபுனைவு குறித்தான விளக்கத்தை அங்கிருந்தவர்கள் ஜென்மத்துக்கும் மறக்க மாட்டார்கள். தீனதயாள் உபத்யாயாவை விட செம... அதுவும் காருக்குள் நௌஷாத்துடனான இலக்கிய விவாதம் இனிமை. 

இப்படியெல்லாம் இடை விடாது தீவிர இலக்கியம் பேசியவர் கூட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன் சரி... அதன் பின் என்னைப் போல் பார்வையாளனாய் ஆகிவிட்டார்... பேசு அஞ்சலி பேசு என அவர் முகம் பார்த்த போதெல்லாம் சிரித்தே மழுப்பி விட்டார். அதேபோல் சுபஹான் அண்ணன் சுய அறிமுகத்துடன் எஸ்கேப், போட்டோ பிடிப்பதில் இறங்கிவிட்டார்.

குறிப்பாக ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தார் பாலாஜி அவர்கள். மதுரை மண்ணுய்யா என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவரின் ரசிக்க வைக்கும் பேச்சு. வேல் முருகன் அண்ணனின் மகனிடம் உன்னைப் பற்றிச் சொல் என்ற போது 'என்னைப் பற்றி என்னைவிட எங்கப்பாவுக்கு ரொம்ப நல்லாத் தெரியும். அவரே சொல்வார்' என்றானே பார்க்கலாம். அதுக்கு அப்புறம் கேப்பீங்க.

இடையிடையே அரசியல், மய்யம், கமல் ரசிகனாய் பாட்ஷா படம் பார்க்கப் போய் இருக்கையை கிழித்த கதை என சோர்வில்லாமல் பயணித்தது நிகழ்வு. 

மொத்தத்தில் மிகச் சிறப்பானதொரு நிகழ்வு.  இப்படியான நிகழ்வுகள் பாலையில் எப்போதேனும் நிகழக் கூடும். இதை நிகழ்த்திக்காட்டிய பிரபு மற்றும் சுபஹான் அவர்களுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 6 மார்ச், 2018

சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)

ண்டனில் இருந்து வெளிவரும் 'காற்றுவெளி' மின்னிதழில் வெளியான சிறுகதை இது. என் சிறுகதைகள் சற்றே நீளமானவைதான்... அதிகம் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு இதழில் மிகப்பெரிய கதைக்கு நான்கு பக்கங்கள் ஒதுக்கிப் பிரசுரித்திருக்கிறார்கள். இதுதான் காற்றுவெளிக்கு நான் அனுப்பிய முதல் சிறுகதை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்..

சிறுகதையைப் பிரசுரித்த காற்றுவெளி ஆசிரியர் சோபா மற்றும் திரு. முல்லை அமுதன் அவர்களுக்கு நன்றி.


காற்றுவெளி வாசிக்கசொடுக்குங்கள்...----📄 

*********

நெஞ்சக்கரை

'து புள்ளயாருபட்டியிலதான் இருக்குதாம்'

செலுவஞ் சொன்ன வார்த்த எனக்குள்ளே முன்னுக்கும் பின்னுக்குமா போயி வந்துக்கிட்டிருந்துச்சு.

'புள்ளயாருபட்டியிலயா... அங்கயா இருக்கா அவோ...?' என என்ன நானே பல தடவ கேட்டுக்கொண்டேன்.  வெவரமாச் சொல்லுடான்னு சொன்னா வயல்ல ஆளுவ களயெடுக்க வந்திருக்காவோ... வெவரமா பொறவு சொல்லுறே... வயல்ல ஆளவுட்டுட்டு இங்கன ஒக்காந்து கத பேசுனா ஒங் கொழுந்தியா மத்தியானத்துக்கு சோறு போடமாட்டான்னு பாதியைச்  சொன்னதோட  எனக்குள்ள தீயப்பத்த வச்சிட்டுப் பொயிட்டான். இந்தச் செலுவப்பய அப்பந்தொட்டு இப்பவரக்கிம் இப்புடித்தான் எதயிம் முழுசாச் சொல்லமாட்டான். அவனுக்கு இப்புடி பாதியச் சொல்லி தவிக்கவச்சிப் பாக்குறதுல தனிச்சந்தோசம்...  இனி எப்ப வந்து அவன் சொல்லுறது...?'

'ஏலா... சுதா... மேல வீட்டுக்குப் போயி செலுவய்யா இருந்தான்னா ஐயா கேட்டாகன்னு மூக்குப்பொடி டப்பாவ வாங்கிக்கிட்டு ஓங்கட்ட எதோ முக்கியமாப் பேசணுமின்னு ஐயா வரச்சொன்னாகன்னு சொல்லிட்டு வா'ன்னு பேத்திய போச்சொன்னா அது டிவிப்பொட்டிக்கு முன்னால ஒக்காந்துக்கிட்டு நருவுசா நகரமாட்டேங்கி...

'இந்த டிவிப்பொட்டி புள்ளயல நல்லாக்கெடுத்து வச்சிருக்கு... ஒரு வேல செய்ய மாட்டேங்கிதுக... எந்த நேரமும் அதக்கட்டிக்கிட்டுத்தான் அழுவுதுக... எப்பப்பாத்தாலும் பாட்டுத்தான் போடுறானுவ...  அதுவும் உருப்படியான பாட்டுக்கூட இல்ல... முக்கலும் மொணங்கலுமா... அதத்தானே இந்த புள்ளய விரும்பிப் பாக்குதுவ...இல்லேன்னா அழுகாச்சி நாடவம் போடுவானுக... இதுகளோட ஒக்காந்து ஒக்காந்து சரவணேமீனாச்சி பாக்க ஆரம்பிச்சிட்டேன். மவமுட்டு சின்னது ஒண்ணு இருக்கி... நாலு வயசுதான் ஆவுது... அது அத்தாரு... உத்தாருன்னு என்னமோ பாட்டுப் போட்டா அந்தக்குதி குதிக்கிது. நமக்கெங்க பிரியிது இப்ப வார பாட்டுக... ம்... கலிகாலம் என்னத்த சொல்ல...'

கயித்துக் கட்டிலிலிருந்து எழுந்து மண்பானத் தண்ணிய சொம்புல மோந்து குடிச்சேன். 'மம்பானத் தண்ணியில வெட்டிவேரு போட்டுக் குடிக்கிறது வெயிலுக்கு ஒரு சொகந்தே... இப்ப அயிசுப் பொட்டியில வச்சி எடுத்துக் குடிக்கிற தண்ணி தொண்டக்குழிய மட்டுந்தான் சில்லுன்னு வைக்கிம்... ஒரு சொவயுமிருக்காது. அடுப்படியில சனி மூலப்பக்கமா ஆத்து மண்ணள்ளிப் போட்டு அது மேல மம்பானய வச்சி ஊத்தி வச்சிருக்க தண்ணியக் குடிச்சா ஒடம்பெல்லாம் சில்லுன்னு வக்கிறதோட என்ன சொவ... கம்மாத் தண்ணியவுட மழத்தண்ணியா இருந்தா இன்னுஞ் சொவ கூடத்தான் இருக்கும்... குடிச்சவனுக்குத்தா இதோட அரும தெரியும்'

'இதுககிட்ட சொன்ன எந்தக்காரியமும் நடக்காது.. நாமதான் அவமூட்டுக்குப் போவனும் போல... வெரட்டி வெரட்டிப் போனமுன்னா ரொம்ப பிகு பண்ணுவான்.... இந்தா புள்ளயாருபட்டியிலதான் இருக்கா நமக்குத் தெரியல... நாலெடத்துக்கு வேலக்கிப் போனாமட்டும் போதுமா... ஊரு ஒலவத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்காம இருந்து என்னத்த சாதிக்கப் போறேன்னு அப்பத்தா அடிக்கடி சொல்லும்... செலுவத்துக்கு ஊரு ஓலகத்துல நடக்குறதெல்லாம் அத்துபடி.. எப்புடித்தான் அம்புட்டு நீசயுந் தெரிஞ்சிப்பானோ தெரியல... நமக்கு வூட்டுக்குள்ள நடக்குறதுகூட நறுக்காத் தெரியமாட்டேங்கி... இதுல நாட்டுல நடக்குறது எங்குட்டுத் தெரியும்...'

"ஏலா... செலுவமூட்டு வரக்கிம் பொயிட்டு வாரேன்" என பேத்தியோடு டிவி பாத்துக்கிட்டு படுத்துக்கெடந்த எம்பொண்டாட்டி ராஜாத்திக்கிட்ட சொல்லிட்டு துண்ட ஒதறி தோள்ல போட்டுக்கிட்டு மேலத்தெருப் பக்கமாப் போனே.

'வா லாசு... ஒக்காலு...' என்றான் செலுவம் வாய்க்குள் இருந்த சோற்றோடு... தட்டுல மோர்ச்சோத்துல சின்ன வெங்காயம் மெதந்தது. வாயிலிருந்த சோத்த மென்னு விழுங்கிட்டு சொம்புத் தண்ணிய மடக்கு மடக்குன்னு குடிச்சிட்டு ஒரு செருமலோட, 'இப்பத்தா வயல்லயிருந்து வந்தே... வெயில்ல நின்னது மசண்டய வந்திருச்சு... வெயிலாவா போடுது... தயிருக் கஞ்சியில ஊறுகா போட்டு, பேத்தியா உறிச்சிப் போட்ட சின்ன வெங்காயத்த கடிச்சிக்கிட்டு  குடிச்சதுந்தே நல்லாருக்கு. வெயில்ல நிக்கமுடியலன்னு சொல்லிக்கிட்டு வயல்ல களயெடுக்கிற ஆளுவல விட்டுட்டு இங்கிட்டு வந்துட்டா, ஊருக்கத பேச ஆரம்பிச்சிருவாளுக... இன்னக்கி கூலி எம்புட்டு ஆயிப்போச்சி பாத்தியா... இந்தக் கூலிக்கே ஆளுக்கெடக்கல... ஊருக்கு முன்னாடி  நீ களயெடுத்து தப்பிச்சிக்கிட்ட... நல்லவேள எலங்க அகதிய இங்குன இருக்கதால ஏதோ அதுக வருதுக.... அதுகளும் இல்லன்னா நாமதான் கள எடுக்கணும் போல... ஆளும்பேருமா நின்னு எடுத்தா வேல சீக்கிரம் முடியுமில்ல... அதான் அவுக கூட நானும் ஒங்கொழுந்தியாவும் நின்னு களயெடுத்தோம்... இன்னங் கொஞ்சக் காலத்துல வெவசாயமே இல்லாமப் போயிடும் பாரு...  " என்றபடி வாயில் சோத்தை அள்ளி வைத்தான்.

வாயிலிருந்த சோத்தை முணுங்கிட்டு பேச்சைத் தொடர்ந்தான் "வெயிலுக்கு எதமா கஞ்சியத்தவர வேறெதக் குடிக்க முடியுஞ் சொல்லு... அதுவும் எருமத் தயிரும் சின்ன வெங்காயமும் சேத்துச் சாப்பிட்டா சொர்க்கந்தானேப்பா... கயித்துக்கட்டில வேப்பமரத்தடியில போட்டு படுத்தா சும்மா தூக்கம் சொவமா வருமில்ல" என சிலாகித்துச் சொன்னவன் "ஆமா...என்ன இந்த நேரத்து வந்துருக்கே... மூக்குப்பொடி வேணுமாக்கும்... டப்பால கொஞ்சந்தேங் கெடக்கு... இன்னிக்கி சாந்தரம் டவுனுக்குப் போயில பொடிமட்ட வாங்கிட்டு வரணும்... ஏ கெவுரி... பெரியய்யாவுக்கு அந்த மாடத்துல இருக்க மூக்குப்பொடி டப்பாவ எடுத்துக் கொடு" என்று சொல்ல, கெவுரி அதை எடுத்தாந்து நீட்ட, மூடியைத் திறந்து உள்ள கெடந்த பொடிய ஆள்காட்டி வெரலால் கொஞ்சமாக மேலிழுத்து கட்டை விரலால் மெல்லப் பிடித்து ஒரு உதறு உதறி மூக்கில் வைத்து இழுத்தேன். நான் உதறியதில் பறந்த பொடிக்கு கெவுரி 'அச்சுக்' எனத் தும்ம, நான் 'ம்க்கும்...' எனச் செருமி மூக்கை தோள்ல கெடந்த துண்டால தேய்த்துக் கொண்டேன்.

'சரி.. சரி.. வேமாய்ச் சாப்புட்டு வா... ஒங்கிட்ட கொஞ்சம் பேசணும்...' என்றேன் மெல்ல.

"அதா சேதி... அதான என்னடா எலி அம்மணத்தோட ஓடுதேன்னு பாத்தேன்... காலயில சொன்னதுலருந்து சோறு தண்ணி எறங்கலயோ... அப்பவும் சாப்புடாமக் கெடந்த பயதான நீயி..." எனச் சிரித்த செல்வம் தட்டைத் தூக்கி அதிலிருந்த தண்ணிய அலசிக் குடிச்சிட்டு ஏப்பம் விட்டபடி தட்டிலேயே கையைக் கழுவ, கெவுரி தட்டை எடுத்துக் கொண்டு போனது.

"ம்... ஒனக்கு வெவரந் தெரியணும்... அம்புட்டுத்தானே..." என்றபடி தூணில் சாய்ந்து கொண்டு பக்கத்தில் இருந்த வெத்தலைப் பொட்டியிலிருந்து கற்பூர வெத்தலையை எடுத்து காம்பு கிள்ளி, பின்பக்கமாக சுண்ணாம்பு தடவி, தொடயில வச்சிக்கிட்டு, களிப்பாக்கெடுத்து பாக்குவெட்டியால் வெட்டி வாயில போட்டுக்கிட்டு "வெத்தல பொடுறியா? எனக்கு இந்த பாக்கெட்டு பாக்குல்லாம் பிடிக்கிறதில்லை... தொவப்பில்லாம இனிச்சிக்கிட்டு" என்றபடி வெத்தலப் பெட்டிய நீட்டினான்.

"வாணாம்... எனக்கு அவோ புள்ளயாருபட்டியியலதான் இருக்காளான்னு தெரியணும்... எதயுமே பாதியில சொல்லி பரிதவிக்க வக்கிறத நீ இன்னமும் விடல..." என்றேன் கோபமாக.

"எதுக்கு உனக்கு இம்புட்டுக் கோவம்... எத்தன வருசமாச்சு... இனி அவோ எங்க இருந்தா ஒனக்கென்ன... எதுக்கு தேவயில்லாத வேல..அவளுக்குன்னு ஒரு குடும்பமிருக்கு... அதத் தெரிஞ்சிக்க... அன்னக்கி ஒன்னால அவ சொன்னத செய்ய முடியல... அப்ப குடும்பங் கண்ணுல தெரிஞ்சிச்சி... இப்ப குடும்பந் தெரியலயாக்கும். அது செரி... இப்ப அவளப் போயி பாத்து... என்ன பண்ணப் போற... விட்டுட்டுப் போவியா... நாஞ் சொன்னத தூக்கிகிட்டு வெயில்ல விழுந்து படுக்காம வெவரங்கேக்க ஓடியாறே..." வெத்தலையை மென்டபடி சிரிச்சிக்கிட்டே கேட்டான்.

எனக்குச் சுள்ளுன்னு வந்துச்சு பாக்கலாம் "அப்பொறம் என்ன மசுத்துக்கு எங்கிட்ட சொல்ல வந்தே... பொறவு சொல்றேன்னு சொன்ன வாயி எந்த வாயி... இந்த மசுத்தைச் சொல்லமா இருந்திருந்தா நா எதுக்கு நாயி மாதிரி இங்க வரப்போறேன்..." என்றபடி கோபமா எந்திரிச்சி துண்ட ஒதறினேன்.

"யேய் இருப்பே... இந்த கோபமசுத்துக்கு மட்டும் கொறச்சலில்ல... சும்மா சொன்னாக்கூட படக்குன்னு எம்பெரியப்பமுட்டுக் கோபமட்டும் முன்னாடி வந்திரும்.. எம்பெரியப்பன் ஒனக்கு என்னத்தக் கொடுத்துட்டுப் போனாரோ இல்லயோ அவரோட கோவத்த மட்டும் மறக்காம கொடுத்துட்டுப் போயிட்டாரு..." என்றபடி எழுந்து வேட்டிய அவுத்து நல்லாக்கட்டிக்கிட்டு எங்கூட நடந்தான்.

கோவிலுக்குப் பின்னால நிக்கிற வேம்போட சிலுசிலு காத்த அனுபவிச்சிக்கிட்டு, அதோட வேருல ஒக்காந்தோம். அவந்தான் பேச்ச ஆரம்பிச்சான்.

"நேத்துச் சாந்தரம் தேவட்டைக்குப் போனேனுல்ல... அப்ப நம்ம சுப்பிரமணி அயிரப் பாத்தேன்... அதான்ப்பா நம்ம கூத்தாடிச்சி அம்மங்கோவிலு பூசாரி செல்லய்யிரோட மவே... அட மூத்தவன்... கண்டேவி கோவிலு பாக்குறானுல்ல... அட நம்மூட படிச்சானுல்ல...  அவங்கூட பேசிக்கின்னு நிக்கிம்போது பேச்சு வாக்குல அவந்தே அவோ புள்ளயாருபட்டியில இருக்கதாச் சொன்னான்..."

"ஆமா... அவனுக்கு அப்பமே அவ மேல ஒரு கண்ணு... இப்பவும் பேச்சுவாத்தயில இருக்காவலோ என்னவோ..."

"சொந்தக்காரவுகளுக்குள்ள பேச்சுவாத்த இருக்காதா பின்ன... குடியானவன் கண்ணு வக்கிறப்போ... ஒரே சாதிக்காரன்... அதுவும் சொந்தக்காரன்... அவனுக்கு அவோ மொறப்பொண்ணு வேற.... அவனுக்கு ஆசயிருந்துச்சி... அவதான் அவனக் கட்டிக்க மாட்டேனுட்டா... அவோ மனசுல அன்னக்கி வேறயில்ல இருந்துச்சு... " என என்னய ஒரப்பார்வை பார்த்துச் சிரித்தான்.

"நீ கிண்டல் பண்ணுனது போதும்...  புள்ளயாருபட்டியில ஆரு வீட்ல இருக்காளாம்..?"

"அவளுக்கு ஒரு பொம்பளப் புள்ளதானாம்... அவ வீட்டுக்காரரு ரிட்டையரு ஆயிட்டாராம்... மாப்ள புள்ளயாருபட்டி கோவில்ல பெரிய பொறுப்புல இருக்காராம்... அதான் இங்கிட்டு வந்துட்டாக.... காரக்குடிப்பக்கம் வூடு பாக்குறாவளாம்... அவோ மாப்ள இனி எதுக்கு தனியா வூடு புடிச்சி இருந்துக்கிட்டு எங்க கூடவே இருந்திருங்கன்னு  சொல்றாராம்... அவரோட அப்பாரு பரலோகம் பொயிட்டாராம்... ஆத்தாக்காரி மட்டுந்தானாம்... எல்லாருமா இருக்கலாமுன்னு அவருக்கு ஆசயாம்... என்னயிருந்தாலும் மக வீடுதானே... அதனால அவளுக்கு தனியா இருக்கதுதான் நல்லதுன்னு தோணுதாம்... சுப்பிரமணி பாக்கப் போனப்ப அவனுக்கிட்ட சொன்னாளாம்." என்றான்.

"எனக்கு அவோ வெலாசம் வேணு... இல்லேன்னா அவ மாப்ள பேர மட்டுமாச்சும் கேட்டுச் சொல்லு... நா போயி வெசாரிச்சி பாத்திட்டு வாறேன்"

"ஒனக்கு என்ன மசுத்துக்கு இப்ப அவோ வெலாசம்... அன்னக்கி முடிவெடுக்க முடியாதவனுக்கு இப்ப எதுக்கு அவோ வூடு தேடிப்போ வேண்டியிருக்கு... அதெல்லாம் ஒரு மசுரும் வேணாம்... ஒங்கிட்ட வந்து சொன்னது என்னோட பெசவு... காலயிலருந்து காத்திய மாசத்து நாயி மாரிக்கி திரியிறே போல... இதெல்லாம் வாணாம்... சொல்லிட்டேன்... வீணாவுல பெரச்சன வரும்..."

"நாம்பாட்டுக்க செவனேன்னுதானே இருந்தே... என்ன மசுத்துக்கு அவோளப் பத்தி சொல்ல வந்தே...ஏத்திவுட்டுட்டு இப்ப பெரச்சன வரும்... மசுரு வருமுன்னு சொல்ற... இந்த வயசுல என்ன பெரச்சன நக்கிக்கிட்டு வரப்போவுது... இப்ப அவள கூட்டிக்கிட்டு ஓடப்போறேனாக்கும்... முடிஞ்சா சொல்லு... இல்லன்னா விடு... நா எப்புடியாச்சும் வெலாசத்த வாங்கி அவளப் பாத்துக்கிறே..." என்று கோபமாகவும் சத்தமாகவும் பேசினேன்.

"ஏய் இருப்பே... எதுக்குக் கத்துற... ஆருக்காச்சும் வெவரந் தெரிஞ்சி அத்தாச்சிக்கிட்ட சொன்னா அம்புட்டுத்தான்... அதச் தெரிஞ்சிக்க மொதல்ல... இனி அவளப் பாக்கிறதால என்ன பெரோசனங்கிறே... செரி விடு... ஒனக்கு வெலசாந்தானே வேணும்.... நாளக்கி கேட்டுச் சொல்லுறே.... எனக்கென்ன வந்துச்சி... வேலியில போற ஓணானை வேட்டிக்கிள்ள பிடிச்சி விட்டுக்கிட்டு குத்துதே கொடையுதேன்னு சொன்னா... இந்த வாயி மசுத்தாலதான் பெரச்சன வருதுன்னு எம்பொண்டாட்டி திட்டுறதுலயிம் குத்தமில்ல... என்ன சொன்னே... இழுத்துக்கிட்டு ஒடுறியா.... பொட்டச்சி தகிரியமா சொன்னப்பவே ஒன்னால இழுத்துக்கிட்டு ஓட முடியல... இப்ப இழுத்துக்கிட்டு ஓடிட்டாலும்... பொளந்து போயிரும்..."

"இங்கரு செலுவம்...அவளப் பாக்கணுமின்னு தோணுது.... முடிஞ்சா வாங்கிக் கொடு... நீயும் கூட எங்கூட வா.. அவளப் பாத்துட்டு அடுத்த காருக்குத் திரும்பிடுவோம்..."

"இங்கேருப்பா... ஒனக்கு வெலாசம் வாங்கித்தாரேன்... என்ன ஆள விடு... அன்னக்கி ஒங்களுக்கு காவக்காத்த மாரி இன்னக்கிம் காவக் காக்கணுமாக்கும்... ஒன்னு மட்டுஞ் சொல்றேங் கேட்டுக்க... போனமா பாத்தமா வந்தமான்னு இரு... அப்பொறம் அடிக்கடி தொடராத... அவோ இப்ப மாப்ள வீட்டுல இருக்கா... நீ யாரு... எதுக்கு அடிக்கடி வாரேன்னு  தேவயில்லாத பெரச்சன வரும்... பாத்துக்க... அம்புட்டுத்தான் நாஞ்சொல்லுவேன்."

"செரி... செரி...எங்களுக்குத் தெரியும்... புத்தி மசுரெல்லாம் சொல்லவேண்டாம்... உங்க வேலப்பு***** பாருங்க" என்றேன் கடுப்பாய்.

"ஏ வேலப்பு***** பாத்திருந்தா இப்ப என்ன மசுத்துக்கு உங்கிட்ட பேச்சு வாங்கிக்கிட்டு இருக்கேன்.." எனச் செலுவம் எழ, நானும் எழுந்து துண்ட ஒதறினேன்.

'செலுவம் வெலாசம் வாங்கிக் கொடுக்க, இந்தா தேவட்டயிலருந்து காரு ஏறியாச்சு... அவோ மாமாவூட்டு நல்லது கெட்டதுக்கு அப்பாதான் சமயல்... அவோ மாமா சீனிவாசய்யர் அப்பவ மாப்ளயின்னுதான் சொல்லுவாரு... அப்பாக்கு எரனியா ஆப்ரேசன் பண்ணியிருந்தப்ப அவரால போமுடியாம என்னய போச் சொன்னாரு... அன்னக்கி சீனிவாசய்யரோட பேத்தியான அவள பாவாட தாவணியில பாத்தேன்... என்ன அழகு... சொக்கிப் பொயிட்டேன்... அப்பொறம் அவளுக்காவே அடிக்கடி அங்க போனேன். போறப்பல்லாம் பாத்து... பேசி.. எங்களுக்குள்ள நெருக்கமாயிருச்சி... அவோ காலேசு படிச்சாதால அடிக்கடி அவளச் சந்திக்கிறது வெளிய தெரியாம இருந்திச்சி... அப்பல்லாம். எங்களுக்குத் தொண செல்வந்தே... எப்படியோ வெசயம் அப்பா காதுக்கு வர, அந்தவூடு எனக்கு எம்புட்டோ செஞ்சிருக்கு.. உண்ட வூட்டுக்கு ரெண்டகம் பண்ணினா உருப்பட முடியாது தெரிஞ்சிக்க.. ஐயரு வூட்டுப் புள்ளய குடியானவன் கூட்டிக்கிட்டு வரமுடியுமா... சமக்கப் போடான்னு சொன்னா சமஞ்சபுள்ளய பாத்துக்கிட்டு இருக்கியாம்..? சீனிவாசய்யருக்குத் தெரிஞ்சா என்னாகுந் தெரியுமா...? நீ இங்கன இருக்க வேண்டா... ஒம்மாமே ஆந்திராவுல இருக்கான்...அவனுக்கு கடுதாசி போடுறே... அவனுக்கிட்ட போயிடு...' அப்படின்னு கத்தி அனுப்பி வச்சிட்டாரு. '

'வீட்டுக்குத் தெரியாம கடுதாசி போட்டுப்போம்... ஊருக்கு வந்தா அவளத்தேடிப் போயி பாப்பேன். அவளோட படிப்பு முடிஞ்சி கலியாணமும் முடிவு பண்ணிட்டாங்க... என்னால் ஒண்ணுஞ் செய்ய முடியல... நாம ஓடிப்போயிடலாமுன்னு அவ கடுதாசி போட்டா... எனக்குப் பின்னால வெளஞ்சி நின்ன தங்கச்சியளோட வாழ்க்க பெரிசாத் தெரிய என்ன சொல்றதுன்னு தெரியாம வீட்டுல பாக்குற மாப்ளய கட்டிக்க அதுதான் ஒனக்கு நல்லதுன்னு கடுதாசி போட்டுட்டு மனச தேத்திக்கிட்டு ஒதுங்கிட்டேன்... செலுவந்தான் அவ கலியாணத்துக்குப் பொயிட்டு வந்து ஒன்னயத்தான் ரொம்பக் கேட்டா... கலியாணத்துக்காச்சிம் வந்திருக்கலாமுல்லன்னு சொன்னான்னு கடுதாசி போட்டிருந்தான். அதுக்கு அப்பொறம் ஊருக்குப் போவே பிடிக்கல... காலம் எல்லாத்தையும் மாத்தி, தங்கச்சிக கலியாண முடிச்சி... மாமா மவளயே கட்டிக்கிட்டு, ஆந்திரா போவாம மறுபடியும் அப்பாவோட சமயல்ல எறங்கிட்டேன்... '

'ம்... அந்தா இந்தான்னு முப்பது வருசத்துக்கு மேல ஆச்சி... எனக்குள்ள அவோ இருக்கமாரி அவளோட நெனவுல நானிருப்பேனான்னு தெரியல... இத்தன வருசத்துக்கு அப்புறம் இந்த வயசுல அவளத் தேடிப் போறது சரியான்னும் தெரியல... அன்னக்கி அவ சொன்னமாரிக்கி கூட்டிக்கிட்டு ஓடியிருந்தா எங்க வாழ்க்க மாறியிருந்திருக்கும்... அம்புட்டுத் தப்பும் எம்பக்கந்தானே... பொட்டச்சி தகிரியமா ஓடிப்போவோமுன்னு சொன்னப்ப நாந்தானே பொட்டச்சியாட்டம் வீட்டுல பாக்குற மாப்ளய கட்டிக்கன்னு சொன்னேன். அவள விரும்பும் போது தங்கச்சிக வெளஞ்சி நின்னது எனக்குத் தெரியல...  அவளோட மனசுல ஆசய வளத்திட்டு அவோ கட்டிக்கடான்னு சொன்னப்பத்தானே தங்கச்சிக தெரிஞ்சாக.  ஐயரு குடியானவன் சூத்திரமெல்லாம் அப்பா சொன்னப்பல்லாம் எனக்குத் தெரியல... முடியாதுன்னு தெரிஞ்சப்பத்தான் எல்லாம் தெரிஞ்சது... இப்ப என்ன அவசியம் வந்திச்சி அவளப் போயி பாக்கணுமின்னு... எப்பவோ செத்துப்போன நேசத்தை இப்ப தூசி தட்டி என்னாகப்போவுது..? இனி அவளப் போயி பாத்து பழங்கதய ஞாபகப்படுத்துறதுல என்ன வந்துரப்போவுது..? இதால ஆருக்கு என்ன லாபமுன்னு யோசிச்சேன்'.

தேவட்டய நோக்கி காருல திரும்பி வந்துக்கிட்டிருந்தேன். டிக்கெட் வாங்கி பாக்கெட்ல வச்சிக்கிட்டு அவோ வெலசமெழுதியிருந்த பேப்பரக் கிழிச்சி சன்ன வழியா வீசினேன். 

அது காற்றில் பறந்து சென்றது.
******
பிரதிலிபி 'அன்பென்று கொட்டு முரசே!' சிறுகதைப் போட்டிக் களத்தில் நான் எழுதிய சற்றே வித்தியாசமான காதல் கதை என்று நான் நினைக்கும் (!) 'இன்னாருக்கு இன்னாரென்று...' என்ற கதையும் இருக்கு. 

முடிந்தால் வாசியுங்கள்... வாசித்தால் தவறாமல் கருத்துச் சொல்லுங்க... கருத்துச் சொல்லும் முன்னே மறக்காமல் மதிப்பெண் கொடுங்கள்.

கதை குறித்து சில கருத்துக்கள் வந்திருக்கின்றன. அதில் திரு. முஹமது சர்பான் அவர்கள் எழுதிய கருத்து உங்கள் பார்வைக்கு... (எப்படியும் உங்களை வாசிக்க வைக்கும் முயற்சியில்..ஹி..ஹி..)

'எளிமையாக வாழ்க்கையின் திருப்பங்களை உணர்வுகளில் ஆணி அடித்தாற் போல் வெளிப்படுத்தும் கதையோட்டம் மனம் தொட்டது. உள்ளங்கள் சுமந்த அன்பு பலருக்கு ஒரு சிலுவைக்குள் முடிந்து  போகிறது; சிலருக்கு ஒரு பொம்மை போல்  சுட்டித்தனமாய் ஆயுளை கடத்துகின்றது. நாம் நினைப்பது  ஒன்று நடப்பது வேறு இது தான் வாழ்க்கை. அன்பை சுமக்கும்  உள்ளங்கள் எல்லாம் தூய்மையானவை அது  மரணத்தின் பின் கூட காலாவதியாவதில்லை. இன்னும் எழுதுங்கள்  வாழ்த்துக்கள்'
  
கதைக்குச் செல்ல 'இங்கு' சொடுக்குங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.