வெள்ளி, 26 ஜூன், 2015

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி...கிடைத்ததா?

ண்ணாம் நம்பர் பெல்ட்டின் அருகில் நின்ற நான் வேகவேகமாக ஆறாம் நம்பர் பெல்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் ஒருவித பதட்டம் கலந்த பயத்துடன்...

அங்கே ஒரு சிறிய அலுவலகம்... நடுநாயகமாக சூடான் பெண் ஒருவர் அமர்ந்திருக்க அவருக்கு அருகே பிலிப்பைனைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் பக்கத்தில் ஒரு அரபிப்பெண் அமர்ந்திருந்தார்கள். நான் நேராக சென்று சூடானியிடம் என்னோட பெட்டி காணாமப் போச்சு... யாரோ மாத்தி எடுத்துக்கிட்டுப் பொயிட்டாங்க... அதே மாதிரி பெட்டி ஒண்ணு அங்க இருக்குன்னு சொன்னேன். உடனே இப்பத்தானே வந்தே... பதட்டப்படாதே... புகார் கொடுத்துட்டுப் போ... வந்துரும் என்றார். புகார் கொடுத்துட்டுப் போறது பிரச்சினை இல்லை... அதுல என்னோட சான்றிதழ் இருக்கு... நான் அபுதாபி போகணும்... திரும்ப எப்ப வந்து... எப்ப வாங்குறது என்றேன். உடனே இங்க யாராவது சொந்தக்காரங்க இருந்தா புகார் பேப்பரைக் கொடுத்துட்டுப் போ... அவங்க வாங்கிக் கொடுத்துருவாங்கதானே என்றார். சரி என ஆமோதித்தேன்.

மீண்டும் அவர் ரெண்டும் ஒரே மாதிரி பேக்கா? என்று கேட்டு ஒண்ணு செய்யி வெளியில போயிப் பாரு... யாராவது வச்சிருப்பாங்க... இல்லேன்னா திரும்பி வா என்றார். உடனே வெளியே ஓடினேன். அந்தக் கடைசியில் இருந்து இந்தக் கடைசி வரைக்கும் ஓடினேன்... எல்லோரும் நிக்கிறானுங்க.. என்னோட பெட்டியை எடுத்த புண்ணியவானை மட்டும் காணோம். சரி இனி இங்க நின்னு வேலையில்லையென மறுபடியும் சூடானியை தேடிப் போனா செக்யூரிட்டி உள்ள போகமுடியாதுன்னு சொல்லிட்டான். அப்புறம் அவனுக்கிட்ட விவரம் சொல்ல, அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் இருந்த போனைக்காட்டி அதை போயி எடுத்தியன்னா அவங்களுக்கு ரிங்க் போகும். உன்னைய வந்து கூட்டிக்கிட்டுப் போவாங்க என்றார். 

அங்கிருந்து அவன் காட்டிய இடத்துக்கு ஓடி போனெடுக்க அவர்கள் பேச, அவர்களிடம் மீண்டும் கதை சொல்ல கொஞ்ச நேரத்தில் அதற்கு அருகில் இருந்த வாயிலின் வழியாக ஒருவர் வந்து கூப்பிட மீண்டும் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்து உள்ளே சென்றேன். அப்போது அந்த தமிழர் வந்து என்ன இல்லையா என்றார். இல்லைங்க மறுபடியும் ஒரு பார்வை பார்க்கட்டுமா என்றேன் ஒரு நப்பாசையில்... இல்லைங்க நான் உள்ளயே போயிப் பார்த்துட்டு வந்துட்டேன். உங்க பேக் இல்லை. நீங்க புகார் கொடுத்துட்டுப் போங்க என்றார்.

சரி ஆனது ஆச்சு... இனி என்ன செய்ய புகார் பண்ணிட்டுப் போவோம் என அவர்களிடம் சென்றேன். என்னைப் பார்த்ததும் என்ன கிடைக்கலையா என்றவர், சரி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆபீசுக்கு போன் பண்ணி தொடர்பு எண் இருக்கான்னு கேட்போம் என்றார். அருகிலிருந்த பெண்ணிடம் சொல்ல அவரோ டேக் (Tag) நம்பர் வேண்டும் என்று சொல்லி என்னை அந்தப் பெட்டியில் இருக்கும் நம்பரைக் குறித்து வா என்றார். உடனே ஒண்ணில் இருந்து ஆறுக்கு ஓடினேன். பேரையும் நம்பரையும் எழுதிக் கொண்டு ஓடிவந்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தேன். அவர் ஏர் இந்தியாவுக்கு அழைத்து விசாரிக்க அவர்களோ இன்னொரு நம்பர் அதாவது Sequential Number வேணுமின்னு சொல்லிட்டாங்க. உடனே ஓடிப்போயி பேக்கையே தூக்கிக்கிட்டு வந்தேன். போன் செய்த பெண்ணைக் காணோம். அங்கே ஒரு லெபனானி அதிகாரி அமர்ந்திருந்தார்.

நான் சொல்லும் முன்னே பிலிப்பைனிப் பெண் விவரம் சொல்ல, அவர் ஏர் இந்தியாவுக்கு அழைத்தார். அவர்கள் துபாய் தொடர்பு எண் இல்லை என்றும் இந்தியா எண்தான் இருக்கு என்றும் சொல்லி நம்பரைக் கொடுத்தார்கள். என்னிடம் உனது போனில் இருந்து தொடர்பு கொள் என்றார். ஐயா சாமி ஊருக்குப் போயி நாப்பது நாளைக்கு மேலாச்சு. போன்ல இங்க கூப்பிடத்தான் காசிருக்கு.. ஊருக்கெல்லாம் கூப்பிடணுமின்னா கார்டு போட்டாத்தான் முடியும்ன்னு சொல்ல, அப்ப புகார் கொடுத்துட்டுப் போ என்றார். பின்னர் என்ன நினைத்தாரோ அவரே போன் பண்ணிட்டு சுவிட்ச் ஆப்ல இருக்கு... புகார் கொடுத்துட்டு போ என்று சொல்லி அதில் என்னென்ன இருந்தது என விவரமாகக் கேட்டு  எனது போன் நம்பர் விவரம் எல்லாம் போட்டு புகார் பதிவு பண்ணி ஒரு பேப்பரைக் கொடுத்து உங்க பெட்டி வந்ததும் போன் பண்றோம். வந்து வாங்கிக்கிட்டுப் போங்க என்றார்.

சரி என தலையாட்டிவிட்டு கிளம்ப, அந்த சூடானி வெளியில மறுபடியும் போய்ப்பாரு... ஒருவேளை அவங்க வந்திருந்தா கூட்டிக்கிட்டு வா... என்று சொல்லி அனுப்பினார். என்னடா இப்படி ஆச்சே... சான்றிதழ் எல்லாம் இருக்கேன்னு கவலையோட வந்தேன். வெளியே வந்து எவனாவது நிக்கிறானான்னு தேடினா ரெண்டு பேரு நம்ம பேக்கை வச்சிக்கிட்டு திருவிழாவுல காணாமப் போன பிள்ளைங்க மாதிரி நின்னானுங்க... போயி புடிச்சி ஏன்யா நீ பாட்டுக்கு எடுத்துக்கிட்டுப் பொயிட்டே... ரெண்டு மணி நேரமா நாயா அலையிறேன்னு சொன்னதும் இல்லைங்க எந்தம்பி அவசரத்துல மாத்தி எடுத்துக்கிட்டு வந்துட்டான்... சாரிங்க என்றான் அண்ணன்காரன். ஏங்க உங்க தம்பிதான் கொட்டையெழுத்துல பேரெழுதி வச்சிருக்காரே பின்ன எப்படிங்க... நல்ல ஆளுங்க... சரி விடுங்க... நல்ல நேரத்துல வந்தீங்க... இல்லேன்னா கவலையோட அபுதாபி போயிருப்பேன்னு சொல்ல எப்படி உள்ள போறதுன்னு கேட்டானுங்க... வாங்கன்னு மீண்டும் போன்... அந்தத் தமிழர் வந்து சொன்னேன்ல கெடச்சிருச்சு பாருங்க என்று கூட்டிச் சென்றார்.

அந்த சூடானி பாத்துட்டு கிடைச்சிருச்சா... சேம் சேம் பேக்கா... என்று சொல்லிச் சிரித்தவர். உம்பேரை எழுதிட்டு இப்படி எடுத்துக்கிட்டுப் பொயிட்டியே என்று அவனைப் பார்த்து சத்தம் போட்டார். சாரிங்க அவசரத்துல மாறிடுச்சு என்றான். இனிமே வரும் போது அவசரப்படாம உன்னோட பேக்கை எடுத்துக்கிட்டுப் போகணும் அடுத்தவங்க பேக்கை எடுக்கக்கூடாது என்றார் சிரித்துக் கொண்டே. பின்னர் புகாரை திரும்பப் பெற்று கையொப்பம் இட்டுக் கொடுக்க, அவனிடம் பேக்கை திறந்தியா என்று அந்த சூடானி கேட்க இல்லை என்றான். உடனே நீ திறந்து உன்னோட பொருட்கள் இருக்கான்னு பாரு... குறிப்பா சான்றிதழ் பைல் இருக்கான்னு பாரு என்றார். 

நானும் திறந்து பார்த்து இருக்கு என்று சொல்லவும் அவனைப் பார்த்து நீ போ என்றார். உடனே அவன் நன்றி சொல்லிக் கிளம்ப, எங்களுக்கு நன்றி சொல்றது இருக்கட்டும் அவருக்கிட்ட மன்னிப்புக் கேட்டுட்டுப் போ... ரெண்டு மணி நேரத்துக்கு மேலாச்சு இந்நேரம் அபுதாபியே போயிருப்பாரு...  என்று சொல்லி என்னிடம் எங்கிருந்து வாறீங்க என்று கேட்டார். இந்தியா, தமிழ்நாடு என்றதும் மத்த ஆளுங்க மாதிரி கிருகிருன்னு (பேசிக்கிட்டே இருப்பது) கத்தாமல் ரொம்பப் பொறுமையா இருந்தாரு... இவரு ரொம்ம்ம்ம்ப்ப்ப நல்லவருன்னு சொல்ல அவனும் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சென்றான். 

இதுக்கு இடையில ஊருக்கும் வேற சொல்லியாச்சா... மனைவியிடம் இருந்து போன் மேல போன் பெட்டி கிடச்சிருச்சும்மான்னு சொன்னதும்தான் அவருக்கு நிம்மதி. பின்னர் நான் பஸ் மாறி.. மாறி... அபுதாபி வந்து சேர பதினோரு மணி ஆயிருச்சு... வந்ததும் குளித்துவிட்டு அலுவலகத்துக்கு ஓடினேன்.

நம்ம நிலைதான் இப்படின்னா... ஊருக்கு வந்திருந்த அண்ணன் சிங்கப்பூருக்கு திங்கள்கிழமை போச்சு... அதோட பெட்டியும் இதே கதையில மாறி, புகார் பண்ணி... இவனுக வந்து வாங்கச் சொன்னானுங்க... அவனுங்க அழகா அன்று மாலையே அலுவலகத்துக்குக் கொடுத்து விட்டுட்டானுங்க... நான் என்னண்ணே போயாச்சான்னு கேட்டா உன்னைய மாதிரியே நானும் பெட்டியை தொலச்சிட்டேம்ப்பான்னு சொல்லிச் சிரிக்கிறார். இது எப்படியிருக்கு...

-'பரிவை' சே.குமார்.

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி


ந்த முறை ஊரில் இருந்து வரும்போது கொண்டு வந்த பெட்டி மாறிய கதையை பகிர்ந்துக்கலாம் என்றுதான் இந்தப் பகிர்வு.

எப்போது ஊருக்குச் சென்றாலும் திரும்பி வரும்போது சந்தோஷ மனநிலை இருப்பதில்லை என்பதை குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் வாழும் எல்லோரும் மறுப்பதில்லை. எனக்கும் எப்போதும் அதே நிலைதான் என்றாலும் இந்த முறை இங்கு... அங்கு... என கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் குடும்பத்துடன் செலவிட்டு விட்டு தனியாக திரும்புவதென்பது மிகப்பெரிய கஷ்டமாக இருந்தது. எப்பவும் கைப்பை போக, லக்கேஜில் எனக்கு உறவினர்களுக்கு என பொருட்கள் கொண்டு வருவேன். இந்த முறை சோகமே உருவாக வரும் நிலை என்பதால் எதுவும் வாங்கவில்லை. மனைவி வற்புறுத்தியும் எதுவும் வாங்க விரும்பவில்லை.

எனவே கைப்பையில் எனக்கும் உறவுகளுக்குமான பொருட்களை எடுத்துக் கொண்டு திருச்சி விமான நிலையத்துக்கு ஐத்தானுடன் வந்து சேர்ந்தேன். உள்ளே நுழைந்ததும் மிஷினில் பையை சோதனை செய்த அதிகாரி உள்ள என்னமோ இருக்கு... திறங்க பாக்கணுமென்றார். மாம்பழம், டிரஸ், இனிப்புக்கள் என்னோட சான்றிதழ்கள் இருக்குன்னு சொன்னாலும் திறக்கச் சொல்லி நின்றார். எனவே திறந்து காண்பிக்க, மின்சாதனம் எதுவும் வச்சிருக்கீங்களா? காட்டுதே... அப்படின்னு மறுபடியும் கேட்டார்... இல்லைங்க இதுதான் இருக்கு என்று சொல்லவும் சரி போங்க என்றார். 

எடை போட்டு நமக்கான பயணச்சீட்டு கொடுக்குமிடத்தில் எடை போட்ட பையன் கையில கொண்டு போறதை விட கொஞ்சம் எடை கூடுதலா இருக்கு நீங்க லக்கேஜ்ல போட்டுடுங்க என்றதும் எப்பவும் போல் சரி என்று சொல்லிவிட்டேன். அது பூட்டியிருப்பதால் சான்றிதழ்களுக்கு பிரச்சினை இல்லை என்ற தைரியத்தில் கொடுத்துவிட்டு ஐத்தானுக்கு கைகாட்டி போகச் சொல்லிவிட்டு இமிக்கிரேஷன் பக்கம் சென்றேன். திருச்செந்தூருக்கு மொட்டை போட்டிருந்ததால் அடையாளம் தெரியலைன்னு திருப்பி விடமாட்டானான்னு ஒரு நப்பாசையுடன் இரவு ஒரு மணிக்கு கிளம்பும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்க்காக 11.30 முதல் காத்திருந்தேன்.

ஒரு வழியாக ஒரு மணிக்கு விமானம் கிளம்பியது. பின்னர் தூக்கம்தான்... திடீரென விமானப் பணிப்பெண் எல்லோரையும் உசுப்பி விட்டு சாப்பிட கொஞ்சம் இடியப்பம், ஒரு லட்டு, சின்ன பப்ஸ், குருமா மாதிரி கடலை போட்டது கொஞ்சம்... அப்புறம் இமயமலை அடிவாரத்தில் எடுத்த தண்ணீர் என்ற கதையுடன் பெயர் பொறிக்கப்பட்ட, குடிக்கவே முடியாத அலண்ட தண்ணீர் கொடுத்தார். அந்த நேரத்தில் எவன் சாப்பிடுவான்... அதுவும் இடியப்பம்... பெரும்பாலானோர் வாங்கி வச்சிட்டு மீண்டும் தூங்க ஆரம்பிக்க நானும் அப்படியே.

இறங்கியாச்சு... பஸ்ஸில் ஏறி இமிக்கிரேஷன் போனா சந்தையில நிக்கிற மாதிரி கூட்டம்... அதுல நீந்தி எல்லாம் முடிந்து லக்கேஜ் எடுக்கப் போனா... கன்வேயர் பெல்ட்டில் வந்தவற்றை பேர் பார்த்து நிறையப் பேர் எடுத்துக்கிட்டுப் போக... பலர் காத்திருந்தோம்... ஒவ்வொரு ஆளாகப் போக ஆரம்பிக்க... எனக்கு என்னடா இது இன்னும் நம்ம பேக் வரலையே என்ற குழப்பத்துடன் காத்திருந்தேன். கூட்டம் காலி... அப்போதுதான் ஒரு பேக் வந்தது... என்னோட பேக் போல... இருந்தாலும் இது நம்ம பேக் இல்லையே என ஒரு முறை சுத்த விட்டேன்.. பின்னர் எதுவும் வராததால் ஒரே மாதிரி இருக்கவும் மாத்தி எடுத்துக்கிட்டுப் போயிட்டானுங்களோன்னு அந்த பேக்கில் ஒட்டியிருந்த ஏர்போர்ட் பேப்பரில் பேரைச் பார்க்க குருசாமி திவாகர்ன்னு இருந்துச்சு... ஆஹா.... மாத்திக் கொண்டு பொயிட்டான்டான்னு பார்த்தா... பேக்குல திவாகர்ன்னு கொட்டை எழுத்துல எழுதி வச்சிருக்கான் அந்த அறிவாளி.

சான்றிதழ்கள் எல்லாம் இருக்கேன்னு ஒடிப்போயி ஒரு அரபிக்கிட்ட என்னோட பேக் மிஸ்ஸாயிடுச்சுடான்னு சொன்னே... ஒகே... நோ பிராப்ளம்ன்னு சொல்லிட்டு ஒருத்தனைக் காட்டி அவன் இந்தியன் அவனுக்கிட்ட கேளு உதவுவான்னு சொன்னான். உடனே அந்த மலையாளிக்கிட்ட போயிச் சொன்னேன். அவன் அருகிருந்த நம்ம தமிழனிடம் சொல்ல, ஒண்ணும் பயமில்லைங்க... தினம் தினம் இது நடக்கிறதுதான்... தெரியாம மாத்தி எடுத்திருப்பாங்க... வந்துரும்... அந்தா அந்த ஆறாவது பெல்ட் இருக்குல்ல அதுக்குப் பக்கத்துல ஆபீஸ் இருக்கு... அங்க புகார் பண்ணுங்க... என்றார். சான்றிதழ் எல்லாம் இருக்குங்க அதான் பயமா இருக்கு என்றதும் ஒண்ணும் பிரச்சினை இல்லை... அந்தாளோட பேக் இங்கதானே இருக்கு... கண்டிப்பா வருவாங்க... போங்க போயி புகார் பண்ணிட்டுப் போங்க என்றதும் ஒண்ணாம் நம்பர் பெல்ட்டின் அருகில் நின்ற நான் வேகவேகமாக ஆறாம் நம்பர் பெல்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

(மீதிப் பகிர்வு மாலை...)
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 21 ஜூன், 2015

விடுமுறையும் திருவிழாக்களும்...

 ணக்கம்.
இறையருளால் உறவுகள் நலமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். விடுமுறை சந்தோஷங்களில் திளைத்து மீண்டும் பாலை மண்ணில் பாதம் பதித்து ஒரு வாரம் ஆனாலும் கண்ணில் ஆடும் மனைவி மக்களின் நினைவில் இருந்து இன்னும் மீள முடியாத துயரம். என்ன செய்வது...? வாழ்க்கை இப்படி ஒரு பாதையில் பயணிக்கிறதே... 


மே மாதம் ஊருக்குச் செல்வதில் இரட்டிப்புச் சந்தோஷம்... ஒண்ணு குழந்தைகளோட நேரம் செலவிடலாம்... இரண்டாவது திருவிழாக்கள்... குழந்தைகளோட நேரம் செலவிட்டதால் எங்கு சென்றாலும் நானும் வருவேன் என்று நின்றதால் உள்ளூரிலே கூட நிறையப் பேரைப் பார்க்க முடியவில்லை... அப்புறம் எப்படி நிலவன் ஐயா, தனபால் அண்ணா, கரந்தை ஐயா, சரவணன் அண்ணாவை எல்லாம் பார்ப்பது... எல்லாரும் மன்னிக்கனும்... எப்படியும் பார்க்கலாம் என்று எழுதியிருந்தால் கண்டிப்பாக ஒருநாள் சந்திப்போம்.

எங்க ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா வைகாசி மாதம் நடந்தது. திருவிழா அன்று இரவு சன் டிவி புகழ் தேவகோட்டை ராமநாதன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. அவர் சொன்ன எல்லா நகைச்சுவைகளுமே பத்திரிக்கையில் வந்தவைதான் என்றாலும் கிராமத்து மக்கள்தானே என்று சொன்னார் போல... அதேபோல் பேசியவர்கள் எல்லாம் பெரிய ஆட்கள்தான்... அருமையாகப் பேசினார்கள். ஆனால் தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு குழந்தையை மேடை ஏற்றினார்கள். அதற்காகவே பேச்சாளர்களின் வரிசை மாற்றி பேச வைத்தார். அதனால் நல்லா பேசுபவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை... இதையும் ராமநாதன் அவர்கள் கிராமத்து மக்களுக்கு நாலு நகைச்சுவை சொன்னால் போதும் என்று நினைத்துத்தான் செய்தார்.


அந்தக் குழந்தை அம்மா சொல்லச் சொல்ல அப்படியே பேசினாலும் அதற்கு வளமான எதிர்காலம் உண்டு. ஒண்ணாம் வகுப்பு படிக்கும் போதே மேடையில் பயமின்றி அழகாய் அம்மாவின் வாயசைப்பைப் பார்த்துப் பேசும் அந்தக் குழந்தை பிற்காலத்தில் மிகச் சிறந்த பேச்சாளராக வரும் என்பதில் சந்தேகமே இல்லை. சிறிய கிராமம்... அவ்வளவாக கூட்டம் இல்லை என்றாலும் ஆரம்பத்தில் இருந்த கூட்டம் கடைசி வரை அப்படியே இருந்தது.

பால்குடம், கரகம் என திருவிழா மிகச் சிறப்பாக நடந்தது. ஸ்ருதியும் விஷாலும் மிக அழகாக முளக்கொட்டினார்கள் என்பது கூடுதல் சந்தோஷம். இதேபோல் இன்னும் சில திருவிழாக்கள், திருமணங்கள், விருந்துகள் என மே மாதம் அழகாய் கரைந்தது.


மீண்டும் அபுதாபி திரும்பிய போது ஏர்போர்ட்டில் பெட்டியை மாற்றி எடுத்துக் கொண்டு போன கதை அடுத்த பதிவாய்...

அப்புறம் இன்னொன்னு இன்று காலை ஸ்ருதியும் விஷாலும் போன் செய்து தந்தையர் தின வாழ்த்துச் சொன்னார்கள்... ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது..

மன ஆறுதலுக்காக மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்துத்தான் இந்தப் பகிர்வு... அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுதுவேன் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார்.