மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 31 ஜூலை, 2015

கலாம் உனக்கு சலாம்...

குழந்தைகளில்
உலகில் மகிழ்ந்த
இதயம் 
அமைதித் துயிலில்...

மதங்களைக் கடந்த
மனங்களை வென்ற நீ
மண்ணுக்குள்
புதைக்கப்பட்டாய்
என்கிறார்கள்...
இல்லை... இல்லை...
விதைக்கப்பட்டாய்...

அன்று
உன்னைத் தவழவிட்டு
சந்தோஷம் கொண்ட
தாய் பூமி...
இன்று
தன்னுள் தாங்கி
பெருமை தேடிக்கொண்டது...

நீ உறங்கும்
பேக்கரும்பு ...
ஆகலாம் இனி
புண்ணியபூமியாய்...

உன்னை
மனுஷ்ய புத்திரர்களுக்கு
பிடிக்காமல் இருக்கலாம்...
மனித புத்திரர்களுக்கு
ரொம்பப் பிடிக்கும்...

 மனுஷ்ய புத்திரர்களின்
தலைவன் அல்ல...
மக்களின் தலைவன் 
நீ என்பதை
சொல்லாமல் சொல்லியது...
வழியனுப்ப வந்த
மக்கள் வெள்ளம்...

வாழும் காலத்தில் 
ஓய்வெடுக்காதவனே...
இனியேனும் 
நிம்மதியாய் உறங்கு...

சாதி... மதம்...
அழிக்க - நீ
விதைக்கப்பட்ட
உன் பூமியில் இருந்து
கிளம்பட்டும்...
அக்னிச் சிறக்கொன்று...

விதையாய் நீ...
உன்னில் இருந்து
வீரியமாய் கிளம்பட்டும்
விருட்சங்கள்...!
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 28 ஜூலை, 2015

அக்னிச் சிறகு காற்றிலே...


தங்களைக் கடந்து மனிதம்
கண்டவன் மாமனிதன் நீ..!
மாணவர்கள் உலகத்தில்
மகிழ்ந்து கிடந்தவன் நீ..!
வல்லரசு ஆகும் நல்லரசு
காண ஆசைப்பட்டவன் நீ......
ஜனாதிபதிக்கான இலக்கணத்தை
மாற்றி எழுதியவன் நீ..!
குரான்... கீதை... பைபிளை
படித்து அறிந்தவன் நீ..!
அழகனில்லைதான் ஆனால்
அறிவு நிறைந்தவன் நீ..!
அக்னிச் சிறகாய் உலகை
வலம் வந்தவன் நீ..!
நீண்ட முடியும்
தவழும் புன்னகையுமாய்...
உனக்கு நிகர் நீயென வாழ்ந்து
கனவு காணச் சொல்லி
நனவாகும் முன்னே
ஏவுகணையாய் பறந்தவனே...
அக்னி சிறகொன்று
காற்றிலே கரைந்ததேயென
மனசு மறுதலித்தாலும்
நீ நிரந்தரமானவன்
உனக்கு மரணமில்லை...
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 26 ஜூலை, 2015

சுபஸ்ரீ மிஸ் அடிச்சாங்களா?

திரு. கார்த்திக் சரவணன் அவர்கள் ஆரம்பித்து வைக்க  மூங்கில்காற்று முரளிதரன் ஐயா, தங்கை மைதிலி, நண்பர் கோவை ஆவி, எங்க வாத்தியார் பாலகணேஷ் அண்ணா, சகோதரி க்ரேஸ், கலக்கல் பதிவர் சகோதரர் மதுரைத் தமிழன் மற்றும் துளசி தளம் துளசி சார் / கீதா மேடம்  என எல்லோரும் கலந்து கட்டி சிறுகதைகளை எழுதி கலக்கிவிட்டார். மேலே சொன்னவர்கள் தவிர இன்னும் சிலரும் எழுதியிருக்கக் கூடும். நான் படித்த பதிவர்களை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

இவர்களைப் பார்த்ததும் நமக்கும் ஒரு நப்பாசை, அடிச்ச மிஸ்க்கு ஒவ்வொருத்தரும் ஒரு பேர் வச்சிக்கிட்டாங்க... அதனால நாமளும் மிஸ் பேரை மாற்றி திரிஷ்யம்... இல்லங்க... பாபநாசம் ரேஞ்சுக்கு கருவை எடுத்து  கதையையும் கொஞ்சம் சுட்டு இங்க சிறுகதையாக கொடுத்திருக்கிறேன்... வாசியுங்கள்... பிடித்தது... பிடிக்கலை என்பதை சரியாகச் சொல்லி வையுங்கள்... இல்லேன்னா நானும் கம்பெடுக்கிற மாதிரி இருக்கும்... ஆமா சொல்லிப்புட்டேன்.

 வாங்க கதைக்குள்ள போவோம்.... 


நான் அந்தப் பள்ளிக்குள் வேகமாக நுழைந்தேன்... எதிர்ப்பட்ட பியூனிடம் பிரின்ஸிபால் ரூம் எங்க இருக்கு? என்று கேட்டு அவன் காட்டிய திசையில் கோபத்தோடு நடக்க ஆரம்பித்தேன்.

அடியும் தெரியாம முடியும் தெரியாம நீங்க எப்படி என் பின்னால வரமுடியும்... அதுனால கொஞ்சம் முன்னோக்கி போயிட்டு பிரின்ஸ்சிபால் அறைக்குள் போகலாம்... நான்... அரவிந்தன்... என்னோட பிள்ளைங்க ரெண்டு பேரும் இங்கதான் படிக்கிறாங்க... ஊரில் பிரபலமான பள்ளி இது... படிப்புக்கு பணம் கொடுப்பதுடன் என்னோட வேலை முடிஞ்சது... மற்றபடி பள்ளிக்கு அனுப்புவது... அவர்களுக்கான அனைத்து வேலைகளையும் செய்வது என் மனைவி ராதிகாதான். எதையும் பற்றி கேட்டுக்கொள்ளாதவனாக இருந்தாலும் மகள் தன்னை மிஸ் அடித்தார்கள் என்று சொன்னதும் எனக்குள் சுள்ளென்று ஏறியது. நானே பள்ளியில் வந்து என்ன ஏதுன்னு கேக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். மகளுக்கு ரொம்ப சந்தோஷம். 

காலையில் சாப்பிடும் போது  "அவ எப்படி பிள்ளையை அடிப்பா...? என்ன திமிரு அவளுக்கு...?" இட்லியை பிய்த்து சட்னியில் நனைத்துக் கொண்டே மனைவியிடம் கத்தினேன்.

"எதுக்கு கத்துறீங்க...? எதாவது தப்புப் பண்ணியிருப்பா?"

"என்னடி பொல்லாத தப்புப் பண்ணுறா... ரெண்டாவது படிக்கிற பிள்ளை என்ன பெரிசா செஞ்சிடப்போகுது..."

"ஆமா... உங்க பிள்ளைகளை மேய்ச்சுப் பார்த்தாத்தானே தெரியும்... ரெண்டை நம்மளாலே... இல்லயில்ல என்னால மேய்க்க முடியலை... அங்க முப்பது நாப்பதை ஒண்ணா வச்சி மேய்க்கணும்..."

"அதுக்காக அடிப்பாங்களா... பிள்ளை அடிச்சிட்டாங்கன்னு சொல்றா... நீ எவளோ ஒருத்திக்கு சப்போர்ட் பண்ணுறே...?"

"சப்போர்ட் பண்ணலை... அடிச்சா என்ன தப்புன்னுதான் கேக்குறேன்..."

"என்ன தப்பா... அடிச்சி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சின்னா..."

"அப்படியெல்லாம் அடிக்கமாட்டாங்க... சும்மா லேசா தட்டியிருப்பாங்க..."

"முன்னெல்லாம் சாதியச் சொல்லி திட்டினாங்கன்னுதான் கேசு கொடுக்க முடியும்... இப்ப அப்படியில்லை அடிச்சாங்கன்னு சொல்லியே உண்டு இல்லைன்னு பண்ணிடலாம்.."

"ஏங்க இப்ப கேசு அது இதுன்னு... வீட்டுல பிள்ளைங்களுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிடுறோம்... பத்தாததுக்கு அதுக கையில டேப், ஆண்ட்ராய்டு போனெல்லாம் கொடுத்து இருபத்தி நாலு மணி நேரமும் மத்த மனுசங்க கூட பேச விடாம வச்சிருக்கோம்... இதுல ஸ்கூல்லயும் அடிச்சித் திருத்தலைன்னா எப்படி... மண்ணாத்தானே போகுங்க..."

"நல்ல பொம்பளைடி நீ... அதுக்காக அவங்க அடிக்கட்டுமின்னு விடமுடியுமா? நான் போயி என்ன ஏதுன்னு கேட்டுத்தான் வருவேன்..." என்று சொல்லிவிட்டு எழுந்து கை கழுவிட்டு கிளம்பினேன். 

'தேவையில்லாத வேலைக்கெல்லாம் போங்க... தேவையானதைப் பாக்காதீங்க...' என்ற மனைவியின் குரலை காதில் வாங்கும் நிலையில் நான் அப்போது இல்லை... என் குறிக்கோள் எல்லாம் எப்படி மகளை அடிக்கலாம்... அவளை உண்டு இல்லைன்னு பண்ணுங்கிறது மட்டும்தான்... அந்த வேகத்தோடு இந்தா பிரின்ஸ்பால் அறைக்கு வந்துட்டேன்.

"வணக்கம் சார்..."

"வாங்க..."

"சார் என்னோட பொண்ணை அவங்க மிஸ் அடிச்சிருக்காங்க..."

"யாரு...? எந்த மிஸ்..?"

"செகண்ட் படிக்கிற சுபாவோட அப்பா நானு... அவங்க கிளாஸ் மிஸ் அடிச்சிட்டாங்களாம்..."

"யாரு சுபஸ்ரீ மிஸ்ஸா..?"

"சுபஸ்ரீயோ... ரூபஸ்ரீயோ... எப்படி சார் அடிக்கலாம்... அடிச்ச டீச்செரல்லாம் என்ன ஆனாங்கன்னு பேப்பர்ல படிச்சிருப்பீங்கதானே..." கொஞ்சம் கோபமாகப் பேசினேன்.

"எதுக்கு சார் டென்சனாகுறீங்க... உங்க பொண்ணு மேல எதாவது காயம் இருந்ததா?"

"அடிச்சிட்டாங்கன்னு சொன்னா காயம் இருக்கா... கத்திரிக்கா இருக்கான்னு... ஏன் சார் காயம் இருந்தாத்தான் வந்து கேக்கணுமா...?"

"இல்ல சார்... அவங்க அடிச்சிருக்க வாய்ப்பில்லை அதனாலதான் கேக்குறேன்... "

"என்ன சார் இம்புட்டு அடிச்சிச் சொல்றீங்க...? அப்ப நான் பொய் சொல்றேனா...?"

"நீங்க பொய் சொல்றீங்கன்னு சொல்லலை... பட்... சுபஸ்ரீ மிஸ் அடிச்சிருக்க மாட்டாங்கன்னு சொல்றேன்..."

"எதுக்கு சார்... வளவளன்னு பேசிக்கிட்டு... அவங்களையே கூப்பிட்டு விசாரிங்க சார்...."

"சரி வாங்க அவங்க அறைக்கு நாம போகலாம்..."

"ஏன் சார்... நீங்கதானே பிரின்ஸ்பால்... ஒரு பொம்பளைக்கு இம்புட்டு முக்கியத்துவம் கொடுக்கிறீங்க... பியூனை விட்டு கூட்டியான்னு சொன்னா வரப்போறாங்க.... நாம தேடிப் போகணும்ன்னு சொல்றீங்க..." கடுப்போடு கேட்டேன்.

"மிஸ்டர்... வார்த்தையை அளந்து பேசுங்க... அவங்க இங்க டீச்சர்... குழாயடியில பேசுற மாதிரி பொம்பளை கிம்பளைன்னு பேசாதீங்க... உங்க பொண்ண அடிச்சாங்கன்னு சொல்றீங்க... அவங்ககிட்ட போயி கேட்போம்... எதுக்காக இங்க வரவச்சி விசாரிக்கணும்... ஸ்டாப் ரூம்ல எல்லாரும் இருப்பாங்க... அங்க வச்சி விசாரிச்சா வேலை முடிஞ்சிச்சி... படிச்சவராத் தெரியிறீங்க... பண்பு இல்லையே சார்..."

'யோவ் வெளக்கெண்ணை வியாக்கியான மயிரு பேசுறே... கேசைக் கொடுத்து இழுத்து நடுத்தெருவுல விட்டுருவேன்...' வந்த வார்த்தையை வாய்க்குள்ளேயே முழுங்கி அவர் பின்னே நடந்தேன்.

"இவங்கதான் சுபஸ்ரீ மிஸ்... மிஸ் இவரோட பொண்ணு சுபா... செகண்ட் படிக்கிறாளாம்..."

"ஓ சுபாவோட அப்பா அரவிந்தன் சாரா...? மேடம்தான் இங்க வருவாங்க... வாங்க சார்... என்ன விஷயம்?"

"என்னோட பொண்ணை அடிச்சீங்களாமே...?"

"ம்... உங்க பொண்ணை மட்டுமில்ல... ஒரு நாலஞ்சி பிள்ளைங்களை அடிச்சேன்... அதுவும் சும்மா கையாலதான் தட்டுனேன்...."

"அடிச்சதுல வேற சும்மா கையாலதான் தட்டுனேன்னு சொன்னா என்ன அர்த்தம்... அப்ப கம்பு வேற வச்சி அடிப்பீங்களா?"

"ஏன் சார்... எதுக்கு இம்புட்டுக் கோபம்...? வாங்க கிளாஸ்ல போயி உக்ன பொண்ணுக்கிட்டே கேக்கலாம் எதுக்காக அடிச்சேன்னு..."

"ஆமா... இவரு அங்க இருந்து இங்க இழுத்தாரு... நீங்க இங்க இருந்து கிளாஸ்க்கு இழுங்க... நல்லாயிருக்குங்க..."

"சரி கோபப்படாதீங்க... நான் போயி அடி வாங்கின பசங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு வாறேன்..." என்றபடி தனது வீல்சேரை தள்ளினாள் மிஸ் சுபஸ்ரீ.

அதுவரை சேரில் அமர்ந்து பேசுகிறாளே... பிரின்ஸ்சிபால் நிக்கிறாருன்னு மரியாதை கூட இல்லாமன்னு நினைச்சிக்கிட்டு இருந்த நான் உடைந்து போனேன்.

"சாரி மிஸ்... உங்க நிலமை தெரியாம.... என்னை மன்னிச்சிடுங்க... பசங்களை எல்லாம் கூப்பிட வேண்டாம்... நீங்க அடிச்சிருக்க மாட்டீங்கன்னு சார் சொன்னாங்க... நாந்தான்..."

"எதுக்கு சார் சாரி... உங்க பொண்ணு அடிக்கப்பட்டிருக்கான்னு உங்களுக்கு கோபம்... அது நியாயந்தானே... அதுபோக ஊனங்கிறது பெரிய குறை இல்லையே... என்னோட நிலை பார்த்து பரிதாபப்பட... இன்னைக்கி எத்தனையோ பேர் தங்களோட ஊனத்தை நினைச்சி வேதனைப்பட்டுகிட்டு இருக்காம ஜெயிச்சிருக்காங்களே..."

"...." பேசாமல் நின்றேன்.

"இல்ல சார்... கிளாஸ்ல ஒரு பொண்ணுக்கு கை கொஞ்சம் ஊனம்... எல்லாம் பிள்ளைங்களும் நல்லாத்தான் பழகிக்கிட்டு இருந்தாங்க... பட்... என்னாச்சோ தெரியலை... உங்க பொண்ணும் இன்னும் சில பசங்களும் போடி நொண்டிக்கையின்னு சொல்லி அவளை அடிக்கவும் கிள்ளவுமா இருந்திருக்காங்க... பாவம் பிஞ்சு நெஞ்சு ரொம்ப பாதிக்கப்பட்டுருச்சு... அவங்க அம்மாகிட்ட அழுது... அவங்க எனக்கிட்ட வந்து அழுதாங்க... அதான் கூப்பிட்டு முதுகுல சும்மா ரெண்டு தட்டு தட்டி இனி அப்படியெல்லாம் பண்ணக்கூடாது அவ கடவுளோட குழந்தை... எல்லாரும் பிரண்டா இருக்கணும் சொல்லி கை கொடுக்க வச்சேன்... என்ன இதுவரைக்கும் பசங்களை அடிச்சதில்லை... லேசாத் தட்டினதும் இதுவரைக்கும் அடிக்காத மிஸ் அடிச்சிட்டாங்கன்னு அதுகளுக்கு வருத்தம்... அதான் உங்ககிட்ட உங்க பொண்ணு சொல்லியிருக்காங்க... உடம்புல ஊனம் இருந்தா இப்ப ஜெயிச்சிக் காட்டிலாம்ன்னு நம்பிக்கை இருக்கு... ஆனா பிஞ்சு மனசுல ஊனம் வந்தா நல்லது இல்லையில்ல... இன்னைக்கி இருக்க பழக்கம் நாளைக்கு விருட்சமா வளர்ந்து அவங்களை வேற மாதிரி பார்க்க வைக்குமே சார்... அதான் அடிச்சேன்... சாரி..." சொல்லி முடிக்கும் போது சுபஸ்ரீ மிஸ் கலங்கியிருந்தார்.

"சாரி மிஸ்... சின்னப்பிள்ளை பேச்சைக் கேட்டு போகாதீங்கன்னு மனைவி சொன்னாங்க... நாந்தான் சம்பந்தமில்லாம வந்து உங்க மனசைப் புண்படுத்திட்டேன்... உங்க பேருதான் எம்பொண்ணுக்கும்... அவ உங்கள மாதிரி நல்ல மனசோட வளரணும்... வளருவா... இந்தப் பசங்களால மனசொடிஞ்ச அந்தக் குழந்தையை நான் பாத்து அவளை தூக்கிக் கொஞ்சிட்டுப் போகணும்... பெர்மிஷன் கிடைக்குமா?" என்றேன் நனைந்த கண்களோடு,

-'பரிவை' சே.குமார்.

சனி, 25 ஜூலை, 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 28)

முந்தைய பகுதிகள் :


காலையில் பேசலாம் என குமரேசனும்... இடப்பிரச்சினை பேசணும் என சித்ராவும்... நாளை அவர்களைப் பார்க்கப் போகலாமா என மகள்களும் நினைத்திருக்க, அந்த இரவோ அவர்களுக்கு மிகப்பெரிய துயரத்தைக் கொடுக்கப் போகும் விடியலை நோக்கி நகர்ந்தது.

இனி...

திடீரென விழித்துக் கொண்ட கண்ணதாசனுக்கு நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. என்ன இது... ஏன் இந்தப் படபடப்பு என்று கொஞ்ச அமர்ந்திருந்தவன் எழுந்து வெளியே போய்விட்டு வரும்போது வாசலில் கிடந்த காளைமாடுகள் வைக்கோலை இழுத்துப் போட்டுக் கொண்டு படுத்திருக்க அதட்டி எழுப்பிவிட்டு அதை காலால் தள்ளி குவித்து வைத்துவிட்டு நகர, 'என்னப்பா இந்த நேரத்துல மாட்டுக்கு வக்கப் போடுறே?' என்று கேட்டபடி படியில் இறங்கி வந்தாள் காளியம்மாள்.

"தூக்கம் வரலை... எழுந்து வெளிய வந்தேன்.. வக்கலை இழுத்துப் போட்டுக்கிட்டு படுத்திருந்துச்சுக... அதான்... சின்னம்மா"

"எனக்குந்தான் என்னமோ உறக்கமே வரலை... உங்க சித்தப்பன் பேசிக்கிட்டே கிடந்தாரு... கொறட்டை விட்டுட்டாரு... பொரண்டு பொரண்டு படுக்கிறேன்... உறக்கமே வரலை... சரி போயி படு..."

"ம்..." என்று சொல்லி வீட்டுக்குள் நுழைந்தவன் குடத்தின் மேல் இருந்த சொம்பில் தண்ணீர் மோந்து மடக் மடக்கென்று குடித்தான். இருந்தும் இன்னும் அந்த படபடப்பு அடங்கவில்லை. கட்டிலில் அமர்ந்து மோட்டு வலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கீழே படுத்திருந்த கண்ணகி புரண்டு படுக்கும் போது மோட்டு வலையைப் பார்த்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்ததும் தூக்கக் கலக்கத்தோடு "என்னங்க... தூங்கலையா?" என்று கேட்டாள்.

"இல்ல தூக்கம் வரலை?"

"ஏன்? என்னாச்சு? நடுஜாமத்துல தூக்கம் வரலையின்னு உக்காந்திருக்கீக?" என்று எழுந்து அவிழ்ந்து கிடந்த முடியை கொண்டை போட்டுக் கொண்டு முந்தானையை தோளில் போட்டுக் கொண்டாள்.

"படக்குன்னு முழிப்பு வந்திருச்சு... என்னமோ படபடன்னு வருது..."

"ஆத்தி... என்னாச்சு... உடம்புகிடம்பு சரியில்லையா? கண்ட நேரத்துலயும் சுடுகாட்டுப் பக்கமா இருக்க வயலுக்குப் போறது... திடல்ல போயி வெறகு வெட்டலாம்ன்னு சொன்னேன் கேட்டியலா... உச்சி உருமத்துல சுடுகாட்டு செய்யில வெறகு வெட்டுனிய காத்துக் கருப்பு பிடிச்சிருச்சி போல..." என்றபடி எழுந்து அவனருகில் வந்து கழுத்தில் கைவைத்துப் பார்த்தாள். சுடவில்லை என்றாலும் வேர்த்திருந்தது.

"அட ஒண்ணுமில்ல... சும்மா படபடப்பா வருது... நீ படு நா படுக்கிறேன்..."

"என்ன இப்புடி வேர்த்திருக்கு...?"

"ம்... வெக்கையா இருக்குல்ல... தண்ணி குடிச்சேன்... அதான்..."

"என்னாச்சுங்க.. முகமெல்லாம் வேர்த்திருக்கே..." என்றபடி முந்தானையால் துடைத்து விட்டபடி அருகில் அமர்ந்தாள்.

"ஒண்ணுமில்ல... ஏதோ ஒரு கெட்ட கனவு... படக்குன்னு முழிப்பு வந்துச்சா... அதான் படபடன்னு இருக்கு... யாராவது நெருக்கமானவங்களுக்கு ஏதாவது ஒண்ணு நடக்கப் போகுதுன்னா ஒரு சிலருக்கு படபடப்பா இருக்குமாம்... எங்கம்மா அடிக்கடி சொல்லும்... அம்மாவுக்கு படபடப்பு வந்தா ரெண்டு மூணு நாள்ல யாருக்காவது எதாவது நடந்திருமாம்... அப்பா சாகுறப்ப கூட அம்மாவுக்கு மொதநாள் ராத்திரியில யாரையோ திண்ணையில வெள்ளைத் துணி போட்டு படுக்க வச்சிருக்க மாதிரி காட்டுச்சாம்... எனக்கு அதான் ஒரு மாதிரி பயமா..."

அவன் முடிக்கும் முன்னே "இப்ப எதுக்கு சாவு கீவுன்னு பேசிக்கிட்டு... எனக்குந்தான் மாடு வெரட்டுற மாதிரி, பாம்பு கடிக்கிற மாதிரி கனவு வந்து படக்குன்னு எந்திரிச்சிருக்கேன்... படபடப்பு இருந்திருக்கு.... சரி... சரி... எதையும் நினைக்காம படுங்க..." என்றவள் எழுந்து வெளியே போனாள்.

கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தவள் தண்ணீர் மோந்து குடித்துவிட்டு "என்ன இன்னும் படுக்கலையா?" என்று கேட்டபடி தனது பாயில் படுத்தாள். கண்ணதாசனும் இறங்கிப் படுத்தான். "என்ன ஐயாவுக்கு படபடப்பை போக்குற் மருந்து நாந்தானா?" என்று என்று சொல்லிச் சிரித்தவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவனிடமிருந்த படபடப்பு அவளைத் தொற்றிக்கொண்டது.

திகாலையில் விழித்துக் கொண்ட கந்தசாமி கட்டிலில் அமர்ந்தபடி கைகளை தேய்த்து கண்ணில் வைத்துக் கொண்டு 'கருப்பா... எல்லாரையும் காப்பாத்துப்பா...' என்று சொல்லி அதன் பின்னே வந்த கொட்டாவியை 'ஆவ்வ்வ்...' என்று சத்தமாக வெளிப்படுத்தினார். தரையில் படுத்துக்கிடந்த காளியம்மாளைப் பார்த்தவர் 'இந்த வயசுலயும் எல்லா வேலையையும் இழுத்துப் பாக்குறா... அசந்து தூங்குறா... தூங்கட்டும்... தூங்கட்டும்... மெதுவா எந்திரிக்கட்டும்...' என்றபடி எழுந்து  தனது போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்திவிட்டு விட்டு வேட்டியை அவிழ்த்துக் கட்டினார்.

குடத்தில் தண்ணீர் மோந்து வாயைக் கொப்பளித்து முகம் கழுவியவர், மீண்டும் சென்று தனது இடைவாரை எடுத்து அதற்குள் இருந்த புகையிலையை கையிலெடுத்து உள்ளங்கையில் வைத்து தேய்த்து உருண்டையாக்கி, வாய்க்குள் அதக்கிக் கொண்டு ரோட்டுக்கு அந்தப்பக்கமாக சிறுநீர் கழிக்க நடந்தார். அப்போது அவரைக் கடந்து சென்ற பால் விற்கும் பெண்களில் ஒருத்தி 'என்ன மாமா... சீக்கிரம் எந்திரிச்சிட்டீங்க?' என்று கேட்டபடி நடக்க, 'நீங்க பேசுற ஊர்க்கதையைக் கொஞ்சம் கேப்போமேன்னுதான்...' என்றதும் 'ஆமா எங்க கதையே நாறிக்கெடக்கு... இதுல ஊர்க்கதை வேறயா...? அட நீங்க வேற மாமா..' என்றதும் சிரித்தபடியே வேப்பமரத்துக்குப் பின்னே அமர்ந்தார்.

மாடுகளை கசாலைக்குள் இருந்து அவிழ்த்து வந்து வெளியில் கட்டலாம் என்று நினைத்தபடி கசாலைக்கு போனவர், கண்ணதாசனின் மாடுகள் வைக்கோல் மீது படுத்திருப்பதைக் கண்டு 'ஏய்... இம்பா... இம்பா...' என்று அதட்டி, அவற்றை எழுப்பிவிட்டு மூத்தரம் சாணியுமாக கலந்து கிடந்த வைக்கோலை ஒரு குச்சி எடுத்து தள்ளிக் குவித்துவிட்டுப் போனார். கசாலைக்குள் நுழைந்து மாடுகளை அவிழ்த்தவர், 'இன்னைக்கி மாடுகளை கழுவி விடணும்... கசாலையில மேடும் தாவுமாக் கெடக்கதாலதான் நசநசன்னு கெடக்கு... இதுல பொரண்டு அழுக்கு பிடிச்சிப் போயி நிக்குதுக' என்று முணங்கியபடி இழுத்துக் கொண்டு நடந்தார்.

மாடுகளைக் கட்டிவிட்டு, தொட்டியில் கிடந்த புண்ணாக்குத் தண்ணீரை கலக்கி வாளிகளில் மோந்து ஒவ்வொரு மாடாக குடிக்க வைத்தார். பால் மாடுகளுக்கு மட்டும் காளியம்மாள் பால் கறக்கும் போது தண்ணீர் வைப்பாள் என்பதால் அவர் வைக்கவில்லை. பக்கத்து ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலினின் பெரிய மணி அடிக்கும் சப்தம் கேட்கவும் 'மணி இப்பத்தான் அஞ்சாகுது போல... காலையில நல்லா கேக்குற மணிச்சத்தம் மத்த நேரம் கேக்குறதில்லை... கேக்கும்... இப்ப சத்தமில்லததால கேக்குது... மத்த நேரத்துல நாம உன்னிப்பாக் கவனிக்கிறதில்லைன்னுதான் சொல்லணும்' என்று நினைத்தபடி தொட்டிக்கல்லின் விளிம்பில் அமர்ந்தார். அப்போது தேவகோட்டையில் ஒலிக்கும் சங்கொலியும் கேட்க, 'மணி சரியா அஞ்சுதான்... சங்கடிச்சிட்டானுல்ல... இதெல்லாம் கேட்டு எம்புட்டு நாளாச்சு... தினமும் கிழவியோட சங்கொலிதானே எழுப்பும்' என்று நினைத்தவருக்கு அவரை அறியாமல் சிரிப்பு வர, வாயில் இருந்த புகையிலை ஒழுகியது.

சிறிது நேரத்திற்குப் பிறகு வெளிய போய் வரலாம் என ரோட்டில் நடந்தவர், ரோட்டோரத்தில் இருந்த அடிபம்பிற்கு அருகே எச்சிலோடு புகையிலையையும் துப்பிவிட்டு கோவிலுக்கு வாசல் தெளித்துக் கோலம் போட வந்த ரேணுகா மகள் புவனாவிடம் 'ஏலா... கொஞ்சம் தண்ணி அடிலா... வாயக் கொப்புளிச்சிக்கிறேன்' என்று சொல்லிக் கொப்பளித்து விட்டு, 'வர்றியாடி ரெண்டு பேரும் இப்புடியே ஓடிப்போயி கலியாணம் கட்டிக்கலாம்' என்றார். 'ஆமா இழுத்துக்கிட்டு ஓடிட்டாலும்... போங்கய்யா நீங்க... நானெல்லாம் உங்கள மாதிரி கோக்கணங் கட்டுற ஆளைக் கட்ட மாட்டேன்... கோட்டுச் சூட்டுப் போட்ட ஆளைத்தான் கட்டுவேனாக்கும்...' என்றாள் நையாண்டியாக. 'ஆமா வரிசையில நிக்கிறானுவ... கடைசியில நாந்தாண்டி உனக்கு மாப்பிள்ளை... பாப்போமா...?' என்றவாறு கண்மாயை நோக்கி நடந்தார்.

வேப்பங் குச்சியால் பல் விளக்கியபடி வந்து அடிபம்பில் ஒரு கையால் தண்ணீர் அடித்து மறுகையில் பிடித்து வாய் கொப்பளித்துவிட்டு தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் தொடைத்தபடி மாரியின் வாசலில் புவனா போட்டுச் சென்ற அழகான கோலத்தை மிதிக்காமல் ஒதுங்கி நின்று மாரியைக் கும்பிட்டுவிட்டு நகர, "என்ன சித்தப்பா... காலையிலேயே வெளிய பொயிட்டு வாறீக...?" என்றபடி கடந்தான் 

"தூக்கம் வரலைப்பா.... அதான்... ஏம்ப்பா காளை மாட்டைக் கழுவி விடலாம்ல்ல... சாணியிங்கீணியுமாக் கெடக்கு பாரு..." என்றார்.

"இன்னிக்கி கழுவணும்ப்பா... எங்க எதாச்சும் ஒரு வேலை வந்திருது... உங்க பேராண்டிகளை மாட்டைக் கழுவி விடுங்கடான்னு சொன்னா... எங்க கேக்குறானுக..." என்று பதில் சொல்லியபடி "இந்தா வாறேன்.." என்று நடந்தான்.

வீட்டுப் படியேறியவர் காளியம்மாள் இன்னும் தூங்குவதைப் பார்த்ததும் 'இவ இன்னும் எந்திரிக்கலை போலயே... உடம்புகிடம்பு சரியில்லையா?' என்ற நினைப்போடு அருகே சென்றார்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 24 ஜூலை, 2015

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்...


து...

என்னடா இவன் இப்பத்தான் மது பற்றி ஒரு கட்டுரை போட்டான் அதுக்குள்ள மீண்டும் மதுவான்னு நீங்க யோசிக்கலாம். ஆனா மதுவில் விழுந்தவர்கள் மீண்டு வரவில்லை என்பதால்தான் மீண்டும் மீண்டும் மதுவுக்கான பகிர்வு அவ்வளவே. சரி விஷயத்துக்கு வருவோம். அதுக்கு முன்னாடி கீழ இருக்கும் அட்டவணையைப் பாருங்கள். காமராஜர் கல்விச் சாலைகளை அமைத்து மக்களை நல்வழிப்படுத்தினார். இன்றைய அரசியல்வாதிகளோ மதுவை ஊற்றி மல்லாக்க படுக்க வைக்கின்றனர். நம் மாநிலத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையை விட உயர்ந்து நிற்கிறது அரசு மதுபானக் கடைகளின் எண்ணிக்கை... சிந்திக்க விடாமல் சிந்தை அளிக்கும் மதுவுக்கே மரியாதை...


மதுவினால் மாண்டோரும் அவர்களால் தெருவில் வீழ்ந்த குடும்பங்களும் என்ற நிலை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இதில் என்ன ஒரு வேதனையான விஷயம் என்றால் மக்களுக்கு படிப்பறிவு கூடக்கூட மதுவின் பிடிக்குள் அதிகமானோர் விழுந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அன்று ஏழைகளின் தோள் மீது ஏறிக் கொண்டு பல குடும்பங்களை கழுத்தறுத்த மது இன்று குடும்ப உறவுகள் மூலமாக குழந்தைகளிடமும் நட்பின் மூலமாக மாணாக்கர்களிடமும் தொற்றிக் கொண்டுள்ளது.

மதுவினால் அரசுக்கு வருமானம்... அதுபோக மது பானங்களைத் தயாரிப்போர் எல்லாம் அரசியல் கட்சிகளுக்கு ஏதோ ஒரு வகையில் வேண்டப்பட்டோர் என்பதுடன் சில அவர்களின் பினாமியாகவும் இருக்கலாம். ஒரு குடும்பத்தை அழித்துத்தான் தங்கள் வீட்டில் சாப்பிட வேண்டும் என்ற நிலையில் அவர்கள் இல்லை என்றாலும் கோடி கோடியாக சம்பாதித்து வாரிசுகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் எவன் குடி கெட்டால் என்ன நமக்கு கோடிகள் ஏறினால் போதும் என்ற எண்ணமே மது தயாரிப்பாளர்களின் மனதுக்குள் நிரம்பி வழிகிறது.

கர்நாடகாவில் இருக்கும் மதுத் தொழிலதிபர் ஒரு கிரிக்கெட் அணியையும் விலைக்கு வாங்கி வைத்துக் கொண்டு போட்டி நடக்கும் இடங்களில் ஆட்டம் போடும் சியர்ஸ் பெண்களுடன் பொது இடத்தில் கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறான். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க வக்கில்லை என்று சொல்லி, வங்கியில் வாங்கிய 400 கோடியை சுவாகா போட்டுவிட்டான். அவனது நானூறு கோடியை தள்ளுபடி செய்தது மாற்றங்களைக் கொண்டு வரும் என்று நாம் பெரிதும் நம்பிய தற்போதைய மத்திய அரசு. எத்தனை குடும்பங்களை அழித்து கோடிகளில் புரள்கிறான். அவனுக்கு தள்ளுபடி, வங்கியில் நானூறு ரூபாய் கட்ட முடியாத ஏழை விவசாயியை இவர்கள் படுத்தும் பாடு சொல்லி மாளாது. எல்லாம் அரசியல் என்ன செய்வது..?

இவனுக்கு மட்டுமல்ல அதானிக்கும் கோடிகளில் விலக்கு, அவன் மனைவியின் பாதத்தில் பாரதப் பிரதமர் நமஸ்காரம்... ம்... பேச்சு எங்கிட்டோ போகுது... தண்ணியடிச்சவன் மாதிரி எல்லாப் பக்கமும் சுத்துது... சரி வாங்க நம்ம கதைக்கு வருவோம்....

இப்போ அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் காமெடி என்னவென்றால் எல்லாக் கட்சிகளுமே தங்களின் மாநாட்டுக்கு பிரியாணியும் சாராயமும் கொடுத்துத்தான் ஆட்களை சேகரித்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றன. ஏதாவது ஒரு போராட்டம் என்றாலும் போராடியவர்களுக்கு வலி நிவாரணியாக மதுதான் பரிமாறப்படுகிறது. மெட்ரோ இரயிலைக் கொண்டு வந்தது நாங்கதான் என்று அடித்துக் கொள்ளும் அரசியல்கட்சிகள் இன்று மதுக்கடைகளை அடைக்கும் கோஷத்தை நாங்கள்தான் முதலில் கையிலெடுத்தோம் என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். 

பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இருக்கும் மதுக்கடைகளை மூடச் சொன்னதற்கே மூடாத அரசு, இலவசங்களைக் கொடுப்பதற்காக மதுக்கடைகளின் எண்ணிக்கையை கூட்டிய அரசு, எவன் குடி கெட்டால் என்ன அரசுக்கு வருமானம் கோடிகளில் வருகிறதா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருந்த அரசு, இன்று மக்களை முட்டாளாக்கி தங்கள் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளத் துடிக்கின்றன. இங்கே அரசு என்றதும் ஆளும் கட்சி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆளும், ஆண்ட, ஆளுவோம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிற எல்லாமே இதில் அடக்கம். 

இங்கே எங்களது அறை நண்பர் ஒருவர் பாட்டாளி மக்கள் கட்சிதான் இதை முதலில் கையில் எடுத்தது. இந்த முறை அம்மா இதை செய்யவில்லை என்றால் பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும் என்கிறார். என்னத்தைச் சொல்வது..? இருக்கும் சாதிகளைவிட சாதிக்கட்சிகள் இங்கே அதிகம். சாதிக்கட்சிகள் எல்லாம் ஆட்சியைப் பிடிப்பது என்பது சாத்தியமில்லைதான். அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று குதிக்கும் இவர்கள் எல்லாம் எதையும் செய்வதில்லை. இவர்கள் எல்லாரும் ஒரே பாதையில் பயணிக்கும் காரணமே செம்மறி ஆட்டுக் கூட்டமாய் இருக்கும் நம்மளை முட்டாளாக்கி லாபம் பார்க்கும் செயல் மட்டுமே.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... என்று சொல்லியே அரசியல் பண்ணும் இவர்கள் கையில் இப்போது எடுத்திருக்கும் ஆயுதம்தான் இந்த மது ஒழிப்பு. இவர்களை இந்த ஆயுதம் எடுக்க வைத்த அந்த புண்ணியவான்கள் வேறு யாருமல்ல... குழந்தைகளுக்கு ஊற்றிக் கொடுத்த மதுவெறியர்களும் குடித்துவிட்டு கூறுகெட்டுப் போன மாணவர்களும்தான். இனி இவர்கள் மதுவை ஒழிக்கிறேன் என்று அடித்துக் கொள்வார்கள். ஆளாளுக்கு ஒன்று சொல்லி நம்மை அசர வைப்பார்... ஆளும் காவிரித்தாய் திடீரென கடைகளை மூடி மதுவிலக்கை அமுல்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இவர்கள் செயல்கள் எல்லாமே அரசியல் நாடகம்தான்... இவர்கள் படாடோப வாழ்க்கை வாழ அந்தந்த சூழலுக்கு ஏற்ப மேடையேற்றும் நாடகங்களில்.. தேர்தல் நேரத்தில் நாம் ராஜபார்ட்... இவர்கள் சகுனிகள்... தேர்தலுக்குப் பிறகு அதே நாடகத்தில் இவர்கள் பரிவாரங்களுடன் பவனி வரும் ராஜபார்ட்.... நாமெல்லாம் பபூன்.

காந்தி ஜெயந்தி என்றாலும் கடைக்குப் பின்னே வைத்து விற்பவனும் காலையிலேயே கட்டிங் அடிக்கும் மனிதர்களும் எப்பவும் போல் தங்கள் அன்றாட நிகழ்வை நடத்தி வருகிறார்கள்... வருவார்கள். இதில் எதுவுமே மாறப் போவதில்லை. அப்படியே மூடினாலும் கடைகளில் பார் நடத்துகிறேன் என்று அராஜகம் நடத்தும் உள்ளூர் ரவுடிகள் கள்ளச்சாராய அதிபதிகளாகி கொல்லும் தொழிலை நேர்த்தியுடன் செய்வார்கள். மேலும் தேர்தல் நேரத்தில் தேவைக்காக மூடிவிட்டு மீண்டும் குடிகெடுக்க வருவார்கள் என்பதே உண்மை. இதுதான் நடக்கும். கோடிகளைப் பார்த்த அரசு கோமாவில் கிடக்குமா என்ன?


அப்புறம் இன்னொரு விஷயங்க... சாதி, சாதியின்னு இப்ப எல்லாரும் கிளம்பியாச்சு.... இதைப் பற்றி பேசணும்... மற்றுமொரு மனசு பேசுகிறது பகிர்வில் பேசலாம்.

நன்றி : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை...
-'பரிவை' சே.குமார்.

புதன், 22 ஜூலை, 2015

மருதாணி


பேத்தி வைத்த மருதாணியில்
சிவந்து சிரிக்கிறது 
நீ வைத்து விட்ட 
மருதாணி நினைவுகள்...

மருதாணி இலை பறித்து
கொட்டைப்பாக்கு தானெடுத்து
ஏழு வீட்டு கூரையும்
எதுத்த வீட்டு கோழிக் கழிவுமாய்...

எங்க வீடு ஓடிவந்து
அம்மியில நீ அரைக்க...
மருதாணி அரைக்கிறேன்னு
மனசை அரைச்சிப் போவியே...

வேண்டான்னு மறுத்தாலும்
விடாமல் வைத்துவிட்டு
மறக்காம மறுநாளு 
கைபிடித்துப் பாப்பியே...

மருதாணி சிவப்பான 
விரல்கள் வீணை மீட்ட
கண்ணுக்குள் காதல் காட்டி
கள்ளச் சிரிப்பு சிரிப்பாயே...

தீபாவளி, பொங்கல்ன்னு
எல்லாத்துக்கும் நீ அரைச்சே...
ரசிச்சு வச்சிக்கிட்டு
அழகி நீ அலையவிட்டே...

பேத்தி வச்ச மருதாணி
அழகா சிவந்திருக்கு...
எனக்கு மட்டும் உன் முகம் 
அதுல தெரியுதடி...

நீ பறிச்ச மருதாணிச்செடி
நின்ன இடம் தெரியலையே...
வச்சிவிட்ட கையழகு
மனசை விட்டுப் போகலையே...

வீட்டுலயே வளத்தாலும்
யாரு இப்ப வைக்கிறாக...
நம்மூரும்கூட இப்ப
மெஹந்திக்கு மாறிடிச்சு..

மருதாணி மறைஞ்சாலும்
மறையாம நீ இருக்கே...
அழுதுகிட்டு நீ போன
பாதை மறக்கலையே...

பாவி மனசு இப்போ
வாழத்தான் பழகிருச்சு...
கட்டையில போகும் வரை
கலையாது உன் நினைவு...


-'பரிவை' சே.குமார்.

திங்கள், 20 ஜூலை, 2015

மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...


பாகுபலி படம் பார்த்தாச்சு... வரலாற்றில் நிகழ்ந்தது போல் அரச பரம்பரை, வஞ்சகம், சூழ்ச்சி என எல்லாம் கலந்து மகிழ்மதி என்ற நகரத்தை கற்பனையில் உருவாக்கி பாடம் காட்டியிருக்கிறார்கள். ஆரம்பக் காட்சிகளில் அருவியின் கீழே இருக்கும் நாயகன் மேலே இருக்கும் நகருக்கு ஏற முயற்சிப்பதையும் பின்னர் அங்கு செல்வதையும் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போல் காட்டியிருக்கிறார்கள். நாயகன் பறந்து பறந்து செல்லும் போது இதெல்லாம் எங்க தளபதி குருவியில பறந்து பறந்து பண்ணிட்டாரேன்னு சொல்லத் தோணுச்சு. வரலாற்றுக் கதை என்றாலும் தெலுங்கு ரசிகர்களை மனதில் வைத்து டூயட் பாடல்களையும் இணைத்திருக்கிறார்கள். கேமரா மிக அருமை... காட்சிகளை அழகாக தனக்குள் வாங்கிக் கொண்டிருக்கிறது. கிராபிக்ஸ் கலக்கல்... போர்க்களக் காட்சிகள் மிக நேர்த்தி... 


சத்யராஜ், பிரபாஸ், ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன் என நடிகர்கள் தங்களது தேர்ந்த நடிப்பால் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள். தமனாவை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் முதல் முறை பார்ப்பதால் கொஞ்ச நேரத்துக்கு மனதில் ஒட்டவில்லை. அனுஷ்கா இரும்புச் சங்கிலிக்குள் சிரிக்கிறார். நடிக்க வாய்ப்பில்லை... இரண்டாம் பாதியில் இவர்தான் நாயகி... அதில் சிறப்பாக செய்வார் என்று நம்பலாம். இயக்குநர் ராஜமௌலி மிகச் சாதாரண ஒரு படத்தை கிராபிக்ஸ் மற்றும் அரண்மனை செட்களை வைத்து பிரமாண்டமாக கொடுத்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். பாகுபலி கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம் என்பதே என் கருத்து. 

*************



மாரியும் பாத்தாச்சு... செஞ்சுடுவேன்னு சொல்லியே உக்காரவச்சி கழுத்தறுக்கிறானுங்க... தனுஷின் நடிப்பு மற்றும் ரோபோ சங்கரின் காமெடி இரண்டுமே படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. என் நண்பர் ஒருவர் இவனெல்லாம் ஒரு ரவுடியா... அதுக்குன்னு ஒரு உடம்பு வேண்டாமா என்றார். உண்மைதான்... ஆனா ரவுடியின்னா உடம்பு இருக்கணுமின்னு சட்டமா என்ன.. எங்க ஊர்ப்பக்கமெல்லாம் ரவுடித்தனம் பண்ணுறவென்னால் சுள்ளான் மாதிரித்தான் இருப்பானுங்க... தனுஷின் நடிப்பு செம... கலக்கல் காமெடி... இப்படி இரண்டும் இருந்தும் புறா பந்தயம் விடும் சொதப்பலான... அரதப்பழசான கதை மாரியை மண்ணைக் கவ்வ வைத்து விட்டது. காஜல் சும்மா வந்து போகுது...  அனிருத் பின்னணி இசையில் பட்டையை கிளப்பியிருக்காரு... ஆனா தனுஷ் வரும்போதெல்லாம் எதுக்கு இவ்வளவு பில்டப்புன்னுதான் தெரியலை... மாரி தனுஷ் ரசிகர்களுக்கு தீபாவளி சரவெடி... மற்றவர்களுக்கு மழையில் நனைந்த புஸ்வானம்...

*************

னது முதல் தொடர்கதையான கலையாத கனவுகளை சேனைத் தமிழ் உலா நிஷா அக்கா கேட்டுக் கொண்டதற்கிணங்க மீண்டும் அங்கு பதிந்து வருகிறேன். அந்தக் கதையை இதுவரை படிக்காத எனது நட்புக்கள் அங்கு படித்து கருத்திட்டால் எனது தவறுகளை திருத்திக் கொள்ள உதவும். முதன் முதலாக எழுதிய தொடர்கதை அது... மனசு வலையில் 80 வாரங்கள் எழுதினேன்... அப்போது அதிக வரவேற்ப்பு அதற்கு இல்லை என்பதை அறிவேன். வாசித்தவர்கள் நூறுக்கு மேல் இருந்தாலும் கருத்து ஒன்று இரண்டை தாண்டுவதில்லை. எந்த ஒரு படைப்புக்கும் கிடைக்கும் உண்மையான கருத்துக்களே அடுத்து வரும் பதிவுகளை இன்னும் சிறப்பாக எழுதத் தூண்டும். அந்த வகையில் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் இரண்டாவது தொடர்கதையான வேரும் விழுதுகளுக்கும் பிரபலங்கள் பலரும் வாசித்து கருத்துச் சொல்லும் போது இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்று தோன்றுவதோடு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இதை புத்தகமாக கொண்டு வர வேறு சில நண்பர்கள் சொல்கிறார்கள்... அடபோங்கப்பா சிறுகதையை புத்தகமாக்க நினைத்து ரெண்டாண்டுக்கு மேல் ஓடிப்போச்சுன்னு சொல்லி சிரிக்கத்தான்  முடிகிறது. சரிங்க... சேனைத் தமிழ் உலாவில் தொடர்கதை படிக்க நினைத்தால்...

சேனைத்தமிழ் உலா

இங்கே சொடுக்கிப் படியுங்கள். தவறாமல் தங்கள் கருத்தையும் சொல்ல மறக்காதீங்க...

*************

டந்த ஒரு மாதமாக ரம்ஜான் நோன்பு என்பதால் அலுவலக பணி நேரமும் குறைவு... வேலையும் அதிகமில்லை... இன்று மறுபடியும் பழைய வேலை நேரம்... ஒன்பது மணி நேரம் சும்மா கொன்னு எடுத்துப்புட்டானுங்கல்ல... அறைக்கு வந்ததும் எப்படா படுப்போம்ன்னு வந்திருச்சு... அறையில் நண்பரிடம் ரொம்ப டயர்டா இருக்குன்னு சொன்னப்போ அவரு கொஞ்சம் போட்டா போதுமாங்க... சும்மா கும்முன்னு இருக்குமாம்... வாங்கிருவமா என்றார் சிரித்துக் கொண்டே. ஆமாய்யா இன்னைக்கு உடம்பு வலிக்கிதுன்னு கொஞ்சம் போடச்சொல்லும்... அப்புறம் தினம் கேக்கும்... கொஞ்ச நாள்ல அது இல்லேன்னா தூக்கம் வரலைன்னு சொல்லச் சொல்லும்... அப்புறம் அதுதான் வாழ்க்கையாகும்... அப்படியே போய்ச் சேர வேண்டியதுதான் என்று சொன்னதும் இப்ப என்ன சொல்லிப்புட்டேன்னு இம்புட்டுக் கதை என்று சிரித்தாரே பார்க்கலாம்... இனி தண்ணியடிப்போமான்னு கேப்பாருங்கிறீங்க...

*************

னிக்கிழமை அன்று என்றும் இல்லாத திருநாளா பத்து நிமிஷம் ஒழுங்கா பேசாத விஷால், ரொம்ப நேரம் என்னுடன் ஸ்கைப்பில் பேசிக் கொண்டிருந்தான். உங்க பேரை குமாரசாமியின்னு எழுதி வச்சிருக்கேன்... ஸ்பெல்லிங் சொல்லுங்க பாப்போம் என்றான். குமாரசாமிதான் நமக்கு வச்ச பேரு... ஆனா பள்ளியில் சேர்க்கும் போது அம்மா அழகா இருக்கட்டுமேன்னு குமார்ன்னு சுருக்கிட்டாங்க... அதை அவனிடம் அம்மா ஒரு முறை சொன்னதில் இருந்து எப்போதாவது தோணினால் குமாரசாமியின்னு கூப்பிடுவான். சரியின்னு நான் K...U...M...A...R என ஒவ்வொரு எழுத்தா சொன்னதும் குமார் என்று சொன்னவனிடம் சாமிக்கு... என்று ஆரம்பிக்க அதுதான் எனக்குத் தெரியுமேன்னு சொல்லிட்டு குமாருக்குப் பக்கத்துல KUMAR கூட GOD சேர்த்தா KUMARGOD,  குமாரசாமி ஆயிடும்ல்ல என்றானே பார்க்கலாம். என்னமா இப்படிப் பண்றீங்களேம்மான்னு புல்லரிச்சிப் போச்சு போங்க...

*************

ருங்க... இருங்க... அப்படியே இந்த தப்பாட்டத்தையும் பார்த்து கேட்டு ரசிச்சிட்டுப் போங்க... மனசுக்கு இதமாவும் சந்தோஷமாவும் இருக்கும்ல்ல....


-'பரிவை' சே.குமார்.

சனி, 18 ஜூலை, 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 27)

முந்தைய பகுதிகள் :

"நக்கலா... இந்த கண்ணதாச பயலுக்கு நாம ஒண்ணுமே கொடுக்கலையே... ஏதாவது கொடுத்தா என்னன்னு தோணுதுலா..."

"அதான் சொத்த சரிபாதியா பயலுகளுக்கு பிரிச்சிக் கொடுத்தாச்சே... சும்மாவே ஏ நண்ணமக சொத்துக்கு ஏழரையைக் கூட்டப் பாத்தா... இதுல கண்ணதாசனுக்கு கொடுக்கணுமின்னு சொல்லியிருந்தா பத்ரகாளி ஆயிருக்கமாட்டா...."

காளியம்மாள் இப்படிக் கேட்டதும் கண்ணதாசனுக்கு எதாவது செய்யணுமின்னு சொன்னா மீண்டும் ஒரு பிரச்சினை வருமோ என்ற ஐயம் அவருக்குள்ளும் ஒட்டிக் கொள்ள, மேற்கொண்டு பேசாமல் அமைதியாக எங்கோ ஆந்தை அலறும் சத்தம் கேட்க, நாய்கள் குரைக்க ஆரம்பித்தன

இனி...

தான் சொன்னதுக்கு பதில் வராமல் போகவே "என்னங்க... பதிலையே காணோம்?" என்று மீண்டும் கேட்டாள் காளியம்மாள்.

"இல்ல... நீ சொன்னத யோசிச்சேன்... உண்மைதான்... பயலுக அது வேணும் இது வேணுமின்னு சண்டை போடலையின்னு சந்தோஷப்பட்டுக்கலாம்ன்னா எல்லாத்துக்கும் சேத்து நாலு பெரிய மனுசங்க முன்னாடி மருமவ அது எனக்கு வேணுமின்னு பிரச்சினையைக் கூட்டிருச்சுல்ல... நாம கண்ணதாசனுக்கு சொத்து கொடுக்கணுமின்னு சொன்னோமின்னா நீ சொன்ன மாதிரி பத்ரகாளியாயிடுவா.... எதுக்கு தேவையில்லாம வாங்கிக் கட்டிக்கணும்..."

"அதுதான்...நானும் சொல்ல வந்தேன்..."

"ம்... எனக்கென்ன இங்கன நம்மளை பெத்த ஆத்தா அப்பனாட்டம் பாத்துக்கிறான்... ஏதாவது செய்யணுமின்னு தோணுச்சி.... அதான்... ம்... ஒண்ணு செய்யலாம்... நமக்கிட்ட காசு கொஞ்சம் இருக்குல்ல... அதுல எதாவது அவனுக்குச் செய்யலாம்..."

"ம்.... செய்யலாம்... செய்யலாம்... எதுக்கும் அவனுககிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கணும்... இல்லேன்னா நாளக்கி இம்புட்டுக்காசு வச்சிருந்தாக... சொல்லாமக்கொள்ளாம அவனுக்கிட்ட தூக்கிக் கொடுத்துட்டாகன்னு ஒண்ணாமண்ணா இருக்க புள்ளைக அடிச்சிக்கிட்டு நிக்கக்கூடாதுல்ல... சொத்தும் காசும்தானே பகையே"

"ஏய்... அவனுகளை கேக்காமயா முடிவெடுக்க முடியும்... ஆனா இந்த ரத்தம் அடிச்சிக்கிட்டு கெடக்க ரத்தமில்ல... வழிவழியா ஒண்ணாவே வாழ்ற ரத்தம்..."

"ஆமா...ஆமா... அன்னக்கி வந்தவளுக கூட்டுக்குடும்பம் வேணுமின்னு அக்கா, தங்கச்சியா அம்புட்டுப் பாசத்தோட நின்னோம்... இன்னக்கி அப்பிடியா இருக்கு... வந்த மறுநாளே தனிக்குடித்தனம் போவணுமின்னு நிக்கிறாளுகளே...."

"நீ சொல்றது சரித்தான்... இனிமே அண்ணந்தம்பி உறவெல்லாம் மழக்கி முளைக்கிற காளான் மாதிரித்தான்... சரி... சரி... ஒறங்கு... பயலுககிட்ட பேசிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்..." என்றபடி பேச்சைக் முடித்துக் கொண்ட கந்தசாமி சிறிது நேரத்தில் குறட்டை விட ஆரம்பிக்க, காளியம்மாள் தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தாள்.

"என்னங்க..." அழைத்தது சுந்தரி.

"என்ன..." கேட்டது அழகப்பன்.

"இல்ல சொத்தப் பிரிச்சிக் கொடுத்துட்டு பெருசுக ரெண்டு முகத்துலயும் சந்தோசம் இல்லாமப் போச்சு பாத்தியளா..?"

"ஆமா... சின்னவங்கிட்ட கூட சொன்னேன்..."

"எனக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு... ரெண்டு நாளு இங்கிட்டு கூட்டிக்கிட்டு வந்து வச்சிக்கலாமான்னு பாக்குறேன்..."

"யாரு... அவுகளா... இங்கயா... சரித்தான்... வந்துட்டுத்தான் மறுவேலை பாப்பாக... அடி நீ வேற..."

"ஆமால்ல.... ஒருநா ஒருபொழுது வராதுகல்ல..."

"அதைத்தான் நாங்களும் சொல்றோம்... புள்ளகதான் இல்லையில்ல... நீ ஒரு ரெண்டு நாளைக்கி அங்கன போயி இருந்துட்டு வா..."

"நானா...? உங்கள இங்க விட்டுட்டா...? அதெல்லாம் சரி வராது..."

"ஏய்... நடிக்காதடி... எந்தப்பொம்பள ஆத்தா வீட்டுக்குப் போறதுக்கு விரும்பமாட்டா சொல்லு... எங்க நா போறேன்னு சொன்னா என்ன சொல்லுவானோன்னு அவுகளை இங்கன கூட்டியாரலாமான்னு பேச்சை ஆரம்பிச்சே... கெட்டிக்காரிடி நீ..."

"ஆமா உங்கள ஏமாத்தித்தான் கோட்டை கட்டப்போறோம் பாருங்க..."

"ஏய்... சும்மா சொன்னேன்... உனக்கு மட்டுமில்ல எனக்கும் அவுகதான் தாயி தகப்பன்... இன்னங் கொஞ்ச நாளக்கி ரெண்டு பேரும் இருக்கணும்... அதத்தான் நா சாமிக்கிட்ட வேண்டுறேன்... நாளக்கி கொண்டு போயி விடுறேன்... ரெண்டு நாளக்கி இருந்துட்டு வா.... சரியா..."

"ம்..."

"என்னங்க நா சொன்னதை யோசிச்சியளா?' கணவனிடம் கேட்டாள் சித்ரா.

"எதை?" தெரியாதது போல் கேட்டான் மணி.

"ம்... எல்லாம் அந்த இடத்து விசயந்தான்..."

"அதுதான் பேச்சை விடுன்னு சொல்லிட்டேனே... அப்புறம் என்ன...?"

"அதுக்காக... உங்க தம்பிக்கிட்ட கேட்டு அத வளச்சிப் போடப்பாருங்க... சும்மா வெவரங்கெட்டதனமா இருக்காம..."

"ஏண்டி அவரு சரியாத்தான் பிரிச்சிக் கொடுத்தாரு... அவனுக்கும் அதுல வீடு கட்டணுமின்னு ஆசையிருக்காதா என்ன...?"

"இப்பத்தான் கடலு மாதிரி வீடு கட்டி வச்சிருக்காகல்ல... ஊர்ல பழைய வீடு வேற இருக்கு... அப்புறம் எதுக்கு புதுசா வீடு..."

"ஏன்டி... இதை நாம சொல்ல முடியுமா? காரைக்குடியில இடம் வாங்கிப் போட்டிருக்கோமே அங்க வீடு கட்டிட்டா ஊர்ல வீடு வேணாமின்னு இருந்துருவியா என்ன? இந்தப் பேச்சை விட்டுட்டு ஆவுறதைப் பாரு... இந்த பிசாத்து சொத்துக்காக அவனோட அடிச்சிக்கிட்டு நிக்க என்னால முடியாது... அது எனக்குப் பிடிக்கவும் இல்லை... இனிமே இதப்பத்தி பேசுனே... அம்புட்டுத்தான்...." என்றபடி எழுந்து சென்றான்.

"ஒண்ணுக்கும் புண்ணியமத்த மனுசனை எந்தலையில கட்டி வாழ்க்கையை வீணாக்கிப்புட்டானுங்க... இந்தாளெல்லாம் எதுக்கு மனுசனுன்னு வேட்டிசட்டை கட்டிக்கிட்டு திரியுறான்..." என மூக்கைச் சிந்தினாள்.

"அம்மா... இப்ப எதுக்கு ஒப்பாரி வக்கிறே...?" கத்தினாள் மகா.

"உனக்கென்னடி தெரியும்..."

"இங்க பாரும்மா... நமக்கு நல்லாத்தான் கொடுத்திருக்காக... அதுக்கு சந்தோஷப்படு... சித்தப்பாவுட்டு பாதியும் வேணுமின்னு நிக்கிறது ஆசை மட்டுமில்லம்மா... பேராசை... அது இருந்தா அழிஞ்சிருவோம்... எனக்கு படிப்புக்குன்னு அவருதான் செலவு பண்ணுறாரு... அதுவே பெரிய விஷயம்... தெரிஞ்சிக்க..."

"ஆமா... பொல்லாத பணத்தை கட்டுறாக..."

"வேண்டான்னா சொல்லு.... இப்பவே போன் பண்ணி இனி அம்மா கட்டிருவாகன்னு சொல்லிடுறேன்..."

"அப்பன மாதிரியே உரிச்சிக்கிட்டு பொறந்து ஏ வாநாளை வாங்குறே... போடி அங்கிட்டு..." என்றவள் "நாளைக்கி ஆகட்டும் அந்த கெழவனுக்கு போனைப் போட்டு வாங்கித் தரச்சொல்றேன்" என்றபடி எழுந்தாள்.

"கண்மணி..."  என்ற ரமேஷின் அழைப்புக்கு "என்னங்க..." என்று அடுக்களையில் இருந்து எதிர்குரல் வந்தது.

"கொஞ்சம் தண்ணி கொண்டாவே..."

"ம்..."

அவள் கொண்டு வந்த தண்ணியைக் குடித்து விட்டு "உன்னோட உடன்பிறப்புக்கள் போன் பண்ணுனாங்களா?"

"என்ன திடீர்ன்னு இந்தக் கேள்வி..?"

"பாசமாப் போன் பண்ணியிருப்பனுங்களேன்னு கேட்டேன்..."

"இல்லை..."

"ம்... உங்கம்மா வீட்டுக்குப் போறியா?"

"எதுக்கு?"

"எதுக்கா... பாக்கத்தான்..."

"நல்லாத்தானே இருக்காக... அதுவுமில்லாம ஒருநாளுமில்லாத திருநாளா நீங்க என்னைய போறியான்னு கேக்குறீக..."

"அட இல்ல... சொத்துப் பிரிக்கிறப்போ அந்தச் சனியன் சித்ரா தேவையில்லாம பேசிருச்சுல்ல... அப்புறம் மாமா முகமே நல்லாயில்ல... எல்லாரும் போயாச்சு... ரெண்டு பேருமா இருப்பாக... மனசுக்குள்ளே வச்சிக்கிட்டு இருந்து ஏதாவது ஒண்ணுன்னா... அதான் புள்ளகள கூட்டிக்கிட்டு போயிட்டு ரெண்டு நாள் இருந்துட்டு வரலாம்ல்லன்னு கேட்டேன்..."

"போலாந்தேன்... உங்க ஆத்தாவுக்கு ஆரு ஆக்கிப் போடுறது.... நாங்க இல்லைன்னா நீங்க இங்கிட்டு வரவே மாட்டிய... அது என்ன பண்ணும்..."

"சரசுக்கிட்ட சொல்லிடுறேன்... அது பாத்துக்கும்... நீ பொயிட்டு வா..."

"பாக்கலாம்..." என்றபடி படுத்தாள்.

காலையில் பேசலாம் என குமரேசனும்... இடப்பிரச்சினை பேசணும் என சித்ராவும்... நாளை அவர்களைப் பார்க்கப் போகலாமா என மகள்களும் நினைத்திருக்க, அந்த இரவோ அவர்களுக்கு மிகப்பெரிய துயரத்தைக் கொடுக்கப் போகும் விடியலை நோக்கி நகர்ந்தது.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 17 ஜூலை, 2015

தமிழ்க்குடில் நடத்தும் கட்டுரைப் போட்டி


ன்புத்தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகியின் அன்பு வணக்கம்.  

திரு. காமராசர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு கட்டுரைப்போட்டியின் விவரங்களைத்தங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தங்களுடைய தொடர்ந்த ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.  தங்கள் நட்புகளிடமும் போட்டி பற்றிய விவரங்கள் பகிரவும். 

திரு காமராசர் அவர்களின் 112வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு கட்டுரைப்போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். 

தலைப்பு

1. தனி மனிதனாகக் காமராசர்

2. தேசியத் தலைவராகக் காமராசர்

3. நிர்வாகியாகக் காமராசர்

4. அரசியல்வாதியாகக் காமராசர்


விதிமுறைகள்

1. போட்டியில் கலந்துகொள்பவர்கள்  உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்.

2.     குறைந்தது 3 பக்கம் முதல் 10  பக்கம் வரை இருக்கவேண்டும். 

3. படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்காக பிரத்யேகமா எழுதி அனுப்பவேண்டும். 

4. கட்டுரைகள் காப்பி பேஸ்ட்டாக இல்லாமல் தங்கள் வாழ்வில், உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில் கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.

5. படைப்பாளிகள் தங்கள்  பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com  என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.  குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச் செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.  

6. படைப்புகளை  லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்ப வேண்டுகிறோம்.   தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.  

7. படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 15.08.15 

8. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு   பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும். 

பரிசு விவரம்

முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தனிச்சின்னம் பொறிக்கப்பட்ட பதக்கம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி போட்டிக்காக வரும் கட்டுரைகளில் சிறந்தபடைப்புகள் தேர்வு செய்யப்பட்டு நூலாகவும் அச்சிடப்படும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
  
இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும் ,பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.

நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக.  அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் மற்றவர்களையும் எழுத ஊக்குவித்து இந்தப்போட்டியினை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

அனைவரும் கல்ந்து கொண்டு போட்டியினை சிறப்பித்து பரிசுகளை வெல்லுங்கள்...

நன்றி.

நட்புக்காக இந்தப் பகிர்வு....
-'பரிவை' சே.குமார்.