மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 31 அக்டோபர், 2013

எங்கள் ஊர்


இயற்கை அன்னை
அரவணைப்பில்
பசுமை நிறைந்தது
எங்கள் ஊர் என
பொய்யுரைக்க மனமில்லை..!

ஒரு காலத்தில்
பசுமையோடு
இருந்த இடம்
இன்று பாலைவனமாய்..!

கருவேல மரங்களின்
கட்டுப்பாட்டிற்குள்
விளை நிலங்கள்..!

மழையின் போது
நிறைமாத கர்ப்பிணியாகும்
கண்மாயில்
பாசிகளின் பவனியால்
மனிதர்கள் நனைவதில்லை..!

குடிநீர்க் குளமோ
தாகமெடுத்தால்
தண்ணீர் தேடும்
அவல நிலையில்..!

பராமரிப்பின்றி
பாவமாய்
ஊர்க்காவல் தெய்வம்..!

வீட்டுக் கொன்றாய்
வாழ்ந்த மனிதர்கள்..!
வருடம் ஒருமுறை
எட்டிப்பார்க்கும் வாரிசுகள்..!

எது எப்படியோ
இன்னும் உயிர்ப்புடன்
அடி வாங்கி
தண்ணீர் கொடுக்கும்
அடி குழாய்..!

*** நெடுங்கவிதைகள் தளத்தில் கிறுக்கியது....  மீள்பதிவாக
-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 29 அக்டோபர், 2013

கொலை கொலையாம்...



(உறவினர் ஒருவர் ஊருக்குச் செல்வதால் பொருட்கள் வாங்கும் வேலை காரணமாக தொடர்கதையை இன்று எழுதி பதிவிட முடியவில்லை... அதனால் மீள்பதிவாக சிறுகதை ஒன்று)

விடியும் முன்பே கிளம்பிய கண்ணாத்தாவின் அழுகை ஊரையே குலுக்கியது.

என்னாச்சு என்ற முனைப்பில் அவள் வீட்டிற்கு சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துவுக்கு முன்னாள் தலைவிரி கோலமாக அமர்ந்து 'சண்டாளன் என் செல்லத்தை கொன்னுபுட்டானே' என்று பெருங்குரல் எடுத்து கத்தினாள்.

'யார் செய்திருப்பார்கள் இந்த பாதகச் செயலை...?' என்று நினைத்தவர்களுக்கு பதில் சொல்லும்விதமாக 'இந்தப்பய நல்லாயிருப்பானா... சொத்துத் தகராறுல கொலை பண்ண துணிஞ்சிட்டானே.. அவன் குடும்பம் விளங்குமா...? ஐயோ.... என் செல்லமே..." என்று அரற்றினாள்.

எல்லாரும் கூடியிருக்கும்போது இந்த மாணிக்கம் பய வீட்டுல இருந்து யாரையும் காணோம். அவன் தான் பண்ணியிருக்கனும். அண்ணன் தம்பிக்குள்ள சொத்து தகராறு நடக்கிறது உண்மைதான். அதுக்காக ஒரு உயிரை எடுக்கிற தைரியம் அவனுக்கு எப்படி வந்திச்சு...

"யேய் தள்ளுங்கப்பா... ராசண்ணன் வர்றாரு." என்று ஒரு கைத்தடி கூட்டத்தை விலக்கிவிட, ராசண்ணன் என்று அழைக்கப்பட்ட அந்த ஐம்பது வயது மனிதர் காலையிலேயே குளித்து நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்து மங்களகரமாக இருந்தார். அவர்தான் அந்த ஊருக்கு அம்பலம் (அதான் நாட்டாமை), அதுபோக நாலஞ்சு கிராமத்துக்கு நாட்டம்பலம் வேற... அவரு பேச்சுக்கு அந்த ஏரியாவே மதிப்புக் கொடுக்கும்.

வந்தவர் தலைவிரி கோலமாக இருந்த கண்ணாத்தாவிடம், "ஆத்தா... இதை யாரு செய்திருப்பான்னு நினைக்கிறே...?"

"பெரியய்யா..." என்று அழுகையை கூட்டினாள்.

"யேய்... கிறுக்கி... அதான் ஐயா கேக்குறாகள்ல... நடந்ததை சொல்லுறத விட்டுப்புட்டு ஒப்பாரி வைக்கிறே..?" அம்பலத்துக்குப் பின்னால் நின்று ஒன்று அம்பலம் பண்ணியது.

"வேற யாரு... அவன் தான் பெரியய்யா... சொத்து தகராறுல இப்படி பண்ணிட்டான்"

"வேம்பா... அந்தப்பய வீட்டுல இருக்கானான்னு பாத்துட்டு வா"

"ஐயா... போலீசுக்கு போகணுமா...?" என்றார் ஒருவர்.

"முதல்ல அவன் இருக்கானான்னு பார்ப்போம்... அவன்தான்னு அந்தப்புள்ள சொல்றத நம்பிக்கிட்டு நாம முடிவெடுக்க முடியாதுல்ல... எதுக்காக இது நடந்துச்சுன்னு தெரியலையில்ல..."

"ஆமா..."

"என் கண்ணுமணி... பொண்ணுமணி... கண்ணு நிறைஞ்ச வைரமணி... உன்னை காவு கொடுக்கவா பாத்துப்பார்த்து வளர்த்தேன்... ம்..ஆஆஆஆஆ...."

"இருத்தா... கொஞ்சம் அழுகையை நிப்பாட்டு..."

"ஐயா அவன் பொண்டாட்டி மட்டும்தான் இருக்கு.." என்றபடி வந்தான் வேம்பன்.

"அவளை கூப்பிடு"

"ஐயா... அவளை இங்க கூப்பிட்டு பேசுறது நல்லாயில்லை... ஏன்னா இவ சாகக் குடுத்துட்டு நிக்கிறா... அவ வந்தா அடிக்கக்கூட தயங்கமாட்டா... அதனால நாம நாலுபேரு அங்க போயி பேசலாம்."

"அதுவும் சரிதான்..."

***

"இந்திரா... இந்திரா..."

"வாங்க பெரியய்யா..."

"என்ன புள்ள ஒங்கொலுந்தன் பொண்டாட்டி முத்த வெட்டிப்புட்டாங்கன்னு ஊரையே கூட்டுது... நீ இங்க இருக்கே"

"இல்ல பெரியய்யா... அதுக்கும் எங்களுக்கும் பேச்சுவார்த்தை இல்லை... அப்புறம் எப்படி..."

"சரி மாணிக்கம் எங்கே..?"

"விடியுமுன்னே எங்கயோ பொயிட்டாரு..."

"முத்த வெட்டுனது அவன் தான்னு அந்தப்புள்ள சொல்லுது... இவனும் ஆளு இல்லை...ம்.."

"அவரு செஞ்சிருக்க மாட்டாருய்யா"

"என்ன புருஷனுக்கு வக்காலத்தா... வேற யாரு இந்த மாதிரி செய்யப் போறா... போன் பண்ணினான்னா உடனே வரச்சொல்லு... என்ன...?"

"சரிங்க... பெரியய்யா..."

***

"எங்குடும்பத்து கொலைய அறுத்துப்புட்டானே... அவன் நல்லாயிருப்பானா... நாசமத்துப் போவான்... அவன் குடும்பம் நடுத்தெருவுல நிக்கணும்..."

"இதபாரு புள்ள... அவன் வீட்டுல இல்லை... எப்படியும் திரும்பித்தான் வரணும். அவன் வரும்போது விசாரிச்சு என்ன பைசல் பண்ணனுமோ பண்ணிக்கலாம் அப்படின்னு நான் நினைக்கிறேன். இல்ல போலீசுக்கு போறதுண்ணா சொல்லு... இப்பவே நான் போன் பண்ணி வரச்சொல்லுறேன். அப்புறம் கோர்ட்டு கேசுன்னு அலையணும்... காசு செலவு பண்ணிக்கிட்டு திரியணும்... என்ன சொல்றே... சுமூகமா போறதுன்னா அடுத்து ஆகவேண்டியதை பார்ப்போம்... இல்ல கேசு குடுக்கிறதுன்னா அதுக்கான வேலையில இறங்குவோம்..."

"எங்ககிட்ட என்ன பெரியய்யா இருக்கு... கேசு போட்டு செலவழிக்க... நீங்களா பார்த்து எதாவது நல்ல முடிவா எடுங்க...வேற என்னத்தை நான் சொல்றது..."

"சரி... அவன் வரட்டும்... பேசிக்கலாம்..."

"ஏய் சுந்தரம் இங்க வாடா" என்று கண்ணாத்தா அழைத்ததும் இதுவரை ஓரமாக நின்றவன் "என்னம்மா" என்றபடி வந்தான்.

"இந்தா... அந்தப்பக்கம் பிடி வீட்டுக்குள்ள கொண்டு போயிடலாம்" என்றபடி தலையை அள்ளிக் கட்டிக்கொண்டு எழுந்தாள்.

அவளும் அவனுமாக தலை தனியாக கிடந்த கிடாயை வீட்டுக்குள் தூக்கிச் செல்ல,

'இனி ரெண்டுமாசத்துக்கு கண்ணாத்தா வீட்டுல உப்புக்கண்டம் மணக்கும்... நல்லா வெட்டியிருந்தாலாவது நமக்கு கொஞ்சம் தருவா... களவாணிப்பய கோபத்துல ஆட்டை வெட்டியிருக்கான் பாரு... ம்ம்ம்ம்ம்..." என்றபடி ஊர் கலைந்தது.

(சகோதரி மேனகாஸாதியா சொன்னதன் பேரில் கிரைம் கதை போன்று ஒன்று 2010 மே மாதம் கிறுக்கியது. மீள் பதிவாக....)

-'பரிவை' சே.குமார்

வீடியோ : ஆரம்பம் அதிரடிடோய்....


அஜீத்தின் ஆரம்பம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு இருதினங்கள் முன்பு திரைக்கு வரும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அதிரடி வெற்றி பெற்றிருக்கின்றன. அஜீத் - விஷ்ணுவர்த்தன் - யுவன் சங்கர் ராஜா என அதிரடி கூட்டணி படத்தின் முக்கியமான பலம். இந்த தீபாவளி அட்டகாசமான தல தீபாவளியாக இருக்கும்.




ஆரம்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்

திங்கள், 28 அக்டோபர், 2013

தொலைக்காட்சிகளில் தமிழ்

விஜய் சூப்பர் சிங்கரில் சென்ற வாரத்தில் 'என்றென்றும் ராசா' என்கிற தலைப்பில் போட்டியாளர்கள் பாடினார்கள். அதில் சிலவற்றை வீடியோப் பகிர்வில் பகிர்ந்திருந்தேன். அதற்கு எனது அருமை அண்ணன் திரு. ஜோதிஜி அவர்கள் கொஞ்சம் கோபமாகவே பின்னூட்டம் இட்டிருந்தார்கள். அதற்கு நான் என் பதிலும் அளித்திருந்தேன். அந்தப் பதிலைப் பார்த்ததும் அண்ணன் தனது ஆதங்கத்தை மீண்டும் கீழ்க்கண்டவாறு பதிந்திருந்தார்கள்.

குமார் என்னோட வருத்தமும் ஆதங்கமும் என்ன தெரியுமா?
இந்த நிகழ்ச்சி போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் இளையர்களைப் பற்றியே. இந்த நிகழ்ச்சியை தொடக்கத்தில் நானும் விரும்பிப் பார்த்தேன். சில வருடங்களில் பலரும் வளர்ந்துவிட்டனர். சில பிரபல பாடகர் என்கிற ரீதியில். ஆனால் பெண் குழந்தைகள் வர வர ஒப்பனைகளில் கவனம் செலுத்துவதும், பாடல்களுக்கு தேவையில்லாத பாவனைகள், ஆட்டம் என்று டிஆர்பி ரேட்டிங் என்பதை காரணத்தில் வைத்து அவர்களை பாடுவதை விட பல விசயங்களில் ஒரு ரசிக்கக்கூடிய பொம்மை போல மாற்றி விடுகின்றார்கள். ஒரு கிராமத்தில் இருக்கும் தகப்பன் தாய் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் இந்த நிகழ்ச்சிக்கு நீதிமான்கள் பேசும் பேச்சை கால் வாசி தமிழ் முக்கால்வாசி ஆங்கிலத்தை எப்படி புரிந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் திறமையை வளர்க்க வேண்டும் என்று நினைப்பு வரும்?

நம் ஊரில் அல்டாப்பு என்போமே அது போலத்தான் இது போன்ற நிகழ்ச்சிகள் என்பது என் கருத்து.

அண்ணனின் கருத்து முற்றிலும் உண்மைதான். டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக அவர்களது சிகை அலங்காரம் முதல் உடை வரை இவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். மேலும் தமிழ்த் தொலைக்காட்சி என்ற பெயர்தானே ஒழிய சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் 75% ஆங்கிலம்தான் பேசப்படுகிறது. தமிழில் பேசுவதை பெரும்பாலும் தரக்குறைவாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி பொது இடங்களிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இங்கும் அப்படித்தான்... ஒரு மலையாளி மலையாளியைப் பார்த்தால் மலையாளத்தில்தான் பேசுவான். ஆனா நம்ம ஆளுக இருக்கானுங்களே அப்பா... அதுவரைக்கும் வீட்டுக்கோ நண்பர்களுக்கோ பேசிக்கொண்டிருப்பார்கள். நாம் அருகில் போய் விசாரித்தால் இதயம் படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சிதான் அரங்கேறும். ஒண்ணு இங்கிலீஸ்ல என்னன்னு கேட்பான்... இல்லேன்னா இந்தி, மலையாளத்துல கேட்பான். தப்பியும் தமிழுக்கு வரமாட்டான்... நாம நீங்க தமிழா... அப்படின்னு இடையில் விட்டுப் பார்த்தால் 'யா... ஐம் ப்ரம் திருச்சி...' அப்படின்னுதான் சொல்லுவான். என்னமோ தெரியலை.... தமிழ் பேசினா ஊரைவிட்டு விரட்டிருவாங்கன்னு நினைச்சுக்குவாய்ங்க போல...

சரி, கதைக்கு வருவோம்... சென்ற வாரத்தில் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்த இயக்குநர் மிஷ்கின் பேசியதில் 90% ஆங்கிலம்தான்... என்னோட படத்தை பாருங்கள் தமிழ் மக்களேன்னு ஊர் ஊரா போஸ்டர் ஓட்டப் போவோம்... படத்துக்கு அழகிய தமிழில் பேர் வச்சு வரிவிலக்கும் வாங்கிக்குவோம்... ஆனா பேசும் போது மட்டும் தமிழை வேப்பங்காயாகப் பார்ப்போம். இளையராசாவைப் பற்றி பேசிய அனைத்தும் இங்கிலீஸ்தான்... அப்புறம் எப்படி இதைப் பார்க்கிற பாமரனுக்கு இளையராசாவைப் பற்றி என்ன சொன்னார்ன்னு தெரியும். இதைத்தான் அண்ணன் தனது ஆதங்கத்தில் சொல்லியிருக்கிறார். கிராமங்களில் இருக்கும் வயதானவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்தால் என்ன புரியும் சொல்லுங்க... ஒரு மண்ணும் புரியாது... நாங்க சின்னவயதில் வீட்டில் எதாவது சொல்லிச் சிரிப்போம். அப்போ எங்க தம்பி எதையும் கவனிக்காமல் எதாவது பண்ணிக்கிட்டு இருப்பான்... ஆனா நாங்க சிரிக்கும் போது அவனும் சிரிப்பான்... இப்ப ஏன்டா சிரிச்சேன்னு கேட்டா நீங்க சிரிச்சீங்க நானும் சிரிச்சேன்னு சொல்லுவான். இது அடிக்கடி நடக்கும்... அதே நிலைதான் இந்த பீட்டர் இங்கிலீஸ் நிகழ்ச்சிகளில்... எல்லாரும் சிரிச்சா நாமளும் சிரிச்சு வைக்க வேண்டியதுதான்.

தமிழ் பேச்சு எங்க மூச்சுன்னு ஒரு நிகழ்ச்சி ஆங்கிலமோ வடமொழிக் கலப்போ இல்லாமல் அழகிய தமிழில் பேசுவார்கள். தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் அவர்கள் சில வாரம் கலந்து கொள்ளவில்லையாம். அவருக்குப் பதிலாக நடுவராக வந்தவர்கள் சுத்த தமிழில் பேச முடியாமல் ஆங்கிலம் கலந்து பேசியதாக நண்பர் ஒருவர் முகனூலில் எழுதியிருந்தார். பேசுபவர்களுக்கு மட்டுந்தான் தமிழ் மூச்சா இருக்கனும்... நடுவர்களுக்கு இல்லை என்று முடிவு செய்திருப்பார்கள் போல.

இந்த சூப்பர் சிங்கர் சீசனிலும் மலையாளிகளுக்குத்தான் மரியாதை. நடுவர்களாக இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சோறு போட்டாலும் தங்களோட மண்ணின் பாசம் அதிகமாகவே இருக்கிறது என்பது அடிக்கடி அப்பட்டமாகத் தெரிகிறது. சென்ற வாரம் கணேஷை நீக்கியதும் அப்படித்தான் நினைக்கத் தோன்றியது.  இந்தச் சுற்றில் எப்படிப் பாடுகிறார்கள் என்பதை வைத்து முடிவெடுக்காமல் சென்ற சுற்றுகளில் உனக்கு அது சரியில்லை... இது சரியில்லைன்னு... பத்து நிமிட அறிக்கை வாசிச்சு போகச் சொல்லிட்டாங்க. ஆனா அவன் சொன்னான் பாருங்க அதுதான் சூப்பர்... எனக்கு எது சரியின்னு தெரியுதோ அதை நான் செய்வேன். நல்லாயில்லையின்னு யார் சொன்னாலும் பரவாயில்லை... என்னோட பாணியில நான் பாடுவேன்னு சொன்னான்... அம்புட்டுத்தான் நடுநாயக இசைத் தூண்கள் ஒன்றும் பேசவில்லை.

மொத்தத்தில் பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆங்கிலக் கலப்போடுதான் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து பார்க்கும் நிகழ்ச்சிகளாக எதுவுமே இல்லை என்பதே வருத்தமான விசயம்தான். இதிலும் குறிப்பாக குடும்ப நிகழ்வுகளை... நாலு சுவற்றுக்குள் வைத்து பேச வேண்டியதை உலகமே பார்க்கும்படி அழுகை, அடிதடி என பரபரப்பு நிகழ்ச்சியாக்கி தங்கள் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முன்னேற்றம் காண எல்லாத் தொலைக்காட்சிகளும் போட்டாபோட்டி போடுகின்றன. இதில் பலிகடாக்கள் பெரும்பாலும் அன்றாடங்காச்சிகளே.

சரிங்க பேசினா இன்னும் நிறைய பேசலாம்... ஆங்கிலக் கலப்பில்லாமல்... சினிமா சம்பந்தான நிகழ்ச்சிகள் இல்லாமல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்திக் கொண்டுதான் இருக்கிறது என்பது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் தமிழ் எங்கள் மூச்சு என்று சொல்லிக் கொண்டு ஆங்கிலம் கலந்து விளம்பர இடைவேளையாய் தமிழ் பேசும் நடுவர்களைக் கொண்டு நிகழ்ச்சி நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத்தானே நாம் எல்லோரும் பார்க்கிறோம்.. ஆடவே தெரியவில்லை என்றாலும் கேரளத்திலிருந்து வந்த முன்னாள் நடிகை ஆஹா.... ஒஹோ... பென்டாஸ்டிக்... மார்வலஸ்... எக்ஸலண்ட்... கீப் இட் அப்ன்னு கத்தும் போது ஒரு மயிர்ச்சிலிப்போடு நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்...

(மனசு மற்றுமொரு தலைப்பில் பேசும்)
-'பரிவை' சே.குமார். 

சனி, 26 அக்டோபர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 25

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

25. சந்தேகப் பொறி பறக்கிறது

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள்.  ஐயா வீட்டை தாங்கள் சந்திப்பதற்கு பயன்படுத்தி வந்தவர்கள் முதல்முறையாக பூங்காவிற்குச் சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.  ராமுக்கு புவனா அனுப்பிய பொங்கல் வாழ்த்து ராசு கையில் கிடைக்கிறது.

இனி...


'வித் லவ்... யுவர் புவி' என்று இருக்கவும் 'ஆஹா... பய படிக்கப் போறேன்னு வேற வேலயில்ல பாக்குறான்...' என்று நினைத்தபடி ஒரு ஒரமாகக் கிழித்து வாழ்த்து அட்டையை பிரித்துப் பார்க்க அழகாக இதயம் வரைந்து அதற்குள் நான்கு வரிகள் எழுதி கீழே 'புவனாராம்' என எழுதியிருக்க, 'சரி... இன்னைக்கு அவன் வரட்டும்' என அதை மட்டும் எடுத்து தனியாக வைத்துவிட்டு மற்றவற்றை உத்திரத்தின் மீது வைத்தான்.

மாலை ராம்கி வீட்டுக்குள் நுழைந்ததும் "என்னடா நாளையில இருந்து லீவுதானே?" என்றதும் "ஆமாண்ணே..." என்றபடி புத்தகத்தை வைத்துவிட்டு டிபன் பாக்ஸை பாத்திரம் வெலக்கும் இடத்தில் வைத்துவிட்டு கை,கால்களை கழுவி  கொடியில் கிடந்த குத்தாலம் துண்டை எடுத்து துடைத்துக் கொண்டு கயிற்றுக் கட்டிலில் அண்ணனுக்கு அருகில் அமந்தான்.

"என்னடா... காலேசு படிப்பு ரொம்ப பிடிச்சிருக்கும் போல..." என்றான் ராசு.

"ஆமாண்ணே... ஸ்கூல் மாதிரி இல்ல.. இது ரொம்ப வித்தியாசம்ண்ணே..."

"எல்லாமே மாறும் போல..."

"ம்... " என்றவன் 'என்ன ஒரு மாதிரி பேசுறாரே? ஆஹா... பிடி கொடுக்காம பேசணுமேன்னு' மனசுக்குள்ள சொல்லிக் கொண்டான்.

சீதா காபி கொண்டு வந்து கொடுக்க, "சீதா அந்த உத்தரத்துல இவனுக்கு வந்த கிரீட்டிங்க்ஸ் இருக்கு... எடுத்துக் கொடு..." என்று ராசு சொல்ல அவள் எடுத்துக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

வேகவேகமாக அனுப்பியவர் அட்ரசைப் பார்த்தவன், ஒண்ணும் சொல்லாமல் மடியில் வைத்துக் கொண்டு காபியைக் குடித்தான்.

"என்னடா... யாராவது முக்கியமான ஆள் அனுப்புவாங்கன்னு நினைச்சிருந்தியா... என்ன?" 

"அதெல்லாம் ஒண்ணுமில்லேண்ணே... எப்பவும் நம்ம சரவணப்பய அனுப்புவான். அதான்.."

"அவன் அனுப்புறது எப்பவும் மாட்டுப் பொங்கல் அன்னைக்குத்தான் வரும்... நீ வேற யாரோ அனுப்புவாங்கன்னு நினைச்சிருக்கே... உண்மையைச் சொல்லு..."

"ஐயோ அண்ணே... அப்படியெல்லாம் யாரும் இல்ல... இந்தா என்னோட பிரண்ட்ஸ்தான் அனுப்பியிருக்காங்க... வேணுமின்னா பிரிச்சிப் பாரு... சும்மா... ஏதோ பொம்பளப்புள்ள அனுப்புனது மாதிரி கேக்குறே... இதை நீயே பிரிச்சிப் பாத்துக்க..." என்று கோபமாக எழுந்தான்.

"டேய் இருடா... எதுக்கு இப்ப உனக்கு இம்புட்டுக் கோபம்... என்னடா கேட்டேன்.."

"அப்புறம் என்னண்ணே... நீ அப்படித்தானே கேக்குறே...?"

"சரி... இரு வாறேன்..." என்றபடி எழுந்து சென்றவன் கையில் வாழ்த்தோடு வந்து "இந்தா..." என்றதும் 'என்ன' என்பது போல ஏறிட்டுப் பார்த்தான். முகத்துக்கு நேராக நீட்டிய கிரிட்டிங்க்ஸை வாங்கியவன் அது பிரித்து இருப்பதைப் பார்த்ததும் யாரு அனுப்பியது என்று புரிந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அனுப்பியவர் அட்ரஸைப் பார்த்தவன் புவி பெயரைப் பார்த்ததும் கொஞ்சம் உஷாரானான்.

"புவியா... எனக்கா வந்திருக்கு?" என்று திருப்பிப் பார்த்தான்.

"யாருடா புவனா?" நேரடியாகக் கேட்டான். அப்போதுதான் பொங்கலுக்கு சுப்பி பொறக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த நாகம்மா "என்னடா... என்ன?" என்று வினவினாள்.

"ஒண்ணுமில்லேம்மா... இவனோட பிரண்ட்ஸ் பொங்கல் வாழ்த்து அனுப்பியிருக்காங்க... அதான்.... வேற ஒண்ணுமில்லை..." என்றவன் அம்மா அவர்களைக் கடந்து உள்ளிக்குள் சென்று கல்தூணில் சாய்ந்து அமரும் வரை பேசாமல் இருந்துவிட்டு " சொல்லுடா யாருடா அவ?" என்றான் மெதுவாக.

"யாரு... புவனாவா..? யாருன்னே தெரியலை... இந்தப் பயலுக எவனாவது இந்த வேலையைப் பாத்திருப்பானுங்க..."

"பொம்பளப்புள்ள கையெழுத்தாவுல்ல இருக்கு...?"

"இது பெரிய விஷயமா என்ன... அவனுக அக்காவை விட்டு எழுத வச்சிருப்பானுங்க.... இது சரவணன் அக்கா எழுத்து மாதிரி இருக்கு... அவங்ககிட்ட கேட்டா தெரிஞ்சு போயிடும்... இல்லேன்னா எங்க கிளாஸ் பொண்ணுங்க யாராவது எழுதியிருப்பாங்க... இந்தா நீயே வச்சிக்க..." என்று அவனிடம் கொடுத்துவிட்டு எழுந்தான்.

"எதையோ மறைக்கப் பாக்குறேன்னே தெரியுது... சரி விடு... நீ படிச்சா உனக்கு நல்லது... நாளைக்கு எனக்கு எதுவும் செய்யப் போறதில்லை... அண்ணன்னு வாறியோ இல்ல வர்றவ பேச்சைக் கேட்டுக்கிட்டு என்னைய முறைச்சிக்கிட்டு நிக்கிறியோ.."

"எதுக்குண்ணே இப்படியெல்லாம் பேசுறே... நான் அப்படியெல்லாம் இல்ல..." என்றபடி எழுந்தான்.

"இந்தா இதை வச்சிக்கிட்டு நான் என்ன பூஜையா பண்ணப் போறேன்... நீயே எடுத்துக்கிட்டுப் போ..." என்று அவனிடம் எல்லாத்தையும் எடுத்துக் கொடுக்க, ஒவ்வொன்றாக பிரித்துப் படித்தபடி சென்றவன், புவனா அனுப்பிய வாழ்த்தில் 'புவனாராம்' என்று இருக்கவும், 'களவாணி வேற பேர்லதான் அனுப்புவேன்னு அட்ரஸ் வாங்கிட்டு இப்படி பண்ணிட்டாளே' என்று நினைத்தபடி அதை மட்டும் தனியாக எடுத்து பத்திரப்படுத்தினான்.

"அம்மா..."  என்று தோளில் கோலம் வரைந்தபடி சாய்ந்தாள்.

"என்ன வேணும்... ரொம்ப குழையுறே...?"

"எல்லாரும் பிரண்ட் ஊருக்குப் பொங்கலுக்கு வர்றதா சொல்லியிருக்கோம்... பொங்கல் அன்னைக்கு இல்லை... மாட்டுப் பொங்கலன்னைக்கு அவங்க ஊர்ல ரொம்ப விசேசமா இருக்குமாம்...ப்ளீஸ் அம்மா..."

"ஆத்தாடி... நீ பாட்டுக்கு அங்க போறேன்... இங்கே போறேன்னு கிளம்பினா உங்க அப்பாவுக்கு நான் பதில் சொல்ல முடியாதுடி... ஆளை விடு நீயாச்சு அவராச்சு... ராத்திரி அவரு வந்ததும் பேசிக்க..."

"அம்மா ப்ளீஸ்... நீ சொன்ன அப்பா ஒண்ணும் சொல்லமாட்டாரு..."

"ஆமா... காரியம் ஆகணுமின்னா மட்டும் எங்கிட்ட வாங்க அண்ணனும் தங்கச்சியும்... சரி எந்தப் பொண்ணு வீட்டுக்கு..."

"அது..."

"என்னடி.. இழுக்கிறே...?"

"பொண்ணு இல்லம்மா... பையன்..."

"என்னது ஆம்பளப்பய வீட்டுக்கா..? ஆத்தாடி உங்கப்பன் கொன்னே புடுவாரு..."

'அம்மா கூடப்படிக்கிறதுல ஆணு பொண்ணுன்னு பிரிச்சா பழகமுடியும்... கிளாஸ் பிரண்ட்ஸ்ம்மா... நீ லேசா ஆரம்பி... நான் பேசிக்கிறேன்... ப்ளீஸ்ம்மா..."

"என்னடி... பயலுக சகவாசமெல்லாம் வச்சிக்கிட்டு... இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரி வராது... சும்மா போ... நா ஒண்ணும் பேசமாட்டேன்...."

"அப்படியே பட்டிக்காடாவே இருங்க... அப்ப பொம்பளப்புள்ளங்களா படிக்கிற காலேசுல சேத்து விட்டுருக்கனும்... நானா இங்க சேத்து விடுங்கன்னு கேட்டேன். அப்புறம் ஒரே கிளாஸ்ல படிக்கிற பசங்க வீட்டுக்கு எல்லாரும் போகும்போது நாமட்டும் போகலைன்னா என்னை எல்லாத்துலயும் ஒதுக்கிருவாங்க.... என்னையப் பத்தி உங்களுக்கு தெரியுமில்ல... பெத்த பிள்ள மேல உங்களுக்கு நம்பிக்கை வரலைன்னா என்னத்தை சொல்றது..." என்றபடி கண்ணைக் கசக்கினாள்.

"எதுக்கு இப்போ அழுகுற மாதிரி நடிக்கிறே... சரி அவரு வரட்டும் பேசலாம்... என்ன.. பசங்க வீடுன்னா என்ன சொல்வாரோ தெரியலை ... சரி பேசிப்பாப்போம்..."

"என்ன எங்க போகணும் உங்க செல்லப்புத்திரி..." என்றபடி உள்ளே நுழைந்தான் வைரவன்.

'அய்யோ எருமை வந்திருச்சே...' என்று நினைத்தபடி "அம்மா அவனுகிட்ட சொல்லாதீங்க... காரியம் கெட்டுப் போயிரும்... ப்ளீஸ்..." என்று மெதுவாக காதைக் கடித்தாள்.

"ஒண்ணுமில்லேடா... பொங்கலுக்கு பிரண்ட் வீட்டுக்குப் போகவான்னு கேட்கிறா"

"பசங்க வீடா... பொண்ணுக வீடா..."

"....."

"என்ன ரெண்டு பேரும் பேசாம நிக்கிறீங்க...?"

"யார் வீடா இருந்தா என்ன.... என்னோட கிளாஸ்மெட்டு வீட்டுக்குப் போறோம்... உன்னோட வேலையைப் பாரு... அப்பா போகச் சொன்னா நான் போவேன்..."

"நீ எங்கயும் போக வேண்டாம்... பயலுக வீட்டுல போயி ஆட்டம் போட்டுட்டு வந்தா பாக்குறவங்க என்ன நினைப்பாங்க..."

"உன்னைய மாதிரி ஒண்ணும் ஊரு சுத்தப் போகலை... ப்ரண்ட்ஸ் கூப்பிட்டாங்க... அப்பாகிட்ட கேட்டுச் சொல்றேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்... நீ உன் வேலையைப் பாரு..."

"அம்மா இவ போகக்கூடாது சொல்லிப்புட்டேன்... " என்று கத்தினான்.

"ஏண்டா கத்துறே... அவளாச்சு அவ அப்பாவாச்சு... எதுக்கு என்னைய இழுக்கிறே... வேணுமின்னா நீ அப்பாகிட்ட சொல்லு..." 

"ம்க்கும்... நா சொன்னா கேட்டுட்டுத்தான் மறுவேலை பார்ப்பாரு... அவரு கொடுக்கிற செல்லத்துலதான் இவ இந்த ஆட்டம் போடுறா..." என்றவன் அவளை முறைத்தபடி வெளியேறினான்.

அவன் பின்னால் சென்றவள் "டேய்... நான் போகத்தான் போறேன் என்ன பண்ணுவே?" என்று அவனை வெறியேத்த "இருடி எவன் வீட்டுக்குப் போறேன்னு தெரிஞ்சிக்கிட்டு உன்னை பாத்துக்கிறேன்.." என்று கத்தினான்.

அவனைப் பார்த்து சிரித்தவள் "தம்பி காலேஸ் லீவு விட்டாச்சு... இனி பொங்க முடிஞ்சுதான்... அதுக்குள்ள நான் பொயிட்டு வந்து பழைய ஆளாயிடுவேன்... அப்புறம் என்னைத்தைக் கிழிக்கப் போறே... போ... போ... பொங்கலுக்கு சரக்கடிக்க உன்னோட பிரண்டோட பேசி சரி பண்ணு... சும்மா என்னோட வழியில கிராஸ் பண்ணிக்கிட்டு திரியாதே... மூக்கு உடஞ்சி போயிடும்..."

"ஆட்டமாடி போடுறே... பொம்பளப்புள்ளைய அடக்கம் ஒடுக்கமா இருக்கே... பெரிய படிப்பாளின்னு பேரை வாங்கி வச்சிக்கிட்டு ஆட்டம் போடுறே... நீ அவன் வீட்டுக்கு மட்டும் பொயிட்டு வா உனக்கு மட்டுமில்ல... அவனுக்கும் சேத்து இருக்குடி..."

அவனைப் பார்த்து சிரித்தபடி "அம்மா... நான் பொங்கலுக்கு போறேன்னு சொன்ன பிரண்ட் பேரு கேட்டியே... அவன் பேரு ராம்கி... அதாம்மா உங்க சீமந்தபுத்திரனை காப்பாத்தினானே அவன் வீட்டுக்குத்தான்..." என்று கத்தினாள்.

"என்னடி சொன்னே... அவன் வீட்டுக்கு எப்படி போறேன்னு பாக்குறேன்..."

'சைக்கிள்லதான்..." என்றதும் அவளை அடிக்க கையை ஓங்கினான்.

"ஐயோ... அம்மா அடிக்க வாறான்..." என்று கத்த, "டேய்... வயசுக்கு வந்த பிள்ளையை கையை நீட்டிக்கிட்டு... எதுக்குடா அவளை அடிக்கப் போறே... அவ பிரண்ட்ஸ் வீட்டுக்குப் போறதுக்கு கேக்குறா... நீ எங்க போறேன்னு சொல்லாமயில்ல போவே..." உள்ளேயிருந்து கேட்டபடி வியர்வையை சேலை முந்தானையில் துடைத்தபடி வந்தாள்.

"அம்மா அவ போறது ஒரு பய வீட்டுக்கு..."

"இருக்கட்டுமே... கூடப்படிக்கிறவன்தானே... அதுவும் உன்னய காப்பாத்துன பையன்... அவனை நானும் பாக்கணுமின்னு நினைச்சிருக்கேன்... ஒரு நாள் அவனை நம்ம வீட்டுக்கு வரச்சொல்லுடி..."

"சரிம்மா... கண்டிப்பா வரச்சொல்லுறேன்..."

"அம்மா.... என்னம்மா நீங்க... அவ ஆம்பளப்பய வீட்டுக்கு போறேங்கிறா... நீங்க என்னடான்னா கண்டிக்காம அவனை வீட்டுக்கும் கூட்டியாரச் சொல்றீங்க..."

"அதுக்கு என்னடா இப்ப... அவளைப்பத்தி எனக்குத் தெரியும்... எல்லார்கிட்டயும் ப்ரியா பழகுவா... அவங்க வீட்டுக்குப் போறதால என்ன வந்துருது... படிக்கும் போது கிடைக்கிற சின்னச் சின்ன சந்தோஷத்தை எல்லாம் அனுபவிச்சிக்கணும்... அதுபோக அங்க போகாதே இங்க போகாதேன்னு அவளை கட்டி வச்சாத்தான் எல்லாத் தப்பையும் பண்ணனுமின்னு நினைப்பா... சரி... அப்பா போகச் சொன்னா அவ பாட்டுக்குப் பொயிட்டு வரட்டும்... நீ உன்னோட வேலையைப் பாரு..."

"நல்ல ஆத்தா... நல்ல அப்பன்... இருக்கு உங்களுக்கெல்லாம் ஒரு நாள் ஆப்பு வப்பா... அப்பத்தான் நான் கத்துனது உங்களுக்கு உரைக்கும்... இருடி உன்னோட காட்டுல மழை பெய்யுது... எம்புட்டு நாள் பேயிதுன்னு பாக்குறேன்..." என்றபடி கிளம்பினான்.

"அவனுகிட்ட எதுக்குடி வாயைக் குடுத்துக்கிட்டு... ஆமா... அந்தப்பய நல்லவன்... அப்படி இப்படின்னு பேசினவன்... நீ அவன் வீட்டுக்கு போறேன்னு சொன்னதுக்கு இம்புட்டுக் குதிக்கிறானே... என்னாச்சு இவனுக்கு... அவனுகிட்ட சொல்லாதீங்கன்னு சொல்லிட்டு இன்னார் வீட்டுக்குத்தான் போறேன்னு எதுக்குடி நீ சொல்லித் தொலைச்சே... சரி அப்பா போகச் சொன்னா போ... ஆனா நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு பேர் இருக்கு... அதை மனசுல வச்சிக்க... அப்புறம் காலேசு திறந்ததும் அந்தப் பையனை நம்ம வீட்டுக்கு வரச்சொல்லு... நீ கூட்டியார வேண்டாம்... வைரவன்கிட்ட சொல்லி கூட்டியாரச் சொல்றேன்...." என்றாள்.

"ரொம்ப தாங்க்ஸ்ம்மா..." என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டவள் 'ஏய் ராம்...மாமியா மாப்பிள்ளையைப் பாக்கணுமாம்...' என்று முனங்கியபடி சந்தோஷமாக ஓடினாள். அவளது சந்தோஷம் புரியாவிட்டாலும் வைரவன் சத்தம் போடுவதில் ஏதோ இருப்பதாகப்பட பெத்த வயிற்றுக்குள் புளியைக் கரைத்தது.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

சன்னலோரப் பயணம்



எப்பொழுதும் விரும்பும்
சன்னலோர பேருந்துப்
பயணத்தில் 
இப்போதெல்லாம்
மனசு லயிப்பதில்லை...

பசுமை போர்த்திய
வயல்களெல்லாம்
கட்டிடங்களையும்
கருவை மரங்களையும்
சுமந்து தவிக்கின்றன...

கடந்து செல்லும்
சாலையோர மரங்கள்
காணாமல் போய்
மூங்கிலோ... சவுக்கோ...
இரும்போ சுமந்த
கட்சிக் கொடியும்
சாதிக் கொடியும்
ஆங்காங்கே 
கடந்து செல்கின்றன...

சலசலவென 
தண்ணீரோடிய
வாய்க்காலெல்லாம்
சுயமிழந்து வறண்டு
வாடிக்கிடக்கின்றன...

கையாட்டியபடி
செல்லும் சிறார்கள்
இலவச பேருந்திலோ...
பள்ளிப் பேருந்திலோ...
பயணிக்க பழகிவிட்டனர்...

ஒட்டிய தேகத்தில்
சுற்றிய ஆடையுடன்
மூங்கில் கழிகொண்டு
ஆடு, மாடுகளை
விரட்டிச் செல்லும்
முதிர்ந்த மனிதர்களைக்
காண முடிவதில்லை...

கடந்து செல்லும்
வாகனங்கள் எல்லாமே
அவசர கதியில்
பயணிக்கின்றன...

சன்னலோர இருக்கையும்
வெப்பக் காற்றில்
வெம்ப ஆரம்பிக்க...

இப்போதெல்லாம்
சன்னலோரப் பயணத்தில்
மனம் லயிப்பதேயில்லை...
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 25 அக்டோபர், 2013

நண்பேன்டா : ஆதிரெத்தினம்

நேசித்த நட்புக்களையும் நேசிக்கும் நட்புக்களையும் நினைக்கும் நெஞ்சுக்குள் இருந்து நண்பேன்டாவாக அடுத்து வருபவன் என் அருமை நண்பன் ஆதிரெத்தினம்.

அண்ணாத்துரை, சேவியரில் ஆரம்பித்து எங்கள் கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக கூட ஆரம்பித்தது. வகுப்பில் மூன்று அணியாக பிரிந்த மாணவர் கூட்டணியில் இரண்டு அணிகள் ஐவர் அணியாகி கீரியும் பாம்புமாக மாறிப் போக, முத்தான பத்துப் பேரோடு எங்கள் அணி எல்லாவற்றிலும் தனித்து நிற்க ஆரம்பித்தது. எங்கள் துறையில் இருந்து வெளிவட்டாரங்களிலும் நல்ல பேரை பெற்ற அணியாகத் திகழ்ந்தது. இதுவே எங்கள் தவறுகளை மறைக்கும் பலமாக அமைந்தது என்பதே உண்மை.

எங்கள் அணியில் ஒருவனைத் தவிர மற்றவர்களுக்கு எல்லாம் பங்காளியாக திகழ்ந்தவன்தான் இந்த ஆதி. திருவாடானையில் ஆதிரெத்தினேசுவரர் கோவிலுக்கு எதிரே வீடு. எங்கள் அணியில் இருந்த ஒரே ஐயராத்துப் பிள்ளை... அப்பா தலைமையாசிரியராக இருந்தார். மிகவும் கலகலப்பானவன். பெரும்பாலும் வேஷ்டி சட்டையில்தான் வருவான். குறும்புகளுக்குச் சொந்தக்காரன். அவனுடன் இருக்கும் நேரத்தில் சந்தோஷத்திற்கு பஞ்சம் இருக்காது.

தீபாவளி வந்து விட்டதென்றால் கல்லூரிக்குள் முதலில் பட்டாசு வெடிப்பவன் ஆதியாகத்தான் இருக்கும். கல்லூரியில் பட்டாசு வைப்பது என்பது ஒரு கலை... ஊது பத்தியின் பாதிக்குக் கீழ் வெடியின் திரியைப் பிரித்து சுற்றி வைத்து பத்தியை பற்றவைத்து நாம் விரும்பும் இடத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டால் மெதுவாக பத்தி எரிய ஆரம்பித்து அது வெடிப்பதற்குள் வெடி வைத்த கூட்டம் எங்காவது மரத்தடியில் போய் பேசிக் கொண்டிருக்கும். அப்பத்தானே யார் வைத்தார் என்று தெரியாது.

இந்தக் கலையிலும் நுணுக்கம் கற்றவன் ஆதி, பேருந்தை விட்டு இறங்கியதும் ஊதுபத்தி வாங்கச் செல்வான். மட்டமான.... வாசனையில்லாத ஊதுபத்தியாக பார்த்து வாங்கி வருவான். அப்பத்தான் ஊதுபத்தியின் வாசனை தெரியாதாம். அவன் வைக்கும் இடங்கள் பெரும்பாலும் பெண்கள் ஓய்வு அறையின் சன்னல் அருகில்... வகுப்பறைகளின் வாசல் ஓரம்... சில சமயங்களில் முதல்வர் அறையின் பின்புறச் சன்னல்கள்.

ஏப்ரல் மாதம் முதல் நாள் அன்று ஆதிக்கு கொண்டாட்டம்தான்... ரீகல் சொட்டு நீல டப்பாக்கள் சில மட்டும் கைகளில் இருக்கும்... மாடியில் நின்று கொண்டு கீழே நடந்து போகும் மாணவர்கள் மாணவிகள் எல்லாருக்கும் அடித்துவிடுவான். ஒருமுறை கீழே கத்திக்கொண்டே பசங்களை விரட்டிச் சென்ற முதல்வர் மீது சொட்டு நீலத்தை பீய்ச்சி அடித்துவிட்டான்... ஆஹா மாட்டுனோம் என்று எங்களுக்குள் உதறல் எடுக்க, டப்பாவை தூக்கி வீசிவிட்டு வாங்கடா கீழ போவோம்... எதுவும் நடக்காத மாதிரி வாங்க என்று எங்களை கீழே கூட்டிச் செல்ல, யாருடா அது... என்று வசனம் பேசிக்கொண்டே எங்களைக் கடந்து முதல்வர் மேலே ஏறிச்செல்ல நேராக மைதானத்துக்குச் சென்று வேப்பமரத்தடியில் அமர்ந்த எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

போலீஸ் வைத்திருக்கும் விசிலைக் கொண்டு வந்து பண்ணின அலும்பை எல்லாம் எளிதில் மறக்க முடியாது. எல்லாம் செய்வது அவனாக இருந்தாலும் யாராலும் இவன்தான் பண்ணினான் என்று சொல்ல முடியாத முகத்துக்குச் சொந்தக்காரன்... இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற ரகம்... ஆனால் அது பீரே குடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

பெரும்பாலும் ஆதி கொண்டு வரும் மதிய உணவுகள் வெரைட்டி ரகமாகத்தான் இருக்கும். ஐயர் வீட்டுச் சமையல்ல இருக்காதா பின்னே... அம்மாவிடம் எப்படி கொண்டு போனாலும் அவனுங்கதான் சாப்பிடுவாய்ங்க... நிறைய வச்சி விடுங்கன்னு சொல்லி வைக்க, எங்கள் அணியிலேயே பெரிய டிபன் பாக்ஸில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அமுக்கி வைத்து விடுவார்கள். அதே போல் நாங்கள் எல்லாம் அவனது சாப்பாட்டை சாப்பிட, நாங்கள் அசைவ உணவுகளை கொண்டு செல்வதில்லை... எனவே தைரியமாக எங்கள் சாப்பாட்டை சாப்பிடுவான். 

ஒருமுறை ராமேஸ்வரம் சென்றோம். முதல்நாள் இரவு திருவாடானையில் ஆதியின் வீட்டில் தங்கி அம்மாவின் கையால் சாப்பிட்டு, அதிகாலை அங்கிருந்து பேருந்து ஏறி இராமேஸ்வரம் சென்று திரும்பினோம். படிக்கும் போது ஆச்சாரம்... அனுஷ்காரம் எல்லாம் அவனுக்குள் இல்லை. எங்களில் ஒருவனாக... எங்கள் இல்லங்களில் எல்லாம் வந்து சாப்பிட்டு எங்களின் பங்காளியாகவே இருந்தான்.

படிப்பு முடித்து ஆளாளுக்கு வேறு வேறு பாதைகளில் பயணிக்க, திடீரென ஒருநாள் எங்க வீட்டுக்கு ஒரு ஐயர் சைக்கிளில் வந்தார். வாசலில் அமர்ந்து கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது வீட்டில் நானும் அம்மாவும் மட்டும்தான். எனக்கு அருகில் அம்மா அமர்ந்திருந்தார். தம்பி யாரோ வாராங்கடா என்று சொல்லும் போது சைக்கிளை நிறுத்தியவர் காதில் கடுக்கன்... கழுத்தில் பெரிய உத்திராட்சம்.... தலைமுடியை அள்ளிக்கட்டி அக்மார்க் குருக்களாகத் தெரிய... அம்மா என்னைய தெரியலையா... நாந்தான் உங்க ஆதி... என்று அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கியவன்... டேய் பங்காளி... என்னையத் தெரியலையா என்று கட்டிக் கொண்டான்.

என்னடா... இப்படியாயிட்டே... ஆளே மாறிப் பொயிட்டே... என்று ஆச்சர்யமாக கேட்க, இல்ல பங்காளி ஊர்ல ஒரு ஐயப்பன் கோவில் கட்டியிருக்காங்க... அதை என்னைய பாக்கச் சொல்லிட்டாங்க... அப்புறம் அதுக்குத் தகுந்தமாதிரி நம்மளை மாத்திக்கணுமில்ல... என்றவன் இன்று கும்பாபிஷேகம், பூஜைகள் என எல்லாவற்றுக்கும் முதன்மையானவனாக இருக்கிறான்.

இந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது அவன் ரொம்ப பிஸியாக இருப்பதாகவும் வெளியில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். வீடு வேலை சம்பந்தமாக அலைந்ததால் அவனை சந்திக்க முடியவில்லை. எங்கள் வீட்டுக்கு அருகில் நண்பர் ஒருவர் கோவில் கட்டிக் கொண்டிருந்தார். ஆதிதான் கும்பாபிஷேகத்துக்கு வாறான் என்றதும் எப்படியும் இங்கு வைத்துப் பார்த்துவிடலாம் என நினைத்து சந்தோஷப்பட, அதற்குள் அலுவலகத்தில் இருந்து அவசர அழைப்பு வர, கும்பாபிஷேகத்திற்கு இரண்டு நாட்கள் முன்னர் கிளம்பி வந்துவிட்டேன்.

சொல்ல மறந்துட்டேனே... கல்லூரியில் படிக்கும் போது ஆதவன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுவான். அவன் கிறுக்கிய பேப்பர்கள் என்னிடத்தில் இன்றும் பொக்கிஷமாய் இருக்கின்றன. ஆட்டோகிராப் மூன்று பக்கங்கள் எழுதிய என் இனிய நண்பன் இவன்.

பங்காளி உன் அன்பில் என்றும் குறை சொல்ல முடியாது. எங்களுக்கு குடும்பம் குழந்தைகள் என்று வந்தபோது சில மாற்றங்கள் இயற்கையாய் அமைந்துவிட்டது. இந்தமுறை ஊருக்கு வரும்போது திருவாடானையில் இருப்பேன்....

நண்பேன்டா தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

வீடியோ : சூப்பர் சிங்கரில் என்றென்றும் ராஜா

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் என்றென்றும் ராசா சுற்றில் புதன் கிழமை வரையில் பார்த்ததில் சில பாடல்களை இங்கு பகிர்ந்துள்ளேன். ல்லாருமே நன்றாக பாடினார்கள். திவாகர், பார்வதி, சோனியா, தீப்தி, மதுமிதா, சாய் விக்னேஷ், சரத் சந்தோஷ்,  கிருஷ்ணா, கணேஷ் என அனைவரும் அருமையாக பாடினார்கள். நடுவர்களில் சுஜாதா மட்டும் தமில் பேசுகிறார்.... மற்றவர்கள் அழகான தமிழ் பேசுகிறார்கள். சரி நடுவர்களைப் பற்றி பிறகு பேசுவோம்...  தீப்தி மிக அருமையாகப் பாடினார்.... ஆனால் அந்த இணைப்பை இங்கு கொடுத்தால் விடியோ கிடைக்கவில்லை... இதேபோல் மற்ற சிலரின் பாடல்களையும் இணைக்க முடியவில்லை.இப்போ என்னால் இணைக்க முடிந்த சிலரின் பாடல்களைப் பார்ப்போம்.


பாடல் : இது ஒரு பொன்மாலைப் பொழுது...
பாடியவர் : திவாகர்



பாடல் : புத்தம் புது காலை...
பாடியவர் : சோனியா




பாடல் : பருவமே...
பாடியவர் : பார்வதி




பாடல் : ஏதோ நினைவுகள்...
பாடியவர் : மதுமிதா




பாடல் : பூங்காற்று சதிராடுது...
பாடியவர் : சரத் சந்தோஷ்




பாடல் : தோகை இளமயில்...
பாடியவர் : சாய் விக்னேஷ்




ராஜாவின் இசையை மிக அழகாக இசைத்தார்கள் இசைக்குழுவினர்... புதன், வியாழன் பகுதிகளை இன்றுதான் பார்க்க வேண்டும்... இணையத்தில் பார்ப்பதால் நேரம் கிடைக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்.

மற்றும் ஒரு வீடியோ பகிர்வில் தொடர்வோம்...
-'பரிவை' சே.குமார்.

புதன், 23 அக்டோபர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 24

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

24. அண்ணன் வந்தாச்சு...

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள்.  ஐயா வீட்டை தாங்கள் சந்திப்பதற்கு பயன்படுத்தி வந்தவர்கள் முதல்முறையாக பூங்காவிற்குச் சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

இனி...

வீட்டு வாசலில் வைரவனின் பைக் நிற்பதைப் பார்த்ததும் ஒரு திடுக்கிடலுடன் சைக்கிளை விட்டு இறங்கிய புவனா, 'ஆஹா வில்லன் வந்தாச்சா..?' என்று நினைத்தபடி உள்ளே சென்றாள். 

"ஏன்டி உனக்கு எத்தனை தடவை சொல்றது... இருட்டுக்குள்ள வாராதேன்னு... நேரமாவே வான்னு சொன்னா எப்பவும் இப்படி இருட்டுலயே வர்றே..." என்ற அம்மாவிடம் "வந்தா என்னம்மா... எதுக்கு பயப்படுறே...?" என்றபடி சோபாவில் அமர்ந்தாள்.

"உனக்கென்னடி... நானுல்ல வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன்..."

"போங்கம்மா... நெருப்பெல்லாம் கட்ட வேண்டாம்... இன்னும் பட்டிக்காடாவே இருந்துக்கிட்டு... காலத்துக்குத் தகுந்த மாதிரி மாறுங்கம்மா... நம்ம ரோட்ல வர்றதுக்கு என்னம்மா பயம்... ஆமா வைரவன் வந்துட்டானா?"

"எது சொன்னாலும் கேக்க மாட்டே... எல்லாம் உங்கப்பா கொடுக்கிற செல்லம்... ஆமா வந்துட்டான்.... அதுக்கு என்ன இப்போ... எதுக்குடா அவன் இப்போ வந்தான்னு கேக்குற மாதிரி கேக்குறே..?"

"இல்ல வாசல்ல வண்டியப் பார்த்தேன்... அதான் கேட்டேன்...".

"ம்... அது எங்கிட்டோ பொயிட்டு இப்பத்தான் வந்துச்சு. வரும்போதே கடுகடுன்னு வந்துச்சு... வாசல்ல வண்டிய வச்சிட்டு மறுபடியும் எங்கிட்டோ போயிருச்சு... எங்க வீட்ல தங்குறேங்குது... இனி எப்போ வருதோ...." என்று சொல்லியபடி அம்மா உள்ளே செல்ல எழுந்து நைட்டிக்கு மாறினாள்.

"ஆமா... சித்தி பொங்கலுக்குத்தானே அனுப்புறேன்னு சொன்னுச்சு... என்ன சீக்கிரம் வந்துட்டான்...?" கேள்வி கேட்டபடி அடுப்படிக்குள் நின்ற அம்மாவிடம் சென்றாள். 

"இதுக்கு அங்க இருக்க புடிக்கலையாம்... இங்க இருந்தா ஊர் சுத்தலாம்... அதான் அவகிட்ட சண்டை போட்டுக்கிட்டு ஓடியாந்திருச்சு... அவன் வந்ததுல உனக்கென்னடி அம்புட்டுக் கஷ்டம்... துருவித் துருவிக் கேக்குறே.... இந்தப் பாத்திரங்களை தேச்சுப் போடேன்..."

"போம்மா... இப்பத்தான் வந்தேன்.. களைப்பா இருக்கு..." என்றபடி அங்கிருந்து நகர, "ஆமாண்டி வெட்டி முறிச்சிட்டு வாறீங்க எல்லாரும்... நா மட்டுந்தான் வேலையில்லாம இருக்கேன்... போ.... டீவிக்கு முன்னால உக்காரு..." என்று சொன்னதை காதில் வாங்காமல் சோபாவில் அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் வைரவன் வீட்டுக்குள் நுழைந்தான். இவளைப் பார்த்ததும் "இம்புட்டு நேரம் என்னடி பண்ணுனே..?" என்றான்.

"ம்... ஐயா வீட்டுக்குப் போனேன்... கொஞ்சம் வேலை... எதுக்கு சந்தேகமா கேக்குற மாதிரி கேக்குறே...?"

"உனக்கு தினமும் ஐயா வீடு போகணுமா..? எப்பவாவது போனா பத்ததா..?"

"நான் போறதால உனக்கென்ன பிரச்சினை?"

"எதுவும் பிரச்சினை வந்துடக்கூடாதுன்னுதான் கேக்குறேன்..."

"ஆஹா... நீங்க ரொம்ப ஒழுக்கசீலர் எங்களை கண்டிக்க வந்துட்டீக... போ... போய் உன்னோட வேலை என்னவோ அதைப் பாரு... சும்மா எம்பின்னாடியே வரிக்காரன் மாதிரி திரியாதே..."

"ரொம்ப பேசுறே... வீட்ல நீ என்ன சொன்னாலும் கேக்குறாங்கல்ல அதான் நீ ரொம்ப ஆடுறே.... இருக்கு... எனக்கு தெரிய வரட்டும் அன்னைக்கு இருக்கு உனக்கு கச்சேரி..."

"சீ... போ... அரியரை தூக்கப் பாரு... சும்மா எங்க போனே... யாரைப் பாத்தேன்னு கேட்டுக்கிட்டு..."

"பாப்போம்டி... எங்கிட்ட மாட்டாமயா போவே..""

இதுக்கு மேல இவன்கிட்ட பேசினா சரியா வராதுன்னு நினைத்தபடி "அம்மோவ்... இங்க பாருங்க இவனை..." என்று கத்தினாள்.

"டேய் வந்ததும் வராததுமா அவளுக்கிட்ட என்னடா சண்டை உனக்கு..." என்று உள்ளிருந்து குரல் வர "ஆமா அவளுக்கு செல்லங் கொடுத்து கெடுங்க... இரு நாளைக்கு எல்லாத்துக்கும் சேத்து வைக்கப்போறா...." என்றான்.

"அப்படி அவ என்னடா பண்ணுனா...?"

வைரவன் பதில் சொல்லும் முன் முந்திக் கொண்ட புவனா, " காலேசுக்குத்தானே பொயிட்டு வாறேன்... நா என்னமோ வீட்டுக்குத் தெரியாம சுத்திட்டு வாற மாதிரி கேள்வி கேக்குறான்... சந்தேகமா இருந்தா ஐயா வீட்டுக்கு போனடிச்சுக் கேளுங்க... அங்க புத்தக வேலை... அதான்.... இன்னைக்கு முடிஞ்சிருச்சு... நாளைக்கெல்லாம் நேரத்தோட வந்துருவேன்..."

"ஏன்டா... அவளைப் பத்தி எங்களுக்குத் தெரியும்... சும்மா அவளோட சண்டை போடாதே... ஆமா வண்டிய கொண்டாந்து வச்சிட்டு எங்க போனே..?"

"சும்மா... கோயில் பக்கம் பசங்க பேசிக்கிட்டு இருந்தாங்க... அங்க போயி பேசிக்கிட்டு இருந்துட்டு வாறேன்..."

"பொய்..." கத்தினாள் புவனா.

"என்ன நொய் உன்னோட வேலையைப் பாரு... வீட்டுல நம்புறாங்கன்னு குதிக்காதே.... உன்னோட களவாணித்தனத்தை சீக்கிரமே போட்டு உடைக்கிறேன்..."

"வவ்வே... போடா... போ..." என்று சொன்னவளைக் கடந்து போய் டிவிக்கு முன்னால் அமர்ந்தான்.

'சை... இன்னும்  ரெண்டு மூணு நாளு சந்தோஷமா போயிருக்கும்.. சனியனாட்டம் வந்துட்டான்...' என்று முனங்கியபடி ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

செவ்வாய்க்கிழமை...

தனது அண்ணனை சைக்கிளில் கூட்டிக் கொண்டு போனான் ராம்கி.

"படிப்பெல்லாம் எப்படிடா இருக்கு? நல்லா படிக்கிறியா?"

"ம்... நல்லா படிக்கிறேண்ணே..?"

"என்ன அம்மாவை எதுத்துப் பேசுறியாம்... காலேசு பொயிட்டோமுன்னா..."

"ஐய்யயோ... அதெல்லாம் இல்லண்ணே..."

"அதுதான் லெட்டர்ல விலாவாரியா எழுதியிருந்துச்சே...."

"அதெல்லாம் இல்லண்ணே... அக்காவை முத்து மச்சானுக்கு கட்ட வேண்டான்னு சொன்னது அம்மாவுக்குப் பிடிக்கலை..."

"ம்... அம்மா சொந்தம் விட்டுப் போகக்கூடாதுன்னு நினைக்கிது..."

"அதுக்காக ஊதாரிக்கு கட்டணுமா..?"

"ஏன்டா அவன் திருந்தமாட்டானா என்ன..."

"அப்ப நீயும் அம்மா பக்கம்தானா? அக்காவுக்கு ஆதரவா பேசுவேன்னு நினைச்சேன்..."

"இப்போ அம்மாவுக்கு ஆதரவா பேசலை... நானும் சிங்கப்பூர் போறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்... கொஞ்சம் பணம் ரெடி பண்ணிக் கொடுத்துட்டு அப்புறம் அங்க போயி மாசாமாசம் அடைக்கிற மாதிரி பேசியிருக்கிறேன்.. பொங்கக் கழிச்சு கிளம்பிருவேன்... அப்படியே அங்கன அவனுக்கு ஒரு வேலையைப் பார்த்துட்டா அங்கிட்டு வந்து இருந்தான்னா திருந்திடுவான்...."

"ஆனா அக்கா..."

"சீதாக்கிட்ட பேசுறேன்... அப்பா இறந்ததும் மாமாதானே நமக்கு நல்லது கெட்டது எல்லாத்துக்கும் முன்னாடி நின்னு செஞ்சாரு... அம்மா மாமா வீட்டுக்கு அவ போனா நல்லாயிருப்பான்னு நினைக்கிது.. வயசுல எல்லாப் பயலுகளும் அப்படியிப்படித்தான் இருப்பாய்ங்க... எல்லாம் சரியாயிடும்... அவனை நாமதான் சரி பண்ணனும்.. மாமாகிட்ட கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணம் வச்சிக்கலாம்ன்னு சொல்லிட்டு அவனை சிங்கப்பூர் பக்கம் கொண்டு போயி ரெண்டு வருசம் போட்டா... தன்னால் சரியாயிருவான்... அப்புறம் கல்யாணத்தை பண்ணி வச்சா சீதாவும் சந்தோஷமா இருப்பா... சரி நான் அம்மாகிட்ட பேசுறேன்... இது விசயமா நீ யார்க்கிட்டயும் எதுவும் சொல்லிக்க வேண்டாம் சரியா..?"

"ம்..." என்றான் சுரத்தில்லாமல்.

"ஏம்ப்பா... நம்ம சீதை கல்யாண வெசயமா நீ என்ன நெனைக்கிறே...?" இரவு சாப்பிட்டு வாசலில் அமர்ந்திருந்த மூத்தவனிடம் கேட்டபடி அருகில் வந்து அமர்ந்து அவனது தலையை வாஞ்சையாய் தடவியபடி உக்கார்ந்தாள்

"அம்மா... பொங்கல் முடியட்டும்... மாமா வீட்டுக்குப் போயி பேசலாம்..."

"என்னடா இழுத்தாப்ல சொல்லுறே..?"

"இல்லம்மா... சீதா அவனைப் பிடிக்கலைன்னு சொல்றா... முதல்ல நா சிங்கப்பூரு பொயிட்டு அவனையும் அங்கிட்டு கூட்டிக்கிட்டு ரெண்டு வருசம் அங்கிட்டுத்தானே போட்டு ஆளாப் பேரா மாத்தியாந்து கட்டி வச்சா அவளும் சந்தோஷமா இருப்பா..."

"அதானே வரும்போதே அந்தக் கருவாப்பய நல்லா சொல்லிக்குடுத்து கூட்டியாந்திருப்பான்...?"

"சும்மா அவனைத் திட்டாதீங்க... அவன் இதைப் பத்தியே பேசலை... எதுவா இருந்தாலும் பொங்கல் முடிஞ்சதும் பேசலாம்..."

"இல்லடா... முத்தை சிங்கப்பூருப் பக்கம் அனுப்பிட்டா ரெண்டு வருசத்துக்கு இவளை வூட்ல வச்சிக்கிட்டு வவுத்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கணுமுடா... கலியாணத்தை முடிச்ச்சிட்டு அவனை அங்கிட்டு கூட்டிக்கிட்டா என்ன... எதுக்கு சொல்லுறேன்னா நம்ம சவுந்திரம் மக இவ வயசுதான் ஓடிப்போயி ஒரு வருசமாச்சு... அதான்..."

"ஏம்மா... இப்படி பேசுறீங்க... சீதாவை யாரோட பேசுறீங்க... "

"அதுக்குச் சொல்லலைடா... வெளஞ்ச கதிர காலாகாலத்துல அறுத்தாத்தான்டா நெல்லு வூடு வந்து சேரும்..."

"சரி இப்ப இந்தப் பேச்சை விடுங்க... பொங்கல் முடிஞ்சதும் மாமாகிட்ட கலந்து பேசி நல்ல முடிவா எடுப்போம்...இங்க பாரு சீதா எதுவா இருந்தாலும் உன்னோட நல்லதுக்குத்தான் செய்வோம்... புரிஞ்சதா.... முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு திரியாம சந்தோஷமா இரு... பொங்கல் முடிஞ்சதும் பேசி ஒரு முடிவுக்கு வருவோம்..." என்றபடி எழுந்து துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு வெளியில் கிளம்பினான்.

'ஆமா தம்பி வந்துச்சின்னா வீட்ல இருக்காது... அந்த பாண்டிய பாக்காட்டி தூக்கம் வராது' என்று முனங்கியபடி "டேய்... சீக்கிரம் வந்துடு... ரொம்ப நேரம் உக்காந்துறாம..." என்றாள்.

"இப்ப வந்துடுவேன்.. ஒரு தலகாணிய மட்டும் எடுத்து கயித்துக் கட்டில்ல போட்டு வையிங்க... சரியா" என்றபடி கிளம்பினான்.

றுநாள் மதியம்... வெயிலுக்குத் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு கையில் வயர்கூடையை பிடித்து நடந்து வந்த தபால்காரரைப் பார்த்ததும் "என்ன சாமி எப்படியிருக்கீங்க?" என்றான் ராம்கியின் அண்ணன் ராசு.

"அட வாப்பா ராசு.... எப்ப வந்தே..? நல்லாயிருக்கேன்... நீ எப்படியிருக்கே...?"

"நல்லாயிருக்கேன் சாமி... நேத்து வந்தேன்... "

"ம்... இந்தாப்பா... தம்பி காலேசு போனதும் நிறைய பொங்கல் வாழ்த்து வந்திருக்கு... எல்லாம் அவனுக்குத்தான்..." என்றபடி அவர் கொடுத்த வாழ்த்துக்களில் அனுப்பியவர் யாரென்று பார்த்துக் கொண்டே வந்தான். ஒரு வாழ்த்து மட்டும் சற்று வித்தியாசமாகத் தெரிய யாருடா என்று பார்த்தான். அனுப்பியவர் பெயர் இல்லை... கையெழுத்து யோசிக்க வைக்க, ஓரு ஓரமாக கிழித்து உள்ளிருந்து வாழ்த்து அட்டையை எடுத்துப் பிரிக்க அதில் அழகாக இருந்த இதயம் போன்ற பகுதிக்குள் அழகிய கையெழுத்தில் 'வித் லவ்... யுவர் புவி' என்று இருந்தது.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

சினிமா : பயணங்கள் முடிவதில்லை



நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த பயணங்கள் முடிவதில்லை படத்தை இந்த விடுமுறையில் பார்த்தேன். இதற்கு முன்பு முழுப்படத்தையும் பார்த்ததில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பார்த்திருக்கிறேன். பலமுறை முயன்றும் படத்தைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் சரிவர அமையவில்லை. இந்த விடுமுறையில் எங்கும் செல்லவில்லை என்பதால் பல படங்களையும் சூப்பர் சிங்கர் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்க நேர்ந்தது, அப்படிப் பார்க்கும் போது பயணங்கள் முடிவதில்லையையும் பார்க்க முடிந்தது சந்தோஷமே. 

பள்ளியில் படிக்கும் காலத்தில் ஊர்த் திருவிழாவில் பயணங்கள் முடிவதில்லை பாடல்களை அடிக்கடி போடச் சொல்லி வற்புறுத்தியதுண்டு. அனைத்தும் அருமையான பாடல்கள்... எப்பொழுதும் கேட்கத் தூண்டும் பாடல்கள்... பாடல்களுக்காகவே படம் பார்க்க வேண்டும் என ஆவலைத் தூண்டிய படங்கள் நிறைய... அதில் இதுவும் ஒன்று.

இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய இந்தப்படம் 1982-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி வெளிவந்து வெள்ளிவிழாக் கொண்டாடியது.  நாயகனாக வெள்ளி விழா நாயகன் மோகனும் நாயகியாக பூர்ணிமா ஜெயராமும் நடித்திருக்கின்றனர். ராஜேஷ், பூர்ணம் விசுவநாதன், ரஜனி (பூர்ணிமாவின் தோழி), கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.

கதை என்று பார்த்தால் அதிகமான படங்களில் பார்த்ததுதான். அநாதையான நாயகனும் அவனது நண்பனும் ஒரு அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள். அருகில் இருக்கும் தோழியின் வீட்டிற்கு வரும் நாயகி அங்கு ஒரு கவிதை எழுத அது பறந்து சென்று நாயகனுக்கு அருகில் விழுகிறது. அதை எடுத்துப் பாட, நாயகி காதலில் விழுகிறார். அதை வெளிக்காட்டாமல் அவருக்கு தன்னை யாரென்று சொல்லாமல் அவரைப் பெரிய ஆளாக ஆக்க முயற்சிக்கிறார். அதில் வெற்றியும் கண்டு காதலைச் சொல்லி அவருடன் சுற்றுகிறார். கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது மதுரை சென்று திரும்பிய நாயகன் அவரை வெறுக்கிறான். அவரைப் பார்ப்பதைத் தவிர்க்கிறான். நாயகியிடமே உன் கல்யாணம் என்றால் காசே வாங்காமல் பாடுவேன். உன் தோழி கல்யாணத்துக்கு எனக்கு பதினைந்தாயிரம் கொடுத்தால்தான் பாடுவேன் என்று சொல்லி அவரின் மனதைப் புண்படுத்துகிறார். 



இதற்கிடையே நாயகிக்கு அத்தை மகனான டாக்டர் ராஜேஷூடன் திருமணம் செய்ய நிச்சயம் பண்ணுகிறார்கள். சாலையில் டாக்டரைச் சந்திக்கும் நாயகன் அவரை நாயகி வீட்டில் கொண்டு வந்து விட ,இவள்தான் அவனைக் காதலிப்பவள் என்று அறியாமல் உண்மையைப் போட்டு உடைக்க, தன்னை அவன் வெறுத்து ஒதுக்குவதற்கான காரணத்தை அறியும் நாயகி உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுக்க, நாயகனும் தனது கடைசி நேரத்தை நெருங்க இருவரும் இணைந்து மரணத்தை தழுவுவதாக கதை முடிகிறது.

நாயகன் மோகன் படங்களில் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு முக்கிய காரணம் ராஜாதான். பாடல்களை எஸ்.பி.பி. பாடினாலும் படத்தில் மோகன் பாடுவது போலவே உருகி  மருகி பாடுவார். எல்லாப் படத்திலும் அப்படித்தான் மோகனே பாடுவது போல்தான் தெரியும்.

நாயகி பூர்ணிமா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியின் அப்பாவாக வரும் பூர்ணம் விசுவநாதன், பிளாட் ஓனராக வந்து 'இந்த சென்னை சிட்டியில...' என்று வசனம் பேசும் கவுண்டமணி, நாயகனின் நண்பனாக வந்து சில இடங்களில் சிரிக்க வைத்து குணச்சித்திரமாக மாறிப் போகும் எஸ்.வி.சேகர், இரண்டு இடங்களில் வரும் செந்தில் என எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் செந்தில் சொந்தக் குரலில் பேசவில்லை. சுந்தர்ராஜனே பேசியிருப்பார் போல் தெரிகிறது. 

தனது பாட்டைப் பாடியவனை தங்கள் ஊர் திருவிழாவில் பாடவைக்க நாயகி எடுக்கும் முடிவுக்கு உடனே அப்பா சரி சொல்வது என்பது படத்திற்கு மட்டுமே பொருந்தும். திருவிழா என்றால் ஊர் கூடி அதை வைக்க வேண்டும் இதை வைக்க வேண்டும் என்று பேசி சண்டை போட்டு கடைசியில் ஒத்துக் கொள்வார்கள். இன்று வரை பெரும்பாலான கிராமங்களில் இப்படித்தான் நடக்கிறது.




பாட வருபவன் தனியாளாக எந்த ஒரு இசைக்கருவியும் இல்லாமல் திருவிழாவில் பாடுவது என்பது எங்கும் நடக்காது... அதன் தொடர்ச்சியாக ரேடியோவில் பாட வைப்பது... அப்புறம் அதை தனது பிஸியான காலகட்டத்தில் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்க்கும் கங்கை அமரன் பாட அழைப்பது என எல்லாமே நம்ப முடியாத நிகழ்வுகள்தான்.

இறுதிக் காட்சியில் ரத்த வாந்தி எடுத்து சாகக் கிடக்கும் ஒருவன் காரை ஓட்டிக்கொண்டு நாயகி வீடு வரை வருவது என்பது சினிமாவில் மட்டும்தான் முடியும். எத்தனை குத்து குத்தினாலும்... எத்தனை முறை சுட்டாலும் சாகாமல் வசனம் பேசும் கதாநாயகர்கள் இருக்கும் போது இதுவும் சாத்தியமே.

மேலே சொன்ன அனைத்தும் இந்த சினிமாவில் மட்டுமே சாத்தியம்.

படத்தில் நிறைய இடங்கள் சினிமாத்தனமானவை என்றாலும் சாதாரணக் கதையை அருமையான பாடல்களுடன் அழகாக நகர்த்திச் சென்று எல்லாரையும் கவர்ந்து விடுகிறார் இயக்குநர் சுந்தர்ராஜன். இவர் நிறைய நல்ல படங்களைக் கொடுத்தவர். தனது படங்களில் எல்லாம் ராஜாவின் இசைதான் ஒலிக்க வேண்டும் என்று நினைத்து அதைச் சாத்தியப்படுத்தியவர். தற்போது இயக்கியிருக்கும் படத்துக்கும் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று அவரையே இசையமைக்க வைத்துள்ளார். பின்னணி இசையில் ராஜாவின் ராஜ்ஜியம்தான்.

'ராகதீபம் ஏற்றும் நேரம்', 'மணியோசை கேட்டு எழுந்து', 'வைகறையில் வைகைக் கரையில்', 'ஏய் ஆத்தா ஆத்தோரமா', 'இளையநிலா பொழிகிறது', 'தோகை இளமயில்' என பாடல்கள் அனைத்தும் என்றும் எப்பொழுதும் கேட்கலாம். 



மொத்தத்தில் குறைகள் இருந்தாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கத் தூண்டும் காலத்தால் அழியாத படமாக பயணங்கள் முடிவதில்லை அமைந்துவிட்டது என்பது எல்லாரும் அறிந்ததே.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 21 அக்டோபர், 2013

மனசு பேசுகிறது : மாறுபட்ட குணங்கள்

இந்தக் குணங்கள்தான் எத்தனை வகை... எல்லாரும் நல்லாயிருக்கணும் என்று நினைக்கும் குணம்... அடுத்தவன் கெட்டுப் போக வேண்டும் என்று நினைக்கும் குணம்... அடுத்தவனைப் பார்த்து பொறாமைப்படும் குணம்... என்னைவிட அவன் பெரியவனாக இருக்கக்கூடாது என்று நினைக்கும் குணம்... அடுத்தவர் வாழ்ந்தால் வயிறெரியும் குணம்... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

எனக்குத் தெரிந்து எங்கள் தமிழய்யா பிறருக்கு தீங்கு நினைத்தது இல்லை... எல்லாரும் நல்லாயிருக்கணும்ன்னு நினைக்கும் குணம் அவருடையது. இதுவரைக்கும் யாரையும் அதிர்ந்து பேசியதில்லை... அவருடன் நெருக்கமாகி வீட்டிற்குச் சென்று அவர்களது பிள்ளை போல் இருந்த அந்த நாட்களில் தான் சைவம் என்ற போதினிலும் ஐயாவுடன் அப்போது பேச்சுவார்த்தை இல்லாத போதிலும் எங்களுக்காக அசைவம் சமைத்து முகம் சுளிக்காமல் பரிமாறியவர் அம்மா. இன்றும் ஊருக்குப் போனதும் நான் செல்லும் முக்கிய இடங்களில் ஐயா வீடும் ஒன்று. என்னைப் பார்த்ததும் மதுரைப் பேச்சு வழக்கில் (அம்மாவின் ஊர் கோச்சடை) மிகவும் பாசமாகப் பேசுவார். தங்களது பிள்ளைகளைப் போல் வாஞ்சையுடனும் உரிமையுடனும் பேசும் அந்தக் குணத்தை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை.

எங்கள் ஊரில் ஒருவர் இருந்தார்... அவருக்கு குடும்பம் குழந்தை இல்லை... நீண்ட காலத்துக்குப் பிறகுதான் ஊர்ப்பக்கமே வந்தார். அதிகமான பணம் வைத்துக் கொண்டு விதவிதமாக வாங்கிக் கொண்டு வந்து எல்லாருக்கும் கொடுத்து யார் வீட்டிலாவது சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டினார். வீடு கட்டப் போறேன் என்று அவரது இடத்தில் தச்சு செய்து அப்படியே போட்டு வைத்திருந்தார். யார் பணம் கேட்டாலும் கொடுப்பார். திருப்பிக் கொடுத்தால் நான் கேட்டேனா... வச்சுக்க... என்று வாங்க மறுத்துவிடுவார். திடீரென ஒருநாள் காணாமல் போய்விட்டார். அவரது வள்ளல் குணத்தை ஊரே சிலாகித்துக் கொண்டிருந்தது. மீண்டும் சில மாதங்களுக்குப் பிறகு வந்தார்.... இருந்த பணமெல்லாம் செலவு செய்தார்.... கையில் இருப்பு இல்லை... சந்தனமும் சவ்வாதுமாக இருந்தவர் சாதாரண மனிதரானார். இருந்தும் ஊரார் அவருக்கு சாப்பாடு கொடுத்து வந்தனர். சாப்பாடு கொடுப்பவரை என்ன எப்பப்பாரு புளிக்கொழம்பே வச்சு ஊத்துறே... எங்கிட்டே நல்லா வாங்கித் திண்ணியல்ல நல்லதா செஞ்சு போட்டா என்ன என்று சண்டை போட ஆரம்பித்தார். கொஞ்சம் நாளாக நாளாக அவரின் குணம் மாறுவதை அறிந்தவர்கள் அவரை விட்டு விலக, கொஞ்ச நாள் கத்திப் பார்த்தார்.... திட்டிப்பார்த்தார்... ஒருநாள் காணாமல் போய்விட்டார்... மனிதனின் குணம் ஒரு குரங்கு என்பதற்கு இவர் உதாரணம்.

எங்களது உறவில் ஒருவர் இருக்கிறார். அவரது குணம் என்னவென்றால் தன்னை மீறி எவனும் இருக்ககூடாது.  எதுவாக இருந்தாலும் தான்தான் முதலில் வாங்க வேண்டும்... செய்ய வேண்டும்... என்ற குணம் படைத்தவர். விரலுக்கேத்த வீக்கம் வேண்டுமென சொல்லுவார்கள். இவர் வீக்கம் பெரிதானாலும் பரவாயில்லை என்ற எண்ணம் கொண்டவர். நீ வண்டி வாங்கிட்டியா... நான் கார் வாங்குறேன்... நீ வீடு இந்த மாடல்ல கட்டிட்டியா... நான் இதைவிட பெட்டரா கட்டுறேன்... நீ சில்வர் தட்டில் சாப்பிடுறியா... நான் வெள்ளித்தட்டில் சாப்பிடுறேன்... என எல்லாவற்றிலும் மற்றவர்களுடன் போட்டியிடும் குணம். வயதாக ஆக இந்த பொறாமைக் குணம் கூடிக் கொண்டே போகிறதே ஒழிய இன்னும் திருந்தவில்லை.

எங்க பெரியம்மா இருந்தாங்க... அடுத்தவங்களுக்கு கொடுத்து உதவுற குணத்துல அவங்களுக்கு நிகர் அவங்கதான்... அவங்க கொடுத்துக் கொடுத்து சிவந்த கைக்குச் சொந்தக்காரவங்க... எங்க வீட்ல நாங்க படிக்கும் போதெல்லாம் அவ்வளவு வசதியில்லை. வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை பலகாரங்கள், காய்கறிகள், அரிசி அது இது என்று கூடை நிறைய அள்ளிக் கொண்டு வந்துவிடுவார்கள். எங்க வீட்டுக்கு மட்டுமல்ல எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சின்னம்மா வீட்டிற்கும் பொருட்கள் வரும். அவரால் முடிந்தவரை எங்களுக்குச் செய்து கொண்டே இருந்தார். நாங்கள் அவருக்கெனச் செய்தது கொஞ்சமே... அவர் எங்களுக்குச் செய்ததை சொல்லில் அடக்க முடியாது. பெரியம்மாவின் குணம் அவரோடு போய்விட்டது. பெரியம்மா வீட்டுச் சொந்தமும் சுருங்கி விட்டது.

இங்கே பார்த்த குணங்கள் சில மட்டுமே... ஊரில் ரொம்ப நல்லவன்னு பேர் எடுத்துட்டா அவனா அவன் தங்கம்... அவனோட குணம் யாருக்கு வரும்... ஆத்தான்னு சொன்னா அம்புட்டுப் பாசம் என்பார்கள்... இதே கெட்டவன்னு பேர் எடுத்துட்டா அதுவா அது சரியான தறுதலை... அதுகூட் சேந்தியன்னா நீயும் பாழாப் போகவேண்டியதுதான் என்பார்கள். இதே சண்டையிடும் பெண்ணாக இருந்தால் அவ ஒரு கிறுசுகெட்ட குணங்கொண்டவ... சண்டைக்கு சடபுத்ரகாளியா வந்துருவா என்பார்கள். எல்லாரிடமும் சிரித்துப் பேசும் பெண்ணாக இருந்தால் எப்பவும் ஆம்பளைகளுக்கிட்ட இழிச்சிக்கிட்டு பேசிக்கிட்டுத் திரிவா... இவ பொம்பளையா என்பார்கள். இதே மாதிரி சவுந்தரக்காவா அது மாதிரி அடுத்தவங்களுக்குச் செய்யிற குணம் வேற யாருக்கும் வராது என்றும்... முத்தக்காவா எச்சிக்கையால காக்காய் விரட்ட மாட்டாளே... அவகிட்ட போயி கேட்டா என்ன கிடைக்குன் என எல்லாருடைய குணங்களையும் பிரித்து மேய்ந்து விடுவார்கள்.

இருக்கும் போது எப்படி இருந்தாலும் இறந்தபின் ரொம்ப நல்லவன்பா... அடுத்தவன் நல்லாயிருக்கணுமின்னு நினைக்கிற குணம் கொண்டவன்பா... எல்லாருக்கும் செய்யணுமின்னு நினைக்கிற குணம் கொண்டவன்யா என்று ஊர் பேச வேண்டும். அடுத்தவனுக்கு நாம் எதுவும் செய்யவில்லை என்றாலும் அவன் கெட்டுப் போகட்டும் என்று  நினைக்காத குணம் நம்மில் இருந்தாலே போதும் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து செல்லலாம்...

மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்