திங்கள், 31 டிசம்பர், 2012

2012.... 2013



கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றில்
நல்லவற்றை எடுத்துக் கொண்டும்...
கெட்டவற்றை விரட்டி விட்டும்
புத்தாண்டுக்குள் அடியெடுத்து வைப்போம்....

இயற்கையின் வழியான அழிவுகளை
தடுக்க நம்மால் இயலாது...
இயன்றவரை நல்லதே நினைப்போம்...
நல்லதே செய்வோம்...

தில்லி சகோதரிக்கு நிகழ்ந்த
கொடுமைக்காக வெட்கப்படுவோம்...
வேதனையோடு இனி இதுபோல்
நடக்கவிட மாட்டோம் என
சபதம் செய்வோம்...

அரக்க குணத்தையும்
அராஜக செயல்களையும்
அடியோடு ஒழிப்போம்...
நம் சத்தியம் காப்போம்...

சாதி மத சண்டைகள்...
தண்ணீர் பிரச்சினைகள்...
பாலியல் வன்முறைகள்...
அரசியல் அக்கிரமங்கள்

அனைத்தும் ஒழித்து
அமைதியான வாழ்வை
எல்லோருக்கும் கொடுக்கட்டும்...
பிறக்கும் புத்தாண்டு 2013....


போய் வா இரண்டாயிரத்துப் பனிரெண்டே...
வருக வருக இரண்டாயிரத்துப் பதிமூன்றே...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...



கீழே இருக்கும் லிங்க் நண்பர் ஸ்டார்ஜன் அவர்கள் அனுப்பியது. இதை கிளிக்கி நீங்களும் வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுங்கள்...



புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
'பரிவை' சே.குமார்

திங்கள், 24 டிசம்பர், 2012

சச்சின் என்னும் சகாப்தம்..!


கிரிக்கெட் என்றால் நினைவில் வரும் பெயர் சச்சின்... சச்சின் மட்டுமே.... இந்தியாவில் மட்டுமல்ல.... உலக அளவில் கிரிக்கெட் அறிந்தவர்கள் உச்சரிக்கும் பெயர் சச்சின்.

கிரிக்கெட்டில் எத்தனை எத்தனையோ வீரர்கள் உலகெங்கும் இருந்தாலும் எல்லாரும் விரும்பும் வீர்ராக, களத்தில் சிங்கமாக திகழ்ந்த வீரர் சச்சின். எப்படிப்பட்ட வீரர் பந்து போட்டாலும் விளாசக் கூடிய திறமை படைத்தவர் சச்சின். 

படிக்கும் காலத்தில் சச்சினின் தீவிர ரசிகனாக இருந்தவன் நான். இன்றும் சச்சின் ஆட்டம் என்றால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு பார்க்கக் கூடியவன்தான். எந்தப் பத்திரிக்கையில் சச்சின் போட்டோ வந்தாலும் அதை எடுத்து வைக்கும் அளவுக்கு சச்சின் பைத்தியம் பிடித்தவர்களில் நானும் ஒருவன்.

சாதனைகளுக்காகவே பிறந்தவன் சச்சின்... கிரிக்கெட்டில் அவர் படைத்திருகும் சாதனைகள்தான் எத்தனை... எத்தனை...  அத்தனையும் எட்ட முடியாத சாதனைகள்தான்... அவரது சாதனைகளை தகர்க்க இன்னுமொரு சச்சின் பிறந்து வரவேண்டும் என்பதே உண்மை.

ஆடுகளத்தில் அவர் நின்றால் எதிர் அணிக்கு கிலி பிடித்துக் கொள்ளும் என்பதே உண்மை. சச்சினிடம் பிடித்த இன்னொரு விஷயம் அவரை அவுட் ஆக்கிவிட்டு அவருக்கு முன் கத்திக் கொண்டு ஓடினாலோ குதித்து அவரை பார்த்து கிண்டல் பண்ணினாலோ மைதானத்துக்குள் அவர் எதுவும் பேசமாட்டார். ஆனால் அடுத்த போட்டியில் அவரை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்.

ஜிம்பாப்வேயின் ஒலாங்கோ சில போட்டிகளில் சச்சினை ஆரம்பத்திலேயே அவுட்டாக்கிவிட்டு ஆட்டம் போட ஆரம்பித்தார். ஒலங்கா என்றாலே சச்சினுக்கு உதறல் எடுக்கும் என்ற விமர்சனமெல்லாம் வர ஆரம்பித்தது. ஒரு போட்டியில் பந்து வீச வந்த ஒலங்கோவின் பந்து ஆறுக்கும் நாலுக்கும் இடையில் மாட்டி சின்னாபின்னமாகியது. நான்கு ஓவர் போட்டவர் சச்சின் அவுட்டான பின்னர்தான் வந்தார். 

ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வார்னேயின் பந்தை சச்சின் விளாசியதை வார்னே இன்னும் மறக்கவில்லை. இலங்கையின் முரளிதரன் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம் ஆனால் சச்சின் அவருக்கு சிம்ம சொப்பனம்.

தான் அவுட் என்று தெரிந்தால் நடுவர் சொல்லும் முன்னரே வெளியேறும் சொற்ப வீரர்களில் சச்சினும் ஒருவர். ரன் குவிப்பில் சச்சினுக்கு நிகர் சச்சினே... 

ஜாம்பவான் சச்சின் சாதனைகள் பல புரிந்த போது தூக்கி வைத்து கொண்டாடிய பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் அவர் சில போட்டிகளில் விளையாடாத போது விமர்சிக்க ஆரம்பித்தனர். நேற்று கூட ஒரு தமிழ் பத்திரிக்கையில் வழியாக ஓய்வை அறிவித்தார் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. என்ன கொடுமை பாருங்கள். எத்தனை கேவலமான செய்திகள், கமெண்டுகள்... இவ்வளவுக்கும் சாதனை நாயகன் சச்சின் எந்த கருத்தும் சொல்லவில்லை. மௌனத்தையே பதிலாக அளித்தார். 

அவரின் இந்த முடிவு அவரது சொந்த முடிவாக இருந்தாலும் கேலிகளும் கிண்டல்களும்தான் ஒரு மாவீரனை இப்படி ஒரு முடிவெடுக்க வைத்துள்ளது என்பதே உண்மை. இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எப்படிப்பட்டவரும் கடைசியில் அசிங்கப்பட்டு கேவலப்பட்டுத்தான் வெளியே போவார்கள். இதற்கு உதாரணங்களாக கங்குலி, திராவிட், லெட்சுமணன்  என அடுக்கிக் கொண்டே போகலாம். அசிங்கங்கள் அரங்கேற பிள்ளையார் சுழி போடப்பட்ட போதே சச்சின் அசிங்கப்பட்டு போகக்கூடாது என்று கடவுளை வேண்டிய கோடானுகோடி ரசிகர்களில் நானும் ஒருவன்.

சச்சினின் ஓய்வுக்குப் பிறகு அவர் 50வது சதத்தை பூர்த்தி செய்திருக்கலாம். இப்போது ஓய்வு எடுத்திருக்க வேண்டாம் என்று ஆளாளுக்குப் பேசுகிறார்கள். முன்பு வெளியேறு என்று சொன்ன நாக்கு இன்று ஏன் வெளியேறினாய் என்கிறது. ஆமாம் நரம்பில்லாத நாக்குத்தானே எப்படியும் பேசும். திடீரென ஓய்வை அறிவித்து எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் சிங்கம் சிங்கம்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் சச்சின்.

சச்சின் இல்லாத இந்திய அணியில் இனி என்ன ஆகும் என்பதை பாகிஸ்தானுடனான ஒருதினப் போட்டியில் தெரிந்துவிடும். சச்சின் இல்லாதது உலக அணிகளுக்கு கொஞ்சம் அல்ல அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க சச்சின் விலகியிருக்கிறார். தொடர்ந்து சொதப்பும் சிலர் இன்னும் அணிக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சச்சினுக்குப் பிறகு தோனியில் தலையும் உருள ஆரம்பித்திருக்கிறது. நடப்பவைகளை பொறுத்திருந்து பார்ப்போம்.

சச்சின் கிரிக்கெட் என்னும் மதத்தின் கடவுள்... அவர் ஓய்வு அறிவித்தாலும் ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காமல்தான் இருப்பார் என்பது எல்லாரும் அறிந்ததே....

சச்சினின் ஓய்வுக்காலம் குடும்பத்தாருடன் சந்தோஷமாகவும் மனதுக்கு நிறைவாகவும் அமையட்டும்.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 20 டிசம்பர், 2012

மழையில் உன் வாசம்


இரவின் அமைதியைக்
கிழித்தது எங்கயோ
விழுந்த இடியின் ஓசை..!

தூறலாக ஆரம்பித்து
சட்டென ஆர்ப்பரித்துப்
பெய்ய ஆரம்பித்த
பேய் மழையின் சப்தம்
தூக்கத்தை தூர விரட்டியது...

மழைக்கு அலறும்
மாமரத்து ஆந்தை...
பெருங்குரலில் குறைத்தபடி
படுக்க இடம் தேடி
ஒடிவரும் வீட்டு நாய்...

பேய் மழையாவுல பெய்யுது
என்றபடி ஓட்டில் வடியும்
மழைத் தண்ணீரை பிடிக்க
நனைந்தபடி குடங்களை
வைக்கும் அம்மா...

நாற்றங்காலில் வீசிய
உரம் நாசமாகிப் போச்சே...
என்றபடி கட்டிலிலிருந்து
எழுந்து அமரும் அப்பா...

மழை பெய்யுதா...
காலையில பெய்யக்கூடாதா
லீவாவது கிடைக்கும்
போர்வைக்குள் முனங்கியபடி
பத்தாவது படிக்கும் தங்கை...

மழையின் வேகத்தில்
இடிக்கும் இடியில்
எங்கோ முறிந்து விழும்
மரத்தின் ஓசை...

ஒழுகும் கசாலைக்குள்
படுக்க முடியாமல்
குரலெழுப்பும் பசு...

மழையின் சாரலையும்
மண்ணின் வாசத்தையும்
அனுபவித்த மனசுக்குள்

முந்தைய மழைநாளில்
உன் துப்பட்டா குடைக்குள்
நடந்து வந்த ஞாபகக்கீற்று
மின்னலாய்...

-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 18 டிசம்பர், 2012

காதல் நெஞ்சம்



முன் எப்போதும் இல்லாமல்
இப்போதெல்லாம்
கோபம் கொள்கிறாய்...

எப்போதும் சீண்டிப் பார்க்கும்
உன்னை இப்போதெல்லாம்
சீறலோடுதான் பார்க்க முடிகிறது....

தாமதமாக வீட்டில் நுழைந்தால்
யார் கூட சுத்திட்டு வாறே...
என்ற வார்த்தை அம்புகள்
தைக்கும் போது

காத்திருந்து காதலித்த
நாட்கள் கண் முன்னே
காட்சியாய் விரிந்து மரிக்கிறது...

எது செய்தாலும்
என்ன இது என்ற
ஒற்றை வார்த்தையில்
சிரித்து ரசித்த நாட்கள்
மழை நேரத்து
மண்வாசனையாய்
மனசுக்குள் நுழைந்து
கண்களில் இறங்குகிறது ...

முத்தம் கிடைக்காமல்
முயன்றும் முடியாமல்
தவித்த போது
ஒரு முத்தம் வாங்க
காத்திருந்த நேரத்தில்
பல முத்தங்கள் பெற்ற
சந்தோஷ தருணத்தை
மீட்டிப்பார்த்து ஆறுதல்படுகிறது
முத்த எச்சம் எதிர்பார்த்த கன்னம்...

அப்போது கிடைத்த சந்தோஷம்
இப்போது கனவாகிப் போச்சு...
எப்போதும் எதாவது
ஒன்றால் நீ சாடும் போது
காதலித்தது தவறோ
என்று மனசில் தோன்றி
மறைந்தாலும்
காதல் நெஞ்சில்
நீ இன்னும் பூவாகத்தான்
பூத்திருக்கிறாய்...

-'பரிவை' சே.குமார்